‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 56

பகுதி எட்டு : கதிரெழுநகர்

[ 8 ]

பிரம்மமுகூர்த்தத்திற்கு முன்னதாகவே எழுந்து கர்ணனைத் துயிலெழுப்புவது அதிரதன் வழக்கம். “நீ இன்று கிருபரின் மாணவன். சூதர்குலத்தில் இருந்து கிருபரின் மாணவனாகச் செல்லும் முதல் சிறுவன் நீ… உன்னால்தான் சூதர்குலத்துக்கு இந்த மதிப்பு கிடைத்தது. நீ என் மைந்தன் என்பதனால் உன்னை இன்று இந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள். இது என்வாழ்நாள் முழுக்க நான் ஈட்டிய நற்பெயருக்கான பரிசு. நீ செய்யும் ஒவ்வொரு பிழைக்கும் நான் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டியிருக்கும்… கிளம்பு. ஒருநாளும் சீடனுக்காக குரு காத்திருக்கக் கூடாது” என்று சொல்லி அவனை மேற்குவாயில் ஏரியில் நீராட அழைத்துச்செல்வார்.

“இந்நகரத்தில் இதன் நகரதெய்வங்கள் அனைத்தும் துயின்றுகொண்டிருக்கும் வேளை இது. அவர்கள் பெருமுரசின் ஒலியால் விழிமலரும்போது நீ அவர்கள் முன் தூயவனாக நின்றிருக்கவேண்டும். இந்நகரம் உன்னில் அன்புடன் இருக்கிறது. மண்ணில் எந்தச்சூதனும் பெறமுடியாத இடத்தை இதுவே உனக்களித்தது என்பதை மறவாதே” என்று சொல்லிக்கொண்டே அவரும் நீராட வருவார். “அஸ்தினபுரியின் அரசர்களுக்காக வாழ்வதும் வீழ்வதும் உன் கடன் என்று கொள்!”

கருமையின் ஒளியுடன் அலையடித்துக்கிடக்கும் ஏரியில் நீராடுகையில் “பிரம்ம முகூர்த்தத்துக்குப் பின் நீராடும் சூதனை தெய்வங்கள் பொறுத்துக்கொள்வதில்லை என்று நான் இளவயதாக இருக்கையில் என் ஆசிரியர்கள் சொல்வார்கள். பிரம்ம முகூர்த்தம் என்பது என்ன? இவ்வுலகத் தோற்றமென்பது மாயை. சூரியனால் எழுதப்படும் ஓவியம் அது. இரவில் அதை அவன் கலைத்துவிட்டுச் செல்கிறான். அதிகாலையில் அவன் ஒவ்வொன்றாக மீண்டும் வரைந்து எழுப்புகிறான். மேகங்களுடன் வானும் நீரொளியுடன் கடலும் பசுமையொளியுடன் மண்ணும் உருவாகி வருகின்றன. மானுடரின் சித்தமும் அவ்வாறே ஒவ்வொருநாளும் இரவில் முற்றிலும் அழிந்து காலையில் புதியதாகப் பிறந்தெழுகிறது.”

“வானும் கடலும் மண்ணும் உருவாகிவரும்போதே சித்தமும் மனமும் ஆன்மாவும் உருவாகின்றன. அவை உருவாகும் கணத்தில் துயின்றுகொண்டிருப்பவன் அவற்றில் முழுமையை அடையவே முடியாது. கடந்தகாலமென்பது நேற்றைய மோரிலிருந்து இன்றைய பாலுக்குள் விடப்படும் உறை மட்டுமே. இன்றை அது திரியச்செய்கிறது. மாலையில் புளித்து நுரைக்கச்செய்கிறது. பிரம்மமுகூர்த்தத்தில் படைப்பின் முதற்கணத்துக்கு முன்னரே எழுந்து வெறும்கலத்தை நன்றாகக் கழுவித் தூய்மையாக்குபவன் சூரியனின் கொடையை சிந்தாமல் பெறுகிறான்.”

அவரைவிடப் பெரிய உடல்கொண்டிருந்தாலும் கர்ணனை தன் கைகளாலேயே நீராட்ட விரும்பினார். அவன் நீரில் மூழ்கி கரையேறும்போது “இன்னொரு முறை மூழ்கி எழு!” என்று சொல்லி அவன் குழலைத் தொடுவார். அவன் நார்ச்சுருளால் உடலைத் தேய்த்துக்கொள்கையில் இயல்பாகப் பேசியபடி அதை வாங்கி அவன் முதுகைத் தேய்ப்பார். அவரே நீரள்ளி அவன் மேல் ஊற்றுவார். “தூய்மை என்பது என்ன என்று என் ஆசிரியர் சொல்வார். தூய்மை என்பது விடுதலை. நேற்றிலிருந்து விடுதலை. கடந்த காலத்தில் இருந்து விடுதலை. தூய்மை செய்துகொண்டதுமே நாம் புதியதாகப் பிறந்துவிடுகிறோம். அப்படியென்றால் பிறப்பதென்பதே ஒரு குளியல்தான்.”

