பகுதி ஒன்பது : பொன்னகரம்
[ 3 ]
ஹிரண்மயத்தின் மேல் மழை பெய்து ஓய்ந்து துளிசொட்டும் தாளம் பரவியிருந்தது. செந்நிறவெள்ளம் காற்றில் பறக்கும் பட்டுச்சேலைபோல நெளிந்து சுழித்துக்கொண்டிருந்த ஹிரண்யவாகா ஆற்றின் கரையோரமாக ஏழுநாட்கள் நடந்து வந்து ஓர் இடத்தில் காட்டின் செறிவினால் முற்றிலும் தடுக்கப்பட்டு இளநாகனும் பூரணரும் நின்றுவிட்டனர். மீண்டும் வந்த தொலைவெல்லாம் சென்று வேறுவழி தேடவேண்டும் என்று இளநாகன் சொன்னான். “இளைஞரே, நீர் இன்னும் வாழ்க்கையை அறியவில்லை. முற்றிலும் வழிமுட்டி நிற்கையில் ஏற்படும் பதற்றம் எப்போதும் தவறான முடிவையே எடுக்கச்செய்கிறது. ஏதேனும் ஒருவழி திறக்கும் என்று காத்து சிலநாட்கள் இருக்கலாம். அப்படி காத்திருப்பதில் ஓர் அழகு உள்ளது. அதை தெய்வங்கள் விரும்பும்” என்றார் பூரணர்.
இளநாகன் வாதாடியதை பூரணர் பொருட்படுத்தவில்லை. “இங்கே ஊழ் என்ன நினைக்கிறதென்பதை பார்ப்போமே” என்றார். இரண்டுநாட்கள் அங்கேயே காத்திருந்தனர். இளநாகன் உச்சிப்பாறை ஒன்றின்மேல் ஏறி பார்த்துவிட்டு “இவ்வழியாக மேலே செல்லமுடியாது. ஆழ்ந்த சதுப்புநிலம் உள்ளது. ஆற்றிலிறங்குவதும் முடியாது. கரைமுழுக்க முதலைகள் தெரிகின்றன” என்றான். “தெய்வங்கள் விளையாடுகின்றன” என்று சிரித்த பூரணர் ஒரு மூங்கிலை வெட்டி அதை புல்லாங்குழலாக ஆக்கி வாசிக்க முயன்றார். ஓசை எழாது போக அது ஏன் என்று துளைகளில் கைவைத்துப் பார்த்து ஆராய்ந்தார். “மேலும் இங்கிருப்பது வீண். நாம் வானரங்கள் அல்ல” என்றான் இளநாகன்.
அதைக்கேளாத பூரணர் மூங்கிலிலேயே தன் சித்தத்தை நாட்டி முழுநாளும் இருந்தார். பின்மதியத்தில் அதில் இசையெழுந்தது. “இசை!” என்று அவர் கூவினார். “ஹிரண்யவாகா நதிக்கரை மூங்கில்களே, இதோ உங்களில் ஒருவருக்கு வாய் திறந்திருக்கிறது. உங்கள் தலைமுறைகள் அறிந்தவற்றை எல்லாம் பாடுங்கள்” என்றார். அதன்பின் எந்நேரமும் அவரது குழல் பாடிக்கொண்டே இருந்தது. “இது எப்போது ஓயும்?” என்று இளநாகன் கேட்டான். “இப்போதுதான் ஒரு மூங்கில் பாடத் தொடங்கியிருக்கிறது. காடே எஞ்சியிருக்கிறதே!” என்றார் பூரணர். இளநாகன் சலிப்புடன் ஒரு மரத்தின்மேல் ஏறி அமர்ந்துகொண்டு பெருகிச்சென்ற ஆற்றையே நோக்கிக்கொண்டிருந்தபோது அதில் ஒரு படகைக் கண்டான்.
“படகு! படகு!” என அவன் கூவியபடி கீழிறங்கி ஓடிவந்தான். பாறைமேல் அமர்ந்திருந்த பூரணர் “அதில் இத்தனை துள்ள என்ன இருக்கிறது? படகு என்றால் அது ஹிரண்மயத்துக்கு மட்டுமே செல்லும். வேறெந்த இடமும் இங்கில்லை” என்றார். இளநாகன் கரையில் நின்று கூச்சலிட்டு துள்ளினான். பூரணர் அவர் துளைபோட்டு வைத்திருந்த இன்னொரு பெரிய மூங்கிலை எடுத்து உரக்க சீழ்க்கையடித்தார். படகில் சென்ற ஒருவன் அவர்களை கண்டுகொண்டான். படகு நெருங்கி வந்தது. அதிலிருந்த மலைக்குடியைச்சேர்ந்த முதியவர் அவர்களை நோக்கி கைநீட்டினார். படகு அணுகி நீரிலேயே நின்றது.
