இமயச்சாரல் – 1

இருபத்தாறாம் தேதி கோவைக்கு ரயிலில் கிளம்பும்போது அப்பயணம் காஷ்மீர் வரை நீளவிருக்கிறது என்பதே உற்சாகம் தருவதாக இருந்தது. குழுவில் எவருக்குமே கன்யாகுமரி முதல் காஷ்மீர்வரை என்ற அனுபவம் இல்லை. கிளம்புவது வரை கடுமையான பணிகள். எழுதிக் கொடுத்தாக வேண்டிய சினிமா வேலைகள், வெண்முரசு, கட்டுரைகள். கிளம்பும் கணம் வரை பரபரப்புதான்.

அருண்மொழியும் பரபரப்பாக இருந்தாள். அவளுடைய பெற்றோர் வந்திருந்தனர். சென்ற சில வாரங்களுக்கு முன் இங்கே என் வாசகரும் நண்பருமான தெரிசனங்கோப்பு மகாதேவன் அவர்களின் புகழ்பெற்ற சாரதா ஆயுர்வேதா மருத்துவமனையில் அரங்கசாமி வந்து தங்கி ஒரு பஞ்ச கர்மா சிகிழ்ச்சை எடுத்துக்கொண்டார். பிறவி விற்பனையாளரான அரங்கா பஞ்சகர்மா என்னும் மாபெரும் அனுபவத்தை அருண்மொழிக்கு விற்றுவிட்டுச் சென்றுவிட அவளும் தெரிசனங்கோப்புக்கு திங்கள் முதல் செல்வதாக திட்டம்.

ரயில்பயணங்களின் அவஸ்தைகள் பெருகி வருவதற்கு குடி ஒரு முக்கியமான காரணம். அந்திமயங்கியபின் குடிக்காமலிருக்க முடியாதவர்களாக தமிழர்கள் மாறிவிட்டார்கள். குடித்தால் கத்தி கூச்சலிட்டு ரவுடித்தனம் செய்வதும் இளைஞர்களின் இளமையின் அடையாளம் என்று நிறுவப்பட்டுவிட்டது. நெல்லையில் ஏறிய நான்குபேர் கொண்ட ஒரு கும்பல் மதுரை வரை சலம்பிக்கொண்டே இருந்தது. இந்த வீணர்களை கட்டுப்படுத்த இன்று எந்த சட்டமும் அமைப்பும் இல்லை.

காலையில் விஜய் சூரியன் வந்து ஏ பி லாட்ஜுக்கு அழைத்துச்சென்றார். அங்கே ஏற்கனவே சேலம் பிரசாத் வந்திருந்தார். கிருஷ்ணன் சற்று நேரத்தில் வந்தார். அதன்பின் செல்வேந்திரன் திருக்குறள் அரசி மற்றும் இளவெயினி. கீதா கபேயில் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் ஷிமோகா ரவி வந்தார். பயணத்துக்கான உற்சாகங்கள், அர்த்தமற்ற பதற்றங்கள்.

நான் நாகர்கோயில் ரயிலைப்பிடிக்க வரும்போது சாலையை மறித்து தளவாய்சுந்தரம் பங்கேற்கும் அ.தி.மு.க. கூட்டம். ரயிலைப்பிடிக்கவேண்டிய பயணிகள் கதறிக்கொண்டிருந்தனர். ஒருவழியாக சந்துகள் வழியாகச் சுற்றி கடைசிக்கணத்தில் ரயிலைப்பிடித்தேன். ராஜகோபாலன் ஏறிய பஸ் மேல்மருவத்தூர் அம்மாவின் பக்தர்களால் நான்கரை மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டது. அவர் பத்தரை மணிக்குத்தான் கோவை வந்தார். பன்னிரண்டுக்கு விமானம். இறங்கிய இடத்தில் இருந்து டாக்ஸியை எடுத்து அடித்துப்புரண்டு கடைசிக்கணத்தில் வந்து சேர்ந்தார். பயணத்திற்கு சுவை சேர்த்த அந்த ‘திரில்’ சில கணங்களிலேயே அணைந்தது. விமானம் நாற்பது நிமிடம் தாமதம்.

