‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 54

பகுதி எட்டு : கதிரெழுநகர்

[ 6 ]

அஸ்தினபுரியின் கோட்டைமுகப்புக்கு அவர்களின் ஒற்றைக்காளை வண்டி வந்தபோது அதிகாலை. இருள் விலகாத குளிர்ந்த வேளையில் பொறுமையிழந்து கழுத்து அசைக்கும் காளைகளின் மணியோசைகளும், சக்கரங்களில் அச்சு உரசும் ஓசைகளும், மெல்லிய பேச்சொலிகளுமாக மாட்டுவண்டிகள் நுகக்குடங்களும் பின்கட்டைகளும் உரச காத்து நின்றிருந்தன. நுகத்தில் இருந்து இறங்கி கால்களை உதறிக்கொண்ட கர்ணன் திரும்பிப்பார்த்தபோது மறு எல்லை தெரியாமல் வண்டிகளில் எரிந்த விளக்கொளிப்புள்ளிகள் தெரிந்தன. அனைத்துவண்டிகளும் இரவெல்லாம் புழுதிபடிந்த சாலைகள் வழியாக வந்தவை. காளைகளின் வியர்வை நெடி நிறைந்த காற்று அசைவில்லாமல் அவர்களைச் சூழ்ந்திருந்தது.

வண்டிக்குள் வைக்கோலில் அமர்ந்திருந்த ராதை கர்ணனிடம் “வெள்ளி எழுந்துவிட்டதா?” என்றாள். கர்ணன் “இல்லை” என்றான். ராதை “அது மூன்றுமுழம் எழுந்ததும்தான் கோட்டைவாயில் திறக்கும்” என்றபின் முனகியபடி கால்களை நீட்டிக்கொண்டாள். வண்டியின் முன்பக்கம் ஒடித்துச் சுருட்டப்பட்டது போல அதிரதன் துயின்றுகொண்டிருந்தார். ராதை புன்னகையுடன் “ரதத்தட்டில் மடிந்து தூங்கி பழகியிருக்கிறார்” என்றாள். கர்ணன் அவரது காலை மெல்ல இழுத்து நுகத்தின்மேல் நீட்டி வைத்தான். அவர் “வணங்குகிறேன் வீரரே” என்றபடி மீண்டும் கால்களை மடித்து கைகளை நெஞ்சில் கட்டிக்கொண்டார்.

கர்ணன் அஸ்தினபுரியின் கோட்டைமுகப்பை ஏறிட்டு நோக்கினான். அமுதகலச முத்திரைபொறிக்கப்பட்ட பெரிய கதவுகள் மூடியிருக்க கோட்டைமேல் எரிந்த பந்தங்கள் காற்றில் சிதறிச்சிதறி தீக்கிழிசல்களாகப் பறந்தன. கோட்டைக்காவலர்கள் செந்தழல் ஒளிரும் வேல்நுனிகளுடன் நடைமாற்றிக்கொண்டனர். அப்பால் யானைகளின் பிளிறல்கேட்டது. அங்கிருந்த அனைவரும் கோட்டை வாயிலையே நோக்கிக் கொண்டிருந்தனர். சிலவண்டிகளில் குழந்தைகள் விழித்துக்கொண்டு அழ அன்னையரின் குரல்கள் கேட்டன. வண்டிகளுடன் வந்த நாய் ஒன்று தன் வண்டியருகே வந்த இன்னொருநாயை மேலுதடு வளைத்து சீறி முன்னால் வந்து எச்சரிக்க அதன் உரிமையாளன் அதை மெல்ல அதட்டி அருகழைத்தான்.

பிரம்ம முகூர்த்தத்தில் கருக்கிருட்டு மேலும் அடர்ந்தது. வானின் பகைப்புலத்தில் உருவம் கொண்டிருந்த மரங்களும் வீடுகளும் கரைந்து மறைய கண்கள் பார்வையை இழப்பது போல அனைத்தும் இருண்டுகொண்டே சென்றன. அஞ்சி எழுந்த பறவைக் குஞ்சு ஒன்று எழுப்பிய குரல் மிக அருகே ஒலித்தது. அனைவரும் காத்து நின்றனர். இருளில் அவர்கள் செவிப்புலன்களில் குவிந்த பிரக்ஞைகள் மட்டுமாக இருந்தனர். வண்டிகளில் இருந்து ஓசை எழுந்தபோதுதான் கர்ணன் விடிவெள்ளியைக் கண்டான். அது அசைவற்று வானில் நின்றது. ஆனால் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அது மூன்றுமுழம் மேலே வந்திருந்தது.

