தமிழகத்தின் கற்காலங்கள்

 

figure1

தமிழக வரலாற்றாய்வை பொதுவாக ராபர்ட் புரூஸ் ஃபூட்டில் இருந்துதான் தொடங்குவது வழக்கம். தமிழகத்தின் கற்காலத்தை அவர் ஆதிரம்பாக்கத்தில் கண்டுபிடித்த கல்லாயுதங்கள்தான் தெளிவாக நிறுவின. ஒரு நாவலாக தமிழக வரலாற்றை எழுதினோம் என்றால் முதல் அத்தியாயம் ஆதிரம்பாக்கத்தில் ராபர்ட் புரூஸ் ஃபூட் கல்கோடரியை கண்டடைந்த காட்சியுடன்தான் தொடங்கும்

பழையகற்காலம் [ Lower Paleolithic Era]

ஃபூட் கண்டுபிடித்த அந்த கற்கோடாலி இன்று தமிழ்மண்ணின் பழைய கற்காலத்தைச்சேர்ந்தது என்று வரையறைசெய்யப்பட்டிருக்கிறது. அப்பகுதியில் அவ்வாறு பல பொருட்கள் சிதறிக்கிடப்பது ஏற்கனவே உள்ளூர்க்காரர்கள் அறிந்திருந்ததுதான். ஆனால் அவற்றை சற்று நாட்களுக்கு முன்னால் யாராவது செய்திருப்பார்கள் என்றுதான் அவர்கள் நினைத்திருந்தார்கள். அந்த கோடரிகள் செய்யப்பட்டு இரண்டு முதல் ஐந்து லட்சம் வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என அவர்கள் ஊகித்திருக்க மாட்டார்கள். தமிழர்களாகிய நம் மூதாதையர் தங்கள் கைகளால் செய்த பொருட்களில் நமக்குக்கிடைக்கக்கூடிய மிகப்பழைய பொருட்கள் அவைதான்

ஆனால் அவர்களை தமிழர்கள் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் அப்போது தமிழ் உருவாகியிருக்கவில்லை. மனித மொழி உருவாகியிருந்ததா என்றே சந்தேகம்தான். ஏனென்றால் அவர்கள் நம்மைப்போன்ற மனிதர்கள் அல்ல. நம்மைவிட பரிணாமத்தில் ஒருபடி பின்னால் நின்றவர்கள். அவர்கள் விட்டுச்சென்ற இந்த ஆயுதங்களையும் சில எலும்புத்துண்டுகளையும் தவிர நமக்கு அவர்களைப்பற்றிக் கிடைக்கும் தகவல்கள் ஏதுமில்லை.

ஆனால் இந்த ஆயுதங்களைக் கொண்டு பலவிஷயங்களை ஊகிக்க தொல்மானுடவியல் ஆய்வாளர்களால் முடியும். இந்த ஆயுதங்களைப் பயன்படுத்திய மக்களுக்கு சாதாரண கடினமான கருங்கல்லில் இருந்து இன்னொரு கருங்கல்லைக்கொண்டு ஆயுதங்களைச் செய்ய தெரியாது. கல்லை வெட்டவும் கூராக்கவும் இவர்கள் முயலவில்லை. படிகக்கல் இயற்கையாகவே கூர்மையானது. அதன் ஒரு முனையை உடைத்துப்பிளந்து எடுப்பதும் சுலபம். எளிய தொழில்நுட்பத்தைக்கொண்டே கத்திகள், கோடரிகளை உருவாக்கிக் கொள்ளமுடியும்.

இந்த எளியமுறையை அச்சூலியன் முறை என்கிறார்கள் ஆய்வாளர்கள். சென்னையை ஒட்டிய பகுதிகளில் ஃபூட்டும் அவரது சக ஆய்வாளரான கிங்கும் கண்டுபிடித்த கல்லாயுதங்களை அச்சூலியன் முறையைச்சேர்ந்த மெட்ராஸ் கைக்கோடாரி மரபு [Madras Handaxe Tradition”] என்று இன்றைய ஆய்வுகளில் சொல்லப்படுகின்றன

figure3

அச்சூலியன் முறை [Acheulean]

அச்சூலியன் முறை என்ற சொல் பிரெஞ்சு மொழியில் இருந்து வந்தது. பிரான்சில் பிகார்டி [Picardy] மாகாணத்தில் [ Amiens] நகர் அருகே உள்ள செய்ண்ட் அச்சூல் [Saint-Acheul] என்ற இடத்தில் கிடைத்த தேர்ச்சியற்ற கல்லாயுதங்கள் வரலாற்றுமுந்தைய மனிதர்களைப்பற்றிய ஆய்வுக்கு முக்கியமான அடையாளமாக இருந்தன. அதிலிருந்து இந்தவகையான ஆயுதங்களுக்கு அச்சூலியன் கல்லாயுதங்கள் என்று சொல்லும் வழக்கம் உருவாகியது

அச்சூலியன் முறைகளைப்பற்றிய விரிவான ஆய்வுகள் அந்தமுறை ஆப்ரிக்காவின் நதிப்படுகைகளில் எட்டுலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகி உலகமெங்கும் சென்றிருக்கலாம் என்ற ஊகத்துக்கு இடம்கொடுக்கின்றன. ப்ழையகற்காலத்தில் கற்கருவிகள் உருவாக்கப்பட்ட முறையை மூன்றாக பிரிக்கிறார்கள். மிகத்தொன்மையான முறை ஓல்டோவான் [ Oldowan ] முறை. அடுத்தது அச்சூலியன் Acheulean முறை. அடுத்தது கிளாக்டோனியன் Clactonian முறை .