திரும்பிவரும்போதும் அவர் பேசிக்கொண்டே இருப்பார். அனைவரிடமும் பேசிக்கொண்டே இருக்கும் இயல்புடையவர் என்றாலும் அவர் அவனிடம் பேசும்போது தன்னை மேலும் மேலும் பெருக்கிக்கொண்டே செல்வார். “என் குருநாதர் சொல்வதுண்டு. பிராமணர்களின் ஆற்றல் சொல்லில். ஷத்ரியர்களின் ஆற்றல் தோளில். சூதர்களின் ஆற்றல் அவர்களின் செவியில் என்று. கேட்டுக்கொண்டே இரு. ஒரு சொல் கூட உன்னைக் கடந்துசெல்லக்கூடாது என எண்ணிக்கொள். நீ கற்பவை கதிர்கள். யானை உண்ட கவளத்தின் மிச்சிலை உண்ணும் எறும்புகள் அடையும் விருந்து. யானையின் கால்கள் நடுவே ஊரும் எறும்புகளுக்கு தலைக்குமேல் அத்தனை பெரிய உருவம் நடந்து செல்வது தெரிவதே இல்லை. அவை அதை அறியாததனாலேயே பேருவகையுடன் இருக்கின்றன. சூதனுக்கு அறியாமையே பெரும் கவசம். அறிவு அக்கவசத்துடன் அவன் ஏந்தும் சிறிய வாள் மட்டுமே.”

ஒவ்வொருநாளும் முதற்கதிர் எழுவதற்குள்ளாகவே கர்ணன் சென்று அரண்மனை வாயிலில் இறங்குவான். அரண்மனை ரதசாலைக்குச் சென்று அங்கு ஒருக்கப்பட்டிருக்கும் ரதத்தைக்கொண்டுவந்து அந்தப்புரத்தின் பெருமுற்றத்தில் காத்து நிற்பான். மாலினி நகுலனையும் சகதேவனையும் கொண்டுவந்து அவனுடைய ரதத்தில் ஏற்றியதும் கிளம்பி இருள் விலகாத தெருக்களினூடாக கிருபரின் குருகுலம் நோக்கிச் செல்வான். ஆடிப்பாவைகள் போலத் தெரியும் இரு குழந்தைகளும் அரைத்துயிலிலேயே வந்து பீடத்தில் அமர்ந்ததும் ஒருவர்மீதொருவர் சாய்ந்து துயில் கொள்வார்கள். அவன் ரதபீடத்தில் அமர்ந்து திரும்பி நோக்கி புன்னகை செய்வான். இருவருமே துயிலில் ஆழ்ந்ததும் எச்சில் வழியும் வாயுடன் இருபக்கமாக ஆடிக்கொண்டு ரதத்தின் குலுக்கலில் அவ்வப்போது விழித்து திரும்பவும் துயில்கொள்வார்கள்.

கிருபரின் குருகுலமுகப்பில் இளம்கௌரவர்களை கொண்டுவந்த ரதங்கள் நின்றிருக்கும். ரதம் நின்றதும் கர்ணன் இருவரையும் தூக்கி மண்ணில் நிற்கச்செய்வான். இருவரும் ஒரே போல திகைத்து விழித்துக்கொண்டு விடிவெள்ளி எழுந்த வானையும் குளிர்காற்று வீசும் சூழலையும் நோக்கி மிரள விழித்து, பின் வாயை துடைத்துக்கொள்வார்கள். முதல்நாள் அவர்களை அவன் கிருபரிடம் கூட்டிச்சென்றபோது நகுலன் “குருநாதரே, இன்று எனக்கு உடல்நலமில்லை. என் கால்கள் வலிக்கின்றன” என்றான். புன்னகையுடன் “ஏன்?” என்றார் கிருபர். நகுலன் “இவர் புதிய ரதமோட்டி… புரவிகள் மேல் கட்டின்றி ஓட்டுகிறார். ரதத்தில் வந்தபோது என் முழங்கால் முன்பலகையில் முட்டிக்கொண்டது” என்று தன் முழங்காலைக் காட்டினான். “ஆம் குருநாதரே, என் முழங்காலிலும் முட்டியது” என்று சகதேவனும் தன் முழங்காலைக் காட்டினான்.

கிருபர் சிரித்தபடி குனிந்து “ஆம், மூட்டில் அடிபட்டிருக்கிறது. அதை சரிசெய்தபின்னர் நாம் பயிற்சிகளைத் தொடங்குவோம். சுசரிதரே!” என்று தன் முதன்மைச்சீடனை அழைத்தார். அவர் வந்து பணிந்து நிற்க “இளவரசர்களை முற்றத்தைச் சுற்றி எட்டுமுறை ஓடவையுங்கள். மூட்டுகளின் வலி குறைந்தபின் நாம் பயிற்சிகளைத் தொடங்குவோம்” என்றார். திரும்பி கர்ணனிடம் “உனது பெயர்தான் வசுஷேணன் என நினைக்கிறேன்” என்றார். கர்ணன் அவர் பாதங்களை வணங்கி “ஆம் குருநாதரே. அங்கநாட்டு அதிரதனின் மைந்தன் நான்” என்றான். “அரண்மனையின் ஆணை வந்தது. இக்குருகுலம் பேரரசரின் ஆணையையே நெறியாகக் கொண்டது” என்றார் கிருபர்.

