பகுதி எட்டு : கதிரெழுநகர்
[ 5 ]
காலையில் கர்ணன் அதிரதனுடன் அமர்ந்து குதிரைகளை உருவிவிட்டுக்கொண்டிருக்கும்போது அரண்மனையிலிருந்து ரதசாலைக் காவலரான சத்ரபாகுவே நேரில் குதிரையில் வந்தார். அவருடன் எட்டு வீரர்களும் வந்தனர். அணுகி வரும் குதிரைகளின் குளம்படிச்சத்தம் கேட்ட அதிரதன் “குதிரைகளின் காலோசையிலேயே அவற்றை உணரத்தெரிந்தவனே அஸ்வசாஸ்திரம் தெரிந்தவன். இப்போது வரும் குதிரைகளை என் அகக்கண்ணாலேயே என்னால் காணமுடியும்” என்றார்.
“இடமுகமும் வலமுகமும் சற்றே வேறுபட்டிருக்கும் பிரமரம் ஓடும்போது பெருங்கழியும் சிறுகழியும் மாறிமாறி முட்டும் முரசென ஒலிக்கும். பூரணானந்தம் நெற்றியில் இருசுழிகளும் தலைநடுவே ஒரு சுழியும் உடையது. இது வருகையில் ஒற்றைக்கழியால் முரசை ஒலிப்பதுபோலிருக்கும். நான்கு குளம்புகள் இரண்டாக மாறிச்செல்வதுபோல கண்ணுக்குத்தோன்றும். விண்ணவர் விரும்பும் அரசப்புரவிகள் இவ்வகையைச் சேர்ந்தவை” என்றார். கர்ணன் முதல்முறை கேட்பவனைப்போல தலையை அசைத்தான்.
“ஆற்றல் கொண்ட சூரியன் முதுகெலும்பில் சுழிகொண்டது. இதன் காலடியோசை முரசில் கோலை அடித்து அழுத்தியதுபோல் ஒலிக்கும். எடைதூக்கும் வலுக்கொண்ட இப்புரவியை மற்போர் வீரர் விரும்புவர். இரு கன்னங்களிலும் ஒற்றைச்சுழிகொண்ட சர்வநாமத்தை வண்டிகளிலேயே கட்டுவார்கள். நான்கு கால்களின் ஓசைகளையும் தனித்தனியாகக் கேட்கமுடியும். வலப்பக்கக் கன்னத்தில் ஒற்றைச்சுழிகொண்ட சிவம் இறைவாகனங்களை இழுக்கத்தக்கது. அதன் ஓசை மிகமெல்லவே கேட்கும். காலடிகள் நடுவே சீரான இடைவெளி இருக்கும். செவிகளுக்கடியில் சுழிகள் கொண்ட இந்திராக்ஷம் கொட்டிலை வளம்பெறச்செய்வது. இது எப்போதும் தாவியே செல்லும்.”
“இப்போது சென்றுகொண்டிருப்பவை சூரியவகை புரவி ஒன்று, சர்வநாமப்புரவிகள் எட்டு. ஆகவே தலைவர் ஒருவர் எட்டு சேவகர்களுடன் செல்கிறார். பெரும்பாலும் அவர் கங்கைக்கரைக்குச் செல்கிறார் என எண்ணுகிறேன்” என்று அதிரதன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே புரவிகள் அவர்களின் வீட்டுக்குமுன் வந்து நிற்க சேவகர்கள் கைவேல்களுடன் இறங்கினர். அதிரதன் உடல் நடுநடுங்க வாய்குழற “நம் இல்லத்துக்குத்தான் வந்திருக்கிறார்கள். ஆம், நான் எண்ணினேன். நீ அரசர் அளித்த பரிசை கொடையளித்திருக்கலாகாது…” என்றார். பதறும் குரலில் விரைவாக “எவர் கேட்டாலும் நீ வாயே திறக்கவேண்டியதில்லை. என்னை அவர்கள் எவ்வகையில் தண்டித்தாலும் நீ வாளாவிருக்கவேண்டும்” என்றார். கர்ணன் “தந்தையே” என்றான். “இது என் ஆணை” என்றார் அதிரதன்.
ஒருவீரன் முன்னால் வந்து “இது ரதமோட்டி அதிரதனின் இல்லமா?” என்றான். அதிரதன் “ஆம், வீரரே. அரசின் பணிசெய்யும் எளியவன் நான். எப்பிழையும் செய்யாதவன். நெறிகளையும் செங்கோலையும் அஞ்சுபவன்” என்றார். “நேற்று சூரியரதம் ஓட்டியவன் உன் மைந்தன் என்றார்கள். இவனா அவன்?” அதிரதன் “ஆம், இவன்தான். பரிசிலை என்னிடம் கொண்டுவந்து தந்தான். சற்று கடன் இருந்தமையால் நான் அதை உடனே விற்றுவிட்டேன். அவன் தடுத்ததையும் நான் பொருட்படுத்தவில்லை” என்றார். குதிரைமேல் இருந்த சத்ரபாகு “டேய் சூதமைந்தா, உன்னைக்கூட்டிவரும்படி அரசரின் ஆணை” என்றார். அதிரதன் “மாவீரரே, உடையோரே, அந்த மோதிரத்தை விற்றவன் அடியேன்” என்றார்.