காஞ்சனம் மிக அப்பால் இனிய ரீங்காரமாக ஓசையெழுப்பியதும் பலநூறு குரல்கள் ‘ஒளியே காக்க!’ என்று முனகின. இருளுக்குள் ஆயிரக்கணக்கான கைகள் ஒளிக்காக வணங்கின. அரண்மனைப் பெருமுரசு ஒலிக்கத்தொடங்கியதும் காவல்மாடத்துப் பெருமுரசுகளும் இடித்தொடர் என தொடர்ந்து முழங்கின. கோட்டைமேல் இருந்த பெருமுரசு ஒலித்ததும் அனைவரும் கயிறுகளை இழுக்க காளைகள் கால்மாற்றிக்கொண்ட அசைவு வண்டிகள் உயிர்கொள்வதைப்போல் தெரிந்தது. மனித அகத்தின் ஆவலையும் தயக்கத்தையும் பொறுமையின்மையையும் ஜடப்பொருள்களான வண்டிகள் வெளிப்படுத்துவதை கர்ணன் வியப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான்.

கோட்டைமேலிருந்த கண்டாமணியான சுகர்ணம் ஒலித்ததும் கோட்டைக்கு அப்பால் இயந்திரங்கள் சங்கிலிகளை இழுக்க கவந்த வாயின் உதடுகள் போல, ஒற்றைப்பெரும் சொல் என கோட்டைவாயில்கள் திறந்தன. கோட்டைக்கு அப்பால் தேங்கியிருந்த பந்த வெளிச்சம் அந்த வாயின் செந்நிற நாக்கு என்றே தோன்றியது. கொம்பு ஏந்திய வீரன் ஒருவன் ஒரு சிறிய மேடைக்குமேல் ஏறி நின்று அதை முழக்கினான். பெரிய பறவை ஒன்றின் இனிய அகவல் போல அது ஒலித்தடங்கியதும் கோட்டைவாயிலில் தோன்றிய காவலர்கள் கைகாட்ட வண்டிகள் அசைந்து முன்னகர்ந்தன.

வண்டிகள் ஓசையிட்டபடி உள்ளே செல்ல, காவலர்கள் ஒவ்வொரு வண்டியாக நோக்கி அவற்றின் முகப்பில் முத்திரை பொறிக்கப்பட்ட சிறிய துணியைக் கட்டி உள்ளே அனுப்பினர். எளிய வினாக்களுக்கு ஒவ்வொரு வண்டியோட்டியும் விடை சொன்னார்கள். அதிரதன் அப்போதும் வண்டிக்குள் துயின்றுகொண்டிருக்க ராதை தலைநீட்டி “உள்ளே செல்லும்போது என்ன கேட்கிறார்கள்?” என்றாள். “எங்கு செல்கிறோமென்று கேட்கிறார்கள் என நினைக்கிறேன்” என்றான் கர்ணன். “அங்கநாட்டுசூதன், இங்கே தேரோட்டியாக வேலைதேடி வந்திருக்கிறேன் என்று மட்டும் சொல்” என்றாள். கர்ணன் தலையசைத்தான்.

சிங்கவேட்டையில் இருந்து அவன் புரவியில் குடில்முன் வந்து இறங்கியதைக் கண்டதுமே ராதை ஏதோ நடந்திருக்கிறதென்று உய்த்து அறிந்துகொண்டாள். விரைந்து அவனருகே வந்து “எவரேனும் கொல்லப்பட்டார்களா?” என்றாள். திண்ணையில் இருந்த அதிரதன் “யார்? யாரைக்கொன்றார்கள்?” என்று உரக்கக் கூவியபடி வந்தார். “நீ சென்று நம் உடைமைகள் அனைத்தையும் கட்டி எடுத்துக்கொள் கிழவா” என்று ராதை ஆணையிட “எதற்கு?” என்றார் அதிரதன். “நான் சொன்னதைச் செய்… போ” என்று அவள் கைநீட்டிச் சொன்னதும் “யாரைக் கொன்றார்கள் என்று தெரியாமல்…” என்று முனகியபடி அதிரதன் உள்ளே சென்றார்.

கர்ணன் விரைந்து நடந்ததைச் சொன்னான். ராதை “அவர்கள் திரும்பி வந்துசேர இன்னும் சற்றுநேரமாகும். அதற்குள் நாம் கங்கையைக் கடந்து மச்சர்நாட்டுக்குள் நுழைந்துவிடவேண்டும்” என்றாள். “ஆம் அன்னையே, நாம் இனி இங்கிருக்க முடியாது” என்றான் கர்ணன். ராதை உள்ளே ஓடிச்சென்று மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பானைகளை எடுத்து இறக்கி பொருட்களை எடுக்கத் தொடங்கினாள். மரவுரியாடைகளையும் தோல் கச்சைகளையும் மூட்டையாகக் கட்டிக்கொண்டிருந்த அதிரதன் “பானைகளை என்ன செய்வது?” என்றார். “பானைகளா? அவை ஏதும் தேவை இல்லை. ஆடைகள் மட்டும் போதும்” என்றாள் ராதை. “நாம் எங்கே செல்கிறோம்?” என்றார் அதிரதன். “சொல்கிறேன்… நீ கிளம்பு” என்று ராதை சினத்துடன் சொன்னாள்.

