வாசகி

இருபது வருடங்களுக்கு முன்பு நான் மத்தியபிரதேசத்தில் ஜான்சி ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். ரயில்நிலையங்கள் அப்போதெல்லாம் பாதுகாப்புக் கெடுபிடிகள் இல்லாத திறந்தவெளிகளாக இருந்தன. யாரும் யாரையும் எதுவும் கேட்பதில்லை. வட இந்திய ரயில்நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டை நடுத்தர வர்க்கத்தினர் கூட எடுப்பது இல்லை. ஆகவே ரயில்நிலைய வளாகம் என்பது  வேறு போக்கிடமில்லாத மனிதர்கள் வந்துகூடும் இடமாக இருந்தது. அவர்கள் நனையாமல் தூங்குவதற்கு ஏராளமான கொட்டகைகள் பாலத்தடிகள் உண்டு. தண்ணீர் வசதி உண்டு.

ஆகவே பல ரயில் நிலையங்களில், குறிப்பாக பெரிய ஸ்டோர்யார்டு உள்ள இடங்களில், ரயில் நிலையத்துக்குள்ளேயே புறக்கணிக்கப்பட்ட மக்களின் சமூகங்களையே காணமுடியும். லம்பாடிகளின் கூடாரங்கள் ரயில் பாதையை ஒட்டியே இருக்கும். எல்லா நிலையங்களிலும் ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட பைத்தியங்கள் அலைவார்கள். பிச்சைக்காரர்கள், சாமியார்கள், வேசிகள். நான் ஒரு அலைந்துதிரியும்பயணியாக ரயில் நிலையங்களில்தான் பெரும்பாலும் இரவுகளைக் கழித்திருக்கிறேன்.

ஜான்சி மிகப்பெரிய ரயில் நிலையம். அங்குதான் இந்தியாவை குறுக்கு நெடுக்காக இணைக்கும் ரயில்பாதைகள் இணைகின்றன. சிலுவையின் மையம்போல. பகலில் ரயில் நிலையத்தில் இருந்து அப்பகுதிக்குள் உள்ளே சென்றேன். கைவிடப்பட்ட  பலவகையான இரும்புப்பொருட்கள் துருச்சிவப்புடன் வெயிலில் காய்ந்து கிடந்தன. உலர்ந்த மலம், மட்கிய துணிகள். குறுக்கு நெடுக்காக பிணைந்து செல்லும் தண்டவாளங்களின் மினுமினுப்பு. சிறுநீர் வெயிலில் உலரும் வெக்கை. நான்  எங்காவது படுத்து கொஞ்சநேரம் தூங்க விரும்பினேன். எனக்கு சற்று காய்ச்சல் இருந்தது. பணத்தை இடுப்பில் பாண்ட் தையலுக்குள் செலுத்தியிருந்தேன். வெயில் காய்ந்து கண்கள் உளைச்சல் கொடுத்தன.

ஒரு உடைந்த கொட்டகை அருகே சென்றேன். அங்கே எப்போதோ தானியங்கள் இறக்கியிருக்கக் கூடும். தகரக்கூரை உடைந்து உள்ளே வெளிச்சம் விழுந்தது. தரையில் மண் மண்டி அதில் கோதுமை நாற்றுக்கள் முளைத்து கருகியிருந்தது. அதன் பக்கவாட்டில் ஒரு கழிப்பிடம். அதுவும் எப்போதோ கைவிடப்பட்டதுதான். நான் அதற்குள் சிறுநீர் கழிப்பதற்காக நுழைந்தேன். குமட்டியபடி வெளியே வந்துவிட்டேன். அதை அங்கு வாழ்பவர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். குவிந்து சிதறிய மலம் அழுகி புழு நெளிய  மஞ்சள்நிறமான சிறுநீருடன் வெயிலில் கொப்பளித்துக் கிடந்தது.

