காரை நிறுத்திவிட்டு முன்மதியவெயிலில் கண்கூச இறங்கி கோயிலை நோக்கி நடந்து சென்று கற்கள் எழுந்துகிடந்த செம்மண் சாலையில் நின்று கண்களின் மீது கைவைத்து கோபுரத்தை அண்ணாந்து பார்த்தான். சுதைச்சிற்பங்கள் தங்கள் காலடியில் நிழல் சிந்த ஒன்றுமீது ஒன்று ஏறிச்சென்று கலசங்களை அடைந்த சரிவுப்பரப்பாக கோபுரம் கருகிய நிறத்தில் எழுந்து நின்றது. தேவகோட்டங்களில் பெருமாளின் பல்வேறு மூர்த்தங்கள் கைகள் பரப்பி விழித்து நிற்க அவற்றில் மாடப்புறாக்கள் ஒண்டியமர்ந்திருந்தன.
கிருஷ்ணன் சட்டையை இழுத்துவிட்டபடி கோபுரவாசலை நோக்கிச்சென்றான். மிகப்பழைய கோயில், திருப்பணிகள் நடந்தும் பல வருடங்களாகியிருக்கலாம். எல்லா கோபுரங்களையும்போல அதுவும் மண்ணுக்குள் புதைந்திருந்தது. கோபுரவாசலின் கால்பட்டு அம்மி போல தேய்ந்த கல்படிகள் சாலையை விடக் கீழே இருந்தன. கனத்த இரும்புச்சங்கிலிகளும் பித்தளைக்குமிழ்களும் வரிவரியாக விரிசலிட்ட மரச்செதுக்குச் சிற்பங்களும் கொண்ட உயரமான மரக்கதவுகள் இரும்புக் கீல்களில் சிக்கி கற்சட்டத்தில் தொற்றிக்கொண்டு சாய்ந்து நின்றன. புஷ்பயட்சி காவல்காத்த கல்நிலையில் நிறைய வெற்றிலைச்சுண்ணாம்பு தீற்றப்பட்டிருந்தது. ஒரே ஒரு பிச்சைக்காரக் கிழவர் உள்ளே உயரமான கற்திண்ணையில் பொக்கணத்துடன் அமர்ந்து எதையோ மென்றுகொண்டிருந்தார். ஆர்வமே இல்லாத பழுத்த கண்களால் அவனை பார்த்தார்.
கோயில் திறந்துதான் கிடந்தது. அதை மூடவே முடியாது என்று கிருஷ்ணனுக்குத் தோன்றியது. கருவறையையும் உள்மண்டத்தையும் மட்டும் மூடுவார்கள் போல. தென்பாண்டிநாட்டு கோயில்களில் சிற்பங்கள் எப்போதும் முகமண்டபத்திலும் வசந்தமண்டபத்திலும்தான் இருக்கும். அவை மூடப்பட்டிருக்க வாய்ப்பில்லை. கம்பிவேலி போடப்படாமல் இருக்க வேண்டும். இல்லை என்றுதான் சண்முகம் சொல்லியிருந்தான். செருப்பை கழட்டிப்போடும்போது திரும்பவரும்போது அது இருக்குமா என்ற எண்ணம் மெல்லிதாக எழுந்தது. கிழவரிடம் சொல்லலாமா, வேண்டாம்.
கோயிலுக்குள் மனிதநடமாட்டமே இருப்பதாகத் தெரியவில்லை. அவன் தன் நிழல் மௌனமாகக் கூடவர சரிந்தெழுந்த கற்பாளங்களாலான தரை மீது மெல்ல நடந்தான். சிலநாட்களுக்கு முன்பு மழைபெய்திருக்கவேண்டும், கல்லிடுக்குகளில் புற்கள் பசுமையாக பீரிட்டிருந்தன. கற்பாதை ஓரங்களில் எழுந்த நெருஞ்சியும் பசுமையாகவே இருந்தது. கிருஷ்ணன் நிழல்கள் செறிந்து தூண்களின் காடாக விரிந்து கிடந்த கோயிலுக்குள் கண்ணோட்டி நோக்கினான். யாருமே இல்லை. அத்தனை காலியாக அது இருப்பது பிரமிப்பாகவும், கூடவே அது அப்படித்தான் இருக்கமுடியும் என்பதுபோலவும் இருந்தது. அந்த அமைதியின் ஒரு பகுதிபோல குர்ர் குர்ர் என்று புறா குறுகும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.
பிரம்மாண்டமான் கோயில். ஏழெட்டு ஏக்கர் பரப்பு இருக்கும். நான்கு திசைக்கோபுரங்கள். யானைவரிசை போல கருங்கல்லாலான நாலாள் உயர சுற்றுமதில். உள்ளே மங்கிப்போன நாமங்களுடன் சிறுமதில். இரு மதில்களுக்கும் நடுவே கோணலாக வளைந்து நடமிட்டு நின்ற தென்னைமரங்களும் கீழே அவற்றின் ஓலைகளும் மட்டைகளும் சிதறிக்கிடக்க ஊடே சில அரளிப்புதர்களும் மந்தாரைகளும் கொண்ட நந்தவனம். இடதுபக்கம் ஒரு பெரிய தெப்பக்குளம். ஏரிக்கரை பனைமரக்கூட்டம் போல தூண்கள் எழுந்து வரிசையமைத்த கல் மண்டபம் சூழ பிளாஸ்டிக் குப்பைகள் அடித்தரையின் பச்சைப்பாசி வண்டலில் மிதக்க, நீரோடிய கறைகள் உலர்ந்த படிக்கட்டுகளுடன் வெறிச்சிட்டுக் கிடந்தது அது. ஒரு சிறிய பறவை சிர்ர்ர் என்று சிறகதிர தென்னையில் இருந்து காற்றில் சறுக்கி இறங்கி குளத்து மதிலில் அமர்ந்தது.