“எதற்கு சினமென்றே புரியவில்லை” என்று சொல்லி அதிரதன் வெளியே சென்று புரவிகளை அவிழ்க்கத் தொடங்கினார். வெளியே தோல்மூட்டையுடன் ஓடிவந்த ராதை “என்ன செய்கிறாய் மூடக்கிழவா?” என்று கூவினாள். “குதிரைகளையும் சேணங்களையும் நாம் குதிரைமேலாளரிடம் கொண்டுசென்று ஒப்படைக்கவேண்டுமல்லவா? அவற்றை நாம் கொண்டுசென்றுவிட்டோம் என்று எண்ணினால் நம்மைப் பிடித்து தண்டிப்பார்கள்.” ராதை பொறுமை இழந்து “கிளம்புகிறாயா இல்லையா?” என்றாள். “குதிரைகள்?” என அதிரதன் வாய் திறந்தார். “குதிரைகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்… நீ உடனே கிளம்பு.” உடனே அவளுக்கு மறு எண்ணம் தோன்றி “அவற்றை அவிழ்த்துவிடு கர்ணா” என்றாள்.

கர்ணன் குதிரைகளை அவிழ்த்துவிட்டதும் அவை ஒருமுறை சுற்றிவந்தபின் பசுமை நோக்கிச் சென்றன. “அய்யோ, குதிரைகள் எங்காவது சென்றுவிடும்” என்று அதிரதன் பின்னால் ஓடப்போனார். “கிழவா, நீ வருகிறாயா இல்லையா?” என்று ராதை கூவினாள். “அவர்கள் நம்மைத் தேடிவந்தால் குதிரைக்குளம்புகளை தேடிச்செல்வார்கள். அது நமக்கு இன்னும் சற்று நேரத்தை அளிக்கும்…” என்று கர்ணனிடம் சொன்னாள். “யார்?” என்று கேட்ட அதிரதனை அவள் பொருட்படுத்தவில்லை.

கங்கைக்கு வந்து படகில் ஏறிக்கொள்வது வரை ராதை பதற்றமாகவே இருந்தாள். அதிரதன் “குதிரைகளை அவிழ்த்துவிடுவது பெருங்குற்றம். சேணங்கள் மதிப்பு மிக்கவை” என்று சொன்னார். எவரும் தன்னை பொருட்படுத்தவில்லை என்று கண்டதும் “அந்தப்பிழையை நான் செய்யவில்லை” என்றபடி படகின் முனையில் நின்ற குகனின் அருகே சென்று அமர்ந்துகொண்டு தன் தாம்பூலப்பையை விரித்து வெற்றிலையையும் பாக்கையும் எடுத்து குகனிடம் வேண்டுமா என்று கேட்டு பகிர்ந்துகொண்டு மெல்லத் தொடங்கினார். சம்பாபுரியின் துறை மரக்கூட்டங்களும் மாளிகைமுகடுகளுமாக மிதந்து விலகிச்சென்றது.

படகு நீரில் சென்றதும் கர்ணன் “நாம் தென்னாட்டுக்குச் சென்றுவிடலாம் அன்னையே” என்றான். “இங்கு ஷத்ரியர்நாடுகள் எதிலும் நம்மை விடமாட்டார்கள். ஷத்ரியனைக் கொன்ற சூதன் அக்கணமே கொல்லப்பட்டாகவேண்டும் என்பது அவர்களின் நெறி. நம்மைத் தொடர்ந்து ஒற்றர்கள் வருவார்கள்.” ராதை பெருமூச்சுடன் படகின் பலகையில் சாய்ந்து அமர்ந்துகொண்டு “இல்லை, நாம் அஸ்தினபுரிக்குச் செல்கிறோம்” என்றாள். கர்ணன் “அஸ்தினபுரிக்கா?” என்றான். “அன்னையே, தாங்கள் அறியாமல் பேசுகிறீர்கள். அங்கம் அஸ்தினபுரியின் நட்புநாடுகளில் ஒன்று. சமந்தர்களும்கூட” என்றான்.

