அன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்

’அந்தக்கால எழுத்தாளர்கள் சிந்தனைகளை வளர்ப்பதில் ஈடுபாடு காட்டினார்கள். இப்போதைய எழுத்தாளர்கள் வெறும் விவாதங்களைத்தான் உருவாக்குகிறார்கள்’ இந்தவரி இப்போது பிரபலமாக இருக்கிறது. ஒருவாரத்தில் பலர் என்னிடம் சொல்லிவிட்டார்கள். இப்போதுள்ள விவாதங்களின் பின்னணியில் இதை நீங்கள் விளக்கவேண்டும் என்று நினைக்கிறேன்

ஜெயராமன்

***

அன்புள்ள ஜெயராமன்,

அனேகமாக இது ஏதோ ஃபேஸ்புக் மேதையின் வரியாகத்தான் இருக்கும். எதையும் யோசிக்காமல் வாசிக்காமல் பேசுவதற்கான இடம் அது. இந்த தளத்திலேயே இதற்கிணையான கேள்விகளுக்கு மிகவிரிவான, ஆதாரபூர்வமான பதில்கள் பத்துமுறைக்குமேல் எழுதப்பட்டுள்ளன. ஒரு எளியவாசகன், அடிப்படை அறிவுத்தேடல்கொண்டவன் இப்படி ஒரு வினா வந்ததுமே இணையத்தில் கூகிளைக்கொண்டு ஒரு தேடலை நிகழ்த்தியபின்னர்தான் மேலே வாசிப்பான்.

நவீனத் தமிழிலக்கிய வரலாற்றிலேயே சென்ற பத்துவருடங்களாகத்தான் இலக்கியத்தின் அனைத்துத் தளங்களையும் மிக விரிவாக அறிமுகம் செய்யக்கூடிய நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள ஒரு வாசகன் இன்று அவனுக்கு வாசிக்கக்கிடைக்கும் ஒட்டுமொத்தமான விரிந்த பார்வையை எப்போதுமே அடைந்துவிடும் நிலை சென்றகாலங்களில் இருந்ததில்லை. சென்றகால வாசகர்கள் பலரிடம் அதற்கான தளக்குறுகலையும் நாம் காணமுடியும்.

உதாரணமாக, இந்த தளத்திலேயே இலக்கிய- சிந்தனைத்துறைக் கலைச்சொல்லாக்கம் பற்றிய விரிவான கட்டுரைகள் உள்ளன. அக்கலைச்சொற்களுக்கான அறிமுகமும் அகராதியும் உள்ளது. அனேகமாக அனைத்துக் இலக்கியக்கொள்கைகளும் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பக்கங்களில் இலக்கியத்தின் அடிப்படைகள், ஐயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. எழுத்தின் வாசிப்பின் அடிப்படைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.அவையனைத்தும் நூல்களாகவும் கிடைக்கின்றன [உம்:எழுதும்கலை, எழுதியவனைக் கண்டுபிடித்தல்]

அசோகமித்திரன்

இந்திய இலக்கியத்தின் முக்கியமான நூல்களைப்பற்றி இந்தத் தளத்தில் முதல்முறையாக தமிழில் விரிவான அறிமுகக்கட்டுரைகள் எழுதப்பட்டு நூலாக வெளிவந்துள்ளன. [உம்: கண்ணீரைப் பின்தொடர்தல்] உலக இலக்கியத்தின் முதன்மையான நூல்களைப்பற்றிய மிகவிரிவான விமர்சனக்கட்டுரைகள் வெளிவந்து நூலாகியுள்ளன [உம்: மேற்குச்சாளரம்] அனைத்துக்கும் மேலாக தமிழ் நவீன இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக அறிமுகம் செய்யும் முதல்நூலே இப்போதுதான் வெளிவந்துள்ளது [நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்]

மரபிலக்கியத்தை நவீன இலக்கியத்தின் கோணத்தில் அறிமுகம் செய்யும் நூல்கள் வெளிவந்துளன [உம்:ஆழ்நதியைத்தேடி, சங்கசித்திரங்கள்] நவீனத்தமிழிலக்கியத்தின் அனைத்து முன்னோடிகளைப்பற்றியும் விரிவான விமர்சனக்கட்டுரைகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்தன [இலக்கியமுன்னோடிகள் வரிசை. உள்ளுணர்வின் தடத்தில், ஈழ இலக்கியம்] இவர்களில் பலரைப்பற்றிய முதல்கட்டுரைகளே அந்நூலில்தான் உள்ளன.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் விரிவான உலகஇலக்கிய அறிமுகநூல்கள் சென்ற பதினைந்தாண்டுகளில் தமிழில் வெளிவந்த முக்கியமான ஆக்கங்கள். [உம்: கதாவிலாசம்,செகாவின்மீது பனிபெய்கிறது, என்றார் போர்ஹெ,இலைகளை வியக்கும் மரம்] தொடர்ந்து பலகோணங்களில் உலக இலக்கியத்தை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறார் அவர். அவரது உரைகள், உரையாடல்கள் தொடர்ந்து வெளியாகின்றன.

