காஷ்மீரில் கோசர்நாத் என்ற குகை உள்ளது. இக்குகைக்கு சென்ற சில வருடங்களாக பக்தர்கள் வரத்தொடங்கியிருக்கிறார்கள். காஷ்மீரில் பெரும்பாலான இந்து வழிபாட்டிடங்கள் கிட்டத்தட்ட மூடிக்கிடக்கின்றன. அமர்நாத் ஒரு விதிவிலக்கு. ஒவ்வொரு வருடமும் அமர்நாத்துக்கு இந்துப் பயணிகள் வருகிறார்கள்.
இதை ஒரு ஊடுருவலாக மட்டுமே இங்குள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளும் பிரிவினைவாத அமைப்புகளும் எடுத்துக்கொண்டு அவர்கள் மேல் தாக்குதல் நடத்திவருகின்றன. ஒவ்வொரு வருடமும் ஐநூறுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைகிறார்கள். ஆயிரம் காவலர்களேனும் காயம் அடைகிறார்கள்.
இச்செய்திகள் எதுவும் வெளிவரக்கூடாது என்பது அரசின் தரப்பாக உள்ளது. இங்கு துணை ராணுவப்படை அலுவலகங்களுக்குச் சென்றபோது அனைத்து இடங்களிலும் அவர்களின் பணிகளில் முக்கியமானதாக நான்கை எழுதிவைத்திருந்ததைப் பார்த்தோம். ராணுவத்துக்கு உதவுவது, உள்நாட்டு அமைதியைப் பராமரிப்பது, தேர்தல்களை நடத்துவது, அமர்நாத் யாத்திரையை நடத்துவது.
அமர்நாத் யாத்திரை கிட்டத்தட்ட ஒரு போர் ஒத்திகையைப்போல சுமார் ஒரு மாதகாலம் நிகழ்ந்து முடிகிறது. முடிந்ததும் ராணுவம் பெருமூச்சு விடுகிறது. ஆனால் கல்வீச்சில் எவரையும் கைது செய்ய முடிவதில்லை. எவரை கைது செய்தாலும் நிரபராதி கைது செய்யப்பட்டார் என்று சொல்லி அதை செய்தியாக தேசிய ஊடகங்கள் அனைத்திலும் பரவ விடுவார்கள் என்றும் அதற்காக அடுத்தகட்ட போராட்டத்தை தொடங்குவார்கள் என்றும் காவலர்கள் சொன்னார்கள். இஸ்லாமிய காவலர் ஒருவர் திரும்ப கல்வீசுவதைத்தவிர ராணுவத்தால் எதையுமே செய்யமுடியாது என்று சிரித்தபடி சொன்னார்.
சமீபகாலமாக அமைதி திரும்பியதுபோல இந்துக்கள் சிலஆலயங்களுக்கு வரத்தொடங்கியிருக்கிறார்கள். அதில் ஒன்று கோசர்நாத் குகை. அந்த குகைக்கு பயணிகள் வரக்கூடாது, அதை மீண்டும் மூடிவிடவேண்டும் என்று ஹுரியத் அமைப்பு முழு கடையடைப்புக்கு ஆணையிட்டிருந்தது. அதன்பொருட்டு நடந்த போராட்டத்தைத்தான் சனிக்கிழமை அன்று நாங்கள் சந்தித்தோம்.
அச்செய்தியை மாலையில்தான் நாளிதழ்களில் முழுமையாக வாசித்தேன். ஏனென்றால் வெள்ளிக்கிழமை அன்றுதான் அவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை வாசித்தபோது ஒரு அதிர்ச்சி எங்களுக்கு இருந்தது. நாங்கள் ஹிர்ப்போரா என்ற ஊரில் புதனன்று தங்கியிருந்தோம். அதுதான் அந்த குகைப்பயணத்திற்குச் செல்லும் வழியில் உள்ள கடைசி ஊர்.
அவ்வூரில் இருந்த அத்தனை பேருமே அக்குகையைப் பற்றி புகழ்ந்து சொல்லி அதைக் காணுமாறு கூறினர். எங்கள் திட்டத்தில் அது இல்லை என்பதால் நாங்கள் அங்கே செல்லவில்லை. பயணிகளை அவ்வூரில் எதிர்பார்த்திருப்பதையும், வரவேற்பதையும் கண்டோம். ஊர்ப்பெருமை ஒருபக்கம், வணிக நோக்கம் ஒருபக்கம். கூடவே அம்மக்கள் பொதுவாக அயலவர்களை வரவேற்று உபசரிக்கும் இனிய பண்பு கொண்டவர்கள் என்பதும் ஒரு காரணம்.
சனிக்கிழமை அன்று நடந்த அந்தப் போராட்டத்தில் வியாழக்கிழமையன்று நாங்கள் எங்கள் வண்டியை நிறுத்திவிட்டு சுகந்தபுரீஸ்வரர் ஆலயத்தைக் காணச்சென்ற அதே இடம் செய்தியில் வந்திருந்தது. அங்கு நின்றிருந்த ஒரு காவலர் கோடாலியால் தாக்கப்பட்டு அவருடைய துப்பாக்கி பிடுங்கப்பட்டது. அவ்வழியாகத்தான் நாங்கள் காலையில் செல்லவேண்டும்.