சுசரிதர் இரு இளவரசர்களையும் இடையில் கச்சை கட்டச்செய்து மகாமுற்றம் நோக்கி கூட்டிச்சென்றார். அவர்களின் விழிகள் கர்ணன் விழிகளை ஒருகணம் சந்தித்தபோது இருவரும் பார்வையை விலக்கி தலைகுனிந்து செல்ல கர்ணன் புன்னகைசெய்தான். கிருபரும் அவர்களை நோக்கிச் சிரித்து “ஒவ்வொரு பறவையும் கூட்டின் வெம்மையை இத்தனை நாள்தான் அடையவேண்டுமென நெறியிருக்கிறது. மேலும் சிலநாள் கூட்டில் இருந்துவிட்ட பறவைகள் பிறகொருபோதும் இயல்பாகப் பறப்பதில்லை” என்றார். கர்ணன் “அன்னையின் மடியிலேயே இருப்பதை விட வேறென்ன வேண்டும்?” என்றான்.

ரதங்களில் வந்து இறங்கிய இளம்கௌரவர்கள் ஒவ்வொருவராக வணங்கி களம் சென்றபின் “இங்கே உன்னை அரண்மனையில் இருந்து அனுப்பியிருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் வியப்பளிக்கும் செய்தி. இக்குருகுலம் அஸ்தினபுரியின் அரசுக்குக் கட்டுப்பட்டது” என்ற கிருபர் மிக இயல்பாக “எந்நிலையிலும் உன் கைகள் அஸ்தினபுரிக்கு கட்டுப்பட்டவையே என உன் குலநெறி வகுத்துள்ளது என்று நினைக்கிறேன்” என்றார். “அல்லது நீ அந்தச் சூளுரையை எடுத்திருக்கிறாய்.”

கர்ணன் “இல்லை குருநாதரே” என்றான். கிருபர் வியந்து திரும்பிநோக்கி “நீ அஸ்தினபுரியின் அரசமரபுக்கு எவ்வகை உறவு?” என்றார். கர்ணன் “எவ்வுறவும் இல்லை” என்றான். அவர் சிலகணங்கள் அவனையே நோக்கியபின் “மாமன்னரே ஆணையிட்டிருக்கிறார் என்றால் நான் சொல்வதற்கேதும் இல்லை” என்றார். “நான் நெறிகளுக்குக் கட்டுப்பட்டவன் என்பதை நீ உணர்ந்துகொள்வாய் என எண்ணுகிறேன். இது ஷத்ரியர்களுக்குரிய குருகுலம். அவர்களுடன் உன்னை இணையாகச் சேர்த்து நிறுத்திக் கற்பிப்பது என்னால் இயலாது. உனக்கு நான் தனியாக கற்பிக்கிறேன்” என்றபின் “உன் விரல்களைக் கண்டேன். நீ விற்கலையை முன்னரே கற்றிருக்கிறாய். எவரிடம் கற்றாய்?” என்றார்.

கர்ணன் சொன்னதை இமைக்காமல் நோக்கியபின் “ஐந்துவகை குருநாதர்களில் ஆன்மாவை நான்காவதாகச் சொல்கிறார்கள். ஏனென்றால் கல்லுக்குள் அனல் உறங்குவதுபோல ஆன்மாவுக்குள் ஞானம் குடிகொள்கிறது. அதை அறியும் ஒருவன் தன் தவம் மூலம் ஆன்மாவிலிருந்தே அனைத்தையும் கற்றுக்கொள்ளமுடியும். ஆன்மாவையே குருவாக்கியவனுக்கு பிற குருநாதர்கள் எதையும் கற்றுத்தரவேண்டியதில்லை” என்றார் கிருபர். “இந்த வில்லை எடுத்து விண்ணில் செல்லும் ஒரு பறவையை வீழ்த்திக்காட்டு” என்றார்.

கர்ணன் கிருபரை வணங்கியபின் வில்லை எடுத்து கணத்தில் நாணேற்றி அந்த இருண்ட வானில் இளைய கௌரவன் ஒருவனால் செலுத்தப்பட்ட நீண்ட அம்பை அடித்து வீழ்த்தினான். அம்புகள் மண்ணில் வந்து தைத்ததும் கிருபர் அவனை நோக்கித் திரும்ப கர்ணன் “அம்பும் ஒரு பறவை அல்லவா குருநாதரே?” என்றான். கிருபர் “ஆம், சுபக்‌ஷ, சுகோண, சுதேஹ என்று அம்பைச் சொல்கிறது வில்வேதம்” என்றபின் “அம்பை ஏன் வீழ்த்தவேண்டுமென எண்ணினாய்?” என்றார். “இது கருக்கல்கரையும் வேளை. முதலில் விண்ணிலெழும் பறவைகள் குஞ்சுக்கு இரைதேடச் சென்றுகொண்டிருக்கும் அன்னையராகவே இருக்கும்…” என்றான் கர்ணன். கிருபர் சிலகணங்கள் அவனை நோக்கியபின் “நீ கற்கவேண்டியது வில்வித்தை அல்ல. வில்வேதம் மட்டுமே. என்னுடன் இருந்துகொண்டிரு” என்று சொல்லிவிட்டு திரும்பிச்சென்றார்.

