அன்புள்ள ஜெ.எம்,
காந்தியம் குறித்த உங்கள் விவாதங்களின் ஒருபகுதியாக வைக்கம் குறித்தும் எழுதுவீர்கள் என நினைக்கிறேன். வைக்கம்போராட்டத்தில் காந்தியின் துரோகம் குறித்து பெரியாரின் மேற்கோள்களுடன் நிறையவே பேசப்படுகிறது. ‘வைக்கம் தெருவில் தாழ்த்தப்பட்ட சாதியினர் நடமாட உரிமையை வாங்கிக் கொடுத்தவர் பெரியார்’ என்ற வரிகளை சுவர்களெங்கும் காண்கிறோம். உண்மையில் என்ன நடந்தது?
சங்கரநாராயணன்
***
அன்புள்ள சங்கரநாராயணன்
வரலாற்றை எவ்வகையிலும் பொருட்படுத்தாத தன்மை பரப்பியம் சார்ந்த எல்லா இயக்கங்களுக்கும் இருக்கும். திராவிட இயக்கம் என்பது முழுக்க முழுக்க ஒரு பரப்பிய இயக்கம். பரப்பிய இயக்கம் என்றுமே பொதுமேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது. சராசரி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதையே கருத்தியல் செயல்பாடாகக் கொண்டது.
ஆகவே வரலாற்றியக்கத்தில் உள்ள சிக்கலான முரணியக்கங்களை அது பேசமுடியாது. அனைத்தையும் அது எளிமைப்படுத்தியாகவேண்டும். ஹீரோX வில்லன் என்ற நாடகத்தனம் அதற்கு தேவையாகிறது. எதிரிகளை உருவாக்கி அவர்கள் மீது உச்சகட்ட வசைகளைப் பொழிந்து அந்தக் கருமைச்சித்திரம் முன்பு தன்னை வெண்மையாக நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது அதற்கு. எல்லா தளங்களிலும் திராவிட இயக்கம் அதையே செய்கிறது என்பதைக் காணலாம்.
பலர் திராவிட இயக்கத்தை பரப்பியம் நோக்கிக் கொண்டுவந்தவர் அண்ணாத்துரை அவர்கள்தான் என்று சொல்வதுண்டு. அது உண்மையல்ல என்பதை ஈ.வே.ரா அவர்களின் எழுத்துக்களை வாசிக்கும் எவரும் இன்று காணலாம். எப்போதுமே ஈ.வே.ரா அவர்கள் தர்க்கத்தின் மொழியில் பேசியதில்லை, முழுக்க முழுக்க மிகையான உணர்ச்சியின் மொழியிலேயே பேசினார். எந்த உரையிலும் அவர் சமநிலையுடன் எதையும் அணுகியதில்லை. அனைத்தையுமே அப்போது அவருக்குப் பட்ட உச்சநிலைக்குக் கொண்டுசெல்வதுதான் அவரது வழிமுறை. ஆகவேதான் அவரது உரைகள் முரண்பாடுகளின் தொகையாக உள்ளன. சீரான ஒரு நிலைபாட்டையோ அல்லது தொடர்ச்சியான தர்க்கபூர்வ வளர்ச்சியையோ அவரது உரைகளில் காணமுடியாது.
ஈ.வே.ரா அவர்கள் காந்தியைப் பற்றிச் சொன்ன வரிகளைப் பிடுங்கி இங்கே இன்று சிலர் வரலாறுகளை உருவாக்க முயல்கிறார்கள். காந்தியைப்பற்றிய அவரது கருத்துக்களும் இரு எல்லைகளில்தான் உள்ளன. காந்தியை சாதியவாதி என்றும் சனாதனி என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். காந்தி சனாதனிகளால் கொல்லப்பட்டபோது இந்தியாவுக்கே காந்தி தேசம் என்று பெயரிடவேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். காந்தியைப் பற்றிய ஈ.வே.ரா அவர்களின் கருத்துக்களைத் தொகுப்பவர்கள் அண்ணாத்துரை உட்பட பிறரைப்பற்றிய அவரது கருத்துக்களைத் தொகுத்து வரலாற்றை உருவாக்கினால் திராவிட இயக்கமே அடித்தளமிழந்துபோகும்.
ஈ.வே.ரா அவர்கள் காந்தியைப்போலவே ஓர் அரசின்மைவாதி, மிகையுணர்வாளர். ஆனால் காந்தியைப்போலன்றி அவர் ஒரு முழுமறுப்பாளர். சமநிலையும் கட்டுப்பாடும் இல்லாதவர். வரலாற்றைப்பற்றிய புரிதலோ தன் கருத்துக்களின் விளைவுகளைப்பற்றிய புரிதலோ இல்லாமல் அவர் பேசினார். இன்று சில வரலாற்றாசிரியர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் சித்திரம்போலன்றி அவர் என்றுமே ஒரு மாபெரும் மக்கள்தலைவராக இருக்கவில்லை. அவரது கருத்துக்களுக்கு பரவலான சமூகச் செல்வாக்கும் இருக்கவில்லை. திராவிட இயக்கம் அவரது தலைமையில் ஒரு குறுங்குழுவாகவே இருந்தது. இப்போதிருக்கும் திராவிடர்கழகம் போல.
திராவிட இயக்கத்தை மக்களிடையே கொண்டுசென்றவர் கவற்சியான பரப்புயவாதியான சி.என்.அண்ணாத்துரை அவர்களே. அன்றைய காங்கிரஸ் அரசின் மீதான அனைத்து அதிருப்திகளையும் பயன்படுத்திக்கொண்டு ஓர் அரசியலியக்கமாகவே அவர் அதை முன்னெடுத்தார். அதற்காக ஈ.வே.ரா அவர்களின் அடிப்படைக்கூற்றுகளை எல்லாம் அவர் சமரசப்படுத்திக்கொண்டார். கடவுள் எதிர்ப்பு பார்ப்பனிய எதிர்ப்பு உட்பட. அதற்காக ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஈ.வே.ரா அவர்களின் அமைப்பில் அண்ணாத்துரை அவர்கள் இருந்து பிரிந்து வந்தார்.
