அ.ராமசாமியின் சினிமாஆய்வுகள்

நெடுங்காலமாக சிற்றிதழ்களைச்சார்ந்து மட்டுமே தீவிரமான பண்பாட்டுச்செயல்பாடுகள் நிகழ்ந்து வந்ததமை தமிழ் அறிவுலகில் அடிபப்டையான சில போதாமைமைகளை உருவாக்கியது. ஒட்டுமொத்தமாக அதை ‘எதிர்மறை மனப்பான்மை’ என்று சொல்லிவிடலாம். தமிழ் பண்பாட்டில் ஐம்பதுகள் முதல் வேகமாக எழுந்த ‘பரப்புவாதம்’ [ Populism ] சீரிய ஆழமான அறிவுச்செயல்பாடுகளுக்கு இடமில்லாமல் செய்தது. புறக்கணிக்கப்பட்ட அறிவியக்கம் சிற்றிதழ்சூழலில் தன் இடத்தைக் கண்டுகொண்டது. அதை செயல்பாடு என்பதைவிட தன்னை நிலைநிறுத்திக் கொள்ள செய்யபப்ட்ட உயிர்மரணப்போராட்டம் என்றே சொல்லலாம்.

தன்னுடைய தனித்தன்மை, தன்னுடைய தேவை இரண்டையும் தானே வலியுறுத்த வேண்டிய நிலை சிற்றிதழியக்கத்திற்கு ஏற்பட்டது. கல்கி சாண்டில்யன் அகிலன் நா.பார்த்தசாரதி ஆகியோரின் எழுத்துக்களில் இருந்து இலக்கியம் எப்படி வேறுபடுகிறது, பீம்சிங்கிடமிருந்து எப்படி சத்யஜித்ரே வேறுபடுகிறார், கொண்டையராஜூ போஸ்டர்களிலிருந்து எப்படி ஆதிமூலம் வேறுபடுகிறார் என்று மீண்டும் மீண்டும் அது வரையறுக்க வேண்டியிருந்தது. அவர்கள் எப்படி உண்மையான கலையை உருவாக்குகிறார்கள் என்றும் ஒரு சமூகத்தின் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கு அவர்கள் எப்படி இன்றியமையாதவர்கள் என்றும் சொல்ல வேண்டியிருந்தது.

ஐம்பதுகள் முதல் தமிழில் செயல்பட்ட இரண்டு தலைமுறையைச்சார்ந்த சிற்றிதழாளர்களின் அறிவுச்செயல்பாடுகளை இந்த இரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று இப்போது காணமுடிகிறது. க.நா.சு, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி , வேதசகாய குமார், ராஜமார்த்தாண்டன் போன்ற விமரிசகர்கள் திரும்பத்திரும்ப வணிகஎழுத்து, அரசியல் பிரச்சார எழுத்து ஆகியவற்றுக்கும் இலக்கியத்துக்குமான வேறுபாட்டை நிறுவிக் கொண்டே இருக்கிறார்கள். வெங்கட் சாமிநாதன், சா.கந்தசாமி, இந்திரன் போன்ற கலை ஆய்வாளர்கள் வணிகக் கலைக்கும் கலைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கிக் கொண்டே இருக்கிறார்கள் .

ஆகவே புறப்பாதிப்புகளை நிராகரித்து தனக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தன்மை சிற்றிதழ்சார் அறிவியக்கத்துக்கு உருவாகியது. தன் தனித்தன்மைகளை அது மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது. பரப்புப் பண்பாடு சார்ந்த விஷயங்களை முழுக்க ஒரே வீச்சில் நிராகரித்தது. அவற்றை மக்களின் பலவீனங்களைச் சுரண்டும் கலாச்சாரச் சீரழிவுகள் என்று வரையறுத்தது. இந்நோக்கே இங்கிருந்த மார்க்ஸியர்களின் தரப்பிலும் காணப்பட்டது. இதை தவிர்க்கமுடியாத ஒரு வரலாற்று இயல்பு என்றே கொள்ளவேண்டும்.