வெளிவந்து சிறுநீர் கழித்துவிட்டு கொட்டகைக்குள் நுழைந்தேன். அதன் பின்பக்கம் இடிந்து திறந்து கிடந்தது. பக்கவாட்டிலும் இடிந்து கிடந்தது. கூரையுள்ள திறந்த வெளிதான். நான் உள்ளே போய் இடம் தேடியபோதுதான் அந்தச் சிறுமியைப் பார்த்தேன். பத்து வயது இருக்கும். மெலிந்த கரிய உடல். கிழிந்துபோன சிவப்புநிற சல்வார் கமீஸ். அவள் தரையில் ஒரு பிளாஸ்டிக் தாளை விரித்து அதில் குப்புறப் படுத்து எதையோ படித்துக் கொண்டிருந்தாள். அவளருகே மண்ணில் ஒரு ஒருவயது ஆண்குழந்தை மிக அழுக்காகக்ச் சுருங்கிப்போன  சட்டை மட்டும் அணிந்து இடுப்புக்குக் கீழே ஆடை இல்லாமல் அமர்ந்து மண்ணை அள்ளி ஒரு சிறு அட்டைப்பெட்டியில் போட்டு விளையாடிக் கொண்டிருந்தது.

அந்தப்பெண் வாசித்துக் கொண்டிருந்தாள் என்பது என்னை வியப்பிலாழ்த்தியது. துண்டுத்தாள் அல்ல. ஒரு பழைய இந்திநாவல். இந்தியில் மலிவான மாத நாவல்கள் அதிகம் என்பதை கவனித்திருந்தேன். நூறு பக்கத்துக்குமேல் படித்திருந்தாள்.குழந்தை என்னைப்பார்த்து சிரித்தது. அவள் நிமிர்ந்து கண்ணில் விழுந்த மயிர்க்கற்றையை ஒதுக்கியபடி ”கியா?” என்றாள். நான் இல்லை என்று தலையசைத்து பின்வாங்கி வந்து சற்று தள்ளி தரையில் அமர்ந்து என் துணிப்பையில் இருந்து துண்டை எடுத்து தரையில் விரித்து அதில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டேன்.

படுப்பதற்குள் அந்தப்பெண் என்னை நோக்கி வந்தாள். சற்று தள்ளி நின்றபடி என்னை நோக்கிச் சிரித்தாள். கன்னங்களில் தேமல்.சிறிய உதடுகள்.வளர்ச்சி குன்றி ஓர் ஏழுவயதுக்குழந்தைபோலவே இருந்தாள்.”ஹிந்தி மாலும்?” என்றாள். நான் ”நை மாலும்”என்றேன்.”மத்ராஸி?” என்றாள். நான் ”ஜாவ்”என்றேன். வட இந்தியாவில் அந்த சொல்லை ஒவ்வொருநாளும் பலமுறை பயன்படுத்த நேரும். அவள் என்னைப்பார்த்து சிரித்தபின் தன் ஆள்காட்டி விரலை வாயில் வைத்து சப்பிக்காட்டினாள்.

எனக்கு அவள் என்னை வேறு யாரோ என்று புரிந்துகொண்டிருப்பதாகவே தோன்றியது. அவள் மீண்டும் அந்த சைகையை செய்தாள். நான் ”கியா?”என்றேன் ”பாஞ்ச் ருப்யா” என்றாள். என் ரத்தமெல்லாம் தலைக்கு ஏறியது. தொடை தனியாக நடுங்கியது. ”ஜாவ் ஜாவ்”என்றேன். குரல் வெளிவரவில்லை. ”தோ ருப்யா பாயி” ”ஜாவ்!” என்று கூவியபோது என் குரல் விசித்திரமாக உடைந்திருந்தது. நுனிநாக்கை நீட்டி சீண்டுவது போல சிரித்தபடி ”ஏக் ருப்யா?”என்றாள். ”ஜாவ்”என்றபடி தரையில் கல் ஏதும் கிடக்கிறதா என்று பார்த்தேன். அவள் விலகிச்சென்று நின்று சிரித்தாள்.