கிருஷ்ணன் நின்றான். சுற்றி வருவதில் பொருளில்லை. உள்ளே சென்று சிலைகளைப் பார்க்கவேண்டியதுதான். அவன் திரும்பி முகமண்டபத்தருகே வந்தான். ஒளியைப் பார்த்து வந்ததனால் உள்ளே நிறைந்திருந்த இளம் இருட்டு கண்களை மறைத்தது. கண்கள் பழகியபோது நீருக்குள் இருந்து பெரிய மீன்கள் எழுந்து வருவது போல கரிய சிலைகள் இருட்டிலிருந்து எழுந்து தெரிந்தன. இரண்டாளுயரமான பெரிய வழவழப்பான கற்சிலைகள். அவன் எந்தச்சிலையையும் பார்க்காமல் மொத்தமாக அந்தச் சிற்ப வெளியைப் பார்த்தபடி ஒருசில கணங்கள் பிரமித்து நின்றிருந்தான்.
“யாரு?” என்ற பெண்குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினான். குதிரைக்காரன் சிலைக்கு அப்பாலிருந்து அந்தப்பெண் இறங்கி இடுப்பில் செருகிய முந்தானையை எடுத்து இழுத்துவிட்டுக்கொண்டு, நெற்றியில் சரிந்த கூந்தலிழையை ஒருகண நேர நளினமான அசைவால் சரிசெய்தபடி கேட்டாள். கிருஷ்ணனுக்கு கண்டா மணியோசை போல மனம் அதிர்ந்தது. அச்சிலைகளில் ஒன்று இறங்கியது போல் இருந்தாள் அவள்.
அவளுடைய கன்னங்கரிய நிறத்துக்கிணையாக கிருஷ்ணன் கண்டதில்லை. தீட்டப்பட்ட கருங்கல்லில் மட்டுமே உருவாகும் உறுதியான பளபளப்பான கருமை. அவனளவுக்கே உயரமாக திடமான தோள்களும் நிமிர்ந்த தலையுமாக நின்றாள்.
“இல்ல… இங்க சிலைகள்…” அவன் கண்கள் பரபரப்பு கொண்டு அவளை அள்ள முயன்றன. நல்ல சிற்பத்தைப் பார்க்கும்போது எப்போதுமே உருவாகும் பரபரப்பு அது. பின்னர் சொல்லிக்கொள்வான், இல்லை பதற்றப்படாதே, மெதுவாகப்பார், அணுவணுவாகப்பார், பார்த்தவற்றை நினைவில் நிறுத்தியபின்னர் ஒரு புள்ளியிலிருந்து கண்களை விலக்கு. குறுக்காக சிந்தனைகளை ஓடவிடாதே. சிற்பத்துக்கு உன் மனதை அளித்துவிடு…. ஆனால் அந்த முதற்பரவசப் பரபரப்பே சிற்பம் அளிக்கும் பேரனுபவம். அதன்பின் உள்ளது அந்த ஒட்டுமொத்த அனுபவத்தை சிறிய துண்டுகளாக ஆக்கி விழுங்கும் முயற்சி மட்டுமே.
அவனால் அவளைப் பார்க்கவே முடியவில்லை. கண்ணிலிருந்து அவள் வழுக்கி வழுக்கி விழுவதுபோல, அல்லது கண்ணை நிறைந்து பெரும்பகுதி மிச்சம் இருப்பதிபோல. எத்தனை பேரழகி! அவளுடைய மூதாதையர் இந்த கோயிலில் இருந்திருப்பார்கள். இச்சிலைகளை அவர்களைப் பார்த்தே வடித்திருப்பான் சிற்பி.
அப்பழுக்கற்ற வடிவ கச்சிதம் கொண்ட மகத்தான உடல். துதிக்கை என உருண்டு கனத்த தொடைகள். இரு மடிப்புவளைவுகள் கொண்ட ஒடுங்கிய வயிறு. இறுக்கமான உருண்ட சிற்றிடையில் வியர்வையின் மெல்லிய ஈரம். அவன் கண்களை நிறைத்து அவன் பிரக்ஞையை நிறைத்து அவனை முழுமையாக்கிய மார்புகள். இரு இளநீர்க்காய்களைப்போல. நெருக்கமாக, உருண்டு ஒன்றை ஒன்று மெல்ல முட்டி ஒரு மென்மையான குழியை உருவாக்கியபடி. மெல்ல அதிர்ந்த ஈரமான குழி.
