கமல் சிங் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். சொந்த ஊர் உதய்பூர் அருகே என்று சொன்னார். துணை கமாண்டன்ட் பதவியில் இருப்பவர். நாங்கள் கிளம்பும்போது வெளியே வந்து அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
எங்களுடன் உள்ளூர் ஷியா முஸ்லிமான மக்புல் என்பவரை அனுப்பினார். பத்தான் பேருந்து நிலையம் அருகில் இருந்த சங்கரகௌரீச்வரம் என்ற புராதனமான ஆலயத்திற்குச் சென்றோம். இது அங்கே ஒரு நகர் சதுக்கம் போலவே பயன்படுத்தப்படுகிறது.
பிரம்மாண்டமான சிவ ஆலயம் ஒன்று இருந்திருக்கிறது. இன்று அதன் அடித்தளமும் சுவர்களும் மட்டும்தான் உள்ளன. வட இந்திய கோவில்களைப்போன்ற மிக உயரமான அடித்தளமும் அதற்குமேல் கனத்த சுவர்களும், நான்குபக்கமும் கோஷ்டங்களும் கொண்ட உயர்ந்த கோவில் இது. கருவறைக்கு மேலேயே அடுக்கடுக்காக வைத்த கூம்பு வடிவ கோபுரம் கொண்டதாக இருந்திருக்கலாம்.
ஆனால் ஒரு சிற்பமோ, வடிவமோ இல்லாத கல் கட்டுமானமாக இன்று அது இருக்கிறது. விடுமுறைக்காலமாகையால் ஏராளமான சிறுவர்கள் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். கோவிலுக்குள்ளேயே சிறுவர்கள் பட்டாசு வெடித்து விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்தோம்.பொதுவாக ஒரு உற்சாகமான மனநிலை அங்கே நிலவுவதை காண முடிந்தது. கிளம்புவோம் என்று மக்பூல் சொல்லிக்கொண்டே இருந்தார்.
சங்கரகௌரீச்வரம் பற்றி விரிவான அளவில் தகவல் இல்லை. அங்கேயும் தொல்பொருள் துறை அறிவிப்புகளோ, பிற அறிவிப்புகளோ எதுவுமே இல்லை. காஷ்மீரின் மேலோட்டமான வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து இது மன்னர் சுகந்தவர்மரின் தந்தையார் காலத்தில் கட்டப்பட்டது, கி.பி. 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டைச்சார்ந்தது என்று தெரியவருகிறது.
காஷ்மீர், சைவத்தின் தொட்டில். காஷ்மீர சைவமே உண்மையில் சைவ மதத்தின் முதல் வடிவம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான பசு பதி பாசம் என்ற கருதுகோள் பிறந்ததும் காஷ்மீரில்தான். காஷ்மீர சைவத்தின் பல்வேறு வளர்ச்சி அடைந்த வடிவங்களைத்தான் இந்தியா முழுக்க நாம் காண்கிறோம்.
இன்றும் சைவ சித்தாந்தத்தின் அடிப்படை நூலாகக் கருதப்படும் ரௌரவ ஆகமம் காஷ்மீரில் பிறந்தது. அதன் ஒரு பகுதியின் மொழிபெயர்ப்பான சிவஞான போதம் இன்று தமிழ் சைவத்தின் அடிப்படை நூலாகக் கருதப்படுகிறது.
மக்பூல் சற்று பதற்றமாகவே இருந்தார். கிளம்புவோம் கிளம்புவோம் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். உற்சாகமான சூழல் நிலவினாலும் கூட. நாங்கள் தென்னகத்தைச் சேர்ந்த பயணிகள் என்பது கவனிக்கப்படும் என்றும் அது திடீரென ஏதாவது எதிர்வினையை உருவாக்கக்கூடும் என்றும் அவர் சொன்னார். அதை வழிநடத்ததும் யாருடைய கண்களிலும் நாங்கள் பட்டுவிடக்கூடாது என்று கவலைப்பட்டார்.பத்தானுக்கு வெளியே வந்தோம்.
