காஷ்மீரில் இந்து ஆலயங்கள் அனைத்திலுமே கடுமையான காவல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெய்வங்கள் சிறையிலடைக்கப் பட்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். வழிபாடு நிகழும் அனைத்து ஆலயங்களும் ராணுவ, துணை ராணுவப்படைகளின் தீவிரமான கண்காணிப்பில் உள்ளன. முதன்மையான ஆலயங்கள் தனி ராணுவ பட்டாலியன்களால் காவல் காக்கப்படுகின்றன. சிறு சிறு ஆலயங்கள் ராணுவ முகாம்களுக்குள் கட்டப்பட்டுள்ளன.
வழிபாடற்ற ஆலயங்களை மட்டுமே காவலின்றி நம்மால் காணமுடியும். அவைகள் பெரும்பாலும் மூலச்சிலைகள் அற்ற இடிபட்ட கற்குவியல்கள்தான். ஒரு முக்கியமான முரண்பாட்டை கவனித்தேன். காஷ்மீரில் எங்கும் எவரிடமும் ஓர் ஆலயத்திற்குச் செல்ல வழி கேட்டுவிடமுடியும், அப்படி வழிகேட்டவர்களில் ஒருவர் கூட முகம் சுளித்ததாக நினைவில்லை. நாங்கள் கேட்ட இஸ்லாமியர்கள் உட்பட அனைவருமே மிகுந்த உற்சாகத்துடன் வந்து வழிகாட்டினார்கள். அது தங்கள் ஊரின் பெருமை என்று எண்ணக்கூடியவர்களாகவே இருந்தார்கள்.
அப்படியானால் இந்த ஆலயங்கள் எவரை அஞ்சி இப்படி கடுமையாக காக்கப்படுகின்றன? சென்ற இருபது வருடங்களில் தொடர்ந்து ஆலயங்கள் மேல் மிகக்கடுமையான தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. பல பக்தர்களும், ராணுவ வீரர்களும் பலியாகி இருக்கிறார்கள். அவற்றை நிகழ்த்தியவர் யார்? இம்மக்களல்ல. இம்மக்களை முன்னிறுத்தி தம் அரசியலை முன்னெடுக்கும் மதவெறிகொண்ட, தீவிரவாதப் போக்குள்ள, அன்னிய ஆதிக்க சக்தியின் ஆதரவு பெற்ற, மிகச்சிறுபான்மையினரான ஒரு குழு மட்டுமே.
நாம் அந்தக் குழுவை மட்டுமே காஷ்மீர் மக்கள் என நினைப்பது, இங்குள்ள திறந்த மனதுள்ள, பரந்த எண்ணமும், நட்பார்ந்த கண்களும், புன்னகையும் கொண்ட இம்மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி என்றே தோன்றுகிறது. காஷ்மீர் நிலவரத்தை நமக்குச்சொல்லும் இந்திய அறிவுஜீவிகளில் ஒரு பெரும் பகுதியினர், மொத்த மாநிலத்தையே மிக மிகச்சிறுபான்மையினராக உள்ள இந்த சுன்னி தீவிரவாதிகளுக்கு அளித்துவிட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அப்படி செய்வதே ஜனநாயகம் என்று தங்களை முற்போக்காக கருதிக்கொள்ளும் ஒரு குழு உண்மையிலேயே நம்பவும் செய்கிறது. ஒரு சிறிய மாற்று மத வழிபாட்டைக்கூட தம் எல்லைக்குள் அனுமதிக்காத இந்த மத வெறி அமைப்புகளிடம், இந்த மொத்தமாநிலத்தின் இந்துக்களையும், பௌத்தர்களையும், ஷியா பிரிவு முஸ்லிம்களையும் கையளிக்கவேண்டும் என்று வாதிடுபவர்களின் ஜனநாயகம்தான் என்ன? அவர்களின் மனசாட்சிதான் என்ன?
