இமயச்சாரல் – 8

இன்று சனிக்கிழமை. திட்டப்படி நாங்கள் குரேஷி சமவெளிக்குச் (Gurez Valley) செல்லவேண்டும். பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் இந்தச் சமவெளி மிக அழகிய புல்வெளி என்று இணையத்தில் வாசித்திருந்தோம். விடுதியாளரிடமும்,  நண்பரிடமும் அதைப்பற்றி கேட்டோம். அவர்கள் அந்தப் பகுதி பாகிஸ்தான் எல்லையின் மிக அருகே உள்ள பகுதி, எனவே அங்கு ஜம்முவைச்சேர்ந்த எங்கள் ஓட்டுனருடன் ஜம்மு பதிவெண் கொண்ட வண்டியில் செல்வது மிகவும் ஆபத்தானது என்று சொன்னார்கள்.

என்ன செய்யலாம் என்று அவர்களிடமே கேட்டபோது, காஷ்மீர் பகுதியைச்சேர்ந்த  ஓட்டுனரை ஏற்பாடு செய்து தருவதாக சொன்னார்கள். அதன்படி காஷ்மீரைச்சேர்ந்த வண்டியை வரச்சொல்லியிருந்தோம். சற்றே பழைய ஸ்கார்ப்பியோ வண்டி, ஓட்டுனராக பஷீர். ஏற்கனவே சுற்றுலா ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் அவர். அத்துடன் குரேஷி சமவெளி அருகில் உள்ள ஒரு கிராமமே அவருடைய சொந்த ஊர். விடுதியாளர் உதவியுடன் தொலைபேசியிலே அவரை அழைத்துப் பேசி முடிவுசெய்தோம்.

gure1

மறுநாள் காலை வழக்கம் போல தாமதமாகியது. காலை ஐந்து மணிக்கே விழித்துக்கொண்டோம் ஆனால் மின்சாரம் இல்லை. குளிர் நீரில் ஒவ்வொருவராக குளித்து தேனீர் அருந்தி கிளம்பும்போது ஏழரை மணி ஆகிவிட்டது. அப்போதுதான் ஒரு தகவல் தெரிந்தது. ஹுரியத் அமைப்பு காஷ்மீர் முழுக்க கடையடைப்பு போராட்டத்தை அறிவித்திருக்கிறது.

நேற்று வெள்ளிக்கிழமை, ஜும்மா தொழுகைக்குப் பிறகு வழக்கமான கல்வீச்சு நிகழ்வுகள் எதுவும் பெரிய அளவில் நிகழவில்லை என்பதற்கான காரணம் இதுதான். காஷ்மீர் முழு அடைப்பு என்பது அடிக்கடி நாம் நாளிதழ்களில் வாசிக்கும் செய்தி. அதை வைத்து பெரிய கலவரமும், ராணுவத் தாக்குதலும் இருக்கும் என எதிர்பார்த்தோம்.

ஆனால் எங்கள் விடுதியாளர் சிரித்தபடி இவை காஷ்மீர் விடுதலை அமைப்புகள் என்று சொல்லிக்கொள்ளக் கூடியவை நடத்தும் நாடகங்களே என்றார். அவர் கிலானியின் பெயரைச் சுட்டியே அதைச்சொன்னார். அவர்கள் பணத்துக்காக நடத்தும் தொடர் நாடகத்தின் பகுதிகள் இவை. வண்டியில் ஏறும்போது மீண்டும் பஷீரும் அதையே சொன்னார். இவர்கள் ஷியா முஸ்லீம்களாக இருப்பார்களோ என்று நினைத்து விசாரித்தபோது, இருவருமே சுன்னி முஸ்லீம் பிரிவைச்சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

gurez2

காஷ்மீருக்குள்ளேயே, உண்மையான யதார்த்தத்தை உணர்ந்தவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் யாரும் இந்தியச்சூழலில் தங்கள் குரலை வெளிப்படையாக திட்டவட்டமாக முன்வைக்கப்போவதில்லை. சொல்லப்போனால், இரண்டுவருடங்களுக்கு முன்புவரை ஷியாபிரிவில் ஒரு தரப்பினர் பாசாங்கான நடுநிலையோ அல்லது பிரிவினை வாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் மிக மெல்லிய ஆதரவோ தெரிவிக்கும் இடத்தில் தான் இருந்தார்கள்.

