பஷீருடன் பாரமுல்லா எனும் இடத்தில் உள்ள பழமையான ஆலயத்தைப்பார்க்கச் சென்றிருந்தோம். கியானி அந்த ஆலயத்தைப்பற்றி எங்களிடம் முன்னரே சொல்லியிருந்தார். பாரமுல்லா மிகச்சிறிய ஊர். குறுகிய சாலைகளின் வழியாக பயணித்தோம். ஆனால் பெரும்பாலான கட்டடங்கள் பார்க்க பெரிதாகத்தான் இருந்தன.
ஒட்டுமொத்தச் சூழலும் வளத்தையும் வசதியையும் பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தது. சாலையோர விடுதியில் இருந்த இரு முதியவர்களிடம் பஷீர் பேசினார். பாரமுல்லாவில் இருந்த ஆலயத்தை தானே வந்து காட்டுவதாக ஒரு முதியவர் முன்வந்தார். எண்பது வயது இருக்கலாம், இளைஞரைப்போல தாவி முன்நடந்து வழிகாட்டி அழைத்துச்சென்றார். அவருக்கு தொப்பையோ கூனலோ இல்லை. அவர் வயதிற்கு நல்ல ஆரோக்கியமாகவே இருந்தார். ஹூக்கா பிடித்து கறையேறிய பற்கள், வெண்ணிறத்தாடி, சுருங்கிய கூர்மையான கண்கள், முகத்தில் உறைந்த இனிய நட்பார்ந்த புன்னகை என உற்சாகமாக தென்பட்டார்.
பாரமுல்லாவின் ஆலயம் பெரியதோர் ஆலயமாக இருந்திருக்க வேண்டும். முற்றிலும் இடிந்து சிதைந்தபிறகு கற்களைக் குவித்து சிறிய ஆலயம் ஒன்றை பதினாறாம் நூற்றாண்டுக்குப்பிறகு எழுப்பியிருக்கிறார்கள். அந்த ஆலயம் 1996-இல் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அங்கிருந்த பண்டிட் வெளியேற்றப்பட்டார். இப்போது கற்குவியல்களுக்கு இடையே இரண்டு சிவ லிங்கங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
அந்த ஆலயத்தை தானே முன்னர் பார்த்திருப்பதாக முதியவர் வரும் வழியில் சொல்லிக்கொண்டு வந்தார். இப்பகுதி முழுவதும் தீவிரவாதிகளின் பிடியில் இருந்ததாகவும், இப்போது பத்துவருடங்களுக்கு மேலாக ஆலயங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சொன்னார் பஷீர். அருகிருந்த அவரது ஆப்பிள் தோட்டத்திலிருந்து பச்சை ஆப்பிள்களை அவரே பறித்துத்தந்தார்.
காஷ்மீர் ஆப்பிள் மட்டுமே பச்சையாக சாப்பிடத்தகுந்தது. ஆப்பிள் காய் புளிப்பு குறைவான மாங்காய் போல் இருக்கும் என்று அப்போதுதான் அறிந்துகொண்டேன். அங்கேயிருந்து ஃபதேகர் ஆலயத்துக்குச் செல்வதாக முடிவெடுத்தோம். முதியவர் தானே வந்து வழிகாட்டுவதாகச் சொன்னதால் அவரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டோம்.
ஃபதேகர் ஆலயம், பிற ஆலயங்கள் அளவுக்கே பிரம்மாண்டமானது. இரண்டு துணைக்கோவில்களும், சுற்றுப்பிரகாரங்களும், பிரம்மாண்டமான மையகோபுரமும் கொண்டது. இன்று மையக்கோபுரம் மட்டுமே எஞ்சியுள்ளது, பிற அனைத்து கட்டுமானங்களும் இடிபாடுகளாக சிதறிக் கிடக்கின்றன. மையக்கோவில் அடித்தளமும், சுவர்களும் மட்டுமே கொண்டது. கற்குவியல்கள் உள்ளே விழுந்து கிடக்கின்றன.