இவை நடுவே என்ன வேறுபாடு? தொலைபேசிக்கும் பேஜருக்கும் செல்பேசிக்கும் இடையேனான வேறுபாடு போலத்தான். தயாரிக்கும் முறையும் பயன்படுத்தும் முறையும் தொடர்ந்து வளர்ந்து மாரிக்கொண்டிருக்கின்றன.இந்தக் கற்கருவிகள் எப்படி செய்யப்பட்டிருக்கலாம் என்பதை இன்று ஊகித்திருக்கிறார்கள் அறிஞர்கள். அதைவைத்து இந்த தொழில்நுட்ப யுகத்தை பிரிக்கிறார்கள்:

முதலில் எளிதாகப் பிளந்துவரக்கூடிய படிகக்கல் கண்டுபிடிக்கப்படுகிறது. அதை பிளந்து எடுத்தபிறகு அதை இன்னொரு பெரிய கல்லைக்கொண்டு மூன்றுபக்கமும் சாய்வாக அடிக்கிறார்கள். கல் உடைந்து தெறிக்கத்தெறிக்க கூம்புவடிவமான ஒரு கல்லாயுதம் உருவாகிவிடுகிறது. இதைக்கொண்டு மிருகங்களை வேட்டையாடுகிறார்கள், கொல்லப்பட்ட மிருகங்களை வெட்டுகிறார்கள்

ஓல்டோவான் முறையில் படிகக்கல் இன்னும் பெரிய கனமான ஒரு கல்லால் அடிக்கப்படுகிறது. ஒரே ஒரு கூர்மையான முனை உருவாக்கப்படுகிறது.

ஆனால் அச்சூலியன் முறையில் வெவ்வேறு வகையான கற்களால் வெவ்வேறு முறையில் அந்த கற்துண்டு அடித்து உடைக்கப்படுகிறது. உடைக்க பயன்படுத்தும் கற்சுத்தியல்களுக்கு எலும்பாலோ மரத்தாலோ பிடி போடப்படுகிறது. அச்சூலியன் கற்கோடலிகளும் அவ்வாறு எலும்பாலும் மரத்தாலும் பிடிகட்டப்படுவதற்குரியவை என்று தெரிகிறது. அச்சூலியன் கற்கருவிகள் நான்குபக்கமும் சீராக செதுக்கப்பட்டு ஒழுங்கான வடிவம் கொண்டவையாக உள்ளன. ஆகவே அவை கையில் ஏந்துவதற்கும் குச்சிகளில் கட்டிவைப்பதற்கும் உகந்தவை. வீசினால் சரியாகச்சென்று தாக்கக்கூடியவை

இது கற்கருவித் தொழில்நுட்பத்தின் பெரும்பாய்ச்சலைக் குறிக்கிறது. வேடிக்கை அல்ல. ஓல்டோவான் தொழில்நுட்பத்தை ஒருவர் இன்னொருவரைப்பார்த்து செய்துவிடலாம். ஆனால் அச்சூலியன் தொழில்நுட்பத்தை தெரிந்த ஒருவர் தெரியாதவருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். பொறுமையான நீடித்த உழைப்பு தேவை. கற்களின் அமைப்பு பற்றிய அறிதலும் தேவை. அதாவது முந்தைய தொழில்நுட்பம் ஒரு தனிநபர்செயல்பாடு. அச்சூலியன் தொழில்நுட்பம் ஒரு சமூகத்துக்குச் சொந்தமாக இருந்த ஞானம். அவர்கள் அதை தலைமுறை தலைமுறையாக கைமாறியிருக்கிறார்கள்

ஓல்டாவான் தொழில்நுட்பம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டு தன்போக்கில் கையாளப்பட்ட ஒன்று. சிறியவேட்டைக்குழுக்கள் அதைச் செய்திருக்கிறார்கள். ஆனால் அச்சூலியன் தொழில்நுட்பத்தைக் கையாண்டவர்கள் இன்னும் பெரிய குழுக்கள். வேண்டுமென்றால் சமூகங்கள் என்று வைத்துக்கொள்ளலாம். அவர்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். ஆகவே கண்டிப்பாக அவர்களுக்கு ஒருவரோடொருவர் பேசிக்கொள்ள ஒரு குறைந்தபட்ச மொழி இருந்திருக்கவேண்டும். குழுவாக வாழ்வதற்கு அவசியமான பொதுவான விதிகள் இருந்திருக்கவேண்டும். தங்களை பிறரிடமிருந்து பிரித்துக்காட்ட அவசியமான சுய அடையாளமும் இருந்திருக்கவேண்டும்