காலையில் கிளம்பி ஸ்ரீநகரின் தெருக்கள் வழியாக ஒரு டீ சாப்பிட நானும் கிருஷ்ணனும் அலைந்தோம். பெரும்பாலான கடைகள் அடைத்துக்கிடந்தன சில கடைகளுக்கு முன்பு துப்புரவு செய்துகொண்டிருந்தார்கள். சுற்றுலா நகரங்களை காலையில் பார்ப்பது ஒரு சோதனையான அனுபவம். மனிதன் விட்டுச்சென்ற குப்பைகளாலான நகரங்களாக அவைகள் தோற்றமளிக்கின்றன. மனிதனின் அச்சங்களும், சிறுமைகளும் தெருவெங்கும் சிதறிக்கிடப்பதாகத் தோன்றும். சுற்றுலாநகரங்கள் அல்லாதவை அதிகாலையில் எழுப்பும் அந்தரங்க உணர்வை சுற்றுலா நகரங்கள் ஒருபோதும் நமக்கு அளிப்பதில்லை.
காலையில் சங்கராச்சாரியார் ஆலயத்துக்குச்சென்றோம். படிகள் ஏறி சிறு குன்றின் உச்சிக்குச் செல்லவேண்டும். செல்லும் வழியில் உலோகக் கண்காணிப்பு உட்பட அனைத்து காவல் சோதனைகளுக்கும் ஆட்பட வேண்டும். பயணிகள் மிகக்குறைவாகவே இருந்தார்கள். சிறிய மலை உச்சியில் அமைந்த இந்த ஆலயம், சங்கராச்சாரியாரால் அமைக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. கி.பி. எட்டாம் நூற்றாண்டு அல்லது ஏழாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்கலாம்.
திபெத் மற்றும் லடாக் பகுதிகளின் மலை உச்சியில் பழங்குடிகள் கற்களை அடுக்கி அமைத்திருக்கும் சிறிய வழிபாட்டிடங்களின் பாணியில் அமைந்த கோவில் இது. சப்பையான ஸ்லேட் கற்களை எண்கோண வடிவில் அடுக்கி ஒரு கூம்பு போல இதைச்செய்திருக்கிறார்கள். நான்கு திசைகளில் ஒரு திசையில் மட்டுமே வாயில். மற்ற திசைகளில் திறப்போ கோஷ்டங்களோ சிற்பங்களோ எதுவுமே இல்லை.
கல் அடுக்கு மட்டுமே எஞ்சியிருக்கும் சிறிய கோவில். உள்ளிருக்கும் சிவலிங்கம், இப்பகுதியில் நதிப்படுகையில் கிடைக்கும் உருண்ட பெரிய கற்களில் ஒன்று. அனைவரும் தொட்டு வழிபடலாம். அருகே இருக்கும் சிறிய கல் மண்டபம் ஒருகாலத்தில் குகையாக இருந்தது என்றும் அதில் சங்கராச்சாரியார் தவம் செய்தார் என்றும் சொல்கிறார்கள். அங்கே அமர்ந்து சில நிமிடங்கள் தியானித்துவிட்டு வெளியே வந்தோம்.
இரண்டாவதாக நாங்கள் சென்ற இடம் ஹரிபர்வத் என்ற ஆலயம். இது பழைய டோக்ரா மன்னர்கள் கட்டிய கோட்டை அமைந்திருக்கும் குன்றின் பின் பகுதியில் உள்ளது. டோக்ரா மன்னர்களின் கோட்டை இன்று ராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சுற்றுலா பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. ஹரிபர்வத் ஆலயத்துக்குச் செல்வதற்கு படிகள் உள்ளன.
பாதையின் ஒருபக்கம் அடர்ந்த காடு பள்ளத்தை நிரப்பியது. செல்லும் வழியன்றி இவ்வாலயத்தில் ஆர்வமூட்டக்கூடிய எதுவும் இல்லை. கடுமையான பாதுகாப்பு வளையங்களைக் கடந்து உள்ளே சென்றால், இயல்பிலேயே ஸ்ரீசக்கரம் பொறிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு பெரும் பாறையே மூலவிக்ரஹமாக உள்ளது, அது ஸ்ரீ என்றும் லக்ஷ்மி தேவி என்றும் நம்பப்படுகிறது. முழுவதும் சிவந்த வர்ணம் பூசப்பட்ட இப்பாறையின் அருகே சிறிய சுனை ஒன்றும் உள்ளது.
