பகுதி ஒன்பது : பொன்னகரம்
[ 7 ]
ஹிரண்யவாகா நதிக்கரையின் காட்டில் சுவர்ணை தன் மைந்தன் ஏகலவ்யன் முன் இருளில் அமர்ந்து சொல்லலானாள். விழிகள் இருளில் இரு கருங்கல் உடைவுமுனைகள் போல மின்னித்தெரிய ஏகலவ்யன் கைகளை முழங்காலில் கோர்த்துக் கொண்டு அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“மைந்தா, வேர்க்கிளையில் எழுந்து இலைக்கிளை விரித்து மண்ணையும் விண்ணையும் நிறைத்த நம் முதுமூதாதையரான அசுரர் குலத்து வரலாற்றை நீ அறிக. மண்ணிருக்கும் வரை, மண்ணில் நீர் இருக்கும் வரை, நீரை அறியும் வேர் இருக்கும் வரை, அழியாதது அசுரர் குலம். காட்டுத்தீயில் காடழியும், வேரழியாது என்றறிக. உயிர்க்குலங்கள் அழியும். மண்ணின் ஆழத்தில் அழியா நினைவென புழுக்களில் என்றும் நெளிந்துகொண்டுதான் இருக்கும். தேவர்கள் விண்ணில் இருந்து மண்ணுடன் விளையாடுவர். நாம் மண்ணிலிருந்து விண்ணுடன் ஆடுவோம்” என்றாள் சுவர்ணை.
“ஆதிமுதல் நாகமான தட்சகனுக்கு மகளாகப் பிறந்தவள் திதி. கரியபெருநாகமான அவள் எரிவிண்மீன் என மின்னும் செவ்விழிகளும் முடியா இரவென நீண்டு ஆயிரம்கோடிச் சுருள்களாக வெளியை நிறைத்த பேருடலும் கொண்டவள். அவள் காசியபபிரஜாபதியை மணந்து பெற்றவர்கள் அசுரகுலத்தின் முதல்மூதாதையர். ஆகவே அவர்களை தைத்யர்கள் என்று சொல்வது மரபு. அவர்களில் பெரும்புகழ்கொண்டவர் தாரகர். வித்யூபதம் என்னும் வான்நகரை படைத்து அங்கே ஆட்சிசெய்த தாரகர் தேவர்களை வென்று அடக்கினார். எனவே தேவசேனாபதியான கொல்வேல் குமரனால் அழிக்கப்பட்டார்.”
“மண்ணாகி மறைந்த தாரகாசுரரின் மைந்தர்கள் மூவர். தாராக்ஷர், கமலாக்ஷர், வித்யூமாலி. தாரகாசுரரின் மறைவுக்குப்பின் அவரது பொன்னகரமான வித்யூபதம் சிதைந்து மண்ணில் விழுந்து அழிந்தது. அவருடைய மைந்தர்களான தாராக்ஷர், கமலாக்ஷர், வித்யூமாலி மூவரும் ஆயிரம் வருடம் காமகுரோதமோகங்களை அடக்கி கடுந்தவம் செய்தனர். மும்மலங்களையும் சுருக்கி ஒரு கடுகளவாக்கி கடுகை அணுவளவாக்கி அதை தங்கள் ஆன்மாவில் அடக்கி பிரம்மனை நோற்றனர். எழுந்துவந்த நான்முகனிலிருந்து படைப்பின் விதிகளனைத்தையும் கற்றனர்.”
“பிரம்மனின் மைந்தனாகிய மயனை வரவழைத்து தங்களுக்கென ஒளிநகர் ஒன்றை அமைக்க ஆணையிட்டனர். ‘எவ்வகை நகர்?’ என்றான் மயன். ‘என்றுமழியாதது’ என்றார்கள் மூவரும். மயன் அவர்களுக்காக திரிசிருங்கம் என்னும் விண்ணில் பறக்கும் மலைகளின் மூன்று சிகரங்களுக்குமேல் திரிபுரம் என்னும் மாநகரை அமைத்தான். ஆயிரம் கோபுரங்களும் ஐம்பதாயிரம் மாளிகைகளும் ஐந்துலட்சம் இல்லங்களும் ஐந்து கோட்டைகளும் ஐம்பது அணிமுகப்புகளும் கொண்ட நிகரற்ற அந்த மாநகர் நன்மையனைத்தையும் உள்ளே இழுக்கும் வாயில்களும் தீமையனைத்துக்கும் தானே மூடும் கரியகதவங்களும் கொண்டிருந்தது.”