எத்தனை அற்புதமான முலைகள. மூங்கில்போன்ற கைகளால் இரு பக்கமும் எல்லையிடப்பட்டு, பாலைநில மணல்வரிகள் போலத்தெரிந்த விலாவெலும்புகளுக்கு மேலே மெல்ல தொற்றியமர்ந்தவை… மென்மையையும் ஈரத்தையும் கொண்டு செய்யப்பட்ட, உருண்ட, மூன்றுவரி ஓடிய நீள் கழுத்து…
சிற்பங்களைக் காண ஆரம்பித்த இந்த இருபதாண்டுகளில் அவன் அவை கலைஞனின் இலட்சியக் கற்பனைகள், அத்தகைய பெண்கள் ஒருபோதும் பூமியில் இருக்க முடியாதென்றே எண்ணியிருந்தான். ஆனால் அவன் கண்முன் ஒரு பரிபூரண இலக்கணம் கொண்ட சிற்பம் உயிருடன் நின்றுகொண்டிருந்தது. நீள்வட்ட முகத்தில் மையமாகக் கூர்மைபெற்ற சிறுநாசி. அதன் கீழே வாடிய மலரிதழ்போல சிறிய கருஞ்சிவப்புக் குமிழுதடுகள். மேலுதட்டின் மென்மையான ஒடுங்கலுக்குக் கீழே கீழுதட்டின் சிறிய பிதுங்கல். ஒளி பிரதிபலித்த கன்ன வளைவு.
என்ன கருமை! சில பண்டாரங்களின் பழமையான திருவோடுகளுக்கு மட்டுமே அந்த பளபளக்கும் கருமையைக் கண்டிருக்கிறான். சிறந்த ஓவியன் அனாயசமாக இழுத்த கோடுபோல மூக்கும் புருவமும் இணைந்த வளைவு. பளபளக்கும் தகடாக நெற்றி. அலையலையாக இறங்கி பனங்குலை போலத் தோளில் கனத்த குழல்த்தொகுதி. என்ன பிழை, என்ன குறை… இல்லை ஏதுமில்லை. முழுமை…. பிசிறற்ற முழுமை.
அவள் “இன்னமே சாயங்காலம் அஞ்சுமணிக்குத்தான் கோயில தொறப்பாங்கய்யா” என்றாள். அந்த திண்ணையில் அவள் அரும்புகளை பெரிய வாழையிலையில் குவித்துக் கட்டிக்கொண்டிருந்தாள். யாழினிச் சிற்பங்களுக்குரிய நீள்விரல்கள்.. உள்ளங்கைக்கு வாழைப்பூவின் உட்பக்க நிறம். மணிப்புறாவின் அலகு நிறத்தில் நகங்கள். முழங்கையின் கரிய சருமத்தில் ஒரு நரம்போ எலும்புமுண்டோ தெரியவில்லை. கனத்த தாமரைக்கொடிபோல அவை குளிர்ந்த வழவழப்புடன் உருண்டிருந்தன. அவள் அவன் பார்வையைக் கண்டு தன் முந்தானையை மேலும் நன்றாக இழுத்து விட்டாள். அவளுடைய மார்புகள் மெல்ல அசைந்தபோது அவன் அகத்தில் கட்டிடங்களும் கோட்டைகளும் அதிர நிலம் நடுங்கும் அனுபவம் ஏற்பட்டது. அவை சாதாரணமாக பெண்முலைகள் அசைவதுபோல மென்மையாகத் ததும்பவில்லை, இரு செப்புகள் அசைவதுபோல் இறுக்கமாக அசைந்தன.
அவள் அவன் பார்வையால் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. பொது இடத்திலேயே புழங்குபவளாக இருக்கவேண்டும். பூ கட்டி விற்கிறாள் போல. “இல்ல, சிற்பங்களை பாக்கணும்தான் வந்தேன்… சாமி கும்பிடணும்னு இல்லை… சிலைகள் இருக்கிற மண்டபங்கள் தெறந்துதானே இருக்கும்?”
அவள் “ஆமாங்கய்யா” என்று தலையசைத்தாள். எந்த நகையுமே இல்லை. கழுத்தில் ஒரு மஞ்சள்கயிறு மட்டும்தான். காதுகளில் இரு பிளாஸ்டிக் கம்மல்கள். “செலைகளை பாக்கலாமா” அவள் “இருங்க சாமி” என்று திரும்பி ஓடினாள். அவளுடைய பின்பக்கத் திரட்சி அவள் ஓடியபோது குதிரையின் புட்டங்கள் போல இறுகி அசைந்தது. எளிதாக மான்போலத் தாவி கல் மேடையேறி மறைந்தாள்.
எங்கே செல்கிறாள்? எங்காவது சாவி வாங்கச் செல்கிறாளா? மெல்ல அவன் பிரமையில் இருந்து மீண்டான். எப்பேற்பட்ட பெண்! தோளில் கிடந்த காமிரா குறித்த பிரக்ஞை அப்போதுதான் வந்தது. அவளை கண்டிப்பாக புகைப்படம் எடுக்க வேண்டும். ஆனால் புகைப்படத்தில் இந்த பரிபூரணம் ஒருபோதும் பதியப்போவதில்லை. அது நிழலையும் ஒளியையும்தான் காட்டும். அவள் சருமத்தின் கருமையை சூழலே விழுங்கிக்கொள்ளும். அதைப் பதிவுசெய்ய ஓவியனின் தூரிகை வேண்டும். சருமத்தில் வெளிப்பட்ட அந்த ஒளியை இலைக்குருத்துக்களில் மட்டுமே அவன் கண்டிருக்கிறான். அதை எப்படி காமிரா பதிவுசெய்யும்? ஒருகணம் அவளை அவன் நிர்வாணமாகக் கண்டான். அவனுடைய பிரக்ஞை ஸ்தம்பித்துவிட்டது. முழுமை என்ற தனிச்சொல்லாக அகம் அப்படியே நின்றுவிட்டிருந்தது. பின்னர் படபடப்புடன் மெல்ல திண்ணையில் சாய்ந்து அமர்ந்துவிட்டான்.
