பகுதி ஒன்பது : பொன்னகரம்
[ 4 ]
ஹிரண்யபதத்தின் சந்தையில் மலைக்குடிகள் கெழுமி தோளோடு தோள்முட்டி நெரித்து கூச்சலிட்டு மலைப்பொருட்களை விற்று படகுப்பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர். விற்பவர்களுக்கு மேலாக வாங்குபவர்கள் கூவிக்கொண்டிருந்தனர். விற்பதற்காகவோ வாங்குவதற்காகவோ அவர்கள் கூவவில்லை, அங்கே இருப்பதை உணரும் கிளர்ச்சிக்காகவே கூவினர். விளையாடும் பறவைகளைப்போல.
காட்டின் தனிமைசூழ்ந்த இருளுக்குள் வாழும் மலைமக்களுக்கு சந்தை என்பது அவர்களின் உடல் ஒன்றிலிருந்து பலவாக பெருகிப் பரவும் நிகழ்வு. ஊற்று வெள்ளப்பெருக்காவதுபோல. சந்தைக்கு வரும் மலைக்குடிமகன் தன் உடல் பல்லாயிரம் கைகளாக பல்லாயிரம் தலைகளாகப் பெருகி எழுந்துவிட்டதை உணர்ந்தான். தன் குரல் அருவி போல பேரொலி எழுப்புவதைக் கேட்டான். அந்தக் களியாட்டத்தில் தன்னை மறந்து கலந்துவிடுவதற்காகவே அவன் மஹுவாக் கள்ளை மூக்குவரை அருந்தி ததும்பினான். அவ்வப்போது தானெனும் உணர்வு எழுந்தபோது சிலர் இரு கைகளையும் மேலே தூக்கி கூச்சலிட்டபடி எம்பிக்குதித்தனர். நீரிலிருந்து துள்ளி எழும் மீன்கள் என தம்மை உணர்ந்தபின் நீரிலேயே வீழ்ந்து மூழ்கிச்சென்றனர்.
ஏகலவ்யன் கைக்குழந்தையாக இருக்கையிலேயே அன்னையுடன் சந்தைக்கு வரத்தொடங்கியிருந்தான். அது சந்தை என அறிவதற்குள்ளாகவே அந்த இடம் களியாட்டத்துக்குரியது என்று அவன் அறிந்திருந்தான். அவனையும் அன்னையையும் மூங்கில் பல்லக்கில் ஏற்றி இருவர் சுமந்துகொண்டு வருவார்கள். அன்னைக்காக போடப்பட்ட மூங்கில் பந்தலில் அவள் அமர்ந்திருப்பாள். அருகே வேல்களுடன் பெண்கள் காவலிருப்பார்கள். வணிகர்கள் வந்து அன்னைக்கு நகரத்து வண்ண ஆடைகளையும் மின்னும் அணிகளையும் புதியகருவிகளையும் காட்டுவார்கள். அன்னை அவளுக்குப்பிடித்தவற்றை வாங்கிக்கொண்டு கைகாட்ட அவளுடன் வந்திருக்கும் வீர்ர்கள் அவற்றுக்குரிய விலையை அளிப்பார்கள்.
ஏகலவ்யனின் தந்தை சோனர் சந்தைக்கு அப்பால் இருந்த பெரிய சதுக்கத்தில் ஒன்பது அன்னையரின் ஆலயங்கள் நடுவே இருந்த முன்றிலில் தன் பீடத்தில் அமர்ந்திருப்பார். பின்னால் நிற்கும் அடைப்பக்காரன் இடைவெளி இல்லாமல் வெற்றிலையைச் சுருட்டி அவருக்கு அளித்தபடியே இருப்பான். வலப்பக்கம் குலமூத்தாரான சீதர் அமர்ந்திருப்பார். ஒவ்வொரு சந்தைநாளிலும் நூற்றுக்கணக்கான வழக்குகள் தந்தைக்கு முன் வரும். இரு தரப்பும் அழுதுகொண்டும் ஆவேசமடைந்தும் தங்கள் வாதங்களைச் சொல்ல அவர் தாம்பூலம் மென்றபடி அரைக்கண்மூடி கேட்டுக்கொண்டிருப்பார்.
அவர் இரு தரப்பையும் பேசவிட்டுக் கேட்டு வினாக்கள் தொடுத்து விசாரித்துவிட்டு குலமூத்தாரிடம் ஓரிரு சொற்கள் பேசிக் கலந்துவிட்டு தீர்ப்பளிப்பார். அவர் தீர்ப்பைச் சொன்னதும் அவர் அருகே நின்றிருக்கும் முழவுக்காரன் தன் முழவை அறைந்து ஒலியெழுப்பி அந்தத்தீர்ப்பை உரக்கக் கூவி அறிவிப்பான். இருசாராரும் தலைவணங்கி தீர்ப்பை ஏற்று பின்னகர்ந்ததும் அடுத்த வழக்குக்காரர் வாழையிலையில் வெற்றிலையும் பாக்கும் வைத்து பணிந்து வழங்கி தன் தரப்பை சொல்லத் தொடங்குவார்.
