வைக்கமும் காந்தியும் 2

வைக்கம் போராட்டம் என்ற வரலாற்று நிகழ்ச்சியின் நுட்பமான தகவல்களுக்குள் செல்ல இது தருணமல்ல. கேரளத்தில் அதைப்பற்றி ஏராளமாக எழுதப்பட்டிருக்கிறது. நினைவுகள், பதிவுகள். காங்கிரஸ் தரப்பிலும் நாராயண இயக்கங்களின் தரப்பிலும். வரலாற்றுக் கோணங்களில் மாறுபாடுகள் பல உள்ளன. சில தகவல்கள் கூட மாறுபடுகின்றன. ஆனால் தமிழகத்தில் ஈவேரா அவர்களால் முன்வைக்கப்பட்டதுபோல காந்தி அந்தப்போராட்டத்தை காட்டிக்கொடுத்தார், கைவிட்டார் என்று எவராலும் எழுதப்பட்டதில்லை. காந்தியின் போக்கை முழுமையாக மறுப்பவர்கள் கூட அதைச் சொன்னதில்லை. இந்த கோணம் ஈவேராவால் உருவாக்கப்பட்டு திராவிடர் கழகத்தால் தமிழகத்திற்குள் நிலைநாட்டப்பட்டிருக்கிறது அவ்வளவுதான்.

வைக்கம்போராட்டத்தில் பல்வேறு மாற்றுத்தரப்புகள் உருவாகி வந்தன. முதல் முரண்பாடு நாராயணகுருவுக்கும் டி.கெ.மாதவனுக்கும் இடையேயானதுதான். நாராயணகுரு இது ஒரு வீண்வேலை என்றே என்ணினார். மதியாத இடத்துக்கு ஏன் செல்லவேண்டும், ஈழவர்கள் தங்கள் ஆலயங்களை தாங்களே அமைத்தால் போதுமே என்பதே அவரது தரப்பு. இன்று புகழ்பெற்றுள்ள பல ஆலயங்களை அவர் உருவாக்கி வந்த காலகட்டம் அது. சமூக மோதல்கள் உருவாகி ஈழவர்கள் கல்விக்குள் வருவது தடைபடக்கூடாது என்று குரு நினைத்தார்.

ஈழவ தலைவர்களிடையேகூட கருத்துமுரண்பாடுகள் இருந்தன. அன்று செல்வாக்குமிக்க இதழாளராக இருந்த சி.வி.குஞ்šராமன் ஈழவர் மதம் மாறவேண்டும் என்றும் இந்துமதத்தை உதறவேண்டும் என்றும் வாதிட்டார். சகோதரன் அய்யப்பன் ஆலயமே தேவையில்லை என்ற நிலைபாடு கொண்டிருந்தார். பல ஈழவ செல்வந்தர்கள் இந்த போராட்டத்தை அஞ்சி ஈடுபாடு காட்ட மறுத்தார்கள்.

போராட்டம் இரண்டாம் கட்டத்தை அடைந்தபோது பலவிதமான சிக்கல்கள் உருவாயின. ஈழவர்கள் நடுவே எழுந்த கோபத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கலை ஒரு ஒட்டுமொத்த மதமாற்றத்தை நோக்கி கொண்டு செல்லலாம் என கிறித்தவ சபைகள் முயன்று பேரங்களில் ஈடுபட்டன. விவகாரம் மதமோதலை நோக்கிச் சென்றது.  ஆலயப்பிரவேசம் குறித்து சாதகமான எண்ணம் கொண்டிருந்தவர்கள் கூட  மாற்றுமதத்தவர் உள்ளே வர ஆரம்பித்தபோது எதிர்நிலை எடுக்க ஆரம்பித்தார்கள்

ஆகவே காந்தி இந்தப்பிரச்சினை முழுக்க முழுக்க இந்துமதத்துக்குள் உள்ள பிரச்சினை என்றும் அன்னிய மதத்தவர் இதில் தலையிடவேண்டாம் என்றும் சொன்னார். மேலும் இது கேரளத்திற்குரிய பிரச்சினை, ஆகவே இதில் பிற பகுதியைச் சேர்ந்தவர்கள் ஈடுபடவேண்டாம் என்றும் விலக்கினார். ஆனால் இதை போராட்டத்திற்கு வந்த கிறித்தவர்களும் சீக்கியர்களும் ஏற்கவில்லை. ஈவேரா அவர்கள் அந்த தரப்புகளுடன் சேர்ந்துகொண்டு காந்தியின் கோரிக்கையை நிராகரித்தார் என்று அவரே எழுதியவற்றில் இருந்து தெரிகிறது.

ஆரம்பம் முதலே காந்தி இந்தப்பிரச்சினையை மிக எச்சரிக்கையாக கையாண்டார். சுதந்திரப்போராட்டத்தில் இந்தியா ஒற்றுமையாக திரண்டு ஒரே குரலாகப் பேசவேண்டுமென காந்தி எண்ணினார். சாதிய உரிமைப்போராட்டங்கள் சாதிகள் நடுவே கசப்பாகவும் மோதலாகவும் மாறினால் ஏற்கனவே இந்துமுஸ்லீம் பிரிவினையை வெற்றிகரமாகப் பயன்படுத்திக்கொண்ட பிரிட்டிஷார் அதையும் சாதகமாக்கிக்கொள்வார்கள் என அவர் எண்ணினார்.

காந்தியின் நோக்கம் என்ன என்று  வரலாற்றை ஒட்டுமொத்தமாக இன்று பார்க்கும் வரலாற்றாசிரியர்கள் தெளிவாகவே எழுதியிருக்கிறார்கள். உயர்சாதிக்கு எதிராக தாழ்ந்த சாதியினரைத் தூண்டிவிடுவதாக போராட்டம் ஆகிவிடலாகாது என அவர் எண்ணினார். அவரது திட்டம் உயர்சாதியினர் உள்ளிட்ட அனைத்து இந்துக்களிலும் சாதிக்கொடுமைகள் மற்றும் தீண்டாமை குறித்த விழிப்பை உருவாக்குவதே. அதற்காக ஒரு பிரச்சாரக்கருவாகவே அவர் வைக்கத்தை அணுகினார். அங்கே செய்து பார்த்ததை அவர் இந்தியா முழுக்க பின்னர் விரிவுபடுத்தினார்.

