இந்த நூல் எவ்வித திட்டமும் இல்லாமல் உருவானது. இதற்காக எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை. ஆராய்ச்சி செய்து எழுதும் நூல்களின் வகையைச் சேர்ந்த நூலும் அல்ல இது. இது ஓர் நீண்ட உரையாடல், அல்லது விவாதம்.
தற்செயலாக இது ஆரம்பித்தது. நான் பங்குபெற்றுள்ள எழுத்தும் எண்ணமும் இணையக்குழுமத்தில் நண்பர் துகாராம் காந்தி மூன்றாம் வகுப்பில் பயணம்செய்ய முதல்வகுப்பு பயணத்தை விட அதிகம் செலவாகும் என்ற வழக்கமான குற்றச்சாட்டைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். அதற்கு நான் என் எண்ணங்களை பதிலாக எழுதியிருந்தேன். அந்த குறிப்பை என் இணையதளத்தில் 2008 ஜூலையில் ‘காந்தியின் எளிமையின் செலவு’ என்ற தலைப்பில் வெளியிட்டேன்.
அதை ஒட்டி ஒரு விவாதம் ஆரம்பமாகியது. பல வாசகர்கள், நண்பர்கள் காந்தியைப்பற்றிய அவர்களுடைய ஐயங்களை என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவர்களுக்கு நான் அளித்த பதில்கள் கட்டுரைகளின் வடிவில் அமைந்தன. அவ்வாறாக இந்த நெடும் விவாதம் ஆரம்பமாகியது.
அதன்பின்னர் சிறு இடைவெளிக்குப் பின்னர் ஈழப்பிரச்சினையைப் பற்றி கருத்துச் சொன்னபோது நான் காந்திய வழிமுறைகளைப் பற்றிச் சொன்னேன். அதை ஒட்டி மீண்டும் விவாதங்கள் எழுந்தன. ஆனால் ஈழப்பிரச்சினை சார்ந்த அனல் இருந்து கொண்டிருந்தமையால் அது விரிவடையவில்லை.
மூன்றாவதாக, லாரிபேக்கர் அவர்களைப் பற்றிய ஒரு நினைவுக்குறிப்பை நான் எழுதியபோது மீண்டும் பலவகையான கேள்விகள் வந்தன. நம் சூழலில் காந்தி மீது இத்தனை ஐயங்கள் இருப்பதற்கான இரு காரணங்களை நான் ஊகிக்கிறேன். ஒன்று, காந்திமீது இன்றும் அணையாத ஆர்வம் இருந்து கொண்டிருக்கிறது. இரண்டு, காந்தி மீது கடந்த ஐம்பதாண்டு காலமாக திட்டமிட்டு நிறுவன ரீதியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
உதாரணமாக என் சிறு பெண் பயிலும் கிறித்தவக் கல்விச்சாலையில் காந்தி ஒரு சாதிவெறியர் என்று ஓர் ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்ததாக சொன்னாள். ‘நீ வேற மாதிரி சொன்னியே?’ என்றாள். இம்மாதிரி கற்பிக்கும் பள்ளிகளில் தான் நம் குழந்தைகள் பெரும்பாலானவர்கள் பயில்கிறார்கள். பல ஆசிரியர்கள் உறுதியான முன்முடிவுகள் கொண்டவர்கள். அவர்கள் அவற்றை குழந்தைகள் மனதில் ஏற்றி விடுகிறார்கள்.
அங்கே தொடங்கும் காந்தி வெறுப்பு ஏதோ ஒருபுள்ளியில் ஐயத்தை நோக்கி நகர்கிறது. உண்மைக்கே உரிய அபாரமான வசீகரத்தினால் காந்தி மனிதர்களின் ஆழத்துடன் உரையாடுகிறார். அவர்கள் குழம்புகிறார்கள். அந்தக் குழப்பங்களையே பலர் காந்திய விவாதங்களில் முன்வைக்கிறார்கள். எனக்கு வந்து குவிந்த பல ஐயங்கள் அத்தகையவையே.
