காந்தியை எப்படி வகுத்துக்கொள்வது?

 இந்த விவாதம் இத்தனை தூரம் நீளுமென எதிர்பார்க்கவில்லை.  இது சாதாரணமான பேச்சாக ஆரம்பித்து மெல்லமெல்ல வளர்ந்த நூல். ஆகவே இந்நூலின் அமைப்பில் ஒரு சமமின்மை உள்ளது. ஆரம்பகாலக் கட்டுரைகள் எளிமையான பதில்களாக இருக்கையில் பின்னர் வந்த கட்டுரைகள் பெரிய விளக்கங்களாக இருக்கின்றன.

வந்துசேர்ந்தவற்றில் இன்னமும் பல கேள்விகள் பதிலளிக்கப்படாமல் உள்ளன.  ஜெ.சி.குமரப்பா, தரம்பால், சுந்தர்லால் பகுகுணா, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, முகமதுயூனுஸ், வங்காரி மாதாய் போன்ற இருபது நவீன காந்தியர்களைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் சேர்க்கப்படவில்லை. அவை தனி நூலாக வெளிவரும். எங்காவது நிறுத்திக்கொள்ளவேண்டுமே என்பதற்காக இங்கே முடிக்கிறேன்.

நான் காந்தியை ‘முன்வைக்க’ விரும்பி இக்குறிப்புகளை எழுதவில்லை. காந்தியை புரிந்துகொள்ளும்பொருட்டே எழுதினேன். அது இருபது வருடங்களுக்கும் மேலாக என்னிடம் தொடரும் ஒரு செயல்பாடு. இது ஒரு படி மட்டுமே. இந்த விவாதத்தின் ஒட்டுமொத்தமாக காந்தியை நான் எவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன் என்று சொல்ல முயல்கிறேன்.

காந்தியை ஒரு மெய்ஞானியாக நான் எண்ணவில்லை.  காந்தி   தன் காலகட்டத்தை நேர்மையாக எதிர்கொண்ட ஒரு செயல்வீரர். வாழ்க்கையின் அடிப்படைகளை நோக்கி தன் தேடலை எப்போதும் திறந்து வைத்திருந்த தத்துவவாதி. எந்த ஒரு விஷயத்தையும் தன்னுடைய சொந்த அனுபவத்தளத்திற்குள் கொண்டுவந்து, தன் சொந்த தர்க்க புத்தியைக் கொண்டு பரிசீலனை செய்தவர். தன்னுடைய சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் எப்போதும் மாற்றுத்தரப்புடன் விவாதத்திற்கு வைத்திருந்தவர். விவாதம் மூலம் தன்னை தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டு முன்னகர்ந்தவர்.

காந்தி புரிந்துகொள்ளமுடியாத கிறுக்குத்தனங்களும் பிடிவாதங்களும் உடையவர். அவரது சிந்தனைகளில் பழங்கால ஒழுக்கவியல் அம்சங்கள் பல இருந்தன. அவை இன்று ஏற்கத்தக்கவை அல்ல. அவர் தனக்கென கடைப்பிடித்த பல முறைகளும் நிராகரிப்புக்குரியவை. ஆனால் தன் வாழ்க்கையை முழுமையாகத் திறந்து வைத்து தன்னை விவாதிக்கும்படி அறைகூவியவர் அவர்.

காந்தி தான் வாழ்நாள் முழுக்க வெளிப்படையாக நேர்மையாக இருக்க முயன்றவர். எது தன் நம்பிக்கையோ அதில் தன்னையும் தன் குடும்பத்தையும் முழுமையாக ஈடுபடுத்தியவர். எந்த விளைவுக்கும் அஞ்சாதவர். ஒருபோதும் பிறருக்காக தான் நம்பாத விஷயத்தைச் செய்ய முன்வராதவர்.

காந்தி உருவாக்கிய போராட்ட வழிமுறையான அகிம்சை-சத்யாக்கிர முறையே ஜனநாயக யுகத்திற்கு முற்றிலும் பொருத்தமானதாகும். உண்மையான அதிகாரம் சமூகத்தின் கருத்தியலில் உள்ளது என்று உணர்ந்து நீடித்த பிடிவாதமான போராட்டம் மூலம் அதை மெல்லமெல்ல மாற்றுவதற்கான முயற்சியே காந்தியின் போராட்டமுறை. மேலும் மேலும் அதிகமான மக்கள் பங்கேற்பு, போராடும் தரப்பு தன்னை அறம்சார்ந்து மேம்படுத்திக்கொண்டே இருப்பது ஆகியவை அதன் விதிகள். அது நிலையான நீடித்த பயனளிப்பது. அழிவுகள் அற்றது. முழுக்கமுழுக்க ஜனநாயகபூர்வமானது.

காந்தி மாற்று உலகுக்கான ஒரு கனவை முன்வைத்தார். மையநிர்வாகத்தின் சுமை இல்லாத, பெரும் உற்பத்தி வினியோக முறைகளின் சிக்கல் இல்லாத, தொழில்நுட்பத்தின் வன்முறை இல்லாத ஒரு உலகக் கட்டுமானம். சிறிய அலகுகள் தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு பன்மைச்சமூக அமைப்பு அது. அதை காந்தி இந்தியாவில் ஏற்கனவே இருந்த அமைப்புகளில் இருந்து கற்றுக்கொண்டார்

காந்திய கிராம தரிசனம் ஒரு முழுமையான சித்தாந்தம் அல்லது திட்டம் என்று நான் கருதவில்லை. ஆனால் அது இன்றைய உலக அமைப்புக்கு மாற்றான ஒரு சாத்தியக்கூறு.  ஒரு விதை. அந்த அடிப்படை எண்ணத்திலிருந்து சிந்தனையாளர்கள் முன்னே செல்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பற்பல உலக உருவகங்கள் அர்த்தமிழந்து வரும் இன்று காந்தியம் பல்வேறு தரப்பைச் சேர்ந்த சிந்தனையாளர்களை தூண்டக்கூடிய ஒன்றாக உள்ளது. ஆகவே இன்று அது மிக முக்கியமான ஒன்று.

ஆகவே இருபதாம் நூற்றாண்டுகண்ட சிந்தனையாளர்களில், ஆளுமைகளில் காந்தியே முதன்மையானவர்.

காந்தி குறித்த கட்டுரைகளின் தொகை நூலான ‘இன்றைய காந்தி’யின் பின்னுரை. தமிழினி வெளியீடு

முந்தைய கட்டுரைஒளி வாழ்த்து!
அடுத்த கட்டுரைஈரோடு நூல்வெளியீடு பங்கேற்பாளர்கள்