இமயச்சாரல் – 5

ஹிர்ப்போராவில் இருந்து ஸ்ரீநகருக்கு வரும்போதே அச்சூழலே, நம்மை அறியாமல் நமக்குள்ளே ஒரு சிறு பீதியை உருவாக்குகிறது. சாலையில் கற்களை வைத்து வண்டிகள் திரும்பித் திரும்பி மெதுவாக செல்லும்படி அமைத்திருந்தார்கள். அதை காவல் துறை வைத்ததா, அல்லது கிளர்ச்சியாளர்கள் வைத்தார்களா என்ற ஐயம் நமக்கு ஏற்படும். சுவர்களில் வண்ணங்கள் கொண்டு இந்திய எதிர்ப்பு கோஷங்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றை ராஜமாணிக்கம் சுட்டிக்காட்டினார். ஆனால் அவற்றை விட தீவிரமான இந்திய எதிர்ப்பு, தீவிரவாத ஆதரவு கோஷங்களை அச்சிட்டு சுவரொட்டிகளாக நாகர்கோவிலிலும், தக்கலையிலும் சுவர்களில் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறேன். அதை நான் அவருக்கு சுட்டிக்காட்டி, இந்திய எதிர்ப்பு, தீவிரவாத பிரச்சாரம், காஷ்மீரில் குறைவாகவே இருக்கிறது என்றேன்.

ஸ்ரீநகருக்குச் செல்லாமலேயே நாங்கள் பத்தான் என்ற ஊருக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தோம். ஸ்ரீநகருக்குள் சற்று வாகன நெரிசல் அதிகம் என்று வழியில் டீசல் போட்டுக்கொண்டபோது அறிந்தோம். பத்தான் செல்லும் வழியில் கிருஷ்ணன் அவருடைய நண்பரிடம் பத்தான் செல்கிறோம் என்று சொன்னார். உடனே அவர் அங்கிருந்து இங்குள்ள காவல்துறை நண்பர் ஒருவரிடம், பத்தான் எப்படி இருக்கிறது என்று கேட்டார். அவர் உடனே இன்னொருவரிடம் கேட்டார், ஒரு பத்து நிமிடம் தொடர்ந்து பேச்சுக்கள், கசமுசா என்று ஒலித்தபின் ஓட்டுனர் பத்தானுக்கு வரவே மாட்டேன் என்று சொல்லிவிட்டார். திரும்ப குல்மார்க்குக்கு மட்டும்தான் வருவேன் என்றார். என்ன காரணம் என்று கேட்டோம். பத்தான் பகுதி மிகவும் கொந்தளிப்பானது. சுன்னி முஸ்லிம்கள் முழுமையாகவே வாழும் பகுதி. பாகிஸ்தான் எல்லையை ஒட்டியது. அதற்கப்பால் பாராமுல்லா, பாகிஸ்தானின் எல்லை.

அப்பகுதிகளில் செல்லக்கூடிய ஜம்முவில் பதிவு செய்யப்பட்ட வண்டிகளை, குறிவைத்து தாக்குவார்கள், கல்வீசி உடைப்பார்கள், உங்களுக்குத் தெரியாது என்று கவலையுடன் சொல்லிக்கொண்டிருந்தார். எங்களுக்கு சினம். உன்னைத் தவிர்த்துவிட்டு வேறு ஓட்டுனரை அழைத்துக்கொண்டு செல்கிறோம் என்று சொன்னோம். அது அவரை புண்படுத்தியது. அங்கே செல்லவேண்டாம் என்று கிட்டத்தட்ட கண்ணீருடன் மன்றாடிக்கொண்டே இருந்தார். திரும்பி வந்து ஒரு டீக்கடையில் நிறுத்தி விவாதித்து, சரி பத்தானை தவிர்த்து குல்மார்குக்கே திரும்பிச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அப்போது பத்தானின் சி ஆர் பி எஃப் அமைப்பின் மத்திய காவல் படை கமாண்டர் பொறுப்பில் இருக்கும் கமல் சிங் என்பவர் அழைத்தார். கிருஷ்ணனுடைய நண்பர் கூப்பிட்டு சொல்லியிருந்தார் என்றார். வாருங்கள் நான் பாதுகாப்பு அளிக்கிறேன் என்று சொன்னார். அதைக்கேட்டதும் எங்கள் ஓட்டுனர் சற்று நம்பிக்கை கொண்டார்.

