«

»


Print this Post

திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?-1


 

தி. பொ. கமலநாதன் எழுதிய ‘தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும்’ என்ற நூலை வாசித்துக் கொண்டிருந்தேன் (தமிழில் ஆ. சுந்தரம் எழுத்து பிரசுரம்) அதன் துணைத்தலைப்பு வித்தியாசமாக இருந்தது ‘மறைக்கப்படும் உண்மைகளும் கறை படிந்த அத்தியாயங்களும்’.

இந்நூலின் வரலாறு ஆர்வத்திற்குரியது 1980 களின் தொடக்கத்தில் பெங்களூரில் இருந்து வெளிவரும் ‘தலித் வாய்ஸ்’ என்ற ஆங்கில இதழ் திராவிட இயக்கம் தற்போது தலித்துக்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி தலையங்கம் ஒன்றை எழுதியது. திராவிட இயக்கம்இன்று தமிழ் நாட்டில் நடக்கும் தீண்டாமை முதலிய சாதிக் கொடுமைகளுக்கு எதிராக எதுவுமே செய்யாமலிருக்கிறது  என்று குற்றம் சுமத்தியது.

அதற்குப் பதிலாக திராவிட இயக்கத்தின் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஒரு நீண்ட மறுப்புரை எழுதி அதற்கு அனுப்ப அது வெளியிடப்பட்டது. அதில் திராவிட இயக்கத்தின் வழக்கமான கருத்து வடிவம் முன்வைக்கப்பட்டது. ஒன்று, சாதி வேற்றுமை தீண்டாமை முதலியவை பிராமணர்களால் உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுபவை. ஆகவே அதில் பாதிக்கப்படும் அனைவருமே சேர்ந்து பிராமணர்களை எதிர்க்க வேண்டும். பிற்பட்ட சாதியினரும் தலித்துக்களும் சேர்ந்து பிராமண எதிர்ப்பில் ஈடுபட வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் செய்யும் சாதிகொடுமைகளை பிராமணர்களின் பிரித்தாளும் சதியாக மட்டுமே பார்க்க வேண்டும்.

இரண்டாவதாக தலித்துக்களின் விடுதலைக்கான குரல் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தால் தான் உருவாக்கப்பட்டது. ஈ. வே. ரா அவர்கள் நடத்திய வைக்கம் சத்தியாக்கிரகத்திற்குப் பிறகே அத்தகைய விழிப்புணர்ச்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டது. தலித் விடுதலைக்கான போராட்டங்களை நடத்தியதும், அவர்கள் இன்று அடைந்துள்ள எல்லா நன்மைகளைப் பெற்றதும் திராவிட இயக்கத்தின் வழியாகவே.

இவ்விரு கருத்துக்களையும் விரிவாக மறுத்து கமலநாதன் அவர்கள் தலித் வாய்ஸ் இதழுக்கு நீண்ட கடிதம் எழுதினார். நீளம் கருதி அது பிரசுரிக்கப்படவில்லை. ஆகவே அதை அடிக்குறிப்புகள் சேர்த்து நூலாக பிரசுரித்தார். அந்நூலின் தமிழாக்கமே இந்த நூல்.

தலித்துக்களை அடிமைப்படுத்தியதிலும் இழிவு படுத்தியதிலும் பிராமணியத்திற்கு உள்ள பங்களிப்பைப் பற்றி கமலநாதன் அவர்களுக்கும் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் பிராமணியம் என்ற பொது எதிரியை முன்வைத்து தலித்துக்கள் மீது நேரடியான ஒடுக்குமுறையைச் செலுத்தும் பிற்பட்ட மக்களின் சாதிவெறியை மழுப்ப நினைப்பது தலித் உரிமைப் போராட்டத்திற்கு எதிரானது என்று கமலநாதன் வாதிடுகிறார். தலித் அடையாளத்தை திராவிடம் என்ற அடையாளத்தில் அடக்கி விடமுடியாது என்று கூறுகிறார்.

அவரது கூற்றின்படி தலித்துக்கள் அவர்கள் தலித்துக்கள் என்பதனால்தான் பிற்பட்டோர் உட்பட அனைத்து சாதியினராலும் ஒடுக்கப்படுகிறார்கள். ஆகவே அந்த அடையாளத்துடன் அவர்கள் ஒருங்கிணைவதே சிறந்த போராட்ட முறையாக அமையமுடியும். அதற்கு திராவிட இயக்கத்தின் பொதுமைப்படுத்தல்கள் தடையாக ஆகக்கூடும் என்கிறார்.

தலித்துகளின் உரிமைக்கான போராட்டத்தை 1920ல் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோதிருந்து ஆரம்பிப்பது என்பது தலித்துகளின் உரிமைக்காகப் போராடிய தலித் தலைவர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதும் அவமதிப்பதுமாகும் என்று வாதிடுகிறார் கமலநாதன். மிகவிரிவான ஒரு வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்கிக் காட்டுகிறார். இந்தியாவுக்கு வந்த மிஷினரிகளிடமிருந்து தலித் விடுதலைக்கான கருத்துக்கள் ஆரம்பிக்கின்றன. அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம். சி. ராஜா ஆகிய தலித் தலைவர்களின் அயராத உழைப்பால் தலித் விடுதலைக்கான கருத்தியல் சட்டகம் உருவாகிறது.

உண்மையில் தலித் விடுதலைப் போர் தனித்த இயக்கமாக வளராமல் செய்தது திராவிட இயக்கம். இதை பிற்பட்ட சாதியினரின் நலனுக்கான இயக்கமாக இருந்த திராவிட அரசியலுடன் இணைத்தல் வழியாக அதன் தனித்தன்மையையும் போர்க்குணத்தையும் இல்லாமலாக்கியது. திராவிட இயக்கத்தின் பிடியில் இருந்து விடுபட்ட பின்னரே தமிழ்நாட்டில் மீண்டும் தலித் இயக்கம் உருவாகி முக்கால் நூற்றாண்டு தாண்டிய பிறகும் தலித்துக்கள் மீதான ஒடுக்குதல்கள் அப்படியே இருந்தன. அவர்களின் கோரிக்கைகள் 1930 களில் எப்படி இருந்தனவோ அப்படியே நீடித்தன. அவற்றை 1980 களில் மீண்டும் புதிதாக கிளப்பி, போராட்டங்களை நிகழ்த்த வேண்டிய தேவை இருந்தது. அதன் விளைவாகவே இன்று தமிழகம் முழுக்க பலவகையான தலித் போராட்டங்கள் வேகம் கொண்டிருக்கின்றன.

அதாவது தங்களுடைய வரலாற்று ரீதியான போராட்டங்களையும் அதற்காக உருவாக்கிய கருத்துச் சட்டகத்தையும் திராவிட இயக்கம் எடுத்து வெறும் கோஷமாக மாற்றி பொருளிழக்கச்செய்தது என்றும் தங்கள் பிரச்சினைகளுக்காக அது எதையுமே செய்யவில்லை என்றும் தலித்தியக்கம் கூறுகிறது.

ஏறத்தாழ இதே வரலாற்றுச் சித்திரத்தை தமிழியர்களும் கூறுவார்கள். தமிழ் மொழி மற்றும் தமிழ்ப்பண்பாட்டின் தனித்தன்மை மறுக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் வரலாற்றின் தேவையால் உருவானது தமிழியக்கம். தமிழ்நாடு ஏறத்தாழ 300 ஆண்டுகளாக தமிழரல்லாதவர்களால் ஆளப்பட்டது. தமிழகத்தை ஆண்ட நாயக்கர்களின் ஆட்சியும், மராட்டியர் ஆட்சியும் தமிழ்நாட்டின் பொருளியலுக்கும் மதத்திற்கும் பெரும் பங்களிப்புகளை ஆற்றியிருக்கின்றன. தமிழகத்தில் இன்றுள்ள சாலைகள், சந்தைகள், ஏரிகள் பெரும்பாலானவை இவர்களின் ஆட்சிக்காலத்தில் உருவானவை. இன்று நாம் காணும் தமிழக ஆலயங்கள் பெரும்பாலும் இவர்கள் காலகட்டத்தில் புதுப்பிக்கப்பட்டு எழுந்தவை.

ஆனால் இந்த அன்னிய ஆட்சிக்காலத்தில் தமிழ்ப்பண்பாடு புரவலர்களை இழந்து மெல்ல மெல்ல அழிய ஆரம்பித்தது. தமிழிசை கைவிடப்பட்டு மருவி கர்நாடக சங்கீதமாக ஆகியது. தமிழ் இலக்கியங்களை பேணிவந்த தமிழறிஞர் குடும்பங்கள் பேணுநரின்றி அழியவே தமிழ்நூல்கள் மறைந்தன. சம்ஸ்கிருதம் தெலுங்கு முதலியவை முன்னிறுத்தப்பட்டமையால் தமிழ் மொழிக்கலப்பு அடைந்து அதன் அழகை இழந்தது. இக்காலகட்டத்தில் தமிழின் மாபெரும் செவ்வியல் மரபு அனேகமாக மறக்கப்பட்டது. மதத்துடன் இணைந்திருந்த காரணத்தினால் பக்தி மரபு மட்டுமே உயிருடன் எஞ்சியது.

இந்திய மறுமலர்ச்சியின் காலகட்டத்தில் இந்தியா முழுக்க கிட்டத்தட்ட ஒரே சமயம் வட்டார மொழிகளைப் பற்றிய விழிப்புணர்வு உருவாகியது. அதே காலகட்டத்தில்தான் தமிழ்குறித்த விழிப்புணர்வு உருவாகியது. ஆங்கிலக்கல்வி மூலம் பண்பாட்டுப் பிரக்ஞை பெற்ற ஒரு  புதிய தலைமுறை உருவாகி வந்ததே இதற்கு முதற்காரணம். அவர்கள் தங்கள் பண்பாடு குறித்த இழிவுணர்ச்சியை உதறி பெருமிதத்தைப் பெற ஆரம்பித்தார்கள். விளைவாக தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்கள் மீட்கப்பட்டன. அதற்கு அன்று உருவாகி வந்த அச்சு, பதிப்பு முதலிய துறைகளும் உதவி புரிந்தன.

தமிழியக்கத்தை மூன்று தளங்களில் நிகழ்ந்த செயல்பாடுகளாகப் பிரிக்கலாம். 1) தமிழ் நூல்களை பதிப்பித்தல் 2) தமிழிசை இயக்கம் 3) தனித்தமிழ் இயக்கம்.