பழந்தமிழ் இலக்கியத்தை சமூகவியல் நோக்கிலும் ஆய்வுநோக்கிலும் தொடர்ந்து அறிமுகம் செய்யும் பெருமாள்முருகனின் எழுத்துக்கள் சென்ற பதினைந்தாண்டுகளில் ஏராளமாக வெளிவந்துள்ளன. [வான்குருவியின் கூடு] உ.வே.சாமிநாதய்யர், கு.ப.ராஜகோபாலன், ,ஆர்.ஷண்முகசுந்தரம் ஆகியவர்களைப்பற்றிய நூல்கள் [ உ.வே.சா.பன்முக ஆளுமையின் பேருருவம், உடைந்த மனோரதங்கள்] ஆகியவை வெளிவந்துள்ளன.

ஓர் ஆர்வமுள்ள வாசகன் உலக இலக்கியத்தின் திசைகளை அறிந்துகொள்ள, நம் மரபை விமர்சனரீதியாக அறிந்துகொள்ள, ரசனையை வளர்த்துக்கொள்ள, எழுத்தின் இயல்புகளைப் புரிந்துகொள்ள உதவக்கூடிய இத்தனை பக்கங்கள் தமிழின் நூறாண்டுகால வரலாற்றில் எப்போதுமே எழுதப்பட்டதில்லை. இத்த்னை எளிதாக அவை கிடைக்கும் நிலையிலும் இருந்ததில்லை.

எப்போதுமே இலக்கியத்தை ஓர் இயக்கமாக நிலைநிறுத்தியவர்கள் எழுத்தாளர்கள். சென்றகால எழுத்தாளர்களில் க.நா.சு, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்றவர்கள் இலக்கியத்தைப்பற்றி தொடர்ந்து எழுதியிருந்தாலும் கண்டிப்பாக இந்தப்பதினைந்து வருடங்களில் எழுதப்பட்டவற்றை விட அவை ஒட்டுமொத்தமாகவே குறைவு. அதற்கான காரணம் அன்றைய பதிப்பு- இதழியல் சூழலில் இவற்றை எழுதவும் வெளியிடவும் வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்பதுதான்.

அன்று ஒரு நல்ல வாசகன் நேரடியாக இலக்கிய ஆளுமைகளுடன் தொடர்பில் இருந்தாலொழிய முறையான இலக்கிய அறிமுகமே சாத்தியமில்லை. சுந்தர ராமசாமி, நகுலன், தேவதச்சன்,ஞானக்கூத்தன், கோவை ஞானி,பிரமிள், தி.க.சி , வெ.சாமிநாதன், கைலாசபதி, மு.தளையசிங்கம் என சில மையங்களை ஒட்டியே இலக்கியம் அறிமுகமாகியது. அவ்வாறு உருவான இலக்கியவாசகர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. தமிழில் வாசிப்பும் எழுத்தும் சிலநூறுபேரில் நின்றுவிட்டிருந்த ஒரு காலம் அது.

சுந்தர ராமசாமி

ஒரு கலைச்சொல்லுக்கு உண்மையில் என்ன பொருள் என்றால் கடிதம்போட்டு ஆசிரியனிடம் கேட்கும் ஒரு காலம் இருந்தது. வாரம்தோறும் நான் அப்படிப்பட்ட கடிதங்களுக்குப்பதிலிட்டிருக்கிறேன்- நூற்றுக்கணக்கான கடிதங்கள். ஒரு கருத்தைப்பற்றிய எளிய அறிமுகமின்மையால் வாசகன் பல்லாண்டுக்காலம் குழப்பத்தில் நீடித்திருந்த காலம் அது.

