கீதை முகப்பு

பல்லாயிரக்கணக்கான ஓவியங்கள், நடனக்காட்சிகள், நாடகத் தருணங்கள், திரைப்படக் காட்சியுருவங்கள் வழியாக நம் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது கீதையின் முகப்புக்காட்சி. கீதை என்றதுமே இக்காட்சிதான் நினைவுக்கு வருகிறது. நாள்காட்டி ஓவியங்களாக இக்காட்சி நம் எளிய மக்களின் இல்லங்களிலும் காணப்படுகிறது. மரபில் இக்காட்சிக்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு; குறிப்பாக தமிழ்நாட்டில் பற்பல ஆலயங்களில் கிருஷ்ணனை பார்த்தசாரதியாக நிறுவி வழிபடுகிறோம்.

இந்தக் காட்சியின் நாடகீயத்தன்மையும் கவித்துவமுமே கீதையைப்போன்ற ஒரு சிக்கலான தத்துவ நூலை இத்தகைய பெரும் புகழ் பெற வைத்தது என்றால் மிகையல்ல. பைபிள், குர் ஆன் போன்ற மதநூல்கள் பெரும் புகழ் பெற்று பரவலாக வாசிக்கப்படுவது இயல்பே. காரணம் அந்த மதங்கள் அந்நூல்களின் பலத்தில் நிற்பவை. அம்மதம் செயல்படுவதே அந்நூலை பிரச்சாரம் செய்வதன் வழியாகத்தான். ஆனால் கீதை மதநூலல்ல, இந்துமதம் அதை நம்பியும் இல்லை. யோசித்துப் பார்த்தால் உலக அளவில் அதிகமாகப் புகழ் பெற்ற தத்துவநூல் கீதையாகவே இருக்க முடியும் என்று படுகிறது. பிளேட்டோவின் குடியரசுகூட அடுத்த படியாகவே இருக்கும்.

இத்தகைய பெரும்புகழ் கீதையை வந்தடைந்தது அது மகாபாரத்தில் இணைக்கப்பட்டதற்குப் பிறகுதான். அவ்வகையில் பார்த்தால் இவ்விணைப்பை நிகழ்த்தியவர்கள் மிகுந்த கூர்மதியும் நெடுநோக்கும் கொண்டவர்கள். இந்திய ஞானமரபின் மாபெரும் கதை வடிவமாக உருப்பெற்ற மகாபாரதம், இந்திய நிலப்பரப்பெங்கும் கலைகள் மூலமாகவும் இலக்கியம் மூலமாகவும் பரவி இங்கு வாழ்ந்த பலகோடி மக்களை அவர்கள் முதிரா இளம் பருவத்திலேயே சென்றடைவதை அவர்கள் ஊகித்திருந்திருக்கலாம். மகாபாரத்தின் மகுடமாக நின்ற கீதை ஒவ்வொரு இந்துவின் கண்ணுக்கும் சென்றது.

கீதையின் தொடக்கக் காட்சி முதல் தளத்தில், கீதையை மகாபாரதத்துடன் இணைக்கும் நோக்கம் கொண்டது. இரண்டாம் தளத்தில், கீதை என்ற அடிப்படையான தத்துவ நூல் விவாதிக்கப்படுவதற்குப் பொருத்தமான தொடக்கப்புள்ளியாக அமையும் நோக்கம் கொண்டது. மூன்றாவதாக அது கீதையின் சாராம்சம் காட்சி வடிவில், படிமமாக, வெளிப்படும் நோக்கம் கொண்டது. இம்மூன்று நோக்கங்களும் மிக வெற்றிகரமாக நிறைவேறியமையினால்தான் அது இன்றைய வரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்றது. ஆகவே இந்த முதல் காட்சி மீது ஆழமான வாசகக் கவனம் படிய வேண்டியுள்ளது.

