இலக்கிய விமரிசகரும், சிற்றிதழாளரும், கவிதைவரலாற்றாசிரியருமான ராஜ மார்த்தாண்டனுக்கு அறுபது ஆண்டு நிறைவு விழா நெய்தல் இலக்கிய அமைப்பின் சார்பில் நாகர்கோயில் ஆர்.ஓ.ஏ.கலையரங்கத்தில் 26-7-08 மாலை ஆறுமணிக்குத்தொடங்கியது. நாஞ்சில்நாடன் கோவையில் இருந்துவந்து வடிவீஸ்வரத்தில் அவரது தம்பி வீட்டில் தங்கியிருந்தார். நான் அலுவலகத்தில் இருந்து முன்னரே வந்து குளித்து உடைமாற்றி ஒரு ஆட்டோவில் ஏறி அவரது வீட்டுக்குச் சென்றேன். அங்கிருந்து இன்னொரு ஆட்டோவில் இருவரும் அரங்குக்கு வந்தோம். அங்கு குளச்சல் மு யூசுப் போன்ற நண்பர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
ஆறுமணியளவில் மெல்ல மெல்ல கூட்டம்சேர ஆரம்பித்தது. நாகர்கோயிலின் இலக்கிய நண்பர்கள் பெரும்பாலானவர்கள் வந்தார்கள். ஏறத்தாழ அறுபதுபேர். ராஜமார்த்தாண்டன் தன் மனைவி மகனுடன் வந்தார். அவருக்கு இரு குழந்தைகள். மகள் அஜிதா திருமணமாகி சென்னையில் இருக்கிறாள். ஒரு குழந்தை இருக்கிறது. மகன் திருச்செங்கோடு கல்லூரி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக இருக்கிறார்.
நிகழ்ச்சிக்கு நாகர்கோயிலின் மூத்த அறிஞர்களில் ஒருவராகிய கொடிக்கால் அப்துல்லா தலைமை ஏற்றார். குமரிமாவட்ட உருவாக்கத்துக்கான போராட்டங்களிலும் பின்னர் இடதுசாரி இயக்கங்களிலும் ஈடுபட்டு சிறைசென்றவர் [அப்போது கொடிக்கால் செல்லப்பா] சுந்தர ராமசாமியின் நண்பர். 2001ல் ராஜமார்த்தாண்டனுக்கு அவரே ஒரு பாராட்டுக்கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்.
அறிமுக உரை வாசித்த நெய்தல் கிருஷ்ணன் ராஜமார்த்தாண்டனுடனான அறிமுகம் சுந்தர ராமசாமி வழியாக உருவாயிற்று என்று நினைவுகூர்ந்தார். சார் என்று அழைக்கத்தொடங்கி மெல்ல மெல்ல ஓய் என்று அழைக்குமளவுக்கு நெருங்கி வந்த உறவு அது என்றார். விழாவை முனைவர் அ.கா.பெருமாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
கொடிக்கால் தன் தலைமை உரையில் இங்கே கூடியிருக்கும் பெரும்பாலான நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க வழியமைத்தது சுந்தர ராமசாமியின் ஆளுமையும் அவரது இல்லமும்தான் என்று சொல்லி அவரை இன்று நாம் நினைவுகூரவேண்டும் என்றார். ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு முன் கொடிக்கால் ‘புதுமைத்தாய்’ என்ற இதழை வெளியிட காலத்தில் அதில் அன்று மாணவராக இருந்த ராஜமார்த்தாண்டன் தன் ஆரம்பகால கவிதைகளை வெளியிட்டிருக்கிறார் என்று நினைவுகூர்ந்தார்.