அவ்வாறு அவர் ஈ.வே.ரா அவர்களை கைவிட்டதனாலேயே அவர் மக்கள்செல்வாக்கு கொள்ள முடிந்தது. அந்த செல்வாக்கு வழியாக உருவாகி வந்த இன்றைய திராவிட இயக்கத்தின் நிறுவனராக பின்னால் சென்று பார்ப்பதனால்தான் ஈ.வே.ரா அவர்களின் ஆளுமை இன்றுள்ள பெரும் வடிவை அடைகிறது.
அதாவது காந்திய யுகத்தின் இன்னொரு பெருந்தலைவர் அல்ல ஈ.வே.ரா அவர்கள். காந்தியும் ஈ.வே.ராவும் என்ற ஒப்புமைக்கே இடமில்லை. நீங்கள் ஏற்கிறீர்களோ இல்லையோ காந்தி ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வு. அவரது காலகட்டத்தில் கோடானுகோடிகளின் குரல் அவர். ஈ.வே.ரா அன்று ஒரு சிறு குறுங்குழுவை நடத்தி வந்தவர் மட்டுமே. காந்திக்கு எதிரான ஈ.வே.ரா அவர்களின் கருத்துக்களையெல்லாம் இந்த ஒப்பீட்டுடன் மட்டுமே நாம் அணுக முடியும்.
அதே சமயம் ஒரு முழுமறுப்பாளர் என்ற வகையில் ஈ.வே.ரா அவர்களின் ஆளுமையின் தீவிரத்தை நான் மதிக்கிறேன். அவரது ஆளுமையின் வீரியத்தால் அவர் ஒரு வரலாற்று சக்தியாக, கருத்தியல் தரப்பாக இருந்தார். அவரது பங்களிப்பை கறாராக மதிப்பிட்டுக் கொண்டே கூட நாம் தமிழக வரலாற்றை புரிந்துகொள்ள முடியும். வைக்கம் போராட்டத்தையும்.
வரலாற்று நிகழ்ச்சிகளைப் பார்க்கையில் அவற்றை எளிமையான தப்புசரிகளின் ஆட்டமாக அல்லாமல் சிக்கலான ஊடுபாவுகளின் பின்னலாக உருவகித்துக்கொள்வது உகந்தது. பல்வேறு பண்பாட்டுச் சூழல்களும் கருத்துநிலைகளும் கொண்ட இந்நாட்டில் எந்த ஒரு நிகழ்விலும் முழுக்க மாறுபடும் பல தரப்புகள் இருக்கும். இன்றைய பிரச்சினைகளையே எடுத்துக்கொண்டு பார்க்கலாம். கொடியன்குளம் நிகழ்ச்சி அல்லது உத்தப்புரம் நிகழ்ச்சியில் திராவிட இயக்கங்கள் கீழ்த்தரமான சாதிவெறுப்பு அமைப்புகளாக நடந்துகொண்டன என்றே தலித் அமைப்புகள் பொதுவாக பதிவுசெய்கின்றன. ஆனால் நான் அங்கே மாறுபட்ட தரப்புகள் இருந்தன என்றே எடுத்துக் கொள்வேன். ஒரு தரப்பு இன்னொன்றை பற்றிச் சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்ள மாட்டேன்.
இனி வைக்கம். 1924 முதல் 1925 வரை நடந்த வைக்கம் சத்தியாக்கிரகம் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும். கோட்டயம் அருகே உள்ள வைக்கம் கேரளத்தில் உள்ள மிகப்பெரிய சிவாலயங்களில் ஒன்று. பிராமணியத்தின் மையமும் கூட. கேரளத்தில் அன்றிருந்த தீண்டாமைமுறை வைக்கத்திலும் இருந்தது. வைக்கம் கோயிலுக்குள் நுழைவதற்கும் ஆலயத்திற்குச் சுற்றிலும் இருந்த தெருக்களிலும் குளங்களிலும் ஈழவர் உட்பட தாழ்ந்த சாதியினர் நடமாடுவதற்கும் தடை இருந்தது. இந்தத் தடை கேரளத்தில் இருந்த எல்லா கோயில்களிலும் இருந்தது.
இங்கே கேரளச் சமூக இயக்கங்களின் பின்புலத்தை புரிந்துகொள்ள வேண்டும். கேரளம் கடுமையான ஆசாரங்களால் கட்டுப்படுத்தப்பட்ட சமூகமாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது. அங்கிருந்த தீண்டாமை என்பது பிற இந்தியப்பகுதிகளில் நிலவியதைவிட அதிகம். அதாவது எல்லா சாதியினரும் தீண்டாமையால் பாதிக்கப்பட்டனர். பிராமணர்களுக்குள்ளேயே சிலரை பிறர் தீண்டமாட்டார்கள். நாயர்களை பிராமணர் தீண்டமாட்டார்கள். நாயர்கள் ஈழவர்களை தீண்டமாட்டார்கள்.
தீண்டாமை மட்டுமல்ல ஆயித்தம் என்று சொல்லப்பட்ட தூரம் விடும் ஆசாரமும் உண்டு. நாயரைப் பார்த்தால் ஈழவர் நான்கடி விலகி நிற்க வேண்டும். ஈழவரைப்பார்த்தால் புலையர் நான்கடி விலகி நிற்க வேண்டும். ஆகவே நாயரிடமிருந்து புலையர் எட்டடி தள்ளி நிற்க வேண்டும். நாயாடிகள் போன்ற சிலசாதியினரை கண்ணால் பார்ப்பதே தீட்டு என்ற நிலை நிலவியது.
