பழங்காலத்தில் சோதர தீர்த் என்று சமஸ்க்ருதத்தில் வழங்கப்பட்ட பகுதியான, இன்று நார்நாக் என்று அழைக்கப்படும் இடத்தில் ஒரு ஆலய வளாகம். சனாப் நதியின் துணையாறான சோதர தீர்த் எனும் சிற்றாற்றின் கரையில் உள்ள இவ்வாலயத்தைப்பற்றி விசாரித்துச் சென்றோம்.
புழுதிக் குவியலைப்போல காட்சி தந்த பெரிய மலையின் விலாவை சுற்றிச்சென்ற பாதையில் விசாரித்தபடி ஏறிச் சென்றோம். பாரமுல்லா எல்லைப்பகுதி கிராமங்களில் உள்ள செல்வச்செழிப்பு மெல்ல குறைந்து வருவதை கண்கூடாகக் காணமுடிந்தது. இப்பகுதியில் மலை ஏறிச்செல்லச்செல்ல, வறுமையில் வாழக்கூடிய மலைக்குடிகளை பார்க்கமுடிந்தது. பெரும்பாலானவர்கள் மாடுமேய்த்தும், சுற்றுலாப்பயணிகளுக்கு குற்றேவல் புரிந்தும் வாழ்பவர்கள்.
புழுதி நிறைந்த கிராமங்களில் தகரக்கூரை போடப்பட்ட சிறிய வீடுகள் சாலையின் இருமருங்கிலும் தென்பட்டன. காஷ்மீர் பிரச்சனை அதன் உச்சத்தில் இருந்தபோதுகூட எந்த மதக் கலவரமோ, தீவிரவாத ஆதரவோ இல்லாத மறக்கப்பட்ட பகுதியாகவே இப்பகுதி இருந்திருக்கிறது. ஆகவே ஓரளவு சுற்றுலாபயணிகளை இங்கு காணமுடிந்தது.
நார்நாக் கரையின் ஓரமாக நிறைய சிறிய விடுதிகள் இருந்தன. பெரிய நட்சத்திர விடுதிகள் இரண்டும்கூட தென்பட்டன. இங்கிருந்து பயணிகளை மலையேற்றி இருபத்திஐந்து கிலோமீட்டர் கூட்டிச்சென்று மேலே இருக்கும் இரண்டு ஏரிக்கரைகளில் தங்கவைத்து அழைத்து வருகிறார்கள். அதற்காகவே முப்பதுக்கும் மேற்பட்ட வண்டிகள் அங்கே நின்றிருந்தன.
இமயமலையிலே உள்ள மழைநீரில் கரையும் தன்மை கொண்ட சிலேட் கற்களால் நார்நாக் ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒரு கல் நகரத்தைப் பார்ப்பது போலத் தோன்றியது. சோதரதீர்த் நதிக்கரையிலேயே மேடான பகுதியில் உயரமான ஒரு ஆலயமும் சற்று தாழ்வான பகுதியில் மற்றொரு ஆலயம் என இரண்டு பெரிய ஆலயங்கள் அமைந்திருந்தன.
நான்கு பக்கமும் சிறிய சன்னிதிகள் கொண்டிருந்த ஆலயத்தின் நடுவில் காஷ்மீர் பாணி அஸ்திவாரமும் உயர்ந்த கருவறையும் கொண்ட மைய ஆலயம் இருந்தது. கோபுரம் இடிந்த நிலையில் காணப்பட்டது. கருவறைக்குள் சென்று பார்த்தபோது, சில பகுதிகளில் இஸ்லாமிய குவிமாடத்தைப் போல வளைந்த உட்குடைவான அரைவட்ட உட்கூரை அமைக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது. வலப்பக்கமாக ஓர் ஆலயத்தினுள், கூரையற்ற கருவறையில், சிவலிங்கம் முழுமையாகவே இருந்தது. பிற சிறு சன்னிதிகள் அனைத்துமே மூல விக்ரகங்கள் இல்லாமல் சிதைந்து கிடந்தன.