பரிஹஸ்பூர் என்ற பௌத்த பல்கலைக் கழகம் இருக்கும் சாலை பிரிந்து சென்றது. அதன் வழியாக பரிஹஸ்பூர் பௌத்தக் குன்றை சென்றடைந்தோம். வியப்பென்னவென்றால், மக்பூல் உட்பட இங்கிருக்கும் உள்ளூர் வாசிகளுக்கு இங்கிருக்கும் எந்த ஆலயங்களைப்பற்றியும் தொல்பொருள் இடங்களைப்பற்றியும் அறிதல்கள் இருப்பதில்லை என்பதுதான்.
நாங்கள் துருவித் துருவி விசாரிக்கும்போதுமட்டும்தான் அவர்களுக்கு அந்த இடங்கள் எதோ ஒரு மங்கலான நினைவாக நினைவில் தோன்றுகின்றன. உயரமற்ற குன்றின் மேல் அமைந்திருக்கும் பரிஹஸ்பூர் ஒரு காலத்தில் முக்கியமான பௌத்தத் தலமாக இருந்திருக்கிறது. காஷ்மீர சைவத்திற்கு முன்பு இப்பகுதியில் தேரவாத பௌத்தம் மிகுந்த செல்வாக்குடன் இருந்திருக்கிறது.
கி.பி. 6 அல்லது 5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பிரம்மாண்டமான பல்கலை வளாகம் ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கொண்ட மையமாக இருந்திருக்கலாம். பெரிய வளைவுக்குள் ஒரு உயரமான ஸ்தூபத்தின் அடித்தளம் இருக்கிறது. அதை ஒட்டி ஒரு விகாரமும் ஒரு சைத்யமும் இருந்தமைக்கான அடித்தளங்கள் இருக்கின்றன.
இந்த அடித்தளங்களே பிரமிப்பூட்டும் அளவுக்கு பிரம்மாண்டமானவை. கோபுரங்களில் ஏறிச்செல்லும் அளவுக்கு படிகளில் ஏறித்தான் இந்த அடித்தளங்களையே அடைய முடியும். மிக கனமான கற்பாளங்களைக்கொண்டு இவை அமைக்கப்பட்டிருக்கின்றன. ஸ்தூபம் முழுமையாக இருந்திருந்தால் இந்தியாவிலேயே மிகப்பெரிய பௌத்த ஸ்தூபமாக இருந்திருக்கக்கூடும்.
சைத்யம் சிற்பங்கள் ஏதுமற்று அடித்தளமாக மட்டும் இருக்கிறது. வியப்பூட்டும் விஷயமென்னவென்றால், ஏறத்தாழ இருபது ஏக்கரில் இடிந்து பரவி இருக்கும் இந்தப் பகுதி முழுமையான கற்குவியலாகத்தான் இருக்கிறது. ஒரு சிற்பம் கூட காணக்கிடைக்கவில்லை.
என்னுடைய வெண்முரசு நாவலில் மகோதயபுரம் என்ற நகரம் விண்ணில் இருந்து மண்ணில் விழுந்து சிதறி கற்குவியலாகக் கிடப்பதாக பழங்குடிகள் சொல்வதுபோல ஒரு இடம் வரும். இப்பகுதியைப் பார்க்கும்போது, உண்மையிலேயே ஒரு மாபெரும் ஸ்தூப சைத்திய வளாகம் விண்ணில் இருந்து விழுந்து முற்றிலும் கற்குவியலாக ஆனது போன்ற சித்திரம் மனதில் எழுந்தது.
இந்த இடத்தைப்பற்றி அனேகமாக இணையத்தில் எதுவுமே எழுதப்பட்டதில்லை. தொல்பொருள்துறை ஆவணங்களில் இதைப்பற்றி மேலோட்டமான சில வரிகள் மட்டுமே உள்ளன. மிக விரிவாக பௌத்த சிற்பவியலையும், வரலாற்றையும் ஆராய்ந்த பௌத்த அறிஞர்கள்கூட இந்தப் பகுதியைப் பற்றி எதுவுமே எழுதியதில்லை என்றே தோன்றியது.
இந்தியாவின் உச்சியில் இருக்கும் இப்பெரிய ஸ்தூப வளாகம் போதுமான கவனத்துக்கே வராமல் இருப்பது மிகுந்த வியப்பளித்தது.
