பகுதி ஏழு : கலிங்கபுரி
[ 11 ]
அஸ்தினபுரியின் எல்லைக்குள் நுழைந்தபோது ஏற்பட்ட உவகையை அர்ஜுனன் வியப்புடன் அறிந்தான். அந்நகரம் ஒருபோதும் அவனுக்குப் பிடித்தமானதாக இருந்ததில்லை. மிக இளமையில் அன்னையுடன் அந்த நகரின் கோட்டைவாயிலைக் கடந்து உள்ளே வந்தபோது அங்கே ஒலித்த முரசொலியும் முழவொலியும் கொம்புகளின் பிளிறல்களும் இணைந்து அவனை பதறச்செய்தன. அதன்பின் பிறந்ததுமுதல் அவன் அறிந்திருந்த சதசிருங்கத்துக் காட்டின் அமைதியையே அவன் எண்ணிக்கொண்டிருந்தான். அவனை ஏற்றிச்சென்ற அந்த ரதம், கைகளைவீசி கூச்சலிட்ட மக்கள்திரள், மலர்மழை அனைத்தும் அவனை சினம் கொள்ளச்செய்தன. ஒவ்வொரு இடத்திலும் இருந்த ஆசாரங்களையும், நெறிகளையும் தருமன் அவனுக்கு சொல்லிக்கொண்டே இருந்தான். அதைக்கேட்கும்தோறும் அவன் சினம் கூடிவந்தது.
அந்தப்புரத்தின் அறைகளில் இருந்து தருணம் கிடைக்கையில் எல்லாம் அவன் ஓடிப்போகத் தொடங்கினான். இடைநாழிகள் வழியாக வழிதவறிச்சென்று புதிய அறைகளில் சென்று நுழைவான். சூதர்பெண்கள் அமர்ந்து ஓய்வெடுக்கும் இடங்களில் நுழைந்து அவர்களை வியந்துகூவச்செய்வான். பின்பக்கம் அவர்களின் உபகூடங்களுக்குள் சென்று அவர்கள் தங்கும் இடுங்கிய சிற்றறைகளை, குளிக்கும் மூடுகுளங்களை, உடைமாற்றிக்கொள்ளும் ஈரமான இடைக்கழிகளை, கூடி உணவுண்ணும் ஓசைமிக்க அன்னசாலைகளைப் பார்ப்பான். ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவனை மீட்டுக்கொண்டு வருவார்கள். அதன்பின் அவனுடன் எப்போதுமே சேடிகள் இருக்கத் தொடங்கினர். அவன் அவர்களின் விழிகளையே நோக்கிக்கொண்டிருப்பான். அவர்கள் சற்று திரும்பும்போது நழுவிச்சென்றுவிடுவான். அவனுக்காக அவர்கள் தண்டம் பெற்று அதைச்சொல்லி கண்கலங்குகையில் இனிமேல் செல்லக்கூடாதென்றே எண்ணுவான். ஆனால் ஒரேநாளில் அந்தப்புரம் அவனை திணறச்செய்யும்.
சற்று கால்கள் வளர்ந்ததும் அந்தபுரத்தைவிட்டு வெளியே சென்று அரண்மனை வளாகத்தை சுற்றிவரத் தொடங்கினான். மிகச்சிலமாதங்களிலேயே அரண்மனை சலித்து நகரத்தைச் சுற்றிவந்தான். சிலநாட்களிலேயே நகரமும் சலித்தது. “என்னுடன் காட்டுக்கு வா, அது சலிக்கவே சலிக்காத பேருலகம்” என்றான் பீமன். ஆனால் சிலநாட்களிலேயே காடும் அவனுக்கு சலித்தது. “பார்த்தா, நீ தேடுவது வெற்றிகொள்வதற்கான உலகை. வெற்றிகொள்ளப்பட்டதுமே சலித்துப்பொருளிழப்பது அது. நான் என்னை அர்ப்பணிக்கும் களங்களை நாடுகிறேன். காடு என் தெய்வத்தின் கருவறையின் படிக்கட்டு” என்றான் பீமன்.
பீமன் சொன்னது உண்மை என்று அறிந்தது வில்லியல் கற்கும்போதுதான். ஒவ்வொருநாளும் கற்கவேண்டியவை திறந்துகொண்டே இருந்தன. முடிவற்ற போர்க்களங்களின் நிரை. ஒன்றில் வென்ற படைக்கலங்கள் எவையும் அடுத்த களத்தில் பயனுறவில்லை. வெற்றி மேலும் பெரிய அறைகூவலை நோக்கித் தள்ளியது. ஒருகணமும் சித்தம் சலிப்புறமுடியாது. கண்ணிமை மூடினால் தலைக்குமேல் ரதசக்கரங்கள் உருண்டுசென்றுவிடும். துரோணரிடம் கல்விகற்பதற்காக அவன் சென்றபின் ஒருமுறை கூட அஸ்தினபுரிக்கு மீண்டுவரவில்லை. ஒருகணம்கூட அந்நகரையோ அங்குள்ளவர்களையோ நினைக்கவுமில்லை. துரோணர் மட்டுமே அவனைச்சூழ்ந்து அவன் வானமாக இருந்தார். அவரது சொற்களை அள்ளுவதென்பது மழைத்துளிகளை வானிலேயே பற்றிக்கொள்வதுபோல. ஆனால் அவன் ஒரு சொல்லையும் கைநழுவவிடவில்லை.