ஏட்டுச்சுவடிகளில் பேணப்படாது அழியும் நிலையில் இருந்த தமிழ் நூல்களை தேடிக் கண்டுபிடித்து பிழைதிருத்தம் செய்து பொருள் குறிப்பு உருவாக்கி சீராக நூலாக கொண்டு வந்ததே தமிழை மீண்டும் உருவாகிய பெரும்பணி என்று கூறலாம். உ. வே. சாமிநாதய்யரே இப்பணியின் முன்னோடியாவார். சி. வை. தாமோதரம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், வ. உ. சிதம்பரம் பிள்ளை,  வெள்ளக்கால் சுப்ரமனிய முதலியார், கெ.என்.சிவராஜ பிள்ளை, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை போன்றவர்களை இத்துறையில் பெரும்பணியாற்றிய முன்னோடிகள் என்று கூறலாம்.

தமிழிசையே கர்நாடக இசையாக மருவியது என்று இலக்கணப்படியும் வரலாற்றின்படியும் நிலைநாட்டுவதும், வழக்கொழிந்து போன தமிழ்ப்பண்ணிசையினை மீண்டும் புத்துருவாக்கம் செய்வதும், தமிழ்ப் பாடல்களை மீண்டும் புழக்கத்திற்குக் கொண்டுவருவதும், தமிழ் பாடல்களை புதிதாக உருவாக்குவதும் தமிழிசை இயக்கத்தின் பணிகள். இதில் முன்னோடி என்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதரைச் சொல்ல வேண்டும். அண்ணாமலை அரசர், பரிதிமாற் கலைஞர் , விபுலானந்த அடிகள், தண்டபானி தேசிகர், குடந்தை சுந்தரேசனார், கல்கி, டி.கெ.சிதம்பரநாத முதலியார் போல பல முக்கியமான அறிஞர்கள் இத்துறையில் பெரும்பணி ஆற்றியிருக்கிறார்கள்.

தமிழில் மறந்து விட்ட பிறசொற்களை விலக்குவது, தமிழின் தூய சொற்களை புழக்கத்திற்குக் கொண்டு வருவது, தமிழில் புதிய கலைச் சொற்களை உருவாக்குவது ஆகியவை இவ்வியக்கத்தின் பணிகள். மறைமலை அடிகளை இந்த இயக்கத்தின் முன்னோடி, வழிகாட்டி என்று கூறலாம். பரிதிமாற் கலைஞர், ரா. பி. சேதுப்பிள்ளை, திரு. வி. கலியாணசுந்தரனார் போன்றவர்கள் இவ்வியக்கத்தின் முதல்வர்கள்.

தமிழியக்கம் என்பது திராவிட இயக்கத்துடன் எவ்வகையிலும் சம்பந்தம் உடையதாக இருக்கவில்லை என்பதே வரலாறு. தமிழியக்கம் பெரும்பாலும் சைவச் சார்பு உடையது. அதன் முன்னோடிகளில் பலர் காங்கிரஸ் அனுதாபிகளும் கூட. அரசியலில் ஜஸ்டிஸ் கட்சியின் குழந்தையாக உருவாகி வந்ததே திராவிட இயக்கம். ஜஸ்டிஸ் கட்சிக்கு தமிழியக்கத்தில் பெரிய ஆர்வம் இருந்ததில்லை. காரணம் அதில் பெரும்பாலானவர்கள் தமிழர்களல்ல. சொல்லப் போனால் அதற்கு தமிழ் அடையாளமே இருக்கவில்லை. தமிழர், தெலுங்கர், மலையாளிகள் கூடி உருவாக்கிய இயக்கம் அது. அதன் தலைவர்கள் ஆங்கில மோகம் கொண்ட அன்றைய உயர்குடிகள். பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைத்து தங்களுக்கான நலன்களைப் பேணிக்கொள்ள முயன்றவர்கள்.

ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து திராவிட இயக்கம் உருவான காலத்தில் கூட அதற்கு தமிழியக்கத்தில் ஆர்வம் இருந்ததில்லை. அக்காலத்தல் ஈ. வே. ரா அவர்கள் தீவிரமாக ஆங்கிலத்தை ஆதரிப்பவராகவும் தமிழை காட்டு மிராண்டி பாஷை என்று கூறுபவராகவும் தான் இருந்தார். இது தமிழ் நீசபாஷை என்று கூறிய சனாதனிகளிடமிருந்து எவ்வகையிலும் வேறுபட்ட தரப்பு அல்ல. அந்த தரப்பில் இருந்து தமிழ்ப்பற்றை நோக்கி திடீரென்று ஒரு தாவலை நிகழ்த்தியது திராவிட இயக்கம். அதற்கு சி.என்.அண்ணாத்துரை ஒரு காரணம்.

தமிழியக்கத்தின் ஆரம்பகால அறிஞர்களில் பலர் பிராமணர்கள். ஆனால் விரைவிலேயே பிராமணரல்லாத உயர்சாதியினரின் இயக்கமாக அது மாறியது. குறிப்பாக வேளாளர், முதலியார். இவர்களின் பிராமண எதிர்ப்புப் போக்கு காரணமாக திராவிட இயக்கத்திற்கும் இவர்களில் சிலருக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு உருவாகியது. ஆனால் அக்காலகட்டத்தில் திராவிட இயக்கத்திற்கும் தமிழியக்கத்திற்கும் நடுவேதான் கடுமையான மோதல்கள் உருவாகி நீடித்தன. தமிழியக்க முன்னோடிகளில் பலர் ஈவேராவை தமிழில் ஈடுபாடற்றவர், தமிழை அழிக்கவந்த கன்னடர் என்றே எண்ணினார்கள், இன்றும் அக்கால கட்டுரைகளில் அந்த விமரிசனங்கள் குவிந்துகிடக்கின்றன.

ஆனால் தமிழியக்கத்தின் ஆயுதங்களை சிறப்பாக பயன்படுத்த ஆரம்பித்த சி. என். அண்ணாதுரை அவர்கள் விரைவிலேயே தமிழியக்கத்திற்கும் திராவிட இயக்கத்திற்குமான முரண்பாடுகளை இல்லாமலாக்கினார். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ போன்ற வரிகள் இந்தச் சமரசத்தின் வழிகளே. திருமூலர் வரியை கூறுவதன் மூலம் பகுத்தறிவையும் இழக்காமல் சைவத்தையும் இழக்காமல் ஒரு சமரசத்தை அண்ணாதுரை மேற்கொண்டார். பின்னர் தமிழியக்கத்தின் எல்லா கோஷங்களையும் திராவிடஇயக்கம் எடுத்தாள ஆரம்பித்தது.

இன்று திராவிட இயக்கம் தமிழியக்கத்தின் எல்லா கடந்த காலச் சாதனைகளுக்கும் உரிமை கொண்டாடுகிறது. தமிழ் நூல்களை மீட்டது, தமிழிசையை வளர்த்தது, தனித்தமிழைப் பரப்பியது எல்லாமே ஈவேரா வில் தொடங்கும் திராவிட இயக்கத்தின் சாதனைகள் என்று இன்று சாதாரணமாக மேடைகளில் பேசுகிறார்கள். தமிழியக்க முன்னோடிகளான உ. வே. சாமிநாதய்யர், ஆபிரகாம் பண்டிதர், மறைமலை அடிகள் போன்றவர்கள் மறக்கப்பட்டு விட்டார்கள்.

ஆனால் உண்மையில் திராவிட இயக்கம் தமிழுக்கு என்ன செய்தது? நிலையாக எதுவுமே செய்யவில்லை என்பதே உண்மை. மேடைகளில் ஆர்ப்பாட்டமாகப் பேசுவதற்கு தனித்தமிழியக்கத்தின் சொல்லாட்சிகளை கடன்பெற்று பயன்படுத்தி வெற்றிக் கண்டது அது. சி. என். அண்ணாதுரை அவர்களின் மேடைமொழி ரா. பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்களின் அடுக்குமொழிப் பாணியில் இருந்து கடன்பெற்றது  என்பதை நாம் காணலாம்.  அவரை ஒட்டி தமிழை அலங்காரமாகப் பயன்படுத்தும் பேச்சாளர்களின் பெரும் படை ஒன்று கிளம்பியது. அவர்களின் வாரிசுகள் இன்றும் உள்ளனர். இவர்களை வைத்தே தமிழை திராவிட இயக்கம் வளர்த்தது என்ற பாமர நம்பிக்கை உருவாகி நீடிக்கிறது.

தமிழியக்கத்தின் பணியை திராவிட இயக்கம் பரவலாக்கியது, மக்கள்மயமாக்கியது, அதனூடாக தமிழகத்தின் அரசியலில் ஒரு மாற்றத்தை உருவாக்கியது என்பதை மறுக்கமுடியாது. மக்களுக்கு செம்மைமொழியை கொடுப்பதன் வழியாக அவர்களின் ஜனநாயகமயமாதலில் பெரும்பங்கை அது ஆற்றியது என்பதும் அதற்காக தமிழகம் திராவிட இயக்கத்திற்குக் கடன்பட்டுள்ளது என்பதும் உண்மையே

ஆனால் சி.என்.அண்ணாத்துரை, மு.கருணாநிதி போன்றவர்களின் மொழிநடையில் தனித்தமிழ் மிகக்குறைவே என்பதை பலர் கவனிப்பதில்லை.  குறிப்பாக சி.என்.அண்ணாத்துரை அவர்களின் ஆரம்பகால பேச்சுகளில் கடினமான சம்ஸ்கிருதச் சொற்கள் புழங்கும். துவஜாரோகணம் போன்ற சொற்களைக்கூட அவரது உரைகளின் அக்கால பதிப்புகளில் காணமுடியும். அன்றும் தனித்தமிழியக்கவாதிகளே நல்ல தமிழ் பேசினார்கள்.

ஒரு மொழி வளரவும் வேர்விடவும் தேவையான அடிப்படைப் பணிகள் எதுவுமே தமிழில் திராவிட இயக்கத்தால் செய்யப்படவில்லை. திராவிட இயக்கம் போல மொழியரசியல் பேசியவர்கள் பதவியில் இல்லாத கேரளத்திலும் கர்நாடகத்திலும் செய்யப்பட்ட பெரும்பணியுடன் ஒப்பிடும்போது இது பரிதாபகரமான யதார்த்தம் என்பது புரியும்.

இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்ததும் எல்லா இந்திய மாநிலங்களும் மாநில மொழிகளின் வளர்ச்சிக்காக  திட்டங்கள் தீட்டி செயல்பட ஆரம்பித்தன. தமிழின் வளர்ச்சிக்காக அன்றைய காங்கிரஸ் அரசு மூன்று அடிப்படையான செயற்திட்டங்களை வகுத்தது. ஒன்று, தமிழை ஆட்சிமொழி ஆக்குவதற்கான கலைச்சொல்லாக்கம் இரண்டு, பேரகராதி தயாரிப்பு .மூன்று, தமிழில் கலைக்களஞ்சியம் கொண்டுவருதல், இம்மூன்று பணிகளையும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் செய்து முடித்தார்கள். இன்றும் தமிழில் செய்யப்பட்ட மாபெரும் மொழிவளர்ச்சிப் பணிகளாக அவை நீடிக்கின்றன.