சுற்றிலும், தற்காலத்தைய கட்டிடம் ப வடிவில் சூழ்ந்திருந்தது. என்னைப் பொறுத்தவரை இத்தகைய நவீன ஆலயங்களில் நான் ஈடுபட எதுவும் இல்லை. இக்கோவிலில் நான் கண்ட கம்பீரமான சயாமியப்பூனையைத்தவிர. ஸ்ரீ நகருக்குள்ளுள்ள வேறு ஆலயங்களை தேடிச்சென்றோம். எங்கள் பட்டியலில் இருந்தவை நான்கு ஆலயங்கள்.
பாந்த்ரேதன் என்று அழைக்கப்படும் ஆலயத்தை இணையம் வழி அறிந்து ஸ்ரீநகர் பகுதியில் அதைத்தேடி அலைந்தோம். அதைப்பற்றி கேட்டு வழிகாட்ட முனைந்த எவருக்குமே அந்த ஆலயத்தைப்பற்றி தெரியவில்லை. இப்பகுதியில் உள்ள இஸ்லாமியர் மட்டுமல்ல இந்துக்களுக்கும்கூட அந்த ஆலயத்தைப்பற்றி எதுவுமே தெரியவில்லை. எங்களுடைய பிழை என்னவென்றால் பந்திதான் என்று இந்த ஊரின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தோம்.
பெரும்பாலான ஆலயங்கள் வழிபாடற்றவை என்பதனால் பொதுமக்களுக்கு தெரியாதவையாகவே உள்ளன. பந்திதான் ஆலயம் என்று ஒரு பண்டிதர் வழிகாட்ட சி.ஆர்.பி.எஃப் முகாம் ஒன்றுக்கு சென்றோம். அங்கே வேலூரைச்சேர்ந்த தமிழர் ஒருவரை அறிமுகம் செய்துகொண்டோம். உள்ளே முகாமுக்குள் காவல் சூழ்ந்த ஆலயம் ஒன்று இருப்பதாக அவர் சொன்னார்.
ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளை பெயிண்ட் அடித்து காயவைத்துக் கொண்டிருந்த, சோறு சாப்பிட்டுக்கொண்டிருந்த, கயிற்றுக்கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த, அந்த முகாமுக்குள் பழமையான ஆலயம் ஒன்றிருந்தது. அது ஒரு துர்க்கை ஆலயம். இயல்பிலேயே அமைந்திருந்த ஊற்றின் இடையே நிறுவப்பட்ட சன்னிதி அது.
அதைச்சுற்றி கட்டப்பட்ட கோவில் புத்த விகாரம் போல, சைத்யம் போல அமைந்திருந்தது. திபெத்திய பௌத்த மடாலயங்களில் சுவர்களில் படங்களும் சிலைகளும், அமர்வதற்கு கம்பிளி மெத்தைகளும் போடப்பட்டிருக்கும். அதேபாணியில் இந்த ஆலயமும் அமைந்திருந்தது.
அந்த இடத்தின் வெதுவெதுப்பான கம்பளி சூழ்ந்த சூழ்நிலை உவப்புக்குரியதாக இருந்தது. ஊற்று நீர் ஒரு குழாய் வழியே வெளியே கொட்ட அதைத்தான் அங்குள்ளவர்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். வேலூர்க்காரரான அந்த ராணுவ வீரர், அங்குள்ள ஆலயங்கள் ஏன் சி.ஆர்.பி.எஃப் கேம்புக்குள் இருக்கின்றன என்று சொன்னார்.
அனைத்து ஆலயங்களிலும் ஒரு சி.ஆர்.பி.எஃப் வீரரே பூசகராக இருக்கிறார். பிற பூசகர்கள் வருவதும் வழிபடுவதும் வெளியே அனுமதிக்கப்படுவதில்லை. வெளியே அவர்கள் தாக்கப்படுகிறார்கள். அந்த முகாமுக்கு மிக அருகே உள்ள கீர்பவானி என்ற ஆலயத்தை ஏறத்தாழ நூறுபேர் கொண்ட சிறுவர் கும்பல் ஒன்று சூழ்ந்து கற்களால் தாக்கி, அங்கிருந்த பல ராணுவ வீரர்களின் தலைகள் உடைந்தன என்றும், இக்காரணத்தாலேயே ஆலயங்களுக்கு வருபவர்கள் குறைவு என்றும் சொன்னார்.