இப்பதில்களை காந்திய அறிஞன் அல்லது ஆராய்ச்சியாளன் என்ற நிலையில் இருந்து அதிகாரபூர்வமாக நான் முன்வைக்கவில்லை. மாறாக இவை விவாதத்தின் என் தரப்பு மட்டுமே. காந்திய ஆராய்ச்சிகள் கொட்டிக்கிடக்கின்றன. காரணம், நம் நாட்டில் காந்திய பல்கலைகழகங்கள் உள்ளன, காந்திய ஆய்விருக்கைகள் பல பல்கலைகளில் உள்ளன. ஆகவே நூல்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் ஒரு பொதுவாசகனை அவை நிறைவுபடுத்தாது. ஆன்மாவால் காந்தியை தேடமுயலும் ஓர் எழுத்தாளனின் சொற்களே அந்த பணியை ஆற்றமுடியும்
உண்மையில் நானே அந்தக் கேள்விகளை எனக்குள் கேட்டுக்கொண்டு அவற்றை பற்றிச் சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பு இவ்விவாதம் மூலம் அமைந்தது. நான் அவ்வினாக்களுக்கு விடைதேடி மேலும் காந்திக்குள் புகவேண்டியிருக்கவில்லை. என் காந்தியவாசிப்பில் இருந்து உடனடியாக என்ன பதில்கூற முடியும் என்றே எண்ணினேன்.
காந்தியை அவரது எதிரிகள் வழியாக அறிந்தவன்தான் நானும். எங்களூரில் வலுவான அரசியல் சக்திகளாக இருந்தவை கம்யூனிஸ்டுக் கட்சியும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும். அவை வழியாகவே நான் வந்தேன். அவர்கள் அளித்த காந்தியின் படிமமே எனக்கிருந்தது. பின்னர் நான் எம்.கோவிந்தன், பி.கெ.பாலகிருஷ்ணன், சுந்தர ராமசாமி போன்றவர்கள் வழியாக காந்தியை புத்தம் புதிதாக அறிமுகம் செய்துகொண்டேன்.
கடந்த இருபதாண்டு காலமாக காந்தி மீது தொடர்ச்சியான கவனம் என்னுள் இருந்து வந்துள்ளது. பல முக்கியமான காந்தியவாதிகளை நேரில் சந்திருக்கிறேன். பல இடங்களுக்கு நேரில் சென்றிருக்கிறேன். மலையாளத்திலும் தமிழிலுமாக காந்தியம் குறித்து பல கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். நான் என்னை காந்தியத்தில் ஆர்வம் கொண்ட ஓர் எழுத்தாளன் என்றே அடையாளம் காட்டுவேன்.
இக்கட்டுரைகளை நான் தொடர்ச்சியாக அவதானித்து வந்த காந்திய சிந்தனைகளின் அடிப்படையிலேயே எழுதினேன். வாசித்த நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள் மற்றும் வாசித்தவை பற்றிய பழைய நாளேட்டுக் குறிப்புகள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொண்டேன். பெரும்பாலும் நினைவிலிருந்து. நினைவில் எது நிற்கிறதோ அதுவே முக்கியமானது என்ற எண்ணம் எனக்குண்டு. நினைவில் இருந்தவற்றை சரிபார்த்துக் கொள்ள இணையம் உதவியது. பல நண்பர்களும் தனிப்பட்ட முறையில் உதவினார்கள். இந்நூலுக்காக எந்த தனி ஆய்வையும் செய்யவில்லை.
இந்நூலை ஓர் ஆய்வு அல்ல என்று ஏன் சொல்கிறேன் என்றால் ஆய்வுக்கு இருந்தாக வேண்டிய ஒட்டுமொத்தமான சீரான புறவயமான முறைமை இதில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதனாலேயே. அத்துடன் ஒரு கோட்பாட்டுச் சட்டகத்தை உருவாக்கிக் கொண்டு ஆய்வுமுடிவை நோக்கி நகரவும் இல்லை. காந்தியத்தில் ஆர்வம் கொண்டவன் என்ற முறையில் என்னுடைய அவதானிப்புகள் மனப்பதிவுகள் மற்றும் நான் புரிந்துகொண்ட உண்மைகள் ஆகியவையே இந்நூலில் உள்ளன.