அடுத்த ‘திரில்’ ஆரம்பம். டெல்லியில் இருந்து ஜம்முதாவிக்குச் செல்லவேண்டிய எங்கள் ரயில் இரவு எட்டேமுக்காலுக்கு. விமானம் மும்பை வழியாக டெல்லி வருவது. மும்பையில் கனமழை என்று முக்கால்மணிநேரம் வானிலேயே சுற்றிவந்தது. அதன்பின் ஒன்றரை மணிநேரம் தாமதமாக எழுந்து டெல்லியில் மீண்டும் ஒன்றரை மணிநேரம் வானில் சுற்றி எங்களை மாலை ஏழரை மணிக்கு இறக்கியது. பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியே வந்தபோது எட்டுமணி. அப்போது அடுத்த கிளைமாக்ஸ். ரயில் ஒன்பதே முக்காலுக்குத்தான். சரியாகப் பார்க்காமல் பதற்றம் அடைந்திருக்கிறோம்.

ரயில் நிலையம் எதிரில் ஒரு சின்ன ஓட்டலில் ஆளுக்கு இரண்டு சப்பாத்தி சாப்பிட்டோம். மூன்றுபேருக்குச் சேர்த்து 680 ரூபாய் பில் என்றார்கள். சண்டை போட்டால் நாலைந்துபேர் சூழ்ந்துகொண்டார்கள். சரி ஒத்துக்கொள்கிறோம் என்று ரயில்நிலையம் மீண்டோம். அழுக்கான பெட்டியில் வெளியே மழை பெய்துகொண்டிருக்க தூங்கியபடியே ஜம்மு. அழுக்கில் மூழ்கிய ஜம்முதாவியில் எங்கு நோக்கினும் பூரி தின்று கொண்டிருந்தனர். வானம் புகையால் மூடப்பட்டதுபோல இருந்தது.

சந்தைக்குள் ஒரு சிறிய விடுதியில் ஒற்றை அறையை வாடகைக்கு எடுத்து குளித்து உடைமாற்றினோம். ஈரோட்டைச்சேர்ந்த நண்பர் சரவணன் அங்கே ஒரு தொழிற்சாலை நடத்தி வருகிறார். அவர் வந்து சந்தித்தார். அவர்தான் சென்ற லடாக் பயணத்தில் நரீந்தர் சிங் என்னும் காக்காவை எங்களுக்கு வண்டியோட்டியாக அமர்த்தியவர். இம்முறையும் காக்காதான் வந்தார். கட்டித்தழுவிக்கொண்டோம்.

சிற்றுண்டிக்குப்பின் காகாவின் வண்டியில் டயர்கள் மாற்றிக்கொண்டு கிளம்பினோம். முதல் இலக்கு ஜம்முதாவியில் இருந்து நூறு கிமீ தொலைவில் இருந்த சிவ்கொரா என்ற புராதனமான இயற்கை குகைக் கோயிலுக்கு. அங்கே சென்று சேர மூன்று மணி ஆகிவிட்டது. வழியில் நீர் பெருகிச்சென்ற பியாஸ் நதியைக் கடந்தோம். ஜம்மு மிக வளமான சமவெளி. பெரிய அளவில் வறுமை இருப்பதாகத் தெரியவில்லை. மண்கூரை கொண்ட பழமையான வீடுகள் இருந்தாலும் நிறைய வீடுகள் புதியவை. எங்கும் நெல் மக்காச்சோளம் பசுமையாகத் தழைத்திருந்தது. ஜம்மு சமவெளி பாஸ்மதி அரிசிக்கு புகழ்பெற்றது.

ஷிவ்கொரா மலையடுக்கின் நடுவே இருந்த ஒரு பெரிய இயற்கைக்குகை. அங்கிருந்த ஒரு ஸ்டால்கமைட் குவையை லிங்கமாக வழிபடுகிறார்கள். முக்கியமான புனித தலமாகையால் நல்ல கூட்டம். வெயில் இல்லை. சிறிய மழைச்சாரலும் இருந்தது. ஆகவே நான்கு கிமீ தூரம் மலை ஏறிச்செல்வது கடினமாக இல்லை. நூற்றுக்கணக்கான குதிரைகள், கோவேறுகழுதைகள். அவற்றில் ஏறி மேலே சென்றுகொண்டே இருந்தது கூட்டம். விதவிதமான பல்லக்குகள். சுமைதூக்கிகளின் நடையசைவு பல்லக்கில் தெரியாத அமைப்பு ஒன்று வியக்கச்செய்தது.