ஏகலவ்யன் சந்தைக்கு வந்ததுமே அன்னை மடியில் இருந்து இறங்கத்தான் முயன்றுகொண்டிருப்பான். அவள் அவனை அதட்டியும் செல்லமாக அடித்தும் தடுத்துக்கொண்டே இருப்பாள். “தந்தையிடம் செல்கிறேன்” என்று அவன் சிணுங்கிக்கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் அவள் “சரி செல்” என எரிச்சல் கொண்டு இறக்கிவிடுவாள். அது அவள் தன் விருப்புக்குரிய வண்ண ஆடைகளை நோக்கும் தருணமாகவே இருக்கும். ஏகலவ்யன் இறங்கி கால்களாலான காட்டுக்குள் நுழைவான்.
மரக்காட்டுக்குள் நுழைவதை விட அவனுக்கு அது கிளர்ச்சியளித்தது. ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருக்கும் அதன் அடர்வும் விலகலும், தலைக்குமேல் வீசும் கைகளின் சுழற்சிகளும், ஓயாத ஓசைகளும். அவனை ஏதேனும் வீரன் தேடிப்பிடித்து கையில் தூக்கிச் சுழற்றி தலையில் ஏற்றிக்கொள்வான். அப்போது அதுவரை தெரிந்த காடு காலுக்கடியில் இறங்கி மிதக்கும் நெற்றுகள் அலையடிக்கும் நீர்ப்படலமாக ஆகிவிடும்.
அவன் சந்தையை ஒருமுறைகூட தவறவிட்டதில்லை. சற்றே கால்கள் வளர்ந்தபோது அவனைப்போன்ற சிறுவர்களுடன் கூடிச்சிரித்து குறுங்காட்டில் வேட்டையாடிய பொருட்களுடன் சந்தைக்கு வந்து விற்று தனக்குப்பிடித்தவற்றை வாங்கத் தொடங்கினான். வண்ணமரவுரிகளும் மென்மையான ஆடைகளும் செதுக்கப்பட்ட மரப்பாவைகளும் செம்புப்பொருட்களும் குத்துவாட்களும் வாளுறைகளும் விரைவிலேயே சலித்துவிட்டன. அவன் ஆர்வம் அம்புகளுக்கும் வில்லுக்கும் திரும்பியது. அவன் அறிந்த வில்வித்தை முழுக்க அந்தச் சந்தையில் கிடைத்த கருவிகள் வழியாகவே. ஒவ்வொரு வில்லையும் அடுத்த சந்தைக்குள் அவன் முற்றிலும் பயின்று தேறியிருப்பான்.
அவனுடைய வில்திறன் சந்தையில் விரைவிலேயே முதன்மையான கேளிக்கையாக ஆகியது. சந்தை கூடியதுமே அவனைத்தான் அனைவரும் கேட்டுக்கொண்டிருப்பார்கள். ஹிரண்யவாகா நதியில் அலைகளில் மிதந்துசென்ற நூறு நெற்றுகளை அவன் நூறு அம்புகளால் அடித்த அன்று அவன் குலத்தைச்சேர்ந்த ஆயிரம் கைகள் அவனைத் தூக்கி தலைக்குமேல் வீசிப் பிடித்து ஆரவாரமிட்டன. அதன்பின் எப்போதும் கைகளில் மிதந்துதான் அவன் சதுக்கத்தை அடைந்தான். நீருக்குள் சென்ற மீன்களை அம்புகளால் துளைத்து மிதக்கச்செய்தான். அரசமரத்தின் இலைகளில் ஒன்றை மட்டும் அம்பெய்து கொய்துவந்தான்.
வானில் வீசப்பட்ட மூன்று நெற்றுகளை ஒற்றை அம்பில் அவன் அடித்து வீழ்த்திய அன்று அவனைச் சுற்றியிருந்தவர்களின் ஆரவாரம் மெல்ல அடங்கி அமைதி நிலவியது. திகைத்த விழிகள் மீன்கூட்டங்கள் போல அவனைச்சூழ்ந்து இமைத்து ஒளிவிட்டன. மூச்சொலிகள் மட்டும் எழுந்தன. அவன் குலமூத்தாரான பரமர் அவனை அணைத்து அவன் குடுமித்தலையில் முத்தமிட்டு “நீ நம் குலத்தின் நிகரற்றவீரன். பாரதவர்ஷத்தின் மாபெரும் வில்லாளிகளில் ஒருவன்… இறைவிளையாட்டால் இங்கு வந்து பிறந்திருக்கிறாய்” என்றார்.
