காடு – ஒழுக்கத்துக்கு அப்பால்…

ஜெ,

ஒருவாரமாக மீண்டும் காடு வாசித்துக்கொண்டிருக்கிறேன். இது நாலாவது முறை. முதலில் ஒருமுறை ஒரேமூச்சில் வாசித்து முடித்தேன். அதன்பிறகு தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தேன். காட்டை எல்லாரும் பார்த்திருப்போம். ஆனால் இதிலே சொல்லப்படுகின்ற மழைக்காட்டினை நம்மிலே பலபேர் பார்த்திருக்கப் போவதில்லை. அதனால்தான் இந்த தனி விருப்பம் தோன்றியது. ’வறனுறல் அறியா சோலை’ என்ற வரியை மந்திரம் மாதிரி மனசுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன்.

எனக்கு ஒன்று தோன்றியது. நாவலின் நிறமே பச்சைதான். பச்சைநிறமான காடு. ஒளியும்கூட பச்சை நிறமானதாகவே இருந்தது. பச்சை நிறமான வெயிலை நான் ஊட்டியின் வெஸ்டர்ன் கேச்மெண்ட் ஏரியாவிலே பார்த்திருக்கிறேன். புல்வெளியிலே எல்லா ஒளியும் பச்சையாகத்தான் இருக்கும். மழைமேகம் சூழ்ந்த பச்சை நிறம். நீங்கள் வெண்முரசிலே புல்லை மேகத்தின் குழந்தை என்று சொல்வதை வெஸ்டர்ன் கேச்மெண்ட் போனால்தான் பார்க்கமுடியும். கனவுமாதிரியான இடம் ஜெ. அங்கேயே சென்று வாழ்ந்துகொண்டிருப்பதைப் போல இருந்தது காடு நாவலை வாசித்த அனுபவம். அதற்குமேல் என்ன சொல்ல

பச்சைநிறம் என்றால் என்ன? வாழ்க்கையின் நிறம் பச்சை. பசுமை என்பதையே வாழ்க்கை என்ற அர்த்த்ததிலேதான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். பசுமையான நினைவுகள். பசுமை என்பது மண்ணும் நீரும் கலந்து வரும் நிறம் என்று நினைத்தேன் – காடு வாசித்த ஹேங் ஓவர்தான். )). நீர் இல்லாவிட்டல் பச்சை இல்லை. வாழ்க்கையில் நீராக இருப்பது என்ன என்று சிந்தித்தேன். அது கனவுகள்தான். ஆகவேதான் இளமையில் வாழ்க்கை வறனுறல் அறியா சோலையாக இருக்கிறது. காதல் அப்படி பசுமையாக இருக்கிறது

காடுநாவல் ஒரு கனவு. மென்மையான ஒரு பகல்கனவு மாதிரி. அது உடனே கலைந்துவிடும் என்பதுதான் அதிலே உள்ள அழகு. அதைத்தான் குறிஞ்சிமலரைப்பற்றிச் சொல்லும்போதும் சொல்கிறீர்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் அழகு. மிகச்சிறப்பான தனித்தன்மை கொண்டது. இதில் வரும் நான்கு கதாபாத்திரங்களின் பொதுவான அம்சம் என்ன என்று யோசித்தேன். கிரிதரன் முதல்காதலின் பரவசத்திலே இருக்கிறான். அவனுக்கு நேர் எதிராக பிராக்டிக்கலாக இருக்கிறான் குட்டப்பன். அதேபோல ரெசாலம், இரட்டையர் இருவரும் அன்புடைய வேறு இரண்டு வடிவங்களை காட்டுகிறார்கள். அன்பே இல்லாமல் இதையெல்லாம் பார்ப்பவராக இருக்கிறார் அய்யர். இந்த பின்னல்தான் இந்த நாவலை மிகச்சிறப்பானதாக ஆக்குகிறது

நுட்பமான வர்ணனைகளும் தகவல்களும் காட்டையும் மக்களையும் கண்ணுக்குள் வாழச்செய்கின்றன . நான் வாசித்தேனா அங்கேயே வாழ்தேனா இல்லை கனவாகக் கண்டேனா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஒருபக்கம் மேரி மறுபக்கம் சினேகம்மை. ரெண்டுபேருமே அன்பின் இரு வடிவங்கள். சினேகம்மை என்று அவளுக்கு போட்டபெயரே சிறப்பு. அவளைப்போல லவ்வபிளான ஒரு பெண்கதாபாத்திரத்தை நான் தமிழிலே வாசித்ததில்லை. [ரொம்பநாள் எனக்கு நபக்கோவின் லோலிதா பிடித்தமானவளாக இருந்தாள்]

இந்த நாவலின் மிகச்சிறந்த அம்சமே இது தமிழில் எழுதப்பட்ட முதல் amoral நாவல் என்பதுதான். செக்ஸை எல்லாம் நிறையபேர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் உள்ளே ஒழுக்கநோக்கம் இருக்கும். இது இயல்பாகவே ஒழுக்கமில்லாமல் இருக்கிறது. கனவுக்கு ஒழுக்கம் இல்லை அல்லவா?

சண்முகம்

காடு – அனைத்து விமர்சனங்களும்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 58
அடுத்த கட்டுரைவெளியே செல்லும் வழி– 2