மகாபாரதக் கதை பலவிதமான விரிவுகளைக் கொண்டதாகும். அதன் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியான வாழ்வு உள்ளது. இதைத்தவிர துணைக்கதைகள் அதில் அடர்ந்து செறிந்துள்ளன. கீதையின் தருணம் இங்கேதும் நிகழாமல் மகாபாரதக் கதையின் அதி உச்ச களத்தில் நிகழும்படி அமைக்கப்பட்டுள்ள இலக்கிய நுட்பம் வியப்பிற்குரியது.

மொத்த பாரதக் கதையுமே குருஷேத்திரப் போரை நோக்கி, ஓடைகள் நதியை நோக்கியும் நதி கடலை நோக்கியும் வருவதுபோல, விரைவதை நாம் மகாபாரதத்தில் காண்கிறோம். அந்தப் போருக்கான காரணங்கள் பாண்டவர்களின் பிறப்புக்கு முன்னரே கருக்கொள்கின்றன. அவர்களின் இளமையில் அவை தளிர் விடுகின்றன. பாண்டவர்-கெளரவர்களின் தனிப்பட்ட குணநலன்கள் ஒவ்வொன்றும் அக்காரணங்களை வலுவூட்டி வளர்க்கின்றன. அரசியல் சூழல்களும் அதற்கு ஏற்ப உருக்கொள்கின்றன. மெல்ல மெல்ல போர் உறுதியானபிறகு அதற்கான ஏற்பாடுகள் தொடங்குகின்றன. ஏற்பாடுகள் முதிர்ந்து போர் தொடங்கி விடுகிறது. பாரத வர்ஷத்தின் எதிர்காலத்தைத் தீர்மானித்த பெரும்போர். அம்மக்களின் நினைவில் எக்காலமும் அழியாது நீடிக்கும் போர். அது தொடங்கவிருக்கிறது. இன்னும் சில நொடிகள். அப்போது நிகழ்கிறது கீதையின் முகப்பு நிகழ்வு.

மகாபாரதத்தை எப்படிச் சுருக்கினாலும் கீதையைத் தவற விட முடியாதபடி அதன் நாடக உச்சத்தில் அமைந்துள்ளது கீதை முகப்பு. பாஞ்சாலி சபதமிடும் காட்சி, கீதைக் காட்சி, தருமன் முடிசூடுதல் என்று மூன்றே காட்சிகளான நாடகமாக மகாபாரதத்தை மாற்றிவிடலாம்!

சொல்லப்போனால் கீதையின் பெரும் பகுதியை உபதேசிப்பதற்குரிய இடமல்ல இந்தப் போர்களச் சூழல். இன்னும் அர்ச்சுனன் தன் வாழ்வின் மறுபக்கத்தைக் காணவில்லை. இரண்டு பெரும் நிகழ்வுகள் அவனுக்காகக் காத்திருக்கின்றன. ஒன்று, அபிமன்யூவின் மரணம். அது ஒருவகையில் அவனுடைய மரணமேதான். பாரதக் கதையில் அர்ச்சுனனை நாம் மிகவும் நிலைகுலைந்த நிலையில் காண்பது மைந்தனின் மரணத்தின்போதுதான்.

இரண்டு, பாரதப்போர்முடிந்து நீர்க்கடன் அளக்கும் தருணம். வெற்றி என்றால் என்ன என்று அவன் புரிந்து கொண்ட தருணம் அது. அரவான், அபிமன்யூ எனத் தன் பிரியத்திற்குரிய புதல்வர்களை இழந்து, சொந்த அண்ணனையே தன்கையால் கொன்று, தான் ஈட்டிய வெற்றியின் வெறுமையையும் அபத்தத்தையும் அர்ஜுனன் உணர்வதை நாம் மிகச் சிறப்பாகவே வியாசனின் படைப்பில் காண்கிறோம். இவ்வரு தருணங்களுக்குப் பிறகுதான் அர்ஜுனனுக்கு கீதை கூறப்பட்டிருக்க வேண்டும். அதற்கு பொருத்தமான பற்பல தருணங்களையும் நாம் மகாபாரதத்தில் காண்கிறோம்.

