குஷ்பு குளித்த குளம்

பத்மநாபபுரம் அரண்மனையை அடிக்கடி நான் சுற்றிப்பார்ப்பதுண்டு, யாராவது விருந்தினர் வந்தால் கூட்டிச்செல்வேன். சென்னைவாசிகள் மெரினாவுக்கு போவது போல. பலமுறை வந்ததனால் சைதன்யாவே தெளிவாக வழிகாட்டிகளுக்குரிய கவனமில்லாத நிச்சயத்துடன் ”இது ராஜாவோட கட்டில். வெயில் அடிக்குறப்ப இதிலதான் படுத்து தூங்குவார்…” என்றெல்லாம் சொல்வாள். வெயில் அடிக்கிறதுவரை தூங்கும் வழக்கம் அக்காலத்து மன்னர்களுக்கு இல்லை. அக்காலத்தில் அவர்களின் முக்கியமான கடமையே அதிகாலையில் கோயில்களுக்குப் போய் சாமி கும்பிடுவதுதான். அதன்பின்னர்தான் அமிர்தேத்து, சம்பந்தம் முதலியவை. அதாவது சாப்பாடு தாம்பத்யம்.

எண்பதுகளில் நான் கல்லூரியில் படிக்கும் நாட்களில் தன்னந்தனியாகத்தான் செல்லவேண்டும். அகன்ற மரஅறைகள் முற்றிலும் மௌனத்தில் அரையிருள் பரவி விரிந்து கிடக்கும்.நம் காலடியோசை பல இடங்களில் எதிரொலிசெய்து மர்மமான குரல்களாக மாறி நம்மை பின்னால் வந்து தொடும். ஏராளமான மோகினிப்பேய்கள் அங்கே உலவிவருவதாக அக்காலத்தில் வதந்தி இருந்ததனால் உள்ளூர்காரர்கள் அரண்மனை வட்டாரத்திலேயே நடமாட மாட்டார்கள். நானே ஒரு மோகினிப்பேயைக் கண்டிருக்கிறேன். என்னைக்கண்டதும் உஸ்ஸ் உஸ்ஸ் என்று அழைத்து ஜாக்கெட்டை திறந்து காட்டி அழைத்தது. நான் குடல் பதறி ஓடி வெளியே வந்து மூச்சிரைத்தேன்.

அதன்பின்னர்தான் அரசாங்கம் சுற்றுலா வளர்ச்சியில் தனி ஈடுபாடு காட்ட ஆரம்பித்தது. ஆங்காங்கே விளம்பரப்பலகைகள் வைக்கப்பட்டன. கன்யாகுமரியில் இருந்து திற்பரப்புக்குப் போகும் வழியில் அரண்மனை இருப்பதன் அனுகூலம் பயன்படுத்தப்படப்பட்டது. வந்துசேரும் கிராமத்து ஜனங்களுக்கு கேரளவரலாறு பற்றி ஒன்றும் தெரியாது. ஏனென்றால் அவர்களுக்கு தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் ஒன்றும் தெரியாது. ஆரம்பகாலத்தில் அரண்மனை வழிகாட்டிகள் சொல்லித்தான் பார்த்தார்கள். ”1740லே அன்னைக்குள்ள திருவிதாங்கூர் மகாராஜாவான மார்த்தாண்ட வர்மா கெட்டிய கொட்டாரமாக்கும் சார். நல்ல உறப்புள்ள பிலாவு மரத்திலயாக்கும் கெட்டியிட்டுள்ளது…” மந்திரம் கேட்டு சும்மா இருக்கும் மூலவிக்ரகம் மாதிரி மக்கள் வெறித்துப் பார்த்து நகர்வார்கள்.

சிலர் சொந்த உள்ளுணர்வால் அரண்மனையை புரிந்துகொள்ள முயல்வதும் உண்டு ”மாப்பு, லே, முச்சூடும் மரமாக்கும்லே…ஒரு தீக்குச்சிய கொளுத்திப்போட்ட்டேன்னா நாலுநாளு நிண்ணெரியும் கேட்டியா?” தூண்களை தட்டிப்பார்த்தல், தரையை உதைத்துப் பார்த்தல், சிற்பங்களின் முலைகளை தடவிப்பார்த்தல், இண்டு இடுக்குளில் வெற்றிலை துப்பத் தோது பார்த்தல் என்று அரண்மனையை கூர்ந்து அவதானித்தபின் ”ஆசாரிமாரை வச்சு கட்டியிருக்கான் வே” என்ற முடிவுக்கு வந்து, குமரிக்குற்றாலத்துக்கு கிளம்பிச் செல்வார்கள்.