அவனை அப்படியே தூக்கி தோளிலேற்றி ஒன்பது அன்னையர் அமர்ந்த ஆலயத்தின் முகப்பில் கொண்டு சென்று நிறுத்தி அன்னையின் காலடியின் பொன்னிற மண்ணை எடுத்து அவன் நெற்றியில் இட்டு “அன்னையே, எங்கள் குலக்கொழுந்துக்கு நீயே காப்பு” என்றார் பரமர். அதை ஏற்று பல்லாயிரம் தொண்டைகள் அவனுக்காக வேண்டிக்கொண்டன. அவனுக்காக அன்னையின் பாதங்களில் கனிகளும் மலர்களும் படைக்கப்பட்டன.
சந்தையில் அஸ்தினபுரியின் வணிகன் ஒருவனிடம் மூன்று நாணும் ஆறு அம்புத்தடமும் கொண்ட வில் ஒன்றை முதன்முறையாகப் பார்த்தபோதுதான் அவன் திகைத்தான். அதை கையில் எடுத்தபோதே பெரும் எடையுடன் பிடியிலிருந்து நழுவி காலில் விழுந்து கட்டைவிரலை நசுக்கியது. வலியுடன் காலை எம்பியபடி அவன் அதை கீழே போட்டான். அதை வைத்திருந்த வணிகன் நகைத்துக்கொண்டு “அது இரும்பாலானது. எளிய இரும்பல்ல, தூய வெட்டிரும்பு. உறையடுப்பில் உருக்கி நெடுநாள் குளிரச்செய்து அதைச் செய்கிறார்கள்” என்றான். “அதன் நாணும் தோலால் ஆனதல்ல. இரும்பாலானது. கை தவறினால் கழுத்தை அறுத்துவிடும். இதன் பெயர் திரிகரம்.”
ஏகலவ்யன் மீண்டும் அதை கையிலெடுத்துப்பார்த்தான். “இதை யார் வாங்குகிறார்கள்?” என்றான். “மலைக்குடித்தலைவர்கள் வாங்கி அணிகள் போல வைத்துக்கொள்கிறார்கள். இதைக்கற்க அவர்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. இங்கே மலைக்குடிகளில் ஏகலவ்யன் என்ற வில்வீரன் இருக்கிறான் என்றார்கள். அவனுக்காகவே கொண்டுவந்தேன்” என்றான். ஏகலவ்யன் “என் பெயர் ஏகலவ்யன்” என்றான். “எடுத்துக்கொள்ளுங்கள் இளவரசே… இது உங்களுக்குரியது…” என்றான் வணிகன். ஏகலவ்யன் அதை வாங்கி கையிலெடுத்துக்கொண்டதும் பின்னால் வணிகர்களில் ஒருவன் “அதை குடிலில் மாட்டி வைத்துக்கொள்ளலாம். பேய்கள் நெருங்காது” என்றான். வணிகர்கள் நகைத்தனர்.
ஏகலவ்யன் அதை அந்த மாதம் முழுக்க ஒவ்வொருநாளும் காலைமுதல் இரவுவரை பயின்றான். அதைப்பயில முயன்ற அவன் தோழர்களில் ஒருவனின் கட்டைவிரலை அதன் நாண் அறுத்துவீசியது. இன்னொருவனின் கழுத்து நரம்பு அறுபட்டு அவன் கீழே விழுந்து குருதி வழியத் துடித்து இறந்தபோது பிறர் அஞ்சி “வேண்டாம் இளவரசே, இதில் நகர்க்குடிகளின் ஏதோ தீயதெய்வம் குடியிருக்கிறது…” என்றார்கள். ஆனால் ஏகலவ்யன் அதன்பின் ஒருகணமும் அதையன்றி பிறிதொன்றை எண்ணமுடியாதவன் ஆனான். களைத்துச் சோர்ந்து அப்படியே விழுந்து இரவு துயில்கையில் அவனருகே அது கிடந்தது. காலையில் கனியாத தெய்வமென அவனருகே அது விழித்திருந்தது.
அதன் ஒவ்வொரு நாணிலும் அம்பேற்றி மரங்களில் காய்த்த கனிகளை வீழ்த்தி அவை நிலம் தொடுவதற்குள் அடுத்த அம்பினால் அடித்து மீண்டும் மரத்துக்கே ஏற்றினான் ஏகலவ்யன். அதை வந்துகண்ட அவன் தந்தை ஹிரண்யதனுஸ் விழியிமைப்பு மறந்து நின்றபின் “இவன் மண்மறைந்த அசுரமூதாதையரில் ஒருவன் அமைச்சர்களே” என்றார். அவர்கள் “ஆம், ஹிரண்யாக்ஷனின் விழிவிரைவும் ஹிரண்யகசிபுவின் நாண் விரைவும்கொண்டவன்” என்றார்கள். ஆனால் அவன் அறிந்திருந்தான், அந்த வில் தன்னை நோக்கி விடுக்கும் அறைகூவலை. ஒவ்வொருநாளும் இரவு வென்றுவிட்டோமென விழிமயங்கி காலையில் இல்லை அனைத்துமே எஞ்சியுள்ளன என்று விழித்துக்கொண்டான்.