இந்தச் சூழல் தொண்ணூறுகளில் மாற ஆரம்பித்தது. தமிழ் பரப்புப் பண்பாட்டின் இயல்புகள் மாறின. ஊடகப்பெருக்கமே இதற்கான முதல் காரணம் என்று தோன்றுகிறது. எல்லா வகையான பண்பாட்டுச்செயல்பாடுகளுக்கும் ஊடகங்களில் ஏதேனும் ஒரு இடம் கிடைக்க ஆரம்பித்தது. மெல்லமெல்ல தீவிரமான பண்பாட்டுச்செயல்பாடுகள் பரவலாக கவனம்பெறவும் தொடங்கின. காட்சி ஊடகத்தின் பெருக்கத்தால் கேளிக்கைக்காக வாசிப்பை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபோது வணிக எழுத்து தமிழில் பெற்றிருந்த நாயகத்துவம் இல்லாமலாயிற்று. இது எழுத்து என்றாலே இலக்கியம்தான் என்ற நிலையை படிப்படியாக உருவாக்கியது. பிரசுர அமைப்புகளும் நடுநிலை இதழ்களும் உருவாகின.

இந்தக் காலகட்டத்தில் மெல்ல அதுவரை சிற்றிதழ்சார்ந்து இயங்கியிருந்த தமிழ் அறிவுச்செயல்பாடுகளில் இருந்த எதிர்மறைத்தன்மை மெதுவாகக் குறைய ஆரம்பித்தது. வணிக எழுத்து, கேளிக்கைக் கலை ஆகியவற்றின் சமூகப்பங்களிப்பு சார்ந்து கவனம் விழ ஆரம்பித்தது. அவற்றின் செயல்பாட்டுமுறை, அவற்றின் அமைப்பு மற்றும் வடிவம் ஆகியவை ஆராயப்பட்டன. அதற்கான கோட்பாடுகளும் கலைச்சொற்களும் உருவாகிவந்தன. சிற்றிதழ்களில் வணிகத்திரைப்படங்கள் பற்றிய ஆய்வுகளும் வணிக இசை குறித்த ஆய்வுகளும் இடம்பெற ஆரம்பித்தன.

இப்போக்கின் தொடக்கப்புள்ளி என்று சொல்லத்தக்க முயற்சி எண்பதுகளில் தியோடர் பாஸ்கரனால் செய்யப்பட்டது. எஸ்.வி.ராஜதுரை நடத்திய ‘இனி’ இதழில் கோயில்பிச்சை என்ற பேரில் அவர் பழைய திரைப்பாடல்களைப்பற்றி ஆய்வுத்தரமான கட்டுரைகள் சிலவற்றை எழுதினார். தொண்ணூறுகளில் தியோடர் பாஸ்கரன் திரைப்பட வரலாறு சார்ந்து குறிப்பிடத்தக்க நூல்களை எழுதி அப்போக்கை முன்னெடுத்தார். ஏற்கனவே அறந்தை நாராயணன், நவீனன், வாமனன் போன்றவர்கள் பரப்பு ஊடகம் குறித்து எழுதியிருந்தாலும் அவையெல்லாம் இதழியல்சார்ந்த எழுத்துக்களே. ஊடக ஆய்வு சார்ந்த கவனம் உருவான பின்பு அம்ஷன் குமார், சோழநாடன், ரவிக்குமார், வெங்கடேஷ் சக்ரவர்த்தி, யமுனா ராஜேந்திரன் ,செழியன், எஸ்.ராமகிருஷ்ணன், விஸ்வாமித்திரன் போன்றவர்கள் எழுதிய பல கோணங்களிலான பல தளங்களைச் சேர்ந்த கட்டுரைகளை நாம் காணமுடிகிறது.