அங்கிருந்தால் எங்கள் தலையும் உடையக்கூடும் என்ற எண்ணம் ஒருவித பதைப்பை உருவாக்கியது. ஸ்ரீநகரின் இதயப்பகுதியில் நடக்கும் தாக்குதல் அது. பாந்த்ரேதன் ஆலயத்தை விசாரித்தபடி ஓரிருவரிடம் பேசினோம். எவருக்கும் எந்த அகச்சித்திரமும் இல்லை. நாங்கள் வைத்திருந்த நீர்ப்புட்டிகளை அங்கிருந்த் சுத்திகரிப்பு இயந்திரத்தில் நிரப்பிக்கொண்டோம் என்பதைத்தவிர வந்ததனால் எந்தப் பயனும் இல்லை.
பாந்த்ரேதன் ஆலயத்தினை விசாரித்து விசாரித்துச்சென்றோம். ஒரு வழியாக அதன் உச்சரிப்பு பாந்த்ரேதன் என்று தெரிந்துகொண்டோம். அதன் பின் ஒருவர் வழிகாட்ட ஸ்ரீநகரின் புறச்சாலை அருகே இருந்த ராணுவ முகாமுக்குச்சென்றோம்.
பாந்த்ரேதன் ஆலயம் ஸ்ரீநகரின் மிக அழகான தொன்மையான ஆலயங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. ராணுவ முகாமில் அதை பானி மந்திர் என்று சொன்னார்கள். நீர் நிறைந்த வாவி ஒன்றினுள் இந்த ஆலயம் அமைந்துள்ளது. அதைச்சுற்றி இரு சிறு ஆலயங்கள் அமைந்துள்ளன. ஆனால் உரிய முறையில் எழுத்து வடிவ அனுமதி இன்றி எவரையும் உள்ளே விடமுடியாது என்று சொன்னார்கள்.
எங்கள் நோக்கத்தையும் எங்கள் அடையாள அட்டைகளையும், நாங்கள் தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்பதையும் மீள மீள சொல்லியும் உறுதியாக அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. எனவே அதை கைவிட்டுவிட்டு, அவந்திப்பூர் நோக்கிச்சென்றோம்.
செல்லும் வழியில் ஹர்வான் எனும் இடத்தில் இருந்த பழமையான பௌத்த மடத்தின் எச்சங்களை பார்க்கச்சென்றோம். ஹர்வான் ஸ்ரீநகருக்கு வெளியே உள்ள ஒரு சிறிய கிராமம். ஹர்வானுக்குச் செல்லும் வழியில் அதை தொடர்ந்து விசாரித்துக்கொண்டுதான் செல்லவேண்டும். எங்கும் வழியோ குறிப்புகளோ இல்லை. மிகச்சமீபத்தில்தான் அங்கே ஓரிரு அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தும் தொல்லியல்துறை அப்பகுதியில் பலகைகள் ஏதும் வைக்காதிருப்பது, அப்பகுதியை பாதுகாப்பதற்காக இருக்குமோ என்று எண்ணிக்கொண்டேன்.
லடாக் பகுதியைச் சார்ந்த ஒரு இஸ்லாமிய இளைஞர், பௌத்த மடாலயத்தின் எச்சங்களை பார்ப்பதற்காக வந்திருந்தார். ஓமர் என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். நாங்கள் கிராமத்தின் சிறு சந்து வழியாகச்சென்று நீல வேலியிடப்பட்ட ஒரு வளைவைப்பார்த்தோம். அதற்குள் ஒரு தண்ணீர்த்தொட்டி மட்டுமே இருந்தது. அதனருகே இருந்த பழமையான அறிவிப்புப்பலகை துருப் பிடித்திருந்தது.
அதை ஒட்டிச்செல்லும் சாலை ஹர்வானுக்கு இட்டுச்செல்லும் என்று நம்பி சென்றோம். எண்ணியது போலவே ஹர்வான் பௌத்த மடாலயத்தின் எச்சங்கள் உள்ள பகுதி, தொல்லியல் துறையின் வேலிக்குள் காணக்கிடைத்தது. ஊள்ளூர் ஊழியர்களால், மிகச்சிறப்பாகவே பேணப்பட்டு வரும் இந்தத் தொல்பகுதி, காஷ்மீரில் செழித்திருந்த தேரவாத பௌத்தத்தின் அடையாளமாகும். ஒரு ஆலயம், சைத்தியம், மற்றும் விகாரங்கள் அடங்கிய வளாகம் இது.