மறுசந்தைக்கு அவ்வணிகன் வந்திருந்ததைக் கண்டு ஏகலவ்யன் மூச்சிரைக்க அவன் முன் வந்து நின்று கண்ணீருடன் “சொல்லுங்கள் வணிகரே, இவ்வில்லை நான் பயில்வது எப்படி?” என்றான். அவன் “நான் வணிகன் மட்டும்தான் இளவரசே. இவ்வில்லை அஸ்தினபுரியில் வாங்கினேன். தாங்கள் இதன் மூன்று நாணிலும் தொடர்ச்சியாக அம்பேற்றுவதாக சொன்னார்களே?” என்றான். “இல்லை, அதுவல்ல வித்தை. அந்தச் சிறிய தேர்ச்சிக்காக இதை அமைத்திருக்கமாட்டார்கள்…” என்றான். “மூன்று தனிவிற்களாகவும் மூன்று தனி அம்புகளாகவுமே இவை எனக்கு இன்று உள்ளன… இவற்றின் பொருள் அது அல்ல.” வணிகன் கைகூப்பி “நான் அறியேன் இளவரசே” என்றான்.
அன்றுமாலை ஏகலவ்யன் ஊர் திரும்பவில்லை. ஹிரண்யவாகா நதியின் படகொன்றில் வணிகர்கள் அறியாமல் ஏறி பொதிகளுக்குள் ஒளிந்துகொண்டான். மறுநாள் காலை மச்சநாட்டின் சுஹரிதம் என்னும் நகரை வந்தடைந்தான். மச்சநாட்டரசர் விராடரின் தம்பியான மதிராக்ஷன் ஆண்ட சுஹரிதம் கங்கைக்குச்செல்லும் பெரும்படகுகள் வந்தணையும் துறை கொண்டிருந்தது. சுஹரிதத்தின் படகுத்துறையில் அலைந்து தன் அணிகளில் ஒன்றை விற்று உணவுண்டபின் ஏகலவ்யன் தலைநகரான விராடபுரிக்குச் செல்லும் படகில் ஏறிக்கொண்டான். சுபர்ஸை ஆற்றின் கரையில் மாபெரும் படகுத்துறையுடன் அமைந்திருந்த விராடபுரியில் அவன் கையில் திரிகரம் என்னும் அந்த வில்லை ஏந்தி நடந்தபோது பார்த்தவர்கள் திகைத்து வழிவிட்டனர்.
மச்சர்களின் விராடபுரி அப்போதுதான் துறையும் சந்தைகளுமாக எழுந்து வந்துகொண்டிருந்த நகரம். அது எப்போதும் மகதத்தை அஞ்சிக்கொண்டிருந்தமையால் நகரைச்சுற்றி கற்களாலும் மண்ணாலும் பெரிய கோட்டையை கட்டி எழுப்பிக்கொண்டிருந்தனர். நதிமுகத்தில் கொடிகள் பறக்கும் காவல்மாடங்களுடன் இருந்த கோட்டை மறுபக்கம் சிற்பிகளாலும் மண்வேலைக்காரர்களாலும் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. உள்ளே மாளிகைகளும் பெரும்பாலும் புதியதாக கட்டப்பட்டவையாகவும், கட்டிமுடிக்கப்படாதவையாகவும்தான் இருந்தன. நதிவழியாக வந்த மரத்தடிகளை அடுக்கி ரதப்பாதைகளை அப்போதுதான் அமைத்துக்கொண்டிருந்தனர். எங்கும் வேலேந்திய வீரர்கள் கடுமையான நோக்குடன் சுற்றிவந்தனர்.
ஏகலவ்யன் கையில் வில்லுடன் நகரத்தை சுற்றிவந்தான். விராடபுரிக்கு நிஷாதர்கள் அயலவர்கள் அல்ல என்று தெரிந்தது. மலைப்பொருட்களை விற்பதற்கும் பொருட்களை வாங்குவதற்கும் அவனைப்போன்றே தோற்றமளித்த நிஷாதர்கள் பலர் வந்திருந்தனர். சாம்பல்பூசிய உடலும் தோலாடையும் நெற்றியில் எழுதிய முக்கண்ணுமாக அவர்கள் தெருக்களில் சுற்றிவந்தனர். அப்பங்கள் விற்பவர்களிடம் வாங்கி உண்டபடியும் யவன மது விற்கப்படும் கடைகள் முன் அமர்ந்து குடித்துக்கொண்டு கரியபற்களைக் காட்டி விக்கி விக்கி நகைத்தபடியும் இருந்தனர்.
விராடபுரியின் சதுக்க மையத்தில் உயர்ந்த தூண் ஒன்றில் சுழன்றுகொண்டிருந்த கூண்டு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதன் வெளியே பன்னிரு பாவைக்கிளிகள் இருந்தன. கூண்டுக்குள் மூன்று பாவைக்கிளிகள் நிழலாகத் தெரிந்தன. வெளியே தெரிந்த பாவைக்கிளியை அம்பால் வீழ்த்துபவர்களுக்கு பத்து பொற்காசுகளும் உள்ளே இருக்கும் கிளிகளை வீழ்த்துபவர்களுக்கு நூறு பொற்காசுகளும் பரிசளிக்கப்படும் என்ற அறிவிப்பு அங்கே வைக்கப்பட்டிருந்தது. எப்போதும் எவரோ அதை வேடிக்கையாக வெல்ல முயன்று பிறரது நகைப்புக்கு ஆளாகியபடியே இருந்தனர்.
