இமயச்சாரல் – 13

காலை ஏழுமணிக்கு ஸ்ரீநகருக்குக் கிளம்பினோம். ஸ்ரீநகரில் தங்குவதற்கு ஒரு விடுதி அறை ஏற்பாடாகியிருந்தது. அங்கு செல்வதற்கு முன்னர் அதிகாலையிலேயே புர்ஷஹோம் எனும் இடத்தில் இருக்கும் பழமையான பெருங்கற்கால அகழ்விடத்துக்குச் செல்லலாம் என முடிவெடுத்தோம். காஷ்மீர் பெருங்கற்கால நாகரீகத்தின் முக்கியமான மையங்களில் ஒன்று. இப்போது இப்பெருங்கற்கால நாகரீகங்கள் வாழ்ந்த பெரும்பாலான புல்வெளிகள், ராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. மிகச்சிலவே நகரங்களுக்கருகில் உள்ளன. புர்ஷஹோம் அவற்றில் ஒன்று.13 1

அதை பார்த்தாகவேண்டும் எனும் முடிவுக்கு வந்ததற்கு ஒரு முக்கிய காரணம், பெருங்கற்கால நாகரீகத்தின் தென் எல்லையில் நான் வாழ்கிறேன் என்பதுதான். என்னுடைய குலதெய்வமான மேலாங்கோட்டு அம்மனின் ஆலயம் இருக்கும் வளாகத்தில் நான்கு மாபெரும் கற்கள் உள்ளன. ஆயிரம் வருடங்களுக்கு மேலாக அது இடுகாடாக இருந்துள்ளது. குமரிமுதல் காஷ்மீர்வரை நீளும் பெருங்கற்கால நாகரீகத்தின் இரு நுனிகளையும் பார்த்துவிடவேண்டும் எனும் எண்ணம்தான் காரணம்.

காஷ்மீர் பல்கலைகழகத்தின் அருகிலிருந்து அங்கு செல்லலாம் என்று முந்தையநாள் டாக்டர் சொல்லியிருந்தார். ஆனால் அது சரியான வழிகாட்டுதல் அல்ல. அங்கிருந்து நாங்கள் சிறு சந்துக்குள் நுழைந்து, பல ஊர்களின் வழியாக நிறுத்தி விசாரித்துச்சென்றுகொண்டிருந்தோம். காஷ்மீர் எங்கும் காலை எட்டு மணியாகியும் கூட கடைகள் திறக்கவில்லை. டீக்கடைகள், உணவகங்கள் என எதுவுமே இல்லை.

13 2

சால்வைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் விற்கும் சில கடைகள் திறந்திருந்ததைக் கண்டபோது தான் கொஞ்சம் வியப்பாக இருந்தது. காலையில் கடைகளுக்குச் சென்று தேநீர் அருந்தும் பழக்கமே இம்மக்களுக்கு இல்லையோ எனத் தோன்றியது.

நாங்கள் டீக்கடைகளைத்தேடிச் சென்றபடி இருந்தோம். இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்த ராணுவ அதிகாரி ஒருவர் காஷ்மீர் மக்களைப் பற்றி சொன்னது அப்போது நினைவுக்கு வந்தது. அவர் நாகா பழங்குடியைச்சேர்ந்தவர். துணைராணுவப்படையின் துணை கமாண்டராக இருக்கும் அவருடைய பெயர் லிங்கோம். நாங்கள் தங்கியிருந்த ஆயுதப்படை முகாமில்தான் அவரும் இருந்தார். கிறித்தவ மதத்தைச்சார்ந்த அவரிடம் நீங்கள் ஏன் கிறீத்தவத்திற்குச் சென்றீர்கள் என்று ஒரு நண்பர் கேட்டார். அதற்கு சிரித்தபடி டெல்லியில் இருந்து அறுநூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது நாகாலாந்து. ஆறாயிரம் கிலோமீட்டரில் இருக்கிறது அமெரிக்கா. டெல்லியில் இருந்து சைவமோ வைணவமோ நாகலாந்துக்கு வரவில்லை. கிறித்தவம்தான் வந்தது. அது எங்கள் தவறல்ல என்றார் சிரித்தபடி.

பௌத்த வரலாற்றிலும், இந்து வரலாற்றிலும் ஆர்வமுடையவரான அவர் வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்றவர். ஏன் வடகிழக்கின் கீழ்ப்பகுதிக்கு பௌத்தம் வரவில்லை என என்னிடம் கேட்டார். வடகிழக்குக்கு பௌத்தம் திபெத் வழியாகத்தான் சென்றது. திபெத் அக்காலகட்டத்தில் இந்தியாவின் மணிமுடியாக இருந்தது. முற்காலத்திலேயே அங்கு ஒரு தத்துவமரபு இருந்திருக்கிறது. 12-ஆம் நூற்றாண்டில் பத்மசம்பவர் திபெத் சென்று அங்கு வஜ்ராயன பௌத்தத்தைப் பரப்பினார்.

