காஷ்மீரில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வாக கருதப்படுகிறது. அது முடிந்தவுடன் மக்கள் திரண்டு பல்வேறு வகையான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அது கடையடைப்பு முதல் கல்வீச்சு வரை விரியக்கூடும்.
காவலர்களைப் பொறுத்தவரை வெள்ளிக்கிழமை மதியம் என்பது மிக முக்கியமானது. எந்த பிரச்சனையும் இல்லாமல் அல்லது வழக்கமான சிறு பிரச்சனைகளுடன் அதை கடந்து செல்வது மிகவும் முக்கியமானது. ஆகவே அவர்கள் பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லாத குல்மார்க் பகுதிக்குச் செல்லும்படி எங்களை அறிவுறுத்தினர். நாங்கள் அதை ஏற்றுக்கொண்டு குல்மார்க்குக்கு பயணமானோம்.
சென்ற சில நாட்களாக காஷ்மீரின் பிரச்சனையின் மையத்தில் இருந்துகொண்டு, வெவ்வேறு குரல்கள் வழியே அதன் இருபக்கத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அது ஒருவகையில் தெளிவையும், கூடவே சிக்கலையும் அளிக்கிறது. தெளிவு, நாம் அறிந்த எளிய சூத்திரங்களில் அடங்குவதில்லை இவை என்பது. சிக்கல், இதன் முடிவு வரலாற்றில் எப்படி நிகழப்போகிறது என்று யோசிக்கும்போது எழுவது.
நாங்கள் கடந்த சில நாட்களாக இதுபற்றி நேரடியாக உரையாட நேர்ந்த சிலர் இவை பற்றிய தங்கள் தரப்பை எங்களுக்கு விளக்கினார்கள். அவர்களில் இருவரை குறிப்பிட்டுச் சொல்லலாம். ஒருவர் தங்கும் விடுதி உரிமையாளர், இன்னொருவர் உணவக ஊழியர்.
விடுதி உரிமையாளர் இந்த பிரச்சனை அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட பொய்யான ஒரு பிரச்சனை என்பதுடன் முடித்துக்கொள்ள விரும்பினார். உண்மையில் காஷ்மீரில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதே அவரது தரப்பின் சாரமாக இருந்தது. பிரச்சனையை உருவாக்குபவர்கள் அரசியல்வாதிகள் மட்டும்தான். அவர்கள் விலகிச்சென்று பின்னர் ராணுவமும் விலக்கிக்கொள்ளப்பட்டால் காஷ்மீர் இயல்பாக இந்தியாவுடைய பகுதியாக இருக்கும் என்பதே அவருடைய கருத்து.
உணவக ஊழியர் தொடர்ந்து வேறொரு கோணத்தில் பேசிக்கொண்டே இருந்தார். அவர் பேசியதன் சுருக்கம் என்னவென்றால், ‘இந்திய தேசத்தில் கன்யாகுமரி ஒரு பகுதி என்றால் காஷ்மீர் இன்னொரு பகுதி, அங்கிருந்து இங்கு வர எந்த பிரச்சனையும் இல்லை. இப்போது இங்கிருப்பது, இந்திய ராணுவத்தால் உருவாக்கப்பட்ட பிரச்சனை. அவர்கள் காஷ்மீர் மக்களை மிரட்டுகிறார்கள். ஒடுக்குகிறார்கள். அவர்கள் விலக்கிக்கொள்ளப்பட்டால் எந்த பிரச்சனையும் இருக்கப்போவது இல்லை. நீங்கள் குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டு காஷ்மீர் முழுக்க பயணம் செய்யலாம். யாரும் உங்களை எதுவும் செய்யமாட்டார்கள்.