ஆகவேதான் வைக்கத்தில் அது மாற்றுமதத்தவர் உள்ளே வரும் நிகழ்ச்சியாக ஆனபோது அதை அவர் விலக்கினார். இந்திய அளவில் அது என்ன விளைவை உருவாக்குமென அவர் அறிந்திருந்தார். ஓர் ஆலயப்பிரச்சினை அங்குள்ளவர்களாலேயே நடத்தப்படவேண்டும் என அவர் வலியுறுத்தியமைக்குக் காரணம் அத்தனை ஆலயங்களிலும் அந்த விளைவுகளை விரிவுபடுத்துவதற்கான அவரது  திட்டமே. வைக்கம் போராட்டத்தை எவரும் தங்களுக்குச் சாதகமாகக் கடத்திக் கொண்டு செல்ல காந்தி விரும்பவில்லை.

காந்தியின் திட்டத்தை புரிந்துகொண்டிருந்தால் ஈவேரா அவர்கள் ஈரோட்டில் ஓர் ஆலயப்பிரவேசத்தை ஆரம்பித்து போராடியிருப்பார். ஆனால் தமிழகத்தில் எங்கும் அவர் அதைச் செய்யவில்லை. பிற்பாடும் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஈவேரா அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு அரசதிகாரம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்ட, அவரது ஆதரவுத்தளமான, தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்ட சாதியினர் வைத்திருந்த ஆலயங்களில் தலித்துக்கள் நுழைவதற்கான போராட்டம் வைக்கம் போராட்டம் முடிந்து 84 வருடங்கள் கழித்து இப்போது தலித்துக்கள் அமைப்பாக திரண்ட பின்னர்தான் நடக்கிறது என்பதை நாம் மறக்கக் கூடாது.

வைக்கம் போராட்டத்தில் காந்தி சந்தித்த மிகப்பெரிய எதிர்ப்பு இந்து மடாதிபதிகளிடமிருந்து வந்தது. குறிப்பாக காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் காந்தியை பாலகாட்டுக்குச் சென்று சந்தித்து ஆலயப்பிரவேசம் இந்து தர்மத்தை அழிக்கும் என்று வாதாடினார். சுருதிகளில் இருந்து அதற்கு ஆதாரம் அளிக்கும்படி காந்தி கேட்டுக்கொண்டபோது ஸ்மிருதிகளும் மாற்றக்கூடாதவையே என்று அவர் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. உடுப்பி, சிருங்கேரி மடங்களில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் உருவாகி வந்தன.

வைக்கம் போராட்டத்தில் அக்காலத்திலேயே பலர் உள்ளே புகுந்து பல வகையான திரிபுகளை உருவாக்கினார்கள். அது எந்த போராட்டத்திலும் நடக்கக்கூடியதே.  அதில் ஒன்று நாராயணகுருவுக்கும் காந்திக்குமான முரண்பாடு. உண்மையில் அப்படி ஒரு முரண்பாடே இல்லை, அது தவறாக  உருவாக்கப்பட்டது. நாராயணகுரு ஓர் அமைப்புக்கூட்ட உரையாடலில் ‘போராட்டம் நல்லதுதான். ஆனால் ஒருபோதும் பின்வாங்கிவிடக்கூடாது’ என்று சொன்னார். ‘ தடுக்கப்பட்ட இடத்திற்கு நாம் செல்லாமலிருந்திருக்கலாம், ஆனால் சென்றுவிட்டதனால் உத்தேசித்த விஷயத்தை நிகழ்த்திவிட்டே வரவேண்டும்.  இனி ஆலயப்பிரவேசம் இல்லாமல் இந்த சமர் நின்றுவிடகூடாது’ என்றார்

இது நாராயணகுரு தடைகளை மீறி கோயிலுக்குள் செல்ல தொண்டர்களை தூண்டுகிறார் என்று செய்தியாக வெளியிடப்பட்டது. இச்செய்தியை காந்திக்கு அனுப்பிய உயர்சாதியைச்சேர்ந்த ஒரு காந்தியவாதி ‘இது வன்முறை, ஆகவே போராட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும்’ என்று காந்தியிடம் கேட்டுக்கொண்டார். காந்தி எழுதிய பகிரங்கமான பதிலில் தடைகளை தாண்டிக்குதித்து உள்ளே போக நாராயணகுரு சொன்னார் என்றால் அது தவறு, அது வன்முறையேதான் என்று சொன்னார். ‘இந்தச் செய்தியை எனக்களித்த நண்பர் போராட்டத்தை திரும்பப்பெற நான் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் முன்னிலும் திடமாக தொடர்ந்து போராடும்படித்தான் நான் சொல்வேன்’ என்று எழுதினார் காந்தி

ஆனால் விரைவிலேயே அந்த தவறான புரிதல்கள் களையப்பட்டன. பிற்போக்குவாதிகளின் திரிபு நல்விளைவை உருவாக்கியது. நாராயணகுரு நேரடியாகவே போராட்டத்திற்கு வந்தார். தனக்குச் சொந்தமான வெல்லூர் மடத்தை சத்தியாக்கிரகிகளுக்கு அலுவலகமாக அளித்தார். அன்றைய காலத்தில் பெரும் தொகையான ஆயிரம் ரூபாயை போராட்டநிதியாக கொடுத்தார். சிவகிரி ஆசிரமத்தில் நன்கொடைப்பெட்டி ஒன்றையும் திறந்தார். போராட்டம் உச்சமடைந்தது. போராட்டத்திற்கு தன் துறவிகளான இருசீடர்களை குரு அனுப்பினார். அவர்களில் சுவாமி சத்யவிரதன் பின்னர் கேரளத்தில் பெரும்புகழ்பெற்றார்.

செப்டெம்பர் 27 அன்று நாராயணகுரு அவரே வைக்கத்திற்கு வந்தார். அவருக்கு காங்கிரஸ் சார்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டு காந்தி கொடுத்தனுப்பிய காந்தியே தன்கையால் நெய்த துண்டு அளிக்கப்பட்டது. அப்போது காந்தி உண்ணாவிரதம் இருந்துவந்தமையால் அவரது உடல்நலனுக்காக நடத்தப்பட்ட மாபெரும் பொதுகூட்டத்தில் நாராயணகுரு மௌனமாக பிரார்த்தனை செய்தார். குரு பொது இடத்தில் பிரார்த்தனை செய்த ஒரே நிகழ்ச்சி அதுவே.

