ஊட்டி அளவுக்கு உயரமான அந்த மலையில் வளைந்து வளைந்து ஏறிச்சென்றது நல்ல அனுபவமாக இருந்தது. அங்கிருந்து பார்க்கையில் சனாப் நதி வெயிலில் ஒளிர்ந்து அகன்று கிடப்பதைக் காணமுடிந்தது.
வரும் வழியெங்கும், பக்கவாட்டில் சனாப் வந்துகொண்டிருந்தது. குமரி மாவட்ட ஆறுகளில் செய்வது போலவே படகுகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தார்கள். படகுகள் காஷ்மீரிகளுக்கு சொந்தமானவை, வேலை செய்பவர்கள் பீஹாரிகள். கட்டுமானம் மிக அதிகமாக நடக்கும் இப்பகுதியில் மணல் மிகவும் மதிப்புமிக்க பொருளாக உள்ளது.
சனாப் நதி பெருகி நிறையக்கூடிய பிரம்மாண்டமான ஏரி ஒன்றைப் பார்த்தோம். ஏரியின் பக்கவாட்டில் வளைந்து சென்ற மலைப்பாதையில் நெடுந்தூரம் மாபெரும் நீர்வெளியாகவும் ஆங்காங்கே பசும் புல்வெளியாகவும் அந்த ஏரி கிடந்தது. பண்டிப்பூர் என்ற இடத்தைக் கடந்து மேலே சென்றோம்.
முதல் ராணுவ முகாமில் எங்களை தடுத்து நிறுத்தினர். மேலே செல்வதற்கான அனுமதி கடிதம் ஏதேனும் உள்ளதா என்று கேட்டனர். நாங்கள் எங்கள் பயண நோக்கத்தையும் வந்திருக்கும் இடத்தையும் சொன்னோம். ஆனால் அனுமதி கடிதம் இல்லாமல் மேலே செல்லவே முடியாது என்று சொல்லிவிட்டார்கள். எனவே எங்களுக்குத் தெரிந்த அனைவரையும் அங்கிருந்து அழைக்க முயன்றோம். ஆனால் செல்பேசிகள் எதிலும் சமிக்ஞைகள் இல்லை. என்ன செய்வது என்றறியாது திகைத்துவிட்டோம்.
கேரளமாநிலம் தொடுபுழாவைச்சேர்ந்த ஒரு வீரர் வந்து என்னவென்று தமிழில் கேட்டார். நாங்கள் எங்கள் நிலையைச்சொன்னதும் தான் உதவுவதாகச் சொல்லி, எங்களை உயரதிகாரியிடம் கூட்டிச்சென்றார். உயரதிகாரியிடம் நாங்கள் எங்கள் அடையாள அட்டைகளையும், ஆவணங்களையும் காட்டினோம். ஏதேனும் ஒரு உயரதிகாரி கையெழுத்திட்ட கடவு அனுமதிச் சீட்டு இல்லாமல் உங்களே மேலே பயணிக்க அனுமதிக்கமுடியாது என்று சொன்னார்.
லேசான சமிக்ஞை கிடைத்தபோது, நாங்கள் முந்தையநாள் தங்கியிருந்த சி.ஆர்.பி.எஃப் முகாம் கமாண்டரை அழைத்தோம். குறைவாகவே பேசமுடிந்தது என்றாலும் அவர் உயரதிகாரியிடம் பேசி அந்தத் தடை அரணைத் தாண்டிச் செல்வதற்கான அனுமதியை பெற்றுத்தந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆனது இதற்கு.
நண்பர்கள் அனைவரும் வண்டியில் மேலேறிச் சென்றோம். அப்பகுதியில் உள்ள கிராமங்கள் அனைத்துக்கும் டாடா சூமோ வண்டிதான் ஒரே வாகனமாக இருக்கிறது என்று தெரிந்தது. இடையர் கிராமங்கள் மிகச்சிறியவை என்று தோன்றியது. சற்று உயரத்துக்குப் பிறகு அலை அலையாக பரந்த பசும் புல்வெளிகள் மட்டுமே விரிந்திருந்தன. பனிமுடிகள் மேகங்களுடன் ஒன்றுகலந்து வெயிலில் ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. இளஞ்சாரல் மழை அவ்வப்போது வந்துபோனது.
