விஷ்ணுபுரம் – ஒரு பயிற்சி

00000-195x311_0

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
சமீபத்தில்தான் விஷ்ணுபுரம் > வாசித்தேன். நான் பள்ளிக்கூட நாட்களில் இருந்தே இலக்கியத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஜெயகாந்தன் எனக்குப்பிடித்தமான எழுத்தாளராக இருந்தார். அதற்குப்பின்னால் கொஞ்சநாள் ஆதவன். அப்புறம் சுந்தர ராமசாமி. காலச்சுவடு தொடர்ந்து வாசிப்பவன். உங்கள் காடு நாவலை முதலில் வாசித்தேன். அது ஒரு பெரிய அனுபவமாக இருந்தது. ஆனால் விஷ்ணுபுரம் தான் எனக்கு பெரிய சவாலாக இருந்தது. அதை லைப்ரரியில் எடுத்தேன். முதலில் இருபது பக்கம் வாசித்துவிட்டு அப்படியே வைத்துவிட்டேன். என்னடா இது என்று எரிச்சலாக இருந்தது. கொஞ்சநாள் கழித்து வாசித்தேன். அப்போதும் நூறு பக்கம் தாண்டவில்லை. தூக்கிவைத்துவிட்டேன். மன்னிக்கவேண்டும் நாநூறுரூபாய் தண்டம் என்றுகூட நினைத்தேன்

ஆனால் போனமாதம் ஒருநாள் சாதாரணமாக அதைஎ டுத்து விரித்து ஒரு அத்தியாயத்தை வாசித்தேன். அதில் வீரன் என்கிற யானை கொல்லப்படும் காட்சி வந்தது. அப்படியே மெய்மறந்துபோய் வாசித்துக்கொண்டே இருந்தேன். அந்த உலகத்துக்குள்ளேயே போய்விட்டேன். மீளவே முடியவில்லை. போதைக்கு ஆட்பட்டவன் மாதிரி இந்த ஒருமாசமும் அதையே வாசித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய வேலை மிகவும் சலிப்பு தரக்கூடியது. அதைச் செயவ்தனால் அவரக்கூடிய எல்லா சலிப்பையும் இந்த நாவல்தான் இல்லாமலாக்கியது. வாசிக்கவாசிக்க தீந்துவிடுமோ என்ற பயம் வந்தது. தீரக்கூடாது என்பதனால் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தேன். முடிந்ததும் உடனே ஆங்காங்கே வாசித்தேன். இப்போது மீண்டும் வாசிக்கிறேன்

எனக்கு இப்போது என்ன தோன்றுகிறது என்றால் புத்தகங்களை வாங்கக்கூடியவர்கள் அதை வெறும் பேப்பரைக்கொண்டுதான் மதிப்பு போடுகிறார்கள் என்றுதான். எத்தனை முறை வாசித்தோம், எவ்வளவுகாலம் வாசித்தோம் என்று பார்த்தோமென்றால் ஒரு புத்தகத்தின் அருமை தெரியும். விஷ்ணுபுரத்தை நான் நாற்பதுநாளாக வாசிக்கிறேன். சும்மா விலைபோட்டு பார்த்தால்கூட நாற்பது சின்ன புத்தகங்களுக்குச் சமம். இன்னும்கூட நாலைந்துமுறை வாசிப்பேன். என்னுடைய லைப்ரரியிலே இருக்கும் 90 பர்செண்ட் புத்தகங்களை நான் இனிமே வாசிக்கவேமாட்டேன். ஆனால் இந்த நாவலில் உள்ள தத்துவம், ஆன்மிம், பண்பாட்டு விஷயங்கள் ,வரலாறு எல்லாவற்ரையும வாசித்துமுடிக்க பத்து வருடமாவது ஆகும். இது ஒரு என்சைக்ளோப்பிடியா மாதிரி