ஆய்வுநூலின் தோரணை இந்நூலுக்கு வந்துவிடலாகாது என்ற எண்ணமும் எனக்கிருந்தது. இந்நூலின் மொழி அத்தகையதல்ல. இது எழுத்தாளனின் மொழி. ஆகவே உணர்ச்சிபூர்வமானது, படிமங்கள் சார்ந்தது. ஆய்வுநூல் ஆய்வாளனுடன் மட்டுமே பேசக்கூடியது. இந்நூல் ஆர்வமுள்ள அனைவருக்கும் உரியது. வாசகர்களிடம் அவர்களுடைய சொந்த மனசாட்சியை, அவர்கள் அறிந்த வாழ்க்கைச் சூழலை வைத்து இவ்விஷயங்களை புரிந்துகொள்ள கோருகிறது இது. ஆகவே இந்நூல் வாசகனின் மனதையும் அறிவையும் தொட்டு தனிப்பட்ட முறையில் உரையாடுவதாக இருக்கவேண்டும் என விரும்பினேன். இயல்பாக அமைந்த கேள்விபதில் தன்மை அதற்கு பெரிதும் உதவியது.
இந்நூலில் அபூர்வமான தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாகாது என்பதே என்னுடைய எண்ணமாக இருந்தது. அத்தகைய பல தகவல்களை நான் விட்டுவிட்டேன். மிக எளிதாக எந்நூலிலும் கிடைக்கக்கூடிய அடிப்படையான தகவல்களே இந்நூலில் பெரும்பாலும் உள்ளன. ஆகவே தகவல்களுக்கு ஆதாரங்களைப் பட்டியலிட முயலவில்லை. இத்தகவல்களைக் கொண்டு ஒரு சாமானிய வாசகன் உருவகித்துக் கொள்ளக்கூடிய வரலாற்றுச் சித்திரம் என்னவாக இருக்கும் என்பதே இந்நூலின் அணுகுமுறையாகும்.
இந்நூலில் ஏராளமான நூல்கள் சுட்டப்பட்டுள்ளன. ஆனால் அந்நூல்கள் இந்த விவாதத்திற்கான ஆதாரங்களாகச் சுட்டப்படவில்லை என்பதை வாசகர்கள் உணரலாம். இந்த சிந்தனைகளுக்கு நான் வந்துசேர்ந்த பாதையைச் சுட்டிக்காட்டவும் மேலதிக வாசிப்பை விரும்பும் வாசகர்களுக்காகவும் அவை கூறப்பட்டுள்ளன. அந்நூல்கள் பல வகையானவை. அவற்றில் பல தங்களுக்குள் முரண்படக்கூடியவை. அவை தங்கள் விவாதம் மூலம் உருவாக்கும் பொதுத்தளமே இன்றுள்ள காந்தியம் என்பது.
மேலைநாட்டுக் காந்திய விவாதங்கள் எப்போதுமில்லாத அளவுக்கு இன்று பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளன. முழுநேர காந்திய ஆய்வாளன் கூட அந்நூல்களுக்குள் முழுக்கச் செல்வது கடினம். பலசமயம் அவை மிதமிஞ்சிய கல்வித்துறைத்தன்மை கொண்டவையாகவும் கோட்பாட்டுத்தன்மை கொண்டவையாகவும் உள்ளன. அவை பல்வேறு சமூக, அரசியல், தத்துவ தளங்களில் அவற்றின் தேடலை முன்னெடுத்துச் செல்கின்றன. அவற்றை ஆராய்ந்து வகைப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக அவற்றினூடாக தன் நுண்ணுணர்வை செலுத்தி தன் காந்தியை கண்டடைய முயல்வதே உகந்த வழி.