பசுமை எப்போதுமே கண்ணை கூசச்செய்வதில்லை. வெண்மையோ, சிவப்போ, வேறெந்த நிறமோ, இத்தனை அகலத்துக்கு விரிந்துகிடந்தால், கண்களை நிறைத்து சித்தத்தை திகைக்கவைத்து பின்வாங்கச்செய்யும். பசுமையோ இன்னும் இன்னும் என்று விழிகளை விரியச்செய்கிறது.
இரண்டாவது ராணுவத் தடை அரணில் அனுமதிச்சீட்டு இன்றி இன்னும் மேலே செல்ல அனுமதிக்க முடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டார்கள். பல்வேறு வார்த்தைகளில் முறையிட்டும் அந்த ஆணையை மீறமுடியாது என்று தெரிந்தது. போதுமான் அளவு ராணுவ ஆதரவோ, துணை ராணுவ ஆதரவோ இல்லாமல் எவரும் இப்பகுதியில் பயணம் செய்ய முடியாது என்பதுதான் நடைமுறை உண்மை. அந்த உண்மையை ஒப்புக்கொண்டு திரும்பிவர முடிவு செய்தோம்.
ராணுவத்தினர், எங்களைப்போன்ற பயணிகளை தொல்லையாகவே கருதுகின்றனர். அதேசமயம் சிலர் அப்படி வந்து செல்வதை ஓரளவு விரும்பவும் செய்கின்றனர். அது அப்பகுதி முழுமையாக அவர்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்பதை காட்டக்கூடியது என்று நினைக்கிறார்கள்.
அப்பகுதியில் விரிந்த புல்வெளியில் இரண்டு மணிநேரம் தங்கிச்செல்ல எங்களை அனுமதித்தார்கள். புல்வெளியில் ஏறி மலை உச்சியில் இருந்து கண்ணெதிரே எழுந்த பனிமுகடுகளை கண்டுகொண்டிருந்தோம். இத்தகைய தருணங்களில், மனம் சிந்தையற்று மரத்துவிட்டது போலவும், எண்ணங்கள் சிதறி துண்டு துண்டாக பறப்பது போலவோ, உடல் சோம்பலில் கனத்திருப்பது போலவோ தோன்றும். அது ஒரு மந்தநிலை என்றே நினைப்போம்.
ஆனால் இத்தருணத்தில் காணும் காட்சித்துளி ஒன்றுகூட வீணாவதில்லை. பலவருடங்களுக்கு இங்குள்ள ஒவ்வொரு காட்சியும் நுட்பமாக மனதில் நீடிப்பதை உணர்வோம். நமது அகம் மிகுந்த துடிப்புடன் செயல்பட்டுக்கொண்டிருந்தது என்று அப்போதுதான் அறிவோம். நமது மேல் மனம் சிதறி பறக்க, நமது ஆழ்மனம் மேலெழுந்து வந்து கண்டு இவற்றை உள்வாங்கிக்கொள்கிறது.
இங்கே மலை உச்சியில் மழையால் அரிக்கப்பட்ட, ஒரு மென் பாறையை கண்டோம். பாறையாலான ஒரு மலர் போல இருந்தது அது. அப்பகுதி முழுக்க பாறைகள் மலர் இதழ்கள் போல அடுக்கடுக்காக தென்பட்டன. அங்கிருந்து பார்த்தபோது கீழே பாகிஸ்தானுக்குள் நுழையும் சனாப்பின் நீர்ப்பெருக்கை காண முடிந்தது. மிகக்குறைவான விழிகளால் மட்டுமே பார்க்கப்பட்டிருக்கும் ஒரு இயற்கைக் காட்சி. அங்கேயே வாழும் இடையர்கள், ஆயிரத்துக்கும் குறைவான காவலர்கள் மட்டுமே அதை பார்த்துக்கொண்டிருக்கிறர்கள்.
