கடவுளற்றவனின் பக்திக்கவிதைகள் 4

4. படிகங்களில் ஒளிர்வது

 

மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் உள்ளோடும் ஓர் அம்சம் அவரது அந்தக் கசப்பு இறுகாமல் செய்து விடுகிறது. அதையே இந்த விவாதத்தின் தொடக்கத்தில் எழுச்சிவாதம் என்றேன். எந்த அம்சம் அவரை நவீனத்துவத்தின் இறுகிய பூடகமான கவிதைகளுக்குள் கொண்டு செல்லவில்லையோ அந்த அம்சமே கசப்பிலிருந்தும் வெளியே இட்டுச் செல்கிறது. நம்மாழ்வார் முதல் தேவதேவன் வரையிலான தமிழின் மகத்தான எழுச்சிக்கவிஞர்களுக்குள் இருக்கும் அந்த மனநிலையை ‘நெகிழ்தல்’ என்றுநாம் எளிமையாகக் கூறி விடுகிறோம்.

 

கண்ணன் மூத்தாசாரி இறந்து பதினேழு வருடங்களுக்குப்பிறகு நான் பேச்சிப்பாறை மலைக்காட்டின் சரிவில் ஒரு மாபெரும் காஞ்சிமரத்தைப் பார்த்தேன். பலநூறு வருடங்கள் வாழ்ந்து முதிர்ந்த மரம். இலைகள் குறுகி இலைகள் குறுகி தளிர்களும் குறுகி வயோதிகத்தை ஒவ்வொரு அணுவிலும் வெளிப்படுத்தியபடி நின்றிருந்தது அது. அதன் வைரம் எப்படிப்பட்டது என்று பார்க்க விழைந்தேன். பட்டையைச் சீவிவிட்டு அந்த வைரத்தின் ருசியைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று சொன்னபோது கூட வந்த காட்டுவாசிகள் ‘ஏமானுக்கு எளகிப் போச்சா?’ என்றார்கள் பிடிவாதமாக இருந்தேன். ஆகவே நாங்கள் மலைச்சரிவில் இறங்கி சேற்றுப்புதர்கள் வழியாக நடந்து அந்த முதிர்மரத்தை அடைந்தோம்.

 

திருவிதாங்கூர் மன்னர்கள் மூத்த காஞ்சிரத்தைத் தேடி காடெல்லாம் ஆளனுப்பியிருந்தார்கள். எத்தனை கதைகள் அப்படி! ஆனால் அந்த முதுகாஞ்சிரத்தை அருகே சென்று பார்த்தபோது நான் ஏமாற்றம் அடைந்தேன். அது வைரமே இல்லாமல் உட்பக்கம் முற்றிலும் ‘மடம்பு’ ஆகி இருந்தது. உள்ளே மூன்று பேர் நிற்க முடியும். நான் மெல்ல புதர்களில் ஏறி அந்த பொந்துக்குள் நுழைந்து நின்றேன். மரத்தால் விழுங்கப்படுவது போல உணர்ந்தேன். மேலே ஒரு கிளைப்பிரிவில் இருந்த ஓட்டை வழியாக உள்ளே காற்று பீரிட்டு வந்து கொண்டிருந்தது.

 

உண்மையில் ஆயிரம் வருட வைரம் என்பதே அதுதானா? இன்மைதானா? தேனாய் இனிக்கும் என்று அதைத்தான் ஏன மூதாதை கண்டுணர்ந்து சொன்னானா? தெரியவில்லை. ஆனால் அந்த வெற்றிடத்தில் ஒருவன் படுக்க முடிந்தால் அவனை எந்த வாதையும் அணுகாது என்றே எனக்கும் தோன்றியது.

 

கனிதல் என்பது மானுடத்தின் மகத்துவங்களில் ஒன்று. எத்தனை தூரம் கருணை கொண்டிருந்தால் பழங்கள் இனித்திருக்கும் என்கிறார் தேவதேவன். பழங்களில் இனிமையாக மலர்கையில் தேனாக மனம் கனிந்து வந்தமரும் ஒன்றின் கருணையை கவிஞன் மீண்டும் மீண்டும் உணர்ந்து கொண்டிருக்கிறான். ‘ஒரு குழந்தையை கையில் எடுத்து நெஞ்சோடு சேர்க்கும் போது மனிதர்கள் உள்ளூர பதற்றமடைகிறார்கள் அத்தனை மென்மையான ஒன்று, அத்தனை பவித்திரமான அத்தனை இனிமையான ஒன்று, அவனுள் இருப்பதை அவனே அப்போதுதான் உணர்வான். பெரும்பாலான ஆண்களின் கைகள் நடுநடுங்கும். பெரும்பாலான பெண்களின் கண்கள் கலங்கும்’ என்று நித்யா ஓர் உரையில் கூறுகிறார்.

 

மூத்தகாஞ்சிரத்தின் தடியில் செய்த கட்டிலில் படுத்தால் வாதம் தீண்டாது. எந்த விஷமும் உடலில் இறங்காது. எந்த வாதையும் உடலையும் ஆன்மாவையும் அணுகாது. ஆகவே எது காயிலே புளிக்கிறதோ அதுவே கனியில் இனிக்கிறது என்பதை கண்டுகொண்டதே பாரதியின் கவித்துவ உச்சம். நோயிலே படுப்பதும் நோன்பில் உயிர்பதும் ஒன்றே என்ற தரிசனம் அது. கவிதைகளில் உள்ள இந்த மாயத்தை என் வாழ்நாள் முழுக்க உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

 

இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தற்கொலை முயற்சியில் இருந்து விடுபட்ட எழுந்து ஒரு காலையில் புதிதாகப் பிறந்தபின் இன்றுவரை நான் துயரமாக ஒரு நாள் கூட இருந்ததில்லை என்று கூறினால் என்னை அறிந்தவர்கள் நம்புவார்கள். மனச்சோர்வும் சஞ்சலமும் கசப்பும் என்னிடம் இல்லை. ஒரு தருணத்தில் கூட நான் புறக்கணிக்கப்பட்டவனாக, தோற்கடிக்கப்பட்டவனாக, எளியவனாக என்னை உணர்ந்ததில்லை. என் எளிய உடலின் எல்லைகளை மீறிக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு பேராற்றலையே நான் என்று உணர்கிறேன். ஆகவேதான் எனக்கு தேவதேவன் உற்ற கவிஞராகிறார். எனது வரிகள் அவரது உலகில் உள்ளன. அவரது ஒவ்வொரு பித்தும் பரவசமும் போதையும் ஆவேசமும் என்னுடையது.

 

ஆனால் அதேபோல மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் உள்ள இநத்க் கசப்பையும் கைவிடப்படுதலையும் நான் என்னுடையதாக உணர்கிறேன் என்பதே கவிதையின் வலிமை. ஓர் உச்சநிலையில் இந்தக் கசப்பே அந்த இனிமை என்று உணர்கிறேன். என் சொந்த வாழ்வனுபவத்தில் இருந்தே உதாரணம் கூறமுடியும். சுந்தர ராமசாமி, லோகிதாஸ் போல நான் நெருக்கமாக உணர்பவர்களின் மரணம் எனக்கு ஆழமான அதிர்ச்சியையே அளித்தது. சமநிலை இல்லாத படைப்பு மனம் கொண்டவர்களுக்கு அனுபவங்கள் பல மடங்கு உக்கிரமானவையாக அமையும். ஆனால் மிக விரைவிலேயே அந்த அனுபவங்களை நான் படைப்புக்கணங்களாக மாற்றிக் கொண்டேன்.

 

இப்போது பார்க்கும்போது சுந்தர ராமசாமி இறந்த அந்த நாட்களில் நான் மகிழ்ச்சியாக இருந்திருப்பது தெரிகிறது. அவரது மரணத்தை அவரைப் பற்றிய நினைவுகளால் அழித்துக் கொண்டு ஓர் அந்தரங்க வெளியில் அவருடன் சிரித்துக் கொண்டாடிக் கொண்டு இருந்திருக்கிறேன். கடந்த நாலைந்து வருடங்களில் பலமுறை அநத் நூலை நான் முள வாசித்திருக்கிறேன் அது  அவரை மரணமற்றவராக ஆக்குகிறது! துயரத்தையும் படைப்பின் மூலம் கொண்டாட முடியும். அவமானம் புறக்கணிப்பு அநீதி அனைத்தையும் படைப்பின் மூலம் இனிதாக்கிக் கொள்ள முடியும் அனைத்தையும் கனியவைக்கும் ஒரு மாயச் செயல்பாட்டையே நாம் இலக்கியம் என்கிறோம்.

 

மனுஷ்யபுத்திரனின் ஆரம்ப காலம் முதல் அவரது சிறந்த கவிதைகளை வரிசைப் படுத்திப் பார்த்தேன். ‘மரமும் மரணமும்’ ‘அம்மா இல்லாத முதல் ரம்ஜான்’ ‘இந்த நகரத்தைத் தூங்க வைக்க வேண்டும்’ ‘இறந்தவனின் ஆடைகள்’ ‘ஆளில்லாத வீட்டில் கதறும் தொலைபேசி’ ‘எனது யாசிகும் கைகளில்’ ‘அன்பின் கரங்கள்’ ‘சிறுத்தையை நெருங்குதல்’ ‘என்னைப்பற்றிய வருத்தங்கள்’ ‘ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு’ ‘நீரடியில் கொவாள்’ ‘சிதைவின் தொழில்நுட்பம்’ ‘கொலை நடந்த இடம்’ ‘அன்பிற்காக’ ‘கடவுளுனுடன் பிரார்த்தித்தல்’ ‘பிசாசுகளின் கவிஞன்’ இப்பட்டியலை நீட்டிக்கொண்டே செல்ல முடியும். இக்கவிதைகளின் கசப்பு, சுயவதை, எதிர்ப்பு, ஆற்றாமை என்றும் கரிய நுரைகளுக்குள் இருந்து ஒரு மெல்லிய நெகிழ்ந்த எப்போதும் என்னை வந்து சேர்கிறது. அந்த நெகிழ்வே இக்கவிதைகளை உருகிவழியும் மொழியில் நிகழ்த்துகிறது.

 

ஒருமையப்  புள்ளியில் அக்கவிதைகளை தொடுப்பதென்றால் ‘நீ’ என்ற சொல்லைத் தேர்ந்தெடுப்பேன். மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒரு ‘நான்’ ஆரம்பத்தில் உருவாகி வந்திருக்கிறது. தன் உடல் குறையில் இருந்து உருவான நான். அது குறையுடைய ஆளுமையின் பிரதிநிதியாக, பின்பு துயரமடைந்தவர்களின் பிரதிநிதியாக மாறுகிறது. இந்த நானின் மறுமுனையாக ஒரு நீ உருவாகி வருவதை பிற்காலகட்டத்துக் கவிதைகளில் காண்கிறோம் அந்த நான் ஓர் ஆண் என்பதனாலேயே இந்த நீ ஒரு பெயர். காதலால், தாபத்தால், ஐயத்தால், பிரிவால் மெல்ல மெல்ல கட்டமைக்கப்படுகிறார் அவர்.

