முன்னோடியின் கண்கள்

நூல்

வரலாற்றை எழுதுவதில் இருவகை உண்டு. வரலாற்றை அருகே நின்று கண்டவர்களும் அவ்வரலாற்றை உருவாக்கியவர்களும் எழுதும் வரலாறுகள். அவ்வரலாற்றுக்காலகட்டம் முடிந்தபின்னர் அதை புறத்தே நின்று நோக்குபவர்கள் எழுதும் வரலாறுகள். முன்னது பெரும்பாலும் தனிப்பட்ட நிலைபாடுகள், விருப்புவெறுப்புகள் ஆகியவற்றால் சற்றே ஓரம் சாய்ந்ததாக இருக்கும். அதேசமயம் மிக நுட்பமான ஏராளமான தகவல்கள் அடங்கியதாக இருக்கும். பின்னது சமநிலையுடன் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். அதேசமயம் பல அடிப்படை விஷயங்களை ஊகத்தில் சொல்லும்தன்மை கொண்டிருக்கும்.

தமிழ்ச்சிறுகதையை பற்றி எம் வேதசகாயகுமார்  எழுதிய ‘தமிழ்ச்சிறுகதை வரலாறு’ இரண்டாம் வகையைச் சேர்ந்தது. பி.எஸ்.ராமையா எழுதிய ‘மணிக்கொடிக்காலம்’ வல்லிக்கண்ணன் எழுதிய ‘புதுக்கவிதை பிறக்கிறது’ ஆகியவை முதல்வகையைச் சேர்ந்தவை.  சிட்டி சிவபாதசுந்தரம் எழுதிய ‘தமிழ்ச்சிறுகதை வரலாறு ‘ இருவகையிலும் அடங்குவது. சிட்டி செல்லப்பாவின் தலைமுறையினராக இருந்தாலும் நேரடியாக சிறுகதை இயக்கத்தில் பங்கெடுக்காத அன்னியர்தான்.

சி.சு.செல்லப்பா எழுதிய ‘தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது’ முதல்வகையைச்சேர்ந்த முக்கியமான நூல்.எழுத்துபிரசுரமாக கால்நூற்றாண்டுக்கு முன் [1974] செல்லப்பாவே பிரசுரித்த இந்நூலின் மூன்றாம்பதிப்பை காலச்சுவடு பதிப்பகம் இப்போது வெளியிட்டிருக்கிறது. தமிழ் இலக்கிய வடிவங்களில் ஒப்பு நோக்க முன்னோடி வளர்ச்சியை அடைந்தது சிறுகதையே. இந்தியமொழிச் சிறுகதைகளில் வடிவ நேர்த்தி, நுட்பம், கருக்களின் பன்முகத்தன்மை ஆகியவற்றில் தமிழ்ச் சிறுகதையுடன் ஒப்பிடக்கூடிய தகுதிகொண்ட பிறமொழிச்சிறுகதை உலகம் ஏதும் இல்லை என்பதை வாசகர்கள் காணமுடியும். இந்த வளர்ச்சி ஒர் அபூர்வ நிகழ்வே. இதைப்புரிந்துகொள்ள முக்கியமான ஆவணமாக விளங்குவது சி.சு.செல்லப்பா எழுதிய ‘தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது’

செல்லப்பா மணிக்கொடி இதழில் சிறுகதையாசிரியராக அறிமுகமானவர். அவரது ‘சரஸாவின் பொம்மை’ என்ற சிறுகதை மணிக்கொடிவழியாக அவருக்கு புகழ்தேடித்தந்தது. அதன் பின்னர் அவர் நடத்திய ‘எழுத்து’ சிற்றிதழ் சிறுகதையிலும் முன்னோடி சாதனைகளை நிகழ்த்தியது. தமிழ்ச்சிறுகதையின் உருவாக்கத்தில் நிகழ்ந்த முக்கியமான புள்ளிகளை தன் நேரடி அனுபவ அறிதல்கள் வழியாக செல்லப்பா இந்நூலில் முன்வைக்கிறார்.

ஆனந்த விகடன் இதழ் 1933ல் நடத்திய சிறுகதைப்போட்டி தமிழில் ஒரு திருப்புமுனைப்புள்ளி என்று செல்லப்பா எண்ணுகிறார். அதுவே தமிழில் முதல் சிறுகதைப்போட்டியாகும். அப்படி ஒரு போட்டி நிகழக்காரணமே சிறுகதை வடிவம் பற்றிய ஒரு பிரக்ஞை உருவாகிவிட்டிருந்ததும் சிறுகதைவடிவம் மேல் தனி ஆர்வம் உருவானதும்தான். அப்போட்டியில் றாலி [எம்.ஜெ.ராமலிங்கம்] எழுதிய ஊமைச்சிக்காதல் என்ற சிறுகதைக்குத்தான் முதல்பரிசு கிடைத்தது. பி.எஸ்.ராமையா எழுதிய ‘மலரும் மணமும்’ பரிசு பெறவில்லை.

