எச்சில் இலை அறிவியல்

அன்பின் ஜெ,
மன்னிக்கவும் தங்கள் நேரத்தில் குறுக்கிடுவதற்கு..

சற்றுமுன் நண்பர் ஒருவர்முகநூலில் பகிர்ந்து இருந்தார்..படித்து சமநிலை இழந்து இரண்டு மணி நேரமாகிறது..மதிய உணவு கூட இன்னும் எடுக்கவில்லை..சமநிலை பேணுவது எப்படி என்று தளத்தில் தேடி கொண்டு இருக்கிறேன்..

தினகரன் முக நூல் பக்கத்தில் அவர்கள் பகிர்ந்து உள்ள செய்திதான் அது..

வேறு என்ன சொல்ல ஜெ ? கர்ணன் நகுல ,சகாதேவனை அழைக்க அரண்மனை வருவதில் நுழைந்தலாவது சமநிலை கூடுமா என காத்து இருக்கிறேன். :-(

அன்புடன்,
பிரதீப்.

============================================================================================

கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண காரணம்!!

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்.

அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.

என்ன தான் கணவனின் ஜீன் குழந்தைக்குள் இருந்தாலும் அது லேட்டஸ்டாக அப்டேட் ஆகவே இந்த ஏற்பாடு. மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர்… இபொழுது சொல்லுங்கள் கணவன் உண்ட அதே இலையில் மனைவி உண்டால் ஆணாதிக்கமா?.

https://www.facebook.com/dinakarannews/photos/a.420417614663044.88918.107459262625549/766034726767996/?type=1&theater

=================================================================

அன்புள்ள பிரதீப்

முக்கியமான குறிப்பு. இனியாவது போலிமுற்போக்குவாதிகள் மனம் திரும்பவேண்டும்

ஆனால் அறிவியல் விளக்கம் சரியல்ல என்று நினைக்கிறேன். சரியான விளக்கம் இது

e=mc2 என்ற சூத்திரத்தைக் கொண்டு மட்டுமே இதை விளக்க முடியும். m என்பது மாஸ் அல்ல. அதை மாத்ரு என்றும் தமிழில் மாதா என்றும் சொல்வார்கள். அதாவது பெண். கணவன் உண்டு மிச்சம் வைக்கும் உணவு C எனப்படுகிறது. அது அப்பெண்ணின் குடும்பப்பாங்கான தன்மைக்குச் சமானமானது

ஆகவேu C என்பது பரவலாக நம்பப்படுவது போல ஒளியின் வேகம் கிடையாது. chastity என்ற சொல்லின் சுருக்கம். சம்ஸ்கிருதத்தில் சாரித்ரியம் என்றும் தமிழில் கற்பு என்றும் சொல்லப்படுகிறது

e என்பது எனர்ஜி என்று சொல்லவேண்டியதில்லை. சம்ஸ்கிருதத்தில் அதை வித்யுத் என்கிறார்கள்.தமிழிலும் ஆற்றல் என்று சொல்லவேண்டிய நிலை உருவாகிவிட்டதைச் சொல்லியாகவேண்டும்

இந்த உண்மையை அறிந்த நாசா விஞ்ஞானிகள் ஆனந்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பதை டிஸ்கவரி சானலில் கூட காட்டினார்கள்

மேலும் ஓட்டலில் வாடிக்கையாளர்கள் மிச்சம் வைத்த உணவுகளை முழுக்க சரக்குமாஸ்டர்கள் சாப்பிட்டாகவேண்டும் என்று சரவண பவனாலயத்தில் உள்ள சம்பிரதாயமும் இதன் அடிப்படையில் உருவானதே.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு – மிகுபுனைவு, காலம், இடம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 57