ஃபதேகர் ஆலயத்தின் ஊழியர், ஒரு திருமணத்திற்காக வெளியே சென்றிருப்பதால் உள்ளே அனுமதிக்க முடியாது என்றார்கள். கம்பி வேலி வழியாக சுற்றி வந்து கோவிலை கண்டோம். உள்ளே ஏராளமான இளைஞர்கள் படுத்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பதை காணமுடிந்தது. ஆனால் அவர்கள் எவரும் ஆலயத்தை அவமதிப்பதாகவோ, இழிவுபடுத்துவதாகவோ தெரியவில்லை. ஊரின் நடுவில் அமைந்திருந்தாலும் ஆலயமும் அதன் வளாகமும் தூய்மையாகவே இருந்தது.
இன்று முழுக்க நாங்கள் சந்திக்க நேர்ந்த அத்தனை முகங்களும் அன்பையும் நட்பையும் மட்டுமே காட்டுவதாக இருந்தன. காஷ்மீர் பிரச்சனையின் கண் மையம் என்று சொல்லப்படும் பகுதி பாரமுல்லா. தொடர்ந்து காஷ்மீர் கலவரத்துடனும், தீவிரவாதத் தாக்குதல்களுடனும் மட்டுமே தொடர்புபடுத்தி நாமறிந்த மாவட்டம் இது.
வியாழக்கிழமை, உள்ளே நுழையவே முடியாது என்று கமல் சிங் சொன்னதும் இப்பகுதியைப்பற்றித்தான். ஆனால் நாங்கள் சந்தித்த அத்தனை மனிதர்களும் நட்பார்ந்த கனிந்த புன்னகையையே எங்களுக்கு அளித்தார்கள். திரும்பத்திரும்ப ஒவ்வொருவரும் எங்களுக்கு வழிகாட்டவும், உதவவும் முன்வந்தார்கள். காஷ்மீரி மக்கள் எவரும் எந்த ஆலயத்தின் மேலும், வழிபாட்டின் மேலும் கசப்பு கொண்டிருக்கவில்லை என்பதை கவனித்தேன். ஆலயங்களுக்கு வழிகாட்டிச்செல்ல அனைவருமே முன்வந்தார்கள், நாங்கள் வழி கேட்ட எவருமே முகம் சுளிக்கவில்லை.
எங்களுடன் வந்த பெரியவர் ஆலயங்கள் இடிபட்டதைப்பற்றி மீண்டும் மீண்டும் வருந்திகொண்டே இருந்தார். ஒருவகையில் இதுவே இஸ்லாமின் உண்மையான முகம் என்று தோன்றியது. கருணையின் வழி மீட்பு என்பது கிறித்துவத்தின் சாரமென்றால், நட்பு வழியாக மீட்பு என்பதே இஸ்லாமின் சாரம். மதத் தலைமையின் குறுகிய போக்கினாலும், மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்தும் ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சிகளாலும், சிதைக்கப்படாமல் இருந்த இஸ்லாம் நட்பின் வழியாகவே நம்மை வந்தடைகிறது. அது உருவாக்கும் நட்பார்ந்த சூழல் அசாதாரணமான மனநிறைவை நமக்கு அளிக்கவல்லது. இன்று முழுக்க நட்பின் முகங்களையே நான் கண்டுகொண்டிருந்தேன். கூடவே மற்றொன்றும் நினைவுக்கு வந்தது, வெள்ளியன்று நாங்கள் தங்கியிருந்த துணை ராணுவப்படை முகாமுக்குள் இஸ்லாம், இந்து, கிறித்தவ, பார்ஸி என நான்கு மதங்களின் வழிபாட்டிடங்களும் இருந்தன.
வெள்ளிக்கிழமை காலை முகாமில் உள்ள இந்துக் கோவிலில் பூஜையும் பஜனையும் நடைபெற்றன. காஷ்மீர் சமவெளியில் ராணுவத்தால் சூழப்படாத, கம்பி வேலிகளால் பாதுகாக்கப்படாத எங்குமே இந்து வழிபாடுகள் சாத்தியப்படவில்லை என்பதையும் எண்ணிக்கொண்டேன்.
அப்படியானால் இந்தத் தடையை உருவாக்குவது யார்? இக்கசப்பை தொடர்ந்து நிலை நிறுத்துவது யார்? எவருடைய நன்மைக்காக?