தமிழின் வளர்ச்சிக்கு பணியாற்றியவர்களில் தி. சு. அவினாசிலிங்கம் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. கல்வியமைச்சராக பணியாற்றிய அவர் அக்காலத்தைய திறன்மிக்க பேரறிஞர்களை எல்லாம் இப்பணிக்கு தன்னுடன் இணைத்துக் கொண்டார். ஏறத்தாழ இக்காலகட்டத்தில் தான் தமிழகத்தின் மாபெரும் ஆரம்பக்கல்வி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தை இன்றும் பிற மாநிலங்களில் இருந்து ஒருபடி முன்னால் நிற்கச் செய்த இயக்கம் அது. தமிழ் ஆரம்பக்கல்வி முதல் உயர்தளம் வரை புத்தெழுச்சி கண்ட காலகட்டம் இதுவேயாகும்.

ஆனால் இன்று இந்தச் சாதனைகளை வரலாற்றில் இருந்து தோண்டி எடுத்து திரும்பத்திரும்பச் சொல்லி நிறுவ வேண்டியிருக்கிறது. திராவிட இயக்கத்தின் ஆர்ப்பாட்டமான மேடையுரைகளிலும் கூசாமல் செய்யப்படும் வரலாற்றுத் திரிப்புகளும் இந்த உண்மைகளை முற்றாகவே மழுங்கச் செய்து விட்டிருக்கின்றன. இன்றும் பெரிய அநீதி என்னவென்றால் காங்கிரஸின் பணி உட்பட இந்த தொடக்ககாலத்து தமிழ் மறுமலர்ச்சியின் சாதனைகளை எல்லாம் திராவிட இயக்கம் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடுகிறது என்பதே.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பேரகராதிக்கு இன்றுவரை ஒரு நல்ல மறுபதிப்பு கொண்டு வர பின்னர் வந்த திராவிட ஆட்சிகளால் இயலவில்லை. தமிழ்ப் பேரகராதிக்கு ஒரு மறு அச்சு கொண்டுவரக்கூட அவற்றால் முடியவில்லை. தமிழ்மொழிக்கு கடந்த ஐம்பதாண்டுக்கால திராவிட ஆட்சியில் செய்யப்பட்டது என எந்த பெரும்பணியும் கிடையாது. இதுவே நம் கண்முன் உள்ள உண்மையாகும்.

அதற்கு மாறாக நிகழ்ந்தது என்ன? எப்போதும் கவற்சியான மேடை உரைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள், ஆர்பாட்ட அறிவிப்புகள் மட்டுமே நிகழ்ந்தன. பெரும் திட்டங்கள் முன்வைக்கப்படும், ஆனால் அவை ஒரு போதும் எளிய முறையில் கூட நிறைவேற்றப்படாது. திராவிட ஆட்சியில் தமிழுக்கு என்று உருவாக்கப்பட்ட மிகப்பெரிய அமைப்பு என்றால் அது தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம்தான். அது கடந்த கால்நூற்றாண்டில் செய்த சாதனை என்ன என்று கேட்டால் சங்கடமான மௌனமே பதிலாக அமையும். அறிவிக்கப்பட்ட எல்லா திட்டங்களும் அரைகுறை முயற்சியாக முடிய இன்று செயலற்று பெறும் கட்டிடக்குவியலாக கிடக்கிறது அது.

இதே போன்றுதான் சென்ற காலங்களில் திராவிட இயக்கத்தால் நடத்தப்பட்ட உலகத்தமிழ் மாநாடுகளையும் கூறவேண்டும். பாமரர்கள் தவிர பிறர் எவரும் இந்த மாநாடுகளால் தமிழுக்கு ஏதேனும் நன்மை விளைந்தது என்று கூறமாட்டார்கள். திராவிட இயக்கத்தின் அடிபப்டை இயல்பே பெரும் திருவிழாக்களை நடத்துவதில்தான் இருக்கிறது. கூட்டம் ஆர்பபட்டம் அலங்காரம் என்றே அதன் மனம் செல்கிறது. அழுத்தமான ஆக்கப்பணிகளை அதனால் நீடித்தகால உழைப்புடன் ஆற்ற இயலாது.

பொதுத்தளத்தில் திராவிட இயக்கம் தமிழுக்குச் செய்த பணிகள் அனேகமாக ஏதும் இல்லை. இன்றும் தமிழில் தமிழ்வழிக்கல்வி சாத்தியப்படவில்லை. நேர்மாறாக எங்கும் எதிலும் ஆங்கிலம் மேலோங்கியது திராவிட இயக்க ஆட்சிக்காலத்திலேயே என தமிழியர்களே சொல்கிறார்கள். தமிழகத்தில் மெல்ல மெல்ல தமிழ் அழியும் நிலையிலேயே உள்ளது. தனிப்பட்ட முயற்சிகளினாலேயே தமிழை நிலைநிறுத்தும் பணிகள் நடக்கின்றன. இத்தனை பெரிய இயக்கமும் அரசும் இருந்த போதிலும் கூட அம்முயற்சிகளுக்கு மிக எளிய ஆதரவு கூட அளிக்கப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

திராவிட இயக்கம் செல்வாக்கு பெறுவதற்கு முன்னர் தமிழாராய்ச்சியின் ஒரு பொற்காலம் இருந்தது. உ. வே. சாமிநாதய்யர் முதல் தொடர்ச்சியாக இரண்டு தலைமுறைக்காலம் பிரமிக்கத்தக்க தமிழாராய்ச்சி நூல்கள் வெளிவந்தபடியே இருந்தன. இன்றும் கூட ஒரு தமிழ் வாசகன் அந்த ஆய்வுகளை பார்க்கும்போது அவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள ஈடிணையற்ற உழைப்பு  அயரச் செய்கிறது. ஆனால் திராவிட இயக்கம் வலுப்பெறும் தோறும் தமிழாய்வு வலுவிழந்தது. தமிழறிஞர்கள் அரசியல்வாதிகளாயினர். அரசியல் வாதிகள் தமிழறிஞர்கள் என்று அறியப்படலாயினர்.

திராவிட இயக்கத்தின் கல்வித்தளச் சாதனை என்றால் நமது கல்விப் புலத்தை முழுமையாகக் கைப்பற்றி அங்கே தமிழாய்வே நிகழாமல் செய்ததுதான். இன்று எந்த ஒரு இந்திய மொழியிலாவது ஒரு வருடத்தில் குறிப்பிடத்தக்க ஒரு ஆய்வுகூட வராத தேக்க நிலை உள்ளது என்றால் அது தமிழில்தான். எப்போதுமே தமிழாய்வுப் புலத்தைக் கூர்ந்து கவனிப்பவன் என்ற முறையில் இந்த வெறுமை எனக்கு பெரும் திகைப்பையே ஊட்டுகிறது. பழைய ஆய்வுகளை நகல் எடுப்பதே இன்று ஆய்வு என்று ஆகிவிட்டிருக்கிறது.

இன்று தமிழாய்வு நிகழ்வது கல்விப் புலத்திற்கு வெளியே தனிநபர்களின் அந்தரங்கமான ஈடுபாட்டின் விளைவாகத்தான். அவ்வப்போது குறிப்பிடத்தக்க நூல்கள் அவர்களிடமிருந்தே வெளிவருகின்றன. அவர்களில் சிலருக்கு திராவிட இயக்கம் குறித்து நல்லெண்ணம் இருக்கலாம். ஆனால் திராவிட இயக்கத்தில் இருந்து உருவாகி வரும் தமிழாய்வு என்று அனேகமாக ஏதுமில்லை.

மிகச் சாதாரணமான தலைமைத்துதிகள், கொள்கை விளக்கத்துண்டுப் பிரசுரங்களைத்தவிர இன்றுள்ள இருபெரும் திராவிட இயக்க அமைப்புகள் உருவாக்கும் இலக்கியமோ, ஆய்வோ என்ன என்று யோசித்துப் பாருங்கள். ஒரு வாசகனாக இத்தனை பெரிய திராவிட இயக்கம் அதன் பல லட்சம் தொண்டர்கள் பலகோடி ஆதரவாளர்கள் கோடானு கோடி பணம், அரசு அதிகாரம் ஆகியவற்றின் மூலம் உங்களுக்கு வாசிப்பதற்காக உருவாக்கியளித்த நூல்கள் எவை? எத்தனை தத்துவநூல்கள், எத்தனை இலக்கியபப்டைப்புகள்?

எந்த ஒரு மொழியும் அறிவுத்துறைகளின் புதிய போக்குகளை உள்வாங்கிக் கொள்ளும் போதும் இலக்கியம் மூலம் நவீன காலகட்டத்தை எதிர் கொள்ளும்போதும் மட்டுமே வாழும் மொழியாக இருக்க முடியும். திராவிட இயக்கம் அதன் தொடக்கம் முதல் இன்று வரை நவீன இலக்கியத்திற்கு எதிரான சக்தியாகவே இருந்துள்ளது. தமிழில் உருவாகி வந்த நவீன இலக்கியத்தை அது ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. இன்றுவரை  புதுமைபித்தனின் பெயரை எந்த திராவிட இயக்க அறிவுஜீவியும் கூறியதில்லை.

மாறாக திராவிட இயக்கத்தின் ஆர்வம் தமிழின் வணிக இலக்கியத்தின் உத்திகளை கட்சிப்பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவதாகவே இருந்தது. திராவிட இயக்கம் தமிழ்ச் சூழலை முழுக்க மூடியிருந்த சூழலில் அதை மீறி ஒரு சிறிய வட்டத்திற்குள் இலக்கியத்தில் ஈடுபட்டவர்களின் பிடிவாதம் மற்றும் அர்ப்பணம் மூலமே தமிழில் நவீன இலக்கியம் உருவாகி வந்தது. தமிழ் நவீன இலக்கியத்தின் மரபை சிற்றிதழ்கள்தான் உருவாக்கி பேணி முன்னெடுத்தன. மொத்தச் சிற்றிதழ் இயக்கமே திராவிட இயக்கத்தின் பரவலான பெரும் பண்பாட்டுக்கு எதிரான குறுங்குழுச் செயல்பாடுதான்.