அவளுடைய முழுமையான உடல் மேல் பட்டுத்துணிபோல பரவிப்பரவி வழிந்தாலும்கூட அவளுடைய மார்புகளில் இருந்து ஒருகணம்கூட தன் பிரக்ஞையின் மையம் விலகவில்லை என உணர்ந்தான். சிற்பங்களில் எப்போதுமே செப்புகவிழ்த்ததுபோல பெரிதாக திரட்சியாக செதுக்குவார்கள். இணைக்குவைகளாக, ஒன்று பிறிதொன்றுபோல அவை நெருங்கியிருக்கும். மனிதப்பெண்களின் முலைகள் ஒருபோதும் அப்படி இருப்பதில்லை. அவை மேலிருந்து சற்றே வழிந்து இரு பெரிய நீர்த்துளிகள் ததும்பி நிற்பது போலத்தான் இருக்கும். பெரும்பாலும் வலது முலை பெரிதாக சற்றே கீழிறங்கியிருக்கும். ஆனால் எளிய நீல ஜாக்கெட்டுக்குள் அவளுடைய முலைகள் சிற்பக்கல்முலைகள் போலவே இருந்தன.
பேச்சொலி கேட்டது. அவள் எவரையோ கூட்டிவருகிறாள் என்று எண்ணியதுமே அவனுக்குப் புரிந்துவிட்டது. ‘கைடு’ என்று யாரையோ கொண்டுவருகிறாள். எரிச்சலுடன் இது ஏன் தனக்கு தோன்றாமல் போயிற்று என எண்ணினான். இனி அவள்மீது பெய்து கொண்டிருக்கும் அவனுடைய உள்ளம் சிதறிக்கொண்டேதான் இருக்கும். ஒரு ஆண் கூடவே இருப்பதென்பது முற்றிலும் வேறு விஷயம். கசப்புடன் எழுந்தான். ஒரு கரிய இளைஞனுடன் அவள் புஜங்களைப் பற்றி சிரித்துப் பேசிக்கொண்டு கூடவே வந்தாள். அவர்களின் உறவு அப்போதே தெரிந்துவிட்டது. அவள் கழுத்தின் தாலியை அவன் நினைவுகூர்ந்தான்.
அந்த இளைஞன் சிற்பங்கள் செறிந்த தூண்கள் வழியாக வந்தபடியே “கும்பிடறேன் சாமி” என்றான். அவன் கூறிய முறையில் ஏதோ தவறிருந்தது. “வணக்கம்…” என்றான் கிருஷ்ணன் “நான் சும்மா சிற்பங்களை பார்த்துட்டு போலாம்னுதான் வந்தேன்…” இவன் வாட்ச்மேனா கைடா?
“எங்கூட்டுக்காரரு சாமி” என்றாள் அவள் “நல்லா எல்லாத்தையும் சொல்லுவாரு” அவள் இதழ்களுக்குள் இருந்து உப்புப்பரல்கள்கள் போல வெண்பற்கள் மின்னிச்சென்றன. அந்த சாதாரணச் சொற்களுக்கே ஏன் அந்த நாணமும் புன்னகையும் என்று தெரியவில்லை. அவன் மேல் அவளுக்கு அபாரமான காதல் இருக்கவேண்டும், அவன் புஜங்களை அப்போதும் லேசாக தொட்டிருந்தாள். அவனுடன் இருக்கையில் அவனைத் தொட்டுக்கொண்டே இருப்பாள் போல. அவனே அந்த தொடுகையால் கொஞ்சம் சங்கடமடைந்தவனைப்போல “எல்லாத்தையும் காட்டிடறேன் சார்” என்றான்.
“இல்லப்பா… நான்…” என்றான் கிருஷ்ணன். அவனது தயக்கத்தைப் பார்த்து அவன் “தொழிலைப்பாத்துட்டு நீங்க விருப்பப்பட்டா காசுகுடுத்தாபோரும் சார்” என்றான். என்ன ஒரு தன்னம்பிக்கை. பெரும்பாலான கைடுகளுக்கு நூறு சொற்றொடருக்குள் தெரிந்திருக்கும். அவற்றை அப்படியே ஒப்பிப்பார்கள். பெரும்பாலான கதைகள் அபத்தமாக இருக்கும். கிருஷ்ணன் “சரி… சாவி வேணுமா?” என்றான்.
“இல்ல சார், இங்கெல்லாம் பூட்டறதே கெடையாது” என்றான். கிருஷ்ணன் முன்னே சென்றான். அந்த இளைஞனின் முகவாய் அமைப்பில் ஏதோ சின்ன பிழை. அல்லது கழுத்திலா? மிகவும் சாதாரணமான முகம்தான் ஆனால் ஒரு வசீகரமிருந்தது. கன்னங்களில் புகைபடிந்தது போல மென்மையான தாடி. சுருண்ட கலைந்த தலைமயிர். மையத்தில் பூனைமயிராக இருந்து வாயோரங்களில் கொஞ்சம் கனத்த மென்மீசை. ஆனால் அவன் முகத்தில் ஏதோ ஒன்று இல்லை.