ஆனால் அவர்கள் நம்மைப்போன்ற இன்றைய மனிதர்கள் அல்ல. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நம்மால் சொல்லிவிடமுடியாது. பொதுவாக அவர்களை ஹோமோ எரக்டஸ் என்று சொல்வது வழக்கம். ஹோமோ எரக்டஸ் என்றால் நிமிர்ந்து நிற்பவன் என்று பொருள். அதற்கு முந்தைய பரிணாமநிலையில் இருந்து இந்த மனிதனை வேறுபடுத்தும் முக்கியமான அம்சமே இவன் நம்மைப்போல முற்றிலும் கால்கள்மீது சமநிலை கொண்டு முதுகெலும்பின் பலத்தில் நிற்பவன் என்பதுதான். உலகமெங்கும் அச்சூலியன் கருவிகளை ஹோமோ எரக்டஸ் வகை மனிதர்களே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்தக் கற்கருவிகள் கிடைத்த இடங்களுக்கு செல்லும்போது ஒரு கேள்வி எழுகிறது. இவை இன்றைக்கும்கூட மழைகுறைந்த வரண்ட நிலம்தான். ஏரிப்பாசனம்தான் முக்கியமாக நடக்கிறது. அப்படியென்றால் அந்தக்காலத்தில் இன்னும் வரண்டுதான் இருந்திருக்கும். இந்த பழங்காலமனிதர்கள் ஏன் இந்த இடத்தில் அதிகமாக வாழ்ந்தார்கள்?

தமிழகத்த்ல் அதிகமாக மழைபெய்யக்கூடிய இடங்களில் அடர்ந்த மழைக்காடுகள் இருக்கும். அவற்றை வெட்டி உள்ளே செல்ல இவர்களிடம் உலோக ஆயுதங்கள் இல்லை. காடுகளில் உள்ள பெரிய வேட்டைமிருகங்களை க்ல்ல்லாயுதங்களைக் கொண்டு இவர்களால் எதிர்கொள்ளவும் முடியாது. ஆகவே புதர்க்காடுகளில் சிறிய மிருகங்களை வேட்டையாடிப்பிடித்துச் சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறார்கள்.

இவர்களின் வாழ்க்கைமுறை ஆற்றைச் சார்ந்ததாகவெ இருந்துள்ளது. நீராதாரத்துக்காவும் நீர்குடிக்கவரும் மிருகங்களை வேட்டையாடுவதற்காகவும். பெரும்பாலான ஆயுதங்கள் ஆற்றுபடுகைகளில் கிடைத்தவை. இந்த மக்கள் கருங்கல்லைக்கொண்டு கருவிகள் செய்யத்தெரியாதவர்கள். ஆகவே மக்கள் வீடுகளைக் கட்டிக்கொண்டிருக்க வாய்ப்பில்லை. விவசாயமும் செய்திருக்கமுடியாது. குகைகளில் சிறிய குடும்பங்களாக வாழ்ந்திருக்கலாம். ஆடைகள் அணிந்திருந்தார்களா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

செங்கல்பட்டு, வட ஆற்காடு, திருச்சி, தஞ்சை பகுதிகளில் இக்காலகட்டத்தைச்சேர்ந்த கல்லாயுதங்கள் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டன. ஃபூட் அவரது கண்டுபிடிப்புகளை முறையான ஆய்வுக்குறிப்புகளுடன் சேர்த்துவைத்தார். அவரது சேமிப்புகள் இன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன.

எளிதில் உடையக்கூடிய படிகப்பாறைகளைக்கொண்டு எந்தவிதமான தேர்ச்சியும் இல்லாமல் செய்யப்பட்டிருக்கும் இந்த கல்லாயுதங்களை இன்று அருக்காட்சியகத்துக்கு வரும் மக்கள் பெரிய ஆர்வமில்லாமல் பார்த்துச்செல்கிறார்கள். அவற்றில் அவர்களை திகைக்கவைக்கக்கூடிய எதுவும் இல்லை. அவற்றில் இருந்து அவற்றைச் செய்த மனிதர்களைப்பற்றி ஊகிப்பதற்கு கற்காலவரலாறு பற்றிய விரிவான அறிவுதேவை.

ஆனால் கொஞ்சம் கற்பனை இருந்தால் ஒன்றை சிந்திக்கலாம். இந்த எளிமையான கற்கருவிகளில் இருந்துதான் தமிழ்பண்பாட்டின் தனியடையாளமாக இன்றும் நாம் பெருமிதம் கொள்ளும் ஒரு கலை பிறந்தது, கருங்கல்சிற்பக்கலை, கருங்கல் கட்டிடக்கலை. ஓங்கி நிற்கும் தஞ்சை ராஜகோபுரமும், ராமேஸ்வரம் பிரகாரமும், கிருஷ்ணாபுரம் சிற்பங்களும் எல்லாம் அந்த பயிற்சியற்ற காட்டுமனிதனின் பயிற்சியற்ற கரங்களில் இருந்து உருவானவைதான்.