துரோணரின் சாலைக்கு துரியோதனனும் பீமனும் தருமனும் அவ்வப்போதுதான் வந்தனர். பீமனுக்கும் துரியோதனனுக்கும் துரோணர் தனுர்வேதத்தின் கதைப்போர் நுட்பங்களைக் கற்பித்தார். ஒருபோதும் அவர்களிருவரும் சேர்ந்து வரவில்லை. அதை எப்படி அறிகிறார்கள் என்ற வியப்பு எழுந்ததுமே அவர்கள் ஒருவரை ஒருவர் மிகநன்றாக அறிந்திருப்பார்கள் என்ற எண்ணமும் அவனுக்கு உருவாகியது. தருமன் பெரும்பாலும் காலையில் வந்து மாலையிலேயே திரும்பிச்சென்றான். அவனுக்கு அடிப்படைப்போர்க்கலையை மட்டுமே துரோணர் கற்பித்தார். அர்ஜுனனிடம் தருமன் “பார்த்தா, நீ ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டிருக்கிறாய். தளிர் இலையாகும் விரைவுக்கு நிகராக ஏதுமில்லை. இளமையின் அனைத்து ஆற்றலும் இளமையைக் கடப்பதற்கே என்கிறது சுக்ரநீதி” என்றான்.
அர்ஜுனன் புன்னகைசெய்தபோது “ஏன் சிரிக்கிறாய்?” என்றான். “நூல்களில் இல்லாத எதையாவது உங்கள் சொற்களில் தேடிக்கொண்டிருக்கிறேன் மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “இங்கு நீ கற்பதும் நூலைத்தானே?” என்றான் தருமன். “ஆம். ஆனால் நூல்களை நான் நூல்களாக நினைவில்கொண்டிருக்கவில்லை. நூல்களைப்பற்றிய என் அறிதல்களையே கொண்டிருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “ஆம், அது உன் கலை. நெறிநூல்களைப்பொறுத்தவரை மிகச்சரியான வார்த்தைகளில் அவற்றை நினைவுகூர்பவனே அவற்றைக் கையாளமுடியும். நெறிகள் ஏற்கப்படுவது அவை மூதாதையர் சொல் என்பதற்காகவே” என்றான் தருமன். அர்ஜுனன் உரக்கநகைத்து “அப்படியென்றால் உங்கள் சொற்கள் ஏற்கப்படவேண்டுமென்றால் நீங்கள் மறைந்தாகவேண்டும்” என்றான். தருமன் “இது நகைப்புக்குரியதல்ல பார்த்தா” என்றான்.
ஒவ்வொன்றும் மாறியிருக்க அஸ்தினபுரி மாறாமலிருந்தது. கோட்டைக்காவலர்கள், காவல்மாடங்களின் வண்ணங்கள், கொடிகள், முரசுத்தோல்கள், மரங்களின் இலைகள் அனைத்தும். அதற்கப்பால் அஸ்தினபுரி மானுடனுடன் உரையாடாது விண்ணை நோக்கி விரிந்திருந்தது. அவன் உள்ளே நுழைந்தபோது அவனை எதிர்கொள்ள பெருமுரசுகள் முழங்கின, பழகிய யானை உறுமுவதுபோல. அதன் துதிக்கை அசைவுபோல காவலர்குழு ஒன்று எதிர்கொண்டு வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றது. நகருக்குள் நுழைந்து சாலைகள் வழியாகச் சென்றபோது நகர்மக்கள் சாளரங்களிலும் உப்பரிகைகளிலும் வந்து நின்று அவனை வாழ்த்திக் குரலெழுப்பினர். திரும்பிவருகையில் மட்டும் இந்நகரம் எனக்கு உவப்பளிக்கிறது என அவன் எண்ணிக்கொண்டான். திரும்பி வருவதற்காகவே ஒவ்வொரு முறையும் பீஷ்மபிதாமகர் நகர்நீங்கிச்செல்கிறாரா என்று தோன்றியதும் புன்னகை புரிந்தான்.
அரண்மனையில் சூதர்கள் இசைக்க மங்கலக் கணிகையர் வாழ்த்த அமைச்சர் சௌனகர் வந்து அவனை வரவேற்றார். “நகருக்கு வருக இளவரசே! இரண்டாண்டுகளில் முதல்முறையாக வந்திருக்கிறீர்கள்” என்றார். “ஆம், மூன்றுநாட்கள் குருநாதர் பேசாநோன்புகொண்டிருக்கிறார். அவரே என்னை சென்றுவரும்படி ஆணையிட்டார்” என்றான் அர்ஜுனன். “முறைப்படி தங்கள் பெரியதந்தையைச் சந்தித்து வணங்கிச்செல்லலாமே” என்றார் சௌனகர். அர்ஜுனன் “ஆம், அவரைச் சந்திக்க நானும் விழைகிறேன்” என்றான்.