சமீபமாக அவர்களது போக்கு மிகவும் மாறியிருக்கிறது என்றார்கள். ஆனாலும், எப்போதுமே அவர்கள் இந்திய தேசியத்தின் ஆதரவாளர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இந்தச் சமவெளியில் அவர்களது எண்ணிக்கை மிகவும் குறைவானது. ஆகவே அவர்களும் அஞ்சித்தான் இங்கே வாழவேண்டி இருக்கிறது.

குரேஷி சமவெளிக்குச்செல்லும் பாதை பெரும்பாலும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய கிராமங்கள் வழியாக அமைந்திருந்தது. அப்பகுதி வழியாகச் செல்வது மிகவும் ஆபத்தானது. விடுதியாளர்களும், நாங்கள் தொலைபேசி கேட்ட நண்பர்களும் சொன்னார்கள். ஆனால், நாங்கள் அதிகாலையிலேயே கிளம்பி, ஒன்பது மணிக்குள் அங்கே சென்றுவிட்டால், கல்வீச்சு நிகழ்வுகள் ஆரம்பிப்பதற்குள்ளேயே கடந்து சென்றுவிடலாம் என்றனர். குரேஷி சமவெளியில் தங்கிய பிறகு, மறுநாள் திரும்ப வரும்போது பிரச்சனைகள் ஏதும் இருக்காது என்று சொன்னார்கள். அதை நம்பி நாங்கள் கிளம்பினோம்.

காஷ்மீர் முழு அடைப்பு என்பது உண்மையில் ஒரு வகையான பாசாங்கு என்பது இங்கு வந்தபோது தெரிந்தது. பத்து சதவீத கடைகள் கூட அடைக்கப்படவில்லை. வழக்கம்போல மக்கள் வந்துபோய்க்கொண்டு இருந்தனர். . ஒவ்வொரு ஊரிலும், ஒரு சிறிய  குழுதான் இத்தகைய வன்முறையிலோ ஆர்ப்பாட்டங்களிலோ ஈடுபடுகிறது என்பது தெரிந்தது.

gurez6

நாங்கள் செல்லும்போது, பல இடங்களில் காவல் துறையினரும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஊர் மையங்களில் ராணுவ வாகனங்கள் காவல் இருந்தன. கூடுமானவரை மையச்சாலைகளைத் தவிர்த்து பஷீர் ஓட்டிச்சென்றார். சிறிய கிராமங்களின் உள்தெருக்கள் வழியாக எங்கள் பயணம் அமைந்திருந்தது.

ஆப்பிள் மரங்கள் செறிந்த தோட்டங்கள், கேரளத்தை நினைவுறுத்தும் பல தட்டுகளிலான நெல் வயல்கள், நீர் பெருகி ஓடும் ஓடைகள். சற்றே புழுதி படிந்த சாலையோரக் கடைகள். நீண்ட ஷெர்வானி போன்ற உடையணிந்த முதியவர்கள், குர்தா போன்ற உடையணிந்த இளைஞர்கள். தலையை துப்பட்டாவால் மூடிய நீண்ட மூக்கும், நீள்வட்ட முகமும் கொண்ட பெண்கள்.

gurez9

இந்தச் சமவெளியைப் பார்த்தபோது தோன்றிய முதல் எண்ணம், பஞ்சாப்பையும், கேரளத்தையும், குஜராத்தின் சில பகுதிகளையும் தவிர்த்தால், இந்தியாவிலேயே மிக வளமான மாநிலம் இதுதான். வளம் என்பது நிலவளம் மட்டுமல்ல செல்வ வளமும் கூட. இப்பகுதியில் எங்குமே குடிசை என்பதே கிடையாது. தொண்ணூறு சதவீத வீடுகளும், தமிழகக் கணக்கின்படி, பங்களாக்கள் என்றுதான் சொல்லவேண்டும். சரிவான தகரக்கூறைபோட்ட இரண்டடுக்கு பங்களாக்கள் சாலையோரங்களை நிறைத்திருந்தன.