மொழிபெயர்ப்பாளரும் பிரதிமேம்படுத்துநருமான எம்.எஸ். தன் வாழ்த்துரையில் நண்பனை பிறரிடம் புகழவேண்டும் என்ற விதி ஒன்று உள்ளது. அனேகமாக தினமும் சந்திக்கும் நண்பராக இருக்கும் ராஜமார்த்தாண்டன் மேல் தனக்கிருக்கும் மதிப்பையும் பிரியத்தையும் சொல்ல இந்த மேடை ஒரு வாய்ப்பளிக்கிறது, அதற்கான இந்த சந்தர்ப்பத்திற்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார்
நாஞ்சில்நாடன், அவரும் ராஜமார்த்தாண்டனும் அ.கா.பெருமாளும் எம்.வேதசகாயகுமாரும் பேராசிரியர் ஆறுமுகம்பிள்ளையும் [ராஜேந்திரன்] தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் ஒருசாலை மாணாக்கர்கள் என்றார். ஆனால் ராஜமார்த்தாண்டனுடன் நட்பு ஏற்பட்டது ‘தலைமீழ் விகிதங்கள்’ நாவலுக்கு சுந்தர ராமசாமி காகங்கள் அமைப்பில் நடத்திய விமரிசனக்கூட்டத்தில்தான். அன்று பொதுவாக எதிர்மறை விமரிசனங்கள் எழுந்தன. மறுநாள் சுந்தர ராமசாமியிடம் ‘நீங்கள் கடுமையாக விமரிசிக்கும்போது வருத்தமாக இல்லை, ஆனால் இவர்கள் விமரிசிக்கும்போது இவர்களெல்லாம் யார் என்று தோன்றுகிறது’ என்று சொன்னார். சுந்தர ராமசாமி அவர்கள் நாஞ்சில்நாடனின் எழுத்தின் மீதும் அவர் மீதும் அவரைவிட அதிகமாக பற்றி வைத்திருக்கிறார்கள் என்றும் விமரிசனம் அந்த எதிர்பார்ப்பிலிருந்து எழுவதே என்றும் சொன்னார். அந்தக் கூட்டத்தில்தான் கறாரான விமரிசகராக ராஜமார்த்தாண்டன் அறிமுகமானார்
ராஜமார்த்தாண்டன் கவிதைகள் எழுதியிருக்கிறார். இதழ்கள் நடத்தியிருக்கிறார். பெரிய இதழில் பணியாற்றியிருக்கிறார். ஆனால் கவிதை விமரிசகராகவே அவரது இடம் உறுதிப்பட்டிருக்கிறது. சென்னையில் இருந்த காலகட்டங்களில் குடிப்பழக்கத்தால் உடல் நலம் நேரம் ஆகியவற்றை பெரிதும் இழந்துவிட்டார். சில வருடங்களுக்கு முன்னர் அவர் மிக அபாயகட்டத்தில் இருந்தார். அத்துடன் குடும்பகவலைகளும் அவரை வாட்டின. இப்போது உடல்நலம் சீரடைந்துள்ளது. குடும்பநிலை சிறப்பாக இருக்கிறது. இப்போது அவர் முகத்தில் உள்ள ‘தெளிச்சம்’ எப்போதும் இருந்தது இல்லை. இனி அவரிடமிருந்து மேலும் சிறந்த படைப்புகள் வரவேண்டும் என்றார். பூமிக்கு நிலவு 61 சதவீத முகத்தை மட்டுமே காட்டுகிறது, மீதி பகுதி காட்டப்படுவதேயில்லை. ராஜமார்த்தாண்டன் தன் முழுமையை இன்னும் வெளிப்படுத்தவில்லை. அது வெளிப்படவேண்டும் என்றார் நாஞ்சில்நாடன்.
சுரேஷ் குமார இந்திரஜித் ராஜமார்த்தாண்டன் மதுரையில் தினமணி உதவியாசிரியராக வேலைபார்த்த நாட்களில்தான் தனக்கு அறிமுகமாகி குடும்ப நண்பராக ஆனார் என்றார். அப்போது யாத்ரா இதழை நடத்திக் கொண்டிருந்த ஜெயபால், மணி ஆகியோருடன் இணைந்து அவரை சந்திக்க நேர்ந்தது. ஒரேதெருவில் வசித்தோம். இலக்கிய விவாதம் செய்வோம். ஒரு கட்டத்தில் ஒரு இலக்கிய அமைப்பை உருவாக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இருவரும் இணைந்து சந்திப்பு என்ற நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தோம். அப்போது இரு பதிப்பகங்கள் மட்டுமே இலக்கிய நூல்களை வெளியிட்டன. க்ரியா ஒருசிலரது நூல்களை மட்டுமே வெளியிடும். ஆகவே அன்று இலக்கிய வெளியீட்டகமாக அணுகக்கூடியதாக இருந்தது மீரா நடத்திய ‘அன்னம்’ மட்டுமே. அன்னத்தின் புத்தக விற்பனைநிலையம் ஒன்று மேலமாசி வீதியில் ஒரு மாடியில் இருந்தது. அங்கே கூட்டங்களை நடத்தினோம்.