அந்தத் தனிமையே அவ்விடத்துக்கு வசீகரமான மர்மத்தையும், பிரம்மாண்டத்தையும் அளித்தது. மர்மமானவை நமக்கு ஒரு பிரம்மாண்ட உணர்வை ஏற்படுத்துகிறது. நாம் அன்றாடம் அறியும் சூழலில் இயற்கையில் மர்மமானவற்றை ஏதோ வகையில் நாம் விலக்கி வைத்திருப்பதினால், அந்த இயற்கை நமக்கு பிரமிப்பேதும் அளிப்பதில்லை. இத்தகைய அபூர்வமான இடங்கள் இயற்கையின் அழகையும் மர்மத்தையும் ஒரே சமயம் நமக்குக் காட்டுவதினால் நாம் அந்த பிரம்மாண்ட உணர்வை அடைகிறோம். எமர்ஸன் சிந்தனையில் ஆன்மீகப்பயிற்சி உடையவர்கள் தம் தோட்டத்திலேயே இந்த பிரம்மாண்ட உணர்வை அடைய முடியும் என்கிறார்.
நாங்கள் திரும்பவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானோம். ரஸ்தான் கணவாயிலிருந்து நான்குமணியளவில் பண்டிப்பூரை நோக்கி இறங்கினோம். எங்கள் ஓட்டுனர் பதற்றம் அடைந்திருந்தார். எதிர்ப்படும் ஒவ்வொரு வண்டியிடமும் நிறுத்தி என்ன நிகழ்கிறது என்று கேட்டுக்கொண்டே இருந்தார். சிலர் ஒன்றும் நிகழவில்லை போகலாம் என்றார்கள். சிலர் சில வன்முறைகள் நிகழ்ந்தது தெரியும் என்றார்கள். பண்டிப்பூரை நெருங்குவதற்குள் மையச்சாலைகளில் செல்லவேண்டாம் கல்வீச்சு நடக்கிறது என்று செய்தி வந்தது. எனவே அருகாமையில் இருக்கும் இன்னொரு கிராமத்துக்குள் நுழைந்தோம்.
செல்லும் வழி முழுக்க ஒன்றை கவனித்தேன். ஓட்டுனர் கிராமவாசி யாராக இருந்தாலும் எங்கு கல் வீச்சு என்று கேட்டார். அவர்கள் அதைத் தவிர்த்துவிட்டுப் போவதற்கான வழியைச்சொன்னார்கள். ஒருவர்கூட சினத்துடனோ, எரிச்சலுடனோ எதிர்வினை ஆற்றவில்லை. மூன்றாவது முறை அவர் ஒருவரிடம் விசாரித்தபோது அவர் “பத்மாஷ்” என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அதாவது பொறுக்கிகள் எங்கே கல்லெறிகிறார்கள் என்றுதான் அவர் கேட்டார். இந்தப் பயணம் முழுக்க இதுவரை இருந்த பதற்றமும் மனதை மிக கூர்மையாக்கியிருந்தது. ஆகவே ஒவ்வொரு சிறு விஷயத்தையும் கவனித்துக்கொண்டிருந்தேன்.
ஊர்மக்கள் எந்தவகையிலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை என்பதைக் கண்டேன். ஒவ்வொரு ஊரிலும் பத்து அல்லது இருபது இளைஞர்கள் மட்டும்தான் இந்த வன்முறையை செய்கிறார்கள். வண்டியை வழிமறிக்கிறார்கள். விசாரிக்கிறார்கள். வேகமாகச் செல்லும் வண்டியின் மேலும், ராணுவ வண்டிகள் மீதும் கல்வீசுகிறார்கள்.