முதியவர் “இங்கிருந்து படகிலேற முடியாது அயலவர்களே. கரைமுதலைகள் படகை தாக்கக்கூடும். அந்தப் பாறைமேல் ஏறி மறுபக்கமாக இறங்கி வருக” என்றார். இளநாகன் பாய்ந்து முன்னால் ஓடினான். அவன் கால்சறுக்கி விழ பூரணர் அமைதியாக நடந்து பாறைமேல் ஏறி படகில் இறங்கினார். இளநாகன் காலை நொண்டியபடி பாறைமேல் ஏறி படகில் இறங்கிக்கொண்டதும் “இந்தக்காட்டில் இருந்து மீளவே முடியாதென எண்ணிக்கொண்டேன் பூரணரே” என்றான். “மீளாவிட்டாலும்தான் என்ன என நான் எண்ணிக்கொண்டேன். அதுவே வேறுபாடு” என்றார் பூரணர். “அயலவர்களே, நீங்கள் செல்வழி எது?” என்று முதியவர் கேட்டார். பூரணர் ஹிரண்மயத்துக்குச் செல்வதைப்பற்றி சொன்னார்.
மகிஷகுலத்தைச் சேர்ந்த குடித்தலைவரான அவர் தன்னை சம்பர் என்று அறிமுகம் செய்துகொண்டார். அவரும் படகிலிருந்த பிற மூவரும் ஹிரண்மயத்து தெய்வங்களுக்கு குடிப்பலி ஒன்றை நிறைவேற்றுவதற்காக சென்றுகொண்டிருந்தனர். “ஹிரண்மயம் மண்ணில் விழுந்து நூற்றுப் பன்னிரண்டாயிரம் ஆண்டுகளாகின்றன என்பது எங்கள் குலக்கணக்கு. அதன் பின் இந்தக் காட்டில் நூற்றுப்பன்னிரண்டு ஆலமரக் குலங்கள் பிறந்து அழிந்திருக்கின்றன” என்றார் சம்பர். “ஹிரண்மயம் மண்ணில் விழுந்த அதிர்வில் நூறு குளங்கள் இங்கே உருவாயின. அவற்றில் நாங்கள் எங்கள் முன்னோர்களுக்கான நீர்க்கடன்களை செய்கிறோம்.”
படகு ஹிரண்யவாகாவின் நடுப்பெருக்கிலேயே சென்றது. கரையோரமாக பாறைகளும் முதலைகளும் உண்டு என்றார் சம்பர். “படகு கவிழுமென்றால் கணநேரம்கூட உயிர்தரிக்க இயலாது. நீருக்குள் வளர்ந்துள்ள நீர்க்கொடிகள் மேலும் வஞ்சம் மிக்கவை.” இளநாகன் பூரணரிடம் “இவர்கள் வராவிட்டால் நாம் வந்திருக்கவே முடியாது” என்றான். “ஆம், நம்முன் இவர்களை கொண்டுவருவதற்காகவே அங்கே காடு செறிந்திருந்தது” என்றார் பூரணர். இளநாகன் பதற்றம் விலகிய உவகையில் “விடையில்லா வினாக்களுக்கு ஊழ் போல எளிய விளக்கம் வேறில்லை” என்று நகைத்தான்.
ஆறு கிடைமட்டமாக விழும் அருவி என்று தோன்றியது இளநாகனுக்கு. அதன் மேல் படகு சுழல் காற்றில் பறந்துசெல்லும் சருகுபோலச் சென்றது. நதிக்குள் இறங்கி கூந்தலை நீரிலாடவிட்டு நின்றிருந்த பெரிய ஆலமரம் ஒன்றின் அருகே சென்று படகு அணைந்தது. அதன் கொடிகளைப்பற்றி கிளையில் ஏறி மரத்தின் வழியாகச் சென்று உலர்ந்த நிலத்தில் இறங்கி மேலே சென்றனர். அடர்ந்த புதர்களை கத்தியால் வெட்டி வழி செய்து அவர்கள் முன்னால் செல்ல இளநாகனும் பூரணரும் தொடர்ந்தனர்.
காடு முழுக்க நீராவி நிறைந்து மூச்சடைக்கச்செய்தது. புருவங்கள் மழை ஓய்ந்த கூரைவிளிம்பு போல சொட்டின. காடெங்கும் தவளைக்கூச்சல் நிறைந்திருந்தது. யானைக்காது போல செம்புள்ளிகளுடன் அகன்று நின்ற இலைகளில் அமர்ந்திருந்த செவ்வண்ணத்தவளையின் கழுத்து எழுந்து எழுந்து அதிர்வதை அவன் கண்டான். பச்சைப்பாம்புகள் இலைத்தண்டுகளுடன் பிணைந்து விழியசையாமல் நின்றிருந்தன.