இந்தக் குறுங்குழுவுக்குள் தான் தமிழில் உலக சிந்தனைகள் பேசப்பட்டன. கோட்பாடுகள் இறக்குமதியாயின. அறிவார்ந்த விவாதங்கள் நடந்தன. நீங்கள் இன்று பேசும் தமிழ்க் கலைச்சொற்களில் பெரும்பகுதி உருவாகி வந்தது. நீங்கள் இன்று தமிழின் இலக்கியச் செல்வங்கள் என எவற்றையெல்லாம் முன்வைக்கிறீர்களோ, எவற்றையெல்லாம் ரசிக்கிறீர்களோ அவையெல்லாம் இந்தச் சிறிய வட்டத்தால் உருவாக்கப்பட்டவை மட்டுமே. அவற்றை உருவாக்கியவர்கள் பணமோ அங்கீகாரமோ இல்லாமல் தங்கள் உள்வேகம் காரணமாகவே அவற்றை உருவாக்கினார்கள். எந்தவித கவனிப்பும் இன்றி மறைந்தார்கள். அவர்களின் வட்டத்திற்கு வெளியே தமிழ் தமிழ் என்று வெற்று ஓசையை எழுப்பியபடி ஊடகங்களை, மேடைகளை, கல்விப்புலத்தை நிறைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தது திராவிட இயக்கம்.

இந்த சிறிய அறிவியக்கத்தின் தொடர்ச்சியாக தன்னை உணரும் ஒருவர், இதன் விளைவுகளை அனுபவிக்கும் ஒருவர் ஒருபோதும் திராவிட இயக்கத்தின் மீது நம்பிக்கை கொள்ள இயலாது. பல வருடங்களுக்கு முன்னர் சிற்றிதழ்ச் சூழலுக்குள் திராவிட இயக்கத்தின் பெருமை பேசும் ஒரு சில குரல்கள் ஒலித்தன. உதாரணம் அ. இரா. வெங்கடசலபதி. ஆனால் அவருடைய ஆய்வுகளை நிகழ்த்துவதற்கும் விவாதிப்பதற்குமான களத்தை சிற்றிதழ்ச் சூழல்தான் தன் சிறிய வட்டத்திற்குள் உருவாக்கி அளித்தது. அவர் அந்த வாசகர்களை நம்பித்தான் பேசவேண்டியிருந்தது.

மாபெரும் பண்பாட்டு சக்தி என்று அவர் வருணித்த திராவிட இயக்கம் அவருக்கு எளிய ஒரு மேடையைக்கூட உருவாக்க வில்லை. இன்றும் அந்த தளத்தில் அவரைப்போன்ற ஓர் அறிஞருக்கு எந்த இடமும் இல்லை. திராவிட இயக்கமேடை அர்த்தமற்ற வெட்டிப்பேச்சுக்கானதாக மட்டுமே இருந்தது. திராவிட இயக்கம் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை முழுமைசெய்யக் கூட முயலவில்லை, தூரனின் கலைக்களஞ்சியம், வையாபுரிப்பிள்ளையின் பேரகராதி முதலிய பெருமுயற்சிகள் மதிக்கப்படவில்லை என்று அவரே கூறினார் பிறகு.

திராவிட இயக்கம் மேடைக்குத் தமிழை கொண்டுவந்தது என்று ஒரு பரவலான நம்பிக்கை உள்ளது. உண்மையில் இதுவும் ஒரு மூடநம்பிக்கையே. தமிழில் மேடையுரை என்ற வடிவம் திராவிட இயக்கம் உருவாவதற்கு முன்னரே உருவாகிவிட்டிருந்தது. அதற்கு நாம் பத்தொண்பதாம் நூற்றாண்டு சைவமறுமலர்ச்சி இயக்கத்திற்கே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். சைவத்தை வெகுஜன இயக்கமாக ஆக்கும் நோக்குடன் ஏறத்தாழ ஐம்பதாண்டுக்காலம் தமிழில் பரவலாக நடைபெற்ற அவ்வியக்கம்தான் தமிழ் மரபின் மாபெரும் பேச்சாளர்களை உருவாக்கியது

தமிழின் மேடையுரையின் முன்னோடி என்று சைவப்பேச்சாளரான ஞானியார் சுவாமிகளையே சொல்லவேண்டும். பின்னர் பெரும்பேச்சாளர்களாக ஆன திரு. வி. கல்யாணசுந்தரனார், மறைமலை அடிகள் போன்றவர்கள் அவரது பாணியை பின்பற்றியவர்களே. வாழ்நாளெல்லாம் ஒருநாள் கூட தவறாமல் மேடையில் பேசியவர் ஞானியார் சுவாமிகள். அடுத்த தலைமுறையில் ரா. பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலியவர்கள். அந்த மரபின் நீட்சியே குன்றக்குடி அடிகளார், புலவர் கீரன் முதலியவர்கள்.

தூயதமிழை அழகிய முறையில் மேடையில் பேசுவதற்கும் பெருவாரியான மக்கள் விரும்பும்படி சொற்பொழிவை எளிமையாகக் கொண்டு செல்வதற்கும் முயன்று பெருவெற்றி பெற்றவர்கள் இவர்கள். திரு. வி. க, மறைமலையடிகள் போன்றவர்களின் சுயசரிதைகளில் இவர்களின் கூட்டங்கள் எத்தனை பெரிய மக்கள் பங்கேற்புடன் நடந்தன என்று பதிவாகியிருக்கிறது. இவர்களின் உரை முறையை தானும் பின்பற்றியவர்தான் திராவிட இயக்கத்தின் ஆகப்பெரிய பேச்சாளரான சி.என்.அண்ணாதுரை அவர்கள்.

மேடைப்பேச்சில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு அது செம்மைமொழியை மக்களிடம் கொண்டுசென்றது, அரசியல் கருவியாகப் பயனப்டுத்தியது என்பது மட்டுமே. அதன் சீரிய விளைவுகளுக்கான இடத்தை திராவிட இயக்கத்திற்கு அளிக்கலாம். ஆனால் தமிழின் மேடைப்பேச்சு, செம்மைமொழிப் பயன்பாடு ஆகியவற்றுக்கான முழுப்பொறுப்பையும் திராவிட இயக்கம் எடுத்துக்கொள்வது பிழை.

மரபிலக்கியத்தை ரசிப்பதற்கும் மதிப்பதற்கும் திராவிட இயக்கம் கற்றுத்தந்தது என்பது கூட எந்தவகையில் சரி என்று பார்க்க வேண்டும். தமிழின் பிரம்மாண்டமான இலக்கியமரபில் ஒரு சிறுபகுதியை மட்டுமே திராவிட இயக்கம் கருத்தில் கொண்டது. சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், குறள் அவ்வளவுதான். தமிழிலக்கிய மரபின் ஆகப்பெரிய இலக்கிய சாதனையும் தமிழ்ப்பண்பாட்டின் மகத்தான பதிவுமான கம்பராமாயணம் திராவிட இயக்கத்தால் இகழ்ந்து ஒதுக்கப்பட்டது. ஈவேரா அவர்களும் அவரது வழிவந்த சி. என். அண்ணாதுரை அவர்களும் கம்பராமாயணத்தை ஆபாச இலக்கியம் என்று வசைபாடினர்.

அவர்களுடைய இலக்கிய நோக்கு மிக எளிய விக்டோரிய ஒழுக்கவியலால் ஆனதாக இருந்தது. அத்தகைய ஒழுக்கவியலை வைத்துக்கொண்டு எந்தப் பேரிலக்கியத்தையும் மதிப்பிட முடியாது, பைபிளைக்கூட புரிந்துகொள்ள முடியாது என்று அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. அந்த அளவுகோலை வைத்து சங்க இலக்கியத்தையும் நிராகரித்துவிட முடியும் என்றுகூட புரிந்துகொள்ள வில்லை. ஈவேரா அவர்கள் அந்த அளவுகோலை அப்படியே பயன்படுத்தி குறள், சிலப்பதிகாரம் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தபோது சி. என். அண்ணாதுரை அவற்றை மட்டுமாவது தக்கவைத்துக் கொள்வதற்காக தன் அளவுகோல்களை மழுப்பினார்.

தமிழின் பெரும் இலக்கியச் செல்வங்களான சீவகசிந்தாமணி, மணிமேகலை போன்றவை திராவிட இயக்கத்தின் எளிய இலக்கிய அணுகுமுறையால் மூடநம்பிக்கையை வளர்ப்பவை என புறக்கணிக்கப்பட்டன. தமிழின் பிரம்மாண்டமான பக்தி இலக்கிய மரபு முழுமையாக நிராகரிக்கப்பட்டது. சிற்றிலக்கிய காலகட்டம் ஒதுக்கப்பட்டது. காரைக்குடி சா. கணேசன் அமைத்த கம்பன்கழகம் போன்ற அமைப்புகளாலும் டி. கெ. சிதம்பரநாத முதலியார், நீதிபதி மு. மு. இஸ்மாயீல் போன்றவர்களாலும் கம்பராமாயணம் திராவிட இயக்கத்தின் எதிர்பிரச்சார அலையில் இருந்து மீட்கப்பட்டு தமிழர்களின் ரசனையில் அழுத்தமாக நிலைநாட்டப்பட்டது. அவ்வியக்கம் இல்லாமலிருந்திருந்தால் ஒருவேளை கம்பனை ஒரு தலைமுறை தொலைப்பதற்கு திராவிட இயக்கம் காரணமாக அமைந்திருக்கும்.

அதேபோல வைணவ இயக்கத்தாரால் பிரபந்தங்கள் பேணப்பட்டன. சைவத்திருமுறைகள் சைவர்களால் நிலைநிறுத்தப்பட்டன. சேக்கிழாரின் பெரியபுராணத்தை திராவிட இயக்கத்தின் தாக்குதல்களிலிருந்து மீட்கவும் பாரதியை திராவிட இயக்கத்தின் திரிப்புகளில் இருந்து மீட்கவும் தொடர்ச்சியான அறிவியக்கங்கள் தேவைப்பட்டன. இன்று கூட தலைமுறை தலைமுறையாக உருவாகிவரும் ஆய்வாளர்கள் பாரதி குறித்த அவதூறுகளுக்கு ஆய்வுகள் மூலம் பதில் கூறியபடியே உள்ளனர்.

கடைசியாக திராவிட இயக்கம் கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக வலிந்து முன்னிறுத்திய நூல்களான திருக்குறள், சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் ஆகியவற்றுக்கு அவ்வியக்கம் இதுவரை உருவாக்கிய ஆய்வுகள் என்ன என்று பார்க்கும் எவரும் ஆழமான அயர்ச்சியை மட்டுமே உணர்வார்கள். குறள் மீது இதுவரை நடந்துள்ள ஆய்வுகளில் முக்கியமான அனைத்துமே திராவிட இயக்கத்திற்கு முன்னரே உருவாகிவிட்டவை. குறளுக்கு இன்று கிடைக்கும் தரமான ஒரே ஆய்வுப் பதிப்பு கி. வா. ஜகன்னாதன் அவர்களால் செய்யப்பட்டது.