முந்தைய நாள் நாங்கள் தங்கியிருந்த முகாமில் ஒரு அதிகாரி, காஷ்மீரில் மிகப்பெரிய சிக்கலே இந்தக் கல்வீச்சுதான் என்றார். ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஐம்பது ராணுவ வீரர்கள் கல்வீச்சால் மண்டை உடைந்து வருகிறார்கள். கடுமையான காயங்கள் ஏற்படுகின்றன. ஆனால் அவற்றை செய்தியாக்கக்கூடாது என்று ராணுவத்தரப்பிலேயே சொல்லிவிடுகிறார்கள். செய்தியாளர்களும் அதை கண்டுகொள்வதில்லை. மிக அபூர்வமாகவே காஷ்மீரில் எவராவது தாக்கப்படும் நிகழ்வு நடக்கிறது. அது மிக முக்கியமான செய்தியாகி தேசிய ஊடகங்களால் இந்தியா முழுவதும் கொண்டுசெல்லப்படுகிறது.
ஐநாவின் கண்காணிப்பு அமைப்பு இங்கிருப்பதனாலும், பல்வேறு சர்வதேச கவனம் இங்கு இருப்பதனாலும், எவ்வகையிலும் ராணுவம் திருப்பித் தாக்கும் நிலையில் இல்லை. துப்பாக்கி வைத்திருக்கும் வீரரின் நேர் எதிரே நின்று கல்வீசும் பதினைந்து வயது சிறுவனுக்குத்தெரியும், ஒருபோதும் அந்தத் துப்பாக்கியை அவனுக்கெதிரே அவர் தூக்க முடியாது என்று.
இந்த கிராமங்கள் வழியாக வரும்போது, நான் மனதில் ஒப்பிட்டுக்கொண்டது இதுதான். ஒரு பெரிய அரசுக்கு எதிராக இருபத்து ஐந்து வருடங்களுக்கு மேலாக போராடிக்கொண்டிருக்கும் மக்கள் போல இவர்களை எண்ண முடியாது. இந்த இடம் எந்த இழப்பையும் சந்தித்த இடமாகத் தோன்றவில்லை. மாறாக தொடர்ந்த பணவரவால் செழிப்படைந்து கொண்டிருக்கும் இடமாகத்தான் தோன்றுகிறது.
இலங்கை போன்ற சிறிய அரசை எதிர்த்து தமிழ் மக்கள் நடத்திய போர் நாமறிந்ததே. அந்தப்போரில் அவர்கள் அடைந்த இழப்புகளும், வெளியேற்றங்களும், சிதைவுகளும் வரலாறு. இங்கு இம்மக்களின் நடத்தையிலோ, சூழலிலோ, எந்தச் சிறிய இழப்பையேனும் இவர்கள் அடைந்ததற்கான தடயம் கூட இல்லை.
கிட்டத்தட்ட இவர்களை ஒரு ராணுவ வளையத்திற்குள், குறைந்தபட்ச வன்முறைக்குள் அடக்கி வைத்திருப்பதை மட்டுமே இந்திய அரசு செய்துவந்திருக்கிறது. அதிகபட்சம் முன்னூறு கிராமங்கள் மட்டுமே இத்தகைய சிக்கல்கள் உள்ளவை என்பது அதிகாரியின் தரப்பாக இருந்தது. அதுதான் உண்மையாக இருக்கக்கூடும் என்ற எண்ணமும் ஏற்பட்டது.
நாங்கள் வந்துகொண்டிருந்தபோது நகர் மையம் ஒன்றில் ராணுவ வீரர்கள் கற்களைப் பொறுக்கி எறிந்துகொண்டிருப்பதைப் பார்த்தோம். தொலைவில், பத்திலிருந்து பதினைந்து வயதுக்குள் உள்ள ஐம்பதிற்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள சிறுவர்கள் ராணுவ வீரர்களை நோக்கி கல்வீசிக்கொண்டிருந்தனர். இவர்கள் அக் கற்களை திரும்ப அவர்களை நோக்கி வீசிக்கொண்டிருந்தார்கள். எங்களை கடந்து போகும்படி சொன்னார்கள், நாங்கள் கடந்துவந்தோம்.