பத்தானுக்கு செல்லும் வழியிலேயே, சூழல் மாறிக்கொண்டிருப்பதை பார்க்கமுடிந்தது. ரம்ஜான் காரணமாக வண்டிகள் தொடர்ந்து எதிரும் புதிருமாக சென்றுகொண்டிருந்தன. அவற்றில் இளைஞர்கள் உற்சாகமாக கூவிக்கொண்டும், கைகளைத் தூக்கி ஆர்ப்பாட்டம் செய்தபடியும் சென்றுகொண்டிருந்தார்கள். ஆனால் மத வெறிச் சூழல் எங்கும் காணப்படவில்லை. நம்மூர் இளைஞர்களைப்போலவே கொண்டாட்டத்திலும், லேசாக எல்லைகளை மீறிப்பார்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர்களாக தெரிந்தார்கள். இன்றைய நவீன குத்துப்பாட்டுகளைத்தான் ஒலிக்கவிட்டிருந்தார்கள். பொதுவாகவே காஷ்மீரில் இஸ்லாமிய மதம் உருவாக்கக்கூடிய மதச்சார்பான கெடுபிடிகள் அவர்கள் மத்தியில் மிகக்குறைவாகவே உள்ளன என்பதை கவனித்தேன். ஆனால் மதம் என்பது இங்கே அரசியல் நம்பிக்கையாக மாற்றப்பட்டுவிட்டதற்கப்பால், அதனுடைய செயல்பாடு பெரும்பாலும் அரசியல் தளத்திலேயே உள்ளது.

பத்தான் நகருக்குள் சென்று ஆயுதப்படை கமாண்டன்ட் கமல் சிங்கை சந்திப்பதற்கு முன்னதாகவே சாலை ஓரத்தில் சுகந்தபுரீஸ்வரர் ஆலயத்தைப் பார்த்தோம். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் காஷ்மீரை ஆண்ட மன்னர் சுகந்த வர்மனால் கட்டப்பட்டது இந்த ஆலயம். பின்னர் படைஎடுப்பாளர்களால் சிதைக்கப்பட்டது. மழையில் கரைந்து போன கற்களும், இடிந்து சிதறிய சிற்பக்கூடங்களுமாக சாலை ஓரத்திலேயே விரிந்து கிடக்கிறது இந்த ஆலயம்.

வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே சென்று ஆலயத்தைப் பார்த்தோம். கருவறையின் மேலேயே கோபுரம் அமைந்திருக்கும் நாகர/வேசர பாணி கோவில். ஆனால் இப்போது கோபுரம் இல்லை. அடித்தளமும் சுவர்களின் சில பகுதிகளும் மட்டுமே உள்ளன. உள்ளே லிங்கமோ மற்ற சிற்பங்களோ கிடையாது. அனேகமாக ஒரு சிற்பம் கூட இல்லாமல் உடைக்கப்பட்டிருந்தது. ஒரு காலத்தில் பிரம்மாண்டமான ஆலயமாக இருந்திருக்கக்கூடும். ஏறத்தாழ கோனார்க்கின் சூரியன் கோவில் அளவுக்கு இருந்திருக்கலாம்.

அப்பகுதியில் நாங்கள் சுற்றி வந்துகொண்டிருக்கும்போது, ஒரு ராணுவ வாகனம் வந்து எங்கள் வண்டியின் முன்னால் நிறுத்தி அதிலிருந்து இறங்கிய கமாண்டோக்கள் வந்து எங்கள் ஓட்டுனரை சரசரவென்று தள்ளிக்கொண்டு சென்றார்கள். நாங்கள் செல்வதற்குள் அவரே கமல் சிங் பெயரைச் சொன்னார் எனவே அவரை விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். நாங்கள் சென்று பயந்துவிட்டீர்களா என்று கேட்டோம். இல்லை, ராணுவத்தினரும் எங்களை அடிப்பார்கள். எதற்காக இங்கெல்லாம் சுற்றுலாப் பயணிகளை கூட்டிக்கொண்டு வந்தீர்கள் என்று கேட்பார்கள் என்றார் ஓட்டுனர்.