இடைக்கற்காலம் [Middle Paleolithic era ]

தொழில்நுட்பம் மேலும் தொழில்நுட்பத்தை கட்டாயமாக ஆக்குகிறது என்பது ஒரு பொதுவிதி. ஒருதொழில்நுட்பம் சிறப்பாக செயல்படும்போது அதைக்கையாள்பவர்களை அது மேலே கொண்டுசெல்கிறது. அத்துடன் அந்தத் தொழில்நுட்பம் அவர்களுக்கு போதாமாலாகிறது. அவர்கள் அடுத்த தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும். தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டால் செல்பேசி வந்தே ஆகவேண்டும் என்று இந்த விதியைச் சொல்லலாம்,

கற்காலத்தில் தொழில்நுட்பம் மிகமிக மெல்ல வளர்ந்ததற்கு காரணம் அன்றைய மக்கள்தொகை மிகக்குறைவு என்பதுதான். ஆகவே அன்றைய மக்கள் தங்களுக்குத்தெரிந்த முறைகளைக்கொண்டு வழக்கமான முறையில் வேட்டையாடி வழக்கமான முறையில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஆனால் படிகக்கல்லால் ஆயுதங்கள் செய்யக் கற்றுக்கொண்டதும் எல்லாரும் அதைச்செய்ய ஆரம்பித்திருபபர்கள். அதிகமாக உணவு கிடைக்க ஆரம்பித்ததும் அவர்களின் தொகை பெருகியிருக்கும். அதிக உணவு தேவைபப்ட்டிருக்கும். அதற்குத்தேவையான அளவு படிகக் கல்லுக்கு எங்கே போவது? ஆகவே அடுத்த தொழில்நுட்பம் வந்தது. அதை கருங்கல் ஆயுதங்கள் செய்யும் தொழில்நுட்பம் என்று சொல்லலாம்

மக்கள் கருங்கல்தொழில்நுட்பத்துக்குச் சென்றதைக் காட்டும் கற்கருவிகள் தமிழ்கத்தில் தருமபுரி குடியமலை திருமங்கலம் கல்லுப்பட்டி திருநெல்வேலி போன்ற ஊர்களில் ஏராளமாக கிடைத்துள்ளன. பெரிய கற்களைப் பயன்படுத்தி சிறிய கருங்கல் சில்லுகளை வேல்வடிவுக்கு திருத்தி அதைக்கொண்டு கோடரிகள், ஈட்டிகள், அம்புகள் ஆகியவற்றைச் செய்திருக்கிறார்கள். இந்த ஆயுதங்கள் படிகக்கல் ஆயுதங்களைவிட சிறியவையாகவும் எப்போதும் கையோடு கொண்டுசெல்ல ஏற்றவையாகவும் இருந்திருக்கின்றன. இவற்றை இவர்கள் லெவோலிஸ் முறைபபடிச் செய்திருக்கிறார்கள்

லெவோலிஸ் முறை [ Levallois technique ]

தமிழகத்தில் கிடைத்த இடைக்கற்காக கல்கருவிகள் லெவோலிஸ் முறைப்படி செதுக்கப்பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பாரீஸின் புறநகர்பகுதியான லெவோலிஸ் Levallois-Perret பகுதியில் கிடைத்த கற்ககளைக்கொண்டு இந்தமுறை ஊகித்தறியப்பட்டமையால் இந்தப்பெயர் சூட்டப்பட்டது. இதை செய்யும்முறை முந்தைய கற்காலக் கருவிகளை விட மிக நவீனமானது. அதாவது ஒரு துண்டுக்கல்லை எடுத்துக்கொண்டு செதுக்குவதற்குப்பதிலாக பெரிய கல்ல்வி தேவையான வேல் வடிவை செதுக்கிய்பின் அதன் மையப்பகுதி மட்டும் உடைத்து எடுக்கப்படுகிறது. மிகக்கூர்மையான கனமில்லாத கற்கருவிகளைச் செய்ய மிக எளிய வழி இது. இன்றும்கூட காட்டுக்குள் தவறிச்செல்பவர்கள் தேவையென்றால் ஓர் ஆயுதத்தைச் செய்துகொள்ள லவோலிஸ் முறையே கற்பிக்கப்படுகிறது