உண்மையில்  அவற்றையும் கருத்தில் கொண்டு பார்த்தால் கூட தமிழில் குறள் குறித்து இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகள் முற்றிலும் போதாதவை என்பது ஓரளவு ஆய்வு நோக்குடன் அணுகக் கூடிய எவருக்குமே தெரியவரும். குறளுக்கும் இந்திய இலக்கிய மரபுக்கும் இடையேயான தொடர்புகள், குறளுக்கும் சமண மரபுகளுக்கும் இடையேயான தொடர்புகள், குறளுக்கும் இந்திய தர்மசாஸ்திரங்களுக்கும் இடையேயான தொடர்புகள், குறளுக்கும் இந்தியாவின் நாட்டார் நீதி மரபுகளுக்கும் இடையேயான தொடர்புகள் என ஆய்வு செய்யப் படாத பகுதிகள் விரிந்து பரந்து கிடக்கின்றன. ஏன், குறளுக்கும் சீவகசிந்தாமணிக்கும் இடையே உள்ள உறவுகளை இன்றும் ஆராயப்படாத ஒரு களம் தான்.

சிலப்பதிகாரம் குறித்து கூறவே வேண்டியதில்லை. இன்றுவரை ஒரு நல்ல ஆய்வுப்பதிப்புகூட சிலப்பதிகாரத்திற்கு இல்லை. ஔவை துரைசாமிப்பிள்ளைக்குப் பின் சங்க இலக்கியம் குறித்து நேரடியான ஆய்வுகளே நிகழவில்லை. முந்தைய ஆய்வுகளை பிரதிசெய்யும் ஆய்வுகளே உள்ளன. சங்க இலக்கியங்களுக்கும் இந்திய தொல் இலக்கியங்களுக்குமான ஒப்பீடு, இந்திய நாட்டாரியல் இலக்கியத்துடன் சங்க இலக்கியத்தை ஒப்பிட்டு ஆராய்தல் போன்ற பெரும்பணிகள் அப்படியே விடப்பட்டிருக்கின்றன. திராவிட இயக்கம் உருவாக்கியதெல்லாம் சில மேலோட்டமான விளக்கஉரைகளை மட்டுமே.

பிற ஆய்வுத்தளங்களில் தமிழ்ப் பண்பாடு மற்றும் வரலாற்று ஆராய்ச்சிக்கான முயற்சிகள் எவையும் நிகழவில்லை. இத்தகைய முழுமையான செயலிழப்பு எப்படி ஏன் நிகழ்ந்தது என்பதே கேட்கக் கேட்க ஆற்றாமை எழும் ஒன்றாக உள்ளது. தமிழகத்தின் வரலாற்றாய்வு நீலகண்டசாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் காலகட்டத்திற்குப் பிறகு எதுவுமே நிகழாமல் உறைந்து விட்டது. அவர்கள் தமிழக வரலாற்றின் ஒரு கோட்டுச்சித்திரத்தை உருவாக்கி கால அட்டவணை போட்டுக் கொடுத்தார்கள். அது ஒரு முன்வரைவு. அதை நுண் வரலாறுகளால் நிரப்பும் பெரும்பணி முற்றிலுமாக கைவிடப்பட்டுவிட்டது.

இன்று கல்விப்புலம் சார்ந்து வரலாற்றாய்வே நிகழவில்லை. வரலாற்றாய்வில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தனிநபர் உதிரி முயற்சிகள் மட்டுமே நிகழ்கின்றன. ஆனால் உண்மையான வரலாற்றாய்வு என்பது அப்படி தனிமுயற்சிகளால் செய்யபப்ட முடியாது. ஒவ்வொருவரும் ஒரு இடத்தை நிரப்ப ஒரு கூட்ட்டுச்செயல்பாடாக, ஓர் அறிவியக்கமாக  வரலாற்றாய்வு நிகழ்த்தப்படவேண்டும். அகழ்வாய்வு,நாணய ஆய்வு, கல்வெட்டாய்வு  போன்றவற்றுக்கு மேலாக  நாட்டாரியல், மானுடவியல்,சமூகவியல், மொழியியல், குறியியல் போன்ற பலதுறைகளை இணைத்து அந்த ஆய்வுகள் செய்யப்படவேண்டும். அது கல்வித்துறையாலேயே செய்யப்பட முடியும். தமிழில் அதற்கான வாய்ப்புகள் ஏதும் இப்போது தெரியவில்லை.

கடந்த ஐம்பதாண்டுக்காலத்தில் பிரம்மாண்டமான திராவிட இயக்கத்தின் தரப்பில் இருந்து தமிழக வரலாற்றாய்வில் நிகழ்ந்த பங்களிப்பு என்று எதுவுமே கிடையாது. திராவிட இயக்கத்தின் பணி என்று உலக அரங்கில் எடுத்து வைக்கத்தக்க ஒரே ஒரு ஆய்வுநூல்கூட எழுதப்பட்டதில்லை, முன்வைக்கப்பட்டதுமில்லை. சுட்டிக்காட்டும்படியான ஒரே ஒரு திராவிட இயக்க வரலாற்றாசிரியர்கூட கிடையாது என்பதே உண்மை. திராவிடவியல் சார்ந்த ஆய்வுகளை குறிப்பிடும்படிச் செய்த அமைப்பு என்றால் வி.ஐ.சுப்ரமணியம் அவர்களின் முயற்சியால் சந்திரபாபு நாயிடுவின் ஆதரவில் ஆந்திரத்தில் அமைந்த குப்பம் திராவிடப் பல்கலையைதான் சொல்லவேண்டும்.

தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே அதிகமான அளவுக்கு கல்வெட்டுகள் கண்டடையப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகளில் முக்கால்பங்கு இன்னமும் பரிசோதிக்கப்பட்டு நூல்வடிவம் பெறவில்லை. ஆய்வாளர்களும் நிதியும் இல்லை என்கிறார்கள். இக்கல்வெட்டுகளை ஆராய்ந்து வரலாற்று தகவல்களை உறுதிசெய்யும் பெரும்பணி அதற்குப் பின்னர்தான் தொடங்கப்பட முடியும். தமிழக வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட ஜேசுசபை குறிப்புகள், இலத்தீன், போர்ச்சுகல், ஜெர்மானிய மொழிகளில் ஏராளமாக இன்று பொதுவாசிப்புக்கு வந்துள்ளன. அவை எதுவும் இன்னமும் தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. அவை சார்ந்து ஆய்வுகளும் செய்யப்படவில்லை.

தமிழகம் சார்ந்த காலனியாதிக்க காலகட்டத்து ஆவணங்கள் பிரெஞ்சு, டச்சு, ஆங்கில மொழிகளில் ஏராளமாக உள்ளன அவை எதுவும் இன்றும் தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டு முதல் தமிழக ஆலயங்கள், ஆலயச்சொத்துக்கள் குறித்த நீதிமன்ற ஆவணங்கள் பல்லாயிரம் உள்ளன. அவை இன்னமும் மொழியாகம்செய்யபப்டவோ ஆய்வுக்குறிப்புகளாக தொகுக்கப்படவோ இல்லை.  வள்லலாரின் அருட்பா மருட்பா வழக்கு சம்பந்தமாக மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் இருந்து  மூல ஆவணங்களை எடுத்து ப.சரவணன் செய்துள்ள ஆய்வு அவை எத்தனை பெரிய பொக்கிஷங்கள் என்பதைக் காட்டுகின்றது.

ஏன், தமிழக வரலாறு சார்ந்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பல நூல்கள் இன்னும் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை. மலையாளத்திலும் கன்னடத்திலும் எல்லாம் இந்த மொழியாக்கங்களை அரசாங்கத்தின் பிரசுரத்துறையே செய்து விடுகிறது. கேரள அரசின் பிரசுரத்துறை கேரளம் குறித்த முக்கியமான நூல்களை அனைத்தையுமே மலையாளத்திற்கு கொண்டு வருகிறது. வருடம்தோறும் கிட்டத்தட்ட நூறு நூல்கள்! அவை மிகப்பெரிய ஓர் அறிவுக்குவை. அத்தகைய அமைப்போ முயற்சியோ நமது அரசு சார்பிலும் செய்யப்படவில்லை. பல்கலை கழகங்கள் சார்பிலும் செய்யப்படவில்லை. இத்தனைக்கும் ‘செம்மொழியா’ன தமிழில் மலையாளத்திற்குச் செலவிடப்படுவதைவிட பத்து மடங்கு அதிகமான தொகை வருடம் தோறும் செலவிடப்படுகிறது.

தமிழகத்தில் மாபெரும் ஆவணச் சுரங்கங்கள் இரண்டு உள்ளன. ஒன்று சென்னையில் உள்ள மக்கின்சி கீழ்த்திசை கைப்பிரதி ஆவண மையம். இன்னொன்று தஞ்சை சரஸ்வதி மகால் ஆவண மையம். இங்குள்ள தமிழ் சார்ந்த ஆவணங்களில் மிகச்சிறு பகுதியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளது என்று சொல்லப்படுகிறது. மீதிப் பெரும்பகுதி இன்னமும் தீண்டப்படாமல் தூங்குகின்றது.

ஏன் தமிழின் பொக்கிஷங்கள் என்று சொல்லப்படும் பல மகத்தான ஆக்கங்கள் திராவிட இயக்கம் கோலோச்சிய இந்த அரைநூற்றண்டுக்காலத்தில் மறுபதிப்பே வராமல் மறைந்தன என்றால் என்ன சொல்ல? ஆபிரகாம் பண்டிதரின் கர்ணாமிர்த சாகரம் எத்தனை பதிப்பு வந்திருக்கிறது என்று பார்த்தால் வியப்பே ஏற்படும். விபுலானந்தரின் யாழ்நூல் சிவதாசன் என்ற ஒரு புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் வணிகரால் பல வருடங்களுக்குப் பின்னர் மறு பதிப்புசெய்யப்பட்டது.

இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு மாபெரும் நாட்டார் பண்பாடு உள்ள பகுதி தமிழ்நாடு. தமிழக நாட்டார்கலைகளை மூட நம்பிக்கை சார்ந்தவை என்று திராவிட இயக்கம் புறமொதுக்கி அழிக்கத் தலைப்பட்டது. நாட்டார் கலைகள் அழிந்து அங்கே சினிமா சார்ந்த கேளிக்கைகள் இடம்பிடித்தமைக்கு திராவிட இயக்கத்தின் இந்த முதிரா பகுத்தறிவு வாதம் ஒரு முக்கியமான காரணம்.

