ஆதிமூலம் படைப்புகளைப் பாதுகாக்க…

எழுத்தாளரும், இதழாளருமான தளவாய் சுந்தரம் இந்த மின் மடலை எனக்கு அனுப்பியிருக்கிறார்.

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

நம் பெருமிதத்துக்குரிய கலை ஆளுமையான ஆதிமூலம் மறைந்த ஓரிரு மாதங்களுக்குள், அவரது பெயரில் அவரது ஓவியமெனப் போலியான ஒன்றைச் சென்னை கண்காட்சிக்கூடமொன்று ஓவியச் சந்தையில் விற்க முயன்றுள்ளது. அது கண்டுபிடிக்கப்பட்டு, நீதிமன்ற தலையீட்டில் தடை செய்யப்பட்டது. ஆதீமுலத்தின் பெயர் மதிப்பை வியாபாரமாக்கிப் பிழைப்பு நடத்த முனையும் இந்த செயல் கண்டிக்க வேண்டியது. ஒரு படைப்புக் கலைஞனின் வாழ்நாள் உழைப்பையும் கலை ஆற்றலையும் அர்ப்பணிப்பையும் நம்பிக்கைகளையும் அர்த்தமற்றதாக்க முனையும் அபாயம் இதில் முக்கியமான பிரச்னை. நவீனக் கலை கடந்த சில ஆண்டுகளில் பெற்றிருக்கும் சந்தை மதிப்பின் பக்க விளைவாகத் தோன்றியிருக்கும் இத்தகைய பித்தலாட்டங்களைத் தடுக்கவும் கலை மதிப்பைப் பேணிப் பாதுகாக்கவும் நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். இதற்காக ஆகஸ்டு 09 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை, அண்ணாசாலை, ஸ்பென்சர் எதிரில் உள்ள புக் பாயிண்ட் அரங்கத்தில் நடைபெறும் கண்டனக் கூட்டத்துக்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

ஓவியர் ஆதிமூலம், தமிழகச் சிறுபத்திரிகை சூழலிலும் வெகுஜனப் பத்திரிகை உலகிலும் தமிழ்ப் படைப்பாளிகளோடும் பதிப்புத்துறையோடும் வெகுவாகத் தன்னைப் பிணைத்துக்கொண்டு தொடர்ந்து பங்களித்தவர். இதன் மூலம் நவீனத் தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு அங்கமாக இருந்தவர். நவீனக் கலைப் படைப்பாளிகளுக்கும் நவீனத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் இடையே பரிவர்த்தனை நிகழ அடித்தளமிட்டவர். ஆதிமூலம், தன் இறுதிகாலம் வரைக்கும் வலியுறுத்தி வந்த இந்த எழுத்தாளர்கள் ஓவியர்கள் கூட்டுச் செயல்பாட்டை மேலும் வளர்தெடுக்கும் நோக்கத்துடன் சித்திர எழுத்து என்னும் அமைப்பும் இக்கூட்டத்தில் தொடங்கப்படுகிறது.

எழுத்தாளர்கள் சி.மோகன், ந.முத்துசாமி, சா.கந்தசாமி, பிரபஞ்சன், கி.அ.சச்சிதானந்தம், கோணங்கி, ரவி சுப்பிரமணியன், ராஜகோபால், சிற்பி தட்சிணாமூர்த்தி, ஓவியர்கள் டிராட்ஸ்கி மருது, விஸ்வம் ஆகியோர் இக்கூட்டத்தில் பேசுகிறார்கள்.

அனைவரும் வருக!

தொடர்புக்கு: சித்திர எழுத்து,  20/18 சாம்பசிவம் சாலை, தி.நகர். சென்னை – 600 017; செல்: 94442 74205

முந்தைய கட்டுரைஎன்.எச்.47 என் பாதை
அடுத்த கட்டுரைவைரமுத்து:ஆளுமைச்சித்திரம்