எந்தக் கட்டுமானமும் இன்று எஞ்சவில்லை. கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலோ, அதற்கு முன்போ கட்டப்பட்ட கட்டடங்களின் அடித்தளங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. கற்களைக்கொண்டு மிக அகலமாக கட்டப்பட்ட அடித்தளங்கள் இவை. அடித்தளங்களின் வெளிப்புறமும், சுவர்களின் வெளிப்புறமும், சிறிய உருண்ட கூழாங்கற்களைக் கொண்டு நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்தன.
இந்தக் கூழாங்கற்கள் பரப்பு வேறெங்கும் காணக்கிடைக்காதது. அதற்கு கட்டுமானத்தில் அழகு என்பதற்கு அப்பால், நடைமுறை நோக்கங்கள் இருந்திருக்க கூடுமோ எனும் எண்ணம் ஏற்பட்டது. ஒருவேளை பனி தங்காமல் இருக்க அது உதவக்கூடும் என்று தோன்றியது. விகாரம் மிகப்பெரியது. நடுவே புத்தரின் ஆலயம் கொண்ட சைத்தியமும் மிக உயரமான அடித்தளம் கொண்டது.
சற்று மேலேறிச்சென்றால் காணக்கிடைக்கும், புத்தரின் ஆலயத்தின் அடித்தளமும், சுமார் பத்தடி உயரம் கொண்டது. இங்கு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த மண்கலங்களும், சுடுமண் சிற்பங்களும் கிடைத்துள்ளன. அவை பெரும்பாலும் அகழ்வு நடந்த 1918-1920 களிலேயே கல்கத்தா மற்றும் டெல்லி அருங்காட்சியங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டன. சமீபகாலமாக மேலும் சில அகழ்வாராய்ச்சிகளில் மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன என்று சொல்கிறார்கள்.
ஹர்வானில் நாகார்ஜுனர் வந்து தங்கியிருந்ததாக அங்கிருந்த வழிகாட்டி சொன்னார். நாகார்ஜுனரின் காலம் இந்த பௌத்த மடாலயத்தின் காலத்துடன் ஒத்துப்போகின்றதா என்று தெரியவில்லை. ஆனால், இத்தகைய மடாலயங்கள் நெடுங்காலம் செயல்பட்டிருக்கலாம். ஆகவே நாகார்ஜுனர் இங்கு வந்திருக்கக்கூடும் என்றே எண்ணத்தோன்றுகிறது.
அங்கிருந்த அறிவிப்புப்பலகையில் கி.பி. 78 வாக்கில் இந்த மடாலயம் நிறுவப்பட்டிருக்கலாம் என்றும், கனிஷ்கர் காலகட்டத்தில் விரிவுபடுத்தப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பு இருந்தது. மிக விரிவான குறிப்புகள் எதுவும் எங்கும் கிடைக்கவில்லை.
வழிகாட்டி எங்களுக்கு அங்கிருந்த குளிர்ந்த நீரை அருந்துவதற்கு தந்தார். கிராமத்து மக்கள் அங்கிருந்த நிழல்களில் தூங்கிக்கொண்டிருந்தனர். பொதுவாக தென்னிந்தியா முழுக்க ஆலயங்களில் அரசமரமும், ஒரு முக்கியமான அடையாளமாக உள்ளது. அரசமரம் இல்லாத பேராலயங்களைப்பார்ப்பது அரிது. அதுபோல காஷ்மீர் முழுக்க சினார்மரங்கள் அந்த இடத்தில் இருக்கின்றன என்று தோன்றியது.
சிவ ஆலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும். மாபெரும் சினார் மரங்கள் உள்ளன. பல சமயம் ஆலயங்கள் இடிந்து கற்குவியலாக எஞ்சிய பிறகும் அவ்விடத்தை சினார் தன் குளிர்ந்த நிழலால் பச்சை பொலியும் இலைத்தழைப்பால் மூடி நிற்கிறது. இந்த பௌத்த மடாலயத்திலும் சினார் ஓங்கி நிற்பதைக்கண்டோம். காஷ்மீரில் புத்தர் ஒரு சினார் மரத்தடியில்தான் ஞானம் பெற்றார் என்று ஒரு தொன்மம் இருந்திருக்கக்கூடுமோ என்று வேடிக்கையாக எண்ணிக்கொண்டேன்.