“ஆம், அறிவேன். ஆனால் அங்கே உனக்கு ஓர் இடமுண்டு” என்றாள். கர்ணன் அவள் விழிகளை நோக்கி “ஏன்?” என்றான். அவள் தன் ஆடையில் இருந்து ஒரு பொன்மோதிரத்தை எடுத்து அவனிடம் அளித்து “இது அஸ்தினபுரியின் அரசமுத்திரை கொண்டது. இது உன் இடத்தை அங்கே அளிக்கும்” என்றாள். கர்ணன் அந்த மோதிரத்தை வாங்கிக்கொண்டு அவள் விழிகளை நோக்கி “இது எப்படி உங்களிடம் வந்தது?” என்றான். “நீ இளையவனாக இருக்கையில் உன்னைப் பார்க்கவந்த ஒரு நிமித்திகர் இதை அளித்தார்.” கர்ணன் வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தான். “நீ எப்போதும் அஸ்தினபுரியின் ஒற்றர்களால் சூழப்பட்டிருந்தாய்” என்றாள் ராதை.

கர்ணன் உதடுகளைப் பிரித்ததுமே “இனிமேல் ஒருசொல்லும் நாம் பேசிக்கொள்ளவேண்டியதில்லை” என்றாள் ராதை. “ஆணை அன்னையே” என்று சொல்லி அந்த மோதிரத்தை கர்ணன் தன் கச்சையில் வைத்துக்கொண்டான். “அஸ்தினபுரியில் உனக்காகக் காத்திருப்பவை என்ன என்று அறியாமல் நீ அங்கு செல்லவேண்டாமென எண்ணினேன். ஆனால் உன்னை ஷத்ரியர்கள் எவரும் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என இன்று அறிந்தேன். உனக்கு அஸ்தினபுரியன்றி வேறு இடமில்லை. இம்முத்திரைமோதிரமே உனக்குக் காப்பாகட்டும்” கர்ணன் தலையசைத்தான்.

அவர்களின் வண்டி கோட்டைமுகப்பை அடைந்ததும் ஒரு காவலன் காளையின் கழுத்துக்கயிற்றைப் பிடித்துக்கொண்டு “எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே செல்கிறீர்கள்?” என்றான். வண்டியுடன் நடந்த கர்ணன் வணங்கி “அங்கதேசத்துச் சூதர்கள். இங்கே தேரோட்டிகளாக பணிபுரிய வந்திருக்கிறோம். என் தந்தை அதிரதன். நான் வசுஷேணன்” என்றான். ‘செல்க’ என அவன் கைகாட்ட வண்டி உள்ளே செல்ல அதன் பின்சட்டத்தைப்பற்றியபடி கர்ணன் நுழைந்தான். கோட்டையின் பெருங்கதவ எல்லையை அவன் கடந்ததும் அவனுக்குப்பின்னால் பெருந்தீ எழுந்ததுபோல கண்கூசும் செவ்வெளிச்சம் எழுந்தது. பெருங்குரலெழுப்பியபடி பறவைகள் கலைந்தெழுந்தன. கூச்சலிட்டபடி காவலர்கள் அங்குமிங்கும் ஓடினார்கள்.

“என்ன? என்ன?” என்று கேட்டபடி காவலர் இருவர் அவனைக்கடந்து ஓடிச்சென்றனர். “சூரிய வெளிச்சம்! பிரம்மமுகூர்த்தத்திலேயே சூரியன் எழுந்திருக்கிறான்” என்றான் ஒருவன். “சூரியனா? அதெப்படி?” என்று யாரோ கூவ “எப்படி என்று நிமித்திகர் சொல்வார்கள். எழுந்து வானில் ஒளிவிடுவது சூரியன்… வேண்டுமென்றால் சென்று பார்” என்றான் இன்னொருவன். அவனைக்கடந்து ஓடிச்சென்றவர்கள் கூடி நின்று வானைநோக்கி கூச்சலிட்டனர். கர்ணன் திரும்பி நோக்கியபோது வானில் உருகி எரியும் பொன்னிறமான முழுவட்டமாக சூரியன் எழுந்து மேகச்சாமரங்களுடன் நின்றிருந்ததைக் கண்டான்.

“ஆம், சூரியனேதான்” என்று குரல்கள் கூவின. “இவ்வேளையில் எப்படி எழுந்தான் அர்க்கன்? யார் அவனை துயிலெழுப்பியது?” என்று ஒரு சூதர் கூவிச் சிரித்தார். நகருக்குள் முகமுற்றத்திலும் அப்பால் தெரிந்த மாளிகைகளின் உப்பரிகைகளிலும் அத்தனை மக்களும் கூடி சூரியனை நோக்கி திகைப்பும் களிப்புமாக கூவி பேசிக்கொண்டனர். குழந்தைகளைத் தூக்கி வந்து சூரியனைக் காட்டினர். “ஒரே கணத்தில் எப்படி சூரியன் இத்தனை மேலெழ முடியும்?” என்றார் ஒருவர். அவருடன் சென்ற இன்னொருவர் “இது சைத்ரமாதம். சூரியனுக்குரிய காலம் இது” என்றார். “நிமித்திகரே, இப்படி நிகழ்ந்ததுண்டா?” என எவரோ கூவ ஒருவர் “உத்தராயணம் தொடங்கும் நாள் இது. சூரியன் முன்னதாகவே எழுவதும் பிந்தி அணைவதும் வழக்கம். ஆனால் பிரம்ம முகூர்த்தத்தில் சூரியன் எழுவது நூல்களிலும் இல்லை” என்றார்.