இடைநாழியில் நடக்கையில் சௌனகர் நகரில் என்னென்ன நடந்தது என்று சொல்லிக்கொண்டிருந்தார். நகுலசகதேவர்களை கிருபரின் படைக்கலச்சாலைக்கு அனுப்பியிருந்தனர். இளையகௌரவர்கள் ஐவரும் அவர்களுடன் சென்றனர். சௌனகர் புன்னகையுடன் “கௌரவர்கள் நூற்றொருவர் என்பதை நினைவில்கொள்ளுங்கள் இளவரசே. சூதர்மகளான பிரகதியில் தங்கள் பெரியதந்தைக்குப் பிறந்த ஒரு மைந்தனும் இருக்கிறான். அவன் பெயர் யுயுத்சு” என்றார். “அவனை நான் பார்த்ததே இல்லையே” என்று அர்ஜுனன் புன்னகையுடன் சொன்னான்.
“காந்தார அரசியரின் கடும்சினத்தை அஞ்சி சூதஅரசியை வடக்குவாயிலருகே தனி அரண்மனைக்கு அனுப்பிவிட்டார் விதுரர். இசைநிகழ்வுகளுக்கு மட்டும் அவர்கள் மூடுரதத்தில் இங்கே வந்துசெல்வார்கள். அவர்களுக்குப்பிறந்த மைந்தனே பாண்டவ கௌரவர்களில் வயதில் இளையவன்” என்றார் சௌனகர். “யுயுத்சுவை எங்கே கல்விக்கு அனுப்புவதென்று சூதஅரசியார் என்னிடம் கேட்டார். சூதர்களுக்குரிய இசைக்கோ புரவிப்பயிற்சிக்கோ அவனை அனுப்புவதில் அவர்களுக்கு இசைவில்லை. அவன் பேரரசரின் மைந்தன். அவ்வண்ணமே அவன் வாழவேண்டும் என்றார். ஆனால் காந்தார அரசியர் ஒருபோதும் அவனை அரசகுலத்தவனாக ஏற்கமாட்டார்கள் என்று அவர் அறிந்திருந்தார். பேரரசரிடம் அதைச் சொல்லவேண்டும் என்று என்னிடம் கோரினார்.”
“என்ன செய்தீர்கள்?” என்று அர்ஜுனன் புன்னகையுடன் கேட்டான். “சென்ற கொற்றவைபூசனைக்கு மைந்தனுடன் வரும்படி சூதஅரசியிடம் சொன்னேன். கொற்றவைபூசனைக்கு மட்டுமே பேரரசரும் காந்தார அரசியர் அனைவரும் எழுந்தருள்கிறார்கள். பலிமுடிந்து பூசனைநிகழ்ந்துகொண்டிருக்கையில் சூதஅரசியை வந்திறங்கும்படி சொன்னேன். அவர் வந்ததை எவரும் அறியவில்லை. மைந்தனை நானே அழைத்துச்சென்று அவன் காதில் நேராக விழிமூடி அமர்ந்திருந்த பேரரசியை நெருங்கிச்செலும்படி சொன்னேன். அவன் யாரெனக்கேட்டால் பேரரசரின் குருதி, பிரகதியின் மைந்தன் என்று சொல்லும்படி சொன்னேன். அவ்வாறு சொன்னால் பேரரசி அவனுக்குப் பிடித்தமான வெண்குதிரைப்பாவை ஒன்றை அளிப்பார்கள் என்றேன்.”
அர்ஜுனன் நின்றுவிட்டான். “மைந்தன் இயல்பாக பேரரசியை நெருங்கி அருகே சென்று அவரது பட்டாடையைப் பற்றிக்கொண்டான். அவர்கள் குனிந்து அவன் கைகளைத் தொட்டதும் மைந்தன் என உணர்ந்து தன்னருகே இழுத்துக்கொண்டு அணைத்து முத்தமிட்டார்கள். உடனே அவர் முகம் மாறுவதைக் கண்டேன். அவர் அவனில் பேரரசரின் வாசனையைக் கண்டுகொண்டார். நீ யார் என்று கேட்டதும் மைந்தன் நான் சொன்னதையே சொன்னான். பிறகாந்தார அரசியர் திகைக்க பேரரசி அவனை மார்புறத்தழுவிக்கொண்டு “கௌரவர்கள் பெருகுக” என்று சொல்லி முத்தமிட்டார். அவர் முத்தமிட்டதுமே பிற அரசியரும் முகம் மலர்ந்து அவனை அள்ளிக்கொண்டனர். முத்தங்கள் நடுவே அவன் அமர்ந்திருந்தான்” என்று சிரித்த சௌனகர் “ஆயினும் ஒருகணம்கூட சூத அரசியை நோக்கி முகம் திருப்பவில்லை அந்த அரசியர்” என்றார்.
