பகுதி எட்டு : கதிரெழுநகர்
[ 1 ]
கலிங்கக் கடலோரமாக இருந்த ஆலயநகரமான அர்க்கபுரிக்கு அருணரும் இளநாகனும் பின்னிரவில் வந்துசேர்ந்தனர். அர்க்கபுரிக்குச்சென்ற பயணிகளுடன் நடந்து கடற்காற்று சுழன்று வீசிக்கொண்டிருந்த சிறுநகரின் இருண்ட தெருக்கள் வழியாக நடந்தனர். கருங்கற்களால் கட்டப்பட்ட உயரமற்ற சுவர்களின்மேல் கற்பலகைகளைக் கூரையாக்கி எழுப்பப்பட்ட வீடுகள் நிரைவகுத்த சாலைகளிலும் கற்பலகைகள் பதிக்கப்பட்டிருந்தன. கற்களில்லாத நிலம் முழுக்க மணலே தெரிந்தது. கற்பாதையின்மேல் மணல் கடற்காற்றில் ஆவியெழுவதுபோல சுழன்று பறந்துகொண்டிருந்தது.
பயணிகளுக்கான சத்திரத்தில் தங்கிய இளநாகன் சாளரங்களின் இடுக்குகள் வழியாக பீரிட்டுவந்த காற்றிலும் மணல்துகள்கள் இருப்பதைக் கண்டான். “பூமியின் அணுக்கள்” என்று சொல்லி அருணர் நகைத்தார். “வைசேடிகர்கள் பொதுவாக சாங்கியர்களிடம் மட்டுமே பூசலிடுகிறார்கள். வேதாந்திகளிடம் சற்றே குன்றிவிடுகிறார்கள்.” இளநாகன் “அவர்கள் சொல்வது தர்க்கபூர்வமானது என்றே எண்ணுகிறேன்” என்றான். “இளம்பாணரே, இவர்களின் சிந்தனைகள் பலநூறு வருடம் பழையவை. பேசிப்பேசி தீட்டப்பட்டவை. அவற்றைக் கேட்கையில் அவை உண்மை என்ற எண்ணமே நம்மைப்போன்றவர்களுக்கு ஏற்படும்” என்றார் அருணர்.
“அவை தேவையில்லை என்கிறீர்களா?” என்றான் இளநாகன். “சிந்தனையை தேவையில்லை என்று சொல்வது எப்படி? அவை நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். இந்த மணல்காற்றைப்போல. கண்ணுக்குப்பட்ட அனைத்துடனும் மோதிக்கொண்டிருக்கும். ஆனால் மெய்மை என்பது அவற்றால் தீண்டப்படுவதா என்றுதான் எனக்கு ஐயமாக இருக்கிறது?” “அவை பொய் என்கிறீர்களா?” என்று இளநாகன் கேட்டான். “பொய் என்று சொல்லமாட்டேன். மெய்யின் துளிகள் அவை. ஒரு துளி மெய் கையில் கிடைத்ததும் மானுடர் குதித்துக்கொண்டாட்டமிடுகிறார்கள். அதைக்கொண்டு எஞ்சிய மெய்யை அறிந்துவிடலாமென எண்ணுகிறார்கள். ஆனால் எஞ்சிய மெய் அதற்கு மாற்றானதாகவே எதிரே வருகிறது. எனவே எஞ்சியவற்றை மறுப்பதில் ஈடுபடுகிறார்க்ள். அவர்களின் ஞானம் தேங்கி அகங்காரம் பேருருவம்கொள்ளத் தொடங்குகிறது” என்றார் அருணர். “மெய்மை என்பது மாற்றிலாததாக, முழுமையானதாக இருக்கும். அதை அறிந்தவனுக்கு விவாதிக்க ஏதுமிருக்காது என்றே எண்ணுகிறேன்.”
ஏழு மாதங்களுக்கு முன் கலிங்கபுரியில் இருந்து படகில் கிளம்பி ருஷிகுல்ய நதிக்கரையில் இருந்த துறைநகரமான மணிபுரம்சென்று அங்கிருந்து வண்டிச்சாலையில் சிற்றூர்கள் வழியாக பயணம்செய்து சிலிகை ஏரிக்கரையை அடைந்தனர். கடலின் குழந்தைபோல நீல அலைகளுடன் திசைநிறைத்துக்கிடந்த சிலிகையில் படகிலேறி கரையோரச் செம்படவர் கிராமங்கள் வழியாகப் பயணம் செய்தனர். சிலிகையின் மேல் நாணல் அடர்ந்த சிறிய தீவுகள் வெண்காளான் பூத்ததுபோல நாரைகளும் கொக்குகளும் சூழ்ந்து தங்கள் தலைகீழ் நிழல்களுடன் வானில் மிதக்கும் கோளங்கள் போலத் தோன்றின. நடுவே இருந்த பெரிய தீவில் இருந்த இந்திரபஸ்த ஆலயத்தில் தங்கினார்கள்.