கிருஷ்ணன் சட்டென்று திரும்பியபோது அவள் அவன் நெற்றியை தன் முந்தானையால் ஒற்றுவதைக் கண்டான். அவள் அவன் திரும்பியதும் சுதாரித்து “ம்ம்” என்றாள். அவன் கிருஷ்ணனை நோக்கி வந்தபடி “இது பதினொண்ணாம் நூற்றாண்டிலே ஜடாவர்மன் குலசேகரன் கட்டின கோயில்சார்…… கிபி ஆயிரத்து நூத்து தொண்ணூறு முதல் ஆயிரத்து எரநூத்து பதினேளு வரைக்கும் மதுரையை ஆண்ட ஜடாவர்மன் குலசேகரன் தென்பாண்டிய நாட்டிலே கட்டின கோயில்கள் மொத்தம் ஏழு. இது அதிலே ரெண்டாவது… அதுக்குப்பின்னாடி திருமலைநாயக்கரோட தம்பி ரங்கப்பநாயக்கன் இதுக்கு ராயகோபுரம் எளுப்பி மகாமண்டபம் கட்டி சுத்துமதிலும் கட்டினார்…” என்றான்.
கிருஷ்ணன் அவர்கள் புதுத் தம்பதிகளா இருக்கும் என எண்ணிக்கொண்டான். இளைஞன் கிருஷ்ணன் அருகே வந்துகொண்டு “என் பேரு ராஜு சார்.. நமக்கு இந்த கோயில்தான் எல்லாமே… நமக்கு தெரியாம இங்க ஒண்ணுமில்ல..” என்றான்.
கிருஷ்ணன் அதிர்ந்து அனிச்சையாக பக்கத்துச் சிலையின் கால்களை பற்றிக்கொண்டான். அந்த இளைஞனுக்கு கண்கள் தெரியாது என அப்போதுதான் தெரிந்தது. அவனுடைய இமைகளுக்குள் இரு சிறிய சோழிகள் போல கலங்கிய வெள்விழிகள் அலைந்தன. ஆனால் மிக இயல்பாக நடந்தபடி “இங்க உள்ள சிற்பங்களெல்லாம் நாயக்கர்பாணி சிற்பங்களோட சரியான உதாரணம்னு படிச்சவங்க சொல்றாங்க. ஹிண்டு பத்திரிகையிலேகூட நல்ல போட்டோல்லாம் வந்திருக்கு சார்” என்றான்.
“உனக்கு கண் தெரியாதா?” என்றான் கிருஷ்ணன். அவன் சிரித்தபடி “இப்பதானா கண்டுபிடிச்சீங்க? தெரியாது சார்” கிருஷ்ணன் அவன் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தான். பார்வையிலாது ஏதோ விசித்திர வண்டு போல துள்ளிய வெள்விழி தொந்தரவு செய்தது. கையில் சாமரத்துடன் நின்ற பெண்சிலையைப் பார்த்தபடி “பிறவிலேயே தெரியாதா?” என்றான். “பாக்கிறதுன்னாலே என்னான்னு தெரியாது சார்.”
கிருஷ்ணனுக்கு சொற்கள் நழுவி நழுவிச் சென்றன. “…அது யாரு?” என்றான். அதன்பின்னர்தான் ஏன் அந்தக்கேள்வி என்று அவன் மனம் வியந்தது “ஊட்டுக்காரி சார்… இங்கதான் அவளும். அவங்கம்மா மார்க்கட்டுலே பூ கட்டிக்கிட்டிருந்தா… நான் பொறந்து வளந்தது எல்லாமே இங்கதான்… எங்கம்மா இங்கதான் பிச்சை எடுத்தா… அவங்கம்மா போயிட்டாங்க. அதான் கட்டிகிட்டேன்.” அவன் கண்களை இழந்தவர்களுக்குரிய அந்த கோணலுடன் மோவாயை தூக்கி மெல்லிய வெட்கத்துடன் சிரித்தான். “அதாச்சு சார் நாலுவருசம்.. ஒரு பொம்புளைப்புள்ளை இருக்கு… ரெண்டுவயசுலே.”
கிருஷ்ணன் திரும்பி அவளைப் பார்த்தான். அவள் மறுபடியும் பூகட்ட ஆரம்பித்திருந்தாள். தொங்கவிடப்பட்ட ஒரு கால் மட்டும் தெரிந்தது. “மல்லின்னு பேரு சார். நல்ல பொண்ணு…” கிருஷ்ணன் “குழந்தை எங்க?” என்றான் “வீட்ல அம்மாகூட இருக்கு சார். அம்மா இப்ப பிச்சைக்கு போறதில்லை. நமக்கு ஏதோ சுமாரா வருது சார்…போரும். வாங்க…”
கிருஷ்ணன் அவனைப் பார்த்தபடி மெல்ல பின்னால் சென்றான். “சார் இத பாத்தீங்கன்னா தெரியும். குறவன் செலை… தென்பாண்டிய நாட்டிலே நாயக்கர்கள் திருப்பணிசெஞ்ச எல்லா கோயில்களிலேயும் குறவன் குறத்தி செலை இருக்கும். குறவன் ஒரு ராஜகுமாரிய தூக்கிட்டு போறதுமாதிரி இருக்கும். குறத்தி ராஜகுமாரனை தூக்கிட்டு போவா….இதை எதுக்கு வச்சாங்கன்னு நெறைய ஆராய்ச்சிகள் இருக்கு சார். சும்மா அழகுக்காக வைக்கலை. அப்டீன்னா எல்லா கோயிலிலேயும் வச்சிருக்க மாட்டாங்க. குறவனைப் பாத்தீங்கன்னா அவன் சாதாரண மலைக்குறவன் மாதிரி இல்லை பாத்தீங்களா? அவன் இடுப்பிலே கட்டியிருக்கிற சல்லடம்கிற ஆபரணக் கச்சைய பாருங்க…என்ன ஒரு வேலைப்பாடு. சின்ன மணிகளை கோத்து கட்டியிருக்கிற மாதிரி இருக்கு. அந்த மணிகளை கோத்திருக்கிற கயித்த பாருங்க சார் மூணுபிரிக் கயிற முறுக்கினதுமாதிரி இருக்குல்ல… அதான்சார் நாயக்கர் காலத்து சிற்பக்கலை….”
