கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள்

jessu

 

தமிழின் தனித்தன்மை கொண்ட ஓர் இலக்கியவடிவம் என்று கிறித்தவ தோத்திரப்பாடல்களை சொல்லமுடியும். குமரிமாவட்டத்தில் பிறந்து வளார்ந்த நான் தொடர்ந்து நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அவற்றைக் கேட்டுவருகிறேன். என் மனம் கவர்ந்த கிறித்தவ தோத்திரப்பாடல்களின் பெரிய பட்டியலே உண்டு. ஆனால் இந்தப்பாடல்களின் முறையான வரலாறோ இதன் ஆசிரியர்களின் பெயர்களோ நானறியாதவை. சமீபத்தில் வாசிக்கநேர்ந்த ஒரு நூல் அதன் காரணமகாவே மிகுந்த மனக்கிளர்ச்சியை உருவாக்குவதாக அமைந்தது

வீரமாமுனிவர்
வீரமாமுனிவர்

பேராசிரியர் யோ.ஞானசந்திர ஜான்சன் [தமிழ்த்துறை, கிறித்தவக்கல்லூரி தாம்பரம்] பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களின் மாணவர். அவர் எழுதிய ஆய்வுநூலான கிறிஸ்தவக் கீர்த்தனைக் கவிஞர்கள் அரியதோர் தகவல்களஞ்சியம். இதைச் சாதாரணமாகப் புரட்டிப்பார்த்தபோதே ஒரு வியப்பை அடைந்தேன். எழுபது கிறித்தவ கீர்த்தனை ஆசிரியர்களின் வரலாற்றை இதில் சொல்லியிருக்கிறார் ஜான்சன். தொடர்ந்து இத்துறையில் ஆர்வம் கொண்டவனாக இருந்தபோதிலும் நான் பத்துபேருக்குள்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்

இன்றைய கிறித்தவத் தோத்திரப் பாடல்களின் தொடக்கப்புள்ளி என்று மார்ட்டின் லூதரை[ 1483- 1546 ]ஜான்சன் குறிப்பிடுகிறார். இன்றைய சீர்திருத்த கிறித்தவ சபையினரின் தொடக்கப்புள்ளியாகிய அவர் இன்றுள்ள தேவாலய கூட்டுவழிபாட்டு முறையை உருவாக்கினார். அதில் பாடும்பொருட்டு அவரும் அவரது தோழர் ஜோஹான் வால்த்தரும் எழுதிய தோத்திரப்பாடல்கள் 1524ல்ல் நுலாகத் தொகுக்கப்பட்டன. அதுவே கிறித்தவ தோத்திரப்பாடல் மரபின் முதற்புள்ளி என ஜான்சன் சொல்கிறார். ஐந்து இலத்தீன் மொழிப்பாட்லகளும்32 ஜெர்மானியப்பாடல்களும் அடங்கியது இத்தொகுதி.

ஜெர்மானிய தோத்திரப் பாடல்களை தமிழாக்கம் செய்த அருள்திரு பர்தலேமியு சீகன்பால்கு [ 1683- 1719 ] அவர்கள்தான் தமிழ் கிறித்தவத் தோத்திரப்பாடல்களின் தொடக்க புள்ளி என்பது ஜான்சனின் கருத்து. 1713ல் அவர் இயற்றிய தமிழ் தோத்திரப்பாடல்களின் தொகுதியான ’ஞானப்பாடல்கள்’ இத்துறையின் முதல் நூல் .இதில் 48 பாடல்கள் இருந்தன.இவை மேலைநாட்டு காஸ்பல் இசையின் மெட்டுக்கு அமைக்கப்பட்டவை.

இப்போ எழுந்திருந்து – என் கர்த்தரைப் புகழ்ந்து
துதித்துக்கொண்டு வாறேன் என் கடனைத்தானே தீர்ப்பேன்

நான் தூங்கியிருந்த போதும் – இருட்டில் நின்றபோதும்
நான் காக்கபப்ட்டிருந்தேன் – சரீர பெலன் கொண்டேன்

என்ற பாடலை காலைத்துதிக்காக சீகன்பால்கு எழுதியிருக்கிறார். காலை மாலைப்பாடல்களை தனியாக அமைத்து தனித்தனியான இசைக்குறிப்புகளையும் அவர் அளித்திருக்கிறார்.