அஸ்தினபுரியின் சாலைகள் முழுக்க மக்கள் நெருங்கி தோளோடு தோள் ஒட்டி நின்று வானைநோக்கிக்கொண்டிருக்க வண்டியோட்டிகள் வண்டிகளை ஓட்டியபடியே திரும்பிப்பார்த்தனர். வீரர்கள் குதிரைகளில் வந்து “வண்டியை சாலைகளில் நிறுத்தாதீர்… வழிவிட்டு விலகி நில்லுங்கள்” என்று கூவினர். மரக்கூட்டங்களில் இரவணைந்திருந்த அனைத்துப்பறவைகளும் சிறகடித்தெழுந்து வானில் கூட்டமாகச் சுழன்றன. அந்த அற்புதத்தைப்பற்றி பேசப்பேச அது வளர்ந்துகொண்டே இருந்தது அவர்களுக்குள். சற்றுநேரத்தில் நகரம் பெரும் போர்க்களம்போல ஒலியெழுப்பிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

ராதை வண்டியின் பின்பக்கமாக சூரியனை நோக்கியபடியே வந்தாள். அவள் முகம் செவ்வொளியில் பற்றி எரிவதுபோலத் தெரிந்தது. ஓசைகேட்டு எழுந்த அதிரதன் “நான் எங்கே வந்திருக்கிறோம்? விடிவதற்குள் அஸ்தினபுரி வந்துவிடும் என்றார்களே” என்றார். “அஸ்தினபுரி நாளைதான் வரும். படுத்துக்கொள்” என்று ராதை எரிச்சலுடன் சொல்ல அப்படியே அதை பொருள்கொண்டு அதிரதன் மீண்டும் படுத்துக்கொண்டு “சாலைகளில் இப்படி நின்றால் எப்படி போய்ச்சேர்வது?” என்றபடி மரவுரியை எடுத்துப் போர்த்திக்கொண்டார்.

கர்ணன் நகரத்தை நோக்கியபடியே நடந்தான். இருபக்கமும் எழுந்த ஏழடுக்கு மாளிகைகளின் தாமரைமொட்டு போன்ற வெண்குவை மாடங்களில் கொடிகள் பறந்துகொண்டிருந்தன. கல்பதிக்கப்பட்ட அகன்ற தெருக்களின் இருபக்கமும் மழைநீர் வழிந்தோடுவதற்கான ஓடைகள். வழிப்பந்தங்கள் எரிவதற்கான பெரிய கல்தூண்கள். தலைக்குமேல் எழுந்து நின்ற காவல்மாடங்களில் நிலவுவட்டங்கள் எனத் தெரிந்த பெருமுரசுகள். கவச உடைகள் ஒளிர அவற்றில் நின்றிருந்த வீரர்களின் முகங்கள் சிரித்துக்கொண்டிருந்தன. ஒவ்வொரு குதிரையும் அக்கணம் பிறந்துவந்ததுபோல இருந்தது. சங்கிலிகளைத் தூக்கிக்கொண்டு ஓய்வாக நடந்து சென்ற யானைகள் முதுகெலும்புப் புடைப்பே தெரியாமல் பருத்து உருண்டிருந்தன.

கர்ணன் ஒவ்வொரு முகமாகப் பார்த்துக்கொண்டே நடந்தான். அனைவரும் அந்த வான்நிகழ்வின் களியாட்டத்தில் இருந்தனர். கண்முன் எழுந்துவந்த தெய்வத்தை நோக்குவதுபோல பொருளில்லாமல் கூவியபடி சிரித்தபடி நிலைகொள்ளாமல் உடலை அசைத்தும் கைகளை வீசியும் எக்களித்தனர். எங்கும் உவகையன்றி ஏதும் கண்ணுக்குப்படவில்லை. ஆனால் தன்னுள் கூண்டுக்குள் அலைமோதும் புலி போல அகம் தவிப்பதையே அவன் உணர்ந்தான். ஏன்? எதனால்? இந்நகரில் ஒருபோதும் நான் மகிழ்ச்சியை அடையமுடியாது. இது என் மண் அல்ல. இங்கே என் அகம் சிறகுமடித்து அமரவேபோவதில்லை. ஆனால் ஏன்?