“மூன்று மலையுச்சிகளில் மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்ட அந்நகரின் முதல்புரம் காரிரும்பால் ஆனது. லோகபுரி என்றழைக்கப்பட்ட அதை வித்யூமாலி ஆட்சிசெய்தார். வெள்ளியாலான இரண்டாவது புரம் ரஜதபுரி என்றழைக்கப்பட்டது. அதை கமலாக்ஷர் ஆட்சி செய்தார். பொன்னிழைத்து எழுப்பப்பட்ட மூன்றாவது புரமான சுவர்ணபுரி தாராக்ஷரால் ஆட்சி செய்யப்பட்டது. அசுரகுலங்கள் அந்த விண்ணகரங்களில் எடையற்ற உடலுடன் காலையில் பொன்னிறம்கொண்டும் இரவில் வெண்ணிறம் கொண்டும் வாழ்ந்தனர். ஒன்பது அன்னைதெய்வங்களின் ஆலயங்கள் அங்கே அமைந்தன. அவை ஒன்பது செந்நிற விண்மீன்கள் போல பகலிலும் இரவிலும் வானில் சுடர்விடக்கண்டனர் மண்வாழ் மக்கள்.”
“மயன் அந்நகரங்களை பாதுகாக்கும் பொறி ஒன்றை அமைத்திருந்தார். அம்மூன்று புரங்களும் என்றும் தனித்தனியாகவே விண்ணில் மிதந்தலைய வேண்டும், ஒருபோதும் அவை ஒன்றையொன்று முட்டக்கூடாது. ஆயிரம் வருடங்களுக்கொருமுறை அவை ஒன்றாக இணைந்து ஒரே ஒருகணம் ஒற்றைப்பெருநகராக ஆகும். அப்போது மட்டுமே உடன்பிறந்தார் ஒருவரை ஒருவர் சந்திக்கவேண்டும். ஒருவரை ஒருவர் அவர்கள் விழிகண்டு மனம்தொட்டு மகிழ்ந்த மறுகணமே நகரங்கள் மீண்டும் பிரிந்து தனித்தனியாக மிதந்தலையும். அவை ஒன்றாக இருக்கையில் மட்டுமே அதை எவரும் வெல்லமுடியும் என்றார் மயன். தனித்தனியாக இருக்கையில் எவர் அதிலொன்றைத் தாக்கினாலும் பிற இருநகரங்களும் எதிரியைவிட மும்மடங்கு பெரிதாகி அவரைச் சூழ்ந்துகொள்ளும்.”
“சுவர்ணபுரியிலமர்ந்த தாராக்ஷர் விண்ணுலகையும் வென்று தன் அரசாக்க உளம்கொண்டார். அவரது படைகள் வெளி நிறைத்து மழையெழுந்ததுபோல மின்னியும் இடித்தும் ஒலித்தும் ஓங்கியும் தேவர்நாட்டை சூழ்ந்து அமராவதியை அழித்தன. எண்ணரிய செல்வங்கள் மண்டிய இந்திரனின் கருவூலத்தை உரிமைகொண்டன. ஐராவதமும் வியோமயானமும் நந்தகியும் பாரிஜாதமும் தாராக்ஷருக்குரியவை ஆயின. தப்பி ஓடிய இந்திரனும் சுற்றமும் சென்று சிவன் காலடிகளில் சரணடைந்தனர். ‘எங்களைக் காத்தருள்க தேவா’ என்றனர்.”
“முக்கண் தழலெரிய மூலத்திசையில் ஒரு செம்பிழம்பாக எழுந்த ஆதிசிவன் தாராக்ஷரிடம் ‘எல்லைகளை எவரும் முடிவிலாது விரிக்கமுடியாது அசுரனே, திரும்பிச்சென்று உன் திரிபுரத்தை மட்டும் ஆட்சிசெய்’ என்று ஆணையிட்டார். ‘அரசன் என்பவன் ஆணைகளை ஏற்காதவன்’ என்று தாராக்ஷர் மறுமொழியுரைத்தார். ‘நீ அசுரன், நான் விண்ணாளும் தெய்வம். என் சொல் முக்காலத்தையும் ஆளும்’ என்றார் சிவன். ‘ஆம், ஆனால் நான் வாழ்வது மண்ணுக்குள் நெளியும் புழுக்களின் வேர்களின் அகாலவெளியில். என் தெய்வங்கள் முலைகளும் வயிறுகளும் கண்களும் கருணைச்சிரிப்புகளுமாக கோயில் கொண்ட மூதன்னையர் மட்டுமே’ என்றார் தாராக்ஷர்.”
