விவேக் ஷன்பேக் சிறுகதை – 3

கோழியைக்கேட்டா மசாலா அரைப்பது?

 

விமானநிலையத்தில் என்னை சந்திப்பவர்கள் இது ரொம்பச்சின்ன உலகம் என்று சொல்லும்போது அது எனக்கு ஆச்சரியமளிப்பதில்லை. அது பேச ஆரம்பிப்பதற்கான ஒரு சின்ன முகாந்திரம் தானே? நம் மச்சினிச்சியின் கணவரின் தம்பி நம் பழைய வகுப்புத்தோழி ஹரினியைக் கல்யாணம்செய்துகொண்டிருக்கிறார் என்று தெரியும்போது நம்முடைய வாயில் இருந்து இந்தமாதிரித்தான் ஏதாவது கிளம்பும்.

Photobucket - Video and Image Hosting

ஆனால் நான் என் பழைய வகுப்புத்தோழன் கோழியைப்பற்றி போகிறபோக்கில் ஏதோ சொல்ல அது அவனிடமே சென்று சேர்ந்தபோதுதான் நான் உண்மையிலேயே இந்த உலகம் ரொம்பச் சின்னது என்று உணர்ந்தேன். கிளப்பில் டென்னிஸ் விளையாடி வியர்த்து ஓரமாக அமர்ந்து ஒரு வாய் பழச்சாறு  உறிஞ்சிக்கொண்டு இருந்தபோது நான் கோழியை நினைவுகூர்ந்து நண்பர்களிடம் வாய்விட்டுவிட்டேன். அப்போது யாரெல்லாம் என் கூட இருந்தார்கள் என்றே ஞாபகமில்லை. கோழி என்பது அவனுடைய பட்டப்பெயர் என்று சொல்லி புரியவைக்கவே வள்ளிசாக ஐந்து நிமிடம் எடுத்தது. அவனைப் பற்றி எழுதப்போகிறேன் என்றுகூட சொன்னேன்.

 

அந்தக்காலத்தில் மாதம் பத்து ரூபாய் சம்பாதிப்பதற்காக என்னுடைய நண்பன் கோழி ஒரு டென்னிஸ் கிளப்பில் பந்துபொறுக்கிப் போடப்போனான். பந்து வலையில்பட்டு தெறித்தாலோ காற்றில் பறந்தாலோ அவன் ஓடிப்போய் பொறுக்கிக் கொண்டுவந்து போடவேண்டும். நான் அன்று வாழ்ந்த சின்ன நகரத்தில் ஒரு டாக்டர், ஒரு பொதுப்பணித்துறை எஞ்சீனியர், ஒரு வட்டாரநீதிபதி, ஒரு வங்கி அதிகாரி இத்தனைபேர்தான் டென்னிஸ் விளையாடுவார்கள்.  நாலுபேருக்குமே டென்னிஸ் குத்துமதிப்பாகத்தான் ஆடத்தெரியுமென்பதனால் சிலநொடிகளுக்கு ஒருமுறை பந்து திசைமாறிப்பறக்கும். ஆகவே கோழி எப்போதுமே பறந்துகொண்டிருப்பான். ஓடி ஓடி மூச்சிரைப்பான். விளையாடுபவர்களை விட பத்துமடங்கு அவன் ஓடவேண்டியிருக்கும்.

 

 

கோழி வெள்ளை காந்தித்தொப்பி அணிந்திருப்பான். பையன்கள் அதை தட்டிவிட்டு பறித்து வீசிப்பிடித்து விளையாடி அவனை குரூரமாக வதைப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் அவன் தன் தொப்பி பல இடங்களுக்கு பறந்துசென்று கடைசியில் தன்னிடமே திரும்பிவரும் வரை காத்திருப்பான். கையில் கிடைத்ததுமே சாதாரணமாகத் தூசிதட்டி போட்டுக்கொள்வான். என்னுடைய அம்மா நான் போட்ட பழைய சட்டை நிஜார்களை அவனுக்குக் கொடுப்பாள். என்னுடைய பழைய உடைகளில் அவன் பள்ளிக்கூடத்துக்கு வரும்போது நான் தர்மசங்கடமாக உணர்வேன்.  அவன் எங்களுக்கு பழைய டென்னிஸ் பந்துகளை ஒருரூபாய் விலை வைத்து விற்பான். அதை வைத்து நாங்கள் கிரிக்கெட் விளையாடுவோம். டாக்டரின் பையன் எங்களுடன் விளையாடினால் பந்து பௌண்டரிக்கு போனால் கோழிதான் அதை பொறுக்கி கொண்டுவர வேண்டுமென்று எதிர்பார்ப்பான்.