பின்னர் மழைகொட்டத்தொடங்கியது. காட்டின் ஓலத்தை அருவி ஒன்று நெருங்கி வருகிறதென அவன் பிழையாக விளங்கிக்கொண்ட கணத்திலேயே ஈர வைக்கோல்கட்டுகளை அள்ளி அவர்கள்மேல் குவித்து மலையென எழுப்பியதுபோல மழை அவர்களை மூடியது. இலைகள் கொந்தளிக்க கிளைகள் சுழன்றாட பாறையிடுக்குகளில் வெண்ணிறமாக நீர் பெருகிக்கொட்ட வான்நீர்ப்பெருக்கு பொழிந்தது. மரங்களின் தடிகளில் அலையலையாக நீர் வழிந்து அவற்றை ஓடும் பாம்புகள் போலக் காட்டியது. அதேவிரைவில் மழை நின்று காடு நீர்சொட்டும் ஒலியாக மாறியது. இலைப்பரப்புகள் பளபளத்து நீர் உதிர்த்து அசைந்தன. நீர்த்துளிகளை அள்ளி இலைகள் மேல் வீசியது காற்று.
அப்பால் தெரிந்த ஏதோ ஒன்றை சுட்டிக்காட்டி சம்பர் “ஹிரண்மயம்” என்றார். இளநாகன் எதையும் காணவில்லை. “எங்கே?” என்று அவன் கேட்டான். அதற்குள் பூரணர் கண்டுவிட்டார். அவரது வியப்பொலியை இளநாகன் கேட்டு மேலும் பதற்றம் கொண்டான். அவன் விழிகள் ஈரம் ஒளிவிட்ட இலைவெளியை துழாவின. அதன்பின் அவன் மிக அருகே அதைக் கண்டுகொண்டான். மஞ்சள்நிறமான மென்பாறையாலான வட்டவடிவமான ஒரு கட்டடத்தின் அடித்தளம். அவன் அதைத் தொட்டு சுற்றிவந்தான். அக்கட்டடத்தின் எல்லா பக்கமும் முழுமையாக மூடியிருந்தது. “இதற்குள் செல்லும் வழி எங்கே?” என்று கேட்டதுமே அவன் அறிந்துகொண்டான், அது ஒரு மாபெரும் தூணின் அடிப்பக்கம் என.
“அசுரர்குலத்தவர் மனிதர்களை விட நூறு மடங்கு பெரிய உடல்கொண்டவர்கள் இளைஞரே” என்றார் சம்பர். “ஆகவே இங்குள்ள ஒவ்வொன்றும் நூறுமடங்கு பெரியது. யானைக்கூட்டத்தின் காலடியில் திரியும் எறும்புகளெனவே நாம் இங்கு நம்மை உணர முடியும்.” சொட்டும் மரங்கள் செறிந்த பசுமைக்குள் இன்னொரு பெருந்தூணின் அடிப்பகுதியை இளநாகன் கண்டான். அத்தகைய நூற்றுக்கணக்கான தூண்களுக்கு நடுவே பிரம்மாண்டமான கற்பலகைகள், உத்தரங்கள் பாதிமண்ணில் புதைந்து பரவிக்கிடந்தன.
அருகே மண்ணில் பாதி புதைந்து கொடிகள் படர்ந்து காலில் மிதிபட்டது பெருஞ்சிலை ஒன்றின் மூக்கு என்று அறிந்து கீழே குதித்தான். அவன் கால்கள் பதறத்தொடங்கின. எங்கு கால்வைத்தாலும் அங்கே உடைந்த சிற்பங்களின் உறுப்புகளே தெரிந்தன. சரிந்த அடிமரம் போலத்தெரிந்த ஒன்று ஒரு முழங்கை. இரண்டாள் உயரமான சிதல்குவியலென செடிகள் மூடித்தெரிந்தது ஒரு கொண்டை. நீர்தேங்கிய கல்குளமெனத் தெரிந்தது பெருஞ்சிலை ஒன்றின் உந்தி.
இளநாகன் ஓடத்தொடங்கினான். பூரணர் “பாணரே, நில்லுங்கள்… நில்லுங்கள்” என்று கூவிக்கொண்டிருக்க அவன் காட்டுச்செடிகளும் கொடிகளும் அடர்ந்த அந்த பாறைச்சிற்பங்களுக்குமேல் தாவித்தாவி சென்றான். கைகளை விரித்து சொல்லிழந்து விம்மினான். கால்வழுக்கி விழுந்து உடலெங்கும் சேறுடன் மீண்டும் ஓடினான். பின் மூச்சிரைக்க உடலில் பட்ட அடிகளால் எலும்புகள் தெறிக்க அவன் நின்றான். அவன் முன் ஒரு சிறு தடாகம் போல ஒற்றைக்கண் ஒன்று மல்லாந்திருந்தது, அதன் விழிவளைவில் ஈரம் பளபளத்தது. கன்னச்சரிவினூடாக அவன் நடந்து சென்று மேலெழுந்து நின்ற கூர்மூக்கின் கீழ்வளைவில் தொற்றி ஏறி நுனிமூக்கில் நின்று அப்பால் தெரிந்த மறுவிழியை நோக்கினான். கீழே உதடுகள் மேல் புதர் அடந்திருந்தது. பளபளப்பான கல்திண்ணை என நெற்றிமேடு ஈரத்தில் ஒளிவிட்டது.