கிட்டத்தட்ட ஒன்றறை மணிநேரம் முள்முனையில் ஒரு பயணம். மையச்சாலைகளைத் தவிர்த்து சுற்றிச்சுழன்று சிறுபாதைகள் வழியாக வந்தோம். நாங்கள் சென்ற பாதைகளில் எல்லாம் கற்கள் சிதறிக்கிடப்பதைக் கண்டோம்.
ஆறுமணி அளவில் திரும்ப விடுதிக்கு வந்து சேர்ந்தோம். காஷ்மீரின் இந்த யதார்த்தம் பெரும் சங்கடத்தை உருவாக்குகிறது. இங்கு இயல்பல்லாத வாழ்கை முறை ஒன்று, சர்வதேச அரசியல் சூதாட்டம் காரணமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் சதுரங்கத்தின் ஒரு பக்கம் அமர்ந்திருக்கிறது. டெல்லியும், எந்த அக்கறையும் இல்லாத இந்திய அரசியல்வாதிகளும் உயரதிகாரிகளும் இன்னொருபக்கம் அமர்ந்திருக்கிறார்கள். நடுவே, உள்ளூர் கிளர்ச்சிக் குழுத் தலைவர்கள் அரசியலாடுகிறார்கள்.
மக்கள் இப்போது வந்துகொண்டிருக்கும் பணம் என்றும் நிலையானது என்ற எண்ணத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசு நலத்திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் என்ற பெயரில் பணத்தைக் கொட்டி இவர்களை தொடர்ந்து தாஜா செய்துகொண்டிருக்கிறது.
இந்தப் போலி வளர்ச்சி எப்படிப்பட்டதென்று ஓட்டுனர் சொன்னார். பணத்தில் பெரும்பகுதியை வீடுகள் கட்டுவதற்கும், வாகனம் வாங்குவதற்கும்தான் காஷ்மீரிகள் செலவிடுகிறார்கள். தொழில்கள் கிடையாது, எந்த வகையான நிலையான வளர்ச்சித் திட்டமும் கிடையாது. ஆக எந்தத் திறனும் அற்ற, கற்காத, உலகம் அறியாத பெரும் மக்கள் கூட்டம் இப்போது உருவாகியிருக்கிறது. இந்த இளைஞர்களின் எதிர்காலம் மிகவும் கவலை அளிக்கக்கூடியது.
மாறாக காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் வேறு வகையான மாற்றத்தை கடந்த பத்து ஆண்டுகளாக அடைந்துள்ளது என்று ஓட்டுனர் சொன்னார். அங்கு முறையாக கல்வி அளிக்கப்படுகிறது. கல்வி கற்ற மாணவர்கள் உயர் படிப்புக்காக டெல்லி மும்பை பெங்களூரு வரை கூட வருகிறார்கள்.
உலகத்தை அறிந்துகொள்ளும்போது அவர்களது பார்வையில் பெரிய மாறுதல் ஏற்படுகிறது. அத்தகைய மாறுதல் எல்லை அருகே நிகழ்வதை தீவிரவாத அமைப்புகள் விரும்புவதில்லை. காஷ்மீரில் ஒரு வருடத்தில் 60-70 நாட்களுக்குத்தான் பள்ளியே நடக்கிறது. இங்குள்ள இளைஞர்களில் ஓரளவேனும் எழுத்தறிவுள்ளவர்கள் மிகக் குறைவானவர்களே. நவீன ஆடைகளும், நவீன செல்பேசிகளும் வைத்திருக்கும் இளைஞர்களில் பலர் எழுதப்படிக்கத்தெரியாதவர்கள் என்பதுதான் உண்மை.