 

ஒருமுறை டாக்டரின் பையன் கோழியை ‘டேய் தந்தூரி ‘ என்று கூப்பிட்டான். கோழி கடுப்பாகி ‘ போடா நர்ஸ¤க்குப்பிறந்தவனே’ என்று வைதான். அந்த வசை எங்களுக்கு புதுமையாக, கொஞ்சம் கலையழகுடன் இருப்பதாகத் தெரிந்தது. டாக்டரின் பையன் ‘தேவ்டியா மகனே’ என்று கத்தியபோது கோழி அவன் கன்னத்தில் அறைந்தான். டாக்டர் கோழியை பந்துபொறுக்கும் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்தார்

 

கோழி நாய்க்குட்டிகளை விற்பான் என்று சொன்னார்கள். கர்ப்பிணியாக இருக்கும் நாயை கண்டடைந்து நாள்கணக்கில் வேவுபார்த்து பின்னால் போய் அது குட்டிபோட்டதுமே கண்டுபிடித்து கண்திறப்பதற்காக காத்திருந்து ஆண்குட்டிகளை தூக்கிக் கொண்டுவந்து விற்பான். இந்த கதையை பையன்களிடமிருந்து கேட்டதும் எனக்கும் ஒரு நாய்க்குட்டி வேண்டுமென்று நான் அவனிடம் கேட்டேன். ஒருநாள் அவன் காலையில் ஒரு சாம்பல்நிறமான சோனி நாய்க்குட்டியுடன் என்னைத்தேடிவந்தான். அப்பா எங்கள் இருவரையும் பார்த்து ஏக இரைச்சலிட்டு அவனை ஓட ஓட துரத்தினார்

 

எங்கள் கன்னட ஆசிரியர் கோழியின் வெள்ளைத்தொப்பியைப் பார்த்து எப்போதும் நக்கலாக ஏதேனும் சொல்லிக்கொண்டே இருப்பார். அவனுடைய பெயருடன் தொடர்புள்ள எந்த ஒரு சொல்லையும், முட்டை பெட்டை எதுவாக இருந்தாலும்,  அவனை நோக்கி இளக்காரமாகப் பார்த்துக்கொண்டுதான் சொல்வார். அந்த வார்த்தைகளைப்பற்றிய கேள்விகளை அவனை நோக்கியே கேட்பார். ஒருநாள் கேட்டார் ”கோழியிடம் கேட்டுட்டா மசாலா அரைக்கிறது?” என்ற பழமொழிக்கு என்ன பொருள் என்று. பாவம் கோழி அவனுக்கு தெரியவில்லை. பலத்த வகுப்பதிர்வுகள் நடுவே அவன் வெளிறிப்போய் நின்றான்

 

பந்துப்பையன் வேலை போனபின் கோழி திரையரங்கில் வேலைபார்த்தான். அங்கே அவன் எலலவற்றையும் செய்யவேண்டியிருந்தது. தரை கூட்டுவது முதல் வாசல்காவலன் வரை. சிலசமயம் அவன் டிக்கெட்டும் கொடுப்பான். கூட்டமே இல்லாத படங்களுக்கு கோழி பள்ளிக்கூட பிள்ளைகளை சும்மா உள்ளே விட்டுவிடுவான். அடுத்த படம் என்ன என்று நாலைந்து நாட்களுக்கு முன்னரே கோழிக்கு தெரியவந்துவிடும். புரஜக்டர் அறையில் இருந்து துளைவழியாக அவன் எல்லா படங்களையும் முதல்நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவான். பின்பு கடைசிநாள் வரை பார்ப்பான்

 