gurez10

பொருளியலைத்தெரிந்த ஒருவருக்கு முதலில் வரும் எண்ணம், இந்தச்செழிப்பு ஒருபோதும் வேளாண்மையால் வரமுடியாது என்பதுதான். வேளாண்மை ஒருவரை நிலக்கிழாராக வைத்திருக்கவேண்டும் என்றால் குறைந்தது ஐம்பது பேரை நிலக்கூலிகளாக வைத்திருக்கவேண்டும். விவசாயக்கூலிகள் மிக அடிமட்ட வாழ்க்கை வாழ்வதை தஞ்சையிலும், வேளாண்மையை நம்பி இருக்கக்கூடிய வேறு பகுதிகளிலும் காணலாம்.

ஏனென்றால், விவசாயம், லாபகரமாக நடக்கவேண்டும் என்றால், ஒருபோதும் அதில் செலுத்தப்படும் உடலுழைப்புக்கு அதிக கூலி கொடுக்க முடியாது. விவசாயக் கூலிகள் ஒருபோதும் இத்தகைய பெரிய வீடுகளில் வசிக்க முடியாது.

gurez11

இந்த வினாவுக்கான விடையை சற்று நேரம் கழித்து நாங்கள் கண்டடைந்தோம். இங்குள்ள அனைத்து விவசாயக்கூலிகளும், அனைத்து உழைப்பாளி மக்களும் பீஹாரிகள். முதல் பார்வையிலேயே நாம் அவர்களை அடையாளம் காணமுடியும். கரியநிறம், மெலிந்த தோற்றம், அழுக்கான உடைகள். சிறிய கிராமங்களில் கூட இவர்கள் கொட்டகையில் தங்கவைக்கப் பட்டிருக்கிறார்கள்.

கோடைகாலத்தில் வந்து தங்கி வேலை செய்துவிட்டு  குளிர்காலத்தில் ஊருக்கு திரும்ச்பிச் செல்கிறார்கள். இவர்களைக்கொண்டுதான் இங்கே மொத்த உழைப்பும் நடந்துகொண்டிருக்கிறது. காஷ்மீரிகள் பெரும்பாலும் நிலத்திலிருந்து லாபத்தை எடுப்பவர்களாகவும், சிறு வணிகங்களில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கிறார்கள். வேறு எந்தத் தொழிலும் இல்லாத இப்பகுதியில் இருக்கும் இந்த செல்வச்செழிப்பு எந்த ஒரு பயணியையும் வியப்புற வைக்கும்.

நவீன தொலைபேசிகள். நவீன வாகனங்கள், கடைகளில் அனைத்துவகையான நுகர் பொருட்கள். சாலை முழுவதும் நன்கு உடையணிந்த இளைஞர்கள், யுவதிகள். இங்குள்ள சுவர்கள் அனைத்திலும், கைபர் என்ற காஷ்மீரி சிமெண்ட் விளம்பரத்தை நாம் பார்க்க முடியும். மிக அதிகமாக விளம்பரம் செய்திருக்கும் நிறுவனமே இதுதான். ரிலையன்சுக்கு அடுத்த இடம்.

இங்கு ஒவ்வொரு ஊரிலும், சிமெண்ட் மற்றும் கட்டுமானப்பொருள்கள் விற்கக்கூடிய நாலைந்து கடைகளேனும் உண்டு. சற்று உயரமான இடத்தில் இருந்து நோக்கினால் மூன்றில் ஒரு பங்கு வீடுகள் கட்டப்பட்டுக்கொண்டிருப்பதைக் காணலாம். பெரும்பாலான கட்டடங்கள் இப்போது புதியதாக அறிமுகமாயிருக்கும் வண்ணம் பூசப்பட்ட அலுமினியத்தகடுகளால் கூறை போடப்பட்டவையாக உள்ளன. மிகப்பெரிய மாளிகைகள் கூட கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மரத் தொழில்நுட்பம் இங்கே சிறப்பாக உள்ளது. அந்த தச்சர்கள் அனைவருமே, பஞ்சாப், ஹரியானாவில் இருந்து வந்து பணியாற்றுபவர்கள்.