13 3

அது அங்கிருந்த புராதன தத்துவங்களுடன் இணைந்து திபெத்திய பௌத்தமாக உருமாறியது. இந்தக் கலவைதான் பௌத்தத்தை பழங்குடி மக்களிடம் எடுத்துச்சென்றது. பௌத்தம் அதனுடைய பழமையான வடிவில் பழங்குடி மக்களிடம் சென்று சேர்ந்திருக்கமுடியாது. யோகாசார பௌத்தமோ, அதற்கு முந்தைய தேரவாத பௌத்த மரபுகளோ, மலைப்பழங்குடிகளிடம் சென்று வேரூன்றுவது சற்று சிரமமானது. திபெத்திய பௌத்தம் என்பது பாதி பழங்குடி மரபாகவும், பாதி உயர்தத்துவ மரபாகவும் உள்ள ஒரு அற்புதமான கலவை. பத்மசம்பவர் சிக்கிம் வழியாக பூடான் வரை சென்றதாக கதைகள் உள்ளன.

அவர்தான் திபெத்திய மதத்தின் முதல் ரிம்போச்சே. எங்கள் முந்தைய பயணத்தின்போது, பூடானில் நாங்கள் கண்ட செங்குத்தான மலை உச்சியொன்றில் உள்ள டைகர் புத்தவிகாரம்தான் பத்மசம்பவர் முதலில் வந்திறங்கிய இடம். திபெத் வழியாக எட்டக்கூடிய இடங்களுக்கு மட்டுமே பௌத்தம் சென்றிருக்கிறது. பௌத்தத்தால் அடர்காடுகளையும் பிரம்மபுத்திராவின் நீர்ப்பெருக்கையும் தாண்டி, தென்கிழக்குப் பகுதிகளுக்கு செல்லமுடியவில்லை. ஆகவேதான் நாகலாந்து போன்ற பகுதிகளுக்கு பௌத்தம் சென்றடைய முடியவில்லை. ஆனால் மணிப்பூர் புத்தர்காலத்திலேயே இந்துப் பண்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது.

13 5

தமிழகத்து அரைகுறை அறிவுஜீவிகளால் சொல்லப்படுவது போல வடகிழக்கு முற்றிலும் இந்துப் பண்பாட்டுக்கு வெளியே உள்ள நிலபரப்பு அல்ல. மணிப்பூர் போன்றவை பெரும்பாலும் இந்துப் பண்பாடு கொண்டவை. இன்னும் சொல்வதானால் நகரங்களிலும் வேறு சில பகுதிகளிலும் இந்துப் பண்பாட்டின் ஆதிக்கமே அதிகம். முற்றிலும் இந்து செல்வாக்கு இல்லாத பகுதிகள் என்றால் நாகலாந்தையோ, அதற்கும் அப்பால் பர்மாவின் விளிம்பில் உள்ள சில பகுதிகளையோதான் சொல்லமுடியும்.

லிங்கோம் காஷ்மீரிகள் காலையில் எழுவதைப்பற்றி பகடியாகச்சொன்னார். இவர்கள் எவரும் காலை 9 மணிக்கு முன்னால் எழுவதில்லை. ஆகவே கல்வீச்சு நாடகம் ஒன்பது மணிக்கு மேல்தான் எப்போதும் தொடங்கும். நாங்கள் ஏழு மணிக்கே சென்று காத்து நிற்போம். யாராவது இளைஞரைப்பார்த்தால் சீக்கிரம் தொடங்குங்கள் எங்களுக்கும் வேறு வேலைகள் உள்ளன என்போம். அவர்களும் கல்வீச்சை ஆரம்பிப்பார்கள். மதியம் உணவு நேரத்தின்போது, சாப்பிடச்செல்கிறோம், நீங்களும் சாப்பிட்டுவிட்டு வாருங்கள் என்று கூவுவார்கள் என்றார் சிரித்தபடி.