தொடர்ந்து தமிழ்சினிமாக்காரர்கள் அரண்மனையைக் கண்டுபிடித்தார்கள். முதலில் புகழ்பெற்ற படம் ‘வருஷம் பதினாறு’. அதன் ஏகப்பட்ட படங்கள். ஒருவர் அரண்மனையின் தூண்கள் மேல் ஆரணங்குகளை ஏற்றி விட்டு ஆடவைக்க அரண்மனையே சற்று ஆடியது. விளக்குகள் வைக்க சிலபகுதிகளை சற்றே இடிக்கவும் செய்தார்கள். ஊர்க்காரர்கள் அடிக்கவந்து கலாட்டா ஆனபின் இப்போது அங்கே படப்பிடிப்புக்கே அனுமதி இல்லை

ஆனால் இப்போது வழிகாட்டிகள் உற்சாகத்துடன் விவரிப்பதற்கான வரலாறு நிறையவே இருக்கிறது. உள்ளே நுழைந்ததுமே ”இதாக்கும் பூமுகம். கொட்டாரத்துக்கு முகப்பு. இங்கதான் வருஷம் பதினாறு படத்திலே பூர்ணம் விஸ்வநாதன் குடும்பத்தோட உக்காந்து கச்சேரி கேப்பார். இந்த திண்ணையிலதான் ஜனகராஜ் ஒரு வேலைகாரிகிட்ட சில்மிஷம் செய்வார்…ஓர்மை இருக்குல்லா?” தெள்ளத்தெளிவான வரலாறு. ஜனங்களுக்கு உற்சாகம் ஏறி ஏறி மேலும் வரலாறு தெளிவாகிறது. சலசலப்புகள் மேற்கொண்டு விசாரணைகள். துல்லியமான தகவல்களுக்காக ஏங்கும் கண்ணாடி போட்ட வழுக்கைத்தலை மனிதர் ”ஸ்ரீவித்யா சாய்ஞ்சு நின்ன தூண் எங்க?”என்று கேட்டார். ”சாந்தி இங்கபாரு…வருஷம் பதினாறு மண்டபம்…”

சின்னக்குழந்தைகளுக்கு பெற்றோரால் வாய்மொழி வரலாறு செவிவழி பரிமாறப்பட்டு காலத்தில் பதிவுசெய்யப்படுகிறது. ”வருஷம் பதினாறு மண்டபம் பாத்துக்கோ…பூப்பூக்கும் மாசம் தைமாசம்…அந்தப்பாட்டு உள்ள படம். கார்த்திக் குஷ்பு ஜோடி. சார்லி காமெடி…இங்கதான் பாட்டு எடுத்தாங்க…” வழிகாட்டியிடம் தனக்கும் விஷயம் தெரியும் என்று காண்பிக்கவேண்டியிருக்கிறது. ”·பாசில்தானே டைரக்ஷன்? அவருகூட மலையாளிதானே? ”ஆமாசார்.. இங்க மலையாளப்படமெல்லாம் கூட எடுத்திருக்காங்க…”

பூர்ணம் விஸ்வநாதன் இறங்கிவந்த படிகள் வழியாக எறி ,ஸ்ரீவித்யா வாளை எடுக்கும் சபா மண்டபத்தைப் பார்த்துவிட்டு, சார்லி ஓடும் ஊட்டுபுரைக்குவந்து, அப்படியே வலப்பக்கமாகதிரும்பினால் குஷ்பு குளித்த குளம். முதலில் அங்கே ஒரு குளம் இருக்கும் தகவலே சொல்லப்படாது. எல்லாரும் இடப்பக்கம் தெரியும் பழைய அரண்மனையைப் பார்த்து அங்கே என்ன காட்சி எடுத்திருப்பார்கள் என்று மூளையை கசக்கிக் கொண்டிருக்கும்போது வழிகாட்டி தந்திரமான அலட்சியத்துடன் ”சார் இந்நா பாருங்கோ, இதாக்கும் குஷ்பு குளிச்ச குளம்…”என்பார். உடனே ஒட்டுமொத்த ஜனங்களும் பாய்ந்து போய் சிறிய படித்துறைவழியாக பாசிபிடித்த நீரை பார்க்கிறார்கள். இழுக்கப்பட்ட மூச்சுகள், திறக்கப்பட்ட வாய்கள்.