“சினமெழுந்து ‘எடு உன் படைக்கலத்தை’ என்று கூவி சிவன் தன் மும்முனைவேலை எடுக்க தன் அனல்வில்லுடன் தாராக்ஷரும் எழுந்தார். அவர்கள் இடியோசையில் வான் அதிர, திசைகள் மின்னல்களால் கிழிந்து துடிதுடிக்க விண்நிறைத்துப் போர் புரிந்தனர். தாராக்ஷரை சிவனால் வெல்லமுடியாதென்று உணர்ந்த அவர் தேவி அவருக்கு தந்திரம் உரைத்தாள். அதன்படி சிவன் மயனை அழைத்து விண்ணில் மாகேஸ்வரம் என்னும் நகரை எழுப்பி அங்கே தன் பாடிவீடுகளை அமைத்தார். அங்கே தேவர்கள் அனைவரும் கூடி பெரும்போருக்கு ஒருக்கம் கொண்டனர். முப்புரம் ஒன்றாகும் ஒற்றைப்பெருங்கணத்திலேயே அதை அழிக்கமுடியுமென்றறிந்த சிவன் நாரதரின் உதவியை நாடினார்.”
“விண்ணுலாவியான நாரதர் மூன்று அரசர்களின் இல்லங்களுக்கும் சென்று தேவியரைச் சந்தித்து அவர்கள் நெஞ்சில் ஆசையை உருவாக்கினார். தாராக்ஷரின் அரசியான சுரபி தன் கொழுநரிடம் அமராவதியை வென்ற அவர் முப்புரத்தையும் ஏன் ஒருகுடைக்கீழ் ஆளக்கூடாதென்று கேட்டாள். அவளை இகழ்ந்து பேசி விலக்கினாலும் ஒவ்வொருநாளும் அவள் சினந்தும் நயந்தும் அழுதும் தொழுதும் அவரிடம் அதையே சொல்லிக்கொண்டிருந்தமையால் மெல்ல அகத்திரிபடைந்தார். அவ்வண்ணமே கமலாக்ஷரின் அரசி பிரபையும் வித்யூமாலியின் துணைவி விரூபையும் அவர்கள் உள்ளத்தை திரிபடையச்செய்தனர்.”
“முப்புரத்தையும் ஒன்றாக இணைக்கவேண்டுமென தாராக்ஷர் தன் தம்பியருக்கு தூதனுப்பினார். இனி மூன்றுபுரமும் தன்னாலேயே ஆளப்படும் என்றார். அவர்கள் சினந்தெழுந்து அவருடன் போருக்கு வந்தனர். மூன்று பேரரசர்களும் வில்குலைத்து ரதங்களில் ஏறி விண்ணில் பறந்து போரிட்டனர். அசுரகுலத்தவரின் போரில் விண்வெளி குருதியால் நனைந்து சிவந்து வழிந்தது. மண்ணிலுள்ள ஆறுகளெல்லாம் குருதிப்பெருக்காயின. கோடானுகோடி இலைநுனிகளில் கொழுத்து சொட்டிய குருதிகளால் அரளியும் தெச்சியும் காந்தளும் என ஆயிரம் செந்நிற மலர்கள் விரிந்தன. வெட்டுண்டு விழுந்த நிணங்கள் செக்கச்சிவந்த மலைகளாக இன்றும் குவிந்து இறுகிக்கிடக்கின்றன.”