“எந்த மோதிரம்?” என்றான் வீரன் குழப்பமாக சத்ரபாகுவை நோக்கியபடி. “டேய், அரசர் வேட்டைக்குச் செல்கிறார். இவன் அவரது ரதத்தை ஓட்டவேண்டுமென விழைகிறார்” என்றார் சத்ரபாகு. அதிரதன் வாயைத்திறந்து மாறிமாறி நோக்கி “ஆனால் அவன்… அவன் வயது…” என பேசத்தொடங்க குதிரையை உதைத்துத் திருப்பியபடி “இது அரசாணை” என்றார் சத்ரபாகு. கர்ணன் “நான் இதோ கிளம்புகிறேன் தளகர்த்தரே” என்று சொல்லிவிட்டு குடிலுக்குள் சென்று தன் மேலாடையை எடுத்தான். அரையிருளில் வந்து நின்ற ராதையின் விழிகளை ஒருகணம் சந்தித்துவிட்டு “வருகிறேன்” என்றான். வெளியே வந்து ரஸ்மியில் ஏறிக்கொண்டு அவர்களுடன் சென்றான்.
அங்கநாட்டின் அரண்மனையின் பெருமுற்றத்தை அடைந்ததும் சத்ரபாகு குதிரையில் இருந்து இறங்கி “சூதமைந்தனுக்கு அரசரின் ரதத்தைக் காட்டுங்கள். இன்னும் சற்றுநேரத்தில் அரசர் வருவார். அதற்குள் அவரது ரதம் ஒருங்கியிருக்கவேண்டும்” என்றார். கர்ணன் அரசரதத்தை நோக்கிச் சென்று அதன் அச்சாணியையும் குடத்தையும் நோக்கினான். அதனருகே நின்றிருந்த குதிரைக்காவலன் “இரண்டுமே பிரமர இனத்துக்குதிரைகள் இளையவரே” என்றான். கர்ணன் தலையை அசைத்தான்.
அரண்மனைக்கூடத்தில் மங்கல வாத்தியங்களும் வாழ்த்தொலிகளும் எழுந்தன. சத்ரபடங்களும் சூரியபடங்களுமாக நான்கு வீரர்கள் வெளியேவர கோலேந்தி வந்த நிமித்திகன் “பிரஜாபதியான தீர்க்கதமஸின் குலத்தில் வந்தவரும், சுதேஷ்ணையின் குருதிவழிகொண்டவரும், மாமன்னர் பலியின் கொடிவழியினரும், மாமன்னர் திடவிரதரின் மைந்தரும் பதினாறு மகாஜனபதங்களில் ஒன்றாகிய அங்கநாட்டின் பேரரசருமான சத்யகர்மா எழுந்தருள்கிறார்” என்று கூவ வெண்சங்குகளும் கொம்புகளும் ஒலித்தன. அரசன் முற்றத்தை அடைந்தபோது காவல்மேடைகளின் பெருமுரசுகள் அதிரத்தொடங்கின.
அரசனின் மெய்க்காவல்படைத் தலைவரான பிருகதர் கர்ணன் நின்றிருந்த அரசரதமருகே வந்து நின்று அவனை நோக்கி “நேற்று ரதமோட்டியவன் நீ அல்லவா?” என்றார். பணிந்து வணங்கி “ஆம் உடையோரே” என்றான் கர்ணன். “இன்று நாம் சிம்ம வேட்டைக்குச் செல்கிறோம். உன் திறனைக் காட்டு” என்றார் பிருகதர். “செல்லும் சாலை மேடுபள்ளமானது. ரதம் நலுங்காமல் ஓடவேண்டும். சென்றமுறை ஓட்டிய ரதசாரதிக்கு என்ன ஆயிற்று தெரியுமா?” கர்ணன் பேசாமல் நின்றான். “ரதம் சரிந்து மன்னர் விழுந்தார். அந்தச்சாரதியை கால்களைக் கட்டி ரதத்தின் பின்னால் இழுத்தபடி திரும்ப நகரம் வரை ஓட்டிவந்தோம். அவன் உடலில் தோல் என்பதே இல்லாமலாயிற்று. பன்னிரண்டுநாள் துடித்து உடல் வெடித்து சீழ்கட்டி இறந்தான்.”
தலைப்பாகையும் மணியாரமும் அணிந்திருந்த சத்யகர்மா நேராக ரதத்தை நோக்கி வந்தான். பிருகதர் தலைவணங்கி “நல்ல நேரம் அரசே” என்றார். ரதத்தில் அமர்ந்துகொண்ட சத்யகர்மா “செல்!” என ஆணையிட்டான். இருபக்கமும் உப்பரிகைகளில் வந்து நின்றமக்கள் மலரும் மஞ்சளரிசியும் தூவி வாழ்த்தி கூவ அரசவீதிகள் வழியாகச் சென்ற ரதம் கோட்டை முகப்பிலிருந்த கொற்றவை ஆலயம் முன்பு சென்று நின்றது. அரசன் இறங்கி கொற்றவையை வணங்கி நெற்றியில் குருதிக்குறி தீட்டி வந்து ரதத்தில் அமர்ந்துகொண்டான்.
அங்கநாடு கங்கைக்கரையை நோக்கிச் சரிந்து வந்த நிலம். கங்கைக்கரையில் மரத்தாலான பெரிய காற்றாடிகள் கனத்த இரட்டைத்தூண்களில் நின்றபடி கங்கைவழியாகச் சென்ற காற்றில் கிரீச்சிட்டபடி சுழன்று இரவெல்லாம் நீரை அள்ளி ஓடைக்குத் தள்ளிக்கொண்டிருந்து விடிந்தபின் காற்று தணிய தாங்களும் சோர்வடைந்து மெல்லச் சுற்றி ஒசையிட்டுக்கொண்டிருந்தன. இருபக்கமும் செம்மண்ணில் ஊறி மேலெழுந்த ஓடைகள் வழியாகச் சென்றிருந்த நீர் காலையில் வற்றி படிகமணிமாலை போல சிறிய தொடர் தேக்கங்களாக வானம் ஒளிர்ந்து கிடந்தது.