ஆனால் திராவிட இயக்கத்தைவிட இறைமறுப்பு கொள்கை கொண்டிருந்த போதிலும் இடதுசாரிகள் நாட்டார்கலைகளை மக்கள் கலைகளாகப் பேணி முன்னெடுத்தனர். நாட்டார்கலைகளை புரிந்து கொள்ளவும் பேணவும் வழியமைத்த கருத்துக்களை உருவாக்கிய முன்னோடி என்று இடதுசாரி ஆய்வாளர் நா. வானமாமலை அவர்களையே குறிப்பிடவேண்டும். பி. எல்.சாமியை தமிழக நாட்டுப்புறவியலின் தந்தை என்றே சொல்லலாம். இன்றும் கூட அவர்களின் ஆய்வுகள் மறுபதிப்புகள் வராமல், அரசு அமைப்புகளால் கவனிக்கபடாமல்தான் உள்ளன.

இத்தனை விரிவாக நான் உருவாக்கும் இச்சித்திரத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் எல்லாமே மிக அடிப்படையானவை. எவரும் எளிதாக உறுதிசெய்து கொள்ளக் கூடியவை. தமிழகத்தில் கடந்த ஐம்பதாண்டுக்காலத்தில் பண்பாட்டுக்கும் மொழிக்கும் பெரும் பங்களிப்பாற்றியவர்கள் அத்தனை பேருமே திராவிட இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள். இவர்கள் திராவிட இயக்கத்தின் பேரலையை மீறி, புகழோ பணமோ பெறாமல் தங்கள் சுய அர்ப்பணிப்பால் மட்டுமே தங்கள் பணியை ஆற்றியவர்கள். இவர்களை எல்லாம் நான் அங்கீகரித்து இவர்களின் நீட்சியாக என்னை நிறுத்திக்கொள்ள விழைகிறேன். ஆகவே தான் திராவிட இயக்கத்தை நிராகரிக்கிறேன்

[மேலும்திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்? 2  ]

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/5781/

27 comments

1 ping

Skip to comment form

 1. sureshkannan

  செம்மொழி மாநாடு நடைபெறவுள்ள சூழ்நிலையில் இதுவோர் முக்கியமான கட்டுரையாகத் தெரிகிறது. நியாயமாகப் பார்த்தால் இக்கட்டுரை அம்மாநாட்டில் வைத்து விவாதிக்கப்பட வேண்டியதே. ஆனால் நாம் அதை கற்பனையில் நிகழ்த்திக் கொள்ளும் சூழலே உள்ளது. மொழி குறித்து செயற்கையான மிகைஉணர்ச்சியை தூண்டியது மாத்திரமே திராவிட இயக்கம் செய்தது, மாறாக அறிவு சார்ந்த எந்தவொரு முயற்சியையும் அது செய்யவேயில்லை என்பதற்கான தடயங்களை இக்கட்டுரையில் காண முடிகிறது.

  (இப்படி போட்டு சாத்து சாத்துன்னு சாத்திட்டு தொடரும் வேறயா?) :-)

 2. Ramachandra Sarma

  நல்ல கட்டுரை. தெளிவான வாதங்கள். மிகவும் அபத்தமான பிரதிவாதங்களையும், விதண்டாவாதங்களையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். புலவர் கீரன் அவர்கள் குறித்து நீங்கள் குறிப்பிட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என் சிறுவயதில், சிதம்பரத்தில் அவர் பதினெட்டு நாட்கள் மகாபாரதம் கதை சொன்னார். நாள்தவறாது அவரது பேச்சை கேட்பேன். நான் மிகவும் ரசித்ததொரு தைலதாரைபோலொழுகும் பேச்சு.

 3. kuppan_yahoo

  நல்ல கட்டுரை.

  உண்மையில் திராவிட இயக்கங்களின் குறிக்கோள் பார்ப்பன எதிர்ப்பு. அன்று நேரடியாக அதை பெரியாரோ, அண்ணாவோ சொல்லி இருந்தால் மக்களிடம் எடு பட்டிருக்கிறது. அன்றைய ஆதிக்க சக்திகளும் அந்த இயக்கங்களை வளர விட்டு இருக்காது.
  அதனால் தான் தமிழ் வளர்ப்பு என்ற உப கொள்கை.,

  முக்கிய குறிக்கோள் பெருமளவு நிறைவேறி இருக்கிறது என்றே சொல்லலாம். கலைஞர் கூறும் உதாரணம் போல , ஒரு காலத்தில் வங்கிகளிலும், அரசு அலுவலகங்களிலும், கலூரிகளிலும் பணி புரிபவர்கள் பெயர்கள் என்றால்- சீனிவாசன், ராமனுஜன், லலிதா, காயத்ரி என்றே இருந்தன.;

  திராவிட இயக்கங்களுக்கு பிறகு அவை ராமையா முனிசாமி, பேச்சி அம்மாள் என்று மாறி இருக்கின்றன.

  அதே போல மாவட்ட ஆட்சி தலைவர், தாசில்தார், காவல் துறை கண்காணிப்பாளர் போன்ற பல பதவிகளில் கூட இன்று திராவிடர்களை (பார்ப்பனர் அல்லாதொரை௦ காண முடிகிறது. இதுதான் திராவிட இயக்கங்கள் செய்த சாதனை.

  ஆனால் இந்த கொள்கை ஸ்டாலின், அழகிரி காலங்களில் மாறலாம். இப்போதே மாறி வருகிறது.

  திராவிட இயக்கங்கள் இல்லாவிடில் இன்றும் நாம் மவுண்ட் ரோட், கதீட்ரல் ரோடு, எல்டாம் ரோட் என்றே சொல்லி கொண்டு இருப்போம், இன்று அண்ணா சாலை, அவ்வை சண்முகம் சாலை என்று சொல்லி கொண்டு இருக்கிறோம்.

  சீரியல் என்று சொல்ல வைக்காமல் நெடும் தொடர் என்று சொல்ல வைத்து இருப்பது தமிழுக்கு நாங்கள் ஆற்றும் சேவை இல்லையா.

  ஜோடி நம்பர் என்று சொல்லாமல் மானாட மயிலாட என்று சொல்கிறோமே, தமிழுக்கு நாங்கள் செய்யும் இந்த பங்களிப்பை ஏன் ஒத்துக் கொள்ள மறுக்கிறீர்கள்.

  ,

 4. மதி.இண்டியா

  எதிர் கருத்துக்கு ஆளேயில்லாமல் பொய்யை மட்டுமே திரும்ப திரும்ப பேசி திராவிட இயக்கமே தமிழகத்தின் கடைதேற்றல் என பதியவிட்டார்கள் ,

  இனியாவது இதுபோன்ற கட்டுரைகள் வெளிவந்து உண்மை பேசட்டும் (ஆனால் பாலா போன்ற உங்கள் நண்பர்கள் உணர்ச்சிவசப்டாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்)

 5. pgomat

  எனக்கு தெரிந்த வரை திராவிட கழகம் ஒரு தமிழ் அடிப்படை வாதத்தை மட்டும் முன்னிறுத்தி உள்ளது. அடிப்படைவாதம் உள்ள இடத்தில அறிவும், இதயமும் அதிகம் வேலை செய்யாது ( வஹாபி இஸ்லாத்திடம் சுபி வளராது, இந்து அடிபடைவததில் தியானம், சரணாகதி வளராது). எனக்கு தெரிந்து என் வயதொத்த (X Generation) பலருக்கு தமிழ் சரியாக தெரியாது. தமிழன் என்ற பற்று மட்டுமே. நான் உட்பட.

  பிராமணர் மற்றும் அல்லாமல் தமிழ் முக்கிய உயர் ஜாதிகளில் (சைவர்கள், முதலியார், செட்டியார், இன்ன பிற ) வீட்டில் தமிழ் விளையாண்டாலும், ஜாதியும் கூடவே அதிகம் இருந்தது. எனக்கு தெரிந்து அது திராவிட கழகத்தால் பெரிதும் குறைந்தது. என் கண் முன்னே நிறைய பிற்படுத்த பட்ட மக்கள் நல்ல நிலை அடைவதை கண்டுள்ளேன். தலித் முன்னேற்றம் பெரிதாக இல்லை என்பது உண்மையே. எனக்கு தெரிந்து திராவிட இயக்கம், மத்திம ஜாதிகளை அதிகம் கவனம் செலுத்தி ஒரு அடுக்கு மேலே கொண்டு வந்தது என எண்ணுகிறேன்.

 6. KALIRAJ

  மிகவும் அபத்தமான பிரதிவாதம் (In your words)::

  What is the main objective of this post?. DK didn’t care about Dalit welfare or it didnt’ care about Tamil (language)? or both?

  In my view, “Kadavul Maruppu” is the first step towards equality realization. And periar marched in that path as a leader. For a human being with the available lifetime it is not possible to solve all the social discrebencies. And he strongly believed, FAITH on GOD is the reason for all discrimination & he fought against that only. I too personally believe in that..they way of my thought process changes after & before “realization”. I’ve seen many people in my life who talked/even thought about equalizm only after they took “Kadavul Maruppu” decision.

  You can argue on his way of attempting those problems.. but we can try to understand his Aim on the same. A person wouldn’t have spent his entire life (not for getting any post/recognition) for this, unless he is really want to help to society. I believe periar in that way.
  You are talking about Anna & Kalaigner – they are merely present politicians but Periar is not under that category. He realized himself about God & related things. And those who realizes that can admire periar. In present situation, there can be very few even in DK in that sense. Mostly they are all just followers of Periar – which is not “Pagutharivu”. If a guy really understood about the reason for Periar’s views, he could now easily can move to next step where it could be fight against all class of people who are against equalizm – neverthless he is brahmin or non-brahmin. But unfortunatly there is none or very few who can’t do much.

  In my view (could be derived from Periar way), any living thing shoud not get affected because of non-living things. Here all god, religion (all religions), language etc., will come under non-living things category. That is what I learned from periar. Plz talk about Dalit’s freedom & mother tongue superiatly to other state guys — then you’ll realize really what Periar did. No community name behind leaders here.. right?. I believe Jeyamohan also mentioned about “Anti-Dalit” mentality is treated as worst thing in tamil nadu. (But in other way, it is not the case for Anti-Brahmin mentality. But it is purely not because of Periar. It is because there are no other guys/leaders move that fight to the next level).
  As a last word, I just wanted to comment that – Plz don’t relate periar & present DK derived parties– which much & much differs from Periar way-eventhough they are telling that they are all followers of Periar.

  Regards,
  Kali

  BTW, can any one suggest me how to type in tamil here??