சுந்தர ராமசாமி பங்கேற்ற ஒருசந்திப்புக்கு அறைகொள்ளாத கூட்டம் வந்தது. அதைத்தொடர்ந்து காலச்சுவடு இதழுக்கு ஒரு இதழ் அறிமுகக் கூட்டமும் நடத்தினோம். உடனே ராஜமார்த்தாண்டன் அவரே பிரமிள் பங்கேற்கும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டார். நான் பிரமிளை அப்படித்தான் சந்தித்தேன். பிரமிளுக்கு போடப்பட்டிருந்த அறையில் நானும் என் நண்பர் ஒருவருமாகச் சென்றபோது அவர் கையில் டீ கோப்பையுடன் உலவிக் கொண்டிருந்தார். என்னை பொருட்படுத்தவேயில்லை. சற்றுநேரம் பொறுத்தபின் நானும் நண்பரும் அறையில் கிடந்த ஒரு செஸ் பலகையை எடுத்து வைத்து விளையாட ஆரம்பித்தோம். பிரமிள் சற்றுநேரம் கழித்து அதை கவனித்தார். அருகே வந்து அமர்ந்து ஆலோசனைகள் சொன்னார். அப்படி அவர் எங்கள் உலகில் நுழைந்தார்
பிரமிள் சுந்தர ராமசாமியையும் வெங்கட் சாமிநாதனையும் கடுமையாக வசைபாடுவார். ராஜமார்த்தாண்டன் அதை ஏற்பவர் அல்ல. ஆனால் மாற்றுக்கருத்து சொல்பவனை பிரமிள் வெறுத்து ஆவேசமாகத் திட்டுவார். நாம் கேட்கமட்டுமே செய்ய வேண்டும். ஆனால் ராஜமார்த்தாண்டன் தன் கருத்தை தெளிவாகச் சொல்லிவிட்டு மௌனமாக இருப்பார். பிரமிள் ஊசி ஏற்றியபடியே இருந்தாலும் அசர மாட்டார். கடைசிவரை இம்மூவருடனும் ஒரே நட்புடன் இருந்தார் ராஜமார்த்தாண்டன். அதுவே அவரது இயல்பு என்றார் சுரேஷ்குமார இந்திரஜித்.
கவிஞர் சுகுமாரன், நான் அண்ணாச்சி என்று அழைப்பது இருவரையே. ஒருவர் விக்ரமாதித்யன் இன்னொருவர் ராஜமார்த்தாண்டன். இருவரும் பல ஒற்றுமைகள் கொண்டவர்கள். முறைபப்டி தமிழ் கற்று மரபிலக்கிய அறிமுகம் கொண்டவர்கள். இருவருமே வேட்டியுடன் காணப்படுபவர்கள்.இருவருமே தாடி வைத்தவர்கள். இருவருமே குடிகாரர்கள். என் வளர்ச்சியில் இருவருக்கும் ஒரு பங்குண்டு. என் முதல் தொகுப்பை வெளியிட ஊக்கபப்டுத்தி பிழைநோக்கியும் அளித்தவர் விக்ரமாதித்யனே. என் முதல் தொகுப்புவந்ததும் அதைக் கவனித்து கொல்லிப்பாவையில் முதல் விமரிசனம் வெளியிட்டவர் ராஜ மார்த்தாண்டன்
கடந்த பலவருடங்களில் ராஜமார்த்தாண்டன் எனக்கு தொடர்ந்து இலக்கிய முக்கியத்துவம் அளித்துஎ ழுதியிருக்கிறார். ஆரம்பகால காலச்சுவடு இதழில் அவர் நம்பிக்கையூட்டும் மூன்று கவிஞர்கள் என நான் ராஜசுந்தரராஜன் சமயவேல் ஆகியோரைப்பற்றி முக்கியமான ஒரு கட்டுரையை எழுதினார். எங்களில் பிற இருவரும் அதிகமாக எழுதவில்லை. ஆனால் கவிதையை ஒரு வாழ்வுமையமாகக் கொள்ள எனக்குத்தூண்டுதலாக இருந்தது அந்தக் கட்டுரையே.