அந்தப்பெருங்கனவு தன்னை என்னசெய்கிறதென்று போதம் தெளியத்தெளிய அவனுக்கு துலங்கி வந்தது. அவன் அகம் அளவுகளால் ஆனது. சிறிதென்றும் பெரிதென்றும் அண்மையென்றும் சேய்மையென்றும் அவ்வளவுகளையே அது புறம் என அறிந்துகொண்டிருக்கிறது. அந்த இடம் அனைத்தையும் சிதறடித்துவிட்டது. விழுந்துகிடந்த பெண்சிலை ஒன்றின் இடமுலை மண்ணில் புதைந்த மாளிகையொன்றின் மாடக்குவை போலிருந்தது. அவள் பொன்னிற முகம் அப்பால் எழுந்து தெரிய மூக்கின் துளை ஒன்றுக்குள் இரு சிறு நரிக்குட்டிகள் ஒண்டியிருப்பதைக் கண்டான். மூக்கின் வளைவில் அமர்ந்துகொண்டு தன் தலையை கைகளால் தாங்கிக்கொண்டான். தலை சுழல்வதுபோலவும் குமட்டலெழுவதுபோலவும் இருந்தது. அக்கணம் அங்கிருந்து விடுபட்டு தன் இயல்பான அளவைகளால் ஆன உலகுக்குத் திரும்பிவிடவேண்டும் என்று அகம் தவித்தது. ஒருமுறை உலுக்கிக்கொண்டால் அக்கனவிலிருந்து நனவுநோக்கி எழுந்து பிளந்து வெளியேறிவிடலாமென்று பட்டது.
கீழே நின்று சம்பர் நகைத்தார். “இளையவரே, இங்கு வந்து மனம்பிறழ்ந்து வெளியேற முடியாமல் மறைந்தவர்கள் பலர். எதையும் நோக்காமல் எங்கள் தெய்வங்களை மட்டுமே வணங்கி மீள்வதே எங்கள் வழக்கம்” என்றார். பூரணர் “பாணரே, ஏன் அனைத்தையும் பார்க்கிறீர்கள்? ஒன்றை மட்டும் பாருங்கள். அதிலிருந்து அனைத்தையும் அகத்தே கட்டி எழுப்புங்கள். யானைகளை கைகளில் எடுத்து விளையாடும் அசுரர்குல மைந்தர்களை நீங்கள் கண்டுவிடுவீர்கள்” என்றார்.
இளநாகன் அவர்கள் பேசுவதை பொருளில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தான். “பாணரே, இறங்கி வாருங்கள், அனைத்திலிருந்தும்” என்றார் பூரணர். அவன் இறங்கிச்சென்று அவருடன் நடந்தான். தலையை அசைத்தபடி பெருமூச்சுகளாக விட்டபடி அவன் தள்ளாடிக்கொண்டிருந்தான். கண்களை மூடியபோது பேருருவ முகம் ஒன்று விழிதிறந்து இதழ்விரித்து அவனை நோக்கியது. அவன் அதிர்ந்து நின்றுவிட்டான். “முகங்கள் உயிர்கொள்ளும். எனக்கும் நிகழ்ந்தது” என்று பூரணர் நகைத்தார்.
“மஞ்சள்பாறைகளினால் ஆன நகர் இது பாணரே. ஆகவேதான் இது ஹிரண்மயம் என அழைக்கப்பட்டிருக்கிறது. இங்கே ஹிரண்யசிருங்கம் என்னும் மஞ்சள் பாறைகளாலான மலைத்தொடர் இருந்திருக்கிறது. அந்த மலைகள் அனைத்தையும் குடைந்து குடைந்து இப்பெருநகரை உருவாக்கியிருக்கிறார்கள் இங்கு வாழ்ந்த மக்கள். பல்லாயிரம் வருடம் அவர்கள் சிதல்கள் புற்றெழுப்புவது போல இந்நகரை அமைத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். அவர்களின் அகம் முழுக்க இந்நகராகவே வெளிப்பட்டிருக்கிறது.”
“இதன் அளவைக்கொண்டு நோக்கினால் இங்கே லட்சக்கணக்கானவர்கள் பல்லாயிரமாண்டுகாலம் வாழ்ந்திருக்கவேண்டும். அவர்களுக்கு இதை அமைப்பதன்றி வேறு தொழிலே இருந்திருக்காது. இந்நகருக்கு எதிரிகளே இல்லை என எண்ணுகிறேன். நகரின் கட்டடங்கள் மலைமலையாக இருந்திருக்கின்றன. ஆனால் சுற்றிலும் கோட்டை என ஏதும் தென்படவில்லை” சுற்றிலும் நோக்கியபடி பூரணர் செம்மொழியில் சொன்னார்.