 7. SAMINATHAN B

  அநாகரிகத்தில் தொடங்கி அசிங்கமான முறையில் வளர்ந்து இன்று அராஜக நிலை எட்டி இருக்கும் ஒரு தமிழக துயரம்தான். திராவிட கழகம் அதன் பல்வேறு அரசியல் சமுக வடிவங்கள் இங்கே புழங்கி வருகிறது.
  நான் இவற்றில் பல்வேறு விசயங்களை எனது நண்பர்களிடம் விவாதித்தது உண்டு. முட்டாள் தனம் மட்டுமே மிகவும் அறிவு தளமானது என்பதை அதிகாரம் முலம் தொடர்ந்து நிறுவி உள்ளதை தமிழ் செம்மொழி மாநாட்டு குழு மற்றும் நிகழ்வுகள் மூலமே நாம் தெரிந்து கொள்ள முடியும். சமுக அரசியல் தளத்திலும் அவர்களது சாதனை மற்றும் திறன்கள் பற்றியும் விவாதிப்பது மிகவும் முழுமையான பதிவாகும்.
  நன்றி!!

 8. sankar.manicka

  //
  அபத்தமான பிரதிவாதங்களையும், விதண்டாவாதங்களையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
  //

  உங்கள் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

  http://govikannan.blogspot.com/2010/02/blog-post_02.html

 9. gomathi sankar

  உங்களுடைய டைமிங் உண்மையிலேயே வியக்கவைக்கிறது மீண்டும் உங்களது சித்த சுவாதீனம் பற்றி கனிந்த மொழிகள் கிடைக்குமே தயாரா

 10. Ramakrishnan

  நல்ல கட்டுரை.
  இவர்கள் மதிக்கும் தந்தை பெரியாரின் எழுத்துகளை நாட்டுடமை ஆக்க முயலவில்லை.
  அரசு பள்ளிகளின் தரம் தாழ்ந்து கொண்டே இருக்கிறது. கிராமங்கள் முன்னேறவில்லை.

 11. Ramakrishnan

  ஒரு வார்த்தையில் திராவிட அரசியல் பற்றி சொல்வது என்றால்
  “நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மை திறமும் இன்றி வஞ்சனை செய்வாரடி கிளியே வாய் சொல்லில் வீரரடி”

 12. pgomat

  ஜெமோ,
  நான் அதிகமான மாநிலத்தவருடன் பழகும் வாய்ப்பு அமைந்தவன். நான் பார்த்த வரையில். தமிழ் நாட்டில் மட்டும் தான் ஜாதி அபிமானம் கம்மியா இருக்கு. மற்ற மாநிலத்தவர் மிகவும் பிற்போக்கு தனமாக சுய ஜாதி அடையாளத்தை பேசும் போது வேடிக்கையாக இருக்கும். பீகார், உத்தர் பிரதேஷ் பற்றி கேட்கவே வேண்டாம், ஒரு Ph D படிக்கும் மாணவன் இவ்வளவு பிற்போக்கு தனமாக எண்ணுவானா என்று இருக்கும். கேராள இருந்து நான் பார்த்தது கிருஸ்துவர் மட்டுமே ( நாயர் கடை தவிர்த்து).

  திராவிட இயக்கம், பிற்போக்குத்தனகலில் இருந்து தமிழ் நாட்டை விடுவித்ததா இல்லையா ?

  உங்களுக்கு தெரிந்து திராவிட இயக்கத்தால் விளைந்த நன்மைகளை சிறிதேனும் சொல்ல முடியுமா ?.

 13. pgomat

  எனக்கு நிறைய பிராமண நண்பர்கள், ஆனால் அவர்களின் பிற்போக்கு எண்ண வியக்க வைக்குது. ஒருத்தன் அல்லது ஒருத்தி கூட பிராமணர் அல்லாதவரை பாராட்டியது இல்லை. யார் பிடிக்கும் என்றால் மணிரத்தினம், கமல், விஜய், சோ, ஜெயலலிதா, இளையராஜா. சொல்லி வச்ச மாதிரி தப்பி தவறி கூட பாரதி ராஜா , சூர்யா, செல்வராகவன், விக்ரம், தயாநிதி மாறன் (ஒரு பேச்சுக்கு :) ), பாலு மகேந்திரா பாராட்டியோ கேட்டதில்லை. இளையராஜா மட்டுமே சின்ன விதிவிலக்கு.

  அதாவது திராவிட இயக்கத்தை வன்மையாக மறுக்கும் ஒரு ஜாதியே பிற்போக்கு தனத்தையும் வைத்து கொண்டு இருகின்றது. மற்ற பல ஜாதிகள் ஜாதியை மீறி வெளியே வந்து விட்டது ( பிராமணர் அல்லாதவரிடம் ஜாதி வெகுவாக குறைந்து விட்டதா இல்லையா ? ). சில விதி விளக்குகள் நாடார், தேவர், கௌண்டர்.

 14. nkpblogs

  உங்கள் இந்திய பயணங்கள் குறித்த கட்டுரைகள் போது பூமிநாதன் என்ற வாசகர் உங்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் வட மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் உள்ள வேறுபாடு குறித்து அவரது அனுபவம் சார்ந்த கருத்துகளை கூறி இருந்தார்.

  அந்த கடிதம் உங்கள் திராவிட இயக்கம் குறித்த கருத்துகளை மறுபரிசிலனைக்கு கொண்டு செல்வதாக கூறி இருந்தீர்கள்

  இந்த கட்டுரை அந்த மறு பரிசிலனைக்கு பின்தான் எழுதப்பட்டதா?

  அதற்கு முந்தய தலைமுறை உணர்ந்த திராவிட இயக்கம் வேறு.

 15. nkpblogs

  எங்கள் தலைமுறை உணர்ந்த, பார்க்கின்ற அரசியல், சாதீய தாக்கம் அதை சார்ந்த திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள் வேறு. முந்தய தலைமுறை உணர்ந்த திராவிட இயக்கம் வேறு என்று எண்ணுகிறேன்

 16. S. Jayabarathan

  அன்புமிக்க நண்பர் ஜெயமோகன்,

  வைக்கம் போராட்டம் பற்றிய தமிழச்சியின் கட்டுரைகளுக்கு பதில் கூறும்படி வேண்டுகிறேன்.

  1. https://mail.google.com/mail/?hl=en&shva=1#inbox/1268fd0de6b54e62

  2. https://mail.google.com/mail/?hl=en&shva=1#inbox/௧௨௬௮ப்ட௨௧ப்ட௮எப்க௪௯

  நட்புடன்,
  சி. ஜெயபாரதன், கனடா

 17. stride

  விளாசி தள்ளி விட்டீர்கள் ஜெ.

  உங்கள் கோபம் புரிந்து கொள்ள முடிகிறது. சாதாரண வாசகனான எனக்கும் நம் முன்னோர் எப்படி வாழ்ந்தார்கள் என்று அறியும் ஆவல் உண்டு. என்னால் எளிதில் எபண்டைய எகிப்திய, பாபிலோனிய, அஸ்ஸிரிய, கிரேக்க, ரோமபுரி மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என அறிய முடியும். ஆனால் இரண்டு நூற்றாண்டு முன் கூட நம் மக்கள் எப்படி வாழ்ந்தனர், என்ன உணவு உண்டனர், என்ன இசை ரசித்தனர் என்று அறிய முடியாத ஒன்றாக இருப்பது கேவலம் தான்.

  ஷெங் ஹி தலைமையில் சீன கடற்படை 1400’ல் இந்தியா, சிலோன் வழியாக அரேபியா, அப்பிரிக்கா சென்றது பற்றி எத்தனை ஆய்வுகள் – அவரின் கலங்கள் எப்படி இருந்தன என கூட யூகித்து மாதிரிகள் செய்து விட்டார்கள். அவருக்கு சில நூற்றாண்டுகள் முன்னர் இந்திய பெருங்கடல் முழுதும் கோலோச்சிய சோழரின் பெரும் கடற்படை பற்றி சிறிது கூட தெரிந்து கொள்ள முடியவில்லை. திரும்ப திரும்ப நீலகண்ட சாஸ்த்ரியிடமே செல்ல வேண்டியிருக்கிறது. பின்னால் வந்த டச்சு, எஸ்பானிய, ஆங்கிலேய, அமெரிக்க கடற்படை அளவுக்கு இரண்டு நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய சோழர் (true blue water)கடற்படை பற்றி எவ்வளவு தமிழர்களுக்கு தெரியும். சிறிதளவு தெரிந்தது கூட சாண்டில்யனின் கடல்புறா மூலம் தான்(அந்த ஒரு காரணத்துக்காகவே அவரை எனக்கு பிடிக்கும்). மூச்சுக்கு முன்னூறு தடவை “கல் தோன்றி முன் தோன்றா” என்று புலம்பும் திராவிட இயக்க அரசாங்க அதிகாரத்தின் ஐம்பது வருட துரோகம் இது. தெளிவாக அம்பலப்படுத்தியதுக்கு நன்றி.

  சிவா

 18. sankar.manicka

  @pgomat: விஜயின் பெயர் ஜோசப் விஜய். அவர் ஒரு கிருத்தவர். இந்து அல்ல.
  பாரதிராஜாவைப் பிடிக்காத தேவர்களும், மணிரத்தினத்தைப் பிடிக்காத பிராமணர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  அந்த phd மாணவனின் சுயஜாதி அபிமானத்தையும் அதன் பிற்போக்குத்தனத்தையும் உணர்ந்த நீங்கள், உங்களிடத்தில் உள்ள ஜாதிக்காழ்ப்பையும் அதன் பிற்போக்குத்தனத்தையும் ஏன் உணர மறுக்கிறீர்கள் ?

 19. Lakshmanan

  அன்புள்ள ஜெ.மோ
  தமிழ் செம்மொழி மாநாடு முயற்சிகள் மானாட மயிலாடவைவிடவும் உயர்ந்த முயற்சி என்று நான் நம்பவில்லை. காரணம் எல்லாமே காட்சிப் பொருளாகவும் நுகர்வோர் கலச்சரமாகவுமே என்ற முழுவதுமான நம்பிக்கையிலும் மேலும் பணம் பார்க்கலாம்: – தான் மட்டும் ஆகச்சிறந்த தமிழ் இனத்தலைவன்: – தன மறைவுக்குப்பின் யாதொரு மனிதனும் தமிழ்த் தொண்டாற்ற இனிப்பிறப்பதிற்கில்லை என்ற மாறாத இறுமாப்பும் மட்டுமே ஒரே காரணம். ஆனால் தமிழ் இனி மெல்லக் சாகாது. அது மட்டும் நிச்சயம்.
  லட்சுமணன் ஜெத்தா

 20. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெயபாரதன்

  அக்கட்டுரையை வாசித்தேன். அது ‘அதிகாரபூர்வ’ திக வரலாறு. அதற்கான பதிலாக, உண்மைவிளக்கமாக, மிக அடிப்படையான எளிமையான வரலாற்றுத்தகவல்களைக் கொண்டு என் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. வைக்கம் போராட்டத்தின் பின்னணி, நிகழ்ந்த விதம், அதன் தரப்புகள் என்னால்மே சொல்லப்பட்டிருக்கின்றன. இருந்தும் மதவாதிகளை போல தங்கல் மூல நூலையே மீண்டும் மீண்டும் அரைக்கிறார்கள். இதைவிட இவர்களிடம் மேலும் எதிர்பார்ப்பதே பிழை.