நாங்கள் செல்லும் வழி முழுக்க, எந்த வகையான நெருக்கடியையோ பதற்றத்தையோ காண முடியவில்லை. சிறிய உணவு விடுதி ஒன்றில் இறங்கி சாப்பிட்டோம். நாங்கள் சற்று தாமதமாக கிளம்பியதால் ஒன்பதரை மணிக்குள் அங்கே சென்று விடவேண்டும் என்ற எங்கள் இலக்கு பிந்திக்கொண்டே சென்றது. பத்து மணியளவில் பல்வேறிடங்களில் கல்வீச்சுகள் நிகழும் செய்தி வரத்தொடங்கியது. எங்கள் ஓட்டுனர், மையச்சாலையைத் தவிர்த்து கிராமங்களின் சிறிய உள் மண் சாலைகளின் வழியே மட்டுமே கூட்டிச்சென்றார்.

gurez13

எங்கும் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள், வெறுமனே அமர்ந்திருக்கும் காட்சியை இப்பகுதியில் ஏராளமாக பார்க்கலாம். இது இன்றைய தமிழகமோ, கேரளமோ நினைவில் வருபவர்களுக்கு மிகவும் வியப்பளிக்கக்கூடிய ஒரு விஷயம். இங்குள்ள புல்வெளிகளில் பலர் படுத்திருந்தார்கள், சாலையோர கடைகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது கோடைகாலமானதால் இளைப்பாறும், உல்லாச மனநிலையே எங்கும் இருந்தது. காலையிலேயே குறைவாக நீரோடும் நதிகளில் எல்லாம், சிறுவர்கள் குளித்துக்கொண்டிருப்பதை பார்க்கமுடிந்தது.

ஆனால் இச்சித்திரத்தை பொதுவாக ஒப்பிட்டுக்கொண்டேன். கடந்த இருபத்தைந்து வருடங்களாக ஜம்மு காஷ்மீர் பிரச்சனை இந்தியாவெங்கிலும் பேசப்பட்டு வருகிறது. பெரும்பாலும் புகழ்பெற்ற, ஆனால் எழுத்துக்கு கூலி பெறக்கூடிய, இந்திய எதிர்ப்பு மனநிலைகொண்ட எழுத்தாளர்களால் மட்டும்தான் இந்த விஷயம் ஊடகங்களில் மீண்டும் மீண்டும் பேசப்பட்டிருக்கிறது. இவர்களில் காஷ்மீருக்கு நேரில் வந்து சற்றேனும் சுற்றிப்பார்த்தவர்கள் அனேகமாக யாரும் இல்லை.

இவர்கள் தொடர்ந்து மறைத்து வரக்கூடிய மூன்று அடிப்படை உண்மைகளை கணக்கில் கொண்டபிறகுதான் நாம் இப்பிரச்சனை குறித்து பேசமுடியும். ஒன்று, காஷ்மீர் பிரச்சனை என்பது மொத்த மாநிலத்துக்குமான பிரச்சனை இல்லை. காஷ்மீர் என்பது காஷ்மீர், ஜம்மு, லடாக் என்ற மூன்று பெரும் பகுதிகள் அடங்கியது. ஜம்மு இந்துக்கள் பெரும்பான்மையாகவும் இஸ்லாமியர் சிறுபான்மையாகவும் வாழக்கூடிய பகுதி. பௌத்தர் பெரும்பான்மையாகவும் இஸ்லாமியர் சிறுபான்மையாகவும் வாழக்கூடிய பகுதி லடாக். அங்குள்ள முஸ்லீம்களில் பெரும்பாலானவர்கள் ஷியாபிரிவைச் சார்ந்தவர்கள். காஷ்மீர் இவற்றின் நடுவே இருக்கக்கூடிய சமவெளி. இங்கு மட்டும்தான் பிரிவினைவாதமும் தீவிரவாதமும் பேசப்படுகிறது. லடாக்கிலும், ஜம்முவிலும் உள்ள பிரச்சனை எல்லைதாண்டிய ஊடுருவலும், அதற்கு ராணுவம் கொடுக்கும் எதிர்வினையும் மட்டும்தான்.