நீங்கள் எங்கள் வாடிக்கையாளர்கள், விருந்தினர். நீங்கள் இங்கே வருவதையே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், இங்கே பிரச்சனை இருப்பதாக இந்திய அரசும் ராணுவமும் தொடர்ந்து பொய்ப்பிரச்சாரங்கள் செய்து இங்கே யாரையும் வர விடாமல் செய்வதனால் எங்களுக்கு பெரிய இழப்பு ஏற்படுகிறது. தீவிரவாதிகள் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் பயணிகளையோ, தவறு செய்யாதவர்களையோ எதுவும் செய்வதில்லை. தவறுகள் செய்பவர்களை மட்டும்தான் தண்டிக்கிறார்கள். அவர்கள் மிகவும் சிறந்தவர்கள்.’ இதுவே சுற்றிச்சுற்றி வந்த அவரது பேச்சின் மையமாக இருந்தது.
திரும்ப வரும்போது ஷியா பிரிவைச்சார்ந்த இன்னொருவரிடம் பேசினேன். அவர் இன்னும் வரலாற்றுபூர்வமாகவும், பொருளியல் நோக்குடனும், யதார்த்த உணர்வுடனும் பேசினார். அவரது தரப்பு அதிலிருந்த அப்பட்டமான எதிர்மறை உண்மை காரணமாகவே இன்னும் அதிகமான, நம்பகத்தன்மையை அளித்தது. அவருடைய தரப்பின் சுருக்கம் என்பது, ‘கடந்த ஐம்பது ஆண்டுகளாக, இந்திய அரசாலும், காஷ்மீர் அரசியல் தலைமையாலும் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கெடுபிடி நிலைமையானது இன்று இயல்பான வாழ்க்கை முறையாக, பொருளியல் அமைப்பாக உருமாறியிருக்கிறது.
இந்திய அரசு காஷ்மீர் பிரச்சனையை கௌரவப்பிரச்சனையாக எடுத்துக் கொண்டிருப்பதனால் இங்கு எந்த சிக்கலும் இல்லை என்று உலகுக்கு காட்ட விரும்புவதனால், எல்லையற்ற அளவு பணத்தை இங்கே கொட்டிக்கொண்டிருக்கிறது. இந்தப்பணம் நேரடியாக ராணுவத்திற்கும் பல்வேறு திட்டங்கள் வழியாக காஷ்மீர அரசுக்கும் வந்துகொண்டிருக்கிறது. ராணுவம் அதைக்கொண்டு பல்வேறு கட்டுமானத் திட்டங்களையும், பல்வேறு வளர்ச்சிப்பணிகளையும் செய்துவருகிறது, அரசும் பல்வேறு திட்டப்பணிகளைச் செய்துவருகிறது.
இப்பணிகள் மிகப்பெரும்பாலும் அனைத்துமே காஷ்மீர் பகுதிக்குத்தான் செய்யப்படுகின்றன. ஜம்மு, லடாக் பகுதிகள் ஒப்புநோக்க கைவிடப்பட்டிருக்கின்றன. காஷ்மீருக்கென வரும் பணம் அரசு குத்தகைதாரர்களுக்கும், அவர்களுடைய துணை குத்தகைதாரர்களுக்கும், அவர்களுடைய ஊழியர்களுக்கும் சென்றுகொண்டிருக்கிறது. இங்குள்ள பெரும் பணக்காரர்கள் ஏறத்தாழ அனைவருமே குத்தகைதாரர்கள்தாம். அவர்களால்தான் இங்குள்ள பொருளியலே இயங்கிக்கொண்டிருக்கிறது.
குத்தகைதாரர்களுக்கு செல்லும் செல்வத்தில் நேர் பாதியாவது நேரடியாக தீவிரவாதிகளின் கைகளில் சென்று சேர்கிறது. அது அவர்களால் பங்கிட்டு எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆகவே எந்த ஊழல் தரப்பு அரசிடம் இருக்கிறதோ, அதற்கு நேர் மறுபக்கமாகிய ஊழல் தரப்பு தீவிரவாதிகளிடம் இருக்கிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து எல்லைமீறாத ஒரு பதற்ற நிலையை உண்டாக்கி நீட்டிக்க விரும்புகிறார்கள்.