அன்று திரும்புகையில் நகுலனும் சகதேவனும் அவர்களாகவே ரதத்தட்டில் ஏறி அமர்ந்துகொண்டனர். கர்ணன் அவர்களை நோக்காமல் அமரத்தில் ஏறி அமர்ந்து கடிவாளத்தைச் சுண்டி ரதத்தை செலுத்தினான். ரதம் சாலைகள் வழியாகச் செல்லும்போது இரு சிறுவர்களும் ஒன்றுமே பேசாமல் அமர்ந்திருந்ததை அவன் புன்னகையுடன் கருத்தால் நோக்கிக்கொண்டிருந்தான். ரதம் கொற்றவை ஆலயத்தருகே வளைந்தபோது சற்று விரைவிழந்தது. நகுலன் “சூதரே” என்றான். கர்ணன் “சொல்லுங்கள் இளவரசே” என்றான். “மூட்டில் கட்டை பட்டுவிட்டது என்று சொல்லலாம் என்று இவன்தான் என்னிடம் சொன்னான்” என்றான் நகுலன். சகதேவன் சினம் கொண்டு “நீதான் சொன்னாய்! நீதான் சொன்னாய்!” என்று சொல்லி நகுலனை அடித்தான்.

“நீதான் சொன்னாய்! சூதரே இவன்தான் சொன்னான்” என்று நகுலன் கூவ இருவரும் மாறிமாறி கூவி சண்டையிடத் தொடங்கினர். கர்ணன் ரதத்தை நிறுத்தி “நிறுத்துங்கள்” என கனத்த குரலில் சொன்னதும் இருவரும் திகைத்து கைகளை எடுத்துக்கொண்டனர். நகுலன் மெல்லிய குரலில் “இவன்தான்” என்றான். “இருவருமே சொன்னீர்கள்” என்றான் கர்ணன். சகதேவன் கண்ணீர் மல்க குரலைத் தாழ்த்தி “இனிமேல் சொல்லமாட்டோம்” என்றான். கர்ணன் புன்னகையுடன் “இனிமேல் சொன்னால் இருவரையும் தூக்கி ரதத்தின் மேலே போட்டுக்கொண்டு ஓட்டுவேன்” என்றான். அதற்கு மீண்டும் “இவன்தானே சொன்னான்?” என்றான் சகதேவன். “நீதான் சொன்னாய் வெள்ளைப்பூனை” என்று நகுலன் கூவினான். “போதும்” என கர்ணன் மீண்டும் குரலெழுப்ப நகுலன் “இனிமேல் சொல்ல மாட்டோம்” என்றான். “நீங்கள் சொல்லமாட்டீர்கள் இளவரசே, நீங்கள் நல்ல குழந்தை” என்றான் கர்ணன். “நான்?” என சகதேவன் ஆவலுடன் கேட்டான். “இருவரும் நல்ல குழந்தைகள்…” என்றான் கர்ணன். “சரி, இருவரும் சண்டை போடாமல் அமர்ந்திருக்கவேண்டும்…” என்று சொல்லி ரதத்தை கிளப்பினான்.

அரண்மனை முற்றத்தில் ரதம் நின்றபோது நகுலன் இருகைகளையும் விரித்து தூக்கும்படி சொன்னான். அவனைத் தூக்கிக்கொண்டதும் சகதேவனும் கைகளை நீட்டினான். கர்ணன் இருவரையும் இரு புயங்களில் தூக்கிக்கொள்ள அவர்கள் உரக்க நகைத்தனர். “ஸ்வேதா, இவர் பீமன் அண்ணாவை விட உயரமானவர்” என்றான் சகதேவன். “ஆம்… இவரது கைகள் நீளமானவை” என்றான் நகுலன். கர்ணன் “உங்கள் பெயர்தான் ஸ்வேதனா?” என்றான். “ஆம். அவன் கருமையாக இருப்பதனால் சாரதன். என் நிறம் வெள்ளையாக இருப்பதனால் நான் ஸ்வேதன்… எங்கள் அன்னை அவ்வண்ணம்தான் அழைக்கிறாள்” என்றான் சகதேவன். “நான் ஆடியில் என்னைப்பார்த்தால் அவன் தெரிகிறான். அவன் கெட்டவன். ஆகவே நான் ஆடியில் பார்ப்பதே இல்லை…”

அவர்களை அரண்மனை இடைநாழியில் நின்ற மாலினி வந்து வாங்கிக்கொண்டாள். “என்ன கற்றீர்கள் இளவரசே?” என்று அவள் கேட்க நகுலன் “காலில் ரதம் இடிக்கவேயில்லை…” என்றான். சகதேவன் அவள் தலையை பிடித்துத் திருப்பி “என் காலிலும் இடிக்கவேயில்லை தெரியுமா?” என்றான். கைகளைத் தூக்கி “நாளைக்கும் இடிக்கவே இடிக்காது… அதனால் நான் நாளைக்கு முற்றத்தில் ஓடவே மாட்டேன்” என்றான். மாலினி திரும்பி கர்ணனை நோக்கி புன்னகை செய்துவிட்டுச்சென்றாள். நகுலன் “காட்டுக்குள் செல்லும்போது குழந்தைகளை ஓடவே சொல்லக்கூடாது. ஓடினால் குழந்தைகளுக்கு கால்கள் வலிக்கும் தெரியுமா? அவை எல்லாம் சின்னக்குழந்தைகள்தானே?” என்று சொல்லிக்கொண்டே சென்றான்.