இந்த ஆயுதங்களைப்பார்க்கையில் இந்த மக்கள் இன்னும் பெரிய அளவில் வளர்ச்சியடைந்திருப்பதைக் காணலாம். இந்த ஆயுதங்களைச் செய்ய பயிற்சி தேவை. அந்தப்பயிற்சியை மூத்தவர்களிடமிருந்து இளையவர்கள் கற்றிருக்கவேண்டும். ஆகவே இவர்கள் பெரிய சமூகங்களாகவே வாழ்ந்திருக்கவேண்டும். சமூகத்தை உருவாக்குவது ஒருவருக்கொருவர் கொள்ளும் தொடர்பு. அதற்கு தேவை மொழிதான். மொழி கலாச்சாரத்தை உருவாக்குகிறது ஆகவெ மொழியும் சில கலாச்சார அம்சங்களும் இக்காலகட்டத்தில் உருவாகிவிட்டிருந்தன என ஊகிக்கலாம்

முக்கியமாக இவர்களின் வாழ்விடம் மாறியிருக்கிறது. இன்னும் கொஞ்சுரசம் அடர்ந்த காடுகளுக்கு அருகே வந்திருக்கிறார்கள். வேட்டையாடுதலுடன் மீன்பிடித்தலையும் செய்திருக்கிறார்கள். மிக அதிகமான அளவில் கோடரிகள் இருப்பதைப்பார்க்கையில் இவர்கள் மரக்கிளைகளை வெட்டி குடிசைகள் அமைக்க ஆரம்பித்திருக்கலாம் என்று ஊகிக்கமுடிகிறது. கற்களை அடுக்கிச் சுவர்களை கட்டக்கூட ஆரம்பித்திருக்கலாம். இக்காலகட்டத்தில் கற்களை உரசி தீயை உண்டுபண்ண இவர்கள் கற்றிருந்தார்கள் என்று ஊகிக்கமுடிகிறது. உணவை சமைத்து உண்ண ஆரம்பித்திருக்கலாம்.

உடற்கூறின்படி இக்காலகட்டத்து மக்கள் நம்மைப்போன்றவர்கள் , அதாவது ஹோமோ சேப்பியன்கள். நம்மிடம் உள்ள பலவகையான பழக்கங்கள் இவர்களிடம் இருந்திருக்கின்றன. இக்காலகட்டத்தைச்சேர்ந்தவை என்று சொல்லத்தக்க புதைகுழிகள் பல அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை முறைப்படி புதைக்கப்பட்டிருக்கின்றன என்பதிலிருந்து இவர்கள் ஈமச்சடங்குகளைச் செய்ய ஆரம்பித்திருப்பது தெரிகிறது. அப்படியென்றால் மரணத்தைப்பற்றி சிந்தனைசெய்திருக்கிறார்கள். மரணத்துக்குப்பிறகான வாழ்க்கையைப்பற்றி சில எண்ணங்கள் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் ஏதோ ஒருவகையில் தங்களுக்கு அதீதமான ஆற்றல்களை வழிபட ஆரம்பித்திருந்தனர் என்று ஊகிக்கலாம். இவர்களின் கற்கருவிகள் குவிந்துகிடக்கும் இடங்களை வைத்துபபர்த்தால் இவர்கள் அங்கே ஏதேனும் வழிபாட்டுச்சடங்குகளை செய்திருக்கலாமென ஊகிக்கமுடிகிறது. ஆமாம், மதம் உருவாகிவிட்டது. இன்றைக்கும் நாம் நம் வாழ்க்கையில் கடைசிப்பிடிக்கும் சில சடங்குகள் இக்காலகட்டத்திலேயே உருவாகியிருக்கலாம்,

இக்காலகட்டத்தில் மனிதர்கள் நன்றாகவே பேச ஆரம்பித்திருக்கவேண்டும். ஏனென்றால் இந்த மக்கள் பெரிய கூட்டங்களாக வாழ்ந்திருக்கிறார்கள். வேட்டை, மீன்பிடித்தல் போன்ற தொழில்களைப்பற்றிய தகவல்களை அவர்கள் பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். அபப்டியென்றால் மொழி உருவாகிவிட்டிருக்கக்கூடும். அதிகபட்சம் ஆயிரம் வார்தைகள் கொண்ட குறுமொழிகளாக அவை இருக்கலாம். அந்த குறுமொழிகள் சிறு சிறு வேட்டைக்குலங்களுக்குள் மட்டும் புழங்கிவந்திருக்கலாம்.

ஆமாம், தமிழ் பிறந்துவிட்டது. ஒரு பெரிய நதி சின்னஞ்சிறு ஊற்றாக ஆரம்பிப்பதுபோல. தமிழில் நாம் இன்றும் பயன்படுத்தும் ஒருசில சொற்களின் தொடக்ககால உச்சரிப்புகள் அந்தமக்களின் நாக்கில் அன்று புழங்கியிருக்கக் கூடும். என்னென்ன சொற்கள்? ஊகிக்கவே முடியாது. கற்பனையை தட்டிவிட்டு ஊகிக்கமுடிந்தால் ஒருவேளை கல் என்ற சொல் அன்றே உருவாகியிருக்கலாம் என்று சொல்லமுடியும். கற்களை அடையாளம் வைத்து அவர்கள் தொடர்பு கொண்டிருக்கலாம். பின்னாளில் எப்போதோ அச்சொல்லில் இருந்து கல்வி, கலை போன்ற சொற்களெல்லாம் பிறந்து வரப்போகின்றன. மேலும் பல்லாயிரம் வருடம் கழித்து.