பூசகர் துருவரும் அவர் மனைவியும் மட்டுமே அங்கே இருந்தனர். “முன்பு இது கடலாகவே இருந்தது” என்றார் துருவர். “கலிங்கநாட்டின் தலைநகரமான சிசுபாலபுரி இன்று இவ்வேரியின் வட எல்லையில் உள்ளது. முன்பு அது மேற்கே தயை நதியின் கரையில் இருந்தது. இன்றையமன்னரின் மூதாதையான ஆதிசிசுபாலரால் அமைக்கப்பட்ட பெருநகரம் அது. அதைப்பற்றி அறிந்து கடலுக்கு அப்பாலிருந்த ரக்தபானு என்ற அசுரமன்னன் தன் ஆயிரம் மரக்கலங்களுடன் படையெடுத்துவந்தான். சிசுபாலபுரியை நேரடியாகத் தாக்கச்சென்றால் மக்கள் படகிலேறித் தப்பிவிடுவார்கள் என்பதனால் தன் மரக்கலங்களை இந்த இடத்தில் இருந்த ஆழமான கடல்வாய்க்குள் கொண்டுவந்து நாணல்காடுகளுக்குள் ஒளித்துவைத்தான்.”
“ஆனால் தாக்குதலுக்கு அவன் ஆணையிட்டபோது படகுகள் அசையவில்லை. அவற்றுக்குக் கீழே நீர் கடலுக்குள் திரும்பிச்சென்றுகொண்டிருந்தது. நூறுபாய்களையும் விரித்தும் அவனால் கப்பல்களை அசைக்கமுடியவில்லை. அவனுடைய நிமித்திகர் குறிதேர்ந்து சிசுபாலமன்னரின் குலதெய்வமான ரத்னாகரை என்னும் கடல்தெய்வம் அவர்களைக் கட்டிவைத்திருப்பதாகச் சொன்னார்கள். உடனே தன் படைகளை கப்பல்களில் இருந்து படகுகளில் இறங்கி சிசுபாலநகரியை நோக்கிச்செல்ல ரக்தபானு ஆணையிட்டார். அவர்கள் நகருக்குள் சென்றபோது அங்கே கைவிடப்பட்ட மரவீடுகளைத்தவிர எதுவுமே இல்லை. அனைவரும் படகுகளில் ஏறி காட்டுக்குள் சென்றுவிட்டிருந்தனர்.
சினம்கொண்ட ரக்தபானு நகரைக் கொளுத்தி அழிக்க ஆணையிட்டான். நகர்நடுவே இருந்த பேராலயம் பெருங்கடல்களின் அரசனாகிய வருணனுடையது. அதை எரித்து அழித்துவிட்டு படைகள் திரும்பிவந்து கப்பல்களில் ஏறிக்கொண்டன. மீண்டும் கடலுக்குச் செல்ல ரக்தபானு ஆணையிட்டபோது இருபக்கமிருந்தும் நிலம் எழுந்துவந்து கடலைப்பிரித்து ஏரியாக ஆக்கியது. உள்ளே அகப்பட்டுக்கொண்ட கப்பல்கள் மணலில் தரைதட்டி அமிழ்ந்தன. கப்பல்களைக் கைவிட்டு படகுகளில் கடலில் இறங்கிய ரக்தபானுவை அலைகள் நாநீட்டி உண்டன” என்றார் துருவர். “அதன்பின்னர்தான் சிசுபாலபுரி கடலோரமாக வடக்கே அமைந்தது. சிலிகையில் இருந்து தயை ஆறுவழியாகச் சென்று மகாநதியை அடையலாம். அதன் வழியாகச்செல்லும் படகுகள் அர்க்கபுரிக்கும் சிசுபாலபுரிக்கும் செல்கின்றன.”
படகில் மகாநதிவழியாகச் செல்லும்போது அருணர் “அர்க்கபுரிக்குச் செல்வோம்” என்றார். “இது சூரியன் உச்சத்தில் இருக்கும் சைத்ர மாதம். அர்க்கார்ப்பண விழா தொடங்கவிருக்கிறது. இதோ நதியில் செல்லும்படகுகளில் இருக்கும் மக்கள் பெரும்பாலும் அர்க்கபுரிக்குத்தான் செல்கிறார்கள்.” இளநாகன் அவர்களை நோக்கி “எப்படித்தெரியும்?” என்றான். “அவர்கள் கைகளில் இலைவிரித்த செங்கரும்பும் தாளுடன் மஞ்சள்கிழங்கும் மாந்தளிர்களும் கொன்றைமலர்களும் புதுக்கலங்களும் இருக்கின்றன. அவர்கள் சூரியநோன்புக்காகவே செல்கிறார்கள்” என்றார் அருணர். “அனைவருமே வேளாண்குடிமக்கள். தங்கள் வயல்சூழ்ந்த ஊர்களில் இருந்து படகுகள் வழியாக கடல்நோக்கிச் செல்கிறார்கள்.”