உண்மையான கோபத்துடனும், வேகத்துடனும் எழுந்துவந்த ஆரம்பகால தீவிரவாத இயக்கம் இன்றைக்கு ஊழலால் பிற அரசியல் இயக்கங்கள் போலவே மாறிவிட்டிருக்கிறது. அதன் தலைவர்கள் இந்தியாவின் மிக முக்கியமான தில்லி, மும்பை, சூரத் போன்ற மையங்களில் பெரிய முதலீடுகளை செய்திருக்கிறார்கள்.’
ஆக, இங்கே இந்த பிரச்சனை ஒரு குறைந்தபட்ச அளவில் எப்போதும் இருந்துகொண்டிருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு உள்ளது. அதற்கான வாய்பாடுகளை இருதரப்பும் மாறி மாறி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டால், காஷ்மீருக்கு இதன் காரணமாக வரும் பெரும் நிதி வராமல் போனால், காஷ்மீர் மாற்றுப் பொருளியலை தேடவேண்டி வரும். காஷ்மீருடைய பொருளியல் பழங்களைச் சார்ந்தது மட்டுமே. அது இன்றைய நவீன உலகில் பெரிய பொருளியலை உருவாக்கமுடியாது. வேளாண்மை சார்ந்த எந்த பொருளியலும் பெரிய அளவில் வளர்ச்சியை உருவாக்காது என்று அந்த நண்பர் சொன்னார்.
தொழிலோ வணிகமோ இல்லாமல் இந்த மாநிலம் இப்படியே நீடிப்பதற்கு காரணமாக இருப்பது இங்குள்ள தீவிரவாதம்தான். இந்தியாவின் பிற எந்த மாநிலத்தை விடவும் பொருளியல் வளர்ச்சிகொண்டதாக இருக்கிறது காஷ்மீர் சமவெளி. லடாக்கோ, ஜம்முவோ அப்படி அல்ல.
இங்கு மட்டும்தான் இத்தனை இளைஞர்கள் வசதியாக, நல்ல உடைகளுடன், வாகனங்களுடன், பெரிய அளவில் வேலை எதுவும் இல்லாமல், ஆனால் உற்சாகமாக இருப்பதை பார்க்கமுடிகிறது. இந்தியாவின் வேறெந்த மாநிலத் தலைநகரிலும் இதைக்காணமுடியாது.
இவர்கள் ஒரே சமயம் இப்பிரச்சனைகளின் விளைவுகளாகவும், இப்பிரச்சனையை தொடர்ந்து நீடிக்கவைக்கும் கருவிகளுமாக இருக்கிறார்கள். கல்வீச்சில் ஈடுபடுவதும் சரி, அரசியல் போராட்டங்களில் முன்னிறுத்தப்படுவதும் சரி, இந்த இளைஞர்கள்தாம். ஏறத்தாழ இதே சித்திரத்தை முன்பு ஒருமுறை மிக முக்கியமான காங்கிரஸ் தலைவர் நக்சலைட் பிரச்சனை பற்றி சொன்னதே நினைவுக்கு வந்தது.
நக்சலைட் பிரச்சனையின் விளைவாக அங்கே கொட்டப்படும் பெரும் நிதி, அங்குள்ள துணை ராணுவப்படைகளையும், ராணுவப்படைகளையும், நீடிக்கச்செய்கிறது. குத்தகைதாரர்களை வாழவைக்கிறது. குத்தகைதாரர்கள் வழியாக பெரும் நிதி நக்சலைட்டுகளுக்குச் செல்கிறது. அவர்கள் அதை வைத்துக்கொண்டு ஒரு ராஜ்ஜியத்தை நடத்துகிறார்கள். இருதரப்புக்கும் லாபகரமாக அந்த நாடகம் நீடிக்கும் வரை முழுமையாக நக்சலைட் பிரச்சனை தீர்க்கப்படாது என்றார் அவர்.
