இமயச்சாரல் – 11

தாப்பர் பிரதாப் சுவாமி ஆலயத்தையும் அதன் பின் பண்டியின் தத்தா மந்திர் ஆலயத்தையும் பார்த்துவிட்டு திரும்ப வந்தோம். இந்த ஆலயங்களைப்பற்றி ஒற்றை வரியல்லாத வேறெதையுமே இணையத்திலோ சுற்றுலா ஆவணங்களிலோ தொல்லியல் துறை அறிவிப்புகளிலோ காணமுடியவில்லை. இவற்றைப் பற்றி பெரிய அளவில் ஆய்வுகள் நடந்திருக்கின்றனவா, நூல்கள் ஏதும் எழுதப்பட்டிருக்கின்றனவா என்று தெரியவில்லை.

uri5

இங்குள்ளவர்களிடம் கேட்டபோது அவற்றைப் பற்றி தோராயமான வழிகாட்டலுக்கு அப்பால் எவராலும் எதுவும் சொல்ல இயலவில்லை. பண்டியில் தத்தா மந்திர் ஆலயத்தில் இருந்து திரும்பி வரும் வழியில் புனியார் என்னும் இடத்தில் ராணுவ முகாமுக்குள் நாங்கள் கண்ட ஆலயத்தின் அருகில் வந்தோம். அதற்கருகே பெரிய நீர் மின் திட்டம் ஒன்று உள்ளது. அந்த நீர்மின் திட்டத்தைப் பார்ப்பதற்காக சாலை ஓரமாக ஒரு காட்சி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒருவர் நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து வருகிறோம் என்பதை அறிந்து அறிமுகம் செய்துகொண்டார்.

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அங்கே முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்திருக்கிறார். அவர் பெயர் முகம்மது சுகுர்.  அவருடன் தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டோம். அவருடன் நின்ற அவருடைய நண்பர் காவல் துறை ஆய்வாளர் என்று அறிந்தோம். அவர் நாங்கள் பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலைப் பார்த்து, இன்னும் பல இடங்களை எங்களுக்கு குறித்துத் தந்தார். மிகவும் உற்ச்சாகமும் பரவசமும் தந்த சந்திப்பாக அது இருந்தது.

அவருக்கு தமிழ்நாட்டைப் பற்றிய மிக உற்சாகமான நினைவுகள் இருந்தன. குறிப்பாக ஈரோடு அவருக்குத் தெரிந்த ஊராக இருந்ததில் கிருஷ்ணன் பெருமகிழ்ச்சி அடைந்தார். டாப்ஸ்லிப்புக்கும், பரம்பிக்குளத்துக்கும் சென்று வந்த அனுபவத்தை சொன்னார். வழியில் சந்திக்க நேரும் இத்தகைய சில முகங்கள் எப்போதும் பயணத்தை ஒளிகொள்ள வைக்கின்றன.

புனியாரின் ராணுவ வேலிக்குள் நுழைந்து அந்த ஆலயத்தைப் பார்த்தோம். காஷ்மீரில் நாங்கள் பார்த்த ஆலயங்கள் இதுவரை அடித்தளம் மட்டுமாகவோ, அடித்தளத்துக்கு மேல் சற்று சுவர் எழும்பியவையாக மட்டுமோ எஞ்சி இருந்தன. இந்தக் கோவில் ஏறத்தாழ 60 சதவிகிதம் முழுமையாக இருந்தது வியப்பளித்தது.

மைய ஆலயத்தின் கோபுரம் உடைந்திருந்தது. அதை சுதையினாலான கூரை அமைத்து செப்பனிட்டிருந்தார்கள். சுற்றுப்பிராகாரம் ஒரு ஓரத்தில் மட்டும் இடிந்திருந்தது. ராணுவம் இங்கு எழுபதுகளில் வந்தபோது கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்த இந்த ஆலயத்தை எடுத்து லட்சக்கணக்கில் செலவு செய்து மீட்டிருக்கிறார்கள்.

uri13

மூன்று கர்னல்கள் சொந்த செலவில் திருப்பணி செய்திருப்பதாக அங்கே அறிவிப்பில் எழுதப்பட்டிருந்தது. இந்த ஆலயம் தாப்பர் கைநிஷார் ஆலயமும், பண்டி தத்தா மந்திரும் எப்படி இருந்திருக்கும் என்று காட்டக்கூடியதாக இருந்தது.

உருண்ட தூண்களால் ஆன பெரிய சுற்றுப்பிராகாரம். ஆனால் தமிழகத்து ஆலயங்கள் போன்ற பிராகாரம் அல்ல அது. ஐம்பத்தி நான்கு தனி கோஷ்டங்கள் இணைந்து பெரிய பிராகாரமாக ஆகியிருந்தது. ஒவ்வொன்றிலும் ஒரு தெய்வம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்திருக்கலாம். இப்போது ஒரு கோஷ்டம் தவிர எதிலுமே சிலைகள் இல்லை.

uri14

ஒரே ஒரு கோஷ்டத்தில் மட்டும் சப்த மாதாக்களில் ஒருத்தியான சாமுண்டி தேவியின் சிலை இருந்தது. பிணம் மீது அமர்ந்து எலும்புக்கூட்டுடன், மண்டையோட்டு மாலை சூடி முக்கண்னுடன் தோற்றம் தரும் சாமுண்டி. மழையில் கல்முனைகள் மழுங்கி இருந்தாலும், உக்கிரமும் அழகும் கொண்ட சிலை.

