கர்ணம் என்றால் காது. சூரியபகவானின் அருளால் காதிலிருந்து பிறந்ததனால் கர்ணனுக்கு அப்பெயர் போடப்பட்டது என்று மகாபாரதம் சொல்கிறது. கவசகுண்டலங்களுடன் பிறந்ததனால் அவன் கர்ணன் என்று சொல்லப்பட்டான் என்றும் மகாபாரதம் சொல்கிறது. நீங்கள் கவசகுண்டலங்களை ஒரு அழகியல் வர்ணனை மட்டுமே என்றும் அவன் கருவில் பிறந்தவன் என்றும் சொல்கிறீர்கள். அப்படியென்றால் கர்ணன் என்ற பெயர் எப்படி பெறப்பட்டது?
ஒருநண்பர் தொலைபேசியில் கேட்டது இவ்வினா.
சமீபத்தில் கண்ணதாசன் விழா ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கே பேசியவர்கள் கண்ணதாசன் எழுதிய எல்லா சினிமாப்பாடல்களையும் அவை உருவான சந்தர்ப்பங்களை இட்டுக்கட்டி கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். அண்ணன் ஏ.எல்.சீனிவாசனிடம் கண்ணதாசன் கொஞ்சம் பணம் கேட்டாராம் அவர் கொடுக்கவில்லையாம். உடனே ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே’ என்று பாடினாராம்.
அதேபோல விஸ்வநாதன் அவரை ஏதோ திட்டிவிட்டாராம். உடனே ‘சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே’ என்று பாடினாராம். காமராஜரை பிரிந்து இருந்தபோது ‘அந்த சிவகாமி மைந்தனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள்பார்க்கச் சொல்லடி’ என்றாராம். ஒரு பாட்டு அன்றெல்லாம் ரேடியோவில் வரவே மாதக்கணக்காகும். அதையும் கேட்கும் வழக்கமும் காமராஜுக்கு இல்லை. அவருக்கு பாடல்வழியாகத் தூது!
அக்காலத்தைய ஒலிப்பதிவாளர் ஒருவரிடம் இதையெல்லாம் சொன்னேன். கண்ணில் நீர் வரச் சிரித்து ‘இப்டியேதான் கோயில்லயும் புராணக்கதை சொல்றாங்க’ என்றார். இது நமக்கிருக்கும் ஒரு எளிய புராண உருவாக்க மனநிலை. நம் ஆலயங்களில் பெரும்பாலும் வார்த்தையை வைத்து – அதையும் குழந்தைத்தனமாகப் புரிந்துகொண்டு – கதைகளைக் கட்டிச் சொல்வதை காணலாம். தலபுராணங்களை ஆராயப்புகுந்தால் நாள்முழுக்க சிரித்துக்கொண்டே இருக்கலாம்.
கர்ணன் காதுவழியாக பிறந்தான் என்றே கொள்வோம். அவனுக்கு பெயரிட்டவள் ராதை. அவளுக்கு எப்படித் தெரியும்? கவசகுண்டலங்களுடன் பிறந்தான், அதை அனைவரும் காணலாம் என்றால் அதை வைத்து அவனை ஷத்ரியன் என்று புரிந்துகொள்ளமுடியாதா என்ன? அவை ஷத்ரிய அடையாளங்கள். ஏன் தேரோட்டிமைந்தன் என்று இழிவு செய்யவேண்டும்?
சரி மகாபாரதத்தில் கர்ணன் ஒருவன்தானா? திருதராஷ்டிரன் மைந்தன் ஒருவன் பெயரும் கர்ணன்தான். அதையும் வெண்முரசில் சொல்லியிருக்கிறேன். இவன் பீமனால் கொல்லப்பட்டான். மேலும் பல கர்ணன்கள் மகாபாரதத்திலும் புராணங்களிலும் உள்ளனர். கர்ணிகை என்னும் பெயருடைய அப்சரஸ் மகாபாரதத்தில் வருகிறாள். சுகர்ணன், விகர்ணன் சித்ரகர்ணன் என்னும் பெயர்கள் சாதாரணமாக உள்ளன.
கர்ணன் என்றால் காதன் என்று பொருள். கண்ணன் என்பதுபோல மூக்கன் என்பது போல அது ஒரு பெயர் அவ்வளவுதான். அதற்கான புராண விளக்கங்கள் பிற்காலத்தையவை. அவற்றை அப்படியே எடுத்தாள வெண்முரசில் இடமில்லை.
வெண்முரசின் அமைப்பில் உள்ள ஒரு ஒருமையை வாசகர் உணரலாம். அது ஒருங்கிணைவுள்ள ஒரு பெரிய யதார்த்தமான வரலாற்றுச்சித்திரத்தையே அளிக்கிறது. அன்றாட விஷயங்களை விளக்கும் எளிய மிகைக்கற்பனைகளை முழுக்கத் தவிர்த்து அதற்குரிய யதார்த்தச் சித்தரிப்பைத்தான் முன்வைக்கிறது. காலக்கணிப்புகளை அந்த யதார்த்தச் சித்திரத்தின் அடிப்படையிலேயே வகுக்கிறது.
ஆனால் எங்கெல்லாம் மிகைக்கற்பனை பிரபஞ்சத்தன்மை கொள்கிறதோ அவற்றை எல்லாம் பயன்படுத்திக்கொள்கிறது. கவித்துவமாக ஒரு தருணத்தை விரிக்கக்கூடிய அனைத்து புராணங்களையும் எடுத்தாள்கிறது.
கர்ணன் காதுவழியாகப் பிறந்தான் என்பதில் எந்த அழகும் குறியீட்டுப்பொருளும் இல்லை. அவை பிற்காலத்து ஒழுக்கமுறைகள் உருவான பின்னர் குந்தியை ஒன்றும்தெரியாத கன்னியாகவும் பாண்டுவிடமன்றி எவரிடமும் உறவுகொள்ளாத ‘பத்தினி’யாகவுமெல்லாம் காட்டவேண்டிய கட்டாயம் உருவானபின் எழுதிச்சேர்க்கப்பட்ட கதைகள். குந்தியின் யாதவகுலத்தின் ஒழுக்கநெறிகள் வேறு என்பதை வியாசமகாபாரதமே விரிவாகப் பதிவுசெய்கிறது.
அதேசமயம் அர்ஜுனன் இந்திரமைந்தன் என்பதிலும் கர்ணன் சூரியமைந்தன் என்பதிலும் மிகப்பெரிய ஒரு கவித்துவ வீச்சு உள்ளது. அது அவர்களின் கதைக்கு ஒரு பிரபஞ்சத்தன்மையை அளிக்கிறது. அவற்றைத் தவிர்த்தால் அக்கதைகள் மண்ணிலிறங்கி சிறுத்து விடும்.
வெண்முரசு புராணங்கள் நடுவே உள்ள இந்த வேறுபாட்டை உணரக்கூடிய வாசகர்களுக்காக எழுதப்படுகிறது.