இந்நூல் இன்றைய காந்திய விவாதங்களை மதிப்பிடக்கூடிய நூல் அல்ல. ஏற்கனவே சொன்னதுபோல இது ஆய்வுக்குள் செல்லவில்லை. இது நம் சூழலில் இன்று கிடைக்கும் தகவல்களைக் கொண்டு நம்முடைய வரலாற்றுணர்வு மற்றும் பொதுத்தருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் காந்தியைப் புரிந்துகொள்ள முயல்கிறது அவ்வளவுதான்.
இந்நூலின் பங்களிப்பு என்ன? நான் இப்படிச் சொல்வேன். இந்நூல் குறுகிய பிளவுவாத நோக்கில் காந்தியையும் அவரது கொள்கைகளையும் புரிந்துகொள்ளும் முறைக்கு மாற்றாக விரிவான ஒரு வரலாற்றுப் பிரக்ஞையுடன் காந்தியையும் காந்தியத்தையும் புரிந்துகொள்ள முயல்கிறது. ஏதேனும் ஒரு அரசியல் தரப்பு அல்லது கொள்கையை மையமாக்கி காந்தியை மதிப்பிடுவதற்குப் பதிலாக கருத்தியலும் வரலாற்றின் சாத்தியக்கூறுகளும் கொள்ளும் ஊடுபாவுகளில் வைத்து காந்தியை மதிப்பிடுகிறது.
அந்த வரலாற்று நோக்கு என்பது நான் என் முன்னோடிகளாகக் கொள்ளும் சிந்தனையாளர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டது. எம்.கோவிந்தன் முதன்மையான புள்ளி. கேரளச் சிந்தனையாளர்களான ஆனந்த், ஓ.வி.விஜயன் மற்றும் சுந்தர ராமசாமி ஆகியோரை கோவிந்தனின் வழிவந்தவர்கள் என்றே சொல்லவேண்டும். அவ்வரலாற்று நோக்கு என்பது எளிமையாகச் சொல்லப்போனால் வரலாற்றை நாம் நின்றுகொண்டிருக்கும் புள்ளி நோக்கி இழுக்காமல் நம்முடைய இன்றைய தேவைகள் நம்பிக்கைகள் ஆகியவற்றில் இருந்து வரலாற்றுக்குள் நாமே சென்று அறிய முயல்வது என்று சொல்லலாம்.
இந்நூல் காந்தியை வலியுறுத்துவதோ, காந்திக்காக வாதாடுவதோ, அவரை பாதுகாக்க முயல்வதோ அல்ல என்பதை வாசகர்கள் உணரலாம். தேவையான இடங்களில் காந்தி மீதான விமரிசனங்களுடனும் நிராகரிப்புடனும்தான் இந்நூல் முன்னகர்கிறது. காந்தியப் போராட்டத்தை காந்தியின் இலட்சியவாதம் மற்றும் தரிசனத்தின் அடிப்படையில் புரிந்துகொள்ள முயல்கிறது. காந்திய தரிசனத்தின் இன்றைய பொருத்தப்பாட்டையும் தேவையையும் முழுக்கமுழுக்க நடைமுறை சார்ந்து மிகையில்லாமல் ஆராய முயல்கிறது.
அதேபோல காந்திக்கு எதிரான சக்திகளை நிராகரிப்பதற்கோ அல்லது எளிமைப்படுத்துவதற்கோ நான் முயலவில்லை என்பதை இக்கட்டுரைகளில் காணலாம். வரலாற்றின் முரணியக்கத்தில் அவர்கள் அவர்களின் பங்களிப்பை ஆற்றினார்கள் என்றே இந்நூல் கூறுகிறது. அத்தகைய பலநூறு பங்களிப்புகளின் ஒட்டுமொத்தமாகவே வரலாற்றின் இயக்கம் நிகழ்கிறது.
இந்நூலில் ஓர் ஆசிரியராக என்னுடைய பங்களிப்பென்பது ஒரு சாத்தியமான விரிந்த வரலாற்றுப்புலத்தை உருவகித்திருக்கிறேன். அதை அத்தனை கட்டுரைகள் வழியாகவும் தர்க்க ரீதியாக விரித்துக்காட்டியிருக்கிறேன் என்பதுதான். அதற்காக என் மொழித்திறன் பயன்பட்டிருக்கிறது.