அனேகமாக இந்த பகுதியில் வரக்கூடிய முதல் தமிழ்க் குழு எங்களுடையதாகத்தான் இருக்கும். பொதுவாக காஷ்மீர் பிரச்சனையைப் பற்றி எழுதுகிறோம் என்று வரக்கூடியவர்கள் காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளினால் வரவேற்கப்பட்டு, அவர்களுடைய அலுவலகங்களிலேயே தங்க வைக்கப்பட்டு, அவர்களுடைய துண்டுப் பிரசுரத்தையே ஆய்வு அறிக்கையாக அளிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இத்தனை இதழாளர்கள் இருந்தும் கூட, எந்த இதழாளரும் நேரில் வந்து ஒரு சுயமான சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளவில்லை என்பது தமிழ்ச் சூழலை அறிந்தவர்களுக்கு வியப்பளிக்காது. ஏனென்றால் தமிழ் இதழியல், தமிழ் அரசியல் சிந்தனை இரண்டுமே, விருப்பமான ஆங்கிலக்கட்டுரைகளை வாசித்து அவற்றையே தரவுகளாக எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்டவையாகவே இன்று வரை இருந்துள்ளன. எத்தனை தரவுகள் வாசித்தாலும், எத்தனை கோட்பாட்டு நூல்களை வாசித்தாலும், நேரில் வந்து அந்த இடத்தில் சில மணித்துளிகளாவது இருந்து அடையக்கூடிய உண்மையான உணர்ச்சிகளின் மதிப்பு அவற்றில் இல்லை. ஒரு மனிதனாகவும், ஒரு விலங்காகவும், நம் உள்ளுணர்வுகள் நமக்கு அளிக்கக்கூடிய பாடங்கள் மிக முக்கியமானவை. குறிப்பாக எழுத்தாளர்களுக்கு இத்தகைய ஒரு சூழலில் கண்ணில் படக்கூடிய அனைத்துமே குறியீடுகளாக மாறிவிடுகின்றன. அவை மிக விரிவாக அனைத்தையுமே சொல்லிவிடுகின்றன.

பத்தானில் நாங்கள் செல்லும் வழி முழுக்க ஓட்டுனர் அங்குள்ள சூழலை சொல்லிக்கொண்டே வந்தார். அங்குள்ள மக்கள் சுற்றுலாப் பயணிகள் அங்கு வருவதையே விரும்புகிறார்கள். அவர்கள் அங்குள்ள மதத் தலைமையாலும், எல்லை தாண்டி வரும் பயங்கரவாத அமைப்பின் பிடியாலும், வெகுவாக அச்சுறுத்தப்பட்டு, மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். பயணிகள் வருவதென்பது, அங்கே சகஜ நிலை திரும்புவது போன்ற ஒரு சித்திரத்தினை உருவாக்குவதனால் அது விரும்பப்படுவதில்லை. பயணிகள் தாக்கப்படுகிறார்கள்.

பூஞ்ச் பகுதியில் கூட அமர்நாத் பயணிகள் தொடர்ந்து கல்வீச்சுகளுக்கு உள்ளாக்கப்பட்டு கடும் காயங்கள் அடைவதும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. பத்தான் பகுதியில், அனேகமாக அனைத்து சுற்றுலா பயணிகளும் தாக்கப்படுகிறார்கள். நாங்கள் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, நூறுக்கும் மேற்பட்ட கனத்த ராணுவ வண்டிகள் தொடர்ந்து எங்களை தாண்டிச்செல்வதைக் கண்டோம். கனமான எந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டவை. ஆயுதமேந்திய வீரர்கள் நான்குபுறமும் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட அது ஒரு படை நகர்வு போலவே தோன்றியது. ஆனால் அது அங்கே அடிக்கடி நடப்பதே என்றார் ஓட்டுனர். அந்த மக்களும் அதன் நடுவே வாழ பழகிவிட்டிருக்கிறார்கள்.