காந்தியின் அணுகுமுறை உயர்சாதியினரின் மனசாட்சியுடன் உரையாடுவதாக இருந்தது. மனசாட்சி உள்ள உயர்சாதியினர் வைக்கம் போராட்டத்தில் ஆதரவு தெரிவித்து போராட முன்வரவேண்டும் என அவர் அறைகூவல் விடுத்தார். விளைவாக நாயர் சர்வீஸ் சொசைட்டியின் நிறுவனரும் பழமைவாதியுமான மன்னத்து பத்மநாபன் போராட முன்வந்தார். 1924 நவம்பர் ஒன்றாம் தேதி மன்னத்து பத்மநாபன் தலைமையில் 500 பேர்கொண்ட ஊர்வலம் திருவனந்தபுரத்திற்கு கிளம்பியது. செல்லும் வழிதோறும் பெருகிய அப்பயணம் மாபெரும் ஊர்வலமாக சிவகிரியை அடைந்து நாராயணகுருவிடம் ஆசி பெற்று திருவனந்தபுரத்தைச் சென்றடைந்தது.

அதேபோல சுசீந்திரத்தில் இருந்து பெருமாள் நாயிடு தலைமையில் வேளாளர்களும் நாயர்களும்  அடங்கிய ஒர் ஊர்வலம்  கிளம்பி வைக்கத்தை அடைந்தது. நவம்பர் 14 ஆம் தேதி சங்கனாச்சேரி பரமேஸ்வரன் பிள்ளையின் தலைமையில் ஒரு உயர்சாதிக்குழு 27000 உயர்சாதிவாக்காளர்கள் கையெழுத்திட்ட  ஒரு மனுவை அப்போதைய மகாராணி சேதுலட்சுமிபாய்க்கு அளித்து வைக்கம்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது

உண்மையில் வைக்கம் சத்தியாக்கிரகம் இந்த புள்ளியில் அதன் வெற்றியை அடைந்துவிட்டது. சாதியாசாரங்களில் மூழ்கிக்கிடந்த ஒரு சமூகத்தில் இருந்து மனசாட்சியின் இத்தனைபெரிய குரல் எழுவதற்கு அந்தப்போராட்டமே காரணம். 1924 நவம்பர் மாதமே புதிய கேரளத்தின் தொடக்கம் என்று கூட சொல்லப்படுவதுண்டு. தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக உயர்சாதியினரை தெருவுக்குக் கொண்டுவருவதில் காந்தி வெற்றியடைந்தார்.

ஆனால் அன்று சீண்டப்பட்ட பழமைவாதிகள் கடுமையான நேரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.  வைக்கம் போராட்டத்திற்கு முடிவெடுக்க மகாராணி கூட்டிய சட்டச்சபைக்கூட்டத்தில் தீர்மானத்தை ஒற்றுமையாக இருந்து தோற்கடித்தார்கள். அதிகமும் நியமன உறுப்பினர்கள் அடங்கிய அந்த சட்டச்சபை பழமைவாதிகளுக்கு ஆதரவாக இருந்தது. நேரடி வன்முறை தொடங்கியது. சத்யாகிரகிகள் தாக்கப்பட்டார்கள். கோயில்களை புறக்கணிக்கும்படி காங்கிரஸ் அறைகூவல் விடுத்தது. விளைவாக கோயில்கள் வெறிச்சோடின.

போராட்டம் வன்முறையை நோக்கி சென்றது. ஒவ்வொருநாளும் சத்யாகிரகிகள்தாக்கப்பட்டார்கள். அத்துடன் கேரள வரலாற்றின் ஆகப்பெரிய மழையும் சேர்ந்துகொள்ளவே சத்யாக்கிரகம் மெல்ல சோர்ந்து நின்றது. ஆகவே காந்தி அவரே கிளம்பி வைக்கத்துக்கு வந்தார். அவருடன் ராஜாஜியும் வந்தார். 1925 மார்ச் பத்தாம்தேதி காந்தி திருவனந்தபுரத்திற்கு வந்தார். அதற்கு அடுத்த நாள் அவர் நாராயணகுருவைக் கண்டார். அவர்களிடையே நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையாடல் காந்திக்கு சாதி மற்றும் வர்ண அமைப்பு மீதிருந்த கருத்துக்களை முற்றாக மாற்றியமைத்தது. ஏற்றத்தாழ்வற்ற சாதிமுறை இருப்பது நல்லதே என்று காந்தி எண்ணியிருந்தார். அந்த எண்ணத்தை நாராயணகுரு மறுத்து மனிதர்கள் ஒன்றே என்று உபதேசம் செய்தார்.

மறுநாள் காந்தி வைக்கம் பழமைவாதிகளின் தலைவராக இருந்த ‘இண்டன்துருத்தில் தேவன் நீலகண்டன் நம்பூதிரி’யை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். காந்தியை கீழ்ச்சாதியரை தொட்டு அசுத்தமான ஒருவர் என்று சொல்லிய நம்பூதிரி அவரை வெளித்திண்ணையில் நிற்கச் செய்து பேசினார். காந்தி நடத்திய பேச்சுவார்த்தை எதற்குமே நம்பூதிரி இணங்கி வரவில்லை.

காந்தி நம்பூதிரியிடன் பேசியவை பதிவாகியுள்ளன. தீண்டாமைமுறைக்கு இந்து சாஸ்திரங்களில் அனுமதி உண்டு என்று நம்பூதிரி கருதுவாரென்றால் தான் நியமிக்கும் ஒரு இந்து மதபண்டிதருடன் அவரோ அவர் நியமிக்கும் இந்து மதபண்டிதரோ பொது விவாதத்திற்கு வரலாம் என்றார் காந்தி. அல்லது இதுசம்பந்தமாக வைக்கம் பகுதி இந்துக்கள் நடுவே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தலாம் என்றார். இரண்டு அறைகூவல்களையும் தேவன் நீலகண்டன் நம்பூதிரி நிராகரித்துவிட்டார்.

மீண்டும் போராட்டம் ஆரம்பித்தது. இம்முறை நம்பூதிரி தரப்பில் இருந்து ரவுடிகள் கொண்டுவரப்பட்டு சத்யாகிரகிகள் தாக்கப்பட்டார்கள். அவர்களின் குடும்பங்களும் தாக்கப்பட்டன. போராட்டத்திற்கு பெரும் சோர்வை இது உருவாக்கியது. உண்மையில் பின்னணியில் இருந்தது திருவிதாங்கூர் அரசை நடத்திய திவான்தான். ஆகவே திருவிதாங்கூர் மன்னருடனோ திவானுடனோ பேசிப்பலனில்லை என்று எண்ணிய காந்தி திருவிதாங்கூர் போலீஸ் கமிஷனராக இருந்த டபிள்யூ. எச். பிட்  அவர்களுக்கு கடிதமெழுதி வன்முறைகள் மீது உண்மையான நடவடிக்கை எடுக்கும்படி கோரினார்

அந்த வெளிப்படையான வேண்டுதல் சங்கடமளிக்கவே பிட் மகாராணியைக் கண்டு கறாராக பேசினார். விளைவாக ஒரு சமரசத்திட்டம் உருவாக்கப்பட்டது. காந்தி சத்யாகிரகத்தை தற்காலிகமாக திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் பதிலுக்கு வைக்கம் ஆலயத்தைச்சுற்றியிருக்கும் பாதைகளில் கிழக்குப்பாதை தவிர பிறவற்றை திறந்துவிட நம்பூதிரிகள் ஒத்துக்கொள்வார்கள் என்றும் வன்முறையாளர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிட் சொன்னார். காந்தி அதற்கு ஒத்துக்கொண்டார்.

