இமயச்சாரல் – 2

ரியாசி நகரில் ஒரு சர்தார்ஜியின் விடுதியில் தங்கினோம். எங்களைத்தவிர அங்கே வேறு விருந்தினர் எவருமில்லை. பொதுவாக ஜம்மு அமைதியான ஊர். ஆனால் ஜம்மு-காஷ்மீர் என்று பெயர் இருப்பதனாலேயே இங்கும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருவதில்லை. அமர்நாத் பயணம் செல்பவர்கள் மட்டுமே ஓரளவு இப்பகுதியின் சுற்றுலாத்தொழிலை நிலைநிறுத்துகிறார்கள்.

2

காலையில் எழும்போது நல்ல வெளிச்சம். இங்கே இரவு எட்டரைக்குத்தான் ஒளி மறைகிறது. காலை ஐந்துக்கே விடிந்தும் விடுகிறது. ஆனால் பகல் முழுக்க இளந்தூறலுடன் மழை இருந்தது. எழுந்ததும் அருகே மலையடிவாரத்தில் சீனாப் நதியின் துணையாறு ஒன்றின் கரையில் இருந்த ஒரு சோலைக்குள் இருந்த ஊற்றைப் பார்ப்பதற்காகச் சென்றோம்

அதிக ஆழம் இல்லை ஒரு கிலோமீட்டர் ஏறி இறங்கவேண்டும். ஆனால் அதற்குள்ளாகவே வியர்த்து வழியத்தொடங்கியது. காற்றில் இருந்த நீராவிதான் காரணம். அந்த ஊற்று ஒரு மலையிடுக்கில் இருந்து பெருகி வருகிறது. தவம் செய்யும் பகீரதன் சிலையும் ஒரு சிறிய சிவன் கோயிலும் இருந்தன. சுற்றிலும் ஓர் அழகிய பூங்கா. காலையில் ஏழு எட்டு சிறுவர்களுடன் ஒரு சுற்றுலாக்குழு வந்து நீராடிக்கொண்டிருந்தது.

6

அந்த ஆறு செக்கச்சிவப்பாக குருதிவெள்ளம் போல ஓடிக்கொண்டிருந்தது. விஷ்ணுபுரத்தின் சோனா நினைவுக்கு வந்தது. ஏதோ செம்மண்பாறையில் ஊறி வரும் நதி. ஜம்மு பலவகையிலும் கேரளத்தை நினைவூட்டியது. எங்கும் பசுமை. பச்சை அடர்ந்த மலைகள். குளிரற்ற நீராவிசெறிந்த காற்று. இளமழை. காலைநடையே மனஎழுச்சி அளிப்பதாக இருந்தது. திரும்பிவந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையிலேயே சுதாகர் வந்து சேர்ந்துகொண்டார்

நேராக ரியாசிக்கு அருகே இருந்த அருவிக்குச் சென்றோம். ஆறு மழையில் பேருருவம் கொண்டிருந்தது. ஏராளமான ஆற்றிடைக்குறைகள் கொண்ட ஆறு மூன்று கிலோமீட்டர் அகலத்துக்கு விரிந்து செந்நிற வெள்ளம் அலைத்துச் சுழித்துக்கொப்பளித்து சென்று கொண்டிருந்தது. முதலில் பல ஆறுகள் என்றுதான் எண்ணத்தோன்றியது.

3

ஆறு மலையை அறுத்து உருவாக்கிய பள்ளத்தாக்கு வழியாக மலைவிளிம்பைச் செதுக்கி சாலை போடுவதே இமயத்தில் வழக்கம். ஆகவே எங்கள் வலப்பக்கம் சினாப் நதி வந்து கொண்டே இருந்தது. அனேகமாக ஊர்களே இல்லை. ஆங்காங்கே ராணுவமுகாம்களின் மாபெரும் கம்பிவேலி சுற்றப்பட்ட மதில்கள். மலையடுக்குகளில் சில கட்டடங்கள். கண்ணை நிறைக்கும் பசுமைக்குக் கீழே செந்நிறத்தில் ஒரு மாபெரும் பதாகைபோல நதி.