இது ஒரு சிக்கலான சூழல். எந்த ஒரு மண்ணில் ஆயுதம் தாங்கிய படை இருக்கும் என்றாலும் அப்படைக்கு எதிரான உணர்வுகள் மிக இயல்பாகவே உருவாகும். மண்டைக்காட்டு கலவரம் நடந்தபோது மூன்று மாதங்கள் மத்திய ராணுவம் குமரி மாவட்டத்தில் குவிக்கப்பட்டிருந்தபோது, அனைத்துத் தரப்பினருமே அதற்கெதிரான கடுமையான கசப்புகளை வளர்த்துக்கொண்டதை கவனித்திருக்கிறேன். ஆயுதமேந்திய ஒரு மனிதரே சாதாரண குடிமகனை அச்சுறுத்துகிறார். ஐயம் கொள்ள வைக்கிறார். அப்படி இருக்கையில், நெடுங்காலம், அத்தனை பெரிய ராணுவப்படை இங்கிருப்பது, இங்குள்ள மக்களுக்கு அச்சத்தையும் கசப்பையும் உருவாக்கியிருப்பதில் வியப்பில்லை.

அதை மிக எளிதாக, எல்லை தாண்டிய பயங்கரவாத அமைப்புகளும் பயன்படுத்திக்கொள்வதிலும் வியப்பில்லை. ஆனால் இப்பிரச்சனை எப்படி எதிர்கொள்ளப்படவேண்டும் என்பது எளிதில் சொல்லத்தக்கதல்ல. ராணுவம் இல்லை என்றால் இப்பகுதி மிக எளிதாக பாகிஸ்தானால் கொள்ளப்பட்டுவிடும். இந்தியாவின் மிக வளம் மிக்க பகுதிகளில் ஒன்றும் ராணுவ முக்கியத்துவம் கொண்ட பகுதியும் ஆகும் இது. ஆகவே ராணுவம் இருந்தாகவேண்டும். அது இத்தகைய எதிர்வினைகளை உண்டாக்கிக்கொண்டிருக்கும்.

கமல் சிங் எங்களை வரவேற்றார். அவரை கண்டுபிடிப்பதற்குள் நாங்கள் பாராமுல்லா வரை சென்றுவிட்டோம். இந்தியாவிலேயே மிக அபாயகரமான ஒரு பகுதி என்று அதைச்சொன்னார்கள். ஆனால் நாங்கள் பெரிய சிக்கல் ஏதும் இன்றி சென்று திரும்பிவிட்டோம். வந்த பிறகுதான் கமல் சிங் சொன்னார் அனைத்து வெளி ஆட்களாலுமே ஐயத்துடன் பார்க்கப்படக்கூடிய இடம் அது என்று. கமல் சிங் எங்களுக்கு சிற்றுண்டியும் தேநீரும் தந்து உபசரித்தார். நாங்கள் போக விரும்பும் இடங்களின் பட்டியலை கிருஷ்ணன் அவரிடம் சொன்னார். அவற்றில் அவர் போகத்தகுந்த இடங்கள், போக வாய்ப்பில்லாத இடங்கள் என்று சிலவற்றை சுட்டிக்காட்டினார்.

பொதுவாக பயணிகள் வருவதை ராணுவமும் விரும்புவதில்லை. ஏனென்றால், பயணிகள் தாக்கப்பட்டால் அப்பகுதி கட்டுப்பாட்டை விட்டு வெளியே சென்று விட்டது என்ற எண்ணம் ஊடகங்களில் உருவாகும். அது அதிகாரிகளை பாதிக்கும். ஆகவே எங்களை பாதுகாப்பாக நாங்கள் விரும்பிய சில இடங்களைப் பார்த்து திருப்பி அனுப்புவதற்கு கமல் சிங் முயற்சித்தார். சில இடங்களை அவர் சிறு பதற்றத்துடன் தவிர்ப்பது தெரிந்தது. ஆகவே நாங்கள் குறிப்பிட்டிருந்ததில் மூன்று இடங்களை மட்டும் பார்த்துவிட்டு திரும்புவதாக முடிவு செய்தோம்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் – ஒரு பயிற்சி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 63