கண்களை இயல்பாகத் திருப்பியபோதுதான் அவன் அந்த மாபெரும் கைவிடுபடைப்பொறியைக் கண்டான். ஒருகணம் அதிர்ந்த அவன் சித்தம் அதன்பின்னரே அது என்ன என்று கண்டுகொண்டது. நூறு பேரம்புகள் இறுகிய இரும்புவில்லில் ஏற்றப்பட்டு உடல்தெறிக்கக் வான்நோக்கிக் காத்திருந்தன. அப்பால் இன்னொரு கைவிடுபடைப்பொறி மேலும் நூறு அம்புகளுடன். கிழக்கு வாயிலுக்குள் கண்ணெட்டும் தொலைவுவரை கூரிய முனைகள் ஒளிவிட ஆயிரக்கணக்கான அம்புகள் செறிந்த கைவிடுபடைப்பொறிகள் வீற்றிருந்தன.

சற்றுநேரம் கழித்து மெல்லிய புன்னகையுடன் கர்ணன் எளிதாகிக் கொண்டான். இந்நகரம் எதை அஞ்சுகிறது? எதற்கு எதிராக படைகொண்டு நின்றிருக்கிறது? வானுக்கு எதிராகவா? முடிவிலியில் இருந்து இறங்கிவரும் எதிரி. ஊழ் என்று அதைத்தான் சொல்கிறார்கள் போலும். மீண்டும் அந்த கைவிடுபடைப்பொறிகளை நோக்கியபோது அவன் உள்ளம் வியப்பால் விரிந்துகொண்டே சென்றது. யார் என்று அறியாத, எங்கிருந்து வருகிறான் என்றறியாத எதிரிக்காக இப்போதே அம்பு நாணிலேறிவிட்டிருக்கிறது. அது தெய்வங்களாக இருக்கலாம். மூதாதையராக இருக்கலாம். தந்தையராகவும் குருநாதர்களாகவும் உடன்பிறந்தாராகவும் இருக்கலாம். ஆனால் கொலை ஆன்மாவின் களத்தில் செய்யப்பட்டுவிட்டது. குருதி காலத்தின் பரப்பில் சிந்தப்பட்டுவிட்டது. சூழ்ந்திருக்கும் பருவெளி அங்கே சென்றுசேரவேண்டும் என்பது மட்டுமே இனி நிகழவேண்டியது.

எதிரே வீரர்கள் உரக்க “விலகுங்கள்… வழிவிடுங்கள்” என்று கூவியபடி புரவிகளில் வந்தனர். நேர்முன்னால் வந்த அரசரதத்தில் நின்றபடி வந்த கரிய சிறுவன் விழிகளை கர்ணன் விழிகள் சந்தித்தன. மக்கள் சூரியனைப்பார்த்த பரவசத்தில் அரசரதத்தை கருத்தில் கொள்ளவில்லை. அவனும் சூரியனையே நோக்கியபடி சென்றான். முன்னால் சென்ற வண்டியோட்டி “இளையபாண்டவராகிய அர்ஜுனர். துரோணாச்சாரியாரிடம் வில்வேதம் பயில்கிறார்” என்றான். கர்ணன் திரும்பி நோக்கிய கணம் அர்ஜுனன் விழிகளும் வந்து அவனைத் தொட்டுச்சென்றன.

கர்ணன் அகம் சற்று அசைந்தது. மிக அண்மையான ஒருவனை, முன்னர் எப்போதோ கண்டு மறந்த ஒருவனை கண்டதுபோல உணர்ந்த அதேகணம் அதிரதன் எழுந்து கைநீட்டி “ராதை, நம் மைந்தன் அதோ அரசரதத்தில் செல்கிறான்!” என்று அர்ஜுனனை கைகாட்டினான். “நான் சொன்னேனே, அவன் ஏதோ அரசகுமாரன் என்று? அவனை அஸ்தினபுரியில் அரசத்தேரில் ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள்” என்றான். “கனவு கண்டிருப்பாய் கிழவா, பேசாமல் உறங்கு” என்றாள் ராதை. அதிரதன் குழப்பத்துடன் கர்ணனை நோக்கியபடி “இங்குதான் தான் வருகிறானா? அப்படியென்றால் அவன் யார்?” என்றான். “அது அஸ்தினபுரியின் இளவரசர் அர்ஜுனர்” என்றாள் ராதை. “அப்படியா? அதை நானும் சிந்தித்தேன். உயரம் குறைவாக இருக்கிறான். நம் மைந்தனின் தோள்விரிவும் இல்லை” என்றார் அதிரதன்.