தமிழில் கோட்பாட்டு முறைமை சார்ந்த ஊடக ஆய்வாளர்களில் தொண்ணூறுகளில் அதிகமாக கவனத்துக்கு வந்தவர் அ.ராமசாமி. பாண்டிசேரி பல்கலை நாடகத்துறையில்பணியாற்றினார். மதுரை பல்கலையில் தி.சு.நடராஜன் கீழ் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றபின் மனோன்மனணியம் சுந்தரனார் பல்கலையில் இப்போது தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றி வருகிறார். ஒளிநிழல் உலகம், மாறும்காட்சிகள்- ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல், பிம்பங்கள் அடையாளங்கள், அலயும் விழித்திரை, வட்டங்களும் சிலுவைகளும், ஒத்திகை, நாடகங்கள் விவாதங்கள் ஆகியவை நூல்கள்.  ஆரம்பநாட்களில் தீர்க்க வாசகன் என்ற பேரிலும் எழுதியிருக்கிறார்.

இலக்கியம், வணிகஎழுத்து, நுகர்வியக்கலை, செவ்வியல்கலை அனைத்தையுமே ஒன்றாகக் காணும் பின் நவீனத்துவ ஆய்வுமுறையை பெரும்பாலும் சார்ந்தவர் என அ.ராமசாமியைச் சொல்லலாம். அந்த நோக்கில் எல்லா படைப்புகளும் குறிகளின் மூலம் தொடர்புறுத்தவும் பொருள்கொள்ளவும் செய்யப்படும் முயற்சிகள் மட்டுமே.

அ.ராமசாமி உயிர்மை, காலச்சுவடு முதலிய இதழ்களில் தொடர்ச்சியாக ஊடக ஆய்வுகளை எழுதிவருகிறார். குறிப்பாக சமகால வணிகசினிமாவைப்பற்றிய அவரது கட்டுரைகள் பலவாறாக விவாதிக்கப்பட்டவை. மரபான சினிமா விமரிசனங்கள் அல்ல அவை. கதை, நடிப்பு, இடக்கம் போன்றவற்றை ரசிப்பதும் மதிப்பிடுவதுமல்ல அவற்றின் நோக்கம். சினிமா ஒரு காட்சி ஊடகம் என்ற முறையில் முன்வைக்கும் காட்சிக்குறீயிடுகள் நம் சூழலில் தெரிந்தும் தெரியாமலும் எப்படி பொருள்கொள்ளப்படுகின்றன என்று ஆராய்வதே அவற்றின் நோக்கம். காட்சிக்குறிகளை சமூக பண்பாட்டு அரசியல் தளங்களில் பலவாறாக பொருத்திப் பார்க்கும் முயற்சிகள் அவை. ஆக, சினிமாவை ரசிப்பதற்குப் பதிலாக அவற்றை ஆய்படுபொருட்களாக மட்டுமே அவை காண்கின்றன.

அ.ராமசாமியின் கட்டுரைகளில் எப்போதும் தகுதிவாய்ந்த ஆய்வாளனுக்குரிய சமநிலை காணப்படுகிறது. பரபரப்பை நோக்கமாகக் கொண்ட தடாலடிக் கூற்றுகள் இல்லை. ஆய்வுமுறைமையில் சமகால ஊடகசிந்தனையாளர்களின் செல்வாக்கு இருந்தாலும் கட்டுரையில் மிதமிஞ்சிய கோட்பாட்டு விளக்கங்களும் கோட்பாட்டு நடையும் இருப்பதில்லை. ஆகவே பொது வாசகனுக்குரிய எழுத்தாகவும் அவை உள்ளன. ஆய்வுமுறைமையில் டில்யூஸ்-கட்டாரியின் நேரடிச் செல்வாக்கு அவரிடம் உண்டு. மேற்கோள்காளாக அவரில் அவர்களை காணமுடியும். கிராம்ஷியின் மரபுவந்த மார்க்சிய நோக்கிலேயே ஊடக ஆய்வுகளை நிகழ்த்துகிறார் என்றும் சொல்லலாம்.