இருபதடி உயரமான அடித்தளத்தின் மேல் கோவில் இருந்தது. உள்ளிருந்த சிவன் சிலை மிகப்பழையது. குடிமல்லம் சிலை போல ஏறத்தாழ ஆண்குறி வடிவிலேயே இருந்தது. அதை ஓரமாக வைத்துவிட்டு பொதுவாக நாம் காணும் சிவலிங்கம் ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். அங்கிருந்த குறிப்பு பத்தாம் நூற்றாண்டில் அவந்தி வர்மன் காலகட்டத்தில் அமைக்கப்பட்ட கோவில் அது என்று சொல்கிறது. ஆனால் விஷ்ணு கோவில் அது என்று சொல்கிறது. ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் அந்த ஆலயத்தில் இல்லை.

uri20

இந்தக் கோவில் ராணுவப் பராமரிப்பில் உள்ளது. ராணுவ ஊழியர் ஒருவர் அங்கே பூஜை செய்கிறார். அவர் ஹரியானாவைச்சேர்ந்த இளைஞர். அவருக்கு ஆலயம் பற்றி எதுவும் தெரியவில்லை. ஆலயத்தின் அமைப்பு, சிறப்புகளைப்பற்றி என்னிடம் எழுந்தித் தரும்படி கேட்டார். நான் ஒரு பக்க அளவில் எழுதி கொடுத்தேன். மிகுந்த பரவசம் அடைந்தார்.

கீழே கோவிலுக்குள்ளேயே, ஒரு தற்காலிகக் கட்டடத்தில் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. குருத்வாராவின் கியான் எங்களைப் பார்க்கவந்தார். எங்களை உள்ளே வரும்படி அழைத்தார். அவரளித்த தலைத் துணிகளை அணிந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டோம்.

uri21

கியான் குருகிரந்த சாகேபின் வரிகளையும், குருவரிசையின் வரலாற்றையும் சுருக்கமாக எங்களுக்குச் சொன்னார். அதை சஞ்சய் என்ற அந்த இந்துப் பூசாரி ராணுவ வீரர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச்சொன்னார். கியானி தொலைபேசியில் அழைத்து, அப்பகுதியில் இருக்கும் வேறு ஆலயங்களைப் பற்றி விசாரித்து சில தகவல்களை அளித்தார்.

uri7

பஷீர், குருத்வாராவில் வந்து பிரார்த்தனையில் கலந்துகொண்டார், ஆலயத்தைப் பார்த்து வியந்து, அற்புதமாக இருக்கிறது, இங்கு நான் வந்ததே இல்லை. ஆனால் என் அப்பா சொல்லியிருக்கிறார், இரண்டு பூதங்கள் இதைக் கட்டின என்று. தங்கை பூதம் கற்கள் கொண்டுவந்து கொடுத்தது, அண்ணன் பூதம் கட்டியது, கட்டிக்கொண்டிருக்கும்போதே பொழுது விடிந்துவிட்டதனால் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள் என்று சொன்னார். அவருடைய ஊர் புனியாரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.

நாங்கள் இது ஆயிரம் வருடங்கள் முன்பு கட்டப்பட்டது என்று சொன்னபோது. யார் இடித்தார்கள் என்று திகைத்து கேட்டார். என்ன சொல்வது, ஒரு காலம் முடியும்போது தானாக இடிந்துவிடும் என்று நான் சொன்னேன். பதினொன்றாம் நூற்றாண்டில் சுல்தானியப் படையெடுப்பாலும், பதினாறாம் நூற்றாண்டில் அவுரங்கசீப்பின் படையெடுப்பாலும், இப்பகுதியின் ஆலயங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன என்பது வரலாறு.

uri23

புனியார் ஆலயத்தின் பிராகாரங்கள் காஷ்மீரின் மற்ற ஆலயங்களிலும் இருந்திருக்கும் என்றால் ஒவ்வொரு கோவிலும் தஞ்சை பெரிய கோவில் அளவுக்கு இருந்திருக்கும் என்றேன். ஒவ்வொரு ஆலயத்தினையும், மனக்கண்ணால் பார்ப்பதே பெரும் மனக்கிளர்ச்சியை அளிப்பதாக இருந்தது.

பஷீர் எங்களை ஒரு காஷ்மீரக உணவகத்துக்கு அழைத்துச்சென்றார். அங்கே மிகச்சிறந்த காஷ்மீர் உணவை சாப்பிட்டோம். காஷ்மீர சிவந்த அரிசிச் சோறும், கோளம் போட்டு செய்த குழம்பும், கஷ்மீரி கஹ்வாவும் கொண்ட அந்த உணவு ஒரு பரவசமூட்டும் அனுபவம். எங்களுக்கு மிகச்சிறந்ததை மட்டுமே தேடிக் கொடுக்கவேண்டும் என்று பஷீர் முயற்சி எடுத்துக்கொள்வது தெரிந்தது.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69
அடுத்த கட்டுரைஇமயச்சாரல் – 12