அந்நீரோடைகள் சென்று புகுந்த தோட்டங்களில் கோடையில் வெள்ளரி பயிரிட்டிருந்தார்கள். ஏறிச்சென்ற கொடிகள் பந்தலில் அடர்ந்துபரவி பச்சை முதலைக்குட்டிகள் போல பாகற்காய்களை கொண்டிருந்தன. காலையில் எழுந்துவந்த காகங்களும் சிட்டுக்குருவிகளும் பச்சை இலைகளுக்குள் எழுந்தும் அமர்ந்தும் கூவிக்கொண்டிருந்தன. அரசரதத்தைக் கண்டு தோட்டங்களில் மண்வெட்டிகளுடன் நின்றவர்கள் எழுந்து கைகூப்பி வாழ்த்தொலி எழுப்பினர்.
கங்கையிலிருந்து விலகும்தோறும் தோட்டங்கள் குறைந்தன. ஏற்றக்கிணறுகளுக்கு சுற்றும் செடிகளும் மரங்களும் செறிந்த தோட்டங்கள் கொண்ட ஊர்களும் மெல்ல பின்னகர்ந்தபின்பு சாலை இறுகிய செம்மண்ணில் கூழாங்கற்கள் செறிந்ததாக மாறியது. ரதசக்கரங்கள் கடகடவென ஒலிக்க குதிரைகள் வியர்வை வழிய மூச்சிரைத்து நுரை உமிழ்ந்தன. தேர்ந்த ரதமோட்டியால் மட்டுமே அவ்வழியாக ரதத்தைக் கொண்டுசெல்லமுடியும் என்று கர்ணன் உணர்ந்தான். சாலையிலேயே உருண்டுகிடந்த பெரிய உருளைக்கற்கள் மீது சக்கரங்கள் ஏறாமல் திருப்பித்திருப்பி அவன் ஓட்டிச்சென்றான். பின்னால் அமர்ந்திருந்த அரசன் உரக்க “விரைவு… விரைந்துசெல் மூடா. நீ என்ன மாட்டுவண்டியா ஓட்டுகிறாய்? விரைவாக ஓடவில்லை என்றால் உன் முதுகைச் சாட்டையால் கிழிப்பேன்” என்று கூச்சலிட்டுக்கொண்டே இருந்தான்.
மெல்ல சாலை மறைந்தது. இருபக்கமும் கருகிய பாறைகள் மட்டும் பரவியமர்ந்திருந்த சிவந்த மேட்டுநிலம் ஆங்காங்கே வெயிலில் செந்தழல் போல மின்னிய காய்ந்த புல்கூட்டங்களுடன் தெரிந்தது. குதிரைகள் தலையைத் தூக்கி மூக்கால் வாசனை பிடித்து மிரண்டு கனைத்தபடி கால்களை பின்னால் தூக்கி வைக்க ரதம் பின்னகர்ந்தது . கர்ணன் கடிவாளத்தை இழுத்து ரதத்தை நிறுத்த சத்யகர்மா இறங்கிக் கொண்டான். பின்னால் வந்த மூன்று ரதங்களையும் நிறுத்தி குதிரைகளை தறியில் கட்டினர். குதிரைகள் உடலைச்சிலித்துக்கொண்டே இருந்தன. ரதங்களில் இருந்து யானைத்தோல் கூடாரங்களை இறக்கி கீழே பரப்பினர். ஒரு ரதத்தில் உணவுப்பொருட்களும், மதுபுட்டிகளும் இருந்தன.
சத்ரபாகு அருகே வந்து வணங்கி “இதுதான் எல்லை அரசே” என்றார். சத்யகர்மா தலையை அசைத்து கண்களால் ஆணையிட பின்னால் வந்த குதிரைகளில் இருந்து வீரர்கள் இறங்கி இரும்பாலான கவசங்களை அவனுக்கு அணிவித்தனர். தன் வில்லையும் அம்பறாத்தூணியையும் தோளில் ஏற்றிக்கொண்டு “செல்வோம்” என்றான். அவனைச்சூழ்ந்து சத்ரபாகுவும் பிற மெய்க்காவல் வீரர்களும் சென்றனர். அவர்கள் கூர்ந்த விழிகளும் சித்தம் குவிந்த கால்களுமாக நடந்துசென்று அப்பால்தெரிந்த பாறைகளுக்கு மறுபக்கம் மறைந்தனர்.
கர்ணனிடம் இன்னொரு தேரோட்டி “இதற்குமேல் புரவிகள் செல்வதில்லை சூதரே. யானைகளும் இங்கே அச்சம்கொள்கின்றன. நடந்துசென்றுமட்டுமே வேட்டையாட முடியும்” என்றான். கர்ணன் குதிரைகளின் அருகே நின்றுகொண்டான். வெயில் ஏறி ஏறி வந்து உடல் வியர்வையில் நனைந்தது. அப்பகுதியெங்கும் நிழலே இருக்கவில்லை. வெயிலொளி கூடியபோது செம்மண்ணின் நிறம் மங்கலாகியது. மண்ணையும் விண்ணையும் நோக்கமுடியாமல் கண்கள் கூசியது. குதிரைகள் ஏன் நிலையழிந்திருக்கின்றன என்று அவனுக்கு தெரியவில்லை. அவை விழிகளை உருட்டியபடி உடல் சிலிர்த்து மூச்சு சீறியபடியே இருந்தன.