கர்ணன் திரும்பி ரதம் நோக்கிச்செல்லும்போது உப்பரிகையில் ஒரு வெண்ணிற அசைவைக் கண்டு விழிதூக்கினான். முகத்தை மூடிய வெண்ணிற ஆடையுடன் உப்பரிகை வழியாக நடந்து செல்பவள்தான் யாதவப்பேரரசி என்று அந்த அசைவிலேயே கண்டுகொண்டான். அவன் அவளைப்பற்றி எண்ணிக்கொண்டே ரதத்தில் சென்றான். அன்று ராதையிடம் “இன்று நான் யாதவப் பேரரசியைப் பார்த்தேன். வெண்ணிற ஆடையில் உப்பரிகை வழியாகச் சென்றார்கள்” என்றான். ராதை ஆவலுடன் “அழகியா?” என்றாள். “அவர்களின் ஆடைமூடிய பக்கவாட்டு முகத்தையே நோக்கினேன். நிமிர்ந்த உயரமான தோற்றம் கொண்டவர்கள்…” என்றான்.

ராதை “பேரழகி என்று சொல்கிறார்கள் இங்கே…. அவர்களின் அழகை மைந்தர்களில் எவரும் அடையவில்லை என்கிறார்கள்” என்றாள். அதிரதன் உரக்க “இந்த அஸ்தினபுரியில் அவர்கள்தான் உண்மையில் அரசி. இங்கே வீரர்கள் அனைவரும் அவர்களின் பெயர் சொன்னாலே பணிகிறார்கள்” என்றார். “பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினி அவர்கள்தான் என்று ஒரு சூதன் பாடியதும் வீரர்கள் வாழ்த்துக்கூவியபடி செம்புநாணயங்களை அள்ளி அவனுக்குப்போட்டார்கள்…” என்றார். ராதை “ஆம் அது எவருக்குத்தெரியாது?” என்றாள். அதிரதன் ஆர்வத்துடன் அருகே வந்து “ஆனால் காந்தார அரசியை அனைவருமே வெறுக்கிறார்கள். இங்கே இரு அரசியரின் மைந்தர்களில் எவர் அரியணை ஏறுவதென்று ஒரு பூசல் இருக்கிறது தெரியுமா?” என்றார்.

ராதை “வெளியே போ கிழவா. நான் என் மைந்தனிடம் பேசிக்கொண்டிருக்கிறேனல்லவா?” என்று சீற அதிரதன் “சமையற்காரிக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்” என்று முணுமுணுத்தபடி வெளியே சென்றார். ராதை “மறுமுறை அவர்களைப் பார்க்கையில் அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கு. அல்லது அப்பாதங்கள் பட்ட மண்ணைத் தொட்டு சிரத்தில் வைத்துக்கொள்” என்றள். கர்ணன் “ஏன்?” என்றான். “அவர்கள் கொற்றவையின் வடிவம்” என்றாள் ராதை.

கர்ணன் எழுந்துகொண்டு “அன்னையே நான் இப்பிறவியில் உங்களிருவரின் பாததூளியன்றி எதையும் அணியமாட்டேன்” என்றான். ராதை சினத்துடன் “நான் சொல்வதை நீ கடைப்பிடிக்கவேண்டும்…” என்றாள். “இன்னொருவரை பணியும்படி நீங்கள் ஆணையிட்டால் அதை நான் ஏற்கமுடியாது. இன்னொருவரைப் பணியும்போது உங்களை மட்டுமே பணிவதன் பேரின்பத்தை இழந்தவன் ஆவேன்” என்றபின் எழுந்து வெளியே சென்றான்.

மறுநாள் இரு இளவரசர்களையும் ரதத்தில் ஏற்றிக்கொள்கையில் நகுலன் “மூத்தவரே, இன்றைக்கும் நான் ஓடவேண்டுமா?” என்று ஏக்கத்துடன் கேட்டான். “இல்லை, இன்றைக்கு ஓடச்சொல்லக்கூடாது என்று நான் சுசரிதரிடம் சொல்லிவிடுகிறேன்” என்றான். சகதேவன் “அன்னை உங்களை சூதரே என்று அழைக்கக்கூடாது என்று சொன்னார்கள். மூத்தவரே என்றுதான் அழைக்கவேண்டும் என்றார்கள். நீங்கள் மூத்தவர்தானே? அதனால்தானே நீங்கள் அவ்வளவு உயரமாக இருக்கிறீர்கள்?” என்றான். சகதேவன் “நீங்கள் வில் தொடுப்பதை நான் பார்த்தேன்…” என்றபின் எழுந்து கைகளை விரித்து “அவ்வளவு பெரிய அம்பு” என்று சொல்லி ரதத்தின் ஆட்டத்தில் தண்டில் மண்டையை மோதிக்கொண்டான்.

கர்ணனின் கண்கள் அலைந்து இடைநாழிகளைத் துழாவி மீண்டன. எதைத்தேடுகிறேன் என்று அவன் உள்ளூர எண்ணிக்கொண்டான். யாதவப்பேரரசியையா? அவர்களை ஏன் அவன் நோக்கவேண்டும்? அவளை முதலில் பார்த்ததும் அவனுள் எழுந்த அந்த படபடப்புக்கு என்ன பொருள்? எங்கோ அவன் அவளை எண்ணிக்கொண்டிருக்கிறான். அவன் அகம் அறிந்த உண்மை ஒன்றுண்டு, அவள் அவனை அறியாமல் நோக்கிக்கொண்டிருக்கிறாள். அவனுக்குச் சுற்றும் சதுரங்கக்காய்களை நீக்கிக்கொண்டிருப்பவள் அவள்தான். மாலையில் அவர்களைக் கொண்டு விடும்போதும் அவன் விழிகளால் துழாவினான். ஒவ்வொருநாளும் அந்தப் பரபரப்பு இருந்தது. ஆனால் அதன்பின் அவன் அவளைப்பார்க்கவில்லை.