சூரியனின் ஒளி விரைந்து செந்நிறத்தை இழந்துகொண்டிருக்க அனைத்து நிழல்களும் செம்மை இழந்து கருமைகொண்டன. அவர்கள் முதல் காவல்மாளிகையை அடையும்போது வெண்வைரம் ஒளிகொண்டதுபோல கண்கூசச் சுடர்விட்டது நகரம். மெல்லமெல்ல இயல்புநிலையை நோக்கி திரும்பியது. அகஎழுச்சியுடன் பேசியபடி மக்கள் திரள் கலைய, கலத்திலிட்டு குலுக்கப்பட்ட பாலில் எஞ்சிய வெண்ணைத்திவலைகள் ஒட்டியிருப்பது போல சிறிய குழுக்கள் தெருக்களில் எஞ்சின. அவர்களில் சிலர் திரும்பி கர்ணனை சிறிய அதிர்ச்சியுடன் நோக்கி அவன் கடந்துசென்றதும் ஏதோ பேசிக்கொண்டனர். அவனை எதிர்கொண்ட எல்லா விழிகளிலும் முதற்கணம் ஒரு சிறிய துணுக்குறல் நிகழ்ந்ததை கர்ணன் கண்டான்.

கர்ணன் காவல் வீரனிடம் தேர்ச்சூதர்களுக்கான தெருவுக்கு வழி கேட்டு கோட்டையின் தெற்கு வாயில் நோக்கி சென்றான். வணிகர்தெருக்களுக்கு அப்பால் விஸ்வகர்மர் சாலைகளும் அவற்றுக்கு அப்பால் இசைச்சூதர்களின் தெருக்களும் இருந்தன. இசைச்சூதர்களின் நான்கு தெருக்கள் கூடும் முனையில் சிற்றாலயம் ஒன்றின் முன்னால் மஞ்சள் உடைகளுடன் சூதர்கள் முழவுகளும் யாழ்களுமாக கூட்டமாக நின்றிருந்தனர். ஆலயத்துக்குள் சூதர்களின் குருதெய்வமான ஹிரண்யாக்‌ஷர் மண்ணால் செய்யப்பட்ட கரியமேனியுடன் கையில் யாழுடன் அமர்ந்திருந்தார். அவரது இருவிழிகளும் பொன்னால் செய்யப்பட்டு பதிக்கப்பட்டிருந்தன. அவருக்கு மலர்மாலைகள் சூட்டப்பட்டு இருபக்கமும் நெய்தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன.

மூன்றுவயதான சூதக்குழந்தை ஒன்றுக்கு யாழ்தொடும் சடங்கு நடந்துகொண்டிருந்தது. கரிய சிற்றுடல் கொண்ட குழந்தை மஞ்சள்பட்டு அணிந்து செம்பட்டு கச்சை கட்டி குடுமியில் மலர் அணிந்து தர்ப்பைப்புல்மேல் அமர்ந்திருக்க முதியசூதர் அதன் கைகளில் தர்ப்பையை கட்டிக்கொண்டிருந்தார். முன்னால் விரிக்கப்பட்ட வாழையிலைகளில் பொரியும், மலரும், கனிகளும் பரப்பப்பட்டிருந்தன. மூன்று நிறைகுடங்களில் நீர் மஞ்சள் கலந்து வைக்கப்பட்டிருந்தது. பழைய யாழ் ஒன்றை முறுக்கி நாண் நிறைத்துகொண்டிருந்தார் ஒருவர். பெரிய கட்டுக்குடுமி வைத்த முதியநாவிதர் ஒருவர் குந்தி அமர்ந்து படிகக்கல்லில் தன்னுடைய கத்தியைத் தீட்டிக்கொண்டிருந்த ஒலி சிட்டுக்குருவியின் குரல் போல சிக் சிக் என ஒலித்தது.

கர்ணன் வண்டியை நிறுத்திவிட்டு வணங்கியபடி அருகே சென்றான். ஒரு வயோதிகர் அவனை நோக்கித் திரும்பியதும் அவர் விழிகளிலும் முதல் அதிர்வு எழுந்தது. பிற விழிகளும் அவனை நோக்கின. கர்ணன் “நான் அங்கநாட்டு குதிரைச்சூதர் அதிரதனின் மைந்தன் வசுஷேணன்…” என்றபின் ஆலயத்தை நோக்கி வணங்கினான். முதியவர் “அஸ்தினபுரிக்கு வருக சூதர்களே. இது எங்கள் குலத்துக்குரிய மூத்தார் தெய்வம் சுவர்ணாக்‌ஷர். இங்குதான் யாழ்தொடும் சடங்குகளை நாங்கள் செய்கிறோம். இன்று மிக அரிதாகவே செய்யப்படும் அங்குலிச்சேதனச் சடங்கு நடக்கிறது” என்றார்.