அதே யதார்த்த சித்திரத்தின் இன்னொரு பக்கத்தை இங்கே பார்த்தபோது அதிர்ச்சியும், ஒருவகையான கசப்பும் உருவாகியது. ஆனால் இது இன்னும் நம்பகமான தரப்பாக இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
ஓரிடத்திற்கு வரும்போது கிடைக்கும் நேரடி யதார்த்த உண்மைகள் மிக முக்கியமானவை. இந்தியாவில் எங்குமே இஸ்லாம் சாதீய சமூகங்களாகத்தான் பிரிந்திருக்கிறது. உலகம் முழுவதும் அதில் நூற்றுக்கணக்கான இனக்குழுப் பிரிவுகள் இருக்கின்றன. நம்பிக்கை சார்ந்த பிரிவினைகள் இருக்கின்றன. அப்பிரிவுகளுக்கு இடையேயான போர்கள் இன்றும் உலகில் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழகத்தில் கூட முஸ்தபா, கீரனூர் ஜாகீர்ராஜா போன்ற படைப்பாளிகள் சாதீய இஸ்லாம் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள்.
நாங்கள் பலருடன் பேசியபோது இங்குள்ள இஸ்லாமிய சாதி அமைப்பைப்பற்றி தெளிவாக தெரியவந்தது. ஷியா சுன்னி என்ற மாபெரும் இரு பிரிவினைகளுக்கு அப்பால் சுன்னி பிரிவிலேயே அதனுடைய அரசியல் அதிகாரம் பெரும்பாலும் மதகுருக்கள் வணிகர்கள் ஆகியோர் அடங்கிய உயர் குடிகளிடையே மட்டுமே உள்ளது. இவர்கள் பெரும்பாலும் காஷ்மீர் பண்டிதர்களாக இருந்து இஸ்லாமுக்கு மாறியவர்கள். டோக்ரி மன்னர் குடியில் இருந்து மதம் மாறியவர்கள்.
இவர்களது பெயரின் அடைமொழியில் பட் என்ற பிராமண சாதிப்பெயரொட்டு சேர்த்துக்கொள்வது மிகச்சாதாரணமாக இங்கே காணக்கிடைக்கிறது. ஒரு பட், அந்தப் பெயராலேயே இந்து சமுதாயத்தில் ஒரு பிராமணன் அடையக்கூடிய அனைத்து முக்கியத்துவங்களையும் அடைந்தவராக இங்கே இருக்கிறார். கடந்த நூறு வருடங்களில் இந்து மதத்திற்குள் நடந்த மறுமலர்ச்சி சிந்தனைகள் எதுவுமே நிகழாமல் இந்தச் சூழல் இருக்கிறது. அடுத்தகட்டத்தில் இருப்பவர்கள் இங்கே பல வேலைகளுக்காக வந்து விவசாயப்பணிகளில் ஈடுபட்டவர்கள். கீழ்ப்படியில் உள்ளவர்கள், மேய்ச்சல் குடி மக்கள்.
இங்குள்ள ஷியா சுன்னி இருதரப்பிடமும் பேசும்போது கூட அயூப் சார்ந்திருக்கும் மேய்ச்சல் குடிமக்களைப்பற்றி மிக இழிவாகவும், ஏளனமாகவும், அவர்களுக்கு நாகரீகமில்லை, அவர்களை நம்பமுடியாது என்றெல்லாம் அவர்கள் பேசுவதைக் காணமுடிகிறது. அந்த உணவக ஊழியரிடம் பேசும்போது அவரது பெயரின் பின்னொட்டு என்ன என்று கேட்டபோது அவர் மேய்ச்சல் சாதியைச்சார்ந்தவர் என்று சொன்னார்.
இத்தனை சிக்கலாக இங்கே யதார்த்தம் இருக்கும்போது, மிக எளிமையான அரசியல் வாய்பாடுகள் வழியாக மட்டுமே அதைப் புரிந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கும் நம்மூர் அரசியல் எழுத்தாளர்கள் நம்மை மேலும் மேலும் இருளுக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணமே ஏற்பட்டது.