பின்பு அவ்வரண்மனையே அவளாக மாறியது. அதன் சாளரங்கள் அனைத்தும் விழிவிரித்து அவனை நோக்கின. அதன் வாயில்கள் இதழ்திறந்து அவனைநோக்கி ஏதோ கூறின. அதன் ஓசைகள் அவனிடம் அறியாத மொழியில் பேசிக்கொண்டிருந்தன. அவ்வரண்மனையைக் காண்பதே அவன் நெஞ்சை கோல்கொண்ட முரசென ஒலிக்கச்செய்தது. ஒவ்வொரு நாளும் அவ்வரண்மனையின் முற்றத்தை எண்ணியபடி காலையில் கண்விழித்தான். கனத்து குளிரும் கால்களுடன் அங்கே வந்து ரதத்துடன் காத்து நின்றான். “மூத்தவரே!” என்று கூவியபடி உருவும் நிழலும் ஒருங்கே வருவதுபோல வந்த இரட்டையரை அள்ளி ரதத்தில் ஏற்றும்போது எங்கோ தன்னை எவரோ நோக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தான்.

அன்று அவன் ரதமுற்றத்தை அடைந்தபோது அங்கே முன்னரே மூடுதிரையிட்ட அரசரதம் ஒன்று நின்றிருந்தது. இரண்டு காவல் வீரர்கள் வேலுடன் நிற்க அப்பால் இன்னொரு ரதம் நின்றது. தன் ரதத்துடன் வந்த கர்ணன் சற்றுத் தயங்கி முற்றத்தின் ஓரமாக நின்றுகொண்டான். மூடுதிரையிடப்பட்ட ரதத்தில் மார்த்திகாவதியின் யாதவர்களுக்குரிய சிம்மக்கொடி பறந்துகொண்டிருந்தது. நெஞ்சு படபடக்க கர்ணன் கைகளைக் கட்டிக்கொண்டு காத்து நின்றான். உள்ளே இடைநாழியில் மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் எழுந்தன. முதற்கோலி முன்னால் வந்து தன் வெள்ளிக்கோலைத் தூக்கி “யாதவப் பேரரசி வருகை” என்று அறிவித்ததும் கோட்டைமேலிருந்த பெருமுரசம் மெல்ல அதிர்ந்தது. கொம்பும் சங்கும் பிளிறியடங்கின.

மங்கலப்பரத்தையரும் அணுக்கச்சேடியரும் இருபக்கமும் வர குந்தி வரும் ஆடையோசையை கர்ணன் கேட்டான். விழிகளைத் தூக்கி அவன் நோக்கியபோது இரு வெண்பாதங்கள் பட்டுமிதியடிகளைக் கவ்வியபடி வருவதைக் கண்டான். அவற்றுக்குமேல் பட்டாடையின் பொன்னூல்விளிம்பு உலைந்து குலைந்து நெளிந்தது. மான்விழிகள் என ஒளிவிட்ட பத்து நகங்களும் அவனை நோக்கி புன்னகைத்தன. மண்ணைத் தொட்டுத்தொட்டு ஆசியளித்துச் சென்றன அவை. படிகளில் இறங்கி முற்றத்து செங்கல்பரப்பில் நடந்து பட்டுமெத்தையிட்ட ரதத்தின் படிகளில் ஏறி செம்பட்டுத்திரைச்சீலைக்குள் மறைந்தன. ரதம் குலுங்கித் திரும்பியபோது அவன் நீள்மூச்சுடன் அம்பு சென்ற வில்லென தளர்ந்தான்.

“மூத்தவரே!” என்றுகூவியபடி இளவரசர்கள் இடைநாழியைக் கடந்து அவனை நோக்கி ஓடிவந்தனர். அவன் அவர்களைத்தூக்கி ரதத்தட்டில் அமரச்செய்தான். அவர்களுக்குப்பின்னால் வந்த வெண்மஞ்சள் நிறமான பேருடல் கொண்டவன் தன் ரதத்தை அணுகியபின் திரும்பி அவனையே நோக்கினான். அவர்கள் விழிகள் சந்தித்ததும் அவன் திரும்பி ரதத்தில் ஏறிக்கொண்டான். கர்ணன் தன் ரதத்தைக் கிளப்பினான்.