“மாகேஸ்வரத்தில் சிவனும் தேவர்களும் தருணம் நோக்கியிருந்தனர். மூன்று உடன்பிறந்தாரும் போரிட்டுக்கொண்டிருக்கையில் மூன்று நகரங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டதை அவர்கள் அறியவில்லை. ‘இதோ இதோ’ என தேவர் துந்துபி எழுப்பி அறைகூவினர். ‘இக்கணம் இக்கணம்’ என்று அரியும் அயனும் எக்களித்தனர். மந்தரமலைத்தொடரை மண்ணில் இருந்து விண்ணுக்குத் தூக்கி வில்லாக்கி பாதாளத்தின் அரசனாகிய வாசுகியை எடுத்துநாணாக்கி மயன் அமைத்த சூரியசந்திரர்களைப்போன்ற சக்கரங்கள் கொண்ட ரதத்தில் ஏறி வந்த சிவன் தன் நெற்றிக்கண்ணின் நெருப்பை அம்பிலேற்றி தொடுத்து முப்புரங்களையும் எரித்தழித்தார். மூன்று அசுரப்பேரரசர்களும் தங்கள் சுற்றமும் படையும் சூழ எரிந்தழிந்தனர்.”
“எரிந்தது முப்புரம்… ஒப்புரவெனும் பாடத்தை அசுரர்குலத்துக்களித்த அதன் கதையை இன்றும் பாடுகின்றனர் நம்குடிப்பாடகர்கள்” என்றாள் சுவர்ணை “தந்தையை எரியில் இழந்த தாராக்ஷரின் மைந்தரான அசுரேந்திரர் மண்ணுக்கு வந்து நர்மதை நதிக்கரையின் காட்டுக்குள் எளிய குடில்களை அமைத்துக்கொண்டு வேட்டையாடி தன் குடிகளுடன் வாழ்ந்தார். அவரது துணைவி மங்கலகேசி நல்லறத்தில் அவரை வென்றவள். இருவருக்கும் மகளாக சுரசை என்னும் திருநாமத்துடன் பிறந்தவள் அசுரகுலத்து மூதன்னை மாயை. நம் ஊர்முகப்பில் கையில் மகவுடன் நூறு மைந்தர் சூழ்ந்திருக்க கோயில்கொண்டிருப்பவள் அவளே.”
“இளமையிலேயே சுரசையை அசுரகுலத்து முதற்குரு சுக்ரரிடம் கல்விகற்கும்பொருட்டு அனுப்பினார் அசுரேந்திரர். அவளுக்கு மாயை என்று மறுபிறவிப்பெயரிட்டு ஏற்றுக்கொண்டார் சுக்ரர். விண்ணெனும் மாயையையும் மண்ணெனும் உண்மையையும், அறிவெனும் பொய்யையும் அறிதலெனும் மெய்யையும், அடைதலெனும் கனவையும், ஆதலெனும் நனவையும் முறைப்படி ஆசிரியரிடமிருந்து அவள் கற்றுத்தேர்ந்தாள். அன்னையறியாத ஞானமென ஒன்றிலாமலாயிற்று. அவள் கருப்பையில் குடிகொண்டிருந்த வேட்கை அவளை பேரழகியாக்கிற்று.”
“சீர்குலைந்துகிடந்த தன் குலத்தை மீட்டெடுக்க அன்னை உளம் கொண்டாள். குளிர்ந்த பசுங்காடு வடிவில் அவளைச் சூழ்ந்திருந்த அழிவற்ற முதற்காசிய பிரஜாபதியிடமிருந்தே விதைகொண்டு கருவுற்று கருநிறமும் எரிவிழியும் தடந்தோளும் தாள்தோய் கரங்களும் சுரிகுழலும் அரிகுரலும் கொண்ட சூரபதுமரைப் பெற்றாள். சிங்கமுகன் யானைமுகன் என்னும் இரு இளையோரும் அஜமுகி என்னும் தங்கையும் அவள் வயிற்றில் பிறந்தனர். அசுரகுலத்தின் அனைத்து அன்னையரின் வயிறுகளையும் ஒன்றாக்கி அத்தனை மைந்தர்களையும் குருதிதொட்டு உடன்பிறந்தாராக்கி தன் முதல்மைந்தன் சூரபதுமரை லட்சம் கைகள் கொண்டவராக மாற்றினாள் மாயாதேவி.”