அந்தத் தூணருகே வந்து நின்று ஏறிட்டு நோக்கிய ஏகலவ்யன் அது அம்புப்பயிற்சிக்கான பாவைத்தூண் என புரிந்துகொண்டான். அங்கே வெல்பவர்களை உருவாகி வந்துகொண்டிருந்த விராடநாட்டின் படைக்குச் சேர்த்துக்கொள்வதற்கான அமைப்பு அது என்று அவன் அறியவில்லை. நாணொலி எழுப்பி அவன் வில்லைத் தூக்கியதும் அப்பகுதிகளில் நின்றிருந்த வீரர்கள் நகைத்தபடி ஏறிட்டு நோக்கினர். “நிஷாதச்சிறுவன் அவற்றை மாமரத்துக்கனிகள் என நினைத்துக்கொண்டான்போல” என ஒரு குரல் எழுந்தது. “அவன் கையிலிருப்பது திரிகரம்… அதை எளியோர் ஏந்தமுடியாது” என மூத்தவர் ஒருவர் சொல்ல பலர் ஆவலுடன் எழுந்தனர்.
கூண்டுக்கு வெளியே இருந்த பன்னிரு பாவைக்கிளிகளும் சிதறடிக்கப்பட்டு மரச்சிம்புகளாகச் சிதறி மண்ணில் விழுந்தபோது கூட்டம் ஆரவாரமிட்டபடி வந்து சூழ்ந்துகொண்டது. ‘அவனா!’ என்ற வியப்புகள் ‘யார்? யார்?’ என்ற திகைப்புகள். ஏகலவ்யன் அடுத்த அம்பை எடுத்து குறி நோக்கியபோது “நிஷாதன் அத்துமீறிச்செல்கிறான்!” என்றது ஒரு குரல். ஆனால் அதை எவரும் ஏற்று ஒலியெழுப்பவில்லை. கூண்டுக்குள் நுழைந்த அம்பு பாவைக்கிளி ஒன்றை உடைத்து எடுத்து மறுபக்கம் சென்றபோது பெரும் ஆரவாரம் எழுந்தது. இரண்டாவது கிளியை அது உடைத்தபோது குரல்கள் அமைந்தன. மூன்றாவது கிளி சிதறியபோது அவனைச்சுற்றி களிமண் பாவைகள் போல மக்கள் சொல்லிழந்து நின்றிருந்தனர்.
பின்னர் ஓசைகள் வெடித்துக்கிளம்பின. அவனைச்சூழ்ந்துகொண்ட வீரர்கள் அவன் ஈட்டியிருக்கும் பெரும் செல்வத்தைப்பற்றி சொன்னார்கள். அதைப் பெறுவதற்காக அவனைக் கூட்டிக்கொண்டு பெருங்கூட்டமாக விராடரின் அரண்மனை நோக்கிச் சென்றனர். அவன் சென்று சேர்வதற்குள்ளாகவே அவனைப்பற்றிக் கேட்டறிந்து விராடரே அரண்மனையின் முகப்புமண்டபத்துக்கு வந்திருந்தார். உச்சியில் குடுமியை தோல்பட்டையால் கட்டி, கரிய உடம்பெங்கும் சாம்பல்பூசி, தோலாடை அணிந்து மெல்லிய கைகால்களுடன் வந்த சிறுவனைக்கண்டு விராடர் திகைத்தார். அவர் அருகே நின்றிருந்த அமைச்சர் “இது பயின்றுவரும் கலையல்ல அரசே, சிலருக்கு கலையை தெய்வங்கள் கையில்கொடுத்து மண்ணுக்கு அனுப்புகின்றன” என்றார்.
“இளையோனே, உனக்குரிய பொற்பரிசிலை அளிப்பதில் மச்சநாடு பெருமைகொள்கிறது. உன் பெயரென்ன? குலமென்ன?” என்றார் விராடர். “ஹிரண்யபதத்தின் கருடகுலத்தின் தலைவரான சோனரின் மைந்தன் நான். என் பெயர் ஏகலவ்யன்” என்றான் அவன். “உன் பரிசிலை நீயே பெற்றுக்கொள்கிறாயா?” என்றார் விராடர். ஏகலவ்யன் பொருள் விளங்காமல் நோக்க, அம்புகளைத்தவிர்த்த அனைத்திலும் அவன் மலைமகனாகிய சிறுவனே என்று உணர்ந்த விராடர் புன்னகையுடன் “இது பெரும்பரிசில்… உன்னால் அத்தனை பொன்னை தூக்கவும் முடியாது” என்றார். ஏகலவ்யன் அதற்கும் பொருளில்லாமல் விழித்த விழிகளுடன் நின்றிருந்தான்.