புதியகற்காலம் [ Upper Paleolithic era]

விமானம் முதல் மின்னஞ்சல் வரையிலான நம்முடைய எந்த நவீனத்தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டாலும் அதை விரிவாக்கி எடுத்ததற்கு போர் சார்ந்த தேவைகள்தான் முதற்காரணம் என்று சொல்லப்படுவண்டு. மனிதகுலத்தின் தொடக்கம் முதலே அப்படித்தான். கல்லாயுதங்களின் வளர்ச்சியில் வேட்டைக்குலங்கள் நடுவே உணவுக்காக நிகழ்ந்த போர்கள் பெரும் பங்கு வகித்திருக்கலாம் என்று ஆய்வாளர்காள் கருதுகிறார்கள்.

தொழில்நுட்பம் பெருக உணவு அதிகரிக்கிறது.உணவு அதிகரிக்கையில் மக்கள்தொகை அதிகரிக்கிறது. மக்கள்தொகை அதிகரிக்கையில் மேலும் உணவுக்காக அவர்கள் புதிய இடங்களுக்கு செல்கிறார்கள். உணவுக்கான போர்கள் ஆரம்பிக்கின்றன. போர் புதிய தொழில்நுட்பங்களை கட்டாயமாக ஆக்குகிறது. புதிய தொழில்நுட்பம் ஒன்றை கண்டுகொண்ட சமூகம் மற்றசமூகம் மீது மேலாதிக்கம் பெறுகிறது.

இன்னும் ஒரு விஷயம் உண்டு. மக்கள் இடம்பெயர்வதும் போர்புரிவதும் சமூகங்களை ஒன்றுடன் ஒன்று கலக்கச் செய்கின்றன. விளைவாக தொழில்நுட்பம் மிகவேகமாக பரவுகிறது. ஒருவருக்குத்தெரிந்த ஆயுதங்களும் உணவுப்பொருட்களும் மிக விரைவிலேயே அனைவருக்கும் தெரிய ஆரம்பிக்கின்றன. கற்கால வரலாற்றிலேயே மிக குறிப்பாக கவனிக்கவேண்டிய ஒன்று இதுதான். பழைய கற்காலம் மிக நீளமானது. நடுக்கற்காலம் இன்னும் குறுகியது புதிய கற்காலம் அதைவிடச்சிறியது

இந்தப்போக்கு மேலும்மேலும் வேகமாகிறது. தாமிரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் இரும்பு கண்டுபிடிக்கப்பட அதிக காலம் ஆகவில்லை. இரும்பு கண்டுபிடிக்கப்பட்டபின் சில ஆயிரம் வருடங்களிலேயே மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது. மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட சில நூறு வருடங்களுக்குள் மனிதன் விண்வெளியில் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டான்!

காரணம் மொழிதான். ப்ழையகற்கால மனிதனின் அறிதல்கள் அவனுடைய குழுவுக்குள் மட்டும் இருந்தன. நடுக்கற்காலத்தில் அதன்பின் அவை சமூக அறிவாக மாறின. புதியகற்காலத்தில் அவை புறவயமாக மொழியில் சேமிக்கப்பட்டன. அவற்றை மொழிவழியாகவே கற்றுக்கொள்ளமுடியும் என்ற நிலை வந்தது. ஒரு சொல்லே ஒரு அறிதல்தான். கல் என்ற சொல் உருவாகிவிட்டாலே எங்கும் எவருக்கும் பகிரக்கூடிய ஒரு ஞானம் உருவாக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம். கருங்கல், சிறியகல், மென்மையான கல் என்றெல்லாம் அந்த ஞானத்தை வளத்துக்கொண்டே செல்லமுடியும்.

அந்த ஞானத்தை எழுதிவைக்க ஆரம்பித்தது அடுத்த பெரும் பாய்ச்சல். அந்த எழுத்துவடிவத்தை பிறமொழிகளுக்கு மொழியாக்கம் செய்ய ஆரம்பித்தது அதர்கடுத்த பாய்ச்சல். இவ்வாறு இன்று மானுட ஞானம் ஒட்டுமொத்தமாக ஒரே கட்டுமானமாக ஆகிவிட்டிருக்கிறது. ஆகவேதான் மானுட நாகரீகமும் தொழில்நுட்பமும் அதிவேகமாக பாய்கின்றன

அந்தப்பாய்ச்சல் நிகழ்ந்த காலகட்டம் என்று புதியகற்காலத்தைச் சொல்லமுடியும். தங்கள் அறிந்ததை மொழியில் பதிவுசெய்த இந்த புதியகற்கால மக்கள் பிற சமூகங்களின் அறிதல்களை கற்றுக்கொள்ளவும் தொடங்கினர். அறிதல்கள் அதிவேகமாக வளர்ந்தன. இன்று உலகம் முழுக்க உள்ள மானுடப்பண்பாட்டின் பெரும்பாலான அடிப்படைவிஷயங்கள் புதியகற்காலத்தில் உருவாகிவந்தவை என்று சொல்லலாம். அந்த அறிதல்களை வாழ்வா சாவா என்ற போட்டி மூலம் வளர்த்ததும் பரப்பியதும் இந்த சமூகங்கள் நடுவே நிகழ்ந்த தொடர்ச்சியான போர்கள்தான்.