கிருஷ்ணன் அத்தனை நுட்பமாக சிலைகளை பார்த்ததில்லை. அவன் விரல்களால் தடவிப்பார்த்தான் “சார் இதுக்கே மலைச்சிராதீங்க, இடுப்பிலே தொங்கவிட்டிருக்கான் பாருங்க உடுக்கு, அதுலே இழுத்துக்கட்டியிருக்கிற கயித்துலகூட மூணுபிரி முறுக்கு இருக்கு பாருங்க… குறவனோட கையிலே இருக்கிற குத்துவாளைப் பாருங்க சார். எவ்ளவு வேலைப்பாடு. அதோட பிடியிலே வைரங்கள் பதிச்சிருக்கிற மாதிரி செதுக்கியிருக்காங்க சார். அவனோட இடுப்பிலே கச்சமா கட்டியிருக்கிற வேட்டியோட நெளிவைப்பாத்தா அந்த துணி அவ்ளோ ஒசத்தீன்னு தெரியுதுல்ல சார்? கழுத்திலே அர்த்தசந்திர ஹாரம் போட்டிருக்கான் சார். அதிலே பதக்கங்கள் வரிசையா தொங்குது… ஆமா சார், அவன் குறவனில்லை. குறவ ராஜா. அவன் தலைப்பாகைய பாருங்க. என்ன ஒரு கம்பீரமா கட்டியிருக்கான்னு…”
கிருஷ்ணன் குறவனையே பார்த்துக்கொண்டு நின்றான். சில கணங்கள் கூர்ந்து நோக்கினால் அப்படியே உயிருடன் வந்து நிற்கும் சிற்பம் அது. “…இதுலே என்ன விசேஷம்னாக்க சார், தெய்வரூபங்களைச் செதுக்கிறப்ப பொதுவா எலும்புகள் தெரியிற மாதிரி செதுக்க மாட்டாங்க. ஆனா இந்தச் செலையிலே விலாவெலும்புகள் எவ்ளவு வரிவரியா தெரியுது பாத்தீங்களா? குறவன் ரொம்ப மெலிஞ்சு ஆனா உறுதியான உடம்போட இருக்கான் சார். அந்தக்காலத்திலே குறவராஜாக்களுக்கு பாண்டிய குலத்துலே களவுமணம் பண்றதுக்கு என்னமோ ஒரு உரிமை இருந்திருக்கு…” குறவனின் தோளில் சிறிய உருவமாக இளவரசி வெயிலுக்கு தன் முந்தானையை விரித்துப்பிடித்து அமர்ந்திருந்தாள்.
குறவனின் கண்கள் விரிந்து எருமைவிழிகள் போல விழித்தன “…குறவனோட பார்வைய பாத்தீங்களா சார்?” என்றான் ராஜு “உருட்டி மிரட்டுற மாதிரி பாக்கிறான். இதுக்கு சாஸ்திரத்திலே மகிஷ நயனம்னு பேரு… ஆனா அவன் நின்னுட்டிருக்கிறத பாத்தீங்களா, ஒரு காலை முன்னாடி வச்சு மத்த காலை பின்னுக்கு வச்சு மெல்ல குனிஞ்சு பதுங்கிறாப்ல நிக்கிறான்… இதுக்கு வியாஹ்ர பாவம்னு பேருசார்.. அதாவது புலிப்பதுங்கல்னு அர்த்தம்.”
“இதெல்லாம் யாரு சொல்லித்தந்தாங்க?” என்றான் கிருஷ்ணன். ராஜு “இங்க முன்னாடி அய்யங்காருசாமி ஒருத்தரு வருவாரு.. நார்ணசாமி ஆச்சாரியாருனு சொல்வாங்க. பெரியபடிப்பு படிச்சவரு… டேய் இந்தாடான்னு தினமும் எதாவது திங்கக்குடுப்பாரு.. அவரு சொல்லிக் கேட்டதுதான் சார். பாவம் பெரிய மனுஷன். போனவருஷம் தவறிட்டாரு “ என்றான். “இந்தப்பக்கம் நிக்கிறவ குறத்தி… பதினொரு அடி எட்டிஞ்சு உசரம்சார்…”
குறத்தியின் கனத்த கொண்டை தோளில் சரிந்திருந்தது. ஆண்மை ததும்பும் பெண்ணுடல். திடமான பெருமுலைகள். குடக்கழுத்து இடுப்பு. பிடிவாதமும் கர்வமும் தெரியும் முகபாவனை. இடுப்பில் நார்ப்பெட்டி பனைநாரால் முடையப்பட்டது போலவே பின்னல் தெரிய இருந்தது. “குறத்தி புள்ள பெத்த நடுவயசுக்காரி சார். அடிவயித்தப்பாருங்க… அலையலையா பிரசவவரி தெரியுது பாத்தீங்களா…கிட்டக்க போயி பாருங்க. அப்பதான் தெரியும்… முலைகள பாத்தா கன்னி கணக்கா இருக்கா. அது அவ எப்டிப்பட்ட ராஜச ரூபம்னு காட்டுதுசார்.. இளவரசனைப் பாத்தீங்கன்னா சின்னப்பையனை மாதிரி இருக்கான். அம்மாதோளிலே இருக்கிற மாதிரி ஜாலியா இருக்கான் பாத்தீங்களா… சிரிப்பைப் பாருங்க…”
கிருஷ்ணன் குறத்தி சிலையை நன்றாகப் பார்க்க பின்னால் நகர்ந்தான். “வழக்கமா பொண்ணுகளுக்கு முலை ஒண்ணு ஒசிஞ்சு ஒண்ணு வெலகி இருந்தாத்தான் சார் யதார்த்தமா இருக்கும். ஆனா சாமுத்ரிகா லட்சணப்படி சிலையச்செஞ்சா அப்டி செதுக்க முடியாது. சமமா பொண்ணு நின்னாக்க அதுல அழகு இல்ல. அந்தால வெளக்குநாச்சி செலைகள பாருங்க பொம்மைகணக்காத்தான் இருக்கும். அதுக்குத்தான் இப்டி செஞ்சிருக்கான். இதுக்கு சந்த்யாபத்ம நிலைன்னு பேருசார். அந்தியிலே தாமரைப்பூவு இதழ்மூடி கொஞ்சம் வாடி குழைஞ்சு நிக்கிறாப்ல நிக்கிறா பாத்தீங்களா? அப்டி வளைஞ்சு நின்னா ஒருமுலை முன்னால வந்து இன்னொண்ணு ஒசிஞ்சுடுது பாத்தீங்களா? அதான் அழகு… ஆனா இவ கன்னி இல்ல. அதான் முலைக்காம்பை இவ்ளவு பெரிசா செதுக்கியிருக்கான்….”