“இளையோனே, இப்பரிசிலுடன் நீ இந்நாட்டில் தங்கலாம். மச்சர் அரசின் படைத்தலைவர்களில் ஒருவனாக நீ இருந்தால் அதை இந்நகரும் என் அரசும் கொண்டாடும்” என்றார் விராடர். “என் தந்தை மகதத்தின் சிற்றரசர். அவருக்கு ஹிரண்யதனுஸ் என்று அங்கே அவைப்பெயர். அவர் ஒப்புக்கொள்ளாத எதையும் நான் செய்யமுடியாது” என்றான் ஏகலவ்யன். விராடர் முகம் மாறியது. “ஆம், நீ இங்கு சேர்ந்தால் அதை மகதம் ஒப்பாது. மகதமும் நாங்களும் ஏழுதலைமுறைகளாக போர் புரிகிறோம். உன் தந்தையின் ஆணையை மீறி இங்கே நீ இருந்தால் அவரையே நீ களத்தில் சந்தித்தலும் ஆகும்” என்றார். அந்த இக்கட்டுகளை எல்லாம் ஏகலவ்யன் விளங்கிக்கொள்ளாமல் அதே விழித்த நோக்குடன் அங்கு நின்றவர்களை மாறி மாறி நோக்கினான்.
“இளையோனே, நீ விழைவது என்ன?” என்றார் விராடர். “இவ்வில்லை எனக்குக் கற்பிப்பவர் எவர் என அறியவிழைகிறேன்… தங்கள் அரசின் வில்வேத அறிஞர்களில் எவரேனும் என்னை மாணவராக ஏற்பார்கள் என்றால் இங்கிருந்து கற்கவே விழைகிறேன்” என்றான் ஏகலவ்யன். விராடரின் அருகே நின்றிருந்த அவரது வில்வித்தை ஆசிரியரான தீர்க்கநாசர் “இளையோனே, இது திரிகரம் என்னும் வில். இதன் மூன்றுநாண்களையும் ஒரேசமயம் கையாள்வதென்பது எவராலும் இயலாதது. நீ இதை கையாள்வதைக் கண்டே நான் திகைத்துப்போயிருக்கிறேன்” என்றார்.
“இதை எவரிடம் நான் கற்கமுடியும் மூத்தாரே?” என்று ஏகலவ்யன் கேட்டான். தீர்க்கநாசர் “நானறியேன். பாரதவர்ஷத்தின் மாபெரும் வில்ஞானிகள் ஐவர். பரசுராமர், சரத்வான், பீஷ்மர், அக்னிவேசர், துரோணர். அவர்களுக்குத் தெரிந்திருக்கும்” என்றார். “அவர்கள் எங்கிருக்கிறார்கள்?” என்று ஏகலவ்யன் கேட்டான். “இளையோனே, அவர்களில் பரசுராமரும் சரத்வானும் புராணங்களில் வாழ்பவர்கள். அவர்கள் உண்மையில் இருக்கிறார்களா என்றே சொல்லமுடியாது. அக்னிவேசகுருகுலம் உத்தரகங்காபதத்தில் உள்ளது. பீஷ்மரும் துரோணரும் அஸ்தினபுரியில் வாழ்கிறார்கள்.” ஏகலவ்யன் உடனே “அஸ்தினபுரி எங்கிருக்கிறது?” என்றான்.
விராடர் புன்னகைசெய்து “அஸ்தினபுரி இங்கிருந்து நெடுந்தொலைவு. நீ தனியாக அத்தனைதூரம் செல்லமுடியாது. உன் நாட்டுக்கு திரும்பிச்செல். உன் கைகளும் கால்களும் வளர்ந்தபின் தந்தையிடம் ஒப்பம் பெற்று உரிய காணிக்கைகளுடன் சென்று துரோணரைப் பார்த்து கற்றுக்கொள்” என்றார். “நான் இன்றே அஸ்தினபுரிக்குச் செல்கிறேன்” என்று ஏகலவ்யன் திரும்பி நடக்கத் தொடங்கினான்.
“இன்றா? இன்று நீ எங்கள் பரிசில்களை ஏற்று இங்கிருக்கவேண்டும்” என்றார் விராடர். “நான் இப்போதே கிளம்புகிறேன்” என்று ஏகலவ்யன் வில்லுடன் திரும்பிவிட்டான். விராடர் “நில்! இளையோனே, உன் பரிசிலை பெற்றுக்கொள்” என்று கூவினார். விராடரின் கருவூல அமைச்சர் மரப்பெட்டகத்தில் பொற்கழஞ்சுகளைக் கொண்டு வந்து வைக்க அவன் வழக்கமான பொருள் உருவாகாத விழித்த பார்வையுடன் அவற்றை நோக்கியபின் ஒரு கைப்பிடி மட்டும் அள்ளிக்கொண்டு கிளம்பினான்.