 

1991 ல் அவரது ஆரம்பகலக் கவிதையிலேயே வலுவாக அந்த நீ உருவாகி வந்திருப்பதைக் காணலாம்.

 

நான் வசிப்பது

நீ யென்பதொரு காலம்

நீ யென்பதொரு வேளை

நீ யென்பதொரு இடம்

நீ யென்பதொரு சொல்

நீ யென்பதொரு பொருள்

நீ யென்பதொரு நீ

நீ என்பதொரு நான்

(நீ)                           

           

என்றவரிகள் அவரது பிற்காலக் கவிதைகள் அனைத்துக்குமே சாவியாக ஆகின்றன. இந்த வரிகளை ஒரு நவீன கவிஞன் எழுதவில்லை என்றும் ஒரு கன்னட வீரசைவ வசனகவிஞன் எழுதினான் என்றும் எடுத்துக் கொண்டால் இதன் பொருள் என்ன? கிறித்தவ மரபில் புனித ஜான் ஆ·ப் கிராஸ் இதை எழுதியிருந்தால் இஸ்லாமிய மரபில் குணங்குடி மஸ்தான் சாயபு எழுதியிருந்தால் என்ன பொருள்?

 

அந்நிலையில் இக்கவிதை காதலினூடாக காதலுக்கு அப்பால் செல்லும் கவிதையாக ஆகியிருக்கும். உணர்ச்சிகரமான ஒரு ஆன்மீக எழுச்சி காதலை தன் குறியீடாகக் கொண்டிருக்கிறது என்று தோன்றியிருக்கும். அந்த நீ ஒருபோதும் ஓர் எளிய பெண்ணாக இருக்க இயலாது என்றும், அது பெண்ணென உருவகிக்கப்படும் ஏதோ பெரும் சக்தியே என்றும் தோன்றியிருக்கும். ஏன் இந்த வரிகளில் உள்ள குறிப்பை வைத்துப் பார்த்தால் இது காதல்கவிதையே அல்ல தூய இறையனுபவத்தில் இரண்டறுநிலையைச் சொல்லும் கவிதை என்று கூறிவிட முடியும்.

 

அதற்குக் காரணம் மனுஷ்யபுத்திரனின் கவிதையில் உள்ள இந்த ‘நீ’ மிக விரிவாக மிக ஆழமாக உருவகிக்கப் பட்டிருக்கிறது என்பதே. அது ஓர் ஆண் உடல் தேடும் பெண் உடல் அல்ல. மனுஷ்யபுத்திரனின் மொத்தக் கவிதையுலகிலும் பெண்ணுடல் குறித்த சித்தரிப்புகளே இல்லை. நீ என்ற சொல்லுக்கு மேல் பெண்களைப்பற்றி எதுவுமே சொல்லப்படுவதில்லை. முழுக்க முழுக்க மனம் சார்ந்தது இந்த உருவகம். மனம் சார்ந்த தளத்தில்கூட உலகியல் எல்லைக்குள் நிற்க மறுக்கிறது இந்த பெண்ணுருவகம். இதில் வரும் நீ ஒரு தருணத்தின் மண்ணில் எதனுடனும் தொடர்பு படுத்தப்படுவதில்லை.

 

சிறந்த ஒப்பீட்டுக்காக நாம் கலாப்ரியா கவிதைகளைப் பற்றி யோசிக்கலாம். கலாப்ரியாவின் பெண் முகமுள்ளவள். பெயருடையவள் ‘சசி’. என்ற பேருக்குமேல் எதுவுமே தேவை கிடையாது. அந்தப் பெயரிலேயே அந்தப் பெண்ணின் முகம், சமூக அந்தஸ்து, சூழல் எல்லாமே இருக்கிறது. தன்னுடைய ‘நீ’க்கு மனுஷ்யபுத்திரன் ‘சாரதா’ என்று ஒரு பெயரைக் கற்பித்து ஒரு கவிதை எழுதியிருக்கிறார். சாரதா என்ற பேரில் ஒளியிலேயே ஒரு பெண்முகத்தை ஓர் ஆளுமையை திரட்டிக் கொள்ளும் சாத்தியம் குறித்த கவிதை அது.

 

எனக்கு சாரதாவை

ரொம்பப் பிடிக்கும்’                

                                               

என்று ஆரம்பிக்கும் கவிதை அடுத்தவரியிலேயே உலகியல் சாரதாவை தகர்த்து குணரூபமான அரூபமான ஒரு சாரதாவை உருவாக்கிக் கொள்கிறது.

 

தனிமையானவள் சாரதா

 

அனாதியில் வாழ்ந்து வருபவள்

அதிகாலைக் காற்றாகி விலாவில் கடப்பவள்

           

என்று பருவடிவச் சாரதாக்களையெல்லாம் ரத்து செய்தபடியே செல்லும் கவிதை

 

சாரதா

தன் பெயருக்குள்

எந்த உடலையும் அனுமதிக்காதவள்

யாருடைய குரலுக்கும் பதில் சொல்லாதவள்     

என்று முடிகிறது.

 

ஆச்சரியமான ஓர் ஒற்றுமையை நான் இப்பாடலில் சந்தித்தேன். இந்தப்பாடல் நாராயண குரு எழுதிய சாரதாஷ்டத்தின் எட்டு பாடல்களின் அனுபந்தமாகச் சேர்க்கத்தக்கது. சாரதா தேவிக்கு உடலை அளித்து அந்த உடலை தத்துவமாக ஆக்கி பின்பு அதை அரூவமாக ஆக்கும் பக்தி ஞானப்பாடல் அது. இந்த சாரதா அந்த சாரதாவாக இருக்க இந்தக் கவிதையில் என்ன தடை இருக்கிறது? உருவமாகிய ஒன்றில் இருந்து அதன் குணஇயல்பை பரித்து அருவமாக ஆக்குவதென்பது நம் பக்தி மரபின் பெரும்பாலான கவிதைகளில் உள்ளதுதான். அதையே இங்கும் காண்கிறோம். மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் உள்ள ‘நீ’ அவர் சுட்டுமிடத்தையும் தாண்டி வளரும் விதம் இதுவே.