“விஷுவ ராசியில் சூரியன் நுழையும் முதல்நாளை விஷு என்கிறார்கள். விஷுவராசியில் சூரியன் உத்தராயணத்துக்கும் தட்சிணாயணத்துக்கும் சரியான மையத்தில் இருக்கிறான். அந்நாளில் ஐந்துமங்கலங்களுக்கு முன் முதல்கண் விழித்து கையில் மஞ்சள் காப்புகட்டி அர்க்கநோன்பைத் தொடங்குவார்கள். பரணி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் முதல் கிருத்திகை நட்சத்திரம் வரை அனலோனுக்குரிய நாட்கள். அப்போது அர்க்கபுரிக்குச் சென்று அங்குள்ள செங்கதிரோன் ஆலயத்தில் கடல்நீராடி வழிபட்டு மீள்வது நெறி” என்றார் அருணர். “அர்க்கபுரியை வேதரிஷிகளும் வாழ்த்தியிருக்கிறார்கள். கிழக்கே எழும் சூரியனின் முதல் கதிர் பாரதவர்ஷத்தில் படும் இடம் இதுவென சோதிடவேதாங்க ஞானிகள் கண்டடைந்தனர்.”
“பாரதஞானமரபின் முதல் சோதிடநூலான பிரஹதாங்கப்பிரதீபம் சூரியதேவரால் இயற்றப்பட்டது. அவர் வாழ்ந்தது கலிங்கத்தில் என்கிறார்கள். சூரியனின் மைந்தர் அவர். அவர் கதிரோனின் முதற்கதிர் தொடும் இடத்தை இக்கடற்கரையில் தொட்டுக்காட்டினார். அங்கே அவர் நட்ட நடுகல்லையே நெடுங்காலம் மக்கள் சூரியனாக வழிபட்டனர். பின்னர் முதல் கலிங்கமன்னராகிய ஆதிசிசுபாலர் அங்கே சுதையாலான கோயில் ஒன்றைக் கட்டி ஏழுகுதிரைகளுடன் சூரியனை எழுந்தருளவைத்தார். அவரது மைந்தர்களின் காலகட்டத்தில் அவ்வாலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்று பாரதவர்ஷத்திலேயே பெரிய சூரிய ஆலயங்கள் இரண்டு. மூலஸ்தான நகரியில் உள்ள பேராலயமே அளவில் பெரிது. இது சிறப்பில் முதன்மையானது.”
பெரியபடகொன்று அருகில் வந்தது. “சூதர்களே, தாங்கள் அர்க்கபுரிக்கா செல்கிறீர்கள்?” என்று தலைப்பாகை அணிந்த ஒருவர் கேட்டார். “ஆம். உங்களின் வழிதான்” என்றார் அருணர். “எங்கள் படகுக்கு வருக பாணர்களே. உங்கள் சொற்களால் எங்கள் அகமும் ஒளிபெறட்டும்” என்றார் அவர். “மகாநதிக்கரையின் பீஜமூலம் என்னும் சிற்றூரின் வேளாண் குலத்தலைவனாகிய என் பெயர் விபாகரர்.” அருணர் எழுந்து “அவ்வண்ணமே” என்றார். “சொற்கள் அவற்றைக் கேட்பவர்களை நாடிச்செல்கின்றன, பக்தர்களை நாடிச்செல்லும் தெய்வங்கள் போல” என்றபடி அந்தப்படகில் கால்வைத்து ஏறினார். இளநாகனும் ஏறிக்கொண்டான்.
அப்படகில் முழுக்கமுழுக்க கிராமத்தினர் நிறைந்திருந்தனர். பலவயதினரான பெண்கள் கரியமுகத்தில் மின்னும் வெள்ளி அணிகளுடன் வண்ணம்பூசப்பட்ட மரவுரிச்சேலைகளுடன் மடியில் சிவந்த புதுக்கலங்களை வைத்து அமர்ந்திருந்தார்கள். சிறுகுழந்தைகள் பெரிய விழிகளுடன் அன்னையரின் தொடைகளைத் தொட்டபடி நின்றும் மடியில் அமர்ந்தும் நோக்கினர். வெயிலில் நின்று பழுத்துச்சுருங்கிய முகம்கொண்ட முதியவர்கள் கைகூப்பினர். “கண்கண்ட தெய்வத்தை, கதிரோனை பாடுக சூதரே” என்றார் விபாகரர். அருணர் தன் யாழை இறுக்கி சுதிசேர்த்து பாடத்தொடங்கினார்.
“பிரம்மத்திலிருந்து விஷ்ணுவும் விஷ்ணுவிலிருந்து பிரம்மனும் பிரம்மனில் இருந்து மரீசியும் மரீசியிலிருந்து காசியப பிரஜாபதியும் பிறந்தனர். காசியபருக்கு தட்சனின் மகளான அதிதியில் ஆதித்யர்களும் வசுக்களும் ருத்ரர்களும் பிறந்தார்கள். அவர்களில் முதன்மையானவர்கள் பன்னிரு ஆதித்யர்கள். தாதா, ஆரியமா, மித்ரன், சுக்ரன், வருணன், அம்சன், பகன், விவஸ்வான், பூஷா, சவிதா, த்வஷ்டா, விஷ்ணு என்பது அவர்களின் பெயர்கள். விவஸ்வாவின் மைந்தனே உயிர்த்துளியாக முளைத்த வைஸ்வாநரன். இன்று இதோ என்னில் இருந்து அவனைப்பாடும் வைஸ்வாநரன் வாழ்க!”