“இப்பரிசில் உனக்குரியது” என்றார் விராடர். ஏகலவ்யன் பேசாமல் மண்டபப் படிகளில் இறங்க “நீ வந்து கேட்பதுவரை இவை இங்கேயே இருக்கும்” என்றார். ஏகலவ்யன் கூட்டத்தை நோக்கிச்சென்றபோது உலர்ந்த புல்வெளியை கனல்துளி எரித்துச்செல்வது போல வழி உருவானது. நேராக அவன் மீண்டும் விராடபுரியின் படித்துறைக்கே வந்தான். படகிலேறிக்கொண்டு “அஸ்தினபுரிக்குச் செல்க” என்றான். படகிலிருந்த வணிகன் “இப்படகு மகதத்துக்குச் செல்வது இளையோனே. அங்கிருந்து கலிங்கத்துக்கு” என்றபோது கைப்பிடிப்பொன்னை அப்படியே நீட்டி “அஸ்தினபுரிக்கு” என்று ஏகலவ்யன் மீண்டும் சொன்னான்.
நான்குநாட்களுக்குப்பின் அவன் அஸ்தினபுரியின் படித்துறைக்கு வந்திறங்கினான். அங்கேயே பீஷ்மர் நகரில் இல்லை, எங்கென்றறியாமல் வழக்கமான கானுலா சென்றுள்ளார் என்றறிந்தான். மறுசொல்லாகவே துரோணரின் குருகுலத்தை அறிந்துகொண்டு ஒரு கணம் கூட அஸ்தினபுரியை ஏறிட்டு நோக்காமல் திரும்பி கங்கைக்கரைவழியாக நடந்து சென்றான்.
மாலைவெயிலில் குருகுலத்தை நோக்கி அவன் செல்லும்போது எதிரே தோளில் வில்லுடன், நடுங்கும் உடலும் துடிக்கும் உதடுகளும் கலங்கிய கண்களுமாக வந்த ஒருவனைக் கண்டான். அவன் சூழ்ந்துள்ள எதையும் பார்க்காமல் எங்கிருக்கிறோமென உணராமல் சென்றான். அவன் உடல் தன் உடலைக்கடந்துசென்ற கணத்திலேயே அவன் உடல் கொதித்துக்கொண்டிருப்பதை ஏகலவ்யனால் உணரமுடிந்தது. ஒரு இறுகியநாண் விம்முவதுபோல ஓர் ஒலி கேட்டதாக அவனுக்குத் தோன்றியது.
அவன் சென்றபோது அவனருகே புதர்களில் நீரோடை ஒன்று செல்லும் ஓசையைக் கேட்ட ஏகலவ்யன் குனிந்து நாசியை சுளித்து வாசமெடுத்தான். பெரிய அரசநாகம் ஒன்று நெளிந்துசெல்லும் அம்புபோல அவனுக்குப்பின்னால் சென்றுகொண்டிருப்பதைக் கண்டான். அவனை அது தீண்டப்போகிறது என நினைத்து ஏகலவ்யன் திரும்பினான். அதற்குள் அவன் நெடுந்தொலைவு சென்றிருந்தான். அந்த அரசநாகம் அவனை பாதுகாக்கவே தொடர்ந்து செல்கிறது என்று எண்ணிக்கொண்டான். விழித்த வெண்விழிகளுடன் அவன் சென்ற திசையை நோக்கி சிலகணங்கள் நின்றபின் அவன் நடந்தான்.
இருளத்தொடங்கும்போது இருவர் கைகளில் வில்லுடன் அவனெதிரே வந்தனர். ஒருவன் “நிஷாதனே, கௌரவ இளவரசனாகிய என் பெயர் வாலகி. இவன் சித்ராயுதன். எங்கள் தோழன் கர்ணன் என்பவன் இவ்வழிச்செல்வதைக் கண்டாயா?” என்றான். ஏகலவ்யன் “ஆம், ஒருவன் தீப்புண்பட்ட பன்றிபோலச் சென்றான் இவ்வழியே…” என்றான். “அவன்தான்!” என்றபடி அவர்கள் விரைந்தனர்.
மேலும் சற்றுநேரத்தில் மூன்று கௌரவர்கள் வந்து கர்ணனைப்பற்றிக் கேட்டுவிட்டு ஓடினர். ஏகலவ்யன் செல்லும் வழி முழுக்க கர்ணனைப்பற்றியே எண்ணிக்கொண்டு சென்றான். நெடுந்தொலைவில் வந்த அவனைப் பார்ப்பதற்குள்ளாகவே அவன் கண்ணீரை தான் அறிந்துவிட்டிருந்ததை உணர்ந்து ஒருகணம் நின்றுவிட்டான். பெருந்துயர் கொண்டவனின் உடல் அத்துயராகவே மாறிவிடுவதன் விந்தை அவன் அகத்தை பாம்பைக்கண்ட புரவி என விரைத்து நின்று நடுங்கச்செய்தது.