பலவருடங்களுக்கு முன் மா.தட்சிணாமூர்த்தி காமத்தை மையமாக்கி ‘திவ்யதரிசனம்’ என்ற கவிதைநூலை கொண்டுவந்தபோது சுந்தரராமசாமியிடம் நான் அந்நூலை விமரிசனம்செய்து பேசினேன். அப்போது ராஜமார்த்தாண்டன் அதை நியாயப்படுத்தினார். பிறகு கேள்விப்பட்டேன் அந்நூலை வெளியிட்டது மட்டுமல்ல அட்டைப்படம் வரைந்ததும் ராஜமார்த்தாண்டன் தான் என்று. ஓவியம் கவிதை இரண்டுக்குமே நல்லகாலமாக ராஜமார்த்தாண்டன் கவிதைவிமரிசனத்துக்கு வந்து சேர்ந்தார்.
ராஜமார்த்தாண்டன் என் கருத்துக்களுடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறவர். ஆனால் அவ்வப்போது நாங்கள் கடுமையாக முரண்படுவதும் உண்டு. உதாரணமாக அவரது ‘கொங்குத்தேர் வாழ்க்கை தொகுதி இரண்டு’ பற்றி நான் காலச்சுவடு இதழில் கடுமையாக விமரிசனம் எழுதியிருந்தேன். அவர் அதிலேயே அதற்கு மறுப்பும் எழுதியிருந்தார். அப்படிப்பட்ட ஒரு விவாதம் கடும் மனக்கசப்பில் முடிவதே வழக்கம். ஆனால் இப்போது அவர் எனக்கு அண்ணாச்சிதான் என்றார் சுகுமாரன்.
விமரிசகரான ந.முருகேசபாண்டியன் மதுரையில் இருந்த நாட்களில் ராஜமார்த்தாண்டன் தன்னுடைய குடும்ப நண்பராக இருந்தவர் என்றார். ஆனால் அதற்குமுன்னரே ராஜமார்த்தாண்டன்னை தெரியும் அவர் ஆய்வுமாணவராக இருந்த நாட்களில், 36 வருடம் முன்பு, கோகயம் என்ற சிற்றிதழை நடத்தினார். அதற்கு நானும் சமயவேலும் சந்தா செலுத்தினோம். ஒரு விமரிசகனாக நான் உருவாவதற்குக் காரணமே ராஜமார்த்தாண்டன்தான். நான் குற்றாலத்தில் அவரை சந்தித்தபோது சுரேஷ்குமார இந்திரஜித் கதைக¨ளைப்பற்றி அவருக்கு நான் எழுதிய நீண்டகடிதத்தை அவரிடம் சுரேஷ் காட்டினார். அதை ராஜமார்த்தாண்டன் வாங்கி பையில் வைத்துக் கொண்டார். அது தினமனி கதிரில் ஒரு மதிப்புரையாக வெளிவந்தது. அது எனக்களித்த தன்னம்பிக்கையினால்தான் நான் தொடர்ந்து எழுதினேன்.
ராஜமார்த்தாண்டன் தன் இலக்கிய நிலைபாடுகளைச் சொல்வதில்லை. அவருடையது ரசனை சார்ந்த விமரிசனம். அவ்விமரிசனத்துக்கு எதிரான ஒரு அலை தமிழில் எழுந்தபோதும் அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. எழுதுவது சிக்கலாக இருந்தால்தான் விமரிசனம் என்ற நிலை தமிழில் உருவானபோதும் அவர் பொருட்படுத்தவில்லை. தன் ரசனையிலும் வெளிப்பாட்டிலும் உறுதியாக இருந்தார் . அதுவே அவரது விமரிசன பங்களிப்பை உருவாக்கியது என்றார் முருகேச பாண்டியன்.