குதிரைகள் அனைத்தும் ஒரே சமயம் வெருண்டு கனைத்தபடி கால்களைத் தூக்கிய பின்புதான் கர்ணன் தொலைவில் கேட்ட ஓசைகளை புரிந்துகொண்டான். சிம்மங்களின் கர்ஜனை. அருகே நின்றிருந்த சூதன் அச்சத்துடன் “பல சிம்மங்கள் உள்ளன போலத் தோன்றுகிறது” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. மிக அருகே செம்புக்கலம் ஒன்றை சரல்மண்ணில் இழுத்தது போல ஒரு சிம்மத்தின் பெருங்குரல் எழுந்தது. சூதர்கள் மூவரும் அவிழ்த்துப்போடப்பட்ட ரதங்களில் ஏறிக்கொள்ள குதிரைகள் திரும்பி கட்டுத்தறியில் சுற்றிவந்தன. குதிரைகளின் உடம்பு மயிர்சிலிர்த்து நடுங்குவதையும் அவற்றின் விழிகள் உருள்வதையும் கர்ணன் கண்டான். ஆனால் சிம்மக்குரல் அகன்று சென்றது.
குதிரைகளை தட்டிக்கொடுத்துக்கொண்டு கர்ணன் நின்றான். சூதர்கள் இறங்கி “என்ன ஆயிற்று? நெடுந்தொலைவுக்குச் சென்றுவிட்டார்களா என்ன?” என்றார்கள். மிகத்தொலைவில் சிம்மங்களின் குரலும் மனிதக்குரல்களும் மெலிதாகக் கேட்டன. அந்த மெல்லியஓசையினாலேயே அவை மேலும் அச்சமூட்டுவதாக இருந்தன. மீண்டும் நெடுநேரம் எந்த ஓசையும் எழவில்லை. வெயில் உச்சம் கொண்டபோது குதிரைகள் விடாய் எழுந்து நாக்கை நீட்டி இருமல்போல ஒலியெழுப்பின. “அந்தப்பக்கம் ஊற்று உள்ளது. ஆனால் எப்படிச் செல்லமுடியும்? ஊற்றருகேதான் எப்போதும் சிம்மங்கள் கிடக்கும்?” என்றான் சூதன்.
கர்ணன் மரத்தாலான குடங்களை இருபக்கமும் காவடியாகக் கட்டிக்கொண்டு அத்திசைநோக்கிச் சென்றான். ஊற்று இருக்கும் இடத்தை எளிதாகவே கண்டுகொள்ளமுடிந்தது. அதைநோக்கிச்செல்லும் நூற்றுக்கணக்கான குளம்புத்தடங்களும் நகத்தடங்களும் செம்மண்ணில் பதிந்திருந்தன. பாறை இடுக்குகள் வழியாகச் சென்ற சிறிய பாதை பலமுறை சுழன்று இறங்கிச்சென்று செக்கச்சிவந்த புண்போலத் தெரிந்த குட்டையை அடைந்தது. பாறையிடுக்குகளில் இருந்து ஊறி ஓடிவரும் நீரின் ஓசையைக் கேட்கமுடிந்தது. அந்த ஊற்றுகளால் அப்பகுதியின் பாறைகள் எல்லாமே குளிர்ந்திருக்க அங்கே காற்று இதமான குளிருடன் வீசியது.
பாறையிடுக்குகளில் வேர்நீட்டி நின்றிருந்த அத்திமரங்களும் மகிழமரங்களும் அப்பால் எழுந்து விரிந்து நின்ற இளைய ஆலமரமும் அவ்விடத்தை மேலும் குளிர்கொண்டவையாக ஆக்கின. வேர்களில் கால்வைத்து இறங்கி குட்டையைச் சூழ்ந்திருந்த செம்மண்களிம்பை நோக்கிச் சென்றபோது கர்ணன் ஏதோ உள்ளுணர்வால் ஏறிட்டு நோக்கினான். குட்டையின் மறுபக்கம் ஆலமரத்தின் அடியில் பிடரி விரிந்த ஆண் சிம்மம் ஒன்று படுத்திருந்தது. கர்ணனின் உடல் சிலிர்த்தது. அவன் சிம்மத்தையே நோக்கியபடி அசைவிழந்து நின்றான். அது தன் முகத்தைச்சுற்றிப்பறந்த ஈக்களை விரட்டுவதற்காக தலையை சிலுப்பியது. அதன் மயிர்செறிந்த காதுகள் முன்னால் கூர்ந்திருந்தன.
கர்ணன் அசைவில்லாமல் நின்றான். சிம்மம் அவன்மேல் ஆர்வமிழந்ததுபோல வாய்திறந்து கனத்த நாவை மடித்து கொட்டாவி விட்டபடி மல்லாந்து படுத்து நான்குகால்களையும் மேலே தூக்கி முதுகை மண்ணில் அரக்கிக்கொண்டு மறுபக்கமாகத் திரும்பிப் படுத்தது. அவன் மெல்ல சதுப்பில் இறங்கி குடத்தை நீரில் முக்கினான். நீர் நிறையும் ஒலி கேட்டு சிம்மம் எழுந்து காதுகளைக் கூர்ந்து சிப்பி போன்ற கண்களால் அவனை நோக்கியது. அதன் வால் பின்பக்கம் சுழன்றது. பின்பு அப்படியே மீண்டும் படுத்துக்கொண்டது. நீர்க்குடங்களுடன் திரும்பி நடக்கும்போது கர்ணனின் விழிகள் முதுகில் இருந்தன. சிறிய சருகோசையும் அவன் உடலை விதிர்க்கச்செய்தது.