நான் எழுந்து போய்விடலாமா என்று நினைத்தேன். ஆனால் அதற்கு என்னிடம் தெம்பில்லை. படுக்காமல் அபப்டியே அமர்ந்திருந்தேன். அவள் சற்று தள்ளி நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் திரும்பிப் பார்த்தபோது என்னைப்பார்த்துச் சிரித்தாள். மீண்டும் பார்த்தபோது போய் படுத்து படிக்க ஆரம்பித்திருந்தாள்.  குழந்தை என்னைப்பார்த்து சிரித்து மண்படிந்த கையை நீட்டி சுட்டிக்காட்டியது. அதன் வாயில் இருந்து எச்சில் சட்டைக்கு வழிந்தது.

சற்று நேரம் கழித்து வெளியே ஒரு நிழலாட்டம் கண்டேன். அவள் எழுந்து வெளியே சென்றாள். செல்லும்போது என்னை பார்த்து சிரித்துக் கொண்டு நாக்கை நீட்டிக்காட்டியபடி சென்றாள். மெல்ல சரிந்து வெளியே பார்த்தேன். காக்கித்துணியாலான குஜராத்தி தொப்பி வைத்து பைஜாமா சட்டை போட்ட ஒரு தடித்த நடுவயதுக்காரன் அவளிடம் பேசிக் கொண்டிருந்தான். ஓசை கேட்கவில்லை. அவன் என்னைக் கவனிக்கவில்லை. நான் இருப்பதை அவள் சொல்லவும் இல்லை.

அவர்கள் செல்வதை உணர்ந்த பின் மெல்ல எழுந்து சென்று எட்டிப்பார்த்தேன். அவர்கள் இருவரும் அந்த கழிப்பறைக்குள்தான் சென்றார்கள். அதன்பின் என்னால் அப்பக்கமே பார்க்க முடியவில்லை. சற்று நிதானித்தபின் அந்தக்குழந்தை அருகே சென்றேன். அது என்னை பார்த்து சிரித்து கையிலிருந்த அட்டைப்பெட்டியை நீட்டியது. மண் ஒழுகி காற்றில் பறந்து அதன்மேல் விழுந்தது. அந்த நாவலை எடுத்துப் பார்த்தேன். அட்டையில் பாப் கட்டிங் செய்த கூந்தல் கொண்ட ஒரு நவநாகரீகபெண் கையில் டென்னிஸ் ராக்கெட்டுடன் குட்டையான கால்சட்டையும் டி ஷர்ட்டும் அணிந்து நின்றாள். அவளை சுட்டிக்காட்டி ஏதோ பேசியபடி  ஒரு நாகரீக வாலிபன். அவர்கள் காலடியில் ஒரு வயோதிகரின் தலை. மலிவான அச்சுகொண்ட மூவண்ண அட்டை.

அதை திரும்பி வைத்தேன். குழந்தையை அபப்டியே விட்டுவிட்டு போகவும் மனமில்லை. ஆனால் அதற்கு தனியாக இருப்பதில் ஒன்றும் பிரச்சினை இல்லை என்று தெரிந்தது. மண்ணை அள்ளி எனக்கு நீட்டியது. நான் கொஞ்சநேரம் நின்று அதைப்பார்த்துக் கொண்டிருந்தேன். மீண்டும் அவளை பார்க்கத் தோன்றவில்லை. மறுபக்கம் வழியாக அப்பால் சென்று துருப்பிடித்த தண்டவாளங்களை தாண்டி வெளியேறிச்சென்றேன்.

[மறுபிரசுரம்/ முதல்பிரசுரம் 2000 வாழ்விலே ஒருமுறை தொகுப்பு/ இணையப்பிர்சுரம் 2008 ஆகஸ்ட்]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 32