  ஈவேரா அவர்கள் வைக்கம்போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பதல்ல என் கூற்று. அவரது பங்களிப்பு மிகைப்படுத்தப்பட்டு உண்மையாக அப்போராட்டத்தை நடத்திய தலைவர்களின் இடம் தமிழ்நாட்டில் மறைக்கப்படுகிறது என்பதே

  ஈவேரா வைக்கம் போராட்டத்தை ‘தொடங்க’வில்லை. ‘நடத்த’வில்லை. அதன் வெற்றிக்கும் அவர் காரணம் இல்லை. அது அடுத்தடுத்த களங்களுக்கு பரவியமைக்கும் அப்போராட்டங்கள் அடைந்த வெற்றிக்கும் அவர் காரணமில்லை. அவர் ஒரு தனிநபராக அதில் பங்கு கொண்டு சிறை சென்றார். அவருக்கு காந்தியின் போராட்டம்-பேச்சுவார்த்தை என்ற அணுகுமுறை பிடிக்கவில்லை. ஆகவே அவர் ஒருகட்டத்தில் காந்திக்கு எதிராக அப்போராட்டத்திற்குள் செயல்பட்டார். ஒருகட்டத்தில் விலகி வந்தார் — இவ்வளவே வரலாறு

  இவர்கள் தங்கள் தரப்பை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். மதவாதிகளை மாற்றமுடியாது. பெரியார்மதமாக இருந்தாலும்.

  நான் சொல்வது உண்மையில் அக்கறை கொண்டவர்களுக்காக மட்டுமே
  ஜெ

 21. ஜெயமோகன்

  மதிப்பிற்குரிய ஜெ.,
  இந்த கட்டுரைத்தொடர் அண்ணா, கருணாநிதி போன்ற “பரப்பியல்” (வேறு சொல் கிடைக்கவில்லயா? இது செவிக்கு இன்பம் தருவதாக இல்லை.) தலைவர்களை மட்டும் மனதில் கொண்டு எழுதப்பட்டதாகப் படுகிறது. அரசியல் அதிகாரத்திற்காக மட்டுமே கோஷம் போட்டவர்கள் இவர்கள் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அரசதிகாரமே வேண்டாம் என்று விலகி நின்ற திராவிடத் தலைவர் பெரியாரை தாங்கள் ஏன் குறிப்பிடக் கூட இல்லை? பெரியாரையும் “பரப்பியல்” தலைவன் என்று வகைப்படுத்துவீர்களா?
  (நியாயமான சந்தேகம் என்று நினைத்தால் பதில் கூறவும் :))

  ஆட்சிக்கு, திராவிடக் கட்சிகளுக்கு மாற்று காணவேண்டியது தேவையே. அந்தத் தேடலில் மதவாதம் நுழைவதை தடுக்கப்போவது பெரியாரின் மூர்க்கமான மத எதிர்ப்புத்தான். இடதுசாரி இயக்கங்கள் வலுவாக இருந்தும் கேரளம் ஏன் மதச் சண்டையில் ரத்தம் சிந்துகிறது? எனக்கென்னவோ அறிவியக்கங்கள் பாமரனை சென்று சேரவே சேராதோ என்று தோன்றுகிறது. பரப்பியக்கம் மட்டுமே அவனைத் தீண்ட முடியுமோ?

  மற்றபடி, கட்டுரை சிந்திக்கத் தூண்டியது. நன்றி

  Venkat C

  ஈவேரா ஓர் அறிவியக்கத்தை உருவாக்கவில்லை. ஒரு சிறிய குறுங்குழுவை மட்டுமே அவர் உருவாக்கினார். அது இன-சாதி ரீதியான காழ்ப்பை அடிநாதமாகக் கொண்டிருந்தது. அந்தக்குழுவில் இருந்த பரப்பியல் கூறுகளை அண்ணாத்துரை அவர்கள் ஒரு பரப்பியல் இயக்கமாக ஆக்கினார்.

  திராவிட இயக்கத்தின் எல்லா பரப்பியல் அம்சங்களும் ஈவேராவின் அமைப்பிலேயே இருந்தன. பரபரப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்ட மேடை அரசியல். நுட்பமான சிந்தனைகளை மறுக்கும் மூர்க்கம் என பல அம்சங்கள். தனக்கு சிந்திப்பவர்களே தேவையில்லை என ஈவேரே அவர்களே சொல்லியிருக்கிறார். திராவிட இயக்கம் என்பது ஈவேரா- சி.என்.அண்ணாத்துரை இருவருடைய கூட்டு உருவாக்கம். ஒருவருடைய இடைவெளியை இன்னொருவர் நிரப்பினார்கள்.

  ஒருவேளை திராவிட இயக்கம் காலத்தின் இயல்பான விளைவாக இருக்கலாம். அதற்கான வரலாற்று தேவை இருக்கலாம். இடதுசாரிகளின் தோல்வியை அது நிரப்பியிருக்கலாம். ஆனால் அதன் தவறுகளை, போதாமைகளை, அது இழைத்த திரிபுகளை உணர்ந்து சரிசெய்து மேலே செல்வதற்கான காலகட்டம் இது என்பதே என் எண்ணம். அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

  கேரளத்தில் தமிழகம் போலன்றி மூன்றுமதங்களும் சமநிலையில் உள்ளன. ஆனால் 1921க்குப் பின் அங்கே மத மோதல்களே நடந்ததில்லை. இப்போது அவை ஆரம்பித்திருக்கின்றன என்பதற்கு வஹாபிஸம் அங்கே வேரூன்றியதும் அதற்கு எதிராக இந்துத்துவம் வளர்ந்ததும்தான் காரணம். அப்போதுகூட தமிழகத்தில் உள்ள அளவு மதக்காழ்ப்பும் மோதலும் அங்கே இல்லை.

  ஜெ

 22. ஜெயமோகன்

  பாப் [pop] என்ற ஆங்கிலச் சொலின் தமிழாக்கம் பரப்பு. பரப்புரை, பரப்புப் பண்பாடு, பரப்பியல் என அக்கலைச்சொல் விரிவாக்கம் செய்யப்படுகிறது. எல்லா கலைச்சொற்களும் முதலில் காதுக்கு உறுத்தும்

 23. Ramachandra Sarma

  Populist என்பதன் தமிழாக்கம் என்று நினைத்தேன். Populist ல் இருந்துதான் Pop வந்ததோ? தெரியவில்லை.

 24. maruthu

  //திராவிட இயக்கத்தின் எல்லா பரப்பியல் அம்சங்களும் ஈவேராவின் அமைப்பிலேயே இருந்தன. பரபரப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்ட மேடை அரசியல். நுட்பமான சிந்தனைகளை மறுக்கும் மூர்க்கம் என பல அம்சங்கள். தனக்கு சிந்திப்பவர்களே தேவையில்லை என ஈவேரே அவர்களே சொல்லியிருக்கிறார். திராவிட இயக்கம் என்பது ஈவேரா- சி.என்.அண்ணாத்துரை இருவருடைய கூட்டு உருவாக்கம். ஒருவருடைய இடைவெளியை இன்னொருவர் நிரப்பினார்கள்//

  Dear Mr,jayamohan,
  Your analysis and perceptive conclusions are indeed brilliant.You may indeed be correct that EVR and Annadurai complemented each other in pursuing some
  objectives emphasizing emotive issues, as a populist strategy ,entirely banking upon the usual superficial understanding ability of the masses ,as a weapon, to seize power regardless of the long term damage it may cause to the society at large.
  While this may infact be correct and Annadurai exploited this by creating a political wing and grabbing power,this begs one question. What was the personal objective of EVR?
  Hoping to be the defacto power center using Anna or some one else as a dummy?
  Or was it simply the orgasm some people have by being nasty and perverse a la some great ,communist leaders (like stalin,mao,Polpot),simply delighting in the chaos and destruction that they wreak upon humanity..
  or was it some thing more sinister?
  The answer to this ,is the missing piece in your excellent analysis of the dravidian movement and its impact on society and its mediocre contribution to tamil language and literature while at the same time causing significant value subtraction .to tamil culture.

  Maruthu

 25. முஉசி

  நான் நாகர்கோயிலின் வரலாற்றினை தேட முற்பட்டபோது கண்ணில் பட்டவை (அந்த தேடலின் போது தான் தங்கள் வலைத்தளம் அறிமுகமானது) ஆங்கில பாதிரியார்களால் எழுதப்பட்ட கிறித்தவ வரலாறுகள் தான். நமது வரலாற்றினை நமது அறிஞர்கள் எழுதுவது தானே நாம் உணர்ந்தவாறு இருக்கும். சுதந்திரம்பெற்று அறுபது வருடத்திற்கு பின்னும் அதற்கான அரசுதரப்பு முயற்சிகள் இல்லை என அறியும் போது வருத்தமாகவே உள்ளது.

 26. ஜெயமோகன்

  குமரி மாவட்ட வரலாற்றை வாசிக்க அ.கா.பெருமாள் அவர்களின் ‘தென்குமரியின் கதை’ [தமிழினி பதிப்பகம் சென்னை] நல்ல நூல்

 27. samyuappa

  யாரோ… “வந்தேமாதரம்” என்றால், “வந்தே எமாத்றோம்” என்று சொன்னாங்களாமே! — அவர் எவர்? எனக்கென்னமோ.. தமிழின தலைவர் (?) மேல் தான் சந்தேகம்.

 1. ஈவேரா பற்றி சில வினாக்கள்…

  […] 2. ஒரு பரப்பிய இயக்கம் என்ற முறையில் திராவிட இயக்கம் கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்தது. ஆகவே அது எடுத்துப்பேசிய சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களும் தமிழ் முதன்மைக் கருத்துக்களும் தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் அறிமுகமாயின. அறிவியக்கங்களின் கொள்கைகள் மக்களுக்கு சென்றுசேர மிகவும் தாமதமாகும். பரப்பிய இயக்கம் சில வருடங்களிலேயே அவற்றை நிகழ்த்தும். பெரும்பாலான தமிழக மக்களின் சிந்தனையில் சாதி எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பழைமைவாத எதிர்ப்பு போன்ற முற்போக்குக் கருத்துக்கள் திராவிட இயக்கம் மூலமே சென்று சேர்ந்தன. [திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?] […]

Comments have been disabled.