ஏன் இந்த உக்கிரம் என்று யோசித்தால் தெரிவது கேரளம் தமிழகம் சந்தித்த பிற அன்னியப் படையெடுப்புகள் ஏதும் நிகழாமல் மலைகளால் பொத்திப் பாதுகாக்கப்பட்ட நிலம் என்பதே. இவ்வாறு புறப்பாதிப்பு இல்லாத இடங்களில் இருப்பவர்களே தேங்கிப்போய் பழங்குடிகளாக நின்றுவிடுகிறார்கள். கேரளத்தில் மிகத்தொன்மையான தமிழக ஆசாரங்களும் கொண்டாட்டங்களும் நம்பிக்கைகளும் இப்போதும் நிலவுகின்றன. தொன்மையான பழங்குடித் தமிழே பேசப்பட்டு பின்னர் சம்ஸ்கிருதம் கலந்து மலையாளமாகியது. கேரளம் முழுக்க இன்றும் பழங்குடிப் பண்பாட்டுக்கூறுகள் வலுவாகவே இருக்கின்றன.
அதாவது கேரளம் புறத்தொடர்புகள் இல்லாமல் பழங்குடிமனநிலையை அப்படியே நீட்டித்துக்கொண்ட நிலமாகவே பதினெட்டாம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது. கேரளத்தில் இருந்த சாதிவிலக்குகளும் தீண்டாமையும் எல்லாம் பழங்குடிமரபில் இருந்து வந்தவையே. இதற்கு ஆதாரமாகக் கூறப்படவேண்டியது கேரளத்திலேயே உள்ள எந்த புறத்தொடர்பும் இல்லாத உச்சிமலைப் பழங்குடிகளுக்குள் இன்றும் நிலவும் இன்னும் உக்கிரமான தீண்டாமையும் ஆயித்தமும்தான்.
தீண்டாமை ஆயித்தம் தவிர இன்னும் பலவகையான பழங்குடித்தன்மை கொண்ட விலக்குகளும் கேரளத்தில் இருந்தன. பலவகையான உணவுகளுக்கு விலக்கு. உதாரணமாக, புலையர்கள் சமீபகாலம் வரைக் கூட பால் குடிக்கமாட்டார்கள். அதேபோல குடுமி வைத்துக்கொள்வது உடைகள் அணிந்து கொள்வது போன்ற அனைத்திலுமே விதிகளும் விலக்குகளும் உண்டு. மண உறவுகளில் விசித்திரமான பல விஷயங்கள் உண்டு. நாயர், ஆசாரிமார் உட்பட பல சாதிகளில் ஒருபெண்ணுக்கு ஒரேசமயம் பல கணவர்கள் இருக்கலாம் என்ற வழக்கம் இருந்தது.
அதேபோல சமூக விலக்குகள் பல இருந்தன. விலங்குகளை சுமைதூக்க வைக்க கேரளத்தில் தடை இருந்தது. குறிப்பிட்ட இரு ஆறுகளுக்கு நடுவே வாழ்பவர்கள் அந்த ஆறுகளை தாண்டிச்செல்லக்கூடாது என்ற ஆற்றுவிலக்கு [புழவிலக்கு] இருந்தது. வருடத்தில் ஒரு நாள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் எந்த உயர்சாதிப்பெண்ணை கண்ணால் பார்க்கிறானோ அவளை சொந்தமாக்கிக்கொள்ளலாம் என்ற ஆசாரம் இருந்தது. இதற்கு புலைப்பேடி என்று பெயர். இன்னும் மிகமிகப் பழமையான பல பழங்குடி ஆசாரங்கள் இருந்தன.
இத்தகைய சூழலில் சுவாமி விவேகானந்தரின் வருகை ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 1892 ல் சுவாமி விவேகானந்தர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக விளங்கிய திருவனந்தபுரத்துக்கு வந்தார். மகாராஜாவின் விருந்தினராகத் தங்கியிருந்தார். இங்குள்ள ஆசாரங்களைக் கண்டு அவர் கொதிப்படைந்து ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று கருத்து தெரிவித்தார் என்பது ஒரு வரலாற்று நிகழ்ச்சி.
நாராயண குரு
1893ல் சுவாமி விவேகானந்தர் மைசூருக்குச் சென்றபோது அங்கே டாக்டர் பல்பு அவரைச் சந்தித்தார். மிஷனரிகளின் உதவியால் ஆங்கிலக்கல்வி கற்ற சில ஈழவர்களில் ஒருவர் அவர். கேரளச் சாதியமைப்பினால் அவருக்கு கேரளத்தில் வேலை கிடைக்கவில்லை. மைசூருக்குச் சென்று அங்கே உயர்பதவியில் அமர்ந்தார். இங்கே கவனிக்கவேண்டியது ஒன்றுண்டு. மைசூரிலும் சாதியமைப்பு கடுமையாக இருந்தது. ஆனால் கேரளத்தில் உள்ள சாதி படிநிலை அங்கே செல்லுபடியாகாது. அங்குள்ளச் சாதிப்படிநிலை இங்கே செல்லுபடியாகாது.