“சூரபதுமர் தன் அன்னையையே குருவாகக் கொண்டு மெய்யறிதல் பெற்று சுடலையமர்ந்த சிவனை தவம் செய்து அனைத்து ஆற்றல்களையும் அடைந்தார். அழியா வரம் கேட்ட சூரபதுமரிடம் சிவன் ‘அசுரகுலத்தரசே, விண்ணவரான தேவர்களுக்கு காமகுரோதமோகங்கள் இல்லை. ஆகவே அவர்களுக்கு அழியாவரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அசுரர்களை ஆள்வது பேராசையும் பெருஞ்சினமும் பேரன்பும் பெருங்கொடையும் என்றறிக. அவற்றை இழப்பாயென்றால் அழிவின்மையை அளிக்கிறேன்’ என்றார். ‘இறைவா, ஆயிரம் பல்லாயிரம் ஊழிக்காலம் என் மூதாதையரை ஆக்கிய நற்குணங்களை இழந்து அழிவின்மையைப்பெற்று நான் என்ன செய்வேன்? எக்குணங்கள் புல்லுக்கும் புழுவுக்கும் உள்ளதோ அக்குணங்களெல்லாம் எனக்கும் வேண்டும்’ என்றார் சூரபதுமர்.”
“சிவன் ‘அவையனைத்தும் உன்னிலும் திகழ்க’ என்றார். ‘அவ்வண்ணமென்றால் என்னை ஐம்படைத்தாலி கழற்றப்படாத, மழலைச்சொல் மாறாத மைந்தனன்றி எவரும் கொல்லலாகாது என்று வரம் தருக’ என்றார் சூரபதுமர். ‘அவரது படைகளில் அன்னையர் மட்டிலுமே அமைக.’ ஆதிசிவன் ‘அவ்வாறே ஆகுக!’ என்று அருளி மறைய அந்தி வெளிச்சம் எஞ்சுவதுபோல விண்சரிவில் அவரது இறுதிப்புன்னகையே நிலைத்திருந்தது. வரம் பெற்று மீண்ட சூரபதுமர் மாயாதேவியின் பாதம் பணிந்து அவள் ஆணைப்படி மூதாதையரை முழுக்க அழைத்து குலவேள்வி ஒன்றுசெய்து தன் தம்பியரை பெருக்கினார். தானடைந்த அனைத்தும் தம்பியருக்கும் உரியதே என்றார்.”
“மும்மூர்த்திகளும் நாணொலி கேட்டு அஞ்சும் இந்திரஞாலமென்னும் வில் கொண்ட சூரபதுமர் விண்ணேறிச்சென்று இந்திரனை வென்று அழிவின்மையின் அரியணையில் அமர்ந்தார். மாயையின் கால்தொட்டு வணங்கி மூவுலகங்களையும் வெல்லக்கிளம்பிய சூரபதுமர் மேகப்படிக்கட்டுகளில் ஏறிச்சென்று அமராவதியை அடைந்தார். அவரைக் கண்டதும் இந்திரனும் இந்திராணியும் குயில்களாக மாறி விண்ணின் ஆழத்தில் பறந்து மறைந்தனர். மீண்டும் அமராவதியும் இந்திரனின் சுவர்ணபுரி என்னும் மாளிகையும் அசுரர்வயமாகியது. தேவர்களை வென்று அடைந்த பெருஞ்செல்வத்தால் தென்னாட்டில் தென்குமரிக் கடலுக்குள் மகேந்திரமலைச் சிகரத்தின்மேல் வீரமாகேந்திரம் என்னும் பெருநகரை அமைத்தார். நூறு கோட்டைகள் சூழ்ந்த ஆயிரம் வாயில்கள் கொண்ட ஐம்பதாயிரம் காவல்மாடங்களும் ஐந்து லட்சம் மாளிகை மாடங்களும் கொண்ட அப்பெருநகரைப்போன்ற ஒன்றை மண்ணவரும் விண்ணவரும் முன்பு கண்டதில்லை. அங்கே தன் தம்பியர் யானைமுகத்துத் தாருகனும் சிங்கமுகனும் இருபக்கமும் நின்று தொண்டுசெய்ய இந்திரனையும் வெல்லும்படி ஆட்சி செய்தார்.”
“தன் முதுதந்தை தாரகரும் தாராக்ஷரும் அமர்ந்த அவ்வரியணையில் தானும் அமர்ந்து மண்ணுக்குள் தீ நெளியும் ஆழத்தில் வாழ்ந்த அவர்களை உவகை கொள்ளச்செய்தார். அவர்களின் புன்னகையால் மண்ணிலெழுந்த காடுகளில் வெண்மலர்கள் விரிந்து காடு சிரித்தது.”