ஏகலவ்யன் தன் எதிரே புரவிகளில் கரிய இளவரசன் ஒருவனும் பேருடல் கொண்ட இன்னொரு இளவரசனும் வருவதைக் கண்டு புதர்களுக்குள் மறைந்தான். அவர்களின் புரவிகள் பெருநடையிட்டு வந்து அவனைக் கடந்துசென்றபோது மூக்கை சுளித்து ஒருகணம் தயங்கின. பேருடல்கொண்டவன் ‘ஜூ’ என்றதும் புரவி முன்னால் ஓடியது. கரிய இளவரசன் தலைகுனிந்து அமர்ந்திருப்பதை ஏகலவ்யன் கண்டான். ஏகலவ்யன் மீண்டும் ஓர் அக அசைவை அறிந்தான். அந்தக் கரியவனும் கடும்துயர்கொண்டிருந்தான். அவனுடைய தோள்களிலும் கைகளிலும் எல்லாம் துயர் நிறைந்திருந்தது, இலைநுனியில் தேங்கிய மழைத்துளி போல. அத்துயரை அவன் குதிரையும் தன்னுடலில் நிறைத்துக்கொண்டிருந்தது.
ஏகலவ்யன் துரோணரின் குருகுலத்தை அடைந்தபோது இருளாகிவிட்டது. அவன் குருகுலத்துக்குள் நுழைந்தபோது எங்கோ ஓர் யானை உரக்கக் குரல்கொடுக்க நாலைந்து யானைகள் விடையிறுத்தன. “சிறுத்தை நுழைந்திருக்கிறது போலும்… பார்” என்று யாரோ சொன்னார்கள். பந்தங்களுடனும் விற்களுடனும் வீரர்கள் வருவதைக் கண்டதும் ஏகலவ்யன் இயல்பாக ஒரு மரத்திலேறி உச்சிக்குச் சென்று மறைந்தான். அவர்கள் நாற்புறமும் நோக்கி “இல்லையே” என்றார்கள். “யானை சிறுத்தை என்றுதான் சொன்னது. நான் நன்றாகவே அதன் மொழியை அறிவேன்” என்றான் ஒருவன். அவர்கள் குடில்களை அடைந்து தரையை கூர்ந்து நோக்கினார்கள். அவர்களின் பந்தங்கள் வழியாகவே அந்த இடத்தை நன்கறிந்துகொண்டான்.
அவர்கள் சென்றபின் ஏகலவ்யன் மெல்ல இறங்கி வந்தான். ஓசையற்ற காலடிகளுடன் முற்றத்தை அணுகி நான்குபக்கமும் நோக்கிவிட்டு மண்திண்ணையில் ஏறி சாளரம் வழியாக உள்ளே நோக்கினான். உள்ளே படுத்திருந்த கரிய சிற்றுரு கொண்ட மனிதரைக் கண்டதுமே அவன் அகம் அவரை அறிந்துகொண்டது. முகம் மலர்ந்து கைகூப்பியபடி முகமும் மார்பும் தொடைகளும் மண்ணில்பதிய அவன் விழுந்து வணங்கினான். அவன் உடல் மழைக்கால நதிப்பரப்பு போல சிலிர்த்துக்கொண்டே இருந்தது. மெல்ல எழுந்தமர்ந்தபோது தன் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி மார்பை நனைப்பதை உணர்ந்தான். கைகளால் துடைக்கத் துடைக்க கண்ணீர் ஊறி வழிந்தபடியே இருந்தது. நெஞ்சை அடைத்து அடக்கமுயன்ற மூச்சின் தடையை மீறி வெளிவந்த விசும்பல் ஒலியைக் கேட்டு அவன் உடலே அதிர்ந்தது.
பின் பெருமூச்சுடன் எழுந்து துடைக்கமறந்த விழிநீர்த்தாரைகளுடன் சாளரம் வழியாக நோக்கினான். குடிலின் ஓரத்தில் அவனிடமிருந்ததுபோன்ற திரிகரம் என்னும் வில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அதனருகே வெண்ணிற உடல்கொண்ட சிறுவன் ஒருவன் ஈச்சம்பாயில் மரத்தலையணை வைத்துப்படுத்திருந்தான். அவனுடைய சீரான மூச்சொலி கேட்டுக்கொண்டிருந்தது. அப்போதுதான் ஏகலவ்யன் துரோணர் துயிலவில்லை என்பதை உணர்ந்தான். அவரது உடல் துயிலுக்குரிய நெகிழ்வுடன் இருக்கவில்லை. நீரில் ஊறி விரைத்த சடலம் போல அவர் அசைவற்று இறுகிக் கிடந்தார். இருளுக்குள் கூர்ந்து நோக்கிய ஏகலவ்யன் அவரது கண்கள் திறந்து கூரையைநோக்கிக்கொண்டிருப்பதைக் கண்டான். அவர் விழிகள் இலையில் தேங்கி தத்தளிக்கும் மழைநீர்த்திவலை போல அலைபாய்ந்தன.