விவேகானந்தரிடம் டாக்டர் பல்பு கேரளத்தின் சாதி முறைக்கு எதிராக என்ன செய்யலாம் என்று கேட்டார். விவேகானந்தர் ஒரு துறவியை முன்னிறுத்தி பணிகளை ஆரம்பியுங்கள், மக்கள் திரண்டு வருவார்கள் என்றார். தான் திருவனந்தபுரம் வந்தபோது சந்தித்த சட்டம்பி சுவாமிகளின் மாணாக்கரான நாரா¡யண குருவைப்பற்றி விவேகானந்தர் குறிப்பிட்டு அவரைச் சந்திக்கும்படி ஆலோசனை சொன்னார்
கேரளம் வந்த டாக்டர் பல்பு திருவனந்தபுரம் அருகே அருவிப்புறம் என்ற ஊரில் ஆசிரமம் அமைத்திருந்த நாராயண குருவை சென்று சந்தித்தார். 1855ல் ஈழவகுடும்பத்தில் பிறந்து துறவு பூண்டு தமிழகத்தில் அலைந்த நாராயணகுரு 1888 ல் அருவிப்புறத்துக்கு வந்து அருவியில் இருந்து எடுத்த ஒரு கல்லை சிவலிங்கமாக நிறுவி ஓர் ஆலயத்தை எழுப்பி அங்கே ஈழவர்களாலெயே பூஜைகளையும் செய்வித்துவந்தார். சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் மலையாளத்திலும் பேரறிஞராக திகழ்ந்தார். ‘ஜாதிபேதம் மதபேதம் இல்லாமல் அனைவரும் வாழும் இடம் ‘ என தன் ஆசிரமத்தை அறிவித்தார். இதெல்லாம் அன்று பெரும் சர்ச்சையை உருவாக்கிய விஷயங்களாக இருந்தன.
டாக்டர் பல்பு நாராயணகுருவை முன்னிறுத்தி சமூக சீர்திருத்ததுக்காக ஒரு பெரும் இயக்கத்தை ஆரம்பித்தார். ஏற்கனவே நாராயணகுரு வாவூட்டு யோகம் என்றபேரில் ஒரு சிறிய அமைப்பை நடத்திவந்தார். அது சமபந்தி உணவுக்கான ஓர் அமைப்பு. அது ஸ்ரீ நாராயண தர்மபரிபாலன யோகம் என்று பெயர் கொண்ட அமைப்பாக 1903ல் பதிவு செய்யப்பட்டது. கேரள சமூக வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது இந்த இயக்கம்.
முதன்மையாக எஸ்.என்.டி.பி ஒரு கல்வி இயக்கம்.. நூற்றுக்கணக்கான கல்லூரிகளையும் பள்ளிகளையும் நிறுவி இந்தியாவின் பெரும் கல்வியமைப்புகளில் ஒன்றாக இது உள்ளது இன்று. ஈழவ சமூகத்தையும் பிற ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் ஒருங்கிணைத்து அவர்களின் சமூக இழிவுகளுக்கு எதிராக போராடச்செய்தது. கல்வியிலும் பொருளியலிலும் சுயமேம்பாடு அடைவதும் உரிமைகளுக்காக ஜனநாயகம் உறையில் தொடர்ச்சியாக போராடுவதும் அதன் வழிகள். 1915க்குள் எஸ்.என்.டி.பி கேரளவரலாற்றின் முதன்மையான சமூக இயக்கமாக மாறி சாதிய அடிப்படைகளை உலுக்க ஆரம்பித்ததுவிட்டது..
இன்றைய கேரளத்தின் பண்பாட்டு சாதனைகள் எல்லாமே இந்த இயக்கம் வழியாக உருவாகி வந்தவை. உதாரணமாக இன்று கேரளத்தில் உள்ள முக்கியமான மூன்று நாளிதழ்கள் இவ்வியக்கத்தால் உருவாக்கப்பட்டவை. கேரளத்தின் அரசியலில் இலக்கியத்தில் இதழியலில் வரலாற்றாய்வில் கலைகளில் எல்லாம் முக்கியமான முன்னோடி ஆளுமைகள் நாராயணகுருவின் இயக்கத்தில் இருந்து உருவாகி வந்தார்கள்.
நாராயணகுருவின் இயக்கம் ஒரு தொடக்க விசை, ஒரு முன்னுதாரணம். நாராயணகுருவின் இயக்கத்தின் அலையே நம்பூதிரிகளில் யோகஷேம சபா போன்ற சீர்திருத்த இயக்கத்தை உருவாக்கியது. அதில் இருந்துதான் இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாடு உருவாகி வந்தார். புலையர்களில் அய்யன்காளியின் புலையர்மகாசபை உருவாகி வந்தது. நாயர்களில் நாயர் சர்வீஸ் சொசைட்டி [என்.எஸ்.எஸ்] உருவாகியது. இவையெல்லாமே நாராயணகுருவின் இயக்கத்தின் நட்பு சக்திகளாகச் செயல்பட்டன.
நாராயணகுருவின் இயக்கம் சமூக உரிமைகளுக்கான வெகுஜனப்போராட்டங்களை முன்னெடுத்திருந்தது. பொது இடங்களில் நடமாடுவதற்கான உரிமை, பொதுக்கல்வி நிறுவனங்களில் கல்விகற்பதற்கான உரிமை, அரசு வேலைகளில் பங்கு ஆகியவற்றுக்கான கோரிக்கைகளை முன்வைத்து கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் நடத்திவந்தது. சில இடங்களில் வன்முறை நிகழ்ந்தாலும்கூட இவ்வியக்கம் பொதுவாக ஜனநாயக இயக்கமாகவே இருந்தது. விளைவாக திருவிதாங்கூர் மன்னருக்கு ஆலோசனைசொல்லக்கூடிய சட்டச்சபையில் ஈழவர்களுக்கும் புலையர்கள் உட்பட சாதிகளுக்கும் இடம் அளிக்கப்பட்டது.