சினிமா உலகுடன் அவனுக்கு தொடர்பு வந்ததும் அவனுடைய குணச்சித்திரத்தில் ஆழமான ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அது பெரும்பாலும் அவன் முகத்திலேயே தெரிந்தது. பள்ளிநாட்களில் சிப்பாய் ராமு படத்தில் வரும் கொள்ளைக்காரன் கதாபாத்திரத்தை அவன் நடித்தான். கன்னத்தில் மருவை கறுப்பு மையால் வரைந்து கொண்டு சினிமா வில்லனைமாதிரியே தன் கைகளைத்தூக்கிக்கொண்டு அவனே உருவாக்கிக்கொண்ட வில்லத்தனமான வசனங்களை உரக்கக் கூவியபடி அவன் ஆர்ப்பாட்டமாக மேடைக்கு வந்தான். அதன் பின்னர் பையன்கள் அவனை தொந்தரவு செய்வதை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டார்கள். கன்னட ஆசிரியரும் கோழி சம்பந்தமான கேள்விகளையும் நக்கலையும் தவிர்த்துவிட்டார்

 

அப்பாவுக்கு இடம் மாற்றல் வந்ததனால் நாங்கள் அந்த ஊரைவிட்டு வந்துவிட்டோம். நானும் சமீபகாலம் வரை கோழியை நினைவுகூரவாய்ப்பே இல்லாமலிருந்தது.

 

கோழியைப்பற்றி கிளப்பில் நண்பர்களிடம் பேசி இரண்டே நாளில் பூங்காவின் வாசலருகே அவனைச்சந்தித்தேன். அவனே அவனை அறிமுகம் செய்துகொண்டிருக்காவிட்டால் நான் அடையாளம் கண்டிருக்கவே முடியாது. அவன் நீண்ட தலைமயிரை குதிரைவால்கொண்டையாக போட்டிருந்தான்.கையில்லாத சிவப்பு டி ஷர்ட் போட்டு கச்சிதமான தாடி வைத்த புஜபலவானாக இருந்தான் கோழி. தொடர்ச்சியாக முடிக்கு சாயம்பூசிப்பூசி அதை நல்ல சிவப்பாக ஆக்கியிருந்தான். அவனுடைய தோள்களும் முண்டாக்களும் தொடர்ந்த பயிற்சியால் விம்மிப்புடைத்திருந்தன. அவன் என்னை நோக்கி வேகமாக வந்த முறையைக் கண்டு நான் கொஞ்சம் பீதியடைந்துவிட்டேன்.

 

‘நான்தான் கோழி” என்றான். அவன் என்ன சொல்கிறான் என்று எனக்குப்புரியவில்லை. ”நான் உன் பழைய வகுப்புத்தோழன் கோழி ” என்றான் கோழி. நான் அகலமாக புன்னகைசெய்தேன், வேறென்ன செய்ய? அவன் திருப்பி புன்னகைசெய்தானா என நான் நிதானிப்பதற்குள் அவன் ”வா போகலாம்” என்று என்று சொல்லி என்னை கையைப்பற்றி அழைத்தான். நான் தயக்கமாக ‘நான் சும்மா காலையிலே நடக்கத்தான் வந்தேன்.. ‘ என்று சொன்னதை அவன் கேட்டதாகவே தெரியவில்லை. நான் பின்னால் வந்தாகவேண்டும் என்ற கட்டாய எதிர்பார்ப்புடன் அவன் திடமாக முன்னால்சென்றான்.

 

கோழி என்னை அவனுடைய வெள்ளை வேனுக்குக் கூட்டிச்சென்று ஏற்றி கொண்டுசென்றான். ஓட்டுநர் இருக்கையில் ஒரு மோட்டாவான  ஆசாமி அமர்ந்திருந்தான். கார் கண்ணாடியில் கனத்த கறுப்புத்தாள் ஒட்டப்பட்டிருந்தது. வெளியே இருந்து பார்த்தால் உள்ளே இருட்டுதான் தெரியும். நான்  உள்ளே இருந்து பார்த்தபோதும் ஒன்றும் தெரியவில்லை, விடியற்காலைபோல் இருந்தது. வேன் சாலையில் சர்ரென்று சென்று ஒரு பெரிய வீட்டின் முகப்பில் வளைந்து நின்றது. அவன் என்னை உள்ளே கொண்டுசென்று சோபாவில் அமரச்செய்தான். ”ஜூஸ் சாப்பிடுகிறாயா?” என்றான். நான் வாயைத்திறப்பதற்குள் அவன் யாரிடமோ ஜூஸ் கொண்டுவரச்சொல்லி இரைந்தான்