பத்தானில் இருந்து கிளம்பி வாரிப்புரா என்ற இடத்தில் இருக்கும் சி.ஆர்.பி.எஃபின் தலைமையகத்துக்கு எங்களை மக்பூல் அழைத்துவந்தார். குறுக்கு வழியில் செல்வோம் என்று ஒரு பகுதியை சுற்றிக்காட்டினார். இப்பகுதி முழுக்க ஷியா முஸ்லிம்களின் இடங்கள்தாம். அவர்கள் எல்லாம் நல்லவர்கள்தான் என்றார். அவருடைய நம்பிக்கையின் பேரில் அவ்வழியாக வந்தோம்.
காஷ்மீரில் இருக்கும் ஷியா முஸ்லிம்கள் அனேகமாக அனைவருமே தீவிரமான இந்திய தேசிய ஆதரவாளர்கள். அவர்களுடைய இல்லங்களில், இரானிய ஷாவின் படங்களையும் கொமேனியின் படங்களையும் பார்க்கமுடிந்தது. வண்டியில் மேலே சென்றபோது மலபாரின் உள்கிராமங்களில் செல்வது போன்ற உணர்வு இருந்தது. நீர் நிறைந்த ஓடைகள். பசுமை செழித்த மரங்கள், புல்வெளிகள், வறுமையற்ற இயல்பான வாழ்க்கை கொண்ட கிராமங்கள்.
ஒரு சிறிய கடையில் குடிநீர் வாங்கிக்கொண்டோம். நாங்கள் குமரியில் இருந்து வருகிறோம் என்று சொன்னதும், வீட்டுக்கு வந்து தேநீர் குடித்துச்செல்லுங்கள் என்று எங்களை அழைத்தார் கடைக்காரர். நன்றி சொல்லி கிளம்பினோம்.
வாரிப்பூர்க்கு நான்கு மணி அளவில் வந்து சேர்ந்தோம். தலைமை கமாண்டர் ஜோகீந்தர் சிங் எங்களை வரவேற்று அமரச்செய்து தேநீர் அளித்தார். இப்பகுதியில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைச்சொன்னார். இங்கு ராணுவத்துடைய பணி, துணை ராணுவத்துடைய பணி என்பது இங்கே ஒரு குறைந்தபட்ச சட்டம் ஒழுங்கை நிலை நாட்டிச்செல்வதாக மட்டுமே உள்ளது.
அனேகமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், ஜும்மா தொழுகைக்குப் பிறகு கல்வீச்சு நிகழும் என்று சொன்னார். சிறுவர்களுக்கு பணம் கொடுத்து கல்வீசச்செய்வதாகவும் சொன்னார். கல்வீச்சு ராணுவத்தால் எந்தவகையிலும் எதிர்கொள்ளப்பட முடிவது அல்ல. திருப்பி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எது செய்தாலும் அது பிழையாகவே ஆகும். ஆயுதங்களை பயன்படுத்த முடியாது. எவரையும் துரத்திச்சென்று கைது செய்வதும் சாத்தியம் அல்ல. கல்லெறிபவர்கள் எல்லோரும் சின்னஞ்சிறியவர்களாக இருப்பார்கள்.
ஆனால் இக்கல்வீச்சினால் ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் கடும் காயங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன என்றார். கூடுமானவரை அவற்றை செய்தியாக ஆக்காமல் ஒரு சுமூக நிலை நிலவுவதை பதிவுசெய்தபடி இருக்கிறார்கள். இப்பகுதி மக்கள் பொதுவாக சுமூகமானவர்கள். நட்பானவர்கள். ஆனால் அவர்களுடைய மத அரசியல் தலைமை அவர்களை எப்போதும் ஒரு கொந்தளிப்பு நிலையிலேயே வைத்திருக்கிறது என்றார்.
ஆப்பிள், ஆப்ரிகாட் போன்ற பழங்கள் வழி இவர்களுக்கு நிறைய வருமானம் வருகிறது. ஆகவே பொதுவாக சற்று கவலையற்ற எதையும் பொருட்படுத்தாத மனநிலை இவர்களிடம் நிலவுகிறது.