சாதி ஒழிப்புப் போராட்டத்தையும் நாராயணகுருவின் இயக்கம் நடத்தியது. நாராயணகுருவின் முதற்சீடரும் கடுமையான நாத்திகருமான ‘சகோதரன்’ அய்யப்பன் 1917ல் கொல்லம் அருகே செறாயி என்ற இடத்தில் புலையர்களும் ஈழவர்களும் சேர்ந்து உணவுண்ணும் இயக்கத்தை ஆரம்பித்தார். சமபந்தி இயக்கம் என்று சொல்லப்படும் இவ்வியக்கம் பெரும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியபடி நடந்தது. இதை கலப்புத்திருமண இயக்கமாக ஆக்கி சகோதர இயக்கம் என்று பெயரிட்டார் அய்யப்பன். சகோதரன் என்ற இதழையும் நடத்தினார்
இந்தச்சூழலில்தான் வைக்கம் சத்தியாக்கிரகம் ஆரம்பித்தது. கேரளத்தில் உள்ள பெரும்பாலும் எல்லா ஆலயங்களிலும் ஈழவர்கள் கோயில் வீதிகளில் நுழைய அனுமதி கோரி போராடிக்கொண்டிருந்த காலம் அது. அதன் ஒருபகுதியாக திட்டமிடப்பட்டது வைக்கம். எஸ்.என்.டி.பி யோகத்தின் தலைவராக இருந்தவர் என்.குமாரன். செயலாளர் டி.கெ.மாதவன். இவ்விருவரும் இணைந்தே வைக்கம் போராட்டத்தைத் திட்டமிட்டார்கள்.
டி.கெ.மாதவன்
வைக்கம் வீரர் என்று எவரையாவது சொல்லவேண்டுமென்றால் அது டி.கெ.மாதவனை மட்டுமே. வைக்கம் போராட்டம் மட்டுமல்ல இந்தியாவின் ஆலயநுழைவுப்போராட்ட இயக்கத்தின் தொடக்கப்புள்ளியே அவர்தான். 1885ல் நடுத்தர ஈழவக்குடும்பத்தில் பிறந்த டி.கெ.மாதவன் இளவயதில் குலவழக்கப்படி சம்ஸ்கிருதமும் வைத்தியமும் கற்றார். பின்னர் ஆங்கிலக் கல்வி கற்றார். 1914ல் நாராயணாகுருவை மாதவன் சந்தித்தார். அது அவரது ஆளுமையை உருவாக்கியது. சமூக சீர்திருத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான ஆணையை அவருக்கு நாராயணாகுரு அளித்தார்.
1914 ல் மாதவன் தேசாபிமானி என்ற செய்தி இதழை சொந்த செலவில் ஆரம்பித்தார்.1917 முதல் அதை நாளிதழாக நடத்த ஆரம்பித்தார். நாராயணகுருவின் இயக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டு இன்றும் நடந்துவரும் மூன்று நாளிதழ்களில் முதலாம் நாளிதன் தேசாபிமானியே. இன்று தேசாபிமானி மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. தேசாபிமானியில் அலாயப்பிரவேசம் குறித்து பல கட்டுரைகள் எழுதிய மாதவன் 1916ல் ‘ஷேத்ரபிரவேசம்’ என்று ஆலயப்பிரவெசத்தைப்பற்றி ஒரு நூலும் வெளியிட்டார்.
1916ல் கல்கத்தாவில் அன்னிபெசண்ட் தலைமையில் நடந்த பாரதமகாசபா மாநாட்டில் பங்கெடுத்த மாதவன் ஆலயபிரவேசத்தைப்பற்றி ஒரு தீர்மானம் கொண்டுவரும்படி அன்னிபெசண்டிடம் கோரினார். அன்னிபெசன்ட் அதற்கு ஒத்துக்கொள்ளவே தீர்மானம் அன்னிபெசண்டால் கொண்டுவரபப்ட்டு நிறைவேற்றப்பட்டது. அதன் பிரதி திருவிதாங்கூர் மன்னருக்கு அனுப்பப்பட்டது.
1918ல் மாதவன் திருவிதாங்கூரின் சட்டச்சபையான ஸ்ரீமூலம் சபைக்கு ஈழவர் பிரதிநிதியாக தேர்வுசெய்யப்பட்டார். 1918ல் ஸ்ரீமூலம் சபையில் அவர் நிகழ்த்திய முதல் உரையே ஆலயநுழைவுரிமை சார்ந்ததுதான். அதன்பின்னர்தான் மாதவன் காங்கிரஸ் உறுப்பினரும் தலைவரும் ஆகி காந்தியைச் சந்தித்து அவரது வழிகாட்டுதலுடன் வைக்கம் போராட்டத்தை ஆரம்பித்தார். 1927 ல் எஸ்.என்.டி.பி அமைப்பின் பொதுச்செயலராக தேர்வுசெய்யப்பட்ட மாதவன் 1930ல் தன் ஐம்பத்தைந்தாம் வயதிலேயே மரணமடைந்தார்
நாராயணகுரு இத்திட்டத்துக்கு ஆரம்பத்தில் ஆதரவளிக்கவில்லை. காரணம் அவர் நேரடி மோதல்போக்கை குருவிரும்பவில்லை. நாராயண குருவின் இயக்கம் பல இடங்களில் நடத்திய போராட்டங்கள் வன்முறைக்கு வித்திட்டிருந்தன. மோதல் போக்கு தொடர்ந்தால் இயக்கம் ஆரம்பித்திருந்த பிரம்மாண்டமான கல்விப்பணிகள் பாதிக்கும் என்று நாராயணகுரு அஞ்சினார். வைக்கம் தெருவில் நுழைவதன் மூலம் உடனடியாக அடையப்பெறும் பலன்களும் ஏதுமில்லை என நினைத்தார்.
ஆனால் டி.கெ.மாதவன் முக்கியமான பல ஈழவத்தலைவர்களைக் கொண்டு சொல்லவைத்து நாராயணகுருவின் அனுமதியைப் பெற்றார். வன்முறையே நிகழாது என்று தனிப்பட்டமுறையில் நாராயணகுருவுக்கு அவர் வாக்குறுதி அளித்தார். ஆகவே நாராயணகுரு ஒத்துக்கொண்டார். ஆனால் எஸ்.என்.டி.பி நேரடியாக இதில் ஈடுபடக்கூடாது என விலக்கிவிட்டார்.