கனத்த மனத்துடன் திரும்ப வரும்போது எண்ணிக்கொண்டேன். தமிழகத்தில் காஷ்மீரைப்பற்றி, அனைவரும் படித்திருக்கக்கூடிய ஒரே ஒரு கட்டுரை எடுக்கமுடியும் என்றால், அது அருந்ததிராய் எழுதி உயிர்மையில் மொழிபெயர்க்கப்பட்டு வந்த “ஆசாதி…ஆசாதி” என்ற கட்டுரைதான். அது கிட்டத்தட்ட முப்பத்தைந்துமுறை இடதுசாரி இதழ்களிலும், இஸ்லாமிய தீவிர வாத இதழ்களிலும் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. எந்த வகையிலும் உண்மையுடன் சம்மந்தமில்லாத கட்டுரை அது. மிகக்குறைவான எண்ணிக்கையைச்சேர்ந்த இங்குள்ள போலி கிளர்ச்சியாளர்களிடம் மட்டும் உரையாடி உருவாக்கப்பட்ட போலியான அறிக்கை அது. உண்மைகளை நம்புவது அவரவர் அரசியல் நிலை. அது ஆதாரங்களை பொருட்படுத்துவதில்லை. தர்க்கங்களை தனக்கேற்ப வளைக்கும்.
ஆனால் நியாய உணர்வுடனும், தர்க்கத்துடனும் யோசிக்கக்கூடிய பொதுவாசகனுக்கு சொல்லவேண்டியது இதுதான். தமிழகத்தில் பெரிய அலைகளைக் கிளப்பிய ஒன்று ஈழப்போராட்டம். இந்திய அளவில் ஈழப்போராட்டம் பற்றி ஐந்து வரிகளேனும் தெரிந்துவைத்திருக்கக்கூடியவர்கள் மிகக் குறைவு. இவ்வளவுக்கும், அப்போராட்டம் இந்தியாவின் பிரதமர் ஒருவரையே பலிவாங்கியது. ஆனால் தேசிய ஊடகங்கள், எந்தவகையிலும் தமிழர்களுடைய நியாயத்தை எங்குமே எழுதவில்லை, பேசவில்லை.
மாறாக காஷ்மீரில் உள்ள சிறிய வட்டத்திலுள்ள தீவிரவாத அமைப்புகளுடைய பிரச்சாரம் மட்டும்,காஷ்மீரில் இருந்து கன்யாகுமரிவரை கோடிக்கணக்கான மக்களுக்கு எப்படி எடுத்துச்செல்லப்படுகிறது? யார் எடுத்துச்செல்கிறார்கள்? கண்டிப்பாக சுன்னி இஸ்லாம் மதப்பிரிவும், பிரச்சார அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் அதில் பெரும்பங்காற்றுகின்றன.
ஆனால் அதற்குமேலாக தாங்கள் இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் இந்திய எதிர்ப்பு கூலி அறிவுஜீவிக்கும்பல் அந்தப்பணியை ஆற்றிக்கொண்டிருக்கிறது. அப்பட்டமான் பொய்ப் பிரச்சாரம், பிழையான தகவல்கள், அவதூறுகள், திரிபுகள் வழியாக நம் சமகால வரலாறு நம் கண்ணெதிரே வேறாக காட்டப்படுகிறது.
இன்று முழு அடைப்பு நாளாகையால் ஓட்டுனரும் பிறரும் கேட்டுக்கொண்டதன் பேரில் மீண்டும் மத்திய ஆயுதப்படை முகாமிலேயே தங்கலாம் என்று முடிவுசெய்து முகாமுக்கு வந்து சேர்ந்தோம். மீண்டும் அங்கே தங்க உதவி கேட்க எங்களுக்கு சிறு தயக்கம் இருந்தது.
ஆனால் எங்களை வரவேற்ற ஜோகீந்தர் சிங்கும், தீரஜ் மிஸ்ராவும் அந்தத் தயக்கத்தை இல்லாமல் ஆக்கினார்கள். இது உங்களுடைய சொந்த முகாம் போல என்று ஜோகீந்தர் சிங் சொன்னார். சிறந்த உணவும், வசதியான தங்குமிடமும் அமைந்த முகாம் இப்பயணத்தில் எங்களுக்குக் கிடைத்த வரம் என்றே சொல்லவேண்டும்.