அர்ஜுனன் உரக்க நகைத்து “முத்தை எடுத்தபின் முத்துச்சிப்பி குப்பைதான் என்பார்களே” என்றான். “ஆம், அதுதான் உண்மை. பேரரசரின் ஆற்றலையும் அன்பையும் கொண்ட மைந்தர்கள் உள்ளனர். அவரில் நிறைந்துள்ள இசையை அடைந்தவன் யுயுத்சுவே என்று பேரரசி சொன்னதாக அறிந்தேன். மைந்தன் இப்போது பெரும்பாலும் அந்தப்புரத்திலேயே இருக்கிறான். இளையபாண்டவர்களுடன் கிருபரின் குருகுலத்தில் அவனுக்கு ஷத்ரியர்களுக்குரிய கல்வி அளிக்கப்படுகிறது” என்றார் சௌனகர்.
புஷ்பகோஷ்டத்தில் அணுக்கச்சேவகராகிய விப்ரர் அர்ஜுனனைக் கண்டதும் புன்னகையுடன் எழுந்துவந்தார். “இளவரசே, நேற்றுகூட தங்களைப்பற்றி பேரரசர் கேட்டார். தங்களை அழைத்துவரச்சொல்லலாமா என்று கேட்டேன். இல்லை, கல்வியில் மூழ்குவது போன்ற பேரின்பம் ஏதுமில்லை. அந்த நல்லூழ் என் மைந்தனுக்கு அமையட்டும் என்றார்” என்றார். அர்ஜுனன் “என்ன செய்கிறார்?” என்று கேட்டான். “இசைதான். வேறென்ன?” என்றார் விப்ரர். உள்ளே எழுந்த யாழின் இசையை அர்ஜுனன் கேட்டான்.
இசைக்கூடத்தில் ஏழு சூதர்கள் யாழும் குழலும் இசைத்துக்கொண்டிருக்க பீடத்தில் சாய்ந்தவராக திருதராஷ்டிரர் கிடந்தார். அவர் அருகே தரையில் அமர்ந்திருந்த சிறுவன்தான் யுயுத்சு என அர்ஜுனன் உய்த்துணர்ந்துகொண்டான். ஓசையின்றிச் சென்று அவன் அமர்ந்துகொண்டதும் யுயுத்சு பெரிய விழிகளால் நோக்கி வெட்கி உடல்வளைத்து புன்னகைசெய்தான். சூதர்கள் இசையை நிறைவுசெய்து எழுந்து வணங்கி பரிசில் பெற்றுச்சென்றதும் சௌனகர் சென்று “இளையபாண்டவர் வந்திருக்கிறார்” என்றார். “பாண்டு! அவனைத்தான் சற்றுமுன் நினைத்தேன். இந்தப்பாடல் எனக்கு அவனாகவே அகத்தில் பதிந்திருக்கிறது” என்று திருதராஷ்டிரர் கைகளை விரித்தார். அர்ஜுனன் அருகே சென்று பாதங்களை வணங்குவதற்குள் அப்படியே மார்புடன் அணைத்து மேலே தூக்கிக்கொண்டார். அவனுடைய தலையையும் தோள்களையும் முத்தமிட்டு முகர்ந்தார்.
“இவன் வாசனையே மாறிவிட்டது. கல்வியின் வாசனை.” மீண்டும் முகர்ந்தபின் உரக்க நகைத்து “இல்லை, துரோணாசாரியாரின் வாசனையா அது?” என்றார் திருதராஷ்டிரர். சௌனகர் சிரித்துக்கொண்டு “ஒவ்வொரு அம்புவழியாகவும் மைந்தர் வளர்கிறார் அல்லவா?” என்றார். “ஆம்… வளர்ந்துவிட்டான். வில்லாளியாகிவிட்டான். எங்கே உன் விரல்களைக் காட்டு” என்றார். விரல்களைப்பற்றி “கணுவற்ற விரல்கள்… யாழில் விளையாடும் விரல்களைப்போல. வில்லும் ஒரு யாழ்” என்றபின் திரும்பி “யுயுத்சு, இதோ உன் தமையன்…” என்றார். அர்ஜுனன் யுயுத்சுவை நோக்கி சிரிக்க அவன் பார்வையைத் திருப்பிக்கொண்டு வளைந்தான். “உன் இளையவன். இசைகற்கவேண்டியவன். ஷத்ரியன் மைந்தனாதலால் வில்கற்கச்செல்கிறான். அவன் நாடாள்வான் என்று நிமித்திகர் சொல்கிறார்கள்” என்றார்.