ஒரு கைடு குகைக்குள் கூட்டிச்சென்று காட்டினார். நீர் கசிந்து உடல்வெப்பத்தால் ஆவியாகி நிறைந்த இருண்ட பாறைக் குகை. நல்ல நெரிசல். குகைலிங்கத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தோம். மாலை ஆறாகிவிட்டது. ஒரு ஓட்டலில் மாகி நூடில்ஸ் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். மழையில் மலையேறியதும் விதவிதமான குதிரைகளும் இந்நாளின் சிறப்பனுபவங்கள். வெண்முரசு எழுதும் மனநிலைக்கு குதிரைகளைக் காண்பது கனவு நிகர் அனுபவமாக இருந்தது.

மாலையில் ரியாஸி என்ற ஊரில் வந்து விடுதியில் அறைபோட்டுத் தங்கினோம். நான் சட்டைகளை துவைத்துப்போட்டேன். மழையில் ஜீன்ஸின் அடிப்பகுதி சேறாகியிருந்தது, அதை மட்டும் கழுவி குளியலறையில் காயப்போட்டேன். மலை ஏறும்போது கண்களில் எவையெல்லாமோ பதிந்துகொண்டிருந்தாலும் மீண்டபின் குதிரைகளின் அசைவுகள் அன்றி எவையும் நிற்கவில்லை. அவற்றின் கவனம் மிக்க நடை. அந்த மெல்லிய நடையிலேயே தெரிந்த கம்பீரம். குதிரைகளுக்கு டயர் வெட்டி லாடமிட்டிருந்தனர். அங்குள்ள படிகளில் ஏற அதுதான் உதவுகிறது போலும். அவை நடக்கும் ஒலி லாடம்போல ஒலிக்கவில்லை என்பது அப்போதுதான் புரிந்தது..

திரும்பும் வழியில் ஒரு பெரிய வேடிக்கை. கோவை இண்டியன் எக்ஸ்பிரஸில் இருந்து மீனாட்சி சுந்தரம் என்ற நிருபர் கூப்பிட்டார். கோவையில் முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டம் நிகழ்வதாகவும், அதில் சு.வெங்கடேசன் என்னை கடுமையாக தாக்கிப் பேசியதாகவும் சொன்னார். என் இணையதளத்தில் நான் கணவனின் எச்சிலை மனைவி உண்டால் உடலுக்கு நல்லது என்பதை e=mc2 சூத்திரத்தை வைத்து நிரூபிக்க முயன்றிருப்பதாகச் சொல்லி அக்கட்டுரையை எடுத்துக் காட்டி ‘நார் நாராக’ அதை கிழித்து விமர்சனம் செய்ததாகவும், அதற்கு ஒரு கண்டனத் தீர்மானமே போடவேண்டும் என்றதாகவும் சொன்னார்.

‘அவர் சொன்னப்ப சந்தேகமா இருந்திச்சு சார். நியூஸ் குடுத்திருக்காங்க சார். தெரியாம போட்டு நான் மாட்டிக்கக்கூடாதுன்னு நேர்ல கூப்பிட்டேன்… நீங்க அப்டி எப்ப எழுதினீங்க?’ என்றார். ‘நான் அது பகடி சார். அதான் வெங்கடேசனுக்கும் முற்போக்கு தோழர்களுக்கும் புரியலை’ என்றேன். சிரித்துக்கொண்டே இருந்தோம். கொஞ்சநேரம் சிரித்து அடங்கியபின் யாராவது ஒருவர் வெங்கடேசன் பற்றி ஏதாவது சொல்ல மீண்டும் சிரிப்பு. இந்தநாளின் இத்தனை உடற்களைப்பையும் இல்லாமலாக்கிய வெங்கடேசனை நினைத்தபோது நன்றியில் கண்ணீர் மல்கினேன்.

முந்தைய கட்டுரைஅறம் – சிக்கந்தர்
அடுத்த கட்டுரைவரலாற்றுக்கு முந்தைய வரலாற்றின் நுழைவாயில்