“ஒன்பதாயிரம் யோஜனை நீளமுள்ளது சூரியனின் ரதம். அவன் சக்கரம் பன்னிரு ஆரங்கள் கொண்ட காலவடிவம். காயத்ரி, பிருஹதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப்பு, அனுஷ்டுப்பு, பக்தி என்னும் ஏழு குதிரைகள் ஏழு நடைகளில் அதை இழுத்துச்செல்கின்றன. நான்குவேதங்களும் அவன் நெஞ்சின் கவசங்களாக ஒளிவிடுகின்றன. கந்தர்வர்கள் அவன் ஊர்வலத்தில் மங்கல இசை பெய்து முன் ஏந்திச்செல்கிறார்கள். அப்சர கன்னியர் மங்கலத்தாலமேந்துகிறார்கள். அரக்கர்கள் அவன் நிழலாகச் சென்று காவல்காக்கிறார்கள். அவன் ரதத்தை பெருநாகங்கள் ஒருக்குகின்றன. அவன் கடிவாளத்தில் யக்ஷர்கள் அமர்ந்திருக்கிறார்கள். பாலர்களும் கில்யர்களும் அவன் கொடியேந்துகிறார்கள். அழிவற்றவனாகிய அவனே பிரம்மத்தின் வடிவமாக நின்று இவ்வுலகைப் புரக்கிறான்.”
அர்க்கபுரியில் இளநாகன் இரவில் சற்றுநேரம்தான் கண்ணயர்ந்திருப்பான், அவனுடன் வந்த வேளாண்குடிகள் சத்திரத்தின் கூடம் முழுக்க படுத்து அகக்கிளர்ச்சியுடன் பேசிக்கொண்டே இருந்தது நெடுநேரம் கேட்டுக்கொண்டிருந்தது. விபாகரர் “சூதரே, தாங்கள் துயிலவில்லையா?” என்றார். “இல்லை” என்றார் அருணர். “வெங்கதிரோனை வென்றவர் என எவரும் உண்டா?” என்றார் விபாகரர். “ஆம், முன்பு இலங்கையை ஆண்ட அரக்கர்குலத்தரசன் இராவணனால் சூரியன் வெல்லப்பட்டான்” என்றார் அருணர். அங்கே பேசிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் அமைதியாயினர். “அக்கதையை நான் கேட்டதேயில்லை” என்றார் விபாகரர்.
“கேளுங்கள் வேளிர்களே. தன்னைப்படைத்த காசியபபிரஜாபதியிடம் சென்று இளஞ்சூரியன் கேட்டான் ‘எந்தையே, ஒளியே என் அழகும் ஆற்றலுமாக உள்ளது. ஒளியாலேயே நான் அறியப்படுகிறேன், ஒளிக்காகவே நான் துதிக்கப்படுகிறேன். இவ்வொளி குறையாதிருக்க நான் என்ன செய்யவேண்டும்?’ அவர் சொன்னார் ‘மைந்தா, தோன்றியதெல்லாம் அழியும். உன்னைப்போல பல்லாயிரம் கோடி ஆதித்யர்கள் தோன்றிமறைந்திருக்கிறார்கள். அவர்களைப் பிறப்பித்த பல்லாயிரம் கோடி பிரஜாபதிகளும் அப்பிரஜாபதிகளைப் பிறப்பித்த பிரம்மன்களும் மறைந்திருக்கிறார்கள். தோன்றாதது பிரம்மம் ஒன்றே. குன்றாததும் மறையாததும் அதுவே.’ ஒளிவிடும் இளையவனின் தலையை வருடி காசியபர் சொன்னார் ‘பிரம்மத்தின் நிழலே காலம். அதன் படிமங்களே தேய்வும் குறைவும் இறப்பும். அவற்றை வெல்லவே முடியாது.’”
“சூரியக்குழந்தை அதை ஏற்கவில்லை. ‘நான் குன்றவோ மறையவோ விரும்பவில்லை தந்தையே. ஒருவனை வாழச்செய்வது எது என்று மட்டும் சொல்லுங்கள், அதையே நான் செய்கிறேன்’ என்றது. ’மைந்தா வாழச்செய்வது வாழ்த்துக்களே. ஒருவனை அகங்கனிந்து வாழ்த்தும் ஒருகுரல் ஒலித்துக்கொண்டிருக்கையில் மட்டும் தேய்வும் குறைவும் இறப்பும் விலகி நிற்கின்றன.’ சூரியன் ‘அப்படியென்றால் என்னை ஒவ்வொரு கணமும் அகம்கனிந்து வாழ்த்தும்குரல்கள் எழுந்துகொண்டிருந்தால் நான் அழிவற்றவன் அல்லவா?’ என்றான். ‘ஆம் அவ்வண்ணம் நிகழுமென்றால்’ என்றார் காசியபர். ‘அவ்வண்ணமே ஆகும்’ என்று சொல்லி சூரியன் விண்ணிலெழுந்தான்” அருணர் சொன்னார்.