சியார் பாபா என அழைக்கப்படும் செங்குத்தான அருவி சினாப் நதியின் கரையில் மலை உச்சியில் இருந்து விழுகிறது. சாலையோரம் கொப்பளித்து வரும் நதியை நோக்குவது நெஞ்சடைக்க வைக்கும் அனுபவம். பேசியபடியே திரும்பும்போதுதான் வானில் இருந்து நேரடியாகவே விழுவதுபோல பொழியும் சியார்பாபா அருவியைப் பார்த்தோம். அனைவருமே ஒரு வியப்பொலி எழுப்பிவிட்டோம்.

5

சிறிய அருவி. சிற்றோடை அளவுக்கே நீர். ஆனால் அது அறுநூறடி உயரத்தில் இருந்து ஒரு நீண்ட வெண்கோடு போல விழுகிறது. கரியமலை தோளில் சரியும் வெண் துகில் போல. நல்லவேளையாக செங்குத்தாக விழாமல் மலையை ஒட்டியே சிதறிச்சிதறி விழுந்தது. எனவே கீழே நின்று குளிக்க முடிந்தது. அந்தக் காலைக்குளியல் வாழ்க்கை அளிக்கும் மகத்தான பரிசுகளில் ஒன்று.

உடனடியாக குறிப்பிடத்தோன்றியது இத்தகைய இடங்களில் கேரள, தமிழ் இளைஞர்கள் நடந்துகொள்வதுபோல பொறுக்கித்தனமாக ஜம்மு பகுதியில் இளைஞர்கள் நடந்துகொள்வதில்லை என்பதுதான். தமிழகத்தின் சுற்றுலாப்பகுதிகளின் மிகப்பெரிய அவலமே குடித்து நிலையழிந்து நாகரீகமோ அடிப்படை ஒழுங்கோ இல்லாமல் நடந்துகொள்ளும் படித்த, பணியாற்றக்கூடிய இளைஞர்கள்தான். பொறுக்கியாக இருப்பதே நாகரீகம் என்ற எண்ணம் இங்கே வேரூன்றியது எப்படி என்றே தெரியவில்லை. அத்தனை ஆண்கள் நீராடும் இடத்தில் பெண்களும் இயல்பாக நீராடுவதைப்போன்ற ஒரு சூழலை நூறாண்டுகளில் தமிழகத்தில் உருவாக்கிவிடமுடியாது.

இமயம் 1

இளமழை பெய்துகொண்டே இருந்தது. ஒரு கனவில் நிகழ்வதுபோன்ற அருவி. சில கணங்களில் அது வானிலிருந்து விழும் விழுது. சிலகணங்களில் ஒரு கண்ணாடி மரம். சிலகணங்களில் ஒரு பெரிய ஒளிரும் வாள். சுற்றிலும் பசுமையும் ஈரக்கருமை ஒளிவிட்ட பாறைகளுமாக மலைகள். வாழும் கணங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையில் எவ்வளவு குறைவானவை.

திரும்ப ரியாசிக்கு வந்து அருகே இருந்த பீம் கர் என்ற மலைக்கோட்டையைப் பார்த்தோம். பழைய கோட்டை அல்ல. பதினேழாம் நூற்றாண்டில் டோக்ரி மன்னர்களால் கட்டப்பட்டது. இப்போது தொல்லியல்துறை மிகச்சிறப்பாக பராமரித்து வருகிறது. மழையில் நாங்கள் மட்டும் அமைதி சூடி நின்ற கோட்டையை சுற்றிப்பார்த்தோம். செந்நிறக் கற்களால் ஆன கோட்டை தாமிரத்தால் ஆன மணி முடி போல மலைமேல் நின்றிருந்தது.

4

மதியம் சாபிட்டுவிட்டு கிளம்பி பூஞ்ச் நோக்கி பயணமானோம். எங்கள் திட்டம் இரவுக்குள் இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள பூஞ்ச் நகரை சென்றடைவது. நாங்கள் இதுவரை செய்திகளில் மட்டுமே கேட்டிருந்த நகரம். போருடனும் தீவிரவாதிகளின் தாக்குதலுடனும் மட்டுமே தொடர்புள்ள இடம்.

முந்தைய கட்டுரைவரலாற்றுக்கு முந்தைய வரலாற்றின் நுழைவாயில்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 60