காஷ்மீரைப்பொறுத்தவரை இஸ்லாமுக்குள் இருக்கக்கூடிய அடித்தள மக்கள் இன்னும் மத அதிகாரத்தின் பிடியில் தீவிரவாதத்தால் மிரட்டப்பட்டு மிக மோசமான வாழ்க்கை முறையில்தான் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
நாங்கள் குல்மார்க் பகுதிக்கு சென்று சேர்ந்தோம். காஷ்மீரின் முக்கியமான சுற்றுலா பகுதியான இது ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான பயணிகள் வரக்கூடிய இடம், உலகத்திலேயே மிக உயரமான இடத்திலுள்ள கயிற்று ரதம் (ரோப் கார்) இங்கேதான் இருக்கிறது. நாங்கள் நடந்தே மலையேறலாம் என்று தீர்மானித்தோம்.
இரண்டு அடுக்குகளாக இருக்கும் இம்மலையின் ஓரடுக்கை, ஏறத்தாழ நான்கு மணிநேரத்தில் ஏறிச்சென்றோம். நாங்கள் கிளம்பி வந்ததில் இருந்து ஏறிய மிக உயரமான மலையேற்றம் இது என்று சொல்லலாம். செங்குத்தாகப் பார்த்தால் ஏறத்தாழ ஒரு கிலோமீட்டரும் தூரமளவில்ஆறு கிலோமீட்டரும் கொண்ட இந்தப் பயணம் இன்றைய நாளை இனிய களைப்பூட்டும் அனுபவமாக மாற்றியது.
அங்கிருந்து ஒரு கயிற்று ரதம் ஏறி, பனி படர்ந்ததொரு இமய முடியை சென்றடைந்தோம். இது கோடைகாலமானாலும், கனத்த நுரை போல, உப்புத்தூள் போல பனி மலைச்சரிவில் நிறைந்து பரவியிருந்தது. ஏராளமான பயணிகள் அதில் சறுக்கி விளையாடி கூச்சலிட்டு மகிழ்ந்துகொண்டிருந்தனர். மேலே கொண்டுசெல்லும் குதிரைகள் ஓட்டுபவர்களும், வழிகாட்டிகளும் தங்கள் சேவை தேவையா என்று கேட்டுக்கொண்டே இருந்தனர்.
எங்களுடன் வந்த காவல் ஊழியர் எங்களை வழிகாட்டி மேலே அழைத்துச்சென்றார். நாங்களும் பனியில் சறுக்கி, விளையாடி, தடுமாறி விழுந்து திளைத்தோம். ஒரு இடத்தில் சற்றே தடுமாறியதில் என் கால் மூட்டு பாறையில் லேசாக முட்டிக்கொண்டது. பொதுவாக மலைப்பாறைகளில் லேசாக முட்டிக் கொள்ளும்போதும் வலி அதிகமாயிருக்கும். எப்படியும் இன்று மாலை அது மேலும் கூடிவிடும் என்றே தோன்றியது.
மூன்று மணியளவில் கீழே இறங்கி வந்தோம். மதிய உணவு அருந்தவில்லை. கடுமையான பசி இருந்தது. ஒரு உணவு விடுதியை கண்டுபிடித்து அமர்ந்தோம். மலையேறும்போது அந்தக் கயிற்று ரதத்திற்காக கையில் காசாக கொண்டுசென்றிருந்த அனைத்தையும் கொடுக்கவேண்டியிருந்தது. ஏறத்தாழ 8700 ரூபாய் கொடுக்கவேண்டியிருந்தது. அவ்வளவு ஆகும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகவே ஏ.டி.எம். செண்டருக்குச் சென்று பணம் எடுக்கலாம் என்று சென்றோம்.
முதலில் சென்ற தேசிய வங்கி ஏடிஎம்மிலும், காஷ்மீர் மாநில வங்கி ஏடிஎம்மிலும் பணம் இல்லை. விஜயராகவனும் மற்ற சில நண்பர்களும் பணம் எடுப்பதற்காக அடுத்த ஏடிஎம்முக்கு வண்டியில் சென்றார்கள். நான் நண்பர்களுடன் உணவு விடுதியில் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு முன்னே சென்ற ஏடிஎம்களில் பணம் வைத்துவிட்டார்களா என்று பார்ப்பதற்காக மீண்டும் சென்றேன்.