“அதுதான் எங்கள் மூத்தவர் பீமசேனர். உலகிலேயே ஆற்றல்மிக்க தோள்கள் கொண்டவர்” என ஆரம்பித்த நகுலனின் கைகளைப் பிடித்து தடுத்து சகதேவன் முந்தி வந்து “அவர்… அவர் அவ்வளவு பெரியவர்” என்றான். நகுலன் இடைமறித்து “யானையையே அவர் அடித்து வீழ்த்திவிடுவார். கதாயுதத்தை…” என சொல்ல அவனைப் பிடித்துத் தள்ளிய சகதேவன் “போடா… போடா… யானையை இல்லை… குதிரையை… பெரிய குதிரையை” என்றான். “போடா, யானையை. நான் பார்த்தேன்” என்று நகுலன் அவனை அடித்தான். “சண்டைகூடாது” என்று கர்ணன் உரக்கச் சொல்ல நகுலன் “இவன்தான் பொய் சொல்கிறான் மூத்தவரே” என்றான். “போடா, நீதான்” என்றான் சகதேவன். “இருவரும் உண்மைதான் சொல்கிறீர்கள்” என்றான் கர்ணன் சிரித்துக்கொண்டே.

“மூத்தவர் பீமசேனர் அங்கே வடக்கே பால்ஹிகநாட்டில் கதைபயிலச் செல்கிறார்” என்றான் நகுலன். சகதேவன் “பால்ஹிகநாட்டில் இருந்து அவர் எங்களுக்கு மூன்று…” என்று கையைக் காட்டி அவ்விரல்களை நோக்கியபின் அதை தலையை ஆட்டி அழித்து “…இல்லை நான்கு பெரிய யானைக்குட்டிகளை கொண்டுவந்து தருவார்” என்றான். “அவர் எப்போது பால்ஹிக நாட்டுக்குச் சென்றார்?” என்றான் கர்ணன் “நாங்கள் சின்னக்குழந்தைகளாக இருக்கும்போது” என்றான் நகுலன். “அதன்பின் இப்போதுதான் வருகிறார்… இனிமேல் நாங்கள் பெரியவர்களாக ஆனபின்னர்தான் வருவார்.” சகதேவன் “யானைகளை கொண்டுவருவார்” என்றான்.

தன் முகம் புன்னகையில் மலர்ந்திருப்பதை கர்ணன் சற்றுக்கழித்துதான் உணர்ந்தான். உடனே மேலும் நகைத்துக்கொண்டு புரவியின் மீது சவுக்கால் தட்டினான். அறியாமலேயே தன் நாவில் எழுந்த சொற்கள் எப்போதோ அங்கநாட்டில் பஞ்சமகாதேவி பூசையன்று கேட்டவை என்று அறிந்தான். ‘மும்மூர்த்திகளின் தலைகள்மேல் வைக்கப்பட்ட ஒளிரும் பாதங்களே, பிரம்மம் என்று உங்களைச் சொல்கிறார்கள் ஞானியர்.’ பின் அந்த ஈரடிகளின் முன்னும் பின்னுமாகச் சென்று அந்த வரிகளை முழுக்க நினைவில் மீட்டுக்கொண்டான். ‘நீ துர்க்கை! நீ லட்சுமி! நீ சரஸ்வதி! நீ சாவித்ரி! நீயே ராதை! அன்னையே, அகிலத்தை ஒளிபெறச்செய்யும் ஐந்துமுகம் கொண்ட அணையா விளக்கல்லவா நீ?’

கிருபரின் குருகுலத்தில் அவர் அருகே நின்று அவர் கற்பிப்பதை கண்டுகொண்டிருக்கையிலும் அவனுள் அச்சொற்களே ஓடிக்கொண்டிருந்தன. சுசரிதர் நகுலனுக்கும் சகதேவனுக்கும் வாளேந்தக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார். இருவரும் அவர் சொல்வதை சுருங்கிய விழிகளுடன் நோக்கி நின்றனர். கர்ணன் அருகே சென்றான். இளையவர்கள் சுசரிதரை கண்களைச் சுருக்கி நோக்கியபடி அரைமண்டியில் நின்றனர்.

“அங்குஷ்டம், குல்ஃபம், பாணி, பாதம் என நான்கும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ள நிலையை சமபதம் என்கிறார்கள். சமபதத்தில் உடல் இரு எடையும் முற்றிலும் நிகராக உள்ள தராசுத்தட்டின் முள் போல நிற்கிறது. அந்நிலையில் மானுடனால் அதிகநேரம் நிற்கமுடியாது” என்றார் சுசரிதர். “ஏன்?” என்றான் சகதேவன். “ஏனென்றால் சமபதத்தில் இயல்பாக நிற்கும் உயிர்களே மண்ணில் இல்லை” என்றார் சுசரிதர். “ஏன்?” என்று சகதேவன் மீண்டும் கேட்டான். “அது உடலின் இயல்பல்ல என்பதனால்தான்” என்று சுசரிதர் சொன்னார். “ஏன்?” என்று சகதேவன் மீண்டும் கேட்க சுசரிதர் “அவ்வாறு நூலில் சொல்லப்பட்டிருக்கிறது” என்றார். “ஏன் நூலில் அவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது?” என்றான் சகதேவன்.

கர்ணன் புன்னகையுடன் அருகே வந்து குனிந்து “ஏனென்றால் மானுடனின் அகம் பலதிசைகளிலும் பீரிட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே தராசுத்தட்டு அலைபாய்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு திசைவேகத்தையும் தன் சித்தத்தால் அடக்கியபடியே மானுடன் சமபதத்தில் நிற்கிறான். அவன் அகம் அவ்வாறு அகத்தை அடக்கியிருக்கையில் மட்டுமே சமபதம் நீடிக்கும். அகம் சற்றே விலகினாலும் உடல் அதைக் காட்டும்” என்றான். “வாளை எடுங்கள் இளவரசே!”