மரத்தொட்டியில் நீரை ஊற்றி குதிரைகளுக்குக் கொடுத்தான். மீண்டும் நீருக்காக வந்தபோது சிம்மத்தை காணவில்லை. பிறகுதான் புதர்க்குவைக்கு அப்பால் அது ஒருக்களித்து படுத்துக்கிடப்பதைக் கண்டான். அதன் வயிறு ஏறி இறங்க காதுகள் அசைந்தன. அவனை அது அறியுமென அவ்வசைவு காட்டியது. மும்முறை நீரை ஊற்றியதும் சூதன் “நான் சென்று சற்று நீர் அருந்திவருகிறேன்” என்றபடி காவடியை எடுத்தான். “அங்கே ஆலமரத்தடியில் ஓர் ஆண்சிம்மம் கிடக்கிறது” என்றான் கர்ணன். அவன் திகைத்து வாய் திறந்து சற்று நேரம் கழித்து “ஆண் சிம்மமா?” என்றான். கர்ணன் ஆம் என தலையசைத்தான்.
அவன் தோளில் இருந்த குடங்கள் ஆடத்தொடங்கின. அடைத்த குரலில் “இங்கா?” என்றான். “ஆம்” என்றான் கர்ணன் புன்னகையுடன். குடத்தை அப்படியே விட்டுவிட்டு ஓடிச்சென்று தேரில் ஏறிக்கொண்டான். “குதிரைகள் நடுங்கிக்கொண்டே இருப்பதைக் கண்டு நான் அப்போதே ஐயப்பட்டேன்” என்றான் இன்னொரு சூதன். அப்பால் பேச்சொலி கேட்டது. அவர்கள் எழுந்து நோக்க வில்லுடன் வீரர்கள் ஓடிவந்தனர். அவர்கள் உடம்பெங்கும் புழுதியும் குருதியும் கலந்திருந்தன. கர்ணன் “என்ன ஆயிற்று? அரசர் எங்கே?” என்றான். அவர்களால் பேசமுடியவில்லை. நெடுந்தொலைவுக்கு ஓடிவந்தவர்களாகத் தெரிந்தனர். ஒருவன் கைகளை ஆட்டி மூச்சுவாங்கி “அங்கே… மூன்றுபாறை உச்சியில்… அரசர்…” என்றான். இன்னொருவன் “எதிர்பாராதபடி மிக அருகே வந்துவிட்டன” என்றான்.
“சிம்மங்களா?” என்றான் கர்ணன். “ஆம்… நிறைய சிம்மங்கள் பன்னிரண்டுக்குமேல் இருக்கும்… அவை தளகர்த்தர் சத்ரபாகுவையும் ஐவரையும் கொன்றுவிட்டன. அரசர் பாறை உச்சியில் தப்பி ஏறிவிட்டார். நாங்கள் திரும்பி ஓடிவந்தோம். எங்களிடமிருந்த அம்புகளெல்லாம் தீர்ந்துவிட்டன. ஒரே ஒரு சிம்மம் மீது மட்டுமே அம்புகள் பட்டன…” கர்ணன் அவர்களில் ஒருவனின் வில்லை பிடுங்கிக்கொண்டான். தேரில் இருந்த நிறைந்த அம்பறாத்தூணியை எடுத்தபடி ஓடினான். “எங்கே ஓடுகிறான் சூதன்?” என யாரோ கேட்டார்கள். “மூடச்சூதன், வீரத்தைக்காட்டி உயிர்விடப்போகிறான்!”
செம்மண்பாதை பாறைகளின் இடுக்குகள் வழியாக வளைந்து திரும்பிச் சென்றது. அவன் காய்ந்த புல்லிதழ்கள் காலை அறுக்க தாவித்தாவிச்சென்றான். ஆங்காங்கே பசுங்குடைகள் போல நின்ற சாலமரங்களும், நீரோடைகள் செல்லுமிடத்தில் சிறிய கூட்டமாகத் தெரிந்த உயரமற்ற பாயல் மரங்களும் அன்றி அங்கே பசுமையே தெரியவில்லை. எருமைக்கூட்டங்கள் போல விரவிய சிறிய பாறைகளுக்கு அப்பால் அடுப்புக்கல் போல செங்குத்தாக உயர்ந்து நின்ற மூன்று பெரும்பாறைகளைக் கண்டான். அவற்றை நோக்கி அவன் ஓடத்தொடங்கினான்.
அருகே செல்லும்போதே அவன் சிம்மங்களின் அறைகூவலைக் கேட்டுவிட்டான். ஓடியபடியே வில்லில் நாணேற்றிக்கொண்டான். மூன்றுபாறைகளுக்கு அருகே அவன் இரண்டு சிம்மங்களைக் கண்டான். இரண்டுமே பெண் சிம்மங்கள். அவற்றில் ஒன்று பெரும்பாறையை ஒட்டியிருந்த ஒரு சிறுபாறைமேல் ஏறி நின்று மேலும் தொற்றி ஏற முயன்றுகொண்டிருந்தது. இன்னொன்று தரையில் நின்று வாலைச்சுழற்றி மேலே நோக்கி முழங்கிக்கொண்டிருந்தது. அவன் நெருங்கும்போது பாறைக்கு அப்பாலிருந்து சிவந்த பிடரியுடன் ஒரு ஆண்சிம்மம் எழுந்து அவனை நோக்கியது.