மாதவனின் தீவிரத்துக்குக் காரணமாக ஒரு வரலாற்றுப்பின்புலம் உண்டு. கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்னர் வைக்கம் ஆலயத்தின் நிலங்களை கவனித்துக்கொண்டிருந்த ஈழவர்கள் அங்குள்ள களங்களில் நுழைய அனுமதி கோரி ஒரு போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது திருவிதாங்கூரை பாலராமவர்மா மகாராஜா ஆட்சி செய்துகொண்டிருந்தார். போராட்டத்தை அறிந்த மன்னர் ஆலய வளாகத்தில் நுழைய அனுமதி அளித்தார்.காரணம் மன்னர் பாலராம வர்மா ஆங்கிலக்கல்வி கற்ற நாகரீக மனிதர்.
ஆனால் ஈழவர்கள் ஆலயவளாகத்தில் நுழைந்தபோது திருவிதாங்கூர் திவான் குஞ்சுகுட்டிப்பிள்ளை தளவாயின் ஆணைப்படி நாயர்படை கிளம்பிவந்து அத்தனை ஈழவர்களையும் கொன்று பின்னர் தளவாய்க்குளம் என்று பெயர் பெற்ற குளத்தில் போட்டுவிட்டது. மன்னரால் திவானை எதிர்க்க முடியவில்லை, ஏனென்றால் தளவாய்க்கு பிரிட்டிஷ் ரெஸிடெண்ட் துரையின் வலுவான ஆதரவு இருந்தது. மன்னர் பொம்மையாக இருந்தார்.
1905 ல் திருவிதாங்கூர் சட்டச்சபையில் ஈழவ உறுப்பினர்கள் வைக்கம் ஆலய வளாகத்துச்சாலையில் நுழையவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். ஈழவர்கள் புலையர்கள் சேர்ந்து நடத்திய ஜனநாயகப் போராட்டங்களின் விளைவாக முன்னரே பொதுச்சாலைகளை பொது மக்கள் அனைவருக்குமாக திறந்துகொடுக்க அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் வைக்கம் சாலை பிரச்சினை மத உரிமை சம்பந்தமானது என்று சொல்லப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. 1920 ல் சட்டச்சபை உறுப்பினராக இருந்த கேரள மகாகவிஞரும் எஸ்.என்.டி.பி செயலருமான குமாரன் ஆசான் பலமுறை இப்பிரச்சினையை சட்டச்சபையில் கிளப்பினார்.
திவான் ராகவையர் அப்போது சர்வ வல்லமைகொண்டவராக திருவிதாங்கூரை ஆட்சி செய்தார். அவருக்கு ஆங்கில ஆட்சியின் வலுவான ஆதரவு இருந்தமையால் மன்னர் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. திவானை நியமிக்கும் உரிமையையே ஆங்கில ஆட்சிதான் வைத்திருந்தது. மன்னர் மூலம்திருநாள் ராமவர்மாவைக் கண்டு வைக்கம் சாலைநுழைவுப்பிரச்சினையைச் சொல்ல பலமுறை டி.கெ.மாதவன் முயன்றார். ஆனால் அதனால் பயனேதும் விளையவில்லை. திவான் ராகவையருடைய ஆட்கள் தடையாக இருந்தார்கள்.
”குறைகளை பிரஜைகள் மன்னரைக் கண்டு சொல்லமுடியவில்லை என்றால் ஈழவ மக்கள் என்ன செய்யவேண்டும், திருவிதாங்கூரை விட்டு ஓடவேண்டுமா?” என்று டி.கெ.மாதவன் கேட்டபோது ”சரி, ஓடுங்கள்” என்று திவான் ராகவையர் பதில் சொன்னார். இந்தபதில்தான் உண்மையில் வைக்கம் போராட்டத்திற்கான பொறி.
சுவாரசியமான அம்சம் ஒன்றுண்டு. அன்றைய பிரிட்டிஷ் ரெஸிடண்ட் கர்னல் மக்காலே தெந்திருவிதாங்கூரில் கிறித்தவ நாடார்களின் உடைகளை அணியும் உரிமை போன்றவற்றில் நேரடியாக ஈடுபாடு காட்டினார். ஆனால் ஈழவர்களின் போராட்டங்களில் திவானுக்குச் சாதகமாக எதிர்நிலை எடுத்தார். காரணம் ஈழவர்கள் ஒட்டுமொத்தமாக கிறித்தவ மதத்துக்கு மாறிவிட்டால் உரிமைகளைப் பெற்றுத்தருவதாக 195 முதலே பேரங்கள் நடந்து வந்தன. நாராயணகுரு அதற்கு பெரும் தடையாக இருந்தார்.
டி.கெ.மாதவன் நாராயண இயக்கத்தின் முக்கியப்பொறுப்பில் இருந்துகொண்டே காங்கிரஸ் இயக்கத்திலும் பணியாற்றினார். ஆங்கில ஆட்சி நேரடியாக இல்லாமல் இருந்த காரணத்தால் திருவிதாங்கூரில் இந்திய தேசிய காங்கிரஸ் பெயரளவுக்கே அப்போது இருந்தது. வடகேரளத்தில் கிலாபத் போராட்டத்தை ஒட்டி காங்கிரஸ் மெல்ல மெல்ல வேரூன்றியது. கெ.பி..கேசவமேனன், பி.கேளப்பன் போன்ற தலைவர்கள் உருவாகி வந்தார்கள்.
1921ல் செப்டெம்பரில் திருநெல்வேலி காங்கிரஸ் மாநாட்டுக்கு பிரதிநிதியாக வந்த டி.கெ.மாதவன் காந்தியைச் சந்தித்து திருவிதாங்கூரில் உள்ள ஈழவர்களின் போராட்டத்தைப் பற்றி காந்தியிடம் விவாதித்தார். காந்தி சாதி உரிமைகளுக்கான போராட்டத்தை தனித்தனியாக நடத்துவது தேசியப்போராட்டத்தை ஒற்றுமையிழக்கச்செய்து பலவீனப்படுத்தும் என்று எண்ணினார். ஆனால் காந்தியையும் பேசி தன் தரப்புக்கு இழுக்க டி.கெ.மாதவனால் முடிந்தது. விளைவாக என்ன செய்யலாமென்று ஆலோசனை சொல்லும்படி காந்தி கேரள காங்கிரஸ் பிரிவுக்கு எழுதிக்கேட்டார்.
