வரலாற்றுக்கு முந்தைய வரலாற்றின் நுழைவாயில்

தமிழ்ச்சமூகம் தன் வரலாற்றை இன்று சங்ககாலமாக கருதப்படும் காலகட்டத்தில் எழுத ஆரம்பித்தது. அதாவது புறநாநூறு, ஐங்குறுநூறு, நற்றிணை, குறுந்தொகை போன்ற பழமையான சங்கநூல்களில் உள்ள கவிதைகள் தனிப்பாடல்களாக எழுதப்பட்ட காலத்தில். பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டின்படி இது கிமு முதல்நூற்றாண்டு முதல் கிபி இரண்டாம்நூற்றாண்டுவரையிலான காலகட்டம். அப்போது நாம் காண்பது தமிழ்ச்சமூகம் ஏறத்தாழ முழுமையாகவே உருவாகிவிட்டிருப்பதை.

அப்படி என்றால் அதற்கு முன்னர் மிக நீண்ட ஒரு வளர்ச்சிக் காலகட்டம் தமிழ்ச்சமூகத்துக்கு உண்டு. இந்த நிலப்பகுதியில் வாழ்ந்த தொன்மையான பழங்குடிமக்கள் வேட்டையாடி உணவுதேடி வாழ்ந்த காலகட்டம், அவர்கள் சிறிய சிறிய இனக்குழுக்களாக மாறிய காலகட்டம், அந்த இனக்குழுக்கள் ஒன்றாகத்திரண்டு பெரிய கிராமசமூகங்களாக மாறி விவசாயம் செய்ய ஆரம்பித்த காலகட்டம், கிராமசமூகங்கள் சிறிய அரசாங்கங்களாக மாறியகாலகட்டம் என பல படிகள் அந்த வளர்ச்சிக்கு உண்டு.

அந்தச்சிற்றரசுகளில் சேரர் , பாண்டியர், சோழர்என்ற மூன்று பேரரசர்கள் உருவாகி அவர்கள் பிறரை வென்று பேரரசுகளை உருவாக்க ஆரம்பித்த காலம்தான் சங்ககாலம். அதாவது தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றை ஒரு ஆயிரம் பக்க புத்ததமாக கொண்டோமென்றால் அந்தப்புத்தகத்தின் கடைசிப்பக்கத்தின் கடைசிப்பத்தியில்தான் சங்ககாலமே வரும். அங்கிருந்து சில வரிகளுக்குள் நாம் நம்முடைய சமகாலத்துக்கு வந்துவிடுவோம்.

இந்த கடைசிப்பத்தியை மட்டும்தான் இன்று நாம் தமிழக வரலாறாக விரித்து விரித்து எழுதமுடியும். ஏனென்றால் இந்த காலகட்டத்திற்குப்பிறகுதான் தமிழ்ச்சமூகம் தன்னுடைய வரலாற்றை நூல்களாகவும் கல்வெட்டுகளாகவும் எழுதிவைக்க ஆரம்பித்தது. அதற்கு முன்னால் உள்ள ஏறத்தாழ இரண்டு லட்சம் வருடங்களை வரலாற்றுக்கு முந்தைய காலம் என்கிறோம். அதைப்பற்றி ஒருசில ஊகங்களை மட்டுமே நாம் செய்யமுடியும்.

ஆனால் இந்த ஊகம் ஏன் முக்கியம் என்றால் இன்றுவரை நாம் நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் நூற்றுக்கணக்கான ஆசாரங்களும் நம்பிக்கைகளும் இந்த வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில்தான் உருவாகி வந்தன என்தனால்தான். நாம் நம்பும் மதம், நாம் கொண்டுள்ள குடும்ப உறவுகள், நாம் கடைப்பிடிக்கும் நீதிநியாயங்கள் எல்லாமே இந்த நீண்டநெடுங்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வந்தவை.