 

தப்ப முடியாத

தலைவிதி அது

 

ஒருவன்

தன் கனவுப்பெண்களை

உருவாக்கியே தீரவேண்டும்

 

(கனவுப்பெண்)

 

என்று அந்த மனநிலைகளை அடையாளம் காண்கின்றன மனுஷ்யபுத்திரனின் கவிதைகள்.

 

என் கனவுப்பெண்

கஜல் பாடகர்களிடமிருந்தும்

சித்தர்களிடமிருந்தும்

தப்பிவந்தவள்’

                                                                       

என்கிறது அவரது கவிதை. அது ஒரு விசித்திரமான தேவை. ஒரு மண்குடம் தான் நிரப்பப்படுதலை ஒவ்வொரு கணமும் எதிர்பார்க்கிறது. மானுட ஆளுமை தன் குறைபாடுகளை பிற ஆளுமையால் நிரப்பிவிட ஏங்குகிறது. அந்த ஏக்கமே மானுட உறவுகளின் அடிப்படை. நாம் மந்தை உயிர்கள், தனித்தனியாக நிறைவுகாண இயலாதவர்கள் என்பதே அதற்குக்காரணம். தன் இடைவெளிகளை முழுக்க நிரப்பி தன்னால் உணரப்படும் இயலாமைகளை முழுக்க போக்கும் ஒரு மறுபாதிக்கான விழைவே உச்ச நிலையில் காமம் என்பது. கணநேரத்திலேனும் உடல் அதை உணர்வதே உடலுறவு என்பது. அந்தக் கணநேரத்தை கற்பனை மூலம் விரித்து விரித்தெடுக்கிறது மானுட பிரக்ஞை.

 

உலகம் முழுக்க காதல் குறித்தும் காமம் குறித்தும் எழுதப்பட்டுள்ள கவிதைகள் எத்தனை இலட்சம் இருக்கும் என்று கற்பனை செய்கையில் பிரமிப்பு உருவாகிறது. உலகில் எழுதப்பட்ட கவிதைகளில், பாடப்பட்ட பாடல்களில் மிகப் பெருமளவு கவிதையும் பாடல்களும் காதலும் காமமும் சார்ந்தவையே ஒரு கோணத்தில் மொத்த மானுடமே ஒரே ஒரு காதல் பாடலை பல்லாயிரம் வருடங்களாக பாடிக் கொண்டிருக்கிறது என்று தோன்றிவிடுகிறது. காட்டில் சீவிடுகள் பாடுவதைப் போல. ஒரு சீவிடின் துளி இருப்புக்குள் பலநூறு கிலோமீட்டர் தூரம் விரியும் பெரும்காடு ஒரு போதும் உள்வாங்கப்பட முடியாது. ஆனால் அத்தனை சீவிடும் சேர்ந்து அவற்றை ஆக்கிய விதியின்  ஆணைப்படி ஒரே பாடலை பாடுகின்றன.

 

ஆதிமந்தியும் ஆண்டாளும் கபிலனும் கம்பனும் பாரதியும் பிரமிளும் சேர்ந்து பாடியது ஒரே காதல் பாடலை என்று ஏன் கூறலாகாது? சாலமனும் து·புவும் ஹோமரும் ஷேக்ஸ்பியரும் ஜான் ஆ·ப் கிராஸ¤ம் எமிலி டிக்கன்ஸனும் சில்வியா பிளாத்தும் சேர்ந்து பாடியது ஒரே காதல்பாடலை என்று ஏன் சொல்லக் கூடாது? வேறுபாடுகள் மிகமிக மேலோட்டமானவை. வடிவம், கூறுமொழி சார்ந்த எளிய பேதங்கள் மட்டும்தான் அவை.

 

அந்த அனாதியான அவாவின் வெளிப்பாடே தூய காதல்கவிதைகள். மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் பேசும் தளம் அதுவே நீராலானது தொகுதியில் ஒரு பகுதி முழுக்க ‘உன்னோடிருத்தல்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது.

 

திசையறிதல்

 

எல்லா நன்றியறிதல்களும்

பதிலுபசாரங்களும்

உன்னைக் கொஞ்சம்

சிறுமைப்படுத்தவே செய்கின்றன

 

இன்றிலிருந்து உனது

எல்லாப் பரிசுகளையும்

நான் தரையில் விட்டுவிடுகிறேன்

ஈரம் காயாத நாய்குட்டிகளைப்போல

தம் திசைகளை

தாமே அறியட்டுமென்று

 

 

என்ற அற்புதமான கவிதையால்  அந்தப் பகுதி தொடங்குகிறது. பிறந்து ஈரம்காயாத நாய்குட்டிகள் கண்களைத் திறக்காமல் தங்கள் நாசிகளால் வழி காட்டி அமைத்துச் செல்லப்பட்டு தாய்முலையை அடைகின்றன. அவற்றில் உயிரில் பொறிக்கப்பட்டிருக்கிறது அந்த வாசனை, அந்த பசி. அவற்றுக்காக மறுமுனையில் ஏற்கனவே கனிந்து ஊறி காத்திருக்கிறது தாய்முலைக் கொத்து. மனுஷ்யபுத்திரன் கவிதைகள் பேசும் ‘நீ’ அந்த முலைதான். அந்த கனிந்தூறிய காத்திருப்புதான். கண்டடைவதற்கான வேகமே கவிதையென்றாகிறது. மீண்டும், இந்தக் கவிதையின்  ‘நீ’ ஏன் காதலியாக இருக்க வேண்டும். திராவிட சிசுவுக்குக் கனிந்த உண்ணாமுலையாக ஏன் இருக்கக் கூடாது? இக்ககவிதையை இதன் யாப்பை மட்டும் தவிர்த்து வேறு எந்த காரணத்தால் ஒரு சிறந்த தேவாரப்பாடலில் இருந்து வேறுபடுத்த இயலும்?

