அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

சென்ற சில தினங்களாக பத்துநூல்களுக்கான வேலைகளில் இருந்தேன். அதை முடித்ததும் ஒரு சிறிய இடைவெளி. விஷ்ணுபுரம் புதிய பதிப்பின் பிரதி ஒன்று வந்திருந்தது. அதை ஆங்காங்கே வாசித்துக்கொண்டிருந்தேன். அதன் கனவின் உக்கிரம் என்னை உள்ளிழுத்துக்கொண்டது. தொடர்ந்து அந்தக் கனவில் சென்றுகொண்டே இருந்தேன். என்ன ஒரு கனவு, மண்ணில் கால்பதியாமல் அந்தரத்திலேயே ஓர் உலகம். அந்தக்கனவை இளமையிலேயே நாம் காண முடியும். அந்தக்கனவின் வேகமே என்னை எழுத்தாளனாக ஆக்குகிறது என்று பட்டது.

சென்ற சில வருடங்களாக அந்தக் கனவிலிருந்து வெளியே வந்துவிட்டேனா என்ற பயம் ஏற்பட்டது. அது உண்மையில்லை என நான் அறிவேன், அசோகவனம் இன்னொருவகை கனவு. ஆனாலும் ஒரு பயம். உக்கிரமாக மாதக்கணக்கில் புனைகதையுலகுக்குள் வாழ்வதே என் வழக்கம். அந்த தீவிரத்தை இழக்கிறேனா என்ற எண்ணம் வந்தது. உடனே எழுத ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணினேன்.

மூன்று சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் எழுதினேன். கூடவே அசோகவனத்தை முடிக்கவேண்டும். ஆகஸ்டுக்குள் முடிப்பதாக வசந்தகுமாருக்குச் சொல்லியிருக்கிறேன். இன்னொரு நாவலை ஆரம்பித்தாலென்ன என்றும் ஒரு ஆசை. நடுவே கீதை உரையையும் முடிக்கவேண்டும்.

ஆகவே இணையத்தில் எழுதுவதை கொஞ்சம் குறைத்தாகவேண்டும். இணையத்தில் செலவழிக்கும் நேரத்தைக் குறைக்க விரும்புகிறேன். தனிப்பட்ட முறையில் வரும் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதே எனக்கு நிறைய நேரத்தை எடுத்துக்கொள்கிறது. அதைக் குறைத்துக்கொள்வதற்காக என் இணையதளத்தில் பின்னூட்டப்பெட்டி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் சிறில். வாசகர் தங்கள் கருத்துக்களை அதில் பதிவுசெய்யலாம். எனக்கு ஏதேனும் சொல்வதற்கிருந்தால் நானும் அதில் பதிவுசெய்கிறேன். எனவே இணையக்கட்டுரைகள் குறித்த தனிப்பட்ட மின்னஞ்சல்களைத் தவிர்க்கும்படி கோருகிறேன்.  (பின்னூட்டமிட இங்கே சென்று உறுப்பினராகப் பதிந்து கொள்ளவும். )

இவ்வருடம் கூடுமானவரை புனைவுகளை மட்டுமே இணையத்தில் ஏற்றுவதாக எண்ணியிருக்கிறேன். புத்தக அறிமுகம், எதிர்வினைகள் போன்றவற்றை தவிர்க்க முடியாதுதான். அவையும் இருக்கும்.

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைகாந்தி கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிவேக் ஷன்பேக் சிறுகதை – 3