சொல்லப்போனால், இப்போது பகவத் கீதை அமைந்திருக்கும் இந்த இடமே கூட இந்த அளவு முக்கியத்துவம் பெறுவது அதற்குப் பிறகு கதையில் நிகழும் நிகழ்வுகளினால்தான். குருஷேத்திரப் போரின் பேரழிவுகள், இழப்புகள், அனைத்தையும் கீதையின் இப்பகுதியை வாசிக்கும்போது நாம் ஏற்கனவே அறிவோம். அப்போரில் பங்கு கொண்ட பல்லாயிரம்பேர், மாவீரர்களும் மாமன்னர்களும் அடங்கிய ஒரு பெருந்திரள், அழியப்போகிறது என்று அறிந்திருப்பதனால்தான் கீதையின் சொற்களுக்கு அத்தனை வலிமை உருவாகிறது.

ஆகவே கீதை முகப்பு இன்னும் பிந்தி மகாபாரதத்தின் இறுதியில் வந்திருந்தால் மேலும் பொருத்தமாக இருந்திருக்கும். அதாவது கீதையின் உட்கிடைக்கு உகந்ததாக இருந்திருக்கும். ஆனால் இன்றுள்ள நாடக உச்சம் கண்டிப்பாக அமைந்திருக்காது! ஆகவே கீதையை இங்கு இணைத்த அந்த வியாசரின் நோக்கம் வேதாந்த விவாதம் என்பதை விட அதன் கவித்துவமேயாகும். ‘நாடகாந்தம் கவித்வம்’ என்பது இலக்கணம். (நாடகீய உச்சமே கவிதைத்தன்மையாகிறது.) அதற்கு இப்போதுள்ள இடமே மிக மிக உகந்ததாகும்.

கீதையின் இந்த முகப்புக்காட்சி மிகச் செறிவான, மிகத்தீவிரமான ஒரு நாடகம்போல அமைந்துள்ளது. நான் ஏறத்தாழ ஐம்பது முறை வெவ்வேறு கலைவடிவுகளில் இந்த நாடகக் காட்சியைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் இதன் இலக்கிய அமைதி என்னை பிரமிக்கச் செய்கிறது. முதல் வரியிலேயே உச்சகட்டம் தொடங்கிவிடுகிறது. போர் புரியத் தயாராக உள்ள இரு ராணுவங்களின் சந்திப்புப் புள்ளி. சட்டென்று எதிர்பாராத திருப்பமாக அப்போரின் முதன்மைப் போராளியின் மனத்தடுமாற்றம். அதற்கு தேரோட்டி அளிக்கும் உபதேசம் எனும் உச்சம்.

ஒரு சிறந்த நாடகத்திற்குரிய மூன்று அம்சங்கள் இதில் சிறப்பாக அமைந்துள்ளன

 அ. உத்வேகம் மிக்க தொடக்கம்.

ஆ. திருப்பம், மற்றும் பிரச்சினையின் வெளிப்பாடு.

இ.உச்சக்கட்டம் மற்றும் பிரச்சினையின் முடிவு.

இந்தக் காலம் வரை கீதையைப் புகழுடன் வைத்திருப்பதில் இந்தத் தொடக்கத்தின் பங்கு முதன்மையானது.

கீதையின் தொடக்கக் காட்சி கீதையின் வேதாந்த விவாதத்திற்கு எவ்வகையில் பொருத்தமானது என்பதை பிறகு விரிவாகப் பார்ப்போம். சுருக்கமாக ஒன்றை மட்டும் கூறலாம். தவறுக்கும் சரிக்கும் நடுவே உள்ள விவாதம் என்பது தத்துவத்தைச் சார்ந்தது அல்ல, அது அறவியல் (Ethics) சார்ந்தது. கீதை ஒரு நுண்ணிய தத்துவ நூல். ஆகவே அது இரண்டு சரிகளுக்கு நடுவேயான விவாதமாக அமைகிறது. கீதைமுகப்பில் அர்ஜுனன் கூறும் சொற்கள் – ‘வெற்றியின் பொருட்டு உறவினரைக் கொல்ல மாட்டேன்’- மனமயக்கம் கொண்டவனோ அறிவிலியோ கூறுவன அல்ல. அவை முதிர்ந்த விவேகத்தின் வெளிப்பாடுகள் மட்டுமே. கிருஷ்ணனே அவற்றை ‘அறிவுடையோரின் சொற்கள்’ என்று குறிப்பிடுகிறார். அது ஏளனமான சொற்றொடரல்ல, சரியான சொற்றொடரே. அந்த சரிக்கு மாற்றாக கிருஷ்ணன் முன்வைப்பது இன்னும் நுட்பமானதும் மேலும் அகண்டதுமான ஒரு சரியை. கீதை முகப்பு இந்த விவாதத்திற்கு மிகமிகப் பொருத்தமாக இருப்பதைப் பிற்பாடு பார்க்கப்போகிறோம்.