“திசைத்தேவர்கள் நால்வரும் சூரபதுமரிடம் தோற்றோடினர். திசைநான்கும் அவனுடைய மயில்சின்னம் கொண்ட பொன்னிறக் கொடியே பறந்தது. மயனின் மகளாகிய பதுமகோமளையை மணந்த சூரபதுமருக்கு பானுகோபன், அக்னிமுகன், ஹிரணியன், வச்சிரபாகு என்னும் மைந்தர்கள் பிறந்தனர். தன் தம்பி சிங்கமுகனுக்கு ஆசுரம் என்னும் மாநகரை அமைத்தார் சூரபதுமர். அவர் விபுதை என்னும் அரசியை மணந்து மகாசூரன் என்னும் மைந்தனுக்குத் தந்தையானார். தாருகனுக்கு மாயாபுரம் என்னும் நகரை அமைத்தார். தாருகன் சவுரிதேவியை மணந்தார். அதிசூரன் என்னும் வீரமைந்தனைப்பெற்றார்.”
“விண்ணவரை தன் ஏவலராகக் கொண்டு மூவுலகையும் ஆண்டார் சூரபதுமர். வருணன் அவருக்காக கடல்களில் மீன்பிடித்தான். இந்திரன் அவருக்காக காடுகளில் வேட்டையாடி ஊன்கொண்டுவந்து அளித்தான். எமன் அவருடைய அரண்மனை யானைகளை மேய்த்தான். அஸ்வினிதேவர்கள் குதிரைகளை மேய்த்தனர். வாயு அவரது அரண்மனை வாயிலில் காவல் இருந்தான். சோமன் அவருடைய அரண்மனையில் நீர் இறைத்தான். அக்னி அவரது சமையற்காரனாக இருந்தான். சூரியனும் சந்திரனும் அவர் அரண்மனையை இரவும் பகலும் ஒளியாக்கினர். அவரது பாதங்களை தேவர்கள் பணிந்து ஏவல்செய்தனர்.”
“அறம் நீர், அது பள்ளங்களை நிறைக்கிறது. மறம் அழல். அது தொட்டதனைத்தையும் தானாக்கிக் கொள்கிறது. வெற்றியிலிருந்து வெற்றிக்குச் சென்ற சூரபதுமர் அசுரர்குலமன்றி அனைவர் கருவாயில்களையும் மூடும்படி ஆணையிட்டார். மண்ணில் மானுடர் பெருகாதழிய விண்ணில் தேவர்களுக்கு அவி கிடைக்காதாயிற்று. மழைபொய்த்த காட்டின் மரங்களாக தேவர்கள் ஆயினர். அன்னை மாயை மைந்தரிடம் அது அறமல்ல என்றுரைத்த சொல்லை அவர்கள் செவிகொள்ளவில்லை. பெண்ணையும் நீரையும் காற்றையும் கடலையும் எவரும் உரிமைகொள்ளலாகாது என்று அன்னை சொன்னாள். மூவுலகிலுமுள்ள அனைத்தும் முற்றரசாகிய, வீரமாகேந்திரத்துக்கே உரியது என்றார் சூரபதுமர்.”
“விண்ணவர் சென்று சிவனிடம் முறையிட அவர் தன் மைந்தனிடம் செல்லும்படி அவர்களுக்கு ஆணையிட்டார். தேவர்குலத்தின் விழிநீர் தன் வாயிலை நனைப்பதுகண்டு சிவனின் இளமைந்தன் தன் சின்னஞ்சிறு வடிவேலேந்தி சிறுசேவடி எடுத்துவைத்து போருக்கெழுந்தான். அவன் மழலையழகு கண்டு விண்ணிலும் மண்ணிலும் வாழ்ந்த அத்தனை அன்னைதெய்வங்களும் படைக்கலம் ஏந்தி அவன் பின்னால் அணிவகுத்துவந்தனர். தென்கடல் ஓரத்தில் திருச்சீரலைவாய் படைவீட்டில் அன்னையர் கூடினர். அந்தப் பெரும்படை கிளம்பி வந்து வீரமாகேந்திரத்தைச் சூழ்ந்தது.”