மாலையில் தரங் என்ற இடத்தில் உள்ள இரண்டு ஆலயங்களைப் பார்க்கலாம் என்று ஜோகீந்தர் சொன்னார். இரண்டு காவலர்களையும் எங்களோடு அனுப்பினார். எங்கள் வாகனத்தில் தரங் என்னும் இடத்தில் இருக்கும் நீர் மின்சக்தி நிலையத்தை அடைந்தோம். அங்கே, விடுமுறைக்கால மாலை நேரத்தை கொண்டாடுவதற்காக ஆண்களும் பெண்களுமாக பெரும் கூட்டமாக கூடியிருந்தனர். அங்கே நிறைய பேர் மாருதி 800 வைத்திருப்பதை காண முடிந்தது. பெண்களும் ஆண்களும் கலந்து பேசி சிரித்து விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டோம்.
ஆனால் இம்மாதிரி நிகழ்வுகளில் தென்னகத்தில் காணப்படுவது போல மது அருந்தியவர்கள் அனேகமாக எவருமே கண்ணில் படவில்லை. இப்பகுதிகளில் மதுக்கடைகளே அனேகமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
நீர்மின் சக்தி நிலையத்தில் இருந்து ஏறி, தரங் பகுதியின் இடிந்த ஆலயங்களுக்கு வந்தோம். இந்த ஆலயம் தொல்பொருள் துறையிலிருந்து சில வருடங்களுக்கு ஒருமுறை வந்து பார்ப்பவர்கள் தவிர யாராலும் பொருட்படுத்தப்படாது புதர்கள் நடுவே கிடக்கிறது. சுற்றி இருக்கும் மலைச்சமவெளி பூக்கள் மண்டியது. சிவப்பு வெண்ணிறங்களில் பூக்கள் மலர்ந்து காற்றில் ஆடின. நடுவில் அந்தியின் இருண்டு வரும் வெளிச்சத்தில் இடிந்து கற்குவியலாக இருக்கும் ஆலயத்தைப்பார்ப்பது காவியப்புனைவின் ஒரு பகுதி போலத் தோன்றியது.
மேலும் மலையேறிச்சென்று பாகிஸ்தான் எல்லையைக் காணும் இடத்துக்குச் சென்றோம். அங்கும் ஒரு சிறு ஆலயம் இடிந்து கிடந்தது. அங்கிருந்து பார்க்கும்போது இந்தியாவின் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் தூண்களை பார்க்க முடிந்தது.
வெளிச்சம் இறங்கிக்கொண்டே வந்த அந்தி நேரத்தில் இந்தியாவின் ஒரு எல்லையில் இருந்து வந்து மறு எல்லையில் அமர்ந்திருக்கும் விசித்திரமான உணர்வை அடைந்தேன். வியர்வை கொட்டும் ஒரு மலையேற்றத்துக்குப் பிறகு இருளில் இறங்கி திரும்பி வந்தோம்.
இரவில் முகாமிலேயே தங்கிக்கொள்ளலாம் என்று ஜோகீந்தர் சொன்னார். நாங்கள் கிளம்பி வந்ததில் இருந்து தங்கியதில் மிக வசதியான சிறப்பான இரண்டு அறைகளில் தங்கினோம். இரவில் எங்களுக்கு ஜோகீந்தர் சிங்கும், அவருடைய துணை கமாண்டன்ட் மிஸ்ராவும் ஒரு சிறு விருந்தளித்தார்கள். சிறப்பான உணவு. சுரைக்காயைக் கொண்டு செய்யப்பட்ட விசித்திரமான ஆனால் சுவையான ஹல்வா அனைவரையும் கவர்ந்தது.
இன்று காஷ்மீரில் குளிரற்ற ஒரு மாலையை கழித்துவிட்டு இந்த முகாமுக்குள் தங்கியிருக்கும்போது வெளியே இருக்கும் காஷ்மீரில் இருந்து முற்றிலும் வேறான ஒரு காஷ்மீரில் இருக்கும் ஒரு உணர்வை அடைந்தோம்.