கர்ணன் நின்று சிம்மங்களில் இருந்து விழிகளை விலக்காமலேயே காலால் காய்ந்த தைலப்புல்லை சரித்துப்பிடித்துக்கொண்டு அதன் நடுவே இருந்த பாறைக்கல்லில் அம்புகளில் ஒன்றை எடுத்து உரசினான். புல் பற்றிக்கொண்டு புகைந்து எழுந்ததும் அவனுக்கு மிக அருகே புல்லுக்குள் வயிறு பதித்து அவனைத் தாக்க வந்துகொண்டிருந்த பெண்சிங்கம் ஒன்று பேரொலியுடன் எழுந்து வால் சுழற்றி தாவி விலகிச்செல்வதை கண்டான். தைலப்புல்லை வேருடன் பிடுங்கி அந்த நெருப்பில் பற்றவைத்து அம்பில் கோத்து அவன் அந்த ஆண்சிங்கத்தை நோக்கி தொடுத்தான். அது வெருண்டு பின்னங்கால்களில் அமர்ந்தபின் உரத்த அறைதலோசையுடன் பாய்ந்து மறுபக்கம் குதித்தது.
அவன் காலடியில் தைலப்புல் புகையுடன் எரிந்து படரத் தொடங்கியது. புல்கற்றைகளைப் பிடுங்கி பற்றவைத்து தொடுத்தபடி அவன் நெருங்கிச்சென்றான். அவன் அணுகுவதைக் கண்டு சிம்மங்கள் பற்களைக் காட்டி முகம் சுளித்துச் சீறி பின்வாங்கிச்சென்றன. அப்போதுதான் அவன் பாறை இடுக்குகளில் மேலுமிரு சிம்மங்களை கண்டான். புகையுடன் வந்து அருகே விழுந்த நெருப்பைக் கண்டு அவை கர்ஜித்தபடி பாறைகள் மேல் ஏறிக்கொண்டன. அவன் அணுகியபோது அவை அவனை எச்சரிக்கும்பொருட்டு சேர்ந்து உரக்கக் குரலெழுப்பின. அவன் நெருங்கிக்கொண்டே இருந்தபோது திரும்பி பாறைகளில் தாவி பக்கவாட்டில் விலகிச் சென்றன.
வேலமரங்கள் செறிந்த முப்பாறையின் அடிவாரத்தை அடைந்தபோது கர்ணன் அங்கே ஆழமான சுனையைச்சுற்றி செம்மண்சரிவில் மூன்று சடலங்களைக் கண்டான். கிழிந்து சிதறிய உடைகளுடன், உடல் திறந்து குடல்கள் நீளமாக இழுபட்டுக்கிடக்க, செம்மண்ணில் ஊறி கருமை கொள்ளத் தொடங்கிய குருதியுடன் அவை கிடந்தன. கைகள் இயல்பல்லாத கோணங்களில் ஒடிந்தும் மடிந்தும் இருக்க விழிகள் திறந்து வாய் அகன்று அவை ஏதோ சொல்லவருபவை போலிருந்தன. அந்தச்சுனை வட்டவடிவில் மிகத்தெளிந்த நீருடன் நிழல்களாடக் கிடந்தது. சுற்றிலும் உயரமில்லாத முட்செடிப்புதர்கள் இடைவெளி விட்டு நின்றிருந்தன. அவற்றுக்கு அடியில் மேலும் இரு சடலங்கள் இழுக்கப்பட்டிருப்பதைக் கண்டான்.
கர்ணன் சுற்றும் எழுந்த புல்நெருப்பின் புகை நடுவே நின்று விழிகளை ஓட்டி நோக்கினான். அவன் உள்ளுணர்வு அவனை விதிர்க்கச்செய்த கணம் மிக அருகே பாறைக்கு அப்பாலிருந்து அந்த ஆண்சிங்கம் அவன் மேல் பாய்ந்தது. அவன் விலகிக்கொண்டு தன் வில்லால் அதை ஓங்கி அடித்தான். அடி அதன் முகத்தில் பட அவன் சமநிலை இழந்து கால்களை ஊன்றி திரும்பி நின்றான். அது பின்னங்கால்களில் அமர்ந்து கைகளை வீசியபடி சீறி பற்களைக் காட்டியது.
அது மீண்டும் பாய்வதற்குள் அவன் அருகே எரிந்த புல்பத்தையை தூக்கி அதன் மேல் வீசினான். அது வெருண்டு பாய்ந்து விலகி ஓடியது. சிலகணங்கள் சுற்றிலும் நோக்கியபின் கர்ணன் பெரும்பாறைக்குமேல் தொற்றி ஏறி “அரசே!” என்று கூவினான். “ஆம், இங்கிருக்கிறோம்” என பாறைகளின் உச்சியில் இருந்து சத்யகர்மா குரல் கேட்டது. “இறங்கி வரலாம்… சிம்மங்கள் சென்றுவிட்டன” என்றான் கர்ணன் . இன்னொரு குரல் “சத்ரபாகு உயிருடன் இருக்கிறாரா?” என்றது. “இல்லை, அவர் கொல்லப்பட்டுவிட்டார்” என்று கர்ணன் கூவினான். அப்போது ஒரு கணத்தில் அத்தனை சடலங்களிலும் இருந்த பொதுத்தன்மை அவன் கருத்தில் எழுந்தது. அனைத்துமே கழுத்து முறிக்கப்பட்டிருந்தன.
