தமிழ் இலக்கிய திறனாய்வாளரான ராஜமார்த்தாண்டனின் அறுபதாம் ஆண்டு நிறைவை ஒட்டி உயிர் எழுத்து சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அட்டையில் ராஜமார்த்தாண்டனின் அழகான புகைப்படம். புகைப்படம் எடுத்தது யாரென்று குறிப்பிடப்படவில்லை.
உள்ளே சுகுமாரன் எழுதிய ‘நண்பர் அண்ணாச்சி’ என்ற கட்டுரை முதலில் உள்ளது. ராஜமார்த்தாண்டன் தினமனியில் உதவியாசிரியராக இருந்த காலகட்டத்தில் மாலன், ஞாநி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து அளித்த ஊக்கத்தால் முக்கியமான மொழியாக்கங்களையும் கவிதைகளையும் தினமணி இதழில் கொண்டுவந்ததையும் சிறந்த பேட்டிகளை வெளியிட்டதையும் சுகுமாரன் நினைவுகூர்கிறார்.
‘ராஜமார்த்தாண்டனின் விமரிசனப்போக்குகள்’ என்ற கட்டுரையை ந.முருகேசபாண்டியன் எழுதியிருக்கிறார். மேலைநாட்டுத் திறனாய்வுப்போக்குகளை அப்படியே இலக்கியத்தில் போட்டுப்பார்க்கும் போக்கு கல்வித்துறையில் இருந்தது. அவர்கள் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் போன்றவர்களை மேற்கோள்காட்டினார்கள். அப்போக்கு சிற்றிதழில் ஊடுருவி ·பூக்கோ போத்ரியா என்று மேற்கோள் காட்டும் போக்கு உருவானது. அது எதையுமே கோட்பாடாக்கும் முறைக்கு வழிவகுத்தது. அதற்கு எதிராக தன் ரசனையின் பலத்தில் நின்ற விமரிசகர் என்று ராஜமார்த்தாண்டனை அவர் வரையரைசெய்கிறார்
சுரேஷ்குமார இந்திரஜித் ‘ராஜமார்த்தாண்டன் 60 ‘ கட்டுரையில் ராஜமார்த்தாண்டனுக்கும் தனக்குமான நட்பையும் ராஜமார்த்தாண்டனின் அலைபாயும் ஆளுமையையும் நினைவுகூர்கிறார்.’ராஜமார்த்தாண்டன் ,வாழ்வும் கவிதையும்’ என்ற கட்டுரையில் இரத்தின கரிகாலன் விட்டேற்றியானனாஅளுமை கொண்ட ராஜமார்த்தாண்டன் தொடர்ந்து பறவைகளைப்பற்றி எழுதுவதில் உள்ள நுட்பத்தை சுட்டிககட்டி அவரது கவிதைகளை ஆராய்கிறார்.
சிபிச்செல்வன் ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்ற கட்டுரையில் நகரத்தில் வசித்தும் நகரத்துடன் ஒட்டாமல் அதை வேடிக்கை பார்க்கும் ஒரு கவிஞனின் குரலாக ராஜமார்த்தாண்டனின் கவிதைகள் பேசுகின்றன என்று கண்டுகொள்கிறார். ‘நேர் கொண்ட அகம்’ என்ற கட்டுரையில் ‘காலச்சுவடு’ கண்ணன் சுந்தர ராமசாமிக்கும் ராஜமார்த்தாண்டனுக்கும் இடையே இருந்த உறவையும் தனக்கும் அவருக்குமான நட்பையும் பற்றிச் சொல்கிறார்.
ஓசையின்றி செயல்பட்டுவந்த ஒரு இலக்கியவாதிக்கு அளிக்கப்பட்ட இம்மரியாதை முக்கியமானது. பாராட்டுக்குரியது.
தொடர்புக்கு