வாயிலில் நிமித்தச்சேவகன் வந்து வணங்கி “முதல் அமைச்சர் விதுரர்” என்றான். திருதராஷ்டிரர் அமர்ந்துகொண்டு “வரச்சொல்” என்றார். “பேரமைச்சரே, என்ன புதிய இக்கட்டு? என்னைக்காண ஏன் இளையவன் வருகிறான்?” என்றார். “மாளவத்தின் இளையமன்னர் மகேந்திரசிம்மன் மறைந்தபின்னர் அவர் மைந்தர் இந்திரசேனன் பட்டத்துக்கு வந்திருக்கிறார் அரசே. அவரிடமிருந்து பட்டமேற்பு விழாவுக்கான அழைப்புடன் இன்று தூதர்கள் வந்திருக்கிறார்கள்” என்றார் சௌனகர். திருதராஷ்டிரர் “அதற்கென்ன? நம் பிரதிநிதி ஒருவரை அனுப்பவேண்டியதுதானே? தீர்க்கவியோமரையோ சோமரையோ அனுப்பலாமே” என்றார்.
விதுரர் உள்ளே வந்ததும் முதலில் அவரது கண் தன் விழிகளைத்தான் சந்தித்தது என அர்ஜுனன் உணர்ந்தான். அவர் சற்றுப் பதற்றத்துடன் விழிகளை விலக்கிக்கொண்டதைக் கண்டு வியப்புடன் எண்ணியபோதுதான் பழைய நினைவுகள் வந்தன. விதுரர் மேல் கொண்ட அந்த வெறுப்பின் தடம்கூட அவனுள் இருக்கவில்லை. ஏன் என்று எண்ணிக்கொண்டான். அவன் உள்ளத்தில் குந்தியும் மிகவிலகி எங்கோ சென்றுவிட்டிருந்தாள். ஆனால் அஸ்தினபுரிவிட்டு விலகிச்சென்றது அவன்தான். அவர் இன்னும் அதே நகரில் அதே அரண்மனையில்தான் இருக்கிறார். அர்ஜுனன் புன்னகைசெய்துகொண்டான்.
விதுரர் திருதராஷ்டிரரை முறைப்படி வணங்கியபின் மீண்டும் ஒருகணம் அர்ஜுனனை நோக்கிவிட்டு “மாளவத்தில் இருந்து புதிய அரசரின் பட்டமேற்புக்கு அழைப்பு வந்துள்ளது” என்றார். “ஆம், அதை சௌனகர் சொன்னார். நம் அமைச்சர்களில் ஒருவரை அனுப்பவேண்டியதுதானே?” என்றார் திருதராஷ்டிரர். “அரசே, வந்திருப்பவர் அங்குள்ள மிக இளைய அமைச்சர். அமைச்சர்களில் அவரது இடமென்ன என்று ஒற்றர்களிடம் கேட்டேன். பன்னிரண்டாவது இடம்” என்றார் விதுரர். “அதிலென்ன இருக்கிறது? அவருக்குத்தான் அஸ்தினபுரியின் தாசிகளைப் பிடித்திருந்ததோ என்னவோ?” என்று திருதராஷ்டிரர் நகைத்தார். “அரசே, அவர்களின் இரண்டாம்நிலை அமைச்சர் மகதத்துக்குச் சென்றிருக்கிறார். கலிங்கத்துக்கும் வங்கத்துக்கும் சென்றவர்கள்கூட இவரை விட உயர்ந்த படியில் உள்ள அமைச்சர்களே” என்றார் விதுரர்.
“ஏன் நமக்கு அவன் அப்படி ஓர் அவமதிப்பைச் செய்யவேண்டும்?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “நமக்கும் அவர்களுக்கும் என்ன பகை?” அர்ஜுனன் அசைய திருதராஷ்டிரர் திரும்பி “மைந்தா, நீ உன் அன்னையைப் பார்க்கவில்லை அல்லவா? செல்க. மீண்டும் மாலை சந்திப்போம்” என்றார். அர்ஜுனன் வணங்கி வெளியே சென்றான். விப்ரர் ”அன்னையைப் பார்த்துவிட்டு மாலையில் வாருங்கள் இளவரசே. மாலையில் அரசர் எந்த அலுவலகப் பணியையும் மேற்கொள்வதில்லை” என்றார். “வருகிறேன்” என்றான் அர்ஜுனன். யுயுத்சு ஒரு சேவகனுடன் வெளியே வர அர்ஜுனன் திரும்பி அவன் அருகே குனிந்து “உன் பெயர் யுயுத்சுவா?” என்றான். “ஆம்” என்றபடி அவன் நெளிந்தான். “ஆம் மூத்தவரே என்று சொல்லவேண்டும். நான் உன் தமையன்” என்றபடி அவன் தலையின் குழல்கற்றையைப் பிடித்தான் அர்ஜுனன்.