சீகன்பாலுகுவிற்குப் பிறகு வந்த சூல்சே, வால்தர், பிரேசின் மற்றும் பெப்ரீசியஸ் ஆகியோரும் தமிழில் தோத்திரப்பாடல்களை எழுதியதாகக் குறிப்பிடும் ஜான்சன் இந்தக்காலகட்டத்தின் தோத்திரப்பாடல்களை 1901ல் ஜெ.எஸ்.சாண்ட்லரின் தலைமையிலான குழு பெருந்தொகுப்பாக தொகுத்தது என்கிறார். இத்தொகுதியே கிறிஸ்தவ பாமாலை பாடல்கள் என்ற பேரில் இன்றும் வெளிவந்துகொண்டிருக்கிறது

சீகன்பால்கு

தமிழில் கிறித்தவத் துதிப்பாடல்களை எழுதிய முன்னோடி என்று வீரமாமுனிவரை[ 1680- 1747] ஜான்சன் குறிப்பிடுகிறார். வீரமாமுனிவரில் இருந்து தொடங்கி எழுபது துதிப்பாடலாசிரியர்களின் சுருக்கமான வரலாற்றை எழுதி அவர்களின் பாடல்களின் சில மாதிரிகளையும் சிறப்பியல்புகளுடன் அளிக்கிறார். வீரமாமுனிவர் இந்திய ராகங்களில் இசைப்பாடல்களாகவே தன் துதிகளை எழுதியிருக்கிறார்

ஜகந்நாதா குருபரநாதா – திரு
அருள்நாதா ஏசுபிர்சாத நாதா

[அனுபல்லவி]

திகழுறுந்தாதா புகழுறும் பாதா
தீதறும் வேத போதா

சரணம்]

முற்காலம் ஆதிமைந்தர் மோசப்பிராசு தந்திர
மொழ்ய்கொண்டு கனியுண்ட் பழியாலோ
நற்காலம் நீ தெரிந்த நவின்ற வண்ணம் பரிந்து
நரதேவனாக வந்தாய் மொழியாலோ

என்ற பாடல் தன்யாசி ராகத்தில் ஆதிதாளத்தில் அவரால் அமைக்கப்பட்டுள்ளது. அன்றிருந்த பக்தி இயக்கத்தின் கீர்த்தனைகளின் வடிவையே அதுவும் கொண்டிருக்கிறது

திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம், திருநெல்வேலி வரலாறு போன்ற நூல்களை எழுதிய பேராயர் கால்டுவெல் [1814- 1891] தமிழில் இசைப்பாடல்களை எழுதியிருக்கிறார் என்பது பரவலாக அறியபப்டாத செய்தி அவரும் இந்திய இசைமரபுக்கு இசையவே தன் பாடல்களை எழுதியிருக்கிறார்.

ஏசையா பிளந்த ஆதிமலையே
மோசநாளில் உன்னில் ஒளிப்பேனே

என்ற பாடல் இந்தியக்காதுக்காகவே எழுதப்பட்டதுபோலிருக்கிறது

எச் ஏ கிருஷ்ணபிள்ளை

தமிழ் கிறித்தவ தோத்திரப்பாடல்களின் முக்கியமான பெயர் என்று ஜான்சனால் வேதநாயக சாஸ்திரியார் [1774- 1864] குறிப்பிடப்படுகிறார். சாஸ்திரியாரின் பாடல்கள் இந்திய இசைமரபுக்கு உட்பட்டு, தமிழிலக்கியத்தின் தனிச்சொல்லாட்சிகளுடன் எழுதப்பட்டமையால் பெரும்புகழ்பெற்றன. திருஎநெல்வேலியைச் சேர்ந்த வேதநாயக சாஸ்திரியார் பிறரைப்போல மதப்பணியின் ஒரு பகுதியாக இலக்கிய- இசைப்பணியைச் செய்யாமல் அதையே தன் முழுப்பணியாகச் செய்தார்.

வேதநாயக சாஸ்திரியார் ஆங்கிலக் கல்வி கற்றவர். சரபோஜி மன்னரின் உடன்பயின்றவர். இந்துமதத்தின் சாதிய நோக்கு தீண்டாமை ஆகியவற்றை கடுமையாகக் கண்டித்து எழுதியிருக்கிறார். தஞ்சை சரபோஜிக்கும் வெள்ளைய அரசுக்குமான முக்கியமான தொடர்பாளராகவும் இருந்திருக்கிறார்

வேதநாயக சாஸ்திரியார் எட்டு சிற்றிலக்கிய நூல்களையும் இரு நாடக இலக்கியங்களையும் ஐந்து அற இலக்கியங்களையும் உள்ளடக்கி 35 கிறித்தவ இலக்கிய நூல்களை எழுதியிருக்கிறார். ஆவ்ற்றில் நான்கு நூல்கள் இசைநூல்கள். ஞானப்பத கீத்தனைகள், ஆரணாதிந்தம், பாலசரித்திரம், வண்ண சமுத்திரம் ஆகியவை

பல்வேறு இடங்களில் கிறித்தவ அறிஞர்கள் உருவாக்கிய துதிப்பாடல்களை ஒருங்குதிரட்டியவர் அருள்திரு எட்வயத்திர்ட் வெப் அப்பாடல்களைத் தொகுத்து 1853ல் ஞானகீதங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டார். சீர்திருத்தச்சபையின் துதிப்பாடல்களின் முக்கியமான தொகுதியாக அது கருதபப்டுகிறது. அருள்திரு ஜே.எஸ்.சாண்ட்லரும் இசைப்பாடல்களை எழுதியிருக்கிறார்