“நானே பெரியவரை நேரில் அறிந்திருக்கிறேன். என் முதுதாதரின் வயது அவருக்கு. நூற்றிருபது வயது வாழ்ந்தார். அவரது இயற்பெயர் தீர்க்கசியாமர். பீஷ்மபிதாமகருக்கே அவர்தான் குருநாதர். பேரரசரையும் அவர்தான் பயிற்றுவித்தார். அவரது இறுதிநாளுக்கு பேரரசரே சூதர்குடிலுக்கு வந்திருந்தார்… அவரது சிதை எரிந்தபோது பொன்னிறமான புகை எழுந்தது. பொற்சிறகுகளுடன் வந்த தேவர்கள் அவரை விண்ணுக்குக் கொண்டுசென்றனர். அங்கே அவருக்கு பொன்னாலான விழிகள் அமைந்தன. கலைமகளை அவ்விழிகளால் நோக்கியபடி அவள் சபையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு விண்ணுலகில் சுவர்ணாக்ஷர் என்று பெயர்” என்றார் வயோதிகர்.

பிற சூதர்கள் அனைவரும் திகைத்த விழிகளுடன் அவனையே நோக்கிக்கொண்டிருந்தனர். கர்ணன் வழிகேட்க வாயெடுக்கையில் சூதக்குழந்தை கர்ணனை நோக்கி முகத்தை ஏறிட்டது. அதன் விழிகள் இரு கூழாங்கற்கள் போல ஒளியற்றிருப்பதை கர்ணன் கண்டான். அது அவனை நோக்கி தன் விரல்களைச் சுட்டி தெய்வச்சிலைகளுக்குரிய புன்னகையுடன் “பொற்கவசம்! மணிக்குண்டலம்!” என்றது. கர்ணன் திகைத்து சுற்றுமுற்றும் நோக்கினான்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

வயோதிகர் “பிறப்பிலேயே விழியிழந்த குழந்தை. ஆனால் அவன் நாவிலும் விரல்களிலும் கலைமகள் குடியிருக்கிறாள். அவன் தவழ்ந்துசென்று தொட்டதுமே யாழ் பாடத்தொடங்கிவிட்டது. குலகுருவான தீர்க்கசியாமரே அவன் வடிவில் வந்திருக்கிறார் என்று நிமித்திகர்கள் சொன்னார்கள். ஆகவே அவனுக்கும் தீர்க்கசியாமன் என்றே பெயரிட்டோம். மூன்றுவயதானதால் இன்று அவனுக்கு அங்குலிச்சேதனச் சடங்கைச் செய்கிறோம்” என்றார். கர்ணன் என்ன என்பதுபோல நோக்க அவர் “அவன் கட்டைவிரல்களுக்கும் பிறவிரல்களுக்கும் நடுவே உள்ள தசை கிழிக்கப்படும். அதன்பின் அவனால் பேரியாழை முற்றறிய முடியும்” என்றார்.

“இன்று விண்ணவர்கள் வாழ்த்தும் நாள் என்றனர் நிமித்திகர்” என ஒருவர் அகஎழுச்சியுடன் முன்னால் வந்து திக்கும் குரலில் சொன்னார். “இன்று இம்மைந்தனுக்காகவே பிரம்மமுகூர்த்ததில் சூரியன் எழுந்திருக்கிறான். நூற்றைம்பதாண்டுகளுக்கு முன் தீர்க்கசியாமர் யாழ்தொட்ட நாளில் பகலில் முழுநிலவு எழுந்திருக்கிறது என்கின்றன நூல்கள். பார்த்தீர்களல்லவா? இதோ இங்கே யாழ்தொடவிருப்பது எங்கள் குலத்தின் மாமுனிவர்களில் ஒருவர், ஐயமே இல்லை.” இன்னொருவர் “அவனுக்கு சான்றாக விண்ணில் எழுந்திருக்கிறான் அர்க்கன்” என்றார்.

குழந்தை மீண்டும் கர்ணனை நோக்கி பார்வையற்ற விழிகள் உருள “சூரியன்!” என்றது. வயோதிகர் “அவன் சொற்களை நம்மால் அறியவே முடியாது இளைஞரே” என்றார். கர்ணன் “குதிரைச்சூதர்களின் தெரு எங்கிருக்கிறது?” என்றான். அவர்களில் ஒருவர் வந்து கைசுட்டி வழிசொன்னார். அவன் வணங்கிவிட்டு வந்து காளையின் கழுத்தைப்பற்றிக்கொண்டான். திரும்பி நோக்கியபோது ஒளியற்ற விழிகளால் அவனை நோக்கி கைநீட்டி விழியிழந்த விழிகளால் சுட்டி “கதிர்” என்றது.

முந்தைய கட்டுரைஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1
அடுத்த கட்டுரைவளைவுகள் செதுக்கல்கள்