வரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல்

சுஃப்ரஜித் ஓஜா

ஜெ

மழைப்பாடலை இப்போதுதான் முழுமையாக வாசித்துமுடித்தேன். இரண்டு முழு வாசிப்பு தேவைப்பட்டது. அதன் அமைப்பில் உள்ள unity யும் ஒன்றுடன் ஒன்று அனைத்தும் கொண்டிருக்கும் conformity யும் வியப்புகொள்ளச் செய்கின்றன. ஒட்டுமொத்தமாக பெண்களின் கதை. இரண்டு பெண்கள். காந்தாரி,குந்தி. அவர்களுக்கு முன்னால் மேலும் இரு பெண்கள். அம்பிகை அம்பாலிகை. அவர்களுக்கு முன்னால் சத்யவதி. அவர்கள் சதுரங்கக் கட்டத்திலே ஒவ்வொரு காயாக தூகி வைத்துவிட்டு அவைகளே ஆடிக்கொள்ளட்டும் என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டார்கள் என்று நினைத்தேன்

நாவலின் கட்டுமானத்தில் உள்ள பிரமிக்கச்செய்யும் தகவல்கள் எங்கிருந்து எப்படியெல்லாம் தொகுக்கப்பட்டன என்று எண்ணிக்கொண்டேன். இதை வாசித்தபிறகு கங்குலி பாரதத்தை உட்கார்ந்து விரிவாக வாசித்தேன் யாதவ வரலாறு மகாபாரதத்திலேயே சிதறிச்சிதறிக்கிடக்கிறது. ஒன்றை ஒன்று பொருத்துவதே பெரிய வேலை. ஹேகயர்களும் விருஷ்ணிகளும் வேறுவேறாக சரித்திரத்தை எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பொருந்தவே மாட்டேன் என்கிறது. நீங்கள் எப்படி பொருத்தி உண்டுபண்ணியிருக்கிறீர்கள் என்று பார்த்தேன். விடுபட்ட இடங்களை பாகவதத்திலே இருந்து எடுத்திருக்கிறீகள் எனறு நினைக்கிறேன். பல இடங்களுக்கு புதிய விளக்கம் அளிக்கிறீர்கள் அப்படி பல இடங்களை பொருத்தி ஒரு சீரான historical narration ஐ உருவாக்கியிருக்கிறீர்கள்.

சொல்லப்போனால் இதிலே இருந்து மறுபடியும் ஒரு coherent history யை உருவாக்கிவிடமுடியும் என்று தோன்றியது

சண்முகம்

அன்புள்ள சண்முகம்,

எழுதவந்த தொடக்கத்தில் நான் எழுதிய ஒரு கதை ‘திசைகளின் நடுவே’. மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அக்கதை எழுதப்படாத மகாபாரதம் ஒன்றை முன்வைத்தது. அதன் வழியாக நானே என்னைக்கண்டுகொண்டேன். உண்மையில் அதை எழுதியது எனக்கு ஒரு பெரிய தொடக்கம், ஒரு திறப்பு.

நாம் சாதாரணமாக வாசிப்பவர்களில் தங்கள் சொந்தவாழ்க்கையின் சில தருணங்களையும் கண்டடைதல்களையும் மட்டும் எழுதும் எழுத்தாளர்கள்தான் பெரும்பாலும். அவற்றுக்கு நம் அன்றாட உலகுசார்ந்த ஒரு நம்பகத்தன்மை உள்ளது. அதேசமயம் மானுடம் என்றும் எதிர்கொள்ளும் பெரிய வினாக்கள், பெரிய அறைகூவல்கள், பெரியதரிசனங்கள் அவ்வாழ்க்கையில் நிகழ வாய்ப்பே இல்லை. ஆகவே அவை இயல்பாகவே சிறிய சித்தரிப்புகளாகவே நின்றுவிடுகின்றன. அதன்பின் அவற்றில் உள்ள சிறப்பு என்பது கச்சிதமாகச் சொல்லபடுவது, நயமாகச் சொல்லப்படுவது, நாம் அறிந்ததை மீண்டும் கண்டடைவது என்னும் மூன்றுதான்.