இரண்டாவதாக காஷ்மீரிலுள்ள அனைத்து குடிமக்களும் தீவிரவாதத்தையோ, பிரிவினையையோ ஆதரிக்கிறார்கள் என்பது அப்பட்டமான பொய். இங்குள்ள மக்களில் ஷியா பிரிவினர் எப்போதும் இந்திய தேசியத்திற்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். இங்குள்ள காவல்துறை, ராணுவத்துறையில் பெரும்பகுதி அவர்கள்தான் சேவை செய்கிறார்கள். காஷ்மீர் பிரச்சனை என்பது காஷ்மீர் சமவெளியில் உள்ள சுன்னி இஸ்லாமியருடைய பிரச்சனை மட்டுமே.

மூன்றாவதாக இங்குள்ள காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளே கூட பிரிவினையையோ பாகிஸ்தானில் இணைவதையோ ஒட்டுமொத்தமாக கோருகிறார்கள் என்பதும்  பெரிய பொய்.

பாகிஸ்தானுடன் காஷ்மீர் சேரவேண்டும் என்று சொல்லக்கூடிய தரப்பு மிக வலுவிழந்து தனி நிலமாக காஷ்மீர் நீடிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் பிரிவினைவாத அமைப்புகள் மேலோங்கியுள்ளன. இந்தியாவுடன் இணைந்திருக்கவேண்டும், ஆனால் காஷ்மீருடைய அனைத்து தனித்தன்மைகளும் மதிக்கப்படவேண்டும் என்று கோரக்கூடிய இன்னொரு தரப்பும் வலுவாக உள்ளது.

இங்கு வந்ததனால்  தெரியும் உண்மை, முக்கிய காஷ்மீர் பிரச்சனை என்பது ஸ்ரீநகரிலும், பாகிஸ்தான் எல்லை கிராமங்களிலும் மட்டுமே நிகழக்கூடிய ஒன்று. இதைத்தவிர பெரும்பாலான இடங்களில் அதற்கு பெருவாரியான மக்கள் ஆதரவோ, உணர்ச்சிகரமான ஈடுபாடோ இல்லை.

கண்டிப்பாக இந்திய ராணுவம் மீதும், இந்தியமைய அரசுமீதும், இந்துக்கள் மீதும் ஐயமும் அவநம்பிக்கையும் அனைவரிடமும் உள்ளது. இஸ்லாமிய மதகுருக்களுடைய ஆதிக்கமும் செல்வாக்கும் அனைவரையும் அச்சுறுத்தி கட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.  இந்த யதார்த்தத்தைத்தான் குரேஷி சமவெளிக்குச்செல்லும் பாதையில் பார்த்தோம்.

எங்கள் ஓட்டுனர் வண்டியை மலையில் ஏற்றிச்சென்றார். கிட்டத்தட்ட ஊட்டி அளவுக்கு உயரமான மலை. அந்த மலையின் மறுபக்கம் பாகிஸ்தான். சேனாப் நதி அவ்வழியாக ஓடி பாகிஸ்தானுக்குச் செல்கிறது. மிகப்பெரிய நீர்ப்பெருக்குள்ள அழகிய நதி. காலை வேளையில் அதன் நீர் ஒளிர்ந்தபடி இருப்பதைப் பார்த்தபடி செல்வது மிக அற்புதமான அனுபவம். சேனாப் நதியின் நீர் குறுகி உள்ளே வந்து உருவாக்கிய மூன்று மாபெரும்  ஏரிகள்  ஒளிர்ந்துகொண்டிருந்தன.

முந்தைய கட்டுரைபாவ மௌனம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 67