பாறையின் விரிசல்களில் தொற்றியபடி சத்யகர்மாவும், மெய்க்காவலர் தலைவர் பிருகதரும் எட்டு மெய்க்காவல் வீரர்களும் இறங்கி வந்தனர். சத்யகர்மா வந்தபடியே “மிக அண்மையில் வந்து சூழ்ந்துகொண்டன. பாறைகளுக்குள் இத்தனை சிம்மங்கள் இருக்குமென எண்ணவேயில்லை” என்றான். கீழே குதித்து குனிந்து சடலங்களை நோக்கி “இவர்களை அவை பிடித்தமையால் நாங்கள் தப்பமுடிந்தது” என்றான். பிருகதர் கர்ணனிடம் “நீ தேரோட்டி அல்லவா?” என்றார். “ஆம்” என்றான் கர்ணன். “சூதன் அல்லவா?” என்று அவர் மீண்டும் கேட்டார். “ஆம்” என்றான் கர்ணன்.
வீரர்களிடம் திரும்பி “இச்சடலங்களை சிம்மங்கள் உண்டால் அவை மானுடஊனின் சுவையை அறிந்தவையாகிவிடும். அவற்றை பிறகு நாம் வெல்லமுடியாது” என்று பிருகதர் சொன்னார். “சடலங்களை அவற்றுக்கு எட்டாதபடி பாறைமேல் ஏற்றி வையுங்கள்” என்று ஆணையிட்டு சடலங்களை குனிந்து நோக்கி “அனைத்துமே கழுத்து முறிக்கப்பட்டிருக்கின்றன. ஓர் அறைக்குமேல் தாங்க மனிதத்தலையால் முடிவதில்லை” என்றார். கர்ணன் நிலத்திலும் மரங்களிலுமாக தைத்துநின்ற அம்புகளை பிடுங்கி அம்பறாத்தூணிகளை நிறைத்தான்.
சத்யகர்மா அங்கிருந்த பாறை ஒன்றில் அமர்ந்துகொண்டான். புல் எரிந்த தீ விலகிச்சென்று அப்பால் சிறிய புழுதிக்காற்றுபோல தெரிந்தது. சத்யகர்மா தன் கால்களை நீட்டிக்கொண்டு “விரைந்து ஏறியபோது என் கால்கள் உரசிப்புண்ணாகிவிட்டன” என்றான். “நல்லவேளையாக இவர்கள் சுனைக்குள் விழவில்லை. நீர் தெளிந்தே இருக்கிறது…” அவன் சொல்வதை புரிந்துகொண்ட பிருகதர் நீரில் இறங்கிச்சென்று தன் இடையில் இருந்த தோல்பையில் நீரை அள்ளிக்கொண்டு வந்து அரசனிடம் கொடுத்தார். அவன் நீரை குடித்துமுடித்து பையை நீட்டினான்.
சடலங்களை மேலே கொண்டுசென்று வைத்துவிட்டு வந்த வீரர்கள் கீழே குதித்ததும் பிருகதர் “கண, சஸ்த்ர ஹஸ்த!” என்று உரக்க ஆணையிட்டார். அவர்கள் தங்கள் விற்களையும் அம்பு நிறைத்த தூளிகளையும் எடுத்துக்கொண்டு உடல் விரைத்து நின்றனர். கர்ணனும் வில்லை எடுத்துக்கொள்ள குனிந்தபோது பிருகதர் “நீ ஆயுதத்தை எடுக்கவேண்டியதில்லை. நீ சூதன்” என்றார். கர்ணன் வில்லை கீழே போட்டான். “விலகி நில்” என்றார் பிருகதர். அவன் வில்லில் இருந்து விலகி நின்றான்.
அவனை சுருங்கிய விழிகளுடன் கூர்ந்து நோக்கி “நீ ஆயுதக்கலையை எப்படிக் கற்றாய்?” என்றார். “சூத்திரர்கள் தாங்களாகவே படைக்கலத் தொழிலைக் கற்றுக்கொள்ளலாம் என்று நெறியிருக்கிறது தலைவரே. நான் கங்கைக்கரை மரமொன்றை என் குருவாகக் கொண்டு கற்றுக்கொண்டேன்” என்றான் கர்ணன். “இக்கட்டுகளில் சூத்திரர்கள் பிராமணர்களையும் ஷத்ரியர்களையும் காக்கவேண்டுமென்றும் நெறி சொல்கிறது. அவ்வண்ணமே செய்தேன்.”
“ஆக நெறிநூல்களும் உனக்குத்தெரியும்” என்றார் பிருகதர் வெறுப்பில் சுருங்கிய முகத்துடன். அவரது வில் எழுந்து அதில் அவரது கைகள் இயல்பாக அம்பேற்றின. தன்னைச்சுற்றி விற்களில் எல்லாம் அம்புகள் ஏறும் அசைவுகளை கர்ணன் கண்டான். “அரச நெறிநூல்களில் முதன்மையானது பிருஹத்சத்ரரின் சத்ரசாமர வைபவம். அதன்படி அரசனின் உயிரை ஒரு சூத்திரன் காப்பாற்றுவான் என்றால் அக்கணமே அவனை கொன்றுவிடவேண்டும். அரசனின் உயிரை காப்பாற்றியவனாக அவன் அறியப்பட்டால் அவ்வரசனின் பெருமை குன்றும். அந்தச் சூத்திரனை பிற சூத்திரர்கள் தங்கள் தலைவனாக ஏற்றுக்கொள்வார்கள். அவன் காலபோக்கில் நிலத்தை வென்று தன்னை ஷத்ரியனாக அறிவித்துக்கொள்வான். அரசனுடன் போருக்கு எழுவான்.”