 

பல்லாயிரம் வருடங்களாக இந்திய ஞானமரபில் உதித்த விழைவுதான் இது. பரிபூரணத்திற்கான காதல். அதை நம்மாழ்வாரில் பெரியாழ்வாரில் ஆண்டாளில் காணலாம். பின்னர் அது பக்திமரபு மூலமாக அது இந்தியாவெங்கும் சென்றது. ஜயதேவரில் ‘கிருஷ்ணன்- ராதை’ என்ற மகத்தான நாடகமாக உச்சம் கொண்டது. சைதன்யரின் வழியாக அடித்தளம் வரை பரவியது. இன்றும் வட இந்தியா முழுக்க பாவுல் பாடகர்களும் வைஷ்ணவிகளும் அந்த அழியாக் காதலின் அணையாத பெருந்தாபத்தை பாடி அலைகிறார்கள். மதுராவின் தெருக்களில் ஆத்மாவின் சாரத்தில் எழும் பெருங்காதலின் வரிகளைக் கேட்காமல் ஒருவன் இன்றும் கூட நடமாட முடிவதில்லை. பல்லாயிரம் வருடம் அங்கே அழியாமல் கொந்தளிக்கும் அந்தக் காதலின் மதுரத்தால்தான் அது மதுரா ஆனது போலும்! அது பரிபூரணத்தை அடைவதற்காக குறையுற்ற ஆன்மா கொள்ளும் தவிப்பு. பாலையில் மழையென அந்தக் காதலில் பெருங்கருணை வந்து மூடுவதன் பெருங்களிப்பு.

 

ஆயிரத்து நூறு வருடங்களாக பக்தி இயக்கம் வட இந்தியாவில் அந்த மெய்க்காதலை ஒரு சமூக இயக்கமாக நிலைநாட்டி வைத்திருக்கிறது வங்கத்திலும் ஒரிஸாவிலும் சாதாரணமாக ஒரு வரையொருவர் பார்ப்பவர்கள் ‘ராதேசியாம்’ என்று கூறும் போது பெருவியப்பு நம்மை வந்து அடைகிறது உலகியலைத் தீண்டாத பெருங்காதல் எப்படி ஓர் அன்றாட வாழ்க்கை நிகழ்வாக மொழியில் ஊடாட முடிகிறது? அந்த மாயத்தை கவிதை சாத்தியமாக்கியிருக்கிறது இங்கே.

 

சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் வட இந்தியாவில் அந்த மாளாக்காதல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சூர்தாஸாக, மீராவாக. . .அந்த மாபெரும் மக்களியக்கமே உருது மொழிக்குள் கஜல் என்னும் இசைமரபாக ஆகிறது. இந்துஸ்தானி இசையின் அழகிய குழந்தை அது. இந்துஸ்தானி இசையின் பெரும்பாலான பாடல்கள் பக்திமரபு உருவாக்கியெடுத்த பெருங்காதலின் வெளிப்பாடுகளே. கஜல் அவற்றில் இருந்த பக்தியை விலக்கி இன்னும் தூயகாதலாக ஆக்கியது. கஜலில் வரும் பெண் வெறும் ‘நீ’ மட்டுமே. உள் வடிவில்லாத தூய குணரூபம் அவள். இஸ்லாமில் உடல் வருணனை தடைசெய்யப்பட்டிருக்கிறது என்பது மட்டும் அதற்குக் காரணமல்ல. அந்த உச்சகட்டப்பரவச நிலை முற்றிலும் உடலுக்கு அதீதமானது என்பதே. உறவு பிரிவு என்ற இரு உச்சப்புள்ளிகள். அவற்றை அறியும் இருமனங்கள். அவ்வளவுதான். உருகிவழியும் பொன் போல இசையில் ஊறிய கவிதை.

 

 

மனுஷ்யபுத்திரனின் கவிதைகளின் கட்டமைப்பில் உள்ள கஜலின் பங்களிப்பு மிகவும் ஆச்சரியமூட்டுவது.

 

காலைவணக்கங்கள்

 

இன்றைய விழிப்பு

உன்னை நினைத்துக் கொள்வதோடு

தொடங்குகிறது

 

இன்று பறவைகளுக்கு முன்னதாக விழித்து

வெளிச்சத்திற்காக காத்திருக்கிறேன்.

 

எனது உலோகங்களைத் தொட்டுப்பார்

அவை நெகிழ்ந்து கிடக்கின்றன

 

எனது கட்டுமானங்களில்

விரிசல்களில் நீர் கசிந்து கொண்டிருக்கிறது. 

. . .

போன்ற பல கவிதைகளை அப்படியே கஜல்களாக ஆக்கிவிடலாம். அந்த மனநிலை மற்றும் கூறுமுறை மட்டுமல்ல சொற்சேர்க்கைகள் கூட கஜல் போலிருக்கின்றன.