றாலியின் கதை வாசகனை மகிழ்விக்கும் தன்மை மட்டுமே கொண்டது. ராமையாவின் கதை மனித மனத்தின் நுட்பமான அசைவுகளை தொடமுயல்வது. இந்த போட்டிவழியாகவெ தமிழில் சிறுகதையின் இரு போக்குகள் உருவாயின என்கிறார் செல்லப்பா. முதல்வகைமைக்கு கல்கியை முன்னுதாரணமாகக் காட்டும் செல்லப்பா இரண்டாம் வகைமைக்கு மணிக்கொடி இதழைச் சார்ந்து உருவான சிறுகதைகளை முன்னுதாரணமாக காட்டுகிறார். கல்கியின் கேதாரியின் தாயார் என்ற கதையை அலசி, அக்கதை எப்படி சீர்திருத்தக்கருத்துக்கள் மிகையுணர்ச்சி ஆகியவற்றை கலந்து வணிக நோக்குடன் எழுதப்பட்டுள்ளது என்பதை விளக்குகிறார். மணிக்கொடி எழுத்தாளர்களில் மௌனி, கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா ஆகியோரை முக்கிய சிறுகதையாசிரியர்களாக முன்னிறுத்துவது செல்லப்பாவின் அணுகுமுறையாகும்.

தமிழில் சிறுகதைவடிவை உருவாக்கியவர் யார் என்ற வினாவுக்கு வழக்கமாக வ.வெ.சுப்ரமணிய அய்யரை சொல்வது இலக்கிய மரபு. ரா.ஸ்ரீ.தேசிகன், ஏ.எஸ்.சுப்ரமணிய அய்யர் போன்ற முன்னோடி திறனாய்வாளர்களால் உருவாக்கப்பட்ட முடிவு அது. அதை ஐயப்படும் பாரதியின் கதைகள் சிறுகதை வடிவுக்குள் வரக்கூடிய முன்னோடி முயற்சிகள் என்று எண்ணுகிறார். முன்னோடிச் சிறுகதையாசிரியர்களான பாரதி, வ.வெ.சு.அய்யர்,அ.மாதவையா ஆகியோரின் சிறுகதை முயற்சிகளை அங்கீகரித்து ஆனால் சிறுகதை உருவானது மணிக்கொடி இதழிலேயே என்று சொல்கிறார்.

1920களில் தேசவிடுதலைக்காக ஒரு தலைமுறையே வீறுடன் கிளம்பியது என்றும் அந்த முயற்சிகள் ஒரு தற்காலிகப் பினண்டைவை அடைந்தபோது அவர்களில் கணிசமானவர்கள் நேரடியாக இலக்கியத்திற்கு வந்தார்கள் என்றும் செல்லப்பா சொல்கிறார். இது ஒரு முக்கியமான இலக்கிய அவதானிப்பு என்று எனக்குப் படுகிறது. இந்தி,கன்னடம், மலையாலம், வங்கம் ஆகிய மொழிகளிலும் ஏறத்தாழ இதே காலகட்டத்தில்தான் இலக்கிய மறுமலர்ச்சி ஒன்று நிகழ்ந்துள்ளது. இதை சோர்வின் விளைவாக பார்க்காமல் இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். கருத்துப்பிரச்சாரம் மூலம் ஒரு அடிபப்டைக் கட்டுமானத்தை உருவாக்கியபின் மீண்டும் தேசவிடுதலைப்போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்று ஒரு எண்ணம் அப்போது உருவாயிற்று நாடெங்கும் பலநூறு இதழ்கள் தொடங்கப்பட்டன. அவை இலக்கிய மறுமலர்ச்சிக்கும் வித்திடன.

மணிக்கொடி சிறுகதையாசிரியர்களான மௌனி, புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன். பி.எஸ்.ராமையா, லா.ச.ராமாமிருதம் போன்ற படைப்பாளிகளின் உதாரணச்சிறுகதைகளை எடுத்துக் கொண்டு அவற்றை விரிவான அலசல் விமரிசனத்துக்கு ஆளாக்கும் செல்லப்பா அவற்றின் வழியாக  உருவாகி வந்த சிறுகதை அழகியல் கூறுகளை ஆராய்கிறார்.

செல்லப்பா போன்ற வரலாற்றாசிரியரின் பங்களிப்பின் எதிர்மறை அம்சம் என்று நான் காண்பது இந்நூலிலும் உள்ளது. அவர் மணிக்கொடிக்கு வெளியே பெரிய அளவில் இலக்கியச் சாதனைகளைக் காண்பதில்லை. அதற்குக் காரணம் அவரது அழகியல் கோணம்தான். மணிக்கொடி பண்பாட்டுக்கவலைகளையே மையப்படுத்தி எழுதிய இதழ் என்று சிட்டி சிவபாதசுந்தரம் வகுக்கிறார்கள். அது உண்மை. ஆகவே சமூக சீர்திருத்த அம்சம் மேலோங்கிய கதைகளையே அது அதிகமும் வெளியிட்டது. அக ஆழங்களுக்குள் செல்லும் கதைகள் அதன் கவனத்துக்கு வரவில்லை. மானுட இருளை நோக்கித்திருப்பப்பட்ட புதுமைப்பித்தனின் மிகச்சிறந்த கதைகள் பின்னர் ‘கலைமகள்’ இதழிலேயே வெளிவந்தன.