“ஆம் மூத்தவரே” என்று மிகத்தாழ்ந்த குரலில் சொல்லி யுயுத்சு வெட்கிச்சிரித்து தலைகுனிந்தான். “நீ என்ன வில்லியலா படிக்கிறாய்?” என்றான் அர்ஜுனன். “இல்லை” என்றான் யுயுத்சு. சிறுவர்களுக்கே உரியவகையில் அகவிரைவால் திக்கும் சொற்களுடன் “நான்… நான் அங்கே பெரிய அம்பை… இப்படியே கையால் பிடித்து… பிடித்து” என்றான். “அம்பைப் பிடிப்பதுதான் வில்லியல்… நீ வீரனாகிவிட்டாய்” என்றான் அர்ஜுனன். “நான் யானையை அம்பால் அடிப்பேன்” என்றான் யுயுத்சு கைகளை விரித்து. “பெரிய அம்பால் அடிப்பேன்” எம்பிக்குதித்து “அவ்வளவு பெரிய அம்பு!” என்றான்.
“வா, யானையை அம்பால் அடிப்போம்” என்று அர்ஜுனன் அவனை அப்படியே தூக்கிக்கொண்டான். “நாளைக்கு! நாளைக்கு!” என்று அவன் கூவியபடி கால்களை உதைத்து கீழே குதிக்க முயன்றான். “இப்போதே யானையைப் பார்ப்போம்…” என்றபடி அர்ஜுனன் அவனைத் தூக்கிக்கொண்டு படியிறங்கி ரதத்தில் ஏறிக்கொண்டான். “யானை வேண்டாம்… யானை நாளைக்கு” என்று யுயுத்சு கூவியபடி ரதத்தின் சட்டத்தைப்பிடித்துக்கொண்டான். “வடக்குக் கொட்டிலுக்குச் செல்” என்றான் அர்ஜுனன். “நாளைக்கு நாளைக்கு” என்று யுயுத்சு அழத்தொடங்கினான்.
“அங்கே பீமன் அண்ணா இருக்கிறார்” என்றான் அர்ஜுனன். “அவர் யானைகளைப் பிடித்து நிறுத்திவிடுவார்…” யுயுத்சு கண்ணீர் வழிந்த முகத்துடன் அப்படியா என்று பார்த்தான். “உனக்கு பீமன் அண்ணாவை பிடிக்குமா?” என்றான் அர்ஜுனன். ‘ஆம்’ என்று அவன் தலையை அசைத்தான். அர்ஜுனன் அவன் கண்ணீரைத் துடைத்தான். “மூத்தவர் எனக்கு நிறைய அப்பங்கள்…” என்று யுயுத்சு மீண்டும் அகஎழுச்சி கொண்டான். கைகளை விரித்து “மூத்தவரின் கைகள் பெரியதாக… அப்பங்களை நிறைய தின்று… ஆனால் நான் மூன்று அப்பங்கள்…” அவன் பத்து விரல்களையும் விரித்துக்காட்டினான். “மூன்று அப்பங்களை நானே தின்று… பெரியவனாகி…” மூக்கை கையால் துடைத்தபின் “அவ்வளவு அப்பங்கள்… மூன்று அப்பங்கள்” என்றான். அவன் உலகில் மூன்றுதான் மிகப்பெரிய எண் என்று அர்ஜுனன் அறிந்தான்.
ரதம் வடக்குக்கோட்டையை நெருங்கியது. யுயுத்சு இயல்பாக அர்ஜுனன் மடியில் ஏறி அமர்ந்து அவன் கைகளைப்பிடித்துக்கொண்டு “நகுலன் என்னை அடிக்கிறான். அவனை நான் கூட்டிக்கொண்டு போகமாட்டேன். சகதேவன் சிவப்பாக இருக்கிறான். அவன்… அவன்… அவன்…” என்று பேசிக்கொண்டே வந்தான். வடக்குவாயிலில் யானை ஒன்று பிளிறும் ஒலி கேட்டது. பாகர்களின் குரலும் பலர் கூச்சலிட்டபடி ஓடுவதும் தெரிந்தது. அர்ஜுனன் ரதத்தை நிறுத்தும்படி சொன்னான். அவனைக் கடந்து ஓடிய ஒரு பாகனை நிற்கச்சொல்லி “என்ன ஓசை அங்கே?” என்றான்.
அவன் வணங்கி “மீண்டும் இளைய யானை ஒன்று சினம்கொண்டிருக்கிறது இளவரசே” என்றான். அக்கணமே அனைத்தும் தெளிவடைந்ததுபோல உணர்ந்தாலும் அர்ஜுனன் “எந்த யானை?” என்றான். “இளம்யானை. பத்து வயதே ஆகிறது இரண்டாண்டுகளுக்கு முன்பு அதை கங்கைக்கரை காட்டில் கானுலாவுக்குக் கொண்டுசென்றனர். அப்போது வில்வித்தை பயில்பவர்களில் எவருடைய அம்போ அதன் மேல் தைத்துவிட்டது. புண் ஆறுவாரங்களில் ஆறிவிட்டாலும் அதன் பின் யானை அகம்திரிந்துவிட்டது. முன்பு இனியசிறுவனாக இருந்தது. இப்போது எப்போதும் சினத்துடன் இருக்கிறது. இதற்குள் இரண்டுபாகன்களை அடித்து இடையை ஒடித்துவிட்டது. மாதங்கர்களுக்குத் தெரிந்த அனைத்து மருத்துவமும் செய்துவிட்டார்கள். பலவகையில் அதை அமைதிப்படுத்தி பயிற்சிகொடுக்க முயல்கிறார்கள். அது அடங்கமறுக்கிறது.”