உதாரணமாக நாம் ஏன் மதிப்புக்குரிய ஒருவரைக் கண்டதும் கைகூப்பி வணங்குகிறோம், ஏன் மூத்தவர்கள் வந்தால் எழுந்து நிற்கிறோம், ஏன் செத்துப்போனவர்களின் வாயில் அரிசியைப்போடுகிறோம்? இவற்றுக்கெல்லாம் பதிலை நாம் நம்முடைய பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் தேடமுடியாது. அவை அதற்கும் பற்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவாகிவந்தவை.

ஆகவேதான் வரலாற்றை கூடுமானவரை பின்னால் கொண்டுசென்று வரலாற்றுக்கு முந்தையகாலத்தில் இருந்தே ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்த்தை நாம் இரண்டுவகையில் ஊகிக்கிறோம். அகழ்வாய்வில் கிடைத்த அக்காலத்தைச்சேர்ந்த பொருட்களைக்கொண்டு அக்கால வாழ்க்கையை ஊகிக்கலாம். இன்னொன்று, நாம் வரலாற்றில் பதிவான வாழ்க்கையை வைத்துக்கொண்டு அதற்கு முந்தைய வாழ்க்கையை ஊகிக்கலாம்.

அவ்வாறு நாம் ஊகிக்கும் வரலாற்றுக்கு முந்தைய தமிழ் வரலாறு பொதுவாக நான்கு காலகட்டங்களாக பிரிக்கப்படுகிறது. அந்த காலகட்டத்தைப்பற்றி நாம் எந்தெந்த விஷயங்கள் வழியாக அறிகிறோமோ அந்த விஷயங்களைக்கொண்டு நாம் இந்த காலகட்டப்பிரிவினையை நிகழ்த்துகிறோம். அவை பழங்கற்காலம், இடைக்கற்காலம், புதியகற்காலம், பெருங்கற்காலம் என்று சொல்லப்படுகின்றனா

Robert_Bruce_Foote

ராபர்ட் புரூஸ் ஃபூட்

ஏற்காட்டில் உள்ள ஹோலி டிரினிட்டி சர்ச்சில் ஒரு கருங்கல் கல்லறை உள்ளது. தொல்லியலாளர்களான சாந்தி பாப்pபு ,குமார் அகிலேஷ், வி.ஆர்.பாப்பு ஆகியோர் இந்தக் கல்லறையை மிகச்சமீபகாலமாகத்தான் அடையாளம் கண்டார்கள். Sharma Centre for Heritage Education, Chennai அமைப்பின் நிறுவனர் சாந்தி

அந்தக்கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மனிதர் உண்மையில் கல்கத்தாவில்தான் இறந்துபோனார். அவரது குடும்ப உறுப்பினர்களுடன் அவர் இருக்கவேண்டுமென்பதற்காக அவரது உடலின் சாம்பல் இங்கே கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

அந்த மனிதரின் பெயர் ராபர்ட் புரூஸ் பூட் . தமிழக வரலாற்றெழுத்தை அவரிடமிருந்து தொடங்குவது பொருத்தமானதாக இருக்கும். ராபர்ட் புரூஸ் ஃபூட்டின் அப்பா வில்லியம் ஹென்றி ஃபூட் அம்மா சோபியா வெல்ஸ். இங்கிலாந்தில் உள்ள முக்கியமான பிரபுவம்சத்தைச் சேர்ந்தவர் ஃபூட். இங்கிலாந்தில் குளோஸ்டர்ஷயர் [Gloucestershire]பகுதியில் செல்டன்ஹாம் [Cheltenham] என்ற ஊரில் 1834 செப்டெம்பர் 2 ஆம் தேதி பிறந்தவர். செல்ட்டன்ஹாம் அப்போதே உல்லாசக்குளியலுக்கு புகழ்பெற்றிருந்தது.