“விண்பாதையில் ரதமேறிவந்த சூரியன் தன் அகத்தை கனிவாலும் கருணையாலும் நிறைத்தான். கொடை என்னும் ஒற்றைச்சொல்லன்றி தன் அகத்தில் எச்சொல்லும் எழாமலாக்கினான். அச்சொல் அவனில் பல்லாயிரம் கோடி ஒளிக்கரங்களாக எழுந்தது. அவனை நோக்கி எழுந்த ஒவ்வொரு உயிர்த்துளியையும் பருப்பொருளையும் அவன் தன் கரங்களால் தொட்டான். மண்ணில் பூத்துவிரிந்த ஒவ்வொரு மலரையும் அவன் தொட்டு வண்ணம் கொள்ளச் செய்தான். ஒவ்வொரு இலையையும் வருடி பசுமைகொள்ளச் செய்தான். ஒவ்வொரு சிறுபூச்சியும் தன் சிறகுகளை ஒளிகொள்ளச்செய்யும் அவன் கைகளை அறிந்தது. நீருள் வாழும் மீன்களும் மண்ணுக்குள் வாழும் புழுக்களும் அவன் கொடையால் வாழ்ந்தன. வேளிர்களே, இப்புவியில் ஒவ்வொருவரையும் தேடிவந்து கொடுக்கும் கரங்கள் கொண்டவன் அவன் ஒருவனே.”
“அதோ, இருளில் ‘ரீ’ என்றொலிக்கும் பூச்சி. அது சூரியனை தவம் செய்கிறது. இந்நேரம் தண்டின் உறைக்குள் இருந்து மெல்லவெளிவரும் குருத்து அவன் கனிந்த புன்னகையை எண்ணிக்கொள்கிறது. அடைகாக்கும் முட்டைக்குள் வாழும் குஞ்சுக்கு அவன் ஒளியை கனவாக ஊட்டுகின்றது தாய்ப்பறவை. அன்னையின் குருதிவழியாக அவன் செம்மையை அறிந்து புன்னகைசெய்கிறது கருக்குழந்தை. அவன் ஒளிமுகத்தை அறியாமல் எவ்வுயிரும் மண்ணுக்குவருவதில்லை. இரவு என்பது சூரியனுக்கான தவம். பகலென்பது சூரியனைக் கொண்டாடுதல். சூரியக்கொடை இப்பூமி. இங்கே ஒவ்வொருகணமும் அவனை ஏத்தும் உயிர்க்குலங்களின் பலகோடிக் குரல்கள் எழாமலிருந்ததில்லை.”
“ஆகவே அவன் தேய்ந்ததே இல்லை. அள்ளிக்கொடுக்கும்தோறும் அவன் நிறைந்தான். எரியும்தோறும் பொலிந்தான். அவன் பிறந்தபின் ஆயிரம்கோடி இந்திரர்கள் வந்துசென்றனர். பல்லாயிரம்கோடி வருணர்களும் குபேரர்களும் எமன்களும் பிறந்துமறைந்தனர். பிரம்மம் அவனை நோக்கி புன்னகைசெய்கிறது. அழிவின்மையென்பது அவனே என்று தேவர்கள் மகிழ்ந்தாடுகின்றனர். பிரம்மத்தின் கைக்குழந்தையை முனிவர்கள் ஒவ்வொருநாளும் மூன்றுவேளை வணங்குகிறார்கள். அவன் செங்கதிரால் விளைகின்றது மண். அம்மண்ணின் அவிகளை உண்டு வானக தேவர்கள் வாழ்கிறார்கள்.”
புலஸ்தியகுலத்தில் விஸ்ரவசுவின் மைந்தனாக சுமாலியின் மகள் கைகசியின் வயிற்றில் பிறந்த ராவண மகாப்பிரபு அரக்கர்குலத்தின் முதன்மைப்பெருவீரனாக இருந்தான். அவன் குபேரனை வென்று அவனுடைய புஷ்பகவிமானத்தைக் கைப்பற்றினான். மயனை வென்று அவனைக்கொண்டு தனக்கொரு தலைநகரை உருவாக்கினான். அந்த இலங்கைபுரியில் வருணனையும் எமனையும் காவல்தெய்வங்களாக்கினான். இந்திரன் அவனுக்கு அஞ்சி ஒளிந்துகொண்டான். இறுதிவெற்றிக்காக அவன் சூரியனை வெல்ல எண்ணினான்.