விளைவாக 1925 அக்டோபர் எட்டாம் தேதி வைக்கம் சத்தியாக்கிரகத்தை திரும்பப்பெற காந்தி ஆணையிட்டார். அரசுக்கும் காந்தியவாதிகளுக்கும் இடையே சமரச ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தம் கையெழுத்தான பின்னரும்கூட விதிகள் நடைமுறைப்படுத்தப்பட மேலும் ஒரு மாதமாகியது. அதன்பின்னரே சத்யாகிரகம் வாபஸ் பெறப்பட்டது.

மேலோட்டமான பார்வைக்கு  வைக்கம் சத்தியாக்கிரகம் அரைகுறை வெற்றி என்றே தோன்றும். வைக்கம் ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களில் மூன்றில்மட்டுமே எல்லா சாதியினரும் நுழையலாம் என்று  ஒத்துக்கொள்ளப்பட்டது. கிழக்கு வீதி அப்போதும் நுழையக்கூடாததாகவே இருந்தது. ஆலயப்பிரவேசம் நிகழவேயில்லை. இந்த விஷயத்தை வைத்துத்தான் வைக்கம் போராட்டத்தில் காந்தி விட்டுக்கொடுத்தார், சமரசம் செய்துகொண்டார் என்றெல்லாம் ஈவேரா அனுதாபிகள் எழுதுகிறார்கள்.

உண்மையில் காந்தியின் போராட்டமுறையே இதுதான். போராட்டம் என்பதே அவரைப்பொறுத்தவரை ஒரு பிரச்சார முறைதான். ஒரு கருத்தை மிகப்பரவலாக எடுத்துச்செல்வதே ஜனநாயகப் போராட்டம். அக்கருத்தே சமூகமாற்றத்தையும் அதிகார மாற்றத்தையும் உருவாக்குகிறது. வைக்கத்தில் அதிரடியாக உள்ளே நுழைந்து சிலநூறு போராளிகளைப் பலிகொடுத்திருக்கலாம். ஆனால் நிரந்தரமான தீர்வு என்பது பழமைவாதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்படுவதில்தான் உள்ளது. அதிரடிகள் மூலம் அதைச் செய்ய முடியாது.

கோயிலுக்குள் வன்முறை நிகழ்ந்திருந்தால் மிதவாத நோக்கு கொண்டிருந்த உயர்சாதியினரையும்  எதிர்பக்கம் தள்ளிவிடவே அது வழி வகுத்திருக்கும். போராடியவர்களில் கடும் இழப்பு உருவாகி ஆழமான மனச்சோர்வு ஏற்பட்டு போராட்டம் மேலும் தொடர முடியாமலாகிவிட்டிருக்கும். வன்முறைப்போராட்டம் எதிலும் இதைப்பார்க்கலாம். இருதரப்பினரும் மேலும் மேலும் கடுமையான நிலைபாடு எடுக்க பிரச்சினை முற்ற போராட்டம் ஏராளமான இழப்புகளை அடைந்தபின்னர் வேறு வழியில்லாமல் சமரசம்தான் பேச வேண்டியிருக்கும். அந்த சமரசப்பேச்சுவார்த்தையை முன்னரே வன்முறை இல்லாமலேயே நிகழ்த்துவதே காந்தியின் போராட்ட முறையாகும்.

காந்தி தன் தரப்பு கோரிக்கைகளில் ஒருபகுதியை விட்டுக்கொடுத்தார். வைக்கம் பழமைவாத தரப்பு ஒருபகுதியை விட்டுக்கொடுத்தது. கிழக்குவாயிலை தக்கவைத்துக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு கௌரவம் பாதுகாக்கப்பட்டது. இதுவே  வைக்கம் சத்யாக்ரகத்தின் முடிவு. வைக்கம் போராட்டம் மட்டுமல்ல எல்லா போராட்டத்தையும் காந்தி இப்படித்தான் முடித்திருக்கிறார். போராட்ட சக்தியில் பெரும்பகுதி தன் தரப்பில் எஞ்சும்போதே சமரசம்செய்துகொண்டார்.

காந்தியைப் பொறுத்தவரை மிகப்பெருவாரியான மக்கள் போராட்டத்தில் பங்குகொண்டபோதே போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது. எப்போது உயர்சாதியினரில் பெரும்பகுதி மனசாட்சியின் அழைப்பை ஏற்று போராட்டத்திற்கு ஆதரவளித்தார்களோ அப்போதே போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது. கேரள யதார்த்தம் புரிந்தவர்கள் இதை விரிவாக எழுதியிருக்கிறார்கள். கேரளத்தில் ஈழவர்களுக்கு நேர்மேலே உள்ள சாதி நாயர்கள். கால்நூற்றாண்டுக்காலம் நாராயணகுருவையும் ஈழவர்களையும் எதிர்த்தவர்கள். அவர்களின் தலைவரான மன்னத்து பத்மநாபன் நாராயணகுருவின் பாதங்களை வணங்கி வைக்கம் சத்யாகிரகத்திற்கு வந்தது கேரள வரலாற்றின் ஒரு திருப்புமுனை.

அதன்பின் இந்த முக்கால்நூற்றாண்டில் கேரளத்தில் சாதிமோதல்களே நடந்ததில்லை. ‘பைத்தியக்கார விடுதி’யாக இருந்த கேரள மண் சட்டென்று இந்தியாவின் முற்போக்கான மாநிலங்களில் ஒன்றாக ஆக ஆரம்பித்தது. கல்வியில் அது அடைந்த மாபெரும் வெற்றி அங்கே ஆரம்பிக்கிறது. அதுவே வைக்கம் சத்தியாக்கிரகத்தின் உண்மையான விளைவாகும்.