“இதெல்லாம் உனக்கு ஆச்சாரியார் பாத்து சொன்னாரா?” என்றான் கிருஷ்ணன் சிரித்தபடி. “சீச்சீ அவரு பெரிய மனுஷர் சார்… இதெல்லாம் நானே பாத்து தெரிஞ்சுகிட்டதுதான்.”
“பாத்தா?” என்றான் கிருஷ்ணன். ராஜு சிரித்தபடி “என்ன சார், பாத்துன்னா தொட்டுப் பாத்துதான். நான் வளாந்ததே இந்த கோயிலிலேதான். இங்க நான் ஒரு நூறுவாட்டியாவது தொடாத ஒத்தக் கல்லு கெடையாது. இந்தச்செலையை எல்லாம் ராத்திரிமுச்சூடும் தொட்டு தொட்டுப் பாத்திருக்கேன் சார். ஒரு ஆயிரம் பத்தாயிரம் வாட்டி. ஒரு கீறல் விழுந்தாகூட சொல்லிருவேன்…”
கிருஷ்ணன் ராஜுவின் முகத்தையே பார்த்தான். கண்ணுக்குப் பழகி அந்த முகத்தில் முதலில் தெரிந்த வெறுமை இல்லாமலாகிவிட்டிருந்தது. “இதான் சார் அகோர வீரபத்ரன்… அந்தப்பக்கம் அக்னி வீரபத்ரன். நேர் எதிரிலே ஊர்த்துவ வீரபத்ரன்…. மூணுபேருமே கொடூரமான கொலைசெய்ற நெலையிலே நிக்கிறாங்க. பதினாறு கையிலேயும் ஆயுதங்கள். கட்கம், கதை, மழு, சாபம்… ஆனா இது நெஜமான கொலை வெறித்தாண்டவம் கெடையாது சார். பாருங்க ஒரு டேன்ஸ் மாதிரித்தானே இருக்கு… ஒரு நிருத்யம்சார் இது… பீபத்ஸத்தையும் வீரத்தையும் எல்லாம் வெறும் ரஸமா மாத்தியிருக்கான்…”
அவனுக்கு அந்தச்சிலைகளைப்பற்றி தெரிந்தவற்றை பலநூறு பக்கங்கள் கொண்ட ஒருநூலாக எழுதிவிடலாமென தோன்றியது. கிருஷ்ணன் அந்த ஐயங்காரை நினைத்துக் கொண்டான். மூளை நிறைய சிற்பசாஸ்திர ஞானத்துடன் குடும்பத்தாலும் ஊராலும் உதாசீனப்படுத்தப்பட்டு இந்த கோயிலில் வந்து அமர்ந்திருப்பார் போல. கோயிலில் அலைந்த பிச்சைக்காரக் குழந்தையில் அனைத்தையும் ஏற்றிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் ஒருவகையில் தகுதியான சீடனுக்குத்தான் வித்தையை கொடுத்திருக்கிறார்.
“இது ரதி அந்தப்பக்கம் மன்மதன் சார்… தென்பாண்டிநாட்டுக் கோயில்களிலே எல்லாம் ரதிமன்மதன் சிலை இருக்கும். ஒருகாலத்திலே தாந்த்ரீகர்கள் தனி கடவுள்களா இவங்களை கும்பிட்டிருக்காங்க. அதனாலத்தான் இப்டி செதுக்கி வைச்சிருக்காங்க… இந்த கோயிலிலேயே அழகான செலைகள்னா இந்த ரதியும் மன்மதனும்தான் சார்… பெண்ணழகோட உச்சம்னா ரதி. ஆணாழகோட உச்சம் மன்மதன். பாருங்கசார், ரதி என்ன ஒயிலா அன்னப்பறவை மேலே அமர்ந்திருக்கான்னு. அவ உடம்பிலே எத்தனை நகையிருக்கு தெரியுமா? கழுத்திலே ஆரம் மட்டுமே பதினெட்டு போட்டிருக்கா சார். கைவளையும் கடகமும் தோள் வளையும் எல்லாம் உண்டு… நம்ம சாஸ்திரத்திலே சொல்லியிருக்கிற எல்லா நகையும் போட்டிருக்கா… ஆனா அவ உடம்பு நகையால மறையல பாருங்க… அவ உடலழகு நகைகளால ஜாஸ்திதான் ஆகுது… மார்பைப் பாத்தீங்கன்னா நகைகள்லாம் முலைவளைவிலே சரியா வளைஞ்சு வர்ரதினாலே அவளோட அழகான முலைகளோட வடிவம் மறையல..”