 

முடிவேயில்லாமல்

இறங்கிக் கொண்டிருக்கிறேன்

நீ

நீங்கிச் சென்றுவிட்ட

படிக்கட்டுகளில்

                                    (படிக்கட்டுகளில்)   

 

போன்ற வரிகளில் நாம் கேட்பது கஜல் அடையும் உச்சத்தைத்தான்.

 

மனுஷ்யபுத்திரனின் கவிதைகளின் எழுச்சிவாத அம்சத்தின் இருப்பை நிறுவுகின்ற அம்சம் இந்தக் கஜல் தன்மைதான் யதார்த்தத்தின் இரும்பு மேடையில் நின்று கொண்டு கஜலின் உருக்கம் சாத்தியமாவதில்லை அங்கே

 

ஆனால் மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் இந்த தளத்தில் ஒரு முக்கியமான விடுபடல் ஒன்று தென்படுகிறது. உலகம் முழுக்க வசனத்தில் எழுச்சிவாதக் கவிதைகளை எழுதியவர்கள் அனைவரையுமே கவிஞர் கலீல் கிப்ரான் தீவிரமாகப் பாதித்திருக்கிறார். தமிழில் கவிதை எழுதிய வானம்பாடிகளிலேயே சிற்பி, அப்துல் ரகுமான், அபி ஆகியோரில் கிப்ரானின் பாதிப்பு உண்டு. ஏன் சுகுமாரனின் கவிதைகளிலேயே கூட கிப்ரானின் மெல்லிய எதிரொலியைப் பார்க்க முடியும். மனுஷ்யபுத்திரனிடம் கிப்ரானின் குரலே இல்லை.

 

கிப்ரானின் அடிப்படை இயல்பென்பது தத்துவர்த்தன்மையே. ‘தன்னைத் தியானித்து  அறியும் தத்துவ எண்ண ஓட்டங்கள்’ என்று கிப்ரானின் கவிதைகளை பொதுவாகத் தொகுத்துக் கூறலாம். மனுஷ்யபுத்திரனிடம் ஏன் கிப்ரான் இல்லை என்றால் மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் சற்றும் கூட தத்துவமில்லை என்பதுதான்.

 

இந்த இயல்பும் தமிழின் பிற புதுக்கவிஞர்களிடமிருந்து மனுஷ்யபுத்திரனைத் தனித்துக் காட்டுகிறது. தமிழில் புதுக்கவிதை நவீனத்துவக் கவிதையாகவே அறிமுகமாகியது. நவீனத்துவம் வலிமையான தத்துவச் சார்பு உடையது. கவிதையில் ஊற்றெடுக்கும் உணர்வு எழுச்சியை ஐயப்படவும், கட்டுப்படுத்தவும் தத்துவத்தைப் பயன்படுத்தியது நவீனத்துவம். நவீனத்துவத்தின் தத்துவம் என்பது இருத்தல்வாதமே. தமிழில் இருத்தல்வாதமும் நவீனக்கவிதையும் உள்ளடக்கமும் உருவமுமாக சேர்ந்தே அறிமுகமாயின ஆகவே இங்குள்ள புதுக்கவிதை மரபில் எப்போதுமே ஒரு தத்துவக் குரல் இருந்து கொண்டிருக்கிறது- இப்போதும் கூட ஒலிக்கிறது. தத்துவத்தைப் பயின்று அடைந்த பண்டிதக் குரல் அல்ல அது. முன்னோடிக் கவிதைகளில் இருந்து பெற்றுக்கொண்டு சுய அனுபவத்துடன் இளைக்கப்பட்ட ஒரு பொதுப்படையான தத்துவ நோக்கு மட்டும்தான் அது.

 

மனுஷ்யபுத்திரனின் கவிதை அத்தகைய தத்துவ விசாரணைகளைத் தவிர்த்து விடுகிறது. இக்காரணத்தாலேயே அது உணர்ச்சிகளை தத்துவமாக்கி கட்டுப்படுத்திக் கொள்வதில்லை. தமிழ் புதுக்கவிதைக்கு பொதுவாகப் பழக்கமில்லாதபடி – மேடையில் கவிதைகள் குமுறும் இடங்களுக்கு தமிழில் கவிதைவாசகன் போவது இல்லை- மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் உணர்ச்சிகரமாகக் கொந்தளிக்கின்றன.

 

துடைத்துக் கொள்

கசந்த உன் கண்ணீரை

 

இனிநாம் அடையப்போகும் துயரங்களிலேயே

இதுதான் சின்னஞ்சிறு துயரமென ஆகிவிடலாம்

 

தழுவிக் கொள்

அழுத்தமாக

எப்போதும் வந்து விடலாம்

விடைபெறும் வேளை

 

(நேரமில்லை)

 

என்று நேரடியாக உணர்வுகளைக் கொட்டுகிறது மனுஷ்யபுத்திரனின் கவிதை.

 

அந்த உணர்வெழுச்சியினூடாகவே அவரது உச்சங்களை மனுஷ்யபுத்திரன் சென்றடைந்திருக்கிறார். மனுஷ்யபுத்திரனின் கவிதையுலகின் கவித்துவ உச்சங்கள் முழுக்க முழுக்க உணர்வெழுச்சிகள் சீற எழும் தருணங்களால் ஆனவை. அவை நேர்நிலையானவையாகவும் எதிர்மறையானவையாகவும் வெளிப்பாடு கொள்கின்றன.