துப்பாக்கி பிடுங்கப்பட்ட சம்பவத்தைப்பற்றி பேசும்போது விடுதி உரிமையாளர் ராணுவம் திருப்பி சுடமுடியாது எனவே துப்பாக்கி ஒரு கூடுதல் எடைமட்டுமே என்று சொன்னார். ஒரு குண்டு கூட வெடிக்கக்கூடாது என்ற ஆணை கடந்த பல வருடங்களாக ராணுவத்திற்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
பஷீர் வந்து சேர்ந்தார். அவருடன் நாங்கள் பத்தான் கிளம்பிச் சென்றோம். முந்தையநாள் துப்பாக்கி பறிக்கப்பட்ட அதே இடத்தைக் கடந்து சென்றபோது அங்கே கற்கள் சிதறிக்கிடப்பதைக் கண்டோம். ஆனால் சாலைகளில் இயல்பு வாழ்கை கொப்பளித்துக்கொண்டிருந்தது. எங்கும் எந்தத் தடயமும் இல்லை. மக்கள் உற்சாகமாகவும் விரைவாகவும் சென்றுகொண்டிருந்தார்கள்.
பத்தான் துணை ராணுவப்படை முகாமில் கமல் சிங் அவர்கள் எங்களைச் சந்தித்த அந்த இடத்துக்கு இரண்டு கிலோமீட்டருக்கு அப்பால்தான் முதல் ஆலயம் இருந்தது. வியாழக்கிழமையன்று அந்த ஆலயத்தைப்பற்றி கேட்டபோது தனக்கு அது தெரியாது என்று அவர் சொல்லியிருந்தார். உண்மையிலேயே தெரியாமல் இருக்கலாம். மத்திய தொல்லியல் துறையால் வேலியிடப்பட்ட ஆலயம் சாலையோரமாகவே தென்பட்டது. தாப்பர் என்ற இடத்தில் உள்ள இந்த ஆலயம், 12 ஆம் நூற்றாண்டில் அவந்திவர்மர் வம்சாவளியினரால் கட்டப்பட்டது.
பெரிய கட்டுமானம். பத்தடிக்குமேல் உயரம் கொண்ட ஒரு தளம், அதற்குமேல் நாற்பதடிக்கு மேல் இருந்திருக்கக்கூடிய ஆலயம். இப்போது சுற்றுச்சுவர்கள் மட்டுமே உள்ளன. அப்பகுதியில் கற்கள் சிதறிப் பரவிக் கிடந்தன. சிவன் ஆலயம் என்று சொன்னார்கள். அதற்கப்பால் அவ்வாலயத்தைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
தாப்பரில் இருந்து செல்லும் வழியில் பஷீர் ஓரிடத்தில் நிறுத்தினார். பெரிய ஒரு ஆலயத்தின் தோரணவாயில் தெரிந்தது. அப்பால் ஒரு ஆலய முகடு தெரிந்தது. ராணுவ முகாமுக்குள் அந்த ஆலயம் இருந்தது. ராணுவ முகாமுக்கே உரிய பெரிய கம்பி வேலிகளால் அப்பகுதி சூழப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது.
ராணுவ அனுமதி பெற்று உள்ளே சென்று காணவேண்டும். எங்களுக்கு யாரையும் தெரியுமா என்று பஷீர் கேட்டார். தெரியாது என்றோம். அவருக்குத் தெரிந்த ஒருவர் உள்ளே இருக்கிறார் என்றும் விசாரித்து அனுமதி பெறுவதாகவும், அதற்குள் அடுத்த ஆலயத்தை பார்த்து வரலாம் என்றும் சொன்னார்.
நாங்கள் அதற்கு அடுத்த ஆலயமான பங்கி ஆலயத்துள் சென்றோம். 12ஆம் நூற்றாண்டில் அவந்தி வர்மனால் கட்டப்பட்ட பெரும் ஆலயத்தின் அடித்தளம் இது. இப்பகுதி முழுக்க இதேபோன்ற ஆலயத்தின் பகுதிகள் சிதறிக்கிடக்கின்றன. இது கைநீஷா என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது. அப்பெயர் பஷீருக்கு தெரிந்திருந்தது.
இருபதடி உயரமான மையக்கோவிலின் அஸ்திவாரமும் சுற்றி பத்தடி உயரமான பிராகாரத்தின் அஸ்திவாரமும் மட்டுமே காணப்படுகிறது. மிகப்பிரம்மாண்டமான ஆலயத்தின் கல்லாலான அடிக்கட்டுமானம் மட்டும்தான் அது. கற்குவியல் மண்ணுக்கடியில் புதைந்து போயிருக்கலாம். காலை ஒளியில் அந்த புல் பரவிய அடித்தளத்தில் சுற்றிவருவதென்பது வரலாற்றை கால்களால் தொட்டறிவது போன்ற அனுபவமாக இருந்தது.