1923ல் காக்கிநாடா காங்கிரஸ் மாநாட்டில் டி.கெ.மாதவன் அன்றைய கேரள காங்கிரஸ் தலைவர்களான கெ.பி.கேசவமேனன், சர்தார் கெ.எம்.பணிக்கர், கேளப்பன் ஆகியோருடன் இணைந்து இப்பிரச்சினையை எழுப்பினார். சாதி ஒழிப்புக்காக போராடுவதை தேசிய விடுதலைப்போராட்டத்தின் பகுதியாக காகிநாடா காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. திருவிதாங்கூர் காங்கிரஸ் நேரடியாக இதில் ஈடுபட்டு போராட்டத்தை முன்னெடுக்க காந்தி கேட்டுக்கொண்டார்
1924 ஜனவரி 24 அன்று எரணாகுளத்தில் கே.வேலப்பன் தலைமையில் கூடிய காங்கிரஸ் கமிட்டி தீண்டாமை ஒழிப்பு போராட்ட அமைப்பு ஒன்றை உருவாக்கியது. அதில் டி.கெ.மாதவன் செயலர். குரூர் நீலகண்டன் நம்பூதிரி, டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர், கே. வேலாயுதமேனன் ஆகியோர் பிற உறுப்பினர்கள். டி.கெ.மாதவன் தலைமையில் ஒரு பிரச்சாரக்குழு அமைக்கப்பட்டது. 1924 பிப்ரவர் 28 ஆம் தேதி வைக்கத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. பொதுநடைபாதைகளிலும் கோயில்களிலும் நுழைய தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்து சாதிகளுக்கும் உரிமை உண்டு என்றும் அதற்கு எதிரான எந்தத் தடையும் மீறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதுதான் வைக்கம் போராட்டத்தின் தொடக்கமாகும்.
வைக்கம் சத்யாக்கிரகம் ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தது பெருங்கூட்டமாக சென்று வைக்கம் ஆலயத்தில் நுழைவதறகாகவே. ஆனால் அது பெரிய அடிதடியில் முடியும் என்பதுடன் அதன் மூலம் ஈழவர்களுக்கே தீங்கு வரும் என்று நாராயணகுரு அபிப்பிராயப்பட்டார். மேலும் போராட்டத்தை கேரளம் முழுக்க எல்லா கோயில்களிலும் முன்னெடுக்கவேண்டுமென்றால் வைக்கம் போராட்டத்தை பலநாட்களுக்கு நீளக்கூடிய ஒரு தொடர் நிகழ்வாக ஆக்குவதே நல்லது என காங்கிரஸ்தலைவர்களும் எண்ணினார்கள். வாய்ப்பாக சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அந்த தெருவில் நுழைவதற்கு அரசு தடை விதித்தது. தடையை மீறுவதே போராட்டம் என ஆகியது.
ஆகவே வைக்கம் ஆலயத்திற்கு அருகே ஒரு பந்தல் கட்டி அமர்ந்துகொள்வதென்றும் தினமும் சிறு சிறு குழுவாக சத்யாகிரகிகளை அந்த அவ்ழியாக அனுப்பி கைதாகச்செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 1924 மார்ச் 30ல் முதல் குழு சென்றது. ஒவ்வொருகுழுவிலும் ஒரு புலையர் ஒரு நாயர் ஒரு ஈழவர் வீதம் அமையும்படி அந்தப்போராட்டம் அமைக்கப்பட்டது. முதல்குழுவில் கொச்சாப்பி [புலையர்] பாகுலேயன் [நாயர்] கோவிந்தப்பணிக்கர் [ஈழவர்] ஆகியோர் இருந்தனர். போலீஸ் அவர்களை தடுத்து நாயரை மட்டும் உள்ளே விட முயலும்போது பிற இருவருடன் மட்டுமே தானும் உள்ளே போவதாகச் சொல்லி மூவருமே கைதாவார்கள் . இதுவே போராட்ட முறை.
சத்தியாக்கிரக பந்தலில் தினமும் பொதுக்கூட்டமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. செய்திகள் கேரளம் முழுக்க சென்று சேரும்படி பெரிய பிரச்சார வலையும் உருவாக்கப்பட்டது. தொடர்ச்சியாக நடந்த இந்த போராட்டம் ஏப்ரல் 5, 6 தேதிகளில் மட்டும் தடைபட்டது. அன்று உயர்சாதியினரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை ஒட்டி மீண்டும் போராட்டம் ஆரம்பித்தது.
தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக இந்த போராட்டம் தேசிய அளவில் கவனத்தை கவர்ந்தது. இந்தியா முழுக்க இருந்து சுவாமி சிரத்தானந்தா, வினொபா பாவே போன்ற முக்கியமான பலர் வந்து போராட்டத்தை பார்வையிட்டார்கள். ஆலயநுழைவுக்கு எதிராக பழமைவாதிகளும் மன்னரும் அரசும் உறுதியாக நின்றார்கள். ஈழவர்களின் தலைவர்களில் ஒருவராக இருந்த பி.கெ.குஞ்šராமன் ஈழவர்கள் உடனடியாக மதம் மாறவேண்டும் என்று தன்னுடைய நாளிதழான கௌமுதியில் ஒரு தலையங்கம் எழுதினார். சீக்கியமதம், கிறித்தவமதம், இஸ்லாம் மதம் மூன்றையும் பரிசீலிப்பதாக அவர் சொன்னார். ஒரு சிறிய ஈழவர் குழு பஞ்சாபுக்குச் சென்று சீக்கியர்களாக மதம் மாறியது.
