தேர்வு – ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் தளத்தில் தேர்வு கட்டுரை படித்தேன், மிகவும் சரியான விதத்தில் உங்கள் மகனுக்கு இருந்த பிரச்சினையை புரிந்துகொண்டு அவரை சரியான பாதையில் திருப்பிவிட்டீர்கள். ஆனால் நம் சராசரி தமிழ் குடும்பச்சூழலிலும், கல்விச்சூழலிலும் இத்தகைய புரிதல் கொண்ட சுற்றம் எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை.

நானும் இடது கை பழக்கமுள்ளவன் தான், எழுதுவதைத் தவிர பல் துலக்குவது, கணினியின் மௌஸ் எல்லாவற்றையும் இடது கையில் எளிதாக பயன்படுத்த முடிகிறது. ஆனால் நான் சிறுவயதில் படித்த பள்ளியில் இடது கை பயன்படுத்தினால் அடி விழும். எழுத்தை அவர்கள் எப்படி எனக்கு பழக்கினார்கள் என்று நினைவு இல்லை ஆனால் ஆசிரியர்களிடம் ஏதேனும் கொடுக்கும்போதும் இல்லை வாங்கும்பொழுதும் இடது கையை நீட்டி அடி வாங்கியிருக்கிறேன்.

அங்கே இருந்த ஒரே நல்ல விஷயம் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு, ஒரு வகுப்பில் 40 பேருக்கு மேலே இருக்க மாட்டார்கள், அப்படி இருந்தால் இரண்டு வகுப்பாக பிரித்து விடுவார்கள், அது ஒரு கிறித்தவ மிஷனரி பள்ளி, மிகக் குறைவாக மாணவர்கள் இருப்பதால் ஒவ்வொரு மாணவனையும் குறித்து தனிக்கவனம் எடுக்க ஆசிரியர்களால் முடிந்தது.

என் எழுத்து என் கோழி குப்பையைக் கிளறிய தடம் போலவே இருக்கிறதென்று என் அப்பா மிகவும் பாராட்டுவார், இப்பொழுதும் கூட, அதனாலேயே அவர் அருகில் இருந்தால் நான் எழுத மாட்டேன் அவர் கண்பட எழுதவே மாட்டேன். ஆனால் அந்த ஆசிரியர்கள் என்மீது தனிக்கவனம் செலுத்தி என்னுடைய விடைத்தாளை திருத்துவார்கள். எட்டாம் வகுப்பு வரையிலும் அப்படியே தான் இருந்தது எப்படியும் 400க்கு மேலும் வகுப்பில் முதல் மூன்று இடங்களுக்குள்ளும் வந்து விடுவேன்.

படிக்கிற பையன் என்று வீடு, பள்ளி, உறவு, சுற்றம் எல்லாவற்றிலும் ஒரு பெயர் இருந்தது. நானும் அப்படியே நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒன்பதாம் வகுப்பில் வேறு பள்ளி மாறியதில் இருந்து வந்தது சனி, அங்கே ஒரு சிறிய அறையில் 66 மாணவர்கள், அதுபோல ஒன்பதாம் வகுப்பில் மட்டும் 13 பிரிவுகள். இத்தனை மாணவர்களில் அவர்கள் என்ன தனி கவனம் செலுத்தி விட முடியும்.

ஒன்பதாம் வகுப்பில் நுழைந்ததும் முதல் அடியே படிக்கிற பையன் என்ற பிம்பத்தின் மீது விழுந்தது, எனக்கும் ஒன்றும் புரியவில்லை, வீட்டில் இருப்பவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஒவ்வொரு தேர்விலும் ஒரு பாடத்தில் தேர்ச்சி அடைவதே பெரும்பாடாய் போய்விட்டது. ஆனாலும் ஆண்டுகளை வீணாக்காமல் பண்ணிரெண்டாம் வகுப்பையும் தாண்டி விட்டேன்.

அடுத்த சனி வந்தது பொறியியல் என்ற ரூபத்தில், சிறு வயதில் இருந்தே பொறியியல் கனவு என்னுள் இருந்தது, யார் விதைத்தது என்று கூட தெரியவில்லை, சுமாரான மதிப்பெண்ணே பன்னிரண்டாம் வகுப்பில் எடுத்திருந்ததால் மிகச் சுமாரான கல்லூரியே கிடைத்தது. இங்கு பள்ளியை விட நிலை மோசம்.

வகுப்பில் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் உடனே பதில் சொல்ல முடியும் (கணிதம் தவிர), தேர்வு வரும், மிக நன்றாக எழுதிவிட்டு வந்திருப்பதாக நினைத்துக் கொள்வேன் ஆனால் அந்த பருவத்தின் அத்தனை பாடங்களிலும் தோல்வி என்று தான் முடிவுகள் வரும். மறுதிருத்தலுக்கு விண்ணப்பித்தாலும் இதே நிலைதான். ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் எனக்கு என்ன பிரச்சனை என்று என்னால் உணரமுடியாமல் போனதே.

வாய் கொஞ்சம் அதிகம் எனக்கு, துடுக்குத்தனமாக பேசி பல ஆசிரியர்களிடம் நல்ல(!?) பெயரை சம்பாதித்து வைத்திருந்தேன், அவர்கள் இண்டர்னல் மார்க்கில் கைவைத்துதான் இப்படி நடக்கிறதா, இல்லை எனக்கு உண்மையில் பொறியியல் படிக்கும் அளவுக்கு தகுதி இல்லாமல் நான் தவறுதலாக இங்கே வந்து விட்டேனா என்று யோசித்துக் கொண்டிருந்தே கல்லூரி வாழ்க்கையும் முடிந்து விட்டது. கனவு பட்டமான பொறியியல் கனவாகவே போய்விட்டது.

இப்பொழுது உட்கார்ந்து யோசித்தால் வலுக்கட்டாயமாக வலது கையை பழக்கி எழுத்தினை மிக மோசமாக்கியது கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று புரிகிறது. காலம் கடந்த ஞானம் வந்து என்ன பயன்.? எப்படியோ முட்டி மோதி மென்பொருள் துறைக்குள் நுழைந்துவிட்டேன், இந்த கயிற்றைப் பிடித்து மேலே ஏறிவிடுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது.

இப்பொழுது நான் எல்லா வேலைகளையும் இரண்டு கைகளால் செய்யப் பழகி வருகிறேன், எழுத்து மட்டும் இடது கையில் சரியாக வருவது இல்லை, மற்றவை எல்லாம் இரண்டு கையிலும் கிட்டத்தட்ட சமமாக வருகின்றன. இதுவும் ஒரு தனித்திறமை என்று சொல்லிக்கொள்ளலாம அல்லவா?

இதையெல்லாம் யாரிடாமாவது சொல்ல வேண்டும் போல இருந்தது, உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் ஒரு திருப்தி, இதைப் படிக்கும் நண்பர்களாவது தங்கள் குழந்தைகளை உன்னிப்பாக கவனிப்பார்கள் என்று நம்புகிறேன்.

சந்தேகம் என்னவென்றால் இடது கையால் கொடுப்பது/வாங்குவது தவறு என்று ஏன் போதிக்கப்பட்டது? கொடுப்பது வாங்குவது தவறாயினும் எழுத்துப்பயிற்சி போன்ற அடிப்படைகளை அவர்களின் இயல்பில் விடுதல்தானே நலம்.? அப்படி என்ன இடது கை தரம் தாழ்ந்து விட்டது?

–இப்படிக்கு
விக்னேஷ்.M.S

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 67
அடுத்த கட்டுரைஇமயச்சாரல் – 9