“பொங்கும் சினத்துடன் விண்பிளக்கும் ஒலியெழுப்பி தன் வில்லும் வாளுமேந்தி கோட்டைமுகப்பிற்கு வந்த சூரபதுமர் தன் முன் ஐம்படைத்தாலி கொண்ட மார்பும் கிண்கிணி ஒலிக்கும் கழலும் அரைநாணும் சிறுகுடுமியுமாக வந்து நின்ற குழந்தையையும் அவன் பின்னால் நிரை வகுத்து நின்ற அன்னையரையும் கண்டு திகைத்தார். அவ்வன்னையரில் தன் குலத்து மூதன்னையரும் நிறைந்திருக்கக் கண்டு செயலிழந்தார். போர்ச்சங்கை ஊதி முருகன் வீரமாகேந்திரத்தை நோக்கி படைகொண்டெழுந்தார்.”
“தம்பியரும் தானைத்தலைவர்களும் அணிவகுத்து தன்பின் வர சூரபதுமர் இளமைந்தனுடன் போரிட்டார். முன்னர் வகுக்கப்பட்ட ஊழ் வந்து களத்தை கைகொண்டது. தம்பியரும் மைந்தரும் தலையறுந்து களம்படக் கண்ட சூரபதுமர் ஆயிரம் தடக்கைகளும் நூறு தலைகளுமாக பெருகி எழுந்து வேலனை எதிர்த்தார். அவர் தலைகளை வெட்டி வீழ்த்தி கரங்களைக் கொய்தெறிந்து களத்தில் வீழ்த்தினான் சிவமைந்தன். அவரது குருதி வழிந்து ஓடிய ஆறு தென்பாரதநாட்டில் தாமிரநிறம் கொண்ட பேராறாக மலையிறங்கி சுழித்தோடியது.”
“வீரமாகேந்திரத்தை இடிமின்னல்களால் தாக்கி அழித்தது தெய்வக்குழந்தை. மலையுச்சியில் மேகங்களைச்சூடி நின்ற மகாநகரம் இடிந்து புழுதியும் பேரோசையுமாக தன்மீது தானே விழுந்தது. அவ்வதிர்வில் மகேந்திரமலையின் பெரும்பாறைகள் உருண்டு கடலில் விழுந்து அலைகளாகி கரைகளை அறைந்தன. தன்னை தானே நீரில் அமிழச்செய்து குமரிக்கடலுக்குள் மறைந்தது மகேந்திரமலை.”
“கரைநின்ற மானுடர்கள் கண்மாளா மாபெரும் திமிங்கலமொன்று நீரிலாழ்வதைக் கண்டனர். அதன் இறுதி மூச்சு ஆயிரம் மடங்கு பெரிய பளிங்குப் பனை போல வானிலெழுந்து நின்றொளிர்ந்ததையும் பின்னர் அந்த நீர்மரம் உடைந்து மழையென பொழிந்தமிழ்ந்ததையும் பார்த்தனர். அவர்களின் விழிகளில் எஞ்சிய அக்காட்சி பின் கனவாகி கவிதையாகி காவியமாகியது. அங்கே தென்கடலின் கரையில் அக்கனவு கல்லாகி இன்றும் நின்றிருக்கிறது.”
“அசுரர் குலம் அன்றே அழிந்தது. இமயத்தில் எழுந்த அதன் பெருமை குமரியில் முடிந்தது” என்றாள் சுவர்ணை. “அதோ, கீழே அனல்வடிவாக நின்றாடிக்கொண்டிருப்பவன் சூரபதுமரின் மைந்தன் அக்னிமுகன். செந்தழல் நிறம் கொண்டவன். தழல்கரிப்பிழம்பென குழல் பறப்பவன். சுப்ரமணியனின் வேல் அவன் நெஞ்சைப்பிளந்தபோது ஒரு குரல் எழுந்தது. ’இறைவேலால் அழியும் பேறுபெற்றாய். விண்ணுலகடைவாய்’ என்று. ‘என் குலத்தோர் மகிழ்ந்து கொண்டாடும் விழாவிலெல்லாம் எழுந்தாடும் வரம் மட்டும் போதும், விண்ணுலகை வேண்டேன்’ என்றான் அக்னிமுகன். இன்று நம் குலத்தோர் எங்கெல்லாம் முழவும் கொம்பும் கள்ளும் ஊனுமாக விழாக் கொண்டாடுகிறார்களோ அங்கெல்லாம் தழல்கரங்களை நீட்டி கரிக்குழல் பறக்க அவன் நின்றாடுகிறான்.”