அதைத்தொடர்ந்து சீக்கியர்களின் தூதுக்குழு ஒன்று வைக்கத்துக்கு வந்து ஈழவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த தகவல் பரவியதும் இஸ்லாமிய கிறித்தவ அமைப்புகளும் களமிறங்கின. பாரிஸ்டர் போத்தன் ஜோச·ப், பஜே மாதரம் மாத்துண்ணி, அப்துல்ரகுமான் சாகிப் போன்றவர்களும் களமிறங்கினார்கள். இந்தப்போராட்டமே மாற்று மதத்தவரால் இந்து மத அமைப்புகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று திவான் குறிப்பிட்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் 1924 ஏப்ரல் 14 அன்று ஈ.வே.ரா அவர்கள் தன் மனைவி நாகம்மையுடன் வந்து வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார். நடைமுறையில் ஈவேரா அவர்கள் வைக்கம் போராட்டத்தில் வகித்த பங்கு என்பது மிகக் குறைவானதே. அவர் தமிழ்நாட்டில் இருந்து எந்த ஓர் அமைப்பின் சார்பிலும் வரவில்லை. அவருக்கு தொண்டர்பின்புலமும் அன்று இருக்கவில்லை. அவர் காங்கிரஸின் தலைவர்களில் ஒருவர் என்ற அளவிலேயே அழைக்கப்பட்டார். ஆனால் அப்போதே அவர் காங்கிரஸின் மைய அமைப்புடன் மோதல்போக்கைக் கொண்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்றுதான் கோவை அய்யாமுத்து போன்றவர்களின் நூல்கள் காட்டுகின்றன. வைக்கம் போராட்டம் நடக்கும்போதே அவர் திரும்பி வந்து காங்கிரஸில் இருந்து பிரிந்துசெல்லும் போக்கை முன்னெடுத்தார்.
இந்தக் காலகட்டத்தில் அரசு வைக்கம் சாலைக்கு குறுக்கே தட்டுப்புச்சட்டகங்கள் அமைத்து விட்டிருந்தது. அந்த சட்டகங்களை கடக்க முனைந்த அத்தனைபேரும் கைதுசெய்யப்பட்டார்கள். போராட்டக்குழு அதிகமான போராட்டக்காரர்களை கைதாக்கி அரசுக்கு நெருகக்டி கொடுத்தது. ஈவேரா அவ்வாறு கைதானவர்களில் ஒருவர் மட்டுமே. அவர் எவ்வகையிலும் அன்று முக்கியமானவராக கருதபப்டவில்லை. அப்போது அவருக்கு வயது நாற்பத்தைந்து தான். தமிழக அரசியலில் கூட அவரது இடம் என ஏதும் இருக்கவில்லை. ஈவேரா அவர்கள் அவருக்கான மூக்கியத்துவத்தைப் பெற்றது அவர் காங்கிரஸை விட்டு விலகி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்த பின்னர்தான்.
வைக்கம் போராட்டம் குறித்து கேரளத்தில் வெளிவந்த அக்காலத்தைய நாளிதழ் ஆவணங்களில் அனேகமாக எங்குமே ஈவேராவின் பெயர் காணப்படவில்லை. ஈழவ இதழ்களான கேரளகௌமுதி போன்றவற்றில்கூட அவரது பெயர் பட்டியலில் ஒன்றாகவே உள்ளது. வைக்கம்போராட்ட வீரர்களான டி.கெ.மாதவன் போன்றவர்களின் வாழ்க்கைவரலாறுகளிலும் நினைவுகளிலும்கூட ஈவேராவின் பெயர் முதன்மையாக எடுத்துச் சொல்லப்படவில்லை. யங் இண்டியாவின் செய்திகளில் ஒரு இடத்தில்கூட ஈவேரா குறிப்பிடப்படவில்லை.
இவ்வாறு ஈவேரா பெயர் இல்லாததற்குக் காரணம் அவரை பிராமணர் மறைத்து விட்டதுதான் என்று அற்றது ஆதரவாளார் சொல்கிறார்கள். ஆனால் அன்றைய போராட்டச்செய்திகளை அதிகமாக வெளியிட்ட இதழ்கள் சிரியன் கிறித்தவ இதழ்களும் ஈழவ இதழ்களும்தான். அன்று யங் இன்டியாவின் வைக்கம் நிருபராக இருந்தவர் அப்துல் ரகுமான் சாகிப் அவர்கள். உண்மையில் தமிழ்நாட்டில் ஈவேரா அவர்கள் வைக்கம் வீரர் என்று சொல்லப்படுவது குறித்து கேரள ஈழவ வரலாற்றாசிரியரகளே நமுட்டுச்சிரிப்புடன்தான் எதிர்வினையாற்றுவார்கள். கேரளத்தில் வைக்கம் குறித்த எந்த வரலாற்றிலும் ஈவேரா பெயர் முக்கியமாக குறிப்பிடப்படுவதில்லை.
வைக்கம் போராட்டம் நாராயணகுருவின் இயக்கத்தின் விளைவு. காந்தியின் காங்கிரஸால் நடத்தப்பட்டது. அதை உருவாக்கி நடத்தி முடித்தவர் டிகெ.மாதவன். அதன்மூலம் ஈழவர்கள் காங்கிரஸில் செல்வாக்கு பெறவும் சுதந்திரத்திற்குப் பின்னர் அதிகாரத்திலேறவும் முடிந்தது. கேரளம் முழுக்க தீண்டாமை ஒழிப்பு ஆலய நுழைவு போராட்டங்கள் வலுப்பெற வைக்கம் வழிவகுத்தது.
[மேலும்]
மார்ச் 2009 ல் வெளியான கட்டுரை – இன்றைய காந்தி நூலில் இடம்பெற்றது- மறுபிரசுரம்