இந்நாவலில் ஆரம்பத்திலே வந்த பிரச்சினை என்னவென்றால் இது கொடுக்கக்கூடிய தகவல்களை விஷுவல்களாக மாற்றிக்கொள்ள கொஞ்சம் பழக்கம் வேண்டியிருக்கிறது என்பதுதான். அதாவது நாம் வாசிக்கும் போது சாதாரணமாக நாம் அறிந்திருக்கக்கூடிய ஒரு சூழலிலே கதையை வைத்து வாசித்தபடியே செல்வோம். இதை வாசிக்கும்போது இந்த கற்பனை உலகத்தை டேட்டாவிலிருந்து எடுக்க கொஞ்சம் கவனம் தேவைப்படுகிறது. விஷ்ணுபுரத்தில் தோரணவாயிலை வெறும் டேட்டவாக பார்க்காமல் கண்ணால் பார்க்க ஆரம்பித்தால் உள்ளே நுழைந்துவிடலாம். மினிமலிஸ்ட் தன்மை கொண்ட இன்றைக்குள்ள மாஸ் எழுத்துக்களை வாசித்த மனநிலையிலே இருந்து கொஞ்சம் விலகி வரவேண்டியிருக்கிறது

அப்படியே போனால்கூட இரண்டாம்பகுதியில் ஒரு தடை அங்கே வரக்கூடிய தத்துவங்கள்.தத்துவம் சம்பந்தமான பயிற்சி உள்ள தமிழ் வாசகர்கள் ரொம்ப கம்மி. எனக்கே கொஞ்சம் ஜே.கே கொஞ்சம் நிசர்கதத்த மகராஜ் என்றுதான் அறிமுகம். முறையான தத்துவம் திகைக்க வைக்கிரது. அதேசமயம் மின்னலில் கண்ட காடு போன்றதுதான் இந்த பிரபஞ்சக்காட்சி என்பது மாதிரியான வரிகள் பரவசம் அளிக்கின்றன. பிறகு உங்களுடைய இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் என்ற புத்தகத்தை வாசித்தேன். அது எனக்கு ஒரு பெரிய கைட் புக் மாதிரி உதவியது

ஒரு நல்ல வாசகனுடைய கற்பனைக்கும் மூளைக்கும் பெரிய சவால் விஷ்ணுபுரம். கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து ஒன்றோடொன்று சேர்த்து பொருத்தி எடுக்கவேண்டும். ஒட்டுமொத்தமாக ஒரு கிளாசிக் நமக்கு தெரியவரும். அந்த அனுபவம்தான் இதிலே நம்மை பிடித்து கட்டிப்போடுகிறது

இப்போது ஒன்று தோன்றுகிறது. நிறைய வாசிக்கிறோம். பல நூலக்ள் வெறும் வாசிப்பின்பம் மட்டும்தான். கொஞ்சநாவல்களில் கொஞ்சம் வாழ்க்கை தெரியவரும். ஆனால் நாம் எந்த மண்ணிலே பிறந்து எந்தப்பண்பாட்டிலே வாழ்கிறோமோ அதை முழுமையாக புரிந்துகொள்ள பயன்படக்கூடிய விஷ்ண்புரம் போன்ற புத்தகத்தை வாங்குவதும் வாசிப்பதும்தான் உண்மையிலேயே பணத்துக்கும் நேரத்துக்கும் மதிப்புள்ளது என்றுதான். இதை வாசித்தபின் நம்முடைய கோயில்கள், வரலாறு, மதம் எல்லாமே புதியதாக தெரிய தொடங்கிவிட்டன.

எனக்கு ஒரு புதிய உலகமே தெரிய ஆரம்பித்துவிட்டது. இந்தியமரபைப்பற்றி ஒரு பெரிய கோர்ஸ் படித்து முடித்ததுமாதிரி இருக்கிறது. இப்போது யாரிடமும் இந்துமதம் இந்தியா பற்றியெல்லாம் அவர்கள் கொஞ்சம்கூட அறிந்திருக்காத பல விஷயங்களைப் பேசமுடிகிறது

சரவணன் மாரியப்பன்

அன்புள்ள சரவணன்

நன்றி

விஷ்ணுபுரம் டாட் காம் என்னும் இணையதளத்தில் விஷ்ணுபுரம் நாவலைப்பற்றிய கட்டுரைகள் விரிவாக உள்ளன. நாவலை அனைத்துக்கோணத்திலும் புரிந்துகொள்ள அவை உதவும்

ஜெ

vishNupuaram.com

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 62
அடுத்த கட்டுரைஇமயச்சாரல் – 5