“ஏன் இத்தனை பெரிய கட்டடங்கள்? இத்தனை பெரிய சிலைகள்?” என்று இளநாகன் கேட்டான். பூரணர் “சம்பர் சொன்னது ஒருவகையில் சரி. அவர்கள் மாபெரும் மக்கள். உடலால் அல்ல, உள்ளத்தால். சென்றகால மக்கள் அமைத்த எதுவுமே சிறியதாக இல்லை என்பதைப்பாருங்கள். தங்களால் முடிந்தவரை பெரியதை அமைக்கவே அவர்கள் எப்போதும் முயல்கிறார்கள். நான் பல தொல்நகரங்களை கண்டிருக்கிறேன். அவையனைத்தும் பெரியவை. அவற்றை அமைத்த மக்களின் உடலளவால் அவை வடிவமைக்கப்படவில்லை, உள்ளத்தளவுக்கேற்ப உருவாகி வந்தன. எவையும் கட்டிமுடிக்கப்படவுமில்லை. அவற்றை கட்டிக்கொண்டிருக்கையிலேயே அவர்களின் வரலாறு முடிந்துவிட்டது” என்றார்.
இளநாகன் பெருமூச்சுடன் “ஆம், தென்மதுரைக்கு அப்பால் இன்னொரு தென்னகர் இருந்தது என்பார்கள். அங்கே இருந்த குமரியன்னையின் பெருஞ்சிலை சரிந்து விழுந்து அந்நகர் அழிந்தது என்கின்றன தொல் நூல்கள். இன்று கடலுக்குள் அச்சிலை விழுந்து கிடக்கிறது. முத்துக்குளிக்க அங்கே இறங்கும் பரதவர் அன்னையின் கண்களில் இருந்து உதடுக்கு நீந்திச்செல்வார்களாம்” என்றான். “வெறும் பழங்கதை என எண்ணினேன். இன்று அச்சிலை அங்கே உள்ளது என்று உறுதி கொள்கிறேன்.”
சம்பர் இடிந்து சரிந்து கிடந்த மாபெரும் கல்வளையங்கள் மேல் ஏறிச்சென்றார். அது பற்பலமாடங்கள் கொண்ட ஒரு கட்டடத்தின் குவியலென இளநாகன் அறிந்துகொண்டான். மேலே செல்லச்செல்ல ஹிரண்மயத்தை கீழே விரிவுக்காட்சியாகக் காணமுடிந்தது. பூரணர் சொன்னதைக்கொண்டு நோக்கியபோது அந்நகரின் அமைப்பு மேலும் தெளிவடைந்தது. அந்த பன்னிரு அடுக்கு மாடம் நகரின் மையத்தில் இருந்தது. அதைச்சுற்றி நூற்றுக்கணக்கான மாடங்கள் சரிந்து நொறுங்கிக் கிடந்தன. ஹிரண்யவாகாவின் பெருக்கு பலமுறை சூழ்ந்து வற்றியமையால் அனைத்தும் மென்சதுப்புக்குள் பாதி புதைந்திருந்தன. சரிந்து கிடந்த சிற்பங்கள் பெரும்பாலும் படைக்கலங்களைக் கையில் ஏந்தி நின்றிருந்தவை என்று தெரிந்தது.
விண்ணிலிருந்து விழுந்த மாநகர் விண்ணில் மேகம் போல எடையற்றதாக இருந்தது. மண்ணிலிறங்கியதுமே எடையற்றவற்றுக்கு அளவுகள் பொருட்டாக இருந்திருக்காது. இந்த மாபெரும் யக்ஷியை ஒரு தென்றல் காற்று பறக்கவைத்திருக்கும். இந்த யானையை அங்கு ஒரு அசுரக்குழந்தை அசைத்திருக்கும். மண்ணுக்கு வந்ததும் அவை அசைவிழந்தன. காலம் அவற்றுக்குமேல் பெருகிச்சென்ற வண்டலில் அவை மெல்ல அமிழ்ந்துகொண்டிருக்கின்றன. அங்கு நின்றபோது நீரில் மூழ்குவது போல அவை மண்ணில் மூழ்குவதைக் காணமுடியும் என்று தோன்றியது. மண்ணுக்குள் அள்ளிப்பற்றும் வேர்கள் அவற்றை இழுத்துக்கொண்டிருக்கின்றன. மெல்ல அவை மண்ணின் அடியாழத்தை அடையும். பிறகொருபோதும் அவற்றை மானுடர் பார்க்கப்போவதில்லை.