 

இன்று

ஓர் இலை உதிர்ந்தபோது

ஒரு மரம் அதிர்ந்ததைப் பார்த்தேன்

 

ஒரு குருவி

திடீரென்று பறந்தபோது

காற்றில் ஒரு விரிசலை கேட்டேன்

 

இவ்வளவு மெலிதானதை

உன்னிடம் எப்படிக் கொண்டுவருவது

என்றுதான் தெரியவில்லை

(கைகளில் நில்லாதது)

 

என்று மிக அழுத்தமான உணர்ச்சி கூறுடன் நேரடியாக நிகழும் நேர்நிலை உச்சம் ஒரு பக்கம் என்றால்

 

ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு

நன்றாகக் குளிக்க வேண்டும்

வெந்நீராக இருந்தால் மிக நல்லது

இருப்பதிலேயே நல்ல அதிகம் பயன்படுத்தாத

தெம்பூட்டும் ஆடையை அணியலாம்

 

தெருவில் இறங்கி நடக்கும்போது

அடிக்கடி திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. . .

. . .                                                                                          

                                                       என்று ஆரம்பித்து

எல்லையற்றது

இந்த உலகின் தீமை

எல்லையற்றது

இந்த உலகின் கருணை 

                                                           

என்று முடியும் கவிதையைப் போல எதிர்மறையாக எழுந்து உச்சத்தைத் தொடும் கவிதைகள் இன்னொருபக்கம் இவ்விரு தளங்களிலும் எழுச்சிவாதமே மனுஷ்யபுத்திரனின் அழகியலாக அமைகிறது.

 

இதே உணர்வெழுச்சிகள் மொழியின் கட்டுமானத்தின் செறிவால் அழுத்தப்பட்ட வெளிப்பாடு கொண்ட கவிதைகளையும்  மனுஷ்யபுத்திரனின் படைப்புலகில் பார்க்கலாம். அவை மேலோட்டமான பார்வைக்கு நவீனத்துவத்தின் சாயல் கொண்டவை என்றாலும் தூரத்தில் எழுச்சிவாதக் கவிதைகளே

 

நீரடியில் கொலைவாள்

 

நீரடியில் கிடக்கிறது

கொலைவாள்

 

இன்று இரத்த ஆறுகள்

எதுவும் ஓடவில்லை

எனினும்

ஆற்று நீரில் கரிக்கிறது இரத்த ருசி

 

இடையறாத

நதியின் கருணை

கழுவி முடிக்கட்டும் என்று

 

நீரடியில் கிடக்கிறது

கொலைவாள் 

 

என்ற கவிதையில் மனுஷ்யபுத்திரனை ஆளும் இருமன எழுச்சிகளும் பதிவாகியுள்ளன. கொலைவாளும் அதைக் கழுவும் கனிவின் பெருநதியும்.

 

மனுஷ்யபுத்திரனின் சின்னஞ்சிறிய கவிதை ஒன்று அவரது கவிதையுலகின் ஆகச் சிறந்த மாதிரியாக நம் மனதில் என்றும் நீடிக்கும் தகுதி கொண்டது. பலசமயம் ஏராளமான கவிதைகளை எழுதிய கவிஞர்களுக்கு அப்படி ஒரு சிறுகவிதை அமைவதுண்டு. பிரமிளுக்கு ‘காவியம்’ போல சுகுமாரனுக்கு ‘அன்னியம்’ போல தேவதேவனுக்கு ‘அமைதி என்பது’ போல. அக்கவிஞர்கள் எழுதிய பற்பல நீளமான கவிதைகளில் திரண்டு வந்த ஏதோ ஒன்று அக்கவிதையில் மையம் கொள்கிறது போலும். தற்செயலாக அல்லது அத்தனை கவிதைகளிலும் விடுப்பட்ட ஒன்றுதான் அக்கவிதையாகிறதா? தெரியவில்லை. ஆலமரத்தின் விதை போல அக்கவியுலகம் அந்த சில சொற்களில் செறிவு கொள்கிறது. பிறகு நாம் அந்த கவிஞனை ஒரு சட்டைப்பித்தான் போல நெஞ்சில் மாட்டிக் கொள்ளலாம்.

 

வேட்கை

 

எனக்குத் தெரிவதில்லை

நடுநடுங்கும்

ஓர் எளியசுடரை

எப்படிக் காப்பதென்று

 

பற்றிக்கொள்

பற்றிக்கொள் எனப்

படபடக்கின்றன

திரைச்சீலைகள்.

 

மனுஷ்யபுத்திரனின் ‘பிரகடனம்’ என்றே கொள்ளத்தக்கது இக்கவிதை. எப்போதும் இது அவரை நினைவூட்டியபடி எப்போதும் என்னிடம் இருந்து கொண்டே இருக்கிறது.

 

‘எளிய சுடர்’ என்று உணரும் நிலையே மனுஷ்யபுத்திரனின் கவிதையின் சாராம்சமான உணர்வாகும். தன் எளிமை, தன் குறைபாட்டுடன் தன்னில் எரியும் ‘சுடரை’ உணர்தல். உலகையே பற்றி ஏறும் அதன் அழியாத பேரவாவை உணர்தல் அந்தச் சுடருக்கும் பற்றிக்கொள் பற்றிக் கொள் என்று படபடக்கும் திரைச் சீலைகளுக்குமான தூரத்தை நிரப்புகின்றன அவரது கவிதைகள் எனலாம்.

 

மனுஷ்யபுத்திரன் கவிதைகள் முழுக்க நீடிக்கும் முக்கியமான அம்சம் இந்த சுயபோதாமை உணர்வு. உடலில் இருந்து ஆளுமை நோக்கி விரிந்து பின்பு சமூக சுயமாக பிரபஞ்ச சுயமாக ஆகியது அது. தன்னால் ஊறும் அபாரமான கவியுணர்வினாலேயே  அதை நிரப்பும் மறுபாதி எல்லையற்றதாக முழுமையானதாக பிரம்மாண்டமானதாக ஆகவேண்டிய நிலை உருவாகிறது.