என் முன் உள்ள அறைகூவலும் என் பணியும் அதுவல்ல என நான் கண்டுகொண்டேன். அத்தகைய கதைகளை நான் எழுதமுடியுமா என எழுதிப்பார்த்தேன். மிக எளிதாக பலகதைகளை எழுதி அது என் ஆற்றலுக்குச் சிறிய பணி என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். நான் ஒட்டுமொத்தமாக ஒரு மறுவரலாற்றை, மறுபண்பாட்டை எழுதவேண்டியவன். ஆகவே பெரும் உத்வேகங்களையும் பெரும் சலிப்பையும் ஒரேசமயம் எழுதுபவன். அதுவே நான் வழிபடும் பேரிலக்கியவாதிகள் சந்தித்த அறைகூவல்.

எல்லா எழுத்தும் எழுதப்பட்ட வரலாற்றை சற்றேனும் நிரப்பும் மறுவரலாறுகள்தான். எனினும் மொத்தவரலாற்றையும் பண்பாட்டையும் கருத்தில்கொண்டு எழுதுபவனின் உலகமும் வரலாற்றையும் பண்பாட்டையும் போலவே பிரம்மாண்டமானது, முடிவற்றது. விஷ்ணுபுரம் முதல் கொற்றவை வழியாக வெண்முரசு வரை பல்லாயிரம் பக்கங்களில் புராணம், வரலாறு, தத்துவம், வாழ்க்கைச்சித்தரிப்பு என தொடர்ந்து விரிவாக்கிக்கொண்டே செல்லக்கூடிய ஒன்றாக உள்ளது இப்புனைவுலகு. முடிவேயற்றதுபோலத் தோன்றுகிறது இது. எல்லையற்ற புறவுலகம். மொத்த பாரதநிலப்பரப்பும் அதன் களம். கூடவே முடிவில்லாது பெருகும் அகவுலகம். புராணகாலம் முதல் இக்கணம் வரை அதில் நிகழ்கின்றது. ஆகவே கையில் அள்ளப்பட்டது துளி. கண் முன்னால் அலையடிப்பது கடல்.

நான் எழுதிக்கொண்டிருப்பது நான் உருவாக்கி அளிக்கும் ஒரு இணை வரலாற்றை, இணைப்பண்பாட்டை என விஷ்ணுபுரம் எழுதும்போதே அறிந்தேன். பிறபுனைவுகள் சமகாலத்தின் பொதுவான வரலாற்றுச் சித்தரிப்பில், பண்பாட்டுச்சித்தரிப்பில் சில இடங்களை நிரப்புகின்றன. நான் ஒட்டுமொத்தமாக இன்னொன்றை உருவாக்க முயல்கிறேன். முன்னுதாரணமாகக் கொண்டுள்ளவர்கள் செய்ததும் அதையே. ஆம், கம்பன் செய்ததையே நானும் செய்கிறேன். தல்ஸ்தோய் நிகழ்த்தியதையே நானும் செய்கிறேன். யானைபிழைத்தவேல் என்றோ, பூனைநக்கும் கடல் என்றோ அவையடக்கம் சொல்ல விழையவில்லை. நான் எழுதியதன் வீச்சை நானே அறிவேன்.