கடைசியாக நான் பேசினேன். ராஜமார்த்தாண்டனை ஒரு கவிதை விமரிசகராகவே முன்னிலைப்படுத்துவதாகச் சொன்னேன். அவரது ‘தமிழ் புதுக்கவிதை வரலாறு’ ‘கொங்குத்தேர் வாழ்க்கை தொகுதி இரண்டு’ ஆகியவை முக்கியமான நூல்கள். க.நா.சு வழிவந்த ரசனை விமரிசகர் ராஜமார்த்தாண்டன். தன் தேர்வுகளையும் ரசனையையும் மட்டும் சொல்லிவிட்டு ஆய்வையும் அலசலையும் நிகழ்த்துவதில் இருந்து விலவிநிற்கும் முறை இது. இவ்வகை ஆய்வு வெறும் சிபாரிசு என்று தோன்றலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் இந்த தேர்வுகள் முன்வைக்கப்படும்போது திட்டவட்டமான ஓர் அழகியல் கோணமும், அதன் பின்னால் உள்ள ஆளுமையும் தெளிவடைந்து வருகின்றன. அதுவும் முக்கியமான ஓர் இலக்கிய விமரிசன முறையே.
ராஜமார்த்தாண்டன் என்னுடைய விமரிசனக் கருத்துக்களை முழுமையாக மறுத்து வாதிட்டிருக்கிறார். என்னுடன் விவாதமும்புரிந்திருக்கிறார். ஆனால் நான் கவிதை பற்றி என் முதல் நூலை எழுதியபோது [உள்ளுணர்வின் தடத்தில், தமிழினி] அவருக்குத்தான் அந்நூலை சமர்ப்பணம் செய்தேன். வாசகனாக எந்தவிதமான தடையும் தராமல் படைப்பின் முன் நிற்பது என்பதே ராஜமார்த்தாண்டன் முன்வைக்கும் விமரிசன முறையாகும் என்றேன்
ராஜமார்த்தாண்டன் தன் ஏற்புரையில் இதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது என்பதனால் தன்னை உருவாக்கியவர்களுக்கு நன்றி சொல்வதற்காக இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்வதாகச் சொன்னார். விவசாயியாக இருந்த தன் தந்தை கடுமையான உழைப்பினால் தன்னை அறிவார்ந்த வேலைக்குப் போகச்செய்ததை நினைவுகூர்ந்தார். இலக்கிய அறிமுகம் செய்து ஆளாக்கியவர் பேராசிரியர் ஜேசுதாஸன். இலக்கிய ஆசானாக இருந்தவர்கள் பிரமிள்,சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் ஆகியோர். ஓர் இலக்கிய ஆளுமையாக அறிமுகமாகி நெருக்கமான முன்னோடியாக வழிநடத்தியவர் ஜெயகாந்தன்.
தினமணி வேலைக்கு உதவியவர்கள் விக்ரமாதித்யன், வண்ணநிலவன்,அசோகமித்திரன் ஆகியோர். இலக்கிய நண்பர்களாக நெடுங்காலம் விளங்கியவர்கள் கட்டைக்காடு ராஜகோபாலன், எம்.வேதசகாயகுமார் ஆகியோர். சென்னை நாகராஜ் மேன்ஷனில் நெடுங்காலம் தங்கிய நாட்களில் அங்கே இலக்கிய விவாதங்களை அனுமதித்தவர் உரிமையாளர் நாகராஜ். ஒரு எழுத்தாளனாக உருவாகி அறியபப்ட்டிருப்பதற்குக் காரணமானவர் பதிப்பாளர் ‘தமிழினி’ வசந்தகுமார் .அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
தன்னுடைய குடும்பத்தை குறிப்பிட்ட ராஜமார்த்தாண்டன் தன் குடும்பத்திற்கு உருப்படியாக எதுவுமே செய்யாதவராக தான் ஆகிவிட்டதை வருத்தமான குரலில் சொன்னார். தன் மனைவிக்கு தன் மேல் கடுமையான கோபங்களும் வருத்தங்களும் இருந்தால் அது நியாயமே. ஆனால் அவர் மீது தனக்கு நன்றியே உள்ளது. ஒரு தந்தையாக எதுவுமே செய்யாவிட்டாலும்கூட தன்மேல் அளவற்ற பிரியமும் மரியாதையும் வைத்திருக்கும் பிள்ளைகளும் நன்றிக்குரியவர்களே என்று சொன்னபோது கண்ணீர் மல்கினார்.
எட்டரை மணிக்கு விழா முடிந்தது. விழாவில் குமரிமாவட்டத்தின் சிறப்புப்பானமாகிய சுக்குப்பால் அளிக்கப்பட்டது.
பாவலர் விருது விழா புகைப்படங்கள்
நாஞ்சில் 60 நிறைவு: நூல் வெளியீட்டுவிழா