 

இன்று என்அறைக்குள் நிரம்புவது

கடலைப்புணரும் காற்று உணரும் தடையின்மைகள்   

           

என்று மனுஷ்யபுத்திரனின் கவிதை உணர்கிறது. அறை என்ற எல்லைக்குட்பட்ட, மூடப்பட்ட சுயம் அதற்குள் நிறையும் காற்றும்  கடலும் இரு முனைகளாக அமைந்திருப்பதை இங்கும் அவதானிக்கலாம். இந்த அம்சமும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை நமது பக்தி மரபுடன் பிணைக்கிறது. தன்னைக்குறித்து ஆழமானதோர் குறையுணர்வில் இருந்தே இறை என்னும் மகத்துவத்துடனும் முழுமையுடனும் இணைந்து ஒன்ற விரும்பும் மன எழுச்சி உருவாகிறது பக்தி இயக்கத்தின் பெருங்கவிஞர்களில். இறை என்ற பிரமாண்டம் வந்து நிரப்பவேண்டிய வெற்றிடமாகவே தன் அகத்தைக் காண்கின்றன நம்மாழ்வாரின் கவிதைகள்; குணங்குடி மஸ்தான் சாயபுவின் கவிதைகள். அதே மனநிலையை தன்னுள் நீட்டித்துக் கொள்கின்றன இவை.

 

அந்த முழுமை நிலை இரண்டின்மை. அதுவே அத்வைதம். அதுவான பிறகு நான் எனும் குறையுணர்வு இல்லை. ஆரம்ப காலத்துக் காதல் கவிதை ஒன்றிற்கு ‘அத்வைதம்’ என்றுபெயர் வைத்திருக்கிறார் மனுஷ்யபுத்திரன்

 

உன்கைகள் பேசுகின்றன

பாடல்களில் எல்லாம்

உயர்ந்தபாடல்

மௌனத்தின் பாடல்                         

 

என்று ஆரம்பிக்கும் அக்கவிதை

 

பற்றிக்கொள்

இன்னும் இறுக்கமாக

 

இதயமே உள்ளங்கைகளில் துடிக்க

 

ஆதரவின்மைகளின்

பாவங்களெல்லாம்

அழியும் வரை     

                                                           

என்று முடிகிறது. ஒரு நவீன பக்திக் கவிதையின் அனைத்து சாத்தியங்களும் கொண்ட கவிதை இது.

 

இக்கவிதைகள் அனைத்தும் ஏன் மீண்டும் மீண்டும் காதலைச் சரண் அடைகின்றன? இறைக்காதலை மானுடக்காதலில் கண்ட பண்டைய பக்திக் கவிதைகளுக்கு நேர் எதிரானவை இவை- மானுடக்காதலில் இறைமையைக் காணவிழைகின்றன. ஏனென்றால் இவை தர்க்கத்தின் மூலம் கடவுளை ரத்துசெய்து விட்டவனின் கவிதைகள் என்பதே. தன் வானத்தை வெட்டவெளியாக ஆக்கிவிட்டவன், ஆதரவின்மை என்பதை ஒரு பிரபஞ்ச விதியாகப் புரிந்து கொண்டவன். அவனுடைய ஆறுதல், அவனை நிரப்பும் உறவு மண்ணில் இருந்தே வரமுடியும் ஆனால் அவனுள் இருப்பது இறைவனால் மட்டுமே நிரப்பப் படத்தக்க வெற்றிடம். ஆகவே காதலி இறைவடிவமாக ஆகிவிட்டிருக்கவும் வேண்டும். மானுட இயல்பை  மீறி அருவமாக ஆகி வலிந்தாக வேண்டும் தன் மொத்த வரிகளாலும் இக்கவிதையுலகு மானுட உறவை ஒரு பிரபஞ்ச நிகழ்வாக ஆக்கவே முயல்கிறது.

 

‘பற்றிக்கொள் பற்றிக்கொள்’ என்று படப்படக்கும் திரைச்சீலைகள் நடுவே ஒரு நெருப்பு. முடிவில்லாத சாத்தியங்கள் கொண்டது. அளவில்லாத வல்லமை கொண்டது. இக்கவிதைக்குப் பதில் போல தேவதேவன் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்- ஆனால் இதற்கு முன்னரே அது வெளிவந்து விட்டது. ஒரு நிகழ்வின் ஒரு முகங்கள் போல இவ்விரு கவிதைகளும் உள்ளன

 

 

தீ எப்படி பற்றும்

தீ எப்படிப் பற்றும்

தீ எப்படியும் பற்றிக்கொள்ளும்’

இதோ இதோ என்று

நெளிகின்றன திரைச்சீலைகள்’

 

 

வேறு ஒரு பார்வையில் இந்தக்கவிதை பாரதியின் அடையாளமாக என் மனதில உள்ள கவிதை

 

 

அக்னிக்குஞ்சொன்று கண்டேன், அதை

அங்கோர் காட்டிடை பொந்தினில் வைத்தேன்

வெந்து தணிந்தது காடு

தழல் வீரத்தில் குஞ்சொன்றும் மூப்பென்றும் உண்டோ

தத்தத் திரிகிட தத்தோம்’

 

என்ற கவிதையுடனும் இணைந்து கொண்டது. காட்டில் வைக்கப்பட்ட தீ பாரதி என்றால் திரைச்சீலையைக் கவ்வச் சாத்தியமான தீ மனுஷ்யபுத்திரன்.

முந்தைய கட்டுரைசாகித்ய அகாடமி விருதுகள்
அடுத்த கட்டுரைஇருகடிதங்கள்