ஜான் பால்மர்

மரியான் உபதேசியார், தேவவரம் முன்ஷியார்,அருள்திரு சற்குணம் வில்ஃப்ரெட், ஜான் பால்மர், காபிரியேல் உபதேசியார், அருமைநாயகம் சட்டாம்பிள்ளை, தேவசகாயம் உபாத்தியாயர், அருள்திரு வேதக்கண் , மாசிலாமணி, எலியா தேவசிகாமணி சாஸ்திரியார், அருள்திருபாக்கியநாதன் தாவீது , தி.யோசேப்பு, சி யோசேப்பு , அருள்திரு ஞா சாமுவேல், அருள்திரு ஒய் எஸ் டய்லர், திட்டூர் தேசிகர் என நாமறியாத பல பாடலாசிரியர்களின் வரலாறு இந்நூலில் உள்ளது

அறியப்பட்ட சில பெயர்களில் எ.ஏ.கிருஷ்ணபிள்ளை [1827 -1900]குறிப்பிடத்தக்க பெயர். இரட்சணிய யாத்ரீகம் என்னும் நூலை இயற்றியவர். அவரது ஐந்து கீர்த்தனைகள் இன்று பாடப்படுகின்றன என்கிறார் ஜான்சன்

 

தேவநேயப்பாவாணர்
தேவநேயப்பாவாணர்

 

இன்னொருவர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் [1859 – 1919] . நெல்லை அருகே பிறந்து தஞ்சையில் மருத்துவத் தொழில் புரிந்த ஆபிரகாம் பண்டிதர் தமிழிசை இயக்கத்தின் தொடக்கப்புள்ளி. கர்ணாமிர்த சாகரம் என்னும் பெருநூலின் ஆசிரியர். ஏழு இசை மாநாடுகளை சொந்தச்செலவில் நடத்தியவர். கர்ணாமிர்த சாகரத் திரட்டு என்ற நூலில் அவர் இயற்றிய 96 பாடல்கள் உள்ளன.

abira

அறியப்பட்ட இன்னொரு பெயர் அருள்திரு ம.வேதமாணிக்கம் [1864- 1917] குமரிமாவட்டம் மயிலாடியில் பிறந்த வேதமாணிக்கம் குமரிமாவட்டத்தில் கிறித்தவ மதம் வேரூன்ற காரணமாக அமைந்தவர். இன்னொருவர் மொழிஞாயிறு என்று புகழ்பெற்றவரும் தமிழ் வெர்ச்சொல் அகரமுதலியின் ஆசிரியருமான தேவநேயப்பாவாணர். அவரது கிறித்தவ கீர்த்தனம் என்ற நூல் 1981ல் வெளிவந்தது. பியாக் ராகத்தில் பாவாணர் எழுதிய

இத்தரையின் மத்தியினில் பெத்தலையின் சத்திரம்

[அனுபல்லவி]

அத்தன் ஏகபுத்திரன் கிறித்துவும் உதித்தனர்

என்ற கீர்த்தனை பெரும்புகழ்பெற்றது

அலன் ஆபிரகாம் அம்பலவாணர்,ஜெ.எம் ஆழ்வார்பிள்ளை,க.பொ.முத்தையா முதலிய இலங்கை பாடலாசிரியர்களின் வரலாற்றையும் ஜான்சன் இந்நூலில் சேர்த்திருக்கிறார்.

என் பார்வையில் இப்பட்டியலில் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பெயர் காணப்படவில்லை என்பது சற்று வியப்பாக இருக்கிறது. தமிழ்க்கீர்த்தனைகள் எழுதிய பிள்ளையவர்கள் கிறித்தவப்பாடல்கள் எழுதவில்லையா என்ன?

அத்துடன் இதிலுள்ள பெரும்பாலான தோத்திரப்பாடலாசிரியர்கள் சீர்திருத்த சபையினராகவே இருக்கிறார்கள். இதில் கத்தோலிக்க தோத்திரப்பாடலாசிரியர்கள் முழுமையாக சேர்க்கப்பட்டிருக்கிறார்களா என்றும் ஐயமாக இருக்கிறது. அவ்வாறு சேர்க்கப்பட்டிருந்தால் மட்டுமே முழுமையான ஆய்வுநூலாக இதைக்கொள்ளமுடியும்

[கிறிஸ்தவக் கீர்த்தனைக் கவிஞர்கள்-யோ ஞானசந்திர ஜான்சன். F2 பெத்தேல் என்கிளேவ், 5 பெத்தேல் புரம், கிழக்குத் தாம்பரம், சென்னை59]

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம்   Aug 3, 2014

கிறிஸ்தவ இசைப்பாடல்கள்- கடிதம்

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

முந்தைய கட்டுரையுவன் சந்திரசேகரின் ஊர்சுற்றி – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைஅஞ்சலி – வி.எஸ்.நைபால்