ஒவ்வொன்றையும் சற்றே விலக்கி விரிந்த பின்புலத்தில் வைத்து பார்க்கையில் அவற்றின் அர்த்தமே மாறிவிடுகிறது. அவை சார்ந்து நாம் கொண்டுள்ள முன்முடிவுகளும் உணர்வெழுச்சிகளும் பொருளற்றவையாக ஆகிவிடுகின்றன. இந்நூல் காந்தியை அவரது பின்புலத்தில் வைத்துப்பார்க்க முயலும் ஒரு முயற்சி அவ்வளவுதான்.
1992 முதலே ஈரோடு டாக்டர் வி.ஜீவானந்தம் அவர்களுடன் எனக்கு பழக்கம் உண்டு. தமிழக பசுமை இயக்கங்கள் பலவற்றுக்கும் முன்னோடி அவர். உறுதியான காந்தியவாதி. இந்நூலில் நான் விரிவாக முன்வைத்துள்ள கருத்துக்களை 1994-ல் டாக்டர் ஜீவானந்தம் அவரது சித்தார்த்தா பள்ளி வளாகத்தில் நடத்திய காந்தியக் கருத்தரங்கு ஒன்றில்தான் கோர்வையாக முன்வைத்தேன். டாக்டர் ஜீவா அவர்கள் வெளியிட்ட காந்திமலரில் அக்கட்டுரை வெளியாகியது.
அக்கட்டுரையில் காந்தியை நவீனத்துவத்தை தாண்டிச்சென்றவராக முன்வைத்திருந்தேன். நவீனத்துவத்தின் உறுதியான மையமுள்ள பெருங்கட்டுமானத்தன்மை, அறிவியலின் இறுதிவெற்றி மீதான நம்பிக்கை போன்றவற்றை நிராகரித்துவிட்டு காந்தி இந்திய மண் சார்ந்து உருவாகி வந்திருந்த தேசிய மரபின் பன்மைத்தன்மை, அறமையநோக்கு ஆகியவற்றை நோக்கி வருவதாக விளக்கியிருந்தேன்.
அக்கருத்துக்களை அதன் பின்னர் எழுதிய மேலைநாட்டு ஆய்வாளர்களின் நூல்களில் மேலும் விரிவாகக் கண்டு என் எண்ணங்களை விரிவாக்கிக் கொண்டிருக்கிறேன். இந்நூலில் உள்ள சிந்தனைகளின் மூலக்கட்டுமானம் அக்கட்டுரையே. அக்கட்டுரை சார்ந்து சுந்தர ராமசாமியிடமும் காந்திய சிந்தனையாளர் ராமச்சந்திரன் அவர்களிடமும் விவாதித்திருக்கிறேன்
ஆனால் காந்தியை ஏதேனும் விதத்தில் அடையாளப்படுத்துவதோ, கீழை மேலைநாட்டுச் சிந்தனைகளின் அடிப்படையில் அவரை பரிசீலிப்பதோ என் இலக்கு அல்ல. அத்தகைய அணுகுமுறைகள் காந்தியை விட்டு நம்மை விலக்கும். காந்தியைப் புரிந்துகொள்ள நமக்கு நம் அந்தரங்கமே ஆயுதமாக அமைய வேண்டும்.
1987-ல் கோவிந்தனைச் சந்தித்த காலம் முதல் காந்தியம் சார்ந்து தொடர்ச்சியாக என்னுள் நிகழ்ந்துவரும் சிந்தனைகளை இந்த விவாதக்களத்தில் தொகுத்திருக்கிறேன் என நினைக்கிறேன். ஏற்கனவே சொன்னதுபோல இது ஒரு விவாதமே. என் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. என்னை மறுத்தும் மீறியும் என்னை முன்னகர்த்தும் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.
இந்நூலை ஈரோடு வி.ஜீவானந்தம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
தமிழினி வெளியீடாக வரவிருக்கும் ‘இன்றைய காந்தி’ நூலின் முன்னுரை