வைக்கம் சத்தியாக்கிரகத்தின் விளைவாக அதுவரை திருவிதாங்கூரில் ஒரு சிறு அமைப்பாக இருந்த காங்கிரஸ் பிரம்மாண்டமாக ஆகியது. அதன் அடித்தளமாக ஈழவர்களும் நாயர்களும் புலையர்களும் அமைந்தார்கள். பின்னர் கேரளத்தில் உருவான இடதுசாரி இயக்கமும் இந்த அடித்தளத்தில் இருந்து உருவானதே. வைக்கம் உட்பட உள்ள காங்கிரஸின் போராட்டங்களில் இருந்து உருவான தலைவர்கள்தான் ஏ.கே.கோபாலன், கிருஷ்ணபிள்ளை, இ.எம்.எஸ், கெ.ஆர்.கௌரி போன்றவர்கள்.

வைக்கத்துடன் போராட்டத்தை நிறுத்திக்கொள்ள காந்தி உத்தேசிக்கவுமில்லை. வைக்கம் போராட்டம் முடிந்ததுமே கேரளத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆலயப்பிரவேச உரிமை கோரி காங்கிரஸ் தனித்தனிப் போராட்டங்களை ஆரம்பித்தது. எந்த ஊருக்கும் வெளியே இருந்து சத்யாக்கிரகிகள் செல்லக்கூடாது என்பது விதி. டி.கே.மாதவன் வைக்கம் போராட்டத்திற்கு பின்னர் சக காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து திருவார்ப்பு, கண்ணன்குளங்கரை ஆகிய ஊர்களில் ஆலயநுழைவுப்போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியை ஈட்டினார்.

பின்னர் அத்தனை தனிப்போராட்டங்களையும் ஒருங்கிணைத்து பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் வைக்கம் அளவுக்கே முக்கியமானது குருவாயூர் சத்யாக்கிரகம். 1931 நவம்பர் ஒன்று முதல் மன்னத்து பத்மநாபன் தலைவராகவும் கேளப்பன் செயலராகவும் பின்னர் கம்யூனிஸ்டு தலைவர்களாக ஆன ஏ.கே.கோபாலன், சுப்ரமணியன் திருமும்பில் ஆகியோர் காப்டன்களாகவும்  அமைந்த போராட்டக்குழு குருவாயூரின் ஆலயப்பிரவேசபோராட்டத்தை ஆரம்பித்தது.

போராட்டங்களின் விளைவாக 1936ல் திருவிதாங்கூர் மன்னர் பாலராமவர்மா ஆலயப்பிரவேச அறிவிக்கையை வெளியிட்டார். கேரளத்தில் உள்ள எல்லா ஆலயங்களும் அனைத்துச் சாதியினருக்கும் திறந்துகொடுக்கப்படும் என அவர் அறிவித்தார். இதுவே வைக்கத்தில் ஆரம்பித்த போராட்டத்தின் கடைசி வெற்றியாகும். இந்த அறிவிப்பு வெளிவரும்போது கேரளத்தில் ஏற்கனவே பாதிக்குமேற்பட்ட கோயில்களில் ஆலயநுழைவு நடந்துவிட்டிருந்தது. போராட்டத்தின் வெற்றியை தெரிவிக்கும் முகமாக காந்தி வந்து நேரில் மன்னரைச் சந்தித்தார். தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து திருவனந்தபுரம் ஆலயத்திற்குள் நுழைந்தார்.

காந்தியப் போராட்டத்தின் எல்லா சிறப்பம்சங்களும் வைக்கம் போராட்டத்திலும் உண்டு.

1. போராட்டத்தை அதிரடியாக நடத்தாமல் குறியீட்டு ரீதியாக நடத்துவது. அதன் மூலம் அதிகநாள் நீடிக்கவிட்டு சாத்தியமான அதிகபட்ச பிரச்சாரத்தை உருவாக்குவது

2. அதிகமான மக்கள்பங்கேற்புக்கு முயல்வது. அவ்வாறு அதிகமான மக்கள் பங்கேற்கும்பொருட்டு முடிந்தவரை எளிமையானதாக போராட்டமுறையை வைத்துக்கொள்வது.

3 வன்முறையை முற்றிலும் தவிர்த்துவிடுவது. வன்முறை உருவாகும்போது சமரசம் செய்துகொள்வது

4 பலவற்றை விட்டுக்கொடுத்து சாத்தியமான வெற்றியை  அடைவது. அதற்காக எப்போதுமே பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பது

5 ஆனால் கடைசியாக எதை உத்தேசித்திருக்கிறார்களோ அது வரை போராட்டத்தை நிறுதிக்கொள்ளாமல் இருப்பது. வருடக்கணக்காக சலிக்காமல் போராட்டத்தை முன்னெடுப்பது

அதாவது ஆலயப்பிரவேச உரிமை சட்டமாக ஆகாமல் வைக்கம் போராட்டத்தை காந்தி நிறுத்திக்கொண்டிருக்க மாட்டார்.  அவர்து நோக்கம் வைக்கத்தில் நுழைவது அல்ல. இந்துக்களின் மனமாற்றமே. சீராக பிடிவாதமாக 12 வருடம் நடந்த ஆலயப்பிரவேச போராட்டம் கேரளத்தில் அதை வெற்றிகரமாக நிகழ்த்தியது.

வைக்கம்போராட்டம் காந்திக்கு சமூகசீர்திருத்த விஷயங்களில் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் இடத்தைக்குறித்து ஒரு தெளிவை உருவாக்கியது. அதில் எழக்கூடிய சிக்கல்களைப்பற்றிய பல புரிதல்களை அவர் அடைந்தார். குருவாயூரிலும் அதை சோதித்துப் பார்த்தபின்னரே 1932க்குப்பின் அவர் தேசிய அளவில் ஹரிஜன இயக்கத்தை ஆரம்பித்தார்.

இங்கே குறிப்பிடவேண்டிய சில விஷயங்கள் உண்டு. பூனா ஒப்பந்தத்துக்குப் பின்னர் அம்பேத்காரின் ஆதரவுதளத்தை கவரவே காந்தி ஹரிஜன் இயக்கத்தை ஆரம்பித்தார் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அதற்கு எட்டு வருடங்களுக்கு முன்னரே காந்தி தீண்டாமை ஒழிப்பு மற்றும் சாதிப்பாகுபாடு எதிர்ப்புக்கான சோதனை முயற்சியாக வைக்கம்போராட்டத்தை ஆரம்பித்துவிட்டிருந்தார். அது ஒரு மக்களியக்கமாக ஆகி இறுதியான வெற்றியை குருவாயூரில் ஈட்டிய பிறகே அவர் அதை தேசிய அளவில் விரிவாக்கம் செய்தார்.