ஆனால் மொழியில் அந்நகர் இருந்துகொண்டிருக்கும் என இளநாகன் எண்ணிக்கொண்டான். சூதர்பாடல்களில் எவையும் மூழ்கி மறைவதில்லை. அனைத்தும் மிதந்துகொண்டிருக்கும் ஓர் அலைப்பரப்பு அது. அடித்தட்டு என ஏதுமில்லாதது. அல்லது அடித்தட்டுக்குச் சென்றுவிட்டவற்றால் மட்டுமேயான மேல்பரப்பு. சொல்லலைகள் தாலாட்டுகின்றன. அங்கே எவற்றுக்கும் எடையில்லை. ஏனென்றால் அனைத்தும் அங்கு நீர்நிழல்களே. அங்கே இந்தப் பேருருவ அரக்கனை அந்த முதலை கவ்வ முடியும். அந்த உடைந்த மதனிகையை கிளி கொத்திச்செல்லமுடியும். அவன் அந்தப்பொருளில்லாத சிந்தனைகளைக் கண்டு திடுக்கிட்டான். உடைந்தும் சிதைந்தும் கிடப்பவை அகத்தையும் அதேபோல சிதறச்செய்யும் மாயம்தான் என்ன!
அந்தப் பெரிய மாளிகை இடிபாட்டின் மறுபக்கம் காடு மேலும் அடர்ந்திருந்தது. சம்பர் தங்கள் தெய்வங்களின் ஆலயம் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டினார். அது ஒரு கரிய பெரும்பாறை. இருளுக்குள் செறிந்த இருளென அது நின்றுகொண்டிருந்தது. அதன் உடலின் குளிரை அங்கிருந்தே உணரமுடிந்தது. சம்பர் “அசுரர்களுக்கும் முன்னால் இங்கு வாழ்ந்த எங்கள் மூதாதையரால் அமைக்கப்பட்டது இவ்வாலயம். அசுரர்களால் அவர்கள் வழிபடப்பட்டனர். இன்று நாங்கள் வழிபடுகிறோம். ஒவ்வொரு குலமும் வருடத்தில் ஒருமுறையேனும் இங்கு வந்து அன்னைக்கு மலரும் நீரும் அளித்து பலிகொடுத்து வணங்கவேண்டும் என்பது நெறி” என்றார்.
அவர்கள் இறங்கிச்சென்று சரிந்த கல்வடிவங்கள் நடுவே நீர் ஓடி உருவான பாதை வழியாக அந்தக் கரும்பாறையை அடைந்தனர். அங்கே ஆலயமேதும் இளநாகன் கண்களுக்குப்படவில்லை. சம்பர் “இப்பாறைக்குள் அமைந்திருக்கிறது அன்னையின் ஆலயம்…” என்றபடி புதர்கள் நடுவே அமர்ந்தார். அப்போதுதான் இயற்கையாக உருவான குகைபோல இடைவரை உயரம் கொண்ட ஒரு குடைவு அந்தப்பாறையில் இருப்பதை இளநாகன் கண்டான். உள்ளே இருள் நிறைந்திருந்தது. சம்பர் “அன்னைக்கு பெயர் இல்லை. ஏனென்றால் அன்னையை எங்கள் மூதாதையர் நிறுவியபோது மொழி என ஒன்று உருவாகியிருக்கவில்லை. அதன் பின் உருவான எந்த மொழியையும் தன் மேல் சூட அன்னை மறுத்துவிட்டாள்” என்றார்.
“மிகச்சிறிய ஆலயம்” என்றான் இளநாகன். சிக்கிமுக்கியை உரசி பஞ்சை எரியச்செய்து அரக்குபூசிய சுளுந்தை கொளுத்தியபடி சம்பர் “ஆம். அன்று எங்கள் மூதாதையர் மிகச்சிறியவர்களாக இருந்தனர். இன்றைய மனிதர்களில் நூறிலொருபங்கு உயரம் கொண்டவர்கள் அவர்கள். அவர்கள் தங்கள் குலங்களும் குடிகளுமாக உள்ளே சென்று வழிபடுமளவுக்கு பெரியதாக இருந்தது இவ்வாலயம்” என்று சொன்னபடி ஒளியை உள்ளே காட்டினார். உள்ளே நன்றாகக் குனிந்து செல்லும்படி இருந்தது. சம்பர் சுளுந்தை ஆட்டிக்காட்டினார். உள்ளே இருந்த கல்வடிவங்களை இளநாகன் கண்டான். மடியில் மகவை வைத்து அமர்ந்திருக்கும் அன்னை போல மழுங்கலாக கருங்கல்லில் செதுக்கப்பட்ட மிகச்சிறிய வடிவம். அச்சிலைக்குக் கீழே அதே கல்லால் செய்யப்பட்டவை போல பன்னிரண்டு சிறிய குழந்தைச்சிலைகள் கால்குவித்து அமர்ந்திருப்பதுபோன்ற வடிவில் இருந்தன.
