வளைவுகள் செதுக்கல்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

மீனாட்சிபுரம், வடசேரி, பார்வதிபுரம் நான் சுற்றி அலைந்த இடங்கள். வெஸ்பாவில் உட்காரவைத்து அப்பா தன்னுடைய ஷண்முகம் ஜுவல்லரி நகைக்கடைக்கு கூட்டி செல்வார்.மீனாட்சிபுரம் முழுவதும் நகைக்கடைகள். விடுமுறை நாட்களில் கடைக்கு யார் செல்வது என்ற சண்டை தம்பியுடன் நடக்கும்.

கடைக்கு சென்றவுடன் பக்கத்தில் இருக்கும் நகைப்பட்டறைக்கு சென்று அமர்ந்து விடுவேன். என்னுடைய குட்டியப்பா உருக்கிய தங்கத்தை ஒரு பிறந்த குழந்தையை தூக்குவது போல் சிறுமண் குடுவையை தூக்கி இரும்பு போல் இருக்கும் பிடிமானத்தில் ஊற்றுவார். சிறியதாய் உருவான தகதகக்கும் ஆறு போல் ஓடும். மீண்டும் அதே போல் செய்யி முடியுமா என்று அப்பத்தமாக கேட்டுருக்கிறேன்.அவருடன் இருந்து வேலை கற்றுவரும் அத்தான் ‘அப்படி கேட்காதே’ என்று கண்ணை காட்டுவான். அத்தான் எனக்கு கிருஷ்ணன் குழல் ஊதுவது போல் படம் வரைய கற்றுக்கொடுத்தவன். “காலே இப்படி வரைய கூடாதுலா, இப்பிடிலா வரையன்னு” என்று கிருஷ்ணனின் காலை சரியாய் வரைவதற்கு கற்றுக்கொடுத்தான்.

பல நினைவுகளின் வழியாக உருவாக்கிய ஒரு என்ணத்தின் ஒரு திரைவடிவம்தான் “குவர்வ்ஸ் அன்ட் கார்வ்ஸ்” என்ற ஆவணப்படம். ஒரு சில தினங்களில் உருவான இந்த ஆவணப்படம் நான் சிறுவயதில் என் தந்தையுடன் இருந்து கவனித்த தங்கவேலையை பற்றியது. நான் இப்போது செய்யும் வேலை மென்பொருள் சம்பந்தப்பட்டது. பொதுவாக இப்போது நாகர்கோயில் சார்த்த தங்கவேலை செய்பவர்களின் எண்ணிக்கையில் பலரும் இப்போது வேறு வியாபாரத்திலும் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள், குடும்பத்திலும் “தலைமுறை வேலை” என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டதின் தொடக்கம் தெரிய தொடங்கிவிட்டது. உதாரணமாக நானும் ஒருவன். நான் மென்பொருள் தொழில் நுட்பத்தில் வேலை இருக்கிறேன். இந்த கைத்தொழில் சார்ந்த கலையை, அதன் நுணுக்கத்தை இந்த ஆவணப்படத்தில் சிறிதாக பதிவு செய்திருக்கிறேன்.

இந்த பயணத்தில் நான் சந்தித்த கவிஞர் தாணு பிச்சையா, நெல்லை முத்து (சேலம்) மற்றும் பலருடன் உருவான நட்புதான் இந்த படத்தை உருவாகும்போது எனக்கு கிடைத்த பதில்.

ஏற்கனவே பெங்களூரில் இரண்டு முறை திரையிட்டேன். பிற மாநிலத்தில் திரையிட முயற்சித்து வருகிறேன். உங்களிடம் இதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

படத்தின் ஒரு சிறு ட்ரைலர்,

நன்றி.

ராமலெக்ஷ்மன்
பெங்களூர்

அன்புள்ள ராம் லக்‌ஷ்மண்

முன்னோட்டம் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள். நீங்கள் நண்பர் தமிழ் ஸ்டுடியோ அருணை சந்திக்கலாம், திரையிட அவர் உதவுவார் என நினைக்கிறேன்

மீனாட்சிபுரம் ஆசாரிமார் தெரு நானும் சுந்தர ராமசாமியும் விரும்பி நடைபோகும் இடமாக இருந்தது. அவருக்கு அப்பகுதியின் நெரிசலும் வாழ்க்கைச்சித்திரங்களும் மிகவும் பிடிக்கும். புளியமரத்தின் கதையிலேயே ஒரு சிறிய சித்தரிப்பு உள்ளது

தாணு பிச்சையாவின் உறைமெழுகின் மஞ்சாடிப்பொன் ஒரு முக்கியமான தொகுப்பு. அது வெளிவந்தபோது நான் எழுதிய மதிப்புரைதான் முதலில் அதை அறிமுகம் செய்தது என நினைக்கிறேன்

ஜெ

உருகிப் படிமமாகி ஒளிரும் உலகம்

ராஜமார்த்தாண்டன் விருது தாணுபிச்சையாவுக்கு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 54
அடுத்த கட்டுரைமுதலாற்றல்