கூச்சல்கள் உரக்க ஒலித்தன. “சாலைக்குச் செல்கிறது! சாலைக்கு!” என்ற கூச்சல் கேட்டது. அறுபட்ட சங்கிலிகள் உடலில் தொங்கி ஆட அஸ்வத்தாமா வடக்குக்கோட்டைவாயிலுக்கு அப்பாலிருந்த யானைமுற்றத்தில் ஏறிவருவதை அர்ஜுனன் கண்டான். துதிக்கையைச் சுழற்றியபடி தலைகுலுக்கி சினத்துடன் வந்த யானை அந்த விரிந்த வெளியில் நின்று எப்பக்கம் செல்வது என்று தெரியாமல் தடுமாறி துதிக்கையை வீசி திரும்பித் திரும்பி நோக்கியது. பின்னாலிருந்து கூவியபடி வந்த பாகன்களைக் கண்டதும் தலையைக் குலுக்கியபடி அவர்களை நோக்கிச் சென்றது. அவர்கள் கூச்சலிட்டு சிதறி ஓடினர். அவர்களில் ஒருவன் இரண்டு மரங்கள் முதுக்குப்பின்னால் வர அவற்றில் முட்டி ஒருகணம் திகைத்து நின்றுவிட்டான்.
யானை பாய்வதை அர்ஜுனன் அப்போதுதான் பார்த்தான். மத்தகத்தைக் குனிந்து உடலைக்குறுக்கி ஒரு பாறை உருண்டு செல்வதுபோல சென்ற அது அவனை அந்த மரத்துடன் வைத்து முட்டியது. அவனுடைய அலறல் ஏதோ அறியாத மிருகத்தின் குரல்போல ஒலித்து அடங்கியது. அவன் அப்போதே இறந்திருப்பான் என்பதை யானை அவன் கையை துதிக்கையால் சுழற்றித் தூக்கியபோது தெரிந்தது. வைக்கோல்பாவை போல அவன் அதன் துதிக்கையில் இழுபட்டான். அவனைத் தூக்கி மேலாடையைப் போல தன் தோளில் போட்டது அஸ்வத்தாமா. அவ்வுடல் நழுவிச்சரிய தன் காலால் இருமுறை எத்தியது. பின்னர் இடையை வளைத்துத் தூக்கி தன் சிறிய தந்தங்கள் மேல் வைக்கமுயன்றது. உடல் நழுவிச்சரிந்தபோது சினம் கொண்டு சின்னம் விளித்தபடி திரும்பி ஓடி அங்கிருந்த மரத்தை முட்டியது.
அதற்குள் நான்கு கொம்பன் யானைகள் மேல் ஏறியபாகர்கள் வடங்களுடன் அதைச் சூழ்ந்தனர். முதலில் வந்த பெரிய யானை தன் துதிக்கையால் அதை ஓங்கி அறைந்ததும் அஸ்வத்தாமா பின்னால் சென்று சரிந்து விழுந்துவிட்டது. பின்னர் பிளிறியபடி மகாமுற்றத்தைக் கடந்து ரதத்தை நோக்கி ஓடிவந்தது. யானைகள் அதை வலைபோலச் சூழ்ந்துகொண்டு துரத்திவந்தன. குதிரைகள் அஞ்சி காலெடுத்துவைக்க ரதம் குலுங்கியது. யுயுத்சு அஞ்சுகிறானா என்று அர்ஜுனன் குனிந்து நோக்கினான். அவன் கையை நீட்டி சுட்டிக்காட்டி “யானை!” என்றபின் அர்ஜுனன் மோவாயைத் தொட்டுத் திருப்பி “அதை துரத்திவருகிறார்கள்” என்று விளக்கினான். “அது பாகனைக் கொன்றுவிட்டது” என்றான் அர்ஜுனன். “ஆம், பாகன் அலறினான்” என்றான் யுயுத்சு.
யானை நெருங்கியபோது அதன் உடலின் தசைகள் குலுங்குவதும் விரைவுநடையில் சுருங்கிவிரியும் கரிய தோலும் நன்கு தெரிந்தது. அர்ஜுனன் தன் வில்லை எடுத்துக்கொண்டான். அப்போது மகாமுற்றத்தின் மறுமுனையில் இருந்து பெரிய கபிலநிறப்புரவியில் பீமன் விரைந்து வருவதை அர்ஜுனன் கண்டான். யுயுத்சு எம்பிக்குதித்து கைகளை விரித்து “பீமன்! மூத்தவர்!” என்று கூவினான். பீமனின் குதிரை யானையை மறித்தது. பீமன் குதிரையிலிருந்து இறங்கி யானையின் முன் கால்களை விரித்து நின்றான். அவன் உடலின் ஒவ்வொரு தசையிலும் தெரிந்த தன்னுறுதியை அர்ஜுனன் கண்டான். யானை அப்பால் நின்றுவிட்டது. அதற்குப்பின்னால் வந்த யானைகளில் ஒன்று பிளிறியபோது அது நான்கடி முன்னால் வைத்து மீண்டும் காதுகளை பின்னால் சரித்து துதிக்கையை நீட்டி மோப்பம் பிடித்தபடி நின்றது.