இருஅலைகள் வழியாக தமிழிலக்கியம் பரவலாகியது. தொண்ணூறுகளில் உருவான சுபமங்களா, இந்தியா டுடே, காலச்சுவடு, உயிர்மை போன்ற இடைநிலை இதழ்கள். இணையம். இவ்வாறு உள்ளே வரும் இலக்கியவாசகர்களின் எண்ணிக்கை பலமடங்காகியது. நூல்விற்பனையும் பதிப்பும் நூறுமடங்காகப் பெருகின. இது ஒரு முக்கியமான தருணம், இத்தருணத்தில் இத்தகைய விரிவான அறிமுக நூல்கள் அவசியமென்பதை உணர்ந்தமையாலேயே புனைவெழுத்தாளர்களான என்னைப்போன்றவர்கள் கடுமையான உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டு இத்தனை நூல்களை எழுதிக்கொண்டிருக்கிறோம்.

இன்று எந்த இலக்கியக் கருத்தை அல்லது சொல்லை கூகிளில் தேடினாலும் என் விரிவான கட்டுரை ஒன்று வரும். அது சென்ற பத்தாண்டுக்கால தொடர்ந்த உழைப்பு. அதற்குப்பின் உள்ளது இலக்கியம் என்ற இவ்வியக்கம் மீதுள்ள அர்ப்பணிப்பு. அதை இன்னொரு இலக்கிய வாசகரால் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும்.

நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் போன்ற ஒரு நூலை எழுதுவது ஆய்வாளர்களோ பேராசிரியர்களோ செய்யவேண்டிய வேலை என்பதே என் எண்ணம். ஆனால் அப்படி ஒன்று அவசியத்தேவை என்பதனால் புனைவெழுத்துக்கான நேரத்தை செலவிட்டு அதை நானே எழுதினேன். இன்றைய வாசகனுக்கு அவன் முன் வாய்ப்பை அறிந்துகொள்ள ஓர் எளிய ஆர்வமேனும் இருக்கவேண்டும். அதுகூட இல்லாத மொண்ணைகளால் சொல்லப்படும் வரி நீங்கள் சுட்டியது. இத்தனைபெரிய உழைப்பையும், அக்கறையையும் உருவாக்கப்பட்ட நூல்களையும் சிறுமைபப்டுத்தும் இத்தகைய குரல்களே நம் சூழலின் பெரும் சாபம்.

[பெருமாள் முருகன்]

இனி, மறுபக்கம் இலக்கியவிவாதங்கள். சூழலில் கெட்டிப்பட்டிருக்கும் ஒரு கருத்து மறுக்கப்படும்போதே இலக்கியச்சூழலில் விவாதங்கள் எழுகின்றன. விவாதங்கள் நிகழாத சூழலில் இலக்கிய இயக்கமே இல்லை என்பதே பொருள். பாரதி, புதுமைப்பித்தன் காலம் முதல் எப்போதும் பல தளங்களில் விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. சொல்லப்போனால் தீவிரமான விவாதங்கள் நிகழாத காலமே இருந்ததில்லை.

நவீன இலக்கியம் தமிழில் தொடங்கும்போதே மிகக்கடுமையான தாக்குதல்கள் வழியாக பாரதி விவாதங்களைத் தொடங்கிவைத்துவிட்டார். அன்னிபெசண்ட், வி.சுப்ரமணிய அய்யர் பற்றிய அவரது தாக்குதல்களும் கிண்டல்களும் தீவிரமானவை. பாரதியின் எழுத்துக்களில் கணிசமான பக்கங்கள் சமகால இலக்கியப்பூசல்களுக்கான எதிர்வினைகள் என்பதை ஒரு வாசகன் உணரமுடியும்.

வெங்கட் சாமிநாதன்

அடுத்த காலகட்டத்தில் வணிக எழுத்து உருவாகிவிட்டது. அதற்கும் இலக்கியத்துக்குமான போராட்டமும் ஆரம்பித்துவிட்டது. பாரதி மகாகவியா விவாதம், மு.அருணாச்சலத்தின் இலக்கியவரலாற்றுநூல் பற்றிய விவாதம். ஏ.விசுப்ரமணிய அய்யரின் இலக்கியவிமர்சன நூல் பற்றிய விவாதம் இவையனைத்தும் ஒரேசமயம் நடந்தவை. புதுமைப்பித்தன் கல்கியின் தழுவல் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து வந்தவை. புதுமைப்பித்தனின் அத்தனை நூல்மதிப்புரைகளும் மிகக்கடுமையான பூசல்களின் மொழியிலேயே அமைந்திருந்தன.

பிரமிள்,வெங்கட்சாமிநாதன், சுந்தர ராமசாமி காலகட்டம் உச்சகட்ட இலக்கிய விவாதங்களால் ஆனது. அவர்களின் எழுத்துக்கள் அனைத்துமே நேரடியான தாக்குதல்கள், கடுமையான பூசல்மொழியில் எழுதப்பட்டவை. அதெபோல கைலாசபதி போன்ற மார்க்ஸிய விமர்சகர்களுக்கும் பிறருக்குமான விவாதங்கள் தனிப்பட்ட முறையிலான தாக்குதல்களுடன் தொடர்ந்து நடந்தன.