ராபர்ட் புருஸ் ஃபூட்டின் கல்லறை
ராபர்ட் புருஸ் ஃபூட்டின் கல்லறை

1857ல் இந்தியாவில் சிப்பாய்கலகம் வெடித்தது. ஏராளமான பிரிட்டிஷ் அலுவலர்கள் குடும்பத்துடன் கொல்லப்பட்ட அந்நிகழ்வு இங்கிலாந்தில் அதிர்ச்சியலைகளைக் கிளப்பியது. 1858 நவம்பரில் பிரிடிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து ஆட்சியை பிரிட்டிஷ் அரசு ஏற்றுக்கொண்டது. இந்தியா ராணிவிக்டோரியாவின் ஆட்சிப்பகுதியாக ஆகியது. ஆனாலும் மத்திய இந்தியா முழுக்க அமைதியின்மை நிலவியது. பிரிட்டிஷ் அரசு விரிவான ராணுவநடவடிக்கைகள் மூலம் கிளர்ச்சியை ஒடுக்கிக் கொண்டிருந்தது.

உயர்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் பணியாற்றத்தயங்கிய அந்தக் காலகட்டத்தில், விக்டோரியா ராணி இந்தியாவை தன்னுடைய நிலமாக அறிவிப்பதற்கு இரண்டுமாதங்களுக்கு முன்னால் செப்டெம்பர் 28 ஆம்தேதி ஃபூட் இந்தியாவில் இளம் நிலவியளாளராக வந்துசேர்ந்தார்.

1857ல் எச். ஜியோககான் [ H. Geoghegan ] தலைமையில் சி.இ.ஓல்ட்ஹாம் [C.Æ. Oldham[ டபிள்யூ கிங் [ W. King] எச்.எஃப்.ப்ளன்ஃஃபோர் [ H.F. Blanford ] அகிய மூவரும் சென்னை ராஜதானியின் கீழெ வந்த நிலப்பகுதிகளில் உள்ள பாறைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுடன் ஃபூட் சேர்ந்துகொண்டார். திருச்சிராப்பள்ளி பகுதியில் பாறை ஆய்வில் ஈடுபட்டிருந்த ஜியோககான் சூரியத்தாக்குதல் தாளாமல் இற்ந்தார். அவரது இடத்துக்கு பூட் நியமிக்கப்பட்டார்.

பூட் நிலவியல் ஆராய்ச்சியைவிட வெயில் விரிந்த இந்திய நிலப்பகுதியின் அழகை ரசிப்பதிலேயே அதிகம் ஈடுபட்டிருந்தார் என்று தெரிகிறது. கன்யாகுமரி அம்மன் கோயிலை அவர் பேனாக்கோடுகளால் ஓவியமாக வரைந்திருக்கிறார் . [View of Cape Comorin, the Kumla Kumari Pagoda, and islands-from a point 1¼ miles N.E of the Cape’, which is dated 18.9.1860 Pen and ink and wash ] அந்த ஓவியம் இன்று அவரது சேமிப்புகளில் இருந்து கிடைக்கிறது

பூட் இந்தியப்பண்பாட்டுக்கு நெருக்கமானவராக ஆவதற்கு ஒரு முக்கியமான தூண்டுகோல் பீட்டர் பெர்சிவல். பிரிட்டிஷ் மதப்பணியாளரான பிட்டர் பெர்சிவலுக்கு தமிழக வரலாற்றில் முக்கியமான பங்குண்டு. இலங்கையில் மதப்பணியாற்றிய பீட்டர் பெர்சிவல் அங்கே சைவத்தமிழறிஞர் ஆறுமுகநாவலர் உதவியுடன் பைபிளுக்கு முழுமையான மொழியாக்கத்தைச் செய்து முடித்தார். இன்றும் கிறித்தவர்கள் பயன்படுத்திவரும் மொழியாக்கம் அதுதான். ஆங்கிலம் தெலுங்கு அகராதியை தயாரித்தவரும் பெர்சிவல்தான்.

பீட்டர் பெர்சிவல்
பீட்டர் பெர்சிவல்

மொழியியலாளரான பீட்டர் பெர்சிவல் சென்னை ராஜதானிக் கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றினார். பீட்டர் பெர்சிவலின் மகள் எலிசபெத் ஆன் பெர்சிவலை 1862ல் புரூஸ் பூட் திருமணம் செய்துகொண்டார். ஏற்காட்டில் ஃபூட்டின் கல்லறைக்கு அருகே பீட்டர் பெர்சிவலின் கல்லறையும் உள்ளது.