மேலும் உயர்சாதி இந்துக்களின் மனமாற்றம் மூலம் இப்போராட்டங்களை வெற்றிகரமாக நிகழ்த்த முடியும் என்றும் காந்தி வைக்கம் முதல் குருவாயூர் வரை நடந்த போராட்டங்கள் வழியாகவே கற்றுகொண்டார். பைத்தியக்கார விடுதியான கேரளத்தில் சாத்தியமென்றால் எங்கும் சாத்தியமே என்று அறிந்திருப்பார். ஹரிஜன இயக்கம் ஆரம்பித்தபின்னர் இந்தியாவெங்கும் ஆயிரத்தி எண்ணூறு முக்கியமான ஆலயங்களில் ஆலயநுழைவு போராட்டம் ஆரம்பித்து வெற்றிகரமாக நடந்தது.

ஆலயநுழைவு ஏன்? அன்றும் இன்றும் அக்கேள்வி உள்ளது. காந்தியைப் பொறுத்தவரை எல்லாமே ஒரு குறியீட்டு செயல்பாடுதான். உப்பு சத்தியாக்கிரம் ஏன், உப்பா முக்கியம் என்று கேட்பது போன்றதே இது. ஆலயம்தான் தீண்டாமை நிகழும் மையமான இடம். புனிதம் என்ற சொல்லே அதனுடன் தொடர்புடையது. அங்கே சமத்துவம் என்பது எங்கும் சமத்துவம் என்றே பொருள்படும். ஹரிஜன இயக்கத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கைத்தொழில்கள் அளித்தல், மது ஒழிப்பு, குடியிருப்புகளை சுத்தப்படுத்துதல் ஆகிய மூன்று திட்டங்களை காந்தி முன்வைத்தார்.

வைக்கம் சார்ந்த இந்த வரலாற்று அலைகளில் எங்குமே ஈவேரா ஒரு பொருட்படுத்தும் சக்தியாக இருக்கவில்லை என்பதே வரவாறு.  அன்று அவர் ஒரு வட்டாரக் காங்கிரஸ் தலைவர் மட்டுமே. முக்கியமான தமிழகத் தலைவர்கூட அல்ல. காங்கிரஸின் ஆணையின்றி வைக்கத்திற்கு தன் சிறு ஆதரவாளர்குழுவுடன் வந்த அவர் வைக்கம் போராட்ட அமைப்புடன் சேர்ந்து சிலநாட்கள் போராடி சிறைசென்றார். பின்னர் சுதந்திரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காந்திக்கு எதிராக இருந்த சக்திகளுடன் இணைந்து செயல்பட்டார். ஏற்கனவே அவர் காங்கிரஸில் இருந்து விலகித்தான் இருந்தார். பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக அவருக்கும் காங்கிரஸ¤க்கும் இடையே கசப்புகள் இருந்தன.

வைக்கம் சத்தியாக்கிரகம் முடிவடையும் முன்னரே 1925 ஆரம்பத்தில் ஈவேரா தமிழகம் திரும்பிவிட்டார். காங்கிரஸில் இருந்து விலகி குடியரசு இதழையும் சுயமரியாதை இயக்கத்தையும் ஆரம்பித்தார். தமிழகத்தில் அவரும் அவரது ஆதரவாளர்களும் காந்தியையும் காங்கிரஸையும் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்கள். அதற்கு அப்போது நடந்துவந்த வைக்கம் போராட்டத்தை ஒரு காரணமாக எடுத்துக்கொண்டார்கள். வைக்கம் போராட்டத்தில் நிகழ்ந்திருந்த பல்வேறு உள்விவாதங்களை ஈவேரா அவரது நோக்கில் பெரிதுபடுத்தினார். இதனலேயே வைக்கம் இங்கே ஒரு பேசுபொருளாக ஆனது.

ஆனால் தனிப்பட்ட முறையில் நான் ஈவேரா காந்தியை அவதூறு செய்தார் என்றோ வேண்டுமென்றே அவர் பொய்களைச் சொன்னார் என்றோ நினைக்கவில்லை. அத்தகைய சிறுமைகள் அண்டாத மாமனிதர் என்றே அவரைப்பற்றி எண்ணுகிறேன்.  இவ்விஷயம் குறித்து நாராயண இயக்கத்தின் முக்கியமான மூத்த தலைவர் சிலருடன் உரையாடியபோது அவர்கள் அளித்த வெளிச்சமே இவ்விஷயத்தில் என் புரிதலை உருவாக்கியது.

ஈவேரா காந்தியப்போராட்டத்தை புரிந்துகொள்ளவில்லை. கடைசிவரை. அவரைப்போலவே காங்கிரஸ¤க்குள் இருந்த ஏராளமான தீவிரப்போக்குள்ளவர்கள் காந்தியப் போராட்டத்தை புரிந்துகொள்ளவில்லை. வைக்கம் போராட்டத்தில் காந்தியுடன் இருந்தவர்களில் பாதிப்பேர் வெளியேறி கம்யூனிஸ்டுகளாக ஆனார்கள் என்பதே வரலாறு. ஈவேரா அனைத்தையும் அதிரடியாகவே கண்டார். கவன ஈர்ப்புக்கான அதிரடிப்போராட்டங்களைச் செய்து அவற்றை உடனடியாக விட்டுவிட்டு அடுத்ததற்குச் செல்வது அவரது இயல்பு. அவர் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நீடித்த திட்டமிட்ட குறிக்கோள் கொண்ட எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தவில்லை என்பதே வரலாறு.

ஈவேரா அவர்கள் காந்தியைக் குறித்துச் சொன்ன விமரிசனங்களை முற்றிலும் மாறான உலக நோக்கும் போராட்டமனநிலையும் கொண்ட இன்னொரு தலைவரின் எதிர்நிலை என்றே நான் எடுத்துக்கொள்கிறேன். பின்னர் அவர் அதைவிடக் கடுமையான எதிர்நிலைகளை அவரது சீடர்களிடமே எடுத்திருக்கிறார் என்பதும் வரலாறே

காந்தியப்போராட்டம் என்பது குடிமைச்சமூகத்தில் கருத்தியல் மாற்றத்தை உருவாக்குவதன் மூலம் சமூக அரசியல் மாற்றங்களை நோக்கிச் செல்ல முயல்வதாகும். ஆகவே அது மக்களின் மனநிலையை மெல்லமெல்ல மாற்றியமைக்க முயல்கிறது. அதாவது காந்தியப்போராட்டம் என்பது எதற்காக போராட்டம் நிகழ்கிறதோ அதை வெல்வதற்காக அல்ல. அதன் விளைவுகள் எப்போதுமே மறைமுகமானவை.