பிரமிள், வெ.சா, மு.தளையசிங்கம் எழுத்துக்களில் பெரும்பகுதி இலக்கியப்பூசல்களே.இவை ‘பாலையும்வாழையும்’ மார்க்ஸின் கல்லறையில் இருந்து ஒரு குரல் இலக்கிய ஊழல்கள் [வெங்கட் சாமிநாதன்] மகத்துவ இலை அறைகூவல்- இலக்கிய அரசியல் கட்டுரைகள், வெயிலும் நிழலும், எதிர்ப்புச்சுவடுகள், தமிழின் நவீனத்துவம் [பிரமிள்] முற்போக்கு இலக்கியம், ஏழாண்டு இலக்கியவளர்ச்சி [மு.தளையசிங்கம்] போன்ற பல நூல்களாக இன்று கிடைக்கின்றன.

கைலாசபதி

அக்காலகட்டத்தில் பிரமிள்-வெ.சா போன்றவர்கள் வெறும் இலக்கியச்சண்டைதான் போட்டார்கள் என்ற வசைதான் வல்லிக்கண்ணன் முதலியவர்களால் மீளமீள முன்வைக்கப்பட்டது. அவை சண்டைகள் அல்ல, அவற்றுக்கு அறிவுத்தளத்தில் பெரிய மதிப்பு உண்டு என்று என்னைப்போன்றவர்கள் எழுதிக்கொண்டிருந்தோம். இப்போது திடீரென்று இப்படி திருப்பிச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். எச்சூழலிலும் அங்கே நிகழ்வதை நுட்பமாக அறியாமல் பொத்தாம்பொதுவாகப்பேசுபவர்கள் உருவாக்கும் இழப்பு வலுவானது.

இவ்விவாதங்கள் அனைத்தும் அச்சுவடிவில் வந்துள்ளன. அச்சு ஊடகம் மிகத்தாமதமானது என்பதை வைத்துப்பார்த்தால் இவ்விவாதங்களின் அளவு வியப்பூட்டுவது. பலவிவாதங்கள் வருடக்கணக்கில் நீண்டுள்ளன. முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால் இன்று இலக்கியவிவாதங்கள் கால்பங்கு என்றால் இலக்கியஅறிமுகமும் விமர்சனமும் முக்கால்பங்கு. சென்ற காலத்தில் நேர்மாறாக தொண்ணூறுசத இலக்கிய எழுத்து என்பது இலக்கியப்பூசல்களாகவே இருந்துள்ளது. அதாவது இந்த ஃபேஸ்புக் மேதைகள் சொல்வதற்கு நேர் மாறு!

க.நா.சு

இவற்றில் கணிசமானவை நேரடியான தனிமனிதத் தாக்குதல்கள் [‘சீச்சீ நாயும் பிழைக்கும் இந்தப்பிழைப்பு’ பாரதி, ‘மூனா அருணாச்சலமே முச்சந்தி கும்மிருட்டில் பேனாக்குடைபிடித்து பேயாட்டம் போடுகிறாய்’ – புதுமைப்பித்தன். ‘இங்கிட்டுப்பார் வெங்கிட்டு விமர்சகா என்னைப்பார் என் எழுத்தைப்பார்’- பிரமிள்] கைலாசபதி முதல் எவரும் விதிவிலக்கு அல்ல.

தமிழின் அத்தனை இலக்கியப்படைப்பாளிகளும் இலக்கிய விவாதங்களுக்குள் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். ஜெயகாந்தன், அழகிரிசாமி மட்டுமல்ல அமைதியானவரான அசோகமித்திரன் கூட [அழவேண்டாம் வாயைமூடிக்கொண்டிருந்தால்போதும்- விவாதம்] இவ்விவாதங்கள் அனைத்தும் இலக்கியத்தின் வெவ்வேறு அணுகுமுறைகளை முன்வைத்தன. விளைவாக சில இலக்கியமதிப்பீடுகளை விவாதத்துக்குக் கொண்டுவந்தன. கொஞ்சம்கொஞ்சமாக சிலவற்றை நிலைநாட்டின.

அன்றும் இதே அசட்டுக் குரல்கள் எழுந்துகொண்டுதான் இருந்தன. க.நா.சு ‘தீவிர இலக்கியம்’ பற்றி பேசியதும் ‘தரமான இலக்கியவாதிகள்’ பற்றி பட்டியலிட்டதும் அவருக்கு கல்கி போல எழுதவரவில்லை, அவருக்கு வாசகர்கள் இல்லை என்பதனால்தான் என அகிலன் போன்றவர்கள் எழுதினார்கள். அவர் விவாதங்களை உருவாக்கி புகழ்பெற முயல்கிறார் என்றார்கள். அவரளவுக்கு தமிழில் எவரும் வசைபாடப்பட்டதில்லை- நானெல்லாம் அதில் ஒரு பகுதியைக்கூட எதிர்கொள்ளவில்லை.அதை மீறி அவரது தொடர்ச்சியான விவாதம் வழியாகவே நாம் இன்றுபேசும் நவீனத்தமிழிலக்கியம் என்னும் களம் உருவானது. நாம் பேசிக்கொண்டிருக்கும் படைப்பாளிகள் எழுந்துவந்தார்கள், வரலாற்றில் நின்றார்கள்.

பிரமிள்

மேலுமொன்று உண்டு. விவாதங்களை எல்லாராலும் எழுப்பமுடியாது. நீங்கள் இணையத்திலும் இதழ்களிலும் கவனம்பெறத்துடிக்கும் இளையபடைப்பாளிகள் மற்றும் ஓய்வுபெற்ற படைப்பாளிகள்ர் எழுதும் எழுத்துக்களைப் பாருங்கள். அவையனைத்தும் விவாதத்துக்காக ஏங்கி எழுதப்படும் ஓங்கியடித்தல்கள், ஒற்றைப்படைக்கூற்றுக்கள், வசைகள். எத்தனை தூரம் எம்பிக்குதித்தாலும் அவை அப்படியே கடந்துசெல்லப்படுகின்றன. எந்தச்சலனமும் நிகழ்வதில்லை. அப்படி எத்தனை எத்தனங்கள் என்று பாருங்கள். வேடிக்கை என்னவென்றால் விவாதங்களைக் குறைகூறுபவர்கள் பெரும்பாலானவர்கள் விவாதங்களை உருவாக்க முயன்று தோற்கும் இந்த எளியவர்கள்தான்.

ஏனெனில் கருத்துக்களுக்குப் பின்னால் உள்ள ஆளுமையால்தான் கருத்துக்கள் முக்கியமானவை ஆகின்றன. அவன் தரமான படைப்புகள் மூலம் தன்னை நிறுவிக்கொண்டிருந்தால் மட்டுமே அவை விவாதமாகின்றன. அக்கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு தரப்பாக வலுவாக உருவாகும்போது மட்டுமே அவற்றுக்கு சூழலில் முக்கியத்துவம் வருகிறது. அதற்கு வாசிப்பும் சிந்தனையும் தேவை. தமிழில் முக்கியமான படைப்பாளிகள் அல்லாத எவரும் இலக்கியத்தில் விவாதமையமாக ஆனதே இல்லை.

பொத்தாம்பொதுவாக, எதையுமே தெரிந்துகொள்ளாமல் பேசும் பேச்சுக்களுக்குப்பின்னால் இருப்பது அறியாமை மட்டுமல்ல, அறிவு உள்ளேசெல்லும் வாயில்களே இல்லாத ஒரு கண்மூடித்தனம். இப்பதில் அவர்களுக்காக அல்ல. அவர்கள் மீண்டும் கொஞ்சநாள் கழித்து இதைத்தான் சொல்வார்கள். நான் இதை எழுதுவது இளம் வாசகர்களுக்காக. அவர்கள் இந்த விவாதங்களை, நூல்களை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று சுட்டுவதற்காக. இதுவும் இலக்கியவிவாதத்தின் – அறிமுகத்தின் ஒருபகுதியே

ஜெ
============================
பழைய கட்டுரைகள்

இலக்கியவிவாதங்களும் எல்லை மீறல்களும்

இலக்கியவிவாதங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

இலக்கிய அரட்டை

சாகித்ய அக்காதமி விவாதங்கள்

இணையத்தில் விவாதம்

விவாதங்களின் எல்லை

விவாதிப்பவர்களைப்பற்றி

விவாதம் என்னும் முரணியக்கம்

இணையவிவாதங்கள்

பாரதிவிவாதம் ஏன்?

ஊடகங்கள் அரசியல் விவாதங்கள்
இலக்கியவிவாதங்களின் எல்லை

முந்தைய கட்டுரைமழைப்பாடல்- காசோலை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 40