ஜோகீந்தர் சிங் சுய முன்னேற்றத் துறையிலும், ஆன்மீகத்திலும் மிகுந்த ஈடுபாடு உடையவர். காஷ்மீரின் டோக்ரா இனத்தைச்சேர்ந்தவர். தீரஜ் மிஸ்ரா உத்தரப் பிரதேசத்தில் இருந்து வருபவர். நாகாலாந்தைச் சேர்ந்த நீங்கம் இன்னொரு துணை அதிகாரி. இவர்களே இந்த முகாமுக்கு பொறுப்பானவர்கள். இம்மூவருடனுமான நட்பும் பழக்கமும், இப்பயணத்தின் மிகச்சிறந்த அனுபவங்களில் ஒன்றாக இருந்தது.
ஜோகீந்தர் சிங் இந்த முகாமை ஒரு தந்தையின் இடத்தில் இருந்து நடத்திச்செல்வதாகவும், அவருடைய துணை அதிகாரிகளும், ஊழியர்களும் தனிப்பட்ட முறையிலும் அவர் மீது பெருமதிப்பும் பிரியமும் கொண்டிருப்பதாகவும் உணர்ந்தேன்.
இவ்வுணர்வு இயல்பாக எழக்கூடியது. புதிய வருகையாளராக நாம் அங்கே தங்கும்போது, அங்கே சிறு மன உரசல் இருந்தாலும் உடனே நம் மனம் அறிந்துவிடும். அப்படி எதையுமே இந்த முகாமில் பார்க்கமுடியவில்லை என்பது உண்மையிலேயே வியப்பளித்தது. அது முகாம் அதிகாரியின் தனிப்பட்ட பண்பு நலன் என்றே தோன்றியது.
லீங்காம் அவர்கள் நாகலாந்து மற்றும் வடகிழக்கு அரசியல் பற்றியும், சத்தீஸ்கரில் அவர் பணியாற்றியதைப் பற்றியும் விரிவாகச்சொன்னார். சத்தீஸ்கரின் எளிய மக்களின் மீது அவர் கொண்டிருந்த பேரன்பையும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளும், வாழ்வாதார வசதிகளும் செய்து தருவதில் அரசுகள் தோற்றுவிட்டன என்பதையும் மிகுந்த உணர்ச்சியுடன் எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.
ஜோகீந்தர் சிங் எங்களிடம் இத்தகைய பயணத்தை எந்த இதழாளரும், அறிவுஜீவியும் செய்ததில்லை என்றும். இப்பகுதியில் வெளியில் இருந்து வந்து நேரில் பார்த்து பதிவுசெய்யும் எவரையுமே தான் சந்தித்ததில்லை என்றும் சொன்னார். நாங்கள் திரட்டும் தகவல்கள் அவர்களுக்கும் மிக உதவிகரமானது என்றும் சொன்னார். எங்கள் புகைப்பட தொகுப்புகளையும் வாங்கிக்கொண்டார். அந்த முகாமில் இருக்கும் தமிழகத்தைச்சேர்ந்த ரகு என்ற ராணுவ வீரர் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார்.
அங்கிருந்து கிளம்பும்வரை அங்கிருந்த ஒவ்வொருவருடனும் நாங்கள் கொண்ட நெருக்கமும் அன்பும் இந்தப் பயணத்துக்கு அப்பாலும் வாழ்நாள் முழுக்க இனிய நினைவாக நீடிக்கக்கூடியவை என்று தோன்றியது. ஜோகீந்தர் சிங் அவர்களுடனும், தீரஜ் மிஸ்ரா அவர்களுடனும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அவை ஒரு பழைய குடும்ப புகைப்படம் போல எங்கள் தொகுப்பில் என்றும் இருந்துகொண்டிருக்கும் என்று தோன்றியது.