ராஜு அவள் கால்களை தொட்டுக் காட்டினான் “நகங்களைப் பாருங்க சார், பளபளன்னு சிப்பி கணக்கா இருக்கு. புலியோட கண்ணுமாதிரி சுதட்சிணையோட நகம் இருந்ததுன்னுட்டு காளிதாசன் சொல்றான் சார். அந்தமாதிரி நகம்… மின்னுது சார்… ஏன் நகத்தைப்போயி இப்டி செதுக்கியிருக்கான்? சார், நீங்க பாத்தீங்கனா எப்பேற்பட்ட அழகிக்கும் கால்நகம்தான் சார் அழுக்கா இருக்கும். உடம்பிலே ஒரு சத்து குறைஞ்சாக்கூட நகத்திலே தெரிஞ்சிரும். நகம் இப்டி இருந்தா அவளுக்கு அழகு பரிபூரணம்னு அர்த்தம்… கொஞ்சம் தள்ளி நின்னு பாருங்க…”
ராஜு மறுபக்கம் போனான் “இது மன்மதன். நம்ம செலைகளிலே மீசை வச்ச செலைகள் கம்மி. மன்மதன் அதிலே ஒருத்தன். உடம்புலே எப்டி ஒரு திமிரு பாத்தீங்களா? நல்ல திமிலு குலுக்கி வார பொலிகாளை மாதிரி இருக்கான்… காலை முன்னால தூக்கி வச்சிருக்கான். அதுல ஆசை தெரியுது பாத்தீங்களா? என்னிக்குமே ஆம்பிளதான் சார் முதல் ஸ்டெப் வைக்கணும்… நல்லாப் பாருங்க சார், மன்மதன் பார்வை ரதிமேலே. ஆனா ரதி அவனைப் பாக்கலை. அவ கண்ணு வெட்கி கீழே சரிஞ்சிருக்கு… மன்மதனோட இடது கையிலே கரும்புவில்லு. வலதுகையிலே முல்லைமலரம்பு… அந்த அம்பை அவன் கட்டைவிரலையும் சுட்டுவிரலையும் சேத்து பிடிச்சிருக்கிற விதத்தைப் பாருங்க… எவ்ளவு மெல்லிசா பிடிச்சிருக்கான்… பூவைபிடிக்கிறதுன்னா அப்டித்தான் சார் பிடிக்கணும்… பூ கசங்கப்படாது…” ராஜு புன்னகையுடன் “…அவன் கையோட நேரா கண்ணை வச்சு பாருங்க சார்… ரதியோட முலைக்காம்பு தெரியும்…”
ஆமாம். கிருஷ்ணன் வியந்து நின்றுவிட்டான். “அவன் கை சூட்சுமமா அந்த நுனியைத்தான் சார் பிடிச்சிருக்கு. முல்லை அரும்பை பிடிக்கிற மாதிரி அதை பிடிக்கணும்னு சொல்றதுசார் இந்தச் செலை” கிருஷ்ணன் மன்மதனின் கண்களைப் பார்த்தான். அவற்றில் அடங்கா பெருங்காமம் ஒரு மென்சிரிப்பாக ஒளிவிட்டது. ‘காமம்’ என்று உச்சரிப்பதுபோல் உறைந்த கல் உதடுகள்.
“மாமா” என்று அவள் குரல் கேட்டு கிருஷ்ணன் திரும்பிப் பார்த்தான். “என்னம்மா?” என்றான் ராஜு. “அரும்பு கட்டி தூண்பக்கத்துல வச்சிருக்கேன். போறப்ப எடுத்திட்டு போயிடு. நான் செல்வக்காகூட சந்தைக்கு போயிட்டு வந்திடுறேன்.” அவள் ஏன் காதலில் துவளும் கன்னிப்பெண் போல தயங்கிக் குழறி அதைச் சொல்கிறாள்? அவள் வலக்கை தலைமயிரைத் தள்ளி கழுத்தை வருடி இன்னொருகையில் பிளாஸ்டிக் வளையை உருட்டியது. உடல் மெல்லக்குழைந்தது.
கிருஷ்ணன் திரும்பி ராஜுவைப் பார்த்தான். அவன் புன்னகையுடன் முகவாயைத்தூக்கி “நான் பாத்துக்கறேன்மா… போய்ட்டு பத்ரமா வா” என்றான். அவள் கண்கள் ஒருகணம் கூட எங்கும் விலகவில்லை என்பதை கிருஷ்ணன் கவனித்தான். அவள் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதோ மேலும் சொல்ல வருவது போல அரைக்கணம் தயங்கிவிட்டு திரும்பிச் சென்றாள்.
“மன்மதன் கிட்ட எந்த ஆயுதமும் கெடையாது சார்… அந்தக் கரும்புவில்லும் மலரம்பும் மட்டும்தான்… இதோ அவன் காலிலே பாத்தீங்கன்னா..” ராஜு தொட்டுக்காட்டி சொல்ல ஆரம்பித்தான்.
***