இந்நூலிலேயே ஒரு ஆதாரம் என் கவனத்துக்கு வந்தது. ‘இளங்கோவன்’ என்ற பேருள்ள ம.க.தணிகாசலம் தினமணி இதழில் எழுதிய ஒருகதையைப்பற்றி செல்லப்பா சொல்கிறார். ‘தேவநாயகி ‘என்ற இக்கதை மணிக்கொடிக்கு அனுப்பப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது. அதன் கதைக்கருவே மணிக்கொடிக்காரர்களை பீதியடையச்செய்திருக்கும். இருபத்தைந்து வயதான இளைஞன் ஒருவன் தன்னிடம் விளையாடவரும் ஒரு சிறுமையை அவனாலேயே புரிந்துகொள்ளமுடியாத ஒரு மனநிலையில் பாலுறவுக்கு ஆளாக்குகிறான். கடும் உடல்வாதையுடன் காய்ச்சலில் கிடந்து அந்த குழந்தை ‘பொல்லாத மாமா’ என்று சொல்லி அழுகிறது.  அவன் கடுமையான குற்ற உணர்வை அடைந்து ஒருவகையான ஆன்ம மரணத்தை அடைகிறான்.

இக்கதையை நான் படிக்கவில்லை என்றாலும் இந்தக்கரு என்னை மிகவும் கவர்கிறது. 1940களில் இக்கதை அச்சில் வெளிவந்திருக்கிறது என்பதே வியப்பானது. அதற்கு அப்போது தினமணியில் வேலைபார்த்த புதுமைப்பித்தன் காரணமாக இருந்திருப்பாரோ என்று தோன்றுகிறது. மனித உன்னதங்களை நோக்கி இலக்கியத்தை திருப்பிவைத்த இலட்சியவாதக் காலகட்டம் அது. தன் காலகட்டத்தின் பொதுப்போக்குக்கு எதிராக ஒரு மனம் ஓடுகிறதென்றாலே அது அடிப்படையான படைப்பூக்கம் கோண்டது என்றுதான் பொருள். அக்கரு அந்த சிறுகதையாசிரியர் தஸ்தயேவ்ஸ்கி, மாபஸான், ஸ்டெந்தால் போன்றவர்களில் அறிமுகம் கொண்டவராக இருக்கலாமோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

இளங்கோவன் பின்னர் எழுதியதாக தெரியவில்லை என்கிறார் செல்லப்பா. அக்காலத்தில் எழுத்து புகழோ பணமோ இல்லாத ஒரு செயல்பாடு. நண்பர்களின் பாராட்டையே இலக்கியத்துக்கான ஊதியமாகக் கொண்டு எழுதியிருக்கிறார்கள் அக்கால எழுத்தாளர்கள். சூழலில் முழுமையாக ஒதுக்கப்பட்டு இளங்கோவன் பின்வாங்கியிருக்கலாம். செல்லப்பா குறிப்பிடும் பல சிறுகதைக்காரர்கள் ஒரு சில கதைகளுடன் நின்றுவிட்டவர்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். செல்லப்பா அவர்களை பொருட்படுத்தவும் இல்லை. ஆனால் இளங்கோவனின் இக்கதை அவர் நினைவில் இத்தனை வருடங்களாக நின்றிருக்கிறதென்பதே ஒரு முக்கியச் சான்றாக அமைகிறது.

இந்த அம்சம் வருத்தம் தருவது. மேதைகள் சூழலைப் பிளந்து வெளிவந்துவிடுகிறார்கள். திறனாளர்கள் வேறுசூழலை எதிர்கொள்ள முடியாமல் மறைந்து போகக்கூடும். செல்லப்பா போன்ற மணிக்கொடிக்காரர்களால் எவ்வகையிலும் கு.ப.ராஜகோபாலனுக்கு குறையாத ‘ரஸிகன்’ முழுமையாகவே புறக்கணிப்புக்கு உள்ளாகியிருப்பதை நாம் காணலாம். [ரஸிகன் கதைகள். தமிழினி பிரசுரம்].முன்னோடிகள் முக்கியமானவர்கள். அவர்களின் கண்கள் வழியாக நாம் பார்ப்பதை தவிர்த்து விடுவதே அவர்களை அறிய சிறந்த வழியாகும்

செட்டிநாட்டு வட்டாரவழக்குச் சொல்லகராதி

சென்னை சித்திரங்கள்

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

முடிவின்மையின் அடி:சிரில் அலெக்ஸின் ‘முட்டம்’

[ ‘தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது’  சி.சு.செல்லப்பா  காலச்சுவடு பதிப்பகம். நாகர்கோயில் பக்கம் 190 விலை ரூ 125]

முந்தைய கட்டுரைராஜமார்த்தாண்டன் 60- விழா : படங்கள்
அடுத்த கட்டுரைஅ.ராமசாமியின் சினிமாஆய்வுகள்