கீதையின் குறியீட்டுத்தன்மையை உருவாக்குதலில் இந்த முகப்பு ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது. சாதாரணமாக வரையப்பட்ட ஓர் ஓவியத்திலேயே இதை நாம் காணலாம். சுற்றிலும் திரண்டு அடர்ந்திருக்கும் படைகள், அவற்றின் ஆயுதங்களின் காடு. அதன் நடுவே போருக்குத் தயாராக நிற்கும் கொடிபறக்கும் ரதம். அதில் பூரண கவச உடை அணிந்து ஆயுதங்களுடன் இருப்பவன் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறான். அவனருகே புன்னகையுடன் உபதேசம் செய்பவனின் கையில் குதிரையைச் செலுத்தும் சம்மட்டி தவிர வேறு ஆயுதமே இல்லை.

மீண்டும் மீண்டும் இக்காட்சி இந்துமத்தின் சாராம்சமான வேதாந்த நோக்கு, பக்திநோக்கு இரண்டுக்கும் குறியீடாக முன்வைக்கப்பட்டுள்ளது.கீதையே இந்தக் குறியீட்டை நேரடியாகச் சொல்லி நிறுவுகிறது. அதாவது இது ஒரு குறியீடு என்பதை நூலாசிரியரே  ஐயமின்றி  முன்வைக்கிறார், வேறு எவ்வதையிலும் அது நம்மால் எடுத்துக் கொள்ளப்படலாகாது என்பது அவரது எண்னம். கீதையின் இறுதிப் பாடல் இவ்வாறு முடிகிறது.

‘எங்கு
யோகத்திலமர்ந்த கிருஷ்ணனும்
வில்லேந்திய பார்த்தனும்
இணைகிறார்களோ அங்கு
மங்கலங்களும்
வெற்றியும் வளமும்
நிலைபெறு நீதியும்
என்றுமிருக்கும்
என்று உறுதி கூறுகிறேன்.’

அனைத்தையும் ஆற்றி, அனைத்திலிருந்தும் விலகி நிற்கும் பூரண யோக நிலைக்கு கிருஷ்ணனையும், யோகத்தில் அகம் நிலைக்கவிட்டு செயலூக்கம் கொண்டு எழும் கர்மயோக நிலைக்கு பார்த்தனையும் உருவகமாகக் காட்டும் இந்தச் செய்யுள் அந்தக் காட்சியை பல தளங்கள் கொண்ட குறியீடாக மாற்றுகிறது. நம் மரபில் மீண்டும் மீண்டும் அக்குறியீடு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்குதான் ஏற்கனவே கூறியுள்ளபடி கவித்துவக் கற்பனை சார்ந்த வாசிப்பு தேவையாகிறது.

கீதையின் இந்த முகப்பைப் பற்றி மேலும் மேலும் விளக்கங்கள் வந்தபடியே உள்ளன. கீதை ஒரு கவிதை நூல் என்பதனால் அப்படி எல்லையில்லா வாசிப்புகளை உருவாக்குவதே அதன் இயல்பும் மகத்துவமும் ஆகும்.

முந்தைய கட்டுரைஇந்தியச்சுற்றுப்பயணத் திட்டம்
அடுத்த கட்டுரைகணியாகுளம்,பாறையடி…