சூரியனின் முதல்கதிர் எழும் அர்க்கபுரிக்கு வந்த ராவணன் காலையில் தன் கதையுடன் கடலருகே நின்றான். கீழ்த்திசையில் தன் கோடிகோடி பொற்கரங்களை விரித்து செம்பிழம்பாக எழுந்த சூரியனின் ஒளியால் அவனும் பொன்னுருவானான். சூரியனின் ஏழுவண்ணக்குதிரைகளின் குளம்படிகள் மலரிதழ்கள் நலுங்காமல் இளந்தளிர்பொதிகள் அவிழாமல் தடாகத்து நீர்ப்படலம் அசையாமல் ஒவ்வொரு பருப்பொருளிலும் ஊன்றிச்சென்றன. மலர்கள் வெடித்துப்புரியவிழ்ந்து மணம் எழுப்பி ‘மண் மண்’ என்றன. கோடானுகோடி பூச்சிகள் ஒளிகொண்டு சுழன்றெழுந்து ‘காற்று காற்று’ என்றன. சிறகுகள் விரித்த பறவைகள் ‘வான்! வான்!’ என்றன. மேகங்கள் ஒளியுடன் செஞ்சாமரங்களாகி ‘வெளி! வெளி!’ என்றன. பல்லாயிரம் நதிக்கரைகளில் பலலட்சம் முனிவர்களின் தவம் கனத்த கைகள் நீரள்ளி வீழ்த்தி ‘எங்கோ வாழ்!’ என்றன.
தன்னருகே நின்றிருந்த அமைச்சர் பிரஹஸ்தரிடம் ராவணன் சொன்னான். ‘இதோ அரக்கர்குலத்தலைவனாகிய ராவணேசன் வந்திருக்கிறேன். திசையானைகளை நொறுக்கிய மார்பும் திசைமூர்த்திகளை வென்ற கைகளும் மகேசனின் மாமேருவை அசைத்த தோள்களும் கொண்டு இதோ நிற்கிறேன். சூரியனை என் பாதம் பணிந்து என் வெற்றியை ஏற்று மேல்செல்லும்படிச் சொல். இல்லையேல் அவன் தன் ஒளிக்கரங்களுடன் என்னுடன் போருக்கெழட்டும்.’
“தன் ரதக்காலின் முன் நிற்கும் அரக்கனை சூரியன் குனிந்து நோக்கி தன்னருகே நின்ற துவாரபாலகர்களான தண்டி, பிங்கலன் இருவரிடமும் ‘அவனுக்கென்ன தேவை என்று கேளுங்கள்’ என்றான். தண்டி ‘விண்ணரசே, அவன் தங்கள் மீதான வெற்றியைக் கோருகிறான்’ என்றான். ‘அவ்வண்ணமே அளித்தேன். அவன் வாழ்க’ என்று அருள் செய்து ‘எழுக புரவி’ என்றான் ஒளிவடிவோன். பிரஹஸ்தர் வந்து வணங்கி ‘அரசே தாங்கள் சூரியனை வெற்றிகொண்டுவிட்டீர்கள்’ என்றான். கைகளை விரித்து கதையைச் சுழற்றி ’வென்றேன் விண்ணொளியை!’ என்றுகூவியபடி அவன் இலங்கைநகரம் மீண்டான்” அருணர் சொன்னார்
இருளுக்குள் நகைப்பொலிகள் எழுந்தன. விபாகரர் “ஆம், அவன் கொடைமடம் மட்டுமே கொண்டவன். தன் அழிவை ஒருவன் கோருவானென்றால் அதையும் அளிப்பவன். ஆகவே அழிவற்றவன்” என்றார். “சூரியனே வாழ்க! பெருங்கருணையின் ஒளிகொண்டவனே வாழ்க! அழிவற்றவனே வாழ்க!” என்று கூடியிருந்தவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். இளநாகன் கண்களை மூடியபோது விழிகளுக்குள் எழுந்த ஒளியைக் கண்டான். ஒவ்வொருநாளும் வந்து முடிவிலாது அளிப்பவன் அவனுடைய கேளாதளிக்கும் கொடையினாலேயே எளியவனாகிவிட்டனா என்ன? ஆனால் அவன் அளியை அறியாத எவ்வுயிரேனும் மண்ணிலிருக்க முடியுமா என்ன? அவன் சூரியனைப்பற்றிய பழந்தமிழ் பாடலொன்றை எண்ணிக்கொண்டான். அவன் தந்தை நீர்க்கரையில் நிறுத்தி கைகூப்பச்சொல்லி கதிரைக்காட்டி கற்றுத்தந்த பாடல்.
காலையில் இருள் அகல்வதற்குள்ளேயே அனைவரும் எழுந்துவிட்டனர். துயிலவேயில்லை என்ற எண்ணம் இளநாகனுக்கு ஏற்பட்டது. அருகே படுத்திருந்த அருணர் எழுந்து பின்பக்கம் கிணற்றடியில் பல்தேய்த்துக்கொண்டிருந்தார். விளக்குகள் கடற்காற்றுக்காக ஆழ்ந்த பிறைகளுக்குள் வைக்கப்பட்டிருக்க அவற்றின் ஒளி பெரிய முக்கோணங்களாக எதிர்ச்சுவற்றில் விழுந்து சுடர்ந்தது. ஒளிப்பட்டைகளைத் தாண்டி ஓடி விரைந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டபோது அருணர் வேளிர்களுடன் கிளம்பிவிட்டிருந்தார்.