கீழே இருக்கும் ஆலயத்தை மேலிருந்து நோக்கும்போது, கைவிடப்பட்ட சிறு நகரம் போல கனவாக விரிந்தது. மேலே உள்ள ஆலயத்தின் அதே அமைப்பு கொண்ட இக்கோவிலின் மைய ஆலயம் இடிந்து சரிந்திருந்தது, சுற்றியுள்ள ஆலயங்களில், மெழுகுபோல காற்றில் கரைந்த கற்கள் வடிவமிழந்திருந்தன.
வெறுமை குடியிருக்கும் கருவறைகள், இடிந்த முகடுகள், சரிந்து கிடக்கும் கல்மேடுகள், தூண்கள் நாட்டப்பட்ட குழிகள் மட்டும் எஞ்சிய அடித்தளங்கள் என ஒரு நினைவுத் தீற்றலாக ஹம்பி மனதில் மின்னிச் சென்றது. பெரிய நீர்த்தொட்டியில் பச்சைநிற நீர் தேங்கிக்கிடந்தது. இவ்வாலய வளாகத்தில் ஊற்று ஒன்று கூரையிடப்பட்டு பேணப்படுவதை காணமுடிந்தது. இயற்கையாக மலையடிவாரத்தில் அமைந்த ஆலயத்தில் ஊற்று இருப்பது இயல்பானதுதான். பனிக்காலத்தில் பனி விழுந்து அவ்வூற்று உறையாமல் இருக்கவேண்டும் என்பதற்காக கூரையிடப்படிருக்கலாம்.
சுற்றிலும், கூம்பு வடிவ பனி மரங்கள் அடர்ந்த பசும் மலைகள் சூழ்ந்திருக்கும் இந்நதிக்கரை, மிக அழகானது. வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே தனது பசுமைவெளியை விரித்துக் காட்டும். பிற மாதங்கள் முழுக்க வெண்பனித்திரைக்குள் தன்னை ஒளித்துக்கொள்ளும் இந்தக் கற்குவியல்கள் வழியே நடக்கும்போது, கடந்துபோன ஒரு காலகட்டம், நம் கற்பனையில் துயரத்துடனோ, சிறு சிறு மகிழ்ச்சிகளுடனோ பல்வேறுவிதமாக எழுந்து நம்மை நிறைப்பது ஒரு மிகச் சிறந்த அனுபவம். சோதர தீர்த்தத்தின் நீர்ப்பெருக்கினால் இந்நகரம் அழிந்தது என்று வரலாற்று நூல்கள் சொல்கின்றன.
ஏழாம் நூற்றாண்டிலோ அல்லது ஒன்பதாம் நூற்றாண்டிலோ அவந்தி வர்மன் வம்சத்தினரால் இது கட்டப்பட்டிருக்கலாம். இந்த ஆலய வளாகத்திலோ சுற்றுவட்டாரத்திலோ இந்த ஆலயத்தைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. இக்கோவில் பெருவெள்ளத்தில் அழிந்திருக்கலாம் என்றால், இவ்வாலயங்களில் எதிலுமே மூலச்சிலைகளே இல்லையே என்றொரு முக்கியமான ஐயமும் இயல்பாக எழுகிறது.
அருகே ஓடிக்கொண்டிருந்த நதியில் நீராடலாம் என இறங்கிச்சென்றோம். அங்கே மண்ணாலான வீடுகளைக்கட்டிக்குடியிருந்த எளிய இடையர் குழந்தைகள் எங்களிடம் பணம் கேட்டார்கள். அவர்களுடைய வெட்கிய சிரிப்பையும், தயக்கமான கோரிக்கையையும் புறக்கணிக்கமுடியவில்லை. அதிலும், சிறு குழந்தைகள் கேட்கும்போது, தலையைத் தடவி, அருகழைத்து, ஓரிரு சொற்கள் பேசாமல் அவர்களை கடந்து செல்ல முடிவதில்லை.