சிலைகளின் கருங்கல் பந்த ஒளியில் உலோகம் போல மின்னியது. “எங்கள் மூதாதையர் சின்னஞ்சிறியவர்களாக இருந்தாலும் நம்மை விட நூறு மடங்கு எடைகொண்டவர்கள்” என்றார் சம்பர். “இந்தச்சிலைகளைக் கண்டால் அவற்றை அறியலாம். கைக்குள் அடங்கக்கூடிய இந்தச்சிறிய மைந்தர் சிலைகளை நாம் இருவர் சேர்ந்தாலும் தூக்கிவிடமுடியாது” அவர் உள்ளே சென்று அந்தப்பந்தத்தை நாட்டினார். மெல்லமெல்ல அக்கற்கள் சுடர்விடத் தொடங்கின. சம்பர் பந்தத்தை வெளியே கொண்டுவந்தார். சிலைகளின் ஒளியே குகைக்குள் நிறைந்திருந்தது.
சம்பர் அன்னைக்கு நன்னீராட்டி மலர்மாலை சூட்டி முன்னால் வாழையிலை விரித்து அதில் பொரியுணவும் மூங்கில்குவளையில் தேனும் படைத்தார். சொற்களேதுமின்றி கையசைவுகளாலேயே பூசனை செய்தார். அவருடன் வந்தவர்கள் கைகூப்பி நின்றனர். இளநாகனும் பூரணரும் வணங்கினர். பூசனை முடிந்து சம்பர் வெளியே வந்ததும் ஒவ்வொருவராக உள்ளே சென்று வணங்கினர். “எங்கள் குலத்தவரன்றி பிறர் உள்ளே நுழையலாகாது. எவரும் அன்னையை தீண்டலாகாது” என்றார் சம்பர். “காட்டுமிருகங்கள் இக்குகைக்குள் செல்லாது. ஏனென்றால் இப்புவியின் ஆழத்தை நிறைத்திருக்கும் அணையாப்பெருநஞ்சால் ஆனது அவள் உடல்.”
“அன்னையை நீராட்டிய நீர் கடும் நஞ்சு. அந்நீர் வழியும் இடங்களில் எல்லாம் செடிகள் கருகுவதை நாளைக் காலையில் காணலாம். அன்னையின் முன் வைத்த உணவும் தேனும் நஞ்சாகிவிடும். அன்னையை நெருங்கி அவளைத் தொடும் கைகளும் நஞ்சேறும். அவளை அணுகியமையாலேயே என் உடலில் நாளை கொப்புளங்கள் வெடித்தெழும். என் நாவும் கண்ணிமைகளும் வெந்து புண்ணாகும். ஒருமாதம் பசும்பால் மட்டும் அருந்தி நான் மீண்டெழும்போது என் உடலின் தோல் வெந்து உரிந்து விலகி புதுத்தோல் முளைத்திருக்கும். கைநகங்கள் நீலமாகி உதிர்ந்து முளைக்கும். முடி முழுக்க உதிர்ந்து மீண்டு வரும். நான் மீண்டும் பிறந்தவனாவேன்” என்றார் சம்பர்.
“இதைப்போன்ற ஓர் அன்னைவடிவத்தை நான் தென்தமிழ்நாட்டில் கண்டிருக்கிறேன்” என்று இளநாகன் சொன்னான். “பாரதவர்ஷம் முழுக்க தொன்மையான அன்னைவடிவங்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன” என்றார் பூரணர். “மகவுடன் அமர்ந்த அன்னையையே பழங்குடிகள் வணங்குகிறார்கள். மானுடன் கண்ட முதல் தெய்வம் அன்னையே. அவளையே முதற்பேராற்றல் என்று அவன் அறிந்தான்” என்றார் பூரணர். “வெல்லமுடியாதவள், ஏனென்றால் எதிர்க்காதவள். ஆற்றல் மிக்கவள், ஏனென்றால் எப்போதும் எஞ்சுபவள். மனிதர்களை எறும்புகளாக்கும் இந்தப்பெருநகர் கூட அவள் உள்ளங்கையின் சிறு கூழாங்கல்லுக்கு நிகர்.”
ஹிரண்மயத்தில் இருந்து வெளியேறும்போது சம்பர் பேசா நோன்பு கொண்டிருந்தார். அவர்கள் ஹிரண்யவாகாவின் கரையை அடையும்போதே அவருக்கு கடும் வெப்புநோய் வந்திருந்தது. இரு கைகளையும் நெஞ்சுடன் சேர்த்து கட்டிக்கொண்டு உடலைக் குறுக்கி நடுங்கிக்கொண்டிருந்தார். படகை அடைந்தபோது அவரால் நடக்க முடியவில்லை. அவர் ஒருமுறை மெல்லத் தள்ளாடியபோது இளநாகன் அவர் கைகளைப் பற்றப்போனான். ஒரு வீரன் தொடவேண்டாம் என்று விலக்கினான். ஓர் மூங்கிலை வெட்டி அதை இருவர் பிடித்துக்கொண்டு செல்ல அவர் அதைப்பற்றிக்கொண்டு நடந்தார். படகில் ஏறிக்கொண்டதும் அவர் முனகியபடி படுத்துக்கொள்ள அவரது விழிகள் செக்கச்சிவப்பாக இருப்பதைக் கண்டு இளநாகன் திகைத்தான்.