கடற்கரையில் கூட்டம்கூட்டமாக மக்கள் கலங்களுடனும் பூசனைப்பொருட்களுடனும் சென்றுகொண்டிருந்தார்கள். கடலின் ஓசை மிக அருகே கேட்க அலைநுரை இருளுக்குள் தெரியும் கடலின் புன்னகை என அப்பால் தெரிந்தது. சிறுகுழந்தைகள் சிணுங்கி அழுது கடற்காற்றுக்கு முகத்தை அன்னையரின் தோள்களில் புதைத்துக்கொண்டன. சிறுவர்கள் உடைகள் சிறகுகளாக படபடக்க கூவியபடி அன்னையரின் கைப்பிடியில் நின்று குதித்தனர். கடற்கரை மணலில் கால்கள் புதைய, ஆடைகளை கைகளால் பற்றியபடி நடந்தவர்கள் வாய்க்குள் சென்ற மணல்துகள்களை துப்பிக்கொண்டிருந்தனர்.
மணல்மேட்டில் ஏறியதுமே அப்பால் பெரிய சக்கரங்களுடன் ரதவடிவில் அமைக்கப்பட்டிருந்த சூரியனின் செங்கல்கோயில் தெரிந்தது. அதைச்சுற்றி பந்தங்களேதும் இல்லை என்றாலும் கடல்நீர்ப்பரப்பின் வெளிச்சத்தில் நிழலுருவங்களாக பல்லாயிரம் மக்களை காணமுடிந்தது. அருகே செல்லச்செல்ல கோயில் பெரிதாகியபடியே வந்தது. அங்கே கூடியிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் கூவி அழைத்தபடி அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தனர். மேலும் நெருங்கியபோதுதான் அவர்கள் அனைவரும் மணல்வெளியில் சிறிய கல்லடுப்புகளைக் கூட்டி அவற்றில் கலங்களை வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. விறகுகளையும் பூசைப்பொருட்களையும் அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். நடுவே ஓடிய குழந்தைகளை கடிந்து கூவினார்கள். ஆண்களை பெண்கள் கூச்சலிட்டு வேலை ஏவினர். ஆண்கள் தடுமாறி அங்குமிங்கும் அலைமோதினர்.
இளநாகன் அருணருடன் சென்று வெண்ணிற நுரையிதழ்களுடன் கிடந்த இருண்ட கடலில் இறங்கி நீராடினான். காலைநதிகள்போல வெம்மையுடன் இராமல் கடல் குளிர்ந்து உடலை நடுங்கச்செய்தது. ஈர ஆடையுடன் கோயிலை நோக்கி ஓடியபோது சிலகணங்களிலேயே தலையும் உடலும் காய்ந்தன. கோயில் முகப்பை அடைந்தபோது உடைகளும் காய்ந்து பறக்கத் தொடங்கின.
கடலுக்கு புறம்காட்டி ஓங்கி நின்றிருந்த பேராலயத்தின் சிறிய மதில்சுவர் வாயிலில் கலிங்கமன்னர்களின் இலச்சினையாகிய கால்தூக்கிய சிம்மங்கள் இருபக்கமும் எழுந்து நின்றன. வாயிலின் கற்கதவம் புது மாந்தளிர்களாலும் கொன்றை மலர்களாலும் அணிசெய்யப்பட்டிருந்தது. உள்ளே பன்னிரு ஆரங்கள் கொண்ட ஆலயத்தேரின் சக்கரங்களுக்கும் செஞ்சந்தனமும் மஞ்சளும் பூசப்பட்டு மலர்மாலை சூட்டப்பட்டிருந்தது. கருவறைக்குள் இருளில் வைதிகபூசகர் மலரணி செய்துகொண்டிருந்தார்.
கருவறைக்கு நேர் முன்னால் இருந்த கல்மண்டபத்தில் பெரிய உலோகக் குழியாடி அமைக்கப்பட்டிருந்தது. வலப்பக்கம் மங்கலவாத்தியங்களுடன் பாணர்களின் நிரை நின்றிருக்க இடப்பக்கம் வைதிகர்கள் நிறைகுடங்களும் மாவிலையும் தர்ப்பையுமாக நின்றனர். ஆலயமுகப்பின் அர்த்தமண்டபத்தில் மலர், பொன், மணி, அரிசி, ஆடி, கனிகள், நிறைகுடம், வெண்சங்கு என எட்டுமங்கலங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.