புதியகற்காலத்தின் கருவிகள் பழைய கருவிகளுடன் ஒப்பிடுகையில் மிக மேம்பட்டவை. மிகச்சிறிய கற்சில்லுகளால் ஆன கருவிகளை நாம் இங்கே காண்கிறோம். இவை ஈட்டிபோல மர இங்கேம் அல்லது எலும்புக்குச்சிகளில் கட்டி பயன்படுத்தத் தக்கவை. சுத்தியல்கள் கோடரிகள் . இந்த ஆயுதங்களின் தனிச்சிறப்பு இவை பெரும்பாலும் போருக்கும் உதவக்கூடியவை என்பதே

அதாவது ஆயுதமில்லாத விலங்குகளிடம் போராடுவதற்கு மட்டுமல்லாமல் தன்னைப்போலவே ஆயுதங்கள் ஏந்திய தன்னைப்போலவே புத்திசாலியான மனிதர்களுடன் போரிடுவதற்கும் இந்தக்கருவிகள் பயன்பட்டிருக்கின்றன. சொல்லப்போனால் கருவி என்ற இடத்தில் இருந்து ஆயுதம் என்ற இடத்தை நோக்கி இந்த கல்பொருட்கள் வளர்ந்துவிட்டன.

புதிய கற்காலகட்டத்தில் கற்கருவிகள் மிக உறுதியான diorite,basalt போன்ற கற்களால் செய்யப்பட்டிருந்தன. கற்கருவித்தொழில்நுட்பம் அதன் உச்சத்தை அடைந்துவிட்டது. இந்தக்கருவிகளைக்கொண்டு எலும்புகளை கூர்மையாகச் செதுக்கி அம்புகளைச் செய்திருப்பதையும் இந்தக் கற்கருவிகளின் அருகே கிடைக்கும் எலும்புக்கருவிகளைக்கொண்டு அறியமுடிகிறது.

வில்

இந்த கல்லால் ஆனஅம்புநுனிகள் மிகப்பெரிய மாற்றத்தைச் சுட்டுகின்றன.மனிதனின் பரிணாம வரலாற்றில் வில்-அம்பு கண்டுபிடிக்கப்பட்டது என்பது மிகப்பெரிய பாய்ச்சல். சக்கரம், தீ , துப்பாக்கி , மின்சாரம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டதற்கு நிகரானது அது.

யோசித்துப்பாருங்கள், திடீரென்று மனிதனின் கை நீளக்கூடிய தூரம் பலமடங்கு அதிகரித்துவிட்டது. மனிதனின் தோளுக்கு இருக்கக்கூடிய வலிமையைவிட அதிக வலிமையை அவன் தன் கையிலேயே கொண்டு செல்லமுடியும்அவனால் எங்கே வேண்டுமென்றாலும் பாதுகாப்பாக நின்றுகொண்டு தன்னைவிட பலமடங்கு பெரிய மிருகங்களை வேட்டையாடமுடியும். தன்னைவிட வேகமான மிருகங்களையும் பறவைகளையும் பிடிக்கமுடியும்.

வில்லும் அம்பும் அதன்பின் பல ஆயிரம் ஆண்டுகள் மனிதனின் போர்க்கருவிகளாக இருந்துள்ளன. மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் உள்ள முக்கியமான ஆயுதமே வில்தான். கடவுள்கள் மனிதனுக்கு அளிக்கும் மிகப்பெரிய வரமே ஒரு புதியவகை அம்பாகத்தான் இருந்திருக்கிறது. இன்றும்கூட பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம் போன்ற வார்த்தைகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். நம்முடைய தெய்வங்கள் கைகளில் வில்லம்பு இருக்கிறது

இன்றைக்கு ஏறத்தாழ ஒருலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் உண்மையிலேயே இயற்கை மனிதனுக்கு வழங்கிய பிரம்மாஸ்திரத்தை இந்த கல்லாயுதங்களில் பார்க்கிறோம். அந்த வரத்தினால் அவனுடைய செல்வம் உணவு பெருகியது. அவனுடைய குலம் பெருகியது. முக்கியமாக அவன் காடுகளுக்குள் ஊடுருவிச்செல்லமுடிந்தது.

ஏர்!