கர்ணன் அவர் விழிகளை நோக்கினான். அவை இடுங்கி உள்ளே சென்றிருந்தன. கழுத்தில் நீலநரம்பு எழுந்திருந்தது. அவன் திரும்பி அரசனை நோக்கினான். அவன் எழுந்து வில்லை நாணேற்றிக்கொண்டு புன்னகையில் சற்றே இழுபட்ட உதடுகளுடன் நிற்பதைக் கண்டான். கர்ணன் தன் உடலை இலகுவாக்கிக் கொண்டு “நான் என் கடமையை மட்டுமே செய்தேன்…” என்று பொதுவாகச் சொன்னான். பிருகதர் கைகாட்ட வீரர்கள் வில்லில் அம்புடன் காலெடுத்துவைத்து அவனைச் சூழ்ந்துகொண்டனர். “நான் அரசரின் அறத்தை நம்பி இங்கே நிற்கிறேன்” என்று கர்ணன் மீண்டும் சொன்னான். “சூதனே, அரசன் நெறிகளால் ஆக்கப்பட்டவன். நெறிகளை மீறும் மன்னனை அவை அழிக்கும்” என்றார் பிருகதர்.
அவரது கை அசைந்த அக்கணத்தில் கர்ணன் வலப்பக்கமாக பாயும் அசைவை அரைக்கணம் அளித்து, அதைநோக்கி அத்தனை வீரர்களின் அம்புகளும் திரும்பிய மறுகணம் இடப்பக்கம் பாய்ந்து, ஒரு வீரனைப்பிடித்து அவனுடன் பின்னால் சரிந்து மல்லாந்து விழுந்து உருண்டு அவனைத் தன் கவசமாக்கிக்கொண்டான். அவ்வீரனின் உடலில் மூன்று அம்புகள் பாய அவன் அலறினான். கர்ணன் அவ்வீரனின் கையிலிருந்த வில்லுடன் அம்புகளை அள்ளியபடி சிறிய பாறை ஒன்றுக்கு அப்பால் பாய்ந்து முற்றிலும் தன் உடலை மறைத்துக்கொண்டான். அவன் முன் நின்ற வீரர்கள் அவனுடைய வில்வன்மையை மதிப்பிட முடியாதவர்களாக திகைத்து முட்டிமோத, அவர்களின் அர்த்தமற்ற சில அம்புகள் பாறையை மெல்லிய உலோக ஒலியுடன் முட்டி உதிர, சிலகணங்களுக்குள் அவர்கள் நெஞ்சு துளைக்கப்பட்டு நிலத்தில் வீழ்ந்தார்கள்.
அம்பு பட்ட நெஞ்சுடன் பிருகதர் பாறை ஒன்றில் விழுந்து கைநீட்டி “அரசே!” என்று கூவினார். சத்யகர்மா தன் வில்லுடன் எழுந்தோடி இடையளவு எழுந்து நின்ற பாறை ஒன்றுக்கு அப்பால் பதுங்கிக்கொண்டு கர்ணனை நோக்கி அம்புகளை தொடுத்தான். காற்றில் சீறி வரும் ஒலியிலேயே அம்புகளை அறிந்த கர்ணன் இயல்பாக உடலை வளைத்து தப்பியபடி நான்கு அம்புகளில் சத்யகர்மாவின் வில்லையும் அம்பறாத்தூணியையும் உடைத்தெறிந்து இடைக்கச்சையையும் தலைப்பாகையையும் கிழித்தான். அம்புடன் எழுந்து முன்வந்து “அரசரே, எழுந்து நில்லுங்கள். நீங்கள் உயிர்தப்பமுடியாது” என்றான். “திரும்பி அந்த தடாகத்தைப் பாருங்கள். உங்களை நான் நன்றாகவே பார்க்கிறேன்” என்றான்.
சத்யகர்மா திடுக்கிட்டு திரும்பி நீர்ப்பரப்பில் தெரிந்த கர்ணனின் படிமத்தை பார்த்தான். அவன் விழிகளும் கர்ணன் விழிகளும் தொட்டுக்கொண்டன. மறுகணம் சத்யகர்மா திகைத்து தன் வில்லை கீழே போட்டான். கைகால்கள் பதற உடைந்த குரலில் “நீ யார்?” என்றான். கர்ணன் வாய் திறப்பதற்குள் “நீ சூதன் அல்ல… இதோ இந்த நீர்ப்படிமத்தில் நீ மணிக்குண்டலங்களும் பொற்கவசமும் அணிந்திருக்கிறாய்” என்று அச்சத்துடன் கூவினான்.
கர்ணன் “நான் சூரியனின் மைந்தனாகிய கர்ணன்” என்றான். “நீ என் அரசுக்குள் எப்படி வந்தாய்?” என்று சத்யகர்மா பதறிய குரலில் கூவினான். “இது உங்கள் அரசு அல்ல. இதோ உங்கள் வில் என் பாதங்களில் கிடக்கிறது. உங்கள் அரசை நான் வென்றுவிட்டேன்” என்றான் கர்ணன். “சூதன் நாடாள்வதா? இங்கே ஷத்ரியகுலம் அற்றுப்போகவில்லை… நீ என்னைக் கொல்லலாம். ஆனால் இங்கு ஐம்பத்தாறு ஷத்ரிய தேசங்கள் உள்ளன” என்று சத்யகர்மா கூவினான்.
“அற்பா, என்னிடம் தோற்றதுமே அம்பால் உன் கழுத்தை அறுத்துக்கொண்டிருந்தால் நீ வீரன். அற்பனாகிய உன் நாட்டை நான் விரும்பவில்லை” என்றபின் வில்லுடன் கர்ணன் திரும்பி நடந்தான். தேர் அருகே வந்து அங்கே நின்ற வீரர்களிடம் “செல்லுங்கள். முப்பாறை அருகே உங்கள் அரசர் நின்றிருக்கிறார்” என்றபின் புரவியில் ஏறிக்கொண்டு கற்கள் தெறிக்க விலகிச்சென்றான்.