 

அவனுக்கு என்னைப்பற்றி எல்லாமே தெரிந்திருந்தது. எப்போது நான் பூங்காவுக்கு காலைநடை போவேன், என்ன வேலைசெய்கிறேன், என் மனைவி பெயர் என்ன, பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள் எல்லாமே… ஆகவே நான் பேச வாய்ப்பே கிடைக்கவில்லை. அவனுடைய அந்த தோரணையைக் கண்டு எனக்கு எரிச்சலாக இருந்தது. ஆனால் நான் கேட்டுபபர்த்தபோதும்கூட அவன் தன்னைப்பற்றி ஒன்றும் சொல்ல முற்படவில்லை . அவனைப்பற்றி எதையும் விரிவாகக் கேட்கவும் தோன்றவில்லை. சரிதான், பழைய விஷயங்களை ஏன் கிளறவேண்டும்?

 

ஆகவே ”நீ எங்கே வேலைபார்க்கிறாய்?” என்று பொதுவாகக் கேட்டேன். ”சொந்தத் தொழில்” என்றான். நான் ஒரு ஜோக்கடிக்க முயன்றேன். ஆனால் ஏன் நாம் நம் பழைய நண்பர்களைக் கண்டால் எப்போதுமே ஜாலியாகவே பேச வேண்டும்? ஆகவெ கொஞ்சம் சீரியஸாக பேச ஆரம்பித்தேன். உண்மையைச் சொல்லப்போனால் நான் அவனைப்பற்றிய ஆர்வத்தை இழந்துபோயிருந்தேன். கொஞ்சம் ஏமாற்றமோ கசப்போ அடைந்திருந்தேன் என்றும் சொல்லவேண்டும். ” அப்ப சரி பாப்போம்” என்று சொல்லி எழுந்தேன்

 

”நில்” என்றான் கோழி ”நீ என்னைப்பற்றி எழுதப்போகிறாய் என்று நினைக்கிறேன். நீ என்ன எழுதப்போகிறாய் என்று எனக்கு முழுக்க தெரிந்தாகவேண்டும். என் பெயரையும் அதில் போடக்கூடாது”

 

முதல்தடவையாக நான் அவனை விட ஒருபடி மேலாக இருப்பதுபோல எனக்குத்தோன்றியது. அதை விட்டுவிட விரும்பாமல் கெத்தாக ”அதுவா…அது ஒன்றுமில்லை…”என்றேன்

 

”அப்படி நான் விடமுடியாது”என்று அவன் திட்டவட்டமாகச் சொல்லி ஒரே மூச்சில் பழச்சாறை விழுங்கினான். சினிமாக்களில் வருவதுபோல அவன் இடது புறங்கையால் உதடுகளை அழுத்தமாக தடவிக்கொண்டு ‘ஹா!’ என்றான். ஆமாம், ஆக்ஷன்சினிமா மாதிரியேதான்

 

”இதோபார், நான் சிறுகதைகளும் நாவல்களும்தான் எழுதுகிறேன். இந்த  உண்மை என்றெல்லாம் சொல்லப்படுகிற விஷயம் அவற்றில் இருப்பதில்லை. எங்கே உண்மை முடிந்து கற்பனை ஆரம்பிக்கிறது என்று எனக்கே தெரியாது. சரி, இந்தமுறை உண்மையையே எழுதிவிடலாமென்று நினைத்தால்கூட கடைசியில் அது உண்மையாக இருக்காது…”நான் சொன்னேன்

 

”அதெல்லாம் எனக்குத்தெரியாது. என் பெயரை நீ அந்தக்கதையில் போட்டால் என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாது” கோழி கால் மேல் கால் போட்டுக்கொண்டு இரு கைகளையும் சோபாவின் கைப்பிடிமேல் பரப்பி வைத்து நன்றாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டு அலட்சியமாகச் சொன்னான்.