பணம் வைத்திருக்கவேண்டும். நீண்ட வரிசை காத்திருந்தது, உள்ளே பணம் ஒருவர் எடுத்துக் கொண்டிருந்தார். வரிசையில் பத்தாவது ஆளாக நான் நின்றிருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக முன்னே வந்து மூன்றாவது ஆளாக நின்றுகொண்டிருந்தேன்.
உள்ளே பணம் எடுத்துக்கொண்டிருந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் வெளியே வந்தார். மிகுந்த கம்பீரமான தோற்றம் கொண்டவர். சிவந்த தாடியிடன், தலைப்பாகையும் வைத்திருந்தார். என்னை அவர் பார்த்த பார்வையில் இருந்த வெறுப்பை இதுவரை நான் எங்குமே சந்திக்க நேர்ந்ததில்லை.
அவர் என்னை கைநீட்டி ஏதோ சொன்னார். என்ன சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. அதற்குள் எனக்குப் பக்கத்தில் இருந்தவர், அவர் உங்களை பின்னால் போய் நிற்கச்சொல்கிறார் என்றார். மறுபேச்சு சொல்லாமல் நான் வரிசையின் பின்னால் போய் நின்றுகொண்டேன். அவர் மறுபடி என்னை ஏதோ சொல்லிக்கொண்டே காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
உடனே என் முன்னால் நின்றவர் நீங்கள் போய் பணம் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். நான் பின்னால் வந்துவிட்டேன் பரவாயில்லை என்றேன். இல்லை, அது நீங்கள் இந்து என்பதனால் இருக்கக்கூடும். அவர் உங்களைப் பற்றிச் சொன்னபோது அவுட்சைடர் என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தினார். இதுவெல்லாம் பெரிய விஷயமில்லை நீங்கள் சென்று எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.
நான் உள்ளே சென்று பணத்தை எடுத்தேன். அந்த வரிசையில் நின்ற அனைவருமே அந்த மதகுருவின் செயலுக்கு சற்றே வெட்கப்பட்டது போலத்தான் எனக்குத் தோன்றியது.
காஷ்மீர் வங்கியின் ஏடிஎம்மைப்போல ஒரு வேடிக்கையான எந்திரத்தை நான் பார்த்ததில்லை. அங்கிருந்த எந்த பொத்தானும் வேலை செய்யவில்லை. என்னுடைய குறிப்பெண்ணை அழுத்தி பணம் வேண்டும் என எதை அழுத்தினாலும் எந்திரம் பேசாமல் இருந்தது.
எனக்கு உதவிய அந்த நண்பர் உள்ளே வந்து பொத்தான்களை வலுவாக அழுத்தி பணத்தை எடுத்துக்கொடுத்தார். நான் வெளியே வந்தபோது காஷ்மீர் வங்கி காஷ்மீரிகளுக்கு மட்டுமே பணம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது என்று ஒருவர் ஆங்கிலத்தில் சொல்ல, வரிசையில் நின்றிருந்த பலர் சிரித்தார்கள்.
நட்பான சூழ்நிலை உருவானது. எங்கிருந்து வருகிறீர்கள் என்று ஒருவர் கேட்டார். தமிழ்நாட்டில் இருந்து என்றேன். வாழ்த்தி கைகொடுத்தார்கள், திரும்ப உணவகத்துக்கு வந்தேன்.
மனம் குழப்பமடைந்திருந்தது. என்னை அயலவர் என்று நினைத்தாரா, அயல் மதம் என்று நினைத்தாரா என்று சொல்லத்தெரியவில்லை. என்னை முதல் பார்வையிலேயே எப்படி அறிந்துகொண்டார் என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவருடைய செய்கையை அங்கிருந்த அத்தனைபேரும் அங்கீகரிக்கிறார்கள். அவரில்லாதபோது அது தவறு என்று இயல்பாக உணரவும் செய்கிறார்கள். ஒருவகையில் காஷ்மீரின் மொத்த யதார்த்தத்தையும் உணர்த்தக்கூடிய ஒரு நிகழ்வாக எனக்கு இது தோன்றியது.