13 4

கல்வீச்சுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்று ராணுவத்தினருடன் பேசும்போது தெரியவந்தது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. புர்ஷகாம் செல்லும் வழியில் காஷ்மீரின் இன்னொரு முகத்தை பார்க்கமுடிந்தது. இது ஸ்ரீநகரில் இருந்து எதிர்த் திசையில் செல்லும் பாதை. இப்பாதையில் செல்லச்செல்ல, பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களில் இருந்த அபரிமிதமான செல்வச்செழிப்பை காணமுடியவில்லை. வறுமை உள்ளது என்றும் சொல்லமுடியாது. ஆனால் செழிப்போ, ஆடம்பரமோ கண்ணில் படவில்லை. பெரும்பாலும் தகர வீடுகள்தான். கடைகளில் மக்கள் நீள அங்கிகளுடன் குந்தி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

13 6

அப்பகுதி மக்கள் பெரும்பாலும், நம்மூர் சொல்வழக்கில் சொல்வதென்றால், நாய்க்குந்தலாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். தளர்வான உடல்மொழியும், சற்று மென்மையாக இழுத்துப்பேசும் தன்மையும் தெரிகிறது. கோடைகாலத்தினால் அப்படி இருக்கிறதா அல்லது குளிர்காலத்திலும் இந்த ஓய்வான மனநிலை இவர்களுக்கு இருக்குமா என்று யோசித்துக்கொண்டேன்.

புர்ஷகாமை பலரிடம் விசாரித்து சென்று சேர்ந்தோம். ஏறத்தாழ ஒரு லட்சம் வருட பழமையான இடுகாடு இது. வியப்பு என்னவென்றால் இப்போதும் இதன் ஒரு பகுதி இடுகாடாகவே உள்ளது. இஸ்லாமிய கல்லறைகள் ஏராளமாக இருந்தன. இங்கு மூன்று வெவ்வேறு காலகட்டத்தின் பண்பாட்டுப் புதைவு எச்சங்கள் கிடைத்துள்ளன. முற்கற்கால கருவிகளும், எலும்பு கருவிகளும் கிடைத்துள்ளன. இடை/கடை கற்காலத்தைச்சேர்ந்த வெவேறு வகையான கருவிகள், மண்பாண்ட ஓடுகள், கிடைத்துள்ளன. அவற்றுக்காக அகழ்வு செய்யப்பட்ட குழிகள் கூறையிடப்பட்டு பேணப்படுகின்றன.

கடைகற்காலத்திற்கு பிறகு வந்த பெருங்கற்கால நாகரிகத்தைச்சேர்ந்த பிரம்மாண்டமான நடுகற்கள் இங்கே உள்ளன. இப்போது ஒன்றே ஒன்றுதான் நின்ற நிலையில் உள்ளது. ஏறத்தாழ பதினைந்தடி வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் இந்தக்கல் சுமார் 300 டன் எடை இருக்கக்கூடும். இந்த சிறு குன்றின் உச்சிக்கு எழுபத்தைந்தாயிரம் வருடத்திற்கு முன் இப்பெருங்கல்லை எப்படி கொண்டுவந்தார்கள் என்பதே மிகவும் பிரமிப்பூட்டக்கூடியது. உலகம் முழுக்க உள்ள பெருங்கற்கால சின்னங்கள், மனிதனுடைய கூட்டான உழைப்புக்கும் எல்லையற்ற அக ஆற்றலுக்கும், எதிர்காலம் பற்றி அவனுக்கு இருந்த தொடர் கனவுகளுக்கும் சான்றாக உள்ளன. தன் குலமூதாதையரின் நினைவு, எதிர்காலத்தின் முடிவிலி வரை நீடிக்கவேண்டும் என்று அம்மக்கள் நினைத்திருக்கிறார்கள். மரணத்திற்குப் பின்பான வாழ்க்கை, முடிவிலா எதிர்காலம் என்றொரு கருதுகோள் உருவாகியிருப்பதே வியப்பூட்டக்கூடியது.

பெருங்கற்காலச் சின்னங்கள் ஏதோ ஒரு வகையில் மனிதன் ஆசிபெற்ற மிருகம் என்பதற்கான சான்று. அவனுடைய பேராசை, குரூரம், ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளும் போர்குணம் ஆகியவைகளுக்கு அப்பால். இந்த மண்ணில், இதை வெல்வதற்காக நான் பிறந்திருக்கிறேன் என்று மானுடம் நாட்டிய பதாகைகள் என்று இக்கற்களைச் சொல்லமுடியும். ஒரு எளிய பயணிக்கு இந்தக்கல் எந்தப் பொருளையும் அளிப்பதில்லை. நீட்டிக்கொண்டு நிற்கும் சப்பைக்கல் என்று மட்டுமே அவர் எண்ணக்கூடும். ஆனால் மானுட வரலாற்றை அறிந்த ஒருவனுக்கு அது ஒரு மூதாதையின் கையருகே நெருங்கி நிற்பது போல. அங்கு மானுடகுலத்தின் மீது நம்பிக்கை எழும், அதன் விளைவாக மகத்தான மன எழுச்சியும் அவனுள் நிகழும்.

முந்தைய கட்டுரைவண்ணக்கடல் நிறைவு
அடுத்த கட்டுரைஒக்கலை ஏறிய உலகளந்தோன்