இருவரும் வாள்களை எடுத்துக்கொண்டார்கள். “சமபதத்தில் நில்லுங்கள்” என்று அவன் சொல்ல இருவரும் சமபதத்தில் வாளை முன்னால் நீட்டி நின்றனர். “வாள்நுனியை மட்டும் கருத்தில்கொள்ளுங்கள்… நீங்கள் எண்ணும் திசை எதுவோ அத்திசை நோக்கி உங்கள் வாள் அசைவதைக் காண்பீர்கள்” என்றான் கர்ணன். அவர்கள் அசையாமல் நிற்க அப்பால் ரதம் ஒன்று வரும் ஒலி கேட்டது. அவர்கள் இருவரின் வாள்களும் ஒரேசமயம் அத்திசை நோக்கித் திரும்பின. நகுலன் “மூத்தவர், பீமசேனர்!” என்றான். அதேகணம் கர்ணன் அவன் வாளை தன் வாளால் அடித்தான். “ஒவ்வொரு விழிவிலகலும் உயிரைப்பறிக்கும்” என்றான்.

நகுலன் தன் வாளைச்சுழற்றி கர்ணனின் வாளைத் தாக்க சகதேவனும் வீசியபடி முன்னால் வந்தான். கர்ணன் இருவாள்களையும் தன் வாளால் தடுத்துக்கொண்டு முன்னேறினான். கர்ணன் தனக்குப்பின்னால் பீமன் வந்துவிட்டதை உணர்ந்து திரும்புவதற்குள் பீமன் உரக்க “டேய் சூதா… நிறுத்து…” என்று கூவினான். கையில் வாளுடன் கர்ணன் திகைத்து நிற்க அப்பால் பயிற்சியில் இருந்த இளங்கௌரவர்களும் கிருபரும் திரும்பி நோக்கினர். “சுசரிதரே, இளையவர்களை அழைத்துச்செல்லுங்கள்” என்று பல்லைக்கடித்துக்கொண்டு சொன்ன பீமன் “நீ சூதன் அல்லவா?” என்று கர்ணனிடம் கேட்டான்.

கர்ணன் “ஆம்” என்றான். பீமனின் கண்கள் நீர்ப்படலத்துடன் சிவந்திருந்தன. அவன் கழுத்தின் நரம்புகள் இழுபட்டு தோள்தசைகள் உருண்டு அசைந்தன. “நீசா, ஷத்ரியர்களுக்கு எதிராக வாளேந்த எப்படித் துணிந்தாய்?” என்றான் பீமன். கிருபர் “பீமா, வேண்டாம். நில்! நான் சொல்வதைக்கேள்!” என்று கூவியபடி ஓடிவந்தார். “கர்ணா, நீ எதிர்க்காதே… என் ஆணை” என்றார்.

“இது எளிய பயிற்சிதான் வீரரே” என்று கர்ணன் சொல்வதற்குள் பீமன் “சீ, இழிபிறவியே, எந்த நெறிநூல் உனக்கு வழிகாட்டியது?” என்றான். கர்ணன் “இது வெறும் பயிற்சி என்பதனால்…” என்று மீண்டும் சொல்வதற்குள் பீமன் கர்ணனின் முகத்தில் ஓங்கியறைந்தான். நிலைதடுமாறிச் சரிந்து உடனே அனிச்சையாகச் சுழன்று எழுந்த கர்ணனின் வாள் ஒளிர்ந்து எழ “கர்ணா, என் ஆணை, எதிர்க்காதே” என்று கூவியபடி அருகே வந்தார் கிருபர்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

பீமன் மீண்டும் கர்ணனை ஓங்கி அறைந்தான். உதட்டிலும் பற்களிலுமாகப் பட்ட அடியின் விசையில் கர்ணன் மண்ணில் பின்னால் சாய்ந்து விழுந்தான். “இழிமகனே, இனி நீ ஷத்ரியர் முன்னால் படைக்கலத்துடன் நிற்பதைக்கண்டால் அக்கணமே உன் தலையை வெட்டி வீசுவேன். சென்று சம்மட்டியை எடுத்துக்கொள்… போடா” என்று சொன்னபடி எட்டி கர்ணனின் மார்பில் உதைத்தான் பீமன். மண்ணில் சிரம் பட மல்லாந்து விழுந்து கிடந்த கர்ணனின் முகத்தின்மேல் காறித்துப்பிவிட்டு பீமன் திரும்பி நடந்தான்.

கிருபர் அவன் பின்னால் ஓடியபடி “இளவரசே, இவர் இங்கே பயிலவேண்டுமென்பது மாமன்னரின் ஆணை” என்றார். சினத்துடன் திரும்பிய பீமன் “அப்படியென்றால் மாமன்னரிடம் நான் போரிடுகிறேன். அவர் கையால் சிரம் உடைந்து இறக்கிறேன். ஆனால் இந்த இழிமகன் இனி இங்கே பயிலலாகாது. இனி இவன் ஷத்ரியர்களுக்கு இணையாக நின்று வாளேந்தலாகாது. இது என் ஆணை…” என்றபின் சென்று தன் ரதத்தில் ஏறிக்கொண்டான்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஎம்.டி.எம் விளக்கம்
அடுத்த கட்டுரைஇமயம் நோக்கி மீண்டும்…