ஆகவே அ.ராமசாமியின் கோணத்தில் ஊடகச் செயல்பாடுகள் என்பவை எல்லாமே நுண்அதிகாரத்தை நிறுவுவதற்கான அரசியல் செயல்பாடுகளே. படைப்புக்குள் இருந்து வாசகனை நோக்கி தெரிந்தும் தெரியாமலும் நீண்டுவரும் நுண்அதிகாரத்தைக் கண்டடைவதே அவரது ஊடக ஆய்வின் முதலும் இறுதியுமான நோக்கமாகும். அ.ராமசாமியின் பலமும் பலவீனமும் இந்த நிலைபாட்டிலேயே உள்ளது என்று சொல்லலாம்.

*

காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ள ‘தமிழ்சினிமா- அகவெளியும் புறவெளியும்’ என்ற நூல் தமிழின் வணிகசினிமா மீது முன்வைக்கப்பட்ட  பலவகையான ஆய்வுக்கோணங்களின் தொகுதி. இக்கட்டுரைகள் ஏற்கனவே உயிர்மை காலச்சுவடு போன்ற இதழ்களில் வெளிவந்தவை. ‘காதல்’ போன்ற படங்களில் துல்லியமான யதார்த்தச் சித்தரிப்பு வழியாக மறைமுகமாக வழக்கமான கருத்தியல் கூறுகள் வாசகன் மேல் திணிக்கப்படுகின்றன என்று வாதிடுகிறார் அ.ராமசாமி. ‘சண்டைக்கோழி’ முதலிய படங்கள் முன் வைக்கும் சாதிய மீட்புவாதத்தைச் சுட்டிக்காட்டுகிறார். தங்கர்பச்சானின் ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்ற எளிய யதார்த்தபப்டங்களின் தேவையை வலியுறுத்துகிறார்.

தமிழ் வணிகசினிமா காமத்தை ஒரு பெரும் கவற்சி உத்தியாக கையாண்டுவருவதன் மீதான விமரிசனம் எஸ்.ஜெ.சூரியா போன்ற திரைப்படக்காரர்களின் படங்களில் உள்ள ஆணாதிக்க-நுகர்வுபோக்குகளும் சுட்டிகாட்டப்படுகின்றன. பல கோணங்களில் நாம் விவாதித்து வரும் தமிழ் சினிமாவை நவீன கல்வியியல் முறைமைகள் எப்படி ஆராயக்கூடும் என்பதை நாம் இக்கட்டுரைகளில் காண்கிறோம்.

இந்நூலில் எனக்கு முக்கியமானதாக  பட்டது மூன்றாம் பகுதியில் தமிழ் நகைச்சுவை நடிகர்களான நாகேஷ், வடிவேலு, விவேக் நகைச்சுவையை முக்கிய அம்சமாகக் கொண்டுள்ள கமல்ஹாசன் ஆகியோரைப்பற்றி செய்யப்பட்டுள்ள ஆய்வாகும். நாம் நகைச்சுவை என்று கொள்ளும் அம்சங்கள் என்ன,ஏன் அவை நகைச்சுவையாக கருதபப்டுகின்றன, அவற்றின் சமூகவியல் உள்ளர்த்தங்கள் என்ன என்று ஆராயும் கட்டுரைகள் இவ்வகையில் முன்னோடி முயற்சிகள் என்று சொல்லலாம்.

அ.ராமசாமி இப்போது தன் கட்டுரைகளை தனது வலைப்பூவான www.ramasamywritings.blogspot.com ல் வெளியிட்டு வருகிறார்

[தமிழ்சினிமா- அகவெளியும் புறவெளியும்:காலச்சுவடு பதிப்பகம்: விலை ரூபாய் 140 . : பக்கம் 176]
 

முந்தைய கட்டுரைமுன்னோடியின் கண்கள்
அடுத்த கட்டுரைகீதை எதற்காக?