சோதர தீர்த்தத்தில் இறங்கி கூழாங்கற்களும், உருளைக்கற்களும், வழுவழுப்பான பாறைகளும் நிறைந்த படுகையைக் கடந்து நுரைத்து கொப்பளித்துக்கொண்டிருந்த ஆற்றின் விளிம்பை அடைந்தோம் ஏற்கனவே ஓரிரு பயணிகள் நீராடிக்கொண்டிருந்ததைக் கண்டதால் துணிந்து நீரில் இறங்கினோம். பனி உருகி வரக்கூடிய நீர் மிகவும் குளிர்ந்திருந்தது. வழக்கமாக குளிர் நீரில் இறங்கியவுடன் சற்று நேரத்திலேயே உடல் குளிருக்குப் பழகி நீராடல் இனிய அனுபவமாக மாறிவிடும், ஆனால் இங்கே உடல் மேலும் மேலும் வெப்பத்தை இழந்து விறைக்கத்தொடங்கியது. ஆனாலும் அரைமணிநேரத்துக்கு மேல் நீராடினோம்.
இன்றைய பயணத்தின் உற்சாகமான அனுபவமாக இந்நீராடல் இருந்தது. காஷ்மீர் என்றபோது பனிபொழியும் ஒரு நிலப்பரப்பு பற்றிய கனவு எங்களுக்கு இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட தமிழகம் அளவுக்கே வெயில் பரவியிருக்கும் காஷ்மீரில்தான் நாங்கள் பயணம் செய்தோம். பனி நீரில் குளித்து கரையேறி வந்தபோது, வெய்யில் தித்திப்பாக இருந்தது. நெடுநேரம் எங்கள் குருதியை சூடுபடுத்தியது.
நான்கு மணிக்கு மேல் கிளம்பி ஸ்ரீநகருக்கு வந்தோம். வரும் வழியில் ஜேஷ்டா தேவி ஆலயம் என்ற பலகையைக் கண்டு நிறுத்தி உள்ளே சென்றோம். ஒரு ஊற்றுக்குள் இருந்த ஆலயம் அது. ஜேஷ்டா தேவி என்று நம்மூரில் அழைக்கப்படும் மூதேவி அல்லது சேட்டை தேவிதான் இது என்று சொல்ல முடியவில்லை. புதிதாக கட்டப்பட்ட ஒரு துர்க்கை ஆலயம். ஊற்று நடுவில் சிறிய சன்னிதியாக அமைந்திருந்தது. காஷ்மீரி பண்டிதர் அமர்ந்திருந்தார். காஷ்மீரில், அனைத்து ஆலயங்களும் சி.ஆர்.பி.எஃப் கட்டுப்பாட்டிலும், மத்திய காவல்துறை கட்டுப்பாட்டிலும் முகாம்கள் போலவே உள்ளன. அனைத்து ஆலயங்களும் மணல் மூட்டைகளாலும், துப்பாக்கி ஏந்திய நூற்றுக்கணக்கான வீரர்களாலும் காவல் காக்கப்படுகின்றன.
மாலையில் ஸ்ரீநகர் அருகே ஒரு விடுதியில் அறை எடுத்துக்கொண்டு தங்கினோம். ஸ்ரீநகரின் தெருக்கள் தி.நகரைப் போல வண்டிகளின் ஓலங்களும், புகையும் நிரம்பியதாக இருந்தது. அதைச்சுற்றி பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கும் நகரத்தின், முழு கழிவுகளும் வந்து தேங்கும் நாற்றமடிக்கும் குட்டையைப் போல இருந்தது தால் ஏரி. இருட்டிய பின்னர் விளக்குகளின் வெளிச்சத்தில் மட்டுமே அதை ஓரளவேனும் ரசிக்க முடிந்தது.