அனைவரும் உதயவேளைக்காகக் காத்திருந்தனர். உதயம் நிகழும் கணமே அவர்களுக்குத் தெரிந்திருந்தது என்று அவர்களின் செயல்கள் காட்டின. நிமித்திகர் ஒருவர் கையைத் தூக்கியதும் பாணர்கள் தங்கள் வாத்தியங்களை தூக்கிக்கொண்டனர். கிழக்குச்சரிவில் முதல் மேகம் செந்நிறத்தீற்றல் கொண்டபோது கடற்கரை முழுக்க ஓங்காரம்போல ஓசையெழுந்தது. அத்தனை பேர் அங்கே பரவியிருப்பதை இளநாகன் அப்போதுதான் கண்டான்.
மேகங்கள் பற்றிக்கொண்டே இருந்தன. ஒன்றிலிருந்து ஒன்றுக்கு செம்மை பரவி பொன்னிறமாகிக்கொண்டிருந்தது. சற்றுநேரத்தில் கிழக்குவெளியே பொன்னுருகிப்பரவியது போலாயிற்று. நிமித்திகர் கையைத் தூக்கிய கணத்தில் கடலின் நீராலான தொடுவான் கோட்டில் சூரியனின் முதல்கதிர் எழுந்தது, உலோகக்குழியாடியின் மையத்தில் அக்கதிர்விழுந்து அது அனல்போல சுடர்ந்தது. அருணர் தன்னை தொட்டபோதுதான் இளநாகன் ஆலயக்கருவறைக்குள் நோக்கினான். ஆடியின் ஒளி விழுந்து கருவறையில் சூரியனின் சிலை பொன்னிறமாகச் சுடர்ந்தது.
சூதர்களின் வாத்தியங்களும் வேதகோஷமும் எழுந்து சூழ்ந்தன. பல்லாயிரம் தொண்டைகள் ‘எங்கோ வாழ்!’ என்று வாழ்த்திய ஒலி கடலோசையை விஞ்சியது. எட்டுகைகளில் இருமேல்கைகளிலும் மலர்ந்த தாமரைகள் ஏந்தியிருந்த சிலை சமபங்கமாக நின்ற கோலத்தில் தெரிந்தது. கைகளில் தூபம் மணி கமண்டலம் விழிமாலை அஞ்சல்அளித்தல் முத்திரைகளுடன் நின்ற சூரியதேவனின் சிலை ஒளிகொண்டபடியே வந்தது. வெண்மலர்மாலைகள் சூட்டப்பட்டிருந்தன. மஞ்சள்நிறமலர்கள் பாதங்களில் பரப்பப்பட்டிருந்தன. ஒளி எழுந்து கண்களைக் கூச வைத்தது.
கருவறை தீபத்தில் இருந்து கொளுத்தப்பட்ட தீயை பூசகர் கொடுக்க அதைக்கொண்டு முதல் அடுப்பு பற்றவைக்கப்பட்டது. ஒன்றிலிருந்து ஒன்றாக நெருப்பு பெருகிச்செல்ல எண்ணைவிறகுகளில் தழல்கள் எழுந்து கதிர்ஒளியில் மலரிதழ்கள் போல ஆடின. கலங்களில் நீர்விட்டு புத்தரிசியும் வெல்லமும் போட்டு பொங்கலிட்டனர். புதுக்கலங்களுக்கு முன்னால் விரிக்கப்பட்ட மஞ்சள்மரவுரியில் கொன்றைமலரும் மந்தாரமலரும் மஞ்சள்கிழங்கும் கணுக்கரும்பும் படைக்கப்பட்டிருந்தன.
அனைத்து வாத்தியங்களும் ஓய்ந்தன. நீண்ட வெண்தாடியும் தோளில் புரண்ட நரைகுழலும் விரிந்த கருவிழிகளும் கன்னங்கரிய மேனியும் கொண்ட குலப்பாடகர் ஒருவர் எழுந்து நின்று கைகளை விரித்து உரத்தகுரலில் பாடத்தொடங்கினார்.
மென்மொட்டுகளை விரியச்செய்பவனே
என்னை எழுப்புக!
என்னை எழுப்புக தேவா என்னை எழுப்புக!
நீர்க்குமிழிகளில் வானத்தை விரிப்பவனே
என்னை வாழ்த்துக!
என்னை வாழ்த்துக தேவா என்னை வாழ்த்துக!
வெண்புழுக்களை ஊடுருவிச்செல்பவனே
என்னை அறிக!
என்னை அறிக தேவா என்னை அறிக!
வேர்களில் வெம்மையாகச் செல்பவனே
என்னைக் காத்தருள்க!
என்னைக் காத்தருள்க தேவா என்னைக்காத்தருள்க!
மேகங்களை பொன்னாக்குபவனே
என்னை விடுவித்தருள்க!
என்னை விடுவித்தருள்க தேவா என்னை விடுவித்தருள்க!
சூரியவட்டத்திலிருந்து கரைநோக்கி ஒரு பொன்னிறப்பாதை எழுவதை இளநாகன் நோக்கி நின்றான். கைகூப்பி நின்ற கூட்டத்திலிருந்து வாழ்த்தொலி ஒரேசமயம் பொங்கி எழுந்தது. கலங்களை நிறைத்து பொங்கியது அன்னத்தின் நுரை.