ஆகவே ஒரு விதியை எனக்காக வகுத்துக்கொண்டேன். ஒட்டுமொத்தமாக ஒருபோதும் திட்டமிடாமலிருப்பது. அதே சமயம் எப்போதும் இப்பணியில் இருந்துகொண்டிருப்பது. ஒவ்வொரு புள்ளியிலும் முழுமையாக என்னை ஈடுபடுத்திக்கொண்டு அதை மட்டும் முழுமைசெய்வது. ஓரு பகுதியை எழுதும்போது அதில் கண்டடைவனவற்றை மட்டுமே முக்கியமாகக் கருதுவது. அப்பகுதிகள் திரண்டு ஒட்டுமொத்தமாக ஆவதை முற்றிலும் புனைவின் தற்செயல்களுக்கே விட்டுவிடுவது. அப்படித்தான் என் எல்லா நாவல்களும் எழுதப்பட்டன. வெண்முரசும். வெறுமனே கதைமாந்தரையும் நிலத்தையும் மட்டுமே எழுதமுயன்று எழுந்த மழைப்பாடல் முடியும்போது அதற்கான வடிவமுழுமையை அதுவே அடைந்திருப்பதைக் கண்டேன்.

மழைப்பாடலும் மகாபாரதம்தான். ஆனால் பாரதத்தில் மிகமிகச்சுருக்கமாகக் கடந்துபோகப்படும் ஒருபகுதி. மகாபாரதத்தின் பிரம்மாண்டமான வன்மங்களையும் வெறிகளையும் உருவாக்கிய அன்னையரின் கதை. அவர்களின் பாரதம் இது. அவர்களின் அன்புகள், ஆசைகள், அச்சங்கள். பல தளங்களில் அவர்கள் அடையும் கையறுநிலை. அதிலிருந்து அவர்கள் பற்றி எரிந்து உருவாக்கும் நெருப்பு. அவற்றின் அடித்தளம் மீதுதான் மொத்தபாரதமும் பின்னால் நிகழ்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறானவர்கள். ஒருவரோடொருவர் போரிடுபவர்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக அவர்கள் ஒன்றே என்ற எண்ணமும் எனக்கு எழுந்தது.

மிகவிரிவான நிலக்காட்சிகள் இந்நூலில் உள்ளன. அவை வெறும் பின்புலம் அல்ல. வாழ்க்கையும் ஒட்டுமொத்த வரலாறும் ஒருபார்வையில் நிலத்தின் ஒரு சிறு சலனம் மட்டுமே. அந்தப் பேருணர்வை நிலம் நேரடியாக அளித்துக்கொண்டே இருக்கிறதென்றாலும் என் வாசிப்பில் தல்ஸ்தோய் மட்டுமே புனைவில் அதை கொடுத்திருக்கிறார். வெவ்வேறு சமூகங்களின் உருவாக்கமும் மோதலும் இந்நாவலில் உள்ளது. ஒரு தனிமனிதர் என்பவர் அந்தச் சமூகத்தின் ஒரு முனையில் திரண்டுவரும் சிறுதுளி மட்டுமே. தனிமனித உணர்வுமோதல்கள் என்பவை அச்சமூகங்களின் மோதல்களும்கூட.

தாவரங்கள், மிருகங்கள், மழை, வெயில், வெள்ளம், புயல் என அனைத்தாலும் பின்னப்பட்ட வாழ்க்கை. எல்லாமே நிகழும்போதும் ஒன்றுமே பெரிதாக நிகழவில்லை என்னும் உணர்வும் இருந்துகொண்டே இருப்பதே ஒட்டுமொத்தச் சித்திரம் அளிக்கக்கூடிய உணர்வு. நாம் கண்டிருக்கவே அறியாமல் மனிதர்கள் மாறிக்கொண்டிருக்கும் விந்தை. தல்ஸ்தோய் நாவல்களில் நான் கண்ட அவ்வியல்பை நோக்கியே இந்நாவலும் செல்கிறது என நினைக்கிறேன்.

ஜெ

மறுபிரசுரம்- முதற்பிரசுரம் Aug 16, 2014 

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைமணி ரத்னம் – கலந்துரையாடல் இன்று
அடுத்த கட்டுரைஆலன் டூரிங்- கடிதங்கள்