ஏகலவ்யன் கீழே தெரிந்த அக்னிமுகனை நோக்கிக்கொண்டிருக்க அவன் கண்களுக்குள் அந்த செம்புள்ளிகளை அவள் கண்டாள். “மைந்தா, நான் முன்னரே அறிவேன். நம் குலத்தை ஆற்றல் மிக்கதாக ஆக்குவது நிகரற்ற விழைவே. வெல்லவும் கொள்ளவும் பெருகவும் நீளவும் நாம் கொள்ளும் பேராசையே நம்மை அழிவற்றவர்களாக்குகிறது. திரும்பி வந்த உன்னில் குடியிருந்தது தெய்வமோ பேயோ அல்ல, நம்குலத்து மூதாதையரின் அழியா வேட்கையே என்று நான் அறிந்தேன். அது உன்னை வெல்லற்கரிய வீரனாக ஆக்கும், உலர்காட்டில் விழுந்த எரித்துளியாக எழச்செய்யும் என்று நான் மட்டுமே உணர்ந்திருந்தேன். ஆகவே நான் காத்திருந்தேன்.”
அவனை நோக்கி மெல்லிய குரலில் மந்திரமென அவள் சொன்னாள் “இதோ, இன்று நீ எழுந்துவிட்டாய். உன் கரங்களால் உலர்ந்த காட்டின் விளிம்பைத் தீண்டிவிட்டாய். நீ அதை அறிந்திருக்க மாட்டாய். ஆனால் அவர்கள் அறிவார்கள். அவர்கள் இப்போதே எச்சரிக்கை கொள்வார்கள். உன்னை கட்டுப்படுத்தவும் அழிக்கவும் திரண்டெழுவார்கள்.” அவள் குரல் மேலும் தழைந்து அவள் உதடுகளில் இருந்து காற்றிலேறாமல் நேராக அவன் செவிகளை அடைந்தது “மைந்தா, உன் மூதாதையரை ஆக்கிய முதற்பெரும் விசைகளே அவர்களை அழித்தன. கட்டற்றுப் பொங்கியெழும் உயிராற்றலே அசுரம் எனப்படுகிறது. அவ்விசையே எல்லையற்ற விழைவாக, கட்டற்ற சினமாக, கருத்தற்ற எழுச்சியாக அவர்களில் நிகழ்ந்தது.”
“மைந்தா, அவற்றுக்கு நிகராக அவர்களை அழித்தது கரையற்ற அன்பும், அளவற்ற கொடையும், மதியற்ற கருணையும் என்று அறிக. படைமடத்தால் வீழ்ந்த அசுரர் சிலரே. கொடைமடத்தால் வீழ்ந்தவரோ பற்பலர்.” அந்த இடத்தில் தன் சொற்களனைத்தும் முடிந்துவிட்டதை உணர்ந்து அவள் ஒருகணம் திகைத்தாள். எழுந்து “இக்குடியின் அனைத்து அன்னையரின் நாவிலும் முலையிலும் கருக்குழியிலும் மூதன்னை மாயாதேவி வாழ்கிறாள் என்பார்கள். இச்சொற்களை சொன்னவள் அவள். இவ்வண்ணமே அவள் சூரபதுமருக்கும் சொல்லியிருக்கக் கூடும்” என்றபின் கை தூக்கி “நீடுவாழ்!” என வாழ்த்தி இருளில் நடந்து சென்று மறைந்தாள்.
ஏகலவ்யன் நெடுநேரம் அங்கே அமர்ந்திருந்தான். தேனீக்கள்போல அவள் சொற்கள் அவனைச்சூழ்ந்து பறந்துகொண்டிருந்தன. இருளில் களிகொண்டு கூத்தாடிய அக்னிமுகனை விட்டு அவன் விழிகள் அசையவில்லை. குளிர்சூழ்ந்த காலையில் நகரின் ஒலிகளெல்லாம் அடங்கின. ஏகலவ்யன் எழுந்து மெல்லிய காலடிகளுடன் நடந்து நகருக்குள் வந்தான். ஹிரண்யவாகா நதிக்கரையில் வற்றிய ஏரியின் மீன்கூட்டம் போல அவன் குடி சிதறிக்கிடந்து துயின்றது. நடுவே செவ்வைரக்கற்களாலான குளம் போல அக்னிமுகனின் பீடம் கிடந்தது.