இக்காரணத்தால் காந்தியப்போராட்டம் நீண்டகால அளவிலேயே நிகழ முடியும்.  அதிகமான மக்களை போராட்டத்தில் ஈடுபடச்செய்யவேண்டும் என்பதற்காக போராட்டத்தை எளிய குறியீட்டுச்செயல்பாடாகவும் கடுமையான ஒடுக்குமுறைகள் நிகழாததாகவும் வைத்திருப்பார் காந்தி. ஒடுக்குமுறைகளுக்கு வழிவகுக்கும் வன்முறை நிகழ அனுமதிக்க மாட்டார். எப்போதுமே பேச்சு வார்த்தைக்கு முன்வருவார். விவாதிப்பார். ஆகவே காந்தியப்போராட்டம் மீண்டும் மீண்டும் சமரசம் செய்யப்படும்.

இக்காரணத்தால் எந்த ஒரு காந்தியப்போராட்டத்திற்கும் ‘மனச்சோர்வுப்புள்ளி’ ஒன்று உண்டு. ஒத்துழையாமை இயக்கம், உப்புசத்தியாகிரகம் எல்லாவற்றிலும் இந்த மனச்சோர்வு வந்துள்ளது. தீவிரமான எண்ணங்களுடன் உடனடி விளைவை விரும்புகிறவர்கள் காந்தியப்போராட்டம் என்பது அர்த்தமற்ற சடங்கு என்று எண்ணுவார்கள். சிலர் சினம் கொண்டு காந்தி போராட்ட வீரியத்தை அணைப்பதாக குற்றம் சாட்டுவார்கள். ஈவேரா போன்ற சிலர் காந்தியின் அடிப்படை நோக்கங்களை ஐயபப்டுவார்கள்.

ஆனால் வரலாற்றை ஒட்டுமொத்தமாக பார்ப்பவர்கள் காந்திய இயக்கம் சமரசமே இல்லாமல் அதன் இலக்கை நோக்கிச் செல்வதையே காண்பார்கள். மெதுவாக ஒரு சமூக உளவியல் மாற்றத்தை உருவாக்கியபடி அது வெற்றி நோக்கி நகர்கிறது. வைக்கத்திலும் அதுவே நிகழ்ந்தது. காந்தி உத்தேசித்த வெற்றி என்பது ஒருசாரார் மேல் இன்னொருசாரார் அடையும் வெற்றி அல்ல.  இரு சாராரும் ஒரு பொதுவான முற்போக்கு கருத்தை நோக்கிச் செல்லும் போது உருவாகும் வெற்றியே.

ஈவேரா அவர்கள் காந்தி ஆலயப்பிரவேசப் போராட்டத்தில் பிராமணர்களிடம் சமரசம் பேசியதைத்தான் மாபெரும் துரோகமாக எண்ணுகிறார்கள். ஈவேரா இதுகுறித்து எழுதிய கட்டுரைகளை முழுமையாகவே நான் வாசித்திருக்கிறேன். அவருக்கு கேரள சமூக-அரசியல் சூழலைப்பற்றி எந்த அறிதலோ அக்கறையோ இல்லை என்றே எனக்குப் பட்டது. அவர் தமிழகத்து அரசியலையே மனதில் கொண்டிருந்தார். அந்த கசப்பு காலகட்டத்தில் அவர் மேற்கொண்ட ஓர் அதிர்ச்சி நடவடிக்கை மட்டும்தான் வைக்கம்.

வைக்கம் போராட்டத்தில் காந்தி மேற்கொண்ட சமரச நடவடிக்கைகளை துரோகமாகச் சித்தரித்து அக்காலத்தில் ஈவேரா பேசினார். ஆனால் போராட்டம் வைக்கத்திற்குப் பின்னர்தான் கேரளம் முழுக்க பரவியது  அங்கிருந்து இந்தியா முழுக்கச் சென்றது என்ற வரலாற்று யதார்த்தத்தை அறிந்தவர்கள் ஈவேரா அவர்களின் பேச்சு புரியாமல் செய்யப்பட்ட ஒன்று என்றுதான் சொல்வார்கள்.

ஈவேரா தமிழ்நாட்டில் வைக்கம் போன்று சாதிமறுப்பு அல்லது தீண்டாமை ஒழிப்புக்கான எந்த நேரடி நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. பிராமண எதிர்ப்புச் செயல்பாடுகளில் பிற்படுத்தப்பட்டோரையும் தலித்துக்களையும் ஒருங்கிணைக்க முயன்ற அவர் பிற்படுத்தப்பட்டோர் ஆற்றிவந்த கடுமையான சாதிய ஒடுக்குமுறையை கண்டும்காணாமல் விட்டுவிட்டார். பிராமண ஆதிக்கம் ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என அவர் கனவு கண்டார்.

ஒரு பேச்சுக்காகச் சொல்வோம். இன்றைய மதுரை மாவட்டம் அன்று எப்படி இருந்திருக்கும். ஏதாவது ஒரு மதுரைமாவட்டத்து கிராமத்தில் தனி டம்ப்ளர் முறையை ஒழிக்க ஒரு போராட்டத்தை ஈவேரா ஆரம்பித்து முழுவெற்றி கிடைக்கும் வரை போராடியிருக்க வாய்ப்பிருக்கிறதா? அவரது இயல்பின்படி அவர் வந்து ஆவேசமாக பேசி ஒரு பரபரப்பை உருவாக்கி விட்டுச் சென்றுவிடுவார். நிலைமை அப்படியே நீடித்து  இன்றும் இருந்துகொண்டிருக்கும். இன்று அதுதானே தமிழக நிலைமை?

வைக்கம் போராட்டத்தின் வெற்றிக்காக ஈவேரா ஆதரவாளர் உரிமை கொண்டாடுகிறார்கள். மறுபக்கம் முக்கால்நூற்றாண்டு கழித்து இன்று ஈவேராவின் கோட்டைகளாக இருந்த ஊர்களில்கூட  தலித்துக்களின் வாயில் சாணிகரைத்து ஊற்றும் சடங்குகளும் தடுப்புச்சுவர்களும் நீடிக்கின்றன. அதற்கெதிராக தலித் இயக்கங்கள் போராடும்போது திராவிட இயக்கங்கள் எதிர்நிலை எடுக்கின்றன அல்லது மௌனம் சாதிக்கின்றன. 1920 களில் கேரளத்தில் தமிழகத்தை விட பலமடங்கு கேவலமான சாதிவெறி இருந்தது. வைக்கம் போராட்டமும் அதை ஒட்டி உருவான மக்களெழுச்சியும் அந்த மனநிலைகளை கேரளத்தில் இருந்து ஒழித்தன.