 

நான் குழப்பமாக ”ஏன்?”என்றேன். ”அப்படியானால் அதற்காகவே நான் எழுதலாம் என்றிருக்கிறேன். நான் எனன் எழுதுவது என்று நான் தான் தீர்மானிப்பேன்” என்றேன்.

 

கோழி என்னை இடுக்கமான கண்களால் உற்றுப்பார்த்தபடி அதே சினிமா பாணியில் ”ஹா”என்று சொன்னான். ”நான் உன்னைப்பற்றியே எழுதினால்கூட அது உன்னைப்போலவே இருக்காது.”என்றேன் ஆறுதலாக.

 

”எனக்கு தெரியாது அதெல்லாம்.”என்று அவன் சொன்னான். என்ன இழவுடா இது என்று நினைத்துக்கொண்டேன். ”சரி அப்படியே செய்கிறேன்…’ என்று சொல்லிவிட்டு பேசாமல் கிளம்பிவிடவேண்டியதுதான். வேறு வழி இல்லை. போனபின்னால் நான் என்ன நினைக்கிறேனோ அதை எழுதவேண்டியதுதான். ஆனால் அவன் குரலில் இருந்த அதிகாரம் என் திமிரை சீண்டியது. ஜனநாயகம், எழுத்துரிமை, கருத்துரிமை சல்மான் ரஷ்தி! நான் வீரம் கொண்டேன். ”நான் எழுதுவது இஷ்டம்”

 

”டேய் தேவ்டியா மகனே…நான் வேண்டாம் என்றால் வேண்டம்தான்..தெரிகிறதா?” என்றான் கோழி. எனக்கு கோபம் எழுந்தது ”நீ யார் சொல்வதற்கு?”என்றேன். சினிமாவில் வருவதைப்போலவே கோழி அந்த கண்ணாடி டம்ளரை தூக்கி தரையில் வீசி எறிந்தான். அது உடைந்து சிதறி சில்லுகளாகியது. ”என் கையால் சாகாதே!” என்றான் கோழி ஒரு நீளமான கத்தியை என்னை நோக்கி நீட்டியபடி

 

அது சரியான கசாப்புக்கத்தி. ஆனால் சினிமாக்களில் வருவதுபோல அது ஒன்றும் மின்னவில்லை. ஆகவே எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.ஆனால் அது கொஞ்சம் கூர்மையாக இருக்ககூடும் என்றும் தோன்றியது. அதன் நுனிக்கு ஒரு மாதிரி மங்கலான கறுப்புநிறம்.

 

என்ன ஆனாலும் சரி, எனக்கு தெரியும் இந்த ஆள் அந்தக்கத்தியை என்மீது செருகப்போவதில்லை. இதுவரை நடந்த பேச்சு ஒரு கொலைக்கு போதுமானது அல்ல என்று நினைத்தேன். இல்லை ஒருவேளை போதுமா என்ன? நான் அதிகமாக இம்மாதிரி சினிமாக்களை பார்ப்பதில்லை என்பதனால் இப்படித்தோன்றுகிறதா? அந்த எண்ணம் வந்ததும் அந்த அளவுக்கு நிதானமாக இருக்க வேண்டாமோ என்று பட்டது

 

அதேசமயம் என் மூளைக்குள் ஒரு சந்தேகம் ஊடுருவியது. இவன் கோழிதானா? அன்றைக்கு என்னுடைய பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்த யாராவது வேண்டுமென்றே கிண்டல்செய்வதற்காக இந்த ஆளை என் மீது ஏவியிருக்கிறார்களா என்ன? நான் சந்தேகத்துடன் ”நீ யார்?” என்றேன் அவன் ”கோழி”என்றான். ”இந்த தடவை கோழியிடம் கேட்டுத்தான் மசாலா அரைக்க வேண்டும் தெரியுமா” கத்தி என்னை நோக்கி மின்னியதை கண்டேன்.

 

[தமிழாக்கம் ஜெயமோகன்]

 

சிறுகதை, விவேக் ஷன்பேக்

விவேக் ஷன்பேக், கடிதங்கள்

விவேக் ஷன்பேக் சிறுகதை- 2

முந்தைய கட்டுரைஅறிவிப்பு
அடுத்த கட்டுரைவாசகர் சந்திப்பு ஒரு கடிதம்