புதிய கற்காலக் கருவிகளில் சிலவற்றை கையால் நிலத்தை கொத்துவதற்குரியவை என்று அடையாளம் காண்கிறார்கள். அதாவது மனிதர்கள் மண்ணை கிளறி விவசாயம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். மனிதவரலாற்றின் இன்னொரு யுகத்தின் பிறப்பை இது காட்டுகிறது. இயற்கைச்சக்திகளிடமிருந்து உணவை பெற்றுக்கொண்டிருந்த மனிதன் உணவை உருவாக்க ஆரம்பிக்கிறான். அத்துடன் இயற்கையை மாற்றியமைக்கும் சக்திகளில் ஒன்றாக அவன் மாறினான்.

மனித வரலாற்றைக்கொண்டு பார்த்தால் மிகச்சமீபத்தில் நிகழ்ந்த ஒரு மாற்றம் இது. ஆனால் இயற்கையில் மனிதனின் இடத்தை இது எப்போதைக்குமாக மாற்றிவிட்டது. இயற்கைக்கு எதிரான சக்தியாக மனிதன் உருவானான். இயற்கையுடன் போராடித்தான் அவன் வாழமுடியும் என்ற நிலை வந்தது. இயற்கையை அவன் நிரந்தரமாக மாற்றியமைக்க ஆரம்பித்தான்.

அந்தப்பயணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்கிறது. பூமியின் மீதுள்ள நிலத்தில் கணிசமான பகுதி விளைநிலங்களாகவும் வாழ்விடங்களாகவும் மாற்றப்பட்டுவிட்டது. பூமிக்குள் உள்ள கனிவளங்களில் பெரும்பகுதி சுரண்டப்பட்டுவிட்டது. பூமியின் தாவரங்களில் கணிசமானவை மாற்றம் பெற்றன. மிருகங்களில் பல பழகியவையாக மாறின. எஞ்சியவை அழிந்துகொண்டிருக்கின்றன.

விவசாயம் உருவான அந்தப்புள்ளியில் இருந்து இயற்கையை மனிதன் பாதுகாக்கவேண்டும் என்று சூழலியல்வாதிகள் பேச ஆரம்பித்த இந்தக்காலகட்டம் வரை வந்தால் நாம் ஒரு வட்டத்தைச் சுற்றிமுடித்துவிட்டோம். தன் வாழ்க்கைக்காக இயற்கையுடன் அன்று மனிதன் போராடினான், இன்று தன் இருப்புக்காக மனிதனிடம் இயற்கை போராடிக்கொண்டிருக்கிறது

ஊசி

இந்தக்காலகட்டத்தில் நாம் கண்டுகொள்ளவேண்டிய முக்கியமான பொருள் ஊசி. எலும்பால் செய்யப்பட்ட சற்றே கனமான அந்தப்பொருளை ஊசி என்று ஊகிப்பது கொஞ்சம் கடினம். ஆனால் அது மிக முக்கியமான ஒரு செய்தியைச் சொல்கிறது. அக்காலத்து மக்கள் ஆடைகளை உருவாக்கி அணிந்திருக்கிறார்கள். தோல்,மரப்பட்டையின் நார்கள், இயற்கைநார்களக்கொண்டு பின்னப்பட்ட துணிகள் ஆகியவற்றை அணிந்திருக்கலாம் என்ற ஊகத்தை உருவாக்குகின்றன இவை.

வில்,ஏர்.ஊசி ஆகிய மூன்றும் புதியகற்கால மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமான மூன்று முகங்களை நமக்குக் காட்டுகின்றன. வில் போர்க்கருவி, ஏர் உற்பத்திக்கருவி, ஊசி அழகியல்கருவி. மானுடநாகரீகத்தின் மூன்று தளங்களும் சரியாகவே உருவாகிவிட்டிருக்கின்றன!

தமிழகத்தின் கற்கால புதைகாடுகள் கீழ்க்கண்ட இடங்களில் உள்ளன.

கருங்கல்பட்டறை அம்மச்சத்திரம் புதுக்கோட்டை
மேலூர் புதுக்கோட்டை
அன்னவாசல் புதுக்கோட்டை
புட்டம்பூர் புதுக்கோட்டை
சத்யமங்கலம் புதுக்கோட்டை
தெக்கத்தூர் புதுக்கோட்டை
வடுகப்பட்டி புதுக்கோட்டை
விலாப்பட்டி புதுக்கோட்டை
வத்தனக்குறிச்சி புதுக்கோட்டை
அமிர்தமங்கலம் திருவள்ளூர்
புழல் திருவள்ளூர்
மோட்டூர் திருவண்ணாமலை
கருங்குளம் தூத்துக்குடி மாவட்டம்
கல்வோய் தூத்துக்குடி மாவட்டம்

http://www.antiquity.ac.uk/projgall/pappu297/
http://archaeologynewsnetwork.blogspot.in/2010/09/largest-stone-age-settlement-found-near.html#.U9JffOOSxe5

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 63
அடுத்த கட்டுரைஈராறுகால் கொண்டெழும்புரவி – களம் சிறுகதை