ஈவேரா அவர்கள் தலித்துக்களுக்காக வைக்கம் போல ஒரு பெரும் போராட்டத்தை இங்கே நடத்தி அந்தப் போராட்டத்தில் ஓரளவேனும் வெற்றியை ஈட்டியிருந்தால் மட்டுமே அவரது நோக்கமும் செயல்பாடுகளும் நியாயப்படுத்தப்பட்டிருக்கும். அந்தப்போராட்டத்தில் கேரள உயர்சாதியினர் மனமாற்றம் அடைந்து வந்து வைக்கம் போராட்டத்தில் இணைந்தது போல தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்ட சாதியினரில் ஒரு பகுதியினராவது வந்து கலந்துகொள்ளச்செய்ய அவரால் முடிந்திருந்தால் காந்தியைப்பற்றி அவர் சொன்ன குற்றச்சாட்டுகளை பரிசீலிக்க முடிந்திருக்கும். அவர் அப்படிச் செய்திருந்தாரென்றால் இன்று பாப்பாபட்டி-கீரிப்பட்டிகள் தேவைப்பட்டிருககது. கண்டதேவி தேர் சுமுகமாக ஓடியிருக்கும்.

வைக்கம் அன்றி ஈவேராவின் சாதனைகளாகக் கூறிக்கொள்ள எந்த சாதி ஒழிப்புப் போராட்டமும் இல்லை என்பதனாலேயே வைக்கம் போராட்டத்தில் ஈவேராவின் பங்கு பெரிதுபடுத்தபடுகிறது. எந்த திறந்த விவாதமும் இல்லாமல், வெளிப்படையான ஆதாரங்களேதும் முன்வைக்கப்படாமல், வைக்கம் வீரர் என்ற ஒற்றை வரிமூலம் அந்த கருத்து ஒரு நம்பிக்கையாக நிலைநாட்டப்படுகிறது. தமிழகத்தில் ஒரு சிறு வட்டத்திற்கு வெளியே அந்த நம்பிக்கைக்கு எந்த இடமும் இல்லை

வைக்கத்தில் ஈவேரா அவர்களுக்கு 1994ல் தமிழக அரசு நினைவுமண்டபம் கட்டி சிலை எடுத்த போது இது  சார்ந்த ஒரு சிறுவிவாதம் கேரளத்தில் உருவானது. ஈவேராவின் பங்களிப்பை திராவிட இயக்கம் பொய்யாக மிகைப்படுத்துவது குறித்து கேரள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டார்கள். ஆகவே வைக்கத்தில்  காங்கிரஸ¤ம் திராவிடர்கழகமும் தமிழக அரசும் சேர்ந்து உருவாக்கிய அச்சிலையில் ஈவேரா வைக்கம்போராட்டத்தில் கலந்துகொண்டார் என்று மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. கேரளத்து வரலாற்றாசிரியர்களைப் பொறுத்தவரை கேரள சமூகப்பிரச்சினை ஒன்றுக்காக அவர் போராட வந்தார் என்பதே மதிக்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வைக்கம் போராட்டம் முழுக்கமுழுக்க ஒரு காந்தியப்போராட்டம். காந்தி அவரது வழிமுறைகளை சோதித்துக்கொண்ட இடம் அது. எதிர்தரப்புடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரசங்கள் மூலம் முன்னகர்வதே காந்தியின் வழியாகும். ஆனால் விடாப்பிடியாக பல வருடங்களுக்கு அந்த போராட்டத்தை பலமுனைகளில் முன்னெடுப்பதும் அவரது வழக்கம். அப்படித்தான் வைக்கம் போராட்டம் ஒட்டுமொத்த ஆலயப்பிரவேச இயக்கமாக ஆகி முழுவெற்றியை அடைந்தது. அந்த வழிமுறைகளை காந்தி பின்னர் ஹரிஜன இயக்கத்தில் செயல்படுத்தினார்.

வைக்கம் போராட்டம் காந்தியின் நிலையுத்தம் என்னும் வழக்கப்படி நடைபெற்றது. அவரது ஜனநாயகப் போராட்ட வழிமுறைகளை புரிந்துகொள்ளாதவர்களில் ஒருவர் ஈவேரா அவர்கள். தன்னுடைய மேலோட்டமான அதிரடிப்போக்குக்கு காந்திய வழிமுறைகள் ஒத்துவராது என்று எண்ணிய ஈவேரா காந்தியை நிராகரித்தார். காந்தியின் பொறுமையான சமரச வழிமுறையை போராட்ட வீரியத்தை காட்டிக்கொடுக்கும் முறை என்று புரிந்துகொண்டார்.

வரலாற்றின் ஒரு தருணத்தை இரு வேறு ஆளுமைகள் வேறுவேறாகப் பார்த்தனர் என்பதையே இதில் இருந்து ஒரு பொதுவாசகன் புரிந்துகொள்ள முடியும். ஆகவே ஈவேராவின் சொற்களை வைத்து இப்போராட்டத்தில் காந்தியின் பங்களிப்பை மதிப்பிடுவது ஆபத்தானது. வைக்கம் போராட்டத்தையும் பின்னர் நிகழ்ந்த போராட்டங்களையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது காந்திய வழி மிகவெற்றிகரமாக கேரள மனசாட்சியை தொட்டெழுப்பி சமூக மாற்றத்தை மோதல் இல்லாமல் நிகழ்த்தி புதிய கேரளத்தை உருவாக்கியது என்பதைக் காணலாம்.

இந்த போராட்டத்தின் நாயகர் அதாவது உண்மையான ‘வைக்கம் வீரர்’ டி.கெ.மாதவன் மட்டுமே. அவரது  இருபதாண்டுக்கால பொதுவாழ்க்கையின் சாதனை அது. அதை சிலநாள் அப்போராட்டத்தில் பங்கெடுத்த ஈவேரா அவர்கள் மேல் ஏற்றிக்கூறுவது ஈவேராவிற்கே பெருமைசேர்க்காது.

ஜெ

மார்ச் 2009 ல் வெளியான கட்டுரை – இன்றைய காந்தி நூலில் இடம்பெற்றது- மறுபிரசுரம்

முந்தைய கட்டுரைவைக்கமும் காந்தியும் 1
அடுத்த கட்டுரைசென்னை, மூன்று சந்திப்புகள்