படகு திரும்பியதும் படகோட்டிகளில் ஒருவன் “தாங்கள் எங்கு செல்லவேண்டும் அயலவரே?” என்றான். பூரணர் “எங்கு உணவும் மதுவும் கிடைக்கிறதோ அதுவே சூதர்களின் ஊர்” என்றார். அவன் நகைத்துக்கொண்டு “அப்படியென்றால் எங்கள் குலத்தவரின் எந்த ஊரும் உங்கள் ஊரே” என்றான். “அடுத்த ஊர் ஹிரண்யகட்டம் என அழைக்கப்படுகிறது. அங்கே உங்களுக்குப் பிரியமான அனைத்தும் உண்டு.” பூரணர் சிரித்துக்கொண்டு “சூதர்களின் தேவைகளை தெய்வங்களும் நிறைவேற்றிவிடமுடியாது… சூதர்கள் தெய்வங்களையே கோரக்கூடியவர்கள்” என்றார்.
ஹிரண்யவாகா விரைவழியத் தொடங்கியது. வலப்பக்கம் பெரிய மரத்தடிகளை நீருள் நிறுத்தி எழுப்பப்பட்ட படகுத்துறை தெரிந்தது. படகை அங்கே கொண்டு சென்று நிறுத்திய வீரர்கள் “இது ஹிரண்யபதம் என்னும் நகரம். எங்களில் ஒருவராயினும் இதன் மன்னர் மகதத்தின் சிற்றரசர்களில் ஒருவர். படைநிறைவும் கருவூலநிறைவும் கொண்டவர்” என்றான். இளநாகன் அவர்களை வணங்கி கண்மூடி நடுங்கிச்சுருண்டுகிடந்த சம்பரைத் தொழுது படித்துறையில் இறங்கினான். படகு ஆற்றின் எதிரோட்டத்தை தாவிக்கடக்கத் தொடங்கியது. பூரணர் தன் யாழுடன் படித்துறையில் நின்று “உருவாகி வரும் ஒரு வணிகநகரம்” என்றார். இளநாகன் “ஆம், இன்னும் பெரும்படகுகள் வரவில்லை” என்றான்.
படைவீரன் ஒருவன் “அயலவரே, நீங்கள் யார்?” என்றான். இளநாகன் “இங்கே சூதர்களும் வரத்தொடங்கவில்லை” என்றான். பூரணர் தங்களை சூதர்கள் என்று அறிமுகம்செய்துகொண்டு அங்குள்ள சத்திரத்துக்கு வழிகேட்டார். முதல் வீரனுக்கு உதவியாக மேலும் ஐவர் வந்து சேர்ந்துகொண்டனர். அவர்கள் சத்திரம் என்றால் என்ன என்பதைப்பற்றியே அறிந்திருக்கவில்லை. பலவகையில் பேசி விளங்கச்செய்து அங்குவரும் அயலவர்கள் எப்படி வரவேற்கப்படுவார்கள் என்று பூரணர் தெரிந்துகொண்டார். அனைத்து அயலவர்களும் நேரடியாக அரண்மனைக்கே அழைத்துச்செல்லப்பட்டு அரசனுடன் தங்கவைக்கப்படுவார்கள் என்று தெரிந்துகொண்டார். திரும்பி “மலைக்குடித்தலைவரா அரசரா என்று அவர் தன்னைப்பற்றி இன்னும் முடிவுசெய்யவில்லை பாணரே” என்றார்.
இளநாகன் தொடக்கம் முதலே தன்னை உறுத்திக்கொண்டிருந்தது எது என்று கண்டான். அவர்கள் அனைவருமே வலக்கையில் நான்கு விரல்கள் மட்டும் கொண்டிருந்தனர். கட்டைவிரல் வெட்டப்பட்டிருந்தது. இளநாகன் “வீரர்களே, கட்டைவிரலை வெட்டிக்கொள்ளும் குலவழக்கத்தை இங்குதான் காண்கிறேன்” என்றான். “ஏகலவ்ய அரசில் மட்டுமே காணப்படும் வழக்கம் இது அயலவரே. நாங்கள் நான்குவிரலால் ஆன வில்லியல் ஒன்றை கற்றுத்தேர்ந்துள்ளோம்” என்றான் வீரர்தலைவன்.