”மீன் உண்டுமா?”என்று ஒரு கேள்வி.  ”வருஷத்தில ஒருமுறை பிடிச்சு லேலம் விடுறதுசார்!” மரத்தாலான உப்பரிகையில் ஏறி ஒருவர் ”கார்த்திக் இங்க நிண்ணுதானே பாப்பான்?” நடிகர்களை ஒருமையிலழைப்பது தமிழ் மரபு. ”போடா அது வேறபடம்…சார் விக்ரமன்கூட ஒரு படம் இங்கதானே எடுத்தாரு?” ”ஆமா…சங்கீதாவும் வேற ஒரு மலையாளபொண்ணும் நடிச்சது. விஜய்படம்… சூப்பர் டைலாக் ஒண்ணு உண்டுடா. ஜெயிக்கிறதுக்கும் தோக்குறதுக்கும் காதல் ஒண்ணும் ஸ்போர்ட்ஸ் இல்ல…காதல் ஒரு ·பீலிங். விஜய் சூப்பரா சொல்லியிருப்பார்டா…ஏன் சார், இந்த குளத்தில விஜய் குளிச்சிருக்காரா?” ”போடா அந்தப்படத்தில விஜய் குளிக்கவே மாட்டாரு ” ”இல்ல சார் சும்மா ஷ¥ட்டிங் இல்லாத நேரத்திலே குளிச்சிருக்காரா?” ”ஷ¥ட்டிங் இல்லாத நேரத்திலே அவங்கள்லாம் கன்யாகுமரி ஹோட்டலிலே… அங்கே பார் உண்டுல்லா?” ”அது பூவே உனக்காகங்கிற படம் 1996 லே வந்தது…”

படிகளில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். கணவன் மனைவியின் இடையை வளைக்க நாத்தனார் புகைப்படம் எடுக்கும் அற்புதம். குஷ்பு ஏறிய படிகள் வழியாக வந்து குஷ்பு தலைதுவட்டியிருக்க வாய்ப்புள்ள இடத்தை நின்று நோக்கி குஷ்புவை பிறர் நோக்கிய வழிகளில் நடந்து சார்லியும் ஜனகராஜும் கலாட்டா செய்யும் இடத்தை அடைகிறார்கள் பார்வையாளர்கள். அங்கிருந்து அந்தபுரங்கள். அங்கேதான் ஸ்ரீவித்யா,கனகா முதலியோர் இருந்தார்கள். அதன்பின் கீழே இறங்கினால் மணிசித்ரதாழ் படத்தில் சோபனா நடனமாடிய கலையரங்கு வந்துவிடுகிறது. அதை மோகன்லால் பார்த்த சிறிய மர அறைகள்.

மணிச்சித்ரத்தாழ் படத்தை தழுவித்தான் சந்திரமுகி எடுக்கப்பட்டது என்ற தகவலை தெரியாதவர்களுக்கு எடுத்துரைக்கிறார்கள். ”லகலகலக டைலாக் மலையாளத்தில இல்லடா மாப்பு…சூப்பர் டைலாக் அது” சிறுமி அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு ”ஜோதிகா அக்கா இங்கதானே டேன்ஸ் ஆடினா? ” அம்மா ஆதுரமாக அணைத்து ”இல்ல கண்ணு…அவங்க ஆடினது வேற எடத்துல…இது சோபனா மாமி ஆடின எடம்…”. ”அவங்களும் லகலகடான்ஸ¤ ஆடினாங்களா? டிவியிலே லகலகடான்ஸ் ஆடினப்ப ஒரு மாமா கொட்டு அடிச்சாங்களே…” பரதநாட்டியம் புதுப்பெயர் பெற்றதை வரவேற்கலாமென்றாலும் அதேபோன்ற ஒப்பனையும் ஒரு மரபாக ஆகிவிடுவதை தடுத்தாகவேண்டும்.

”எம்ஜியார் சிவாஜி படம்லாம் இங