ராபர்ட் புரூஸ் பூட் இந்திய வரலாற்றுமுந்தையகால ஆராய்ச்சியின் தந்தை என்று சொல்லப்படுகிறார். அவர் தன் நிலவியல் ஆராய்ச்சிகள் பற்றி எழுதிய நினைவுக்குறிப்புகள் [ Geological Features of the South Mahratta Country and Adjacent Districts 1876] ] மிக முக்கியமான ஒரு நூலாக இன்றைக்கும் வாசிக்கப்படுகிறது

INDIA_LINK

ஆதிரம்பாக்கம்

1863 ஏப்ரல் 22 ஆம் தேதி ஃபூட்டுக்கு முதல் மகன் பிறந்தார். அது அவருக்கு அதிருஷ்டம் நிறைந்த வருடம். அவர் உல்லாசமான மனநிலையில் இருந்த காலகட்டம் அது என அவரது நினைவுக்குறிப்புகள் காட்டுகின்றன அந்தக்காலம் முழுக்க அவர் சென்னையைச்சுற்றி நிலவியல் ஆய்வுகள் செய்துகொண்டிருந்தார் . மே 30 ஆம் தேதி ராபர்ட் புரூஸ்பூட் சென்னை பல்லாவரம் அருகே நிலவியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது தமிழ்வரலாற்றை ஆரம்பிக்கவேண்டிய முதல் புள்ளியைக் கண்டுபிடித்தார். அது வழவழப்பான படிகக்கல்லால் ஆன ஒரு கைக்கோடாரி.

கூம்புவடிவமான அந்தக்கல் ஒரு பழமையான கல்கோடாரி என்று ஃபூட் கண்டுபிடித்ததற்கு அவர் ஒரு நிலவியலாளராக இருந்ததும் ஏற்கனவே அவர் கல்லாயுதங்களைப்பற்றி அறிந்திருந்ததும்தான் காரணம். அதன்பின் ஃபூட்டும் அவரது தோழர் கிங்கும் இணைந்து வடதமிழகத்தில் பாலாறுபடுகை முழுக்க பழங்கால கல்லாயுதங்களுக்காக தேட ஆரம்பித்தனர். அந்தப்பயணம் அவர்களை ஆதிரம்பாக்கம் என்ற கிராமத்துக்குக் கொண்டுவந்து சேர்த்தது

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொத்தாளயாறு படுகையில் உள்ளது ஆதிரம்பாக்கம். தமிழக வரலாற்றை ஒரு பெரிய மாளிகை என்று சொன்னால் அதற்குள் நுழைவதற்கான வாசலே இந்த சின்ன கிராமம்தான் என்று சொன்னால் மிகையல்ல.

ஆதிரம்பாக்கத்தில் ஃபூட்டும் கிங்கும் பலவகையான கல்லாயுதங்களைக் கண்டுபிடித்தனர். அதன்பின்னர் இந்த நூறாண்டுக்காலத்தில் தொடர்ச்சியாக ஆதிரம்பாக்கம் தமிழக கற்காலத்தைப்பற்றிய ஆராய்ச்சிக்கான களமாக இருந்துள்ளது. 1938 முதல் ஆய்வாளர் கிருஷ்ணசுவாமி இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்திருக்கிறார்.1999 முதல் சாந்தி பாப்பு தலைமையில் மேலும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன

ஆதிரம்பாக்கம் ஆய்வாளர்களுக்கு ஒரு பெரிய புத்தகம்போன்றது. இந்த புத்தகத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. பழையகற்காலம் நடுக் கற்காலம் புதியகற்காலம் என்று மூன்றுகாலகட்டங்களைச் சேர்ந்த கல்லாயுதங்களும் எலும்புகளும் இங்கே கிடைத்துள்ளன. இந்தியாவின் கற்கால மனிதர்களைப்பற்றிய ஆராய்ச்சியில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்த இடம் இது

http://www.archeolog-home.com/pages/content/attirampakkam-inde-million-year-old-tools-found-india-s-prehistory-pushed-back.html

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=29748

முந்தைய கட்டுரைஇமயச்சாரல் – 1
அடுத்த கட்டுரைஇமயச்சாரல் – 2