பீமன் அசையாமல் நின்றுகொண்டிருந்தான். யானை அவனை நோக்கியபடி நின்று தலையைக் குலுக்கியது. அச்சுறுத்துவது போல நான்கடி முன்னால் வந்தது. அவன் அசையாததைக் கண்டு பின்பக்கமாகத் திரும்பியது. முன்னால் வந்த பெரிய கொம்பனைக் கண்டதும் அஞ்சி உரக்கக் குரலெழுப்பியது. பெரிய யானைமேல் இருந்த பாகர்கள் வடங்களை அஸ்வத்தாமா மேல் வீசினார்கள். வடம் விழுந்ததும் யானை அதை உதறுவதற்காக உடலை உலுக்கியபடி அசைந்ததும் அடுத்த வடம் விழுந்தது. வடங்கள் தன்மேல் விழுந்துவிட்டன என்று உணர்ந்ததும் அஸ்வத்தாமா மத்தகம் தாழ்த்தி துதிக்கையை தரையில் ஊன்றியது.
பீமன் மீண்டும் புரவியில் ஏறி அவர்களை நோக்கி வந்தான். அருகே வந்து “நீ இளையவனை தூக்கிக்கொண்டு வந்தாய் என்று அரண்மனையில் சொன்னார்கள். நான் பின்னால் வந்தேன்” என்றான். யுயுத்சு “மூத்தவரே, அந்த யானையை அடியுங்கள்… ஓங்கி அடியுங்கள்” என்றான். பீமன் புன்னகையுடன் அவன் கையைப்பிடித்து காற்றில் சுழற்றித்தூக்கி தன் குதிரைமுன் வைத்துக்கொண்டான். கூவிச்சிரித்தபடி யுயுத்சு பீமனைப்பற்றிக்கொள்ள “அரண்மனைக்கு வா பார்த்தா. அன்னை உன்னை எதிர்பார்த்திருக்கிறாள்” என்று பீமன் குதிரையைத் தட்டினான்.
அவர்கள் அரண்மனையை அடைந்தபோது அங்கே தருமன் அவர்களுக்காகக் காத்து நின்றிருந்தான். “பார்த்தா, நீ நேராக அன்னையைச் சென்று பார்த்திருக்கவேண்டும். அதுதான் முறை” என்றான். அர்ஜுனன் “ஆம் மூத்தவரே. முறை அதுதான்” என்றான். அவன் தன்னை நகையாடுகிறானா என்ற ஐயத்துடன் தருமன் யுயுத்சுவிடம் “உன்னை உன் அன்னையிடம் கொண்டுசென்று சேர்க்க சேவகர்களிடம் சொல்லியிருக்கிறேன். செல்க” என்றான். யுயுத்சு வணங்கிவிட்டு இடைநாழியில் ஏறிக்கொண்டான். “வா…” என்றபடி தருமன் நடக்க பீமனும் அர்ஜுனனும் உடன் சென்றனர்.
“அந்த யானையைப் பழக்க செய்யமுடிந்தவற்றை எல்லாம் செய்துவிட்டார்கள். அது எப்போதும் சீற்றத்துடன் இருக்கிறது. அதற்குள் பெருங்குரோதம்கொண்ட ஏதோ காட்டுதெய்வம் குடியேறிவிட்டது என்கிறார்கள்” என்றான் தருமன். “ஆனால் அதற்கும் ஒரு பயன் இருக்கிறது. நம்மை அவமதித்த மாளவமன்னன் இந்திரசேனனுக்கு அந்தக் களிறை பரிசாக அளிக்க விதுரர் ஆணையிட்டிருக்கிறார். பரிசுடன் துணைத்தளபதி விக்ரமர் இன்று கிளம்புகிறார்.” புன்னகையுடன் “யானை சென்றுசேர்ந்த மறுநாளே நம் பரிசின் பொருள் அவர்களுக்குத் தெரிந்துவிடும்” என்றான்.
“ஆனால் என்றோ ஒருநாள் அது தன் ஆறாப்பெருஞ்சினத்துடன் நம் களத்துக்குத் திரும்பி வரும்” என்றான் அர்ஜுனன். “ஏன்?” என்றான் தருமன். “அதுவே இயற்கையின் நெறி” என்று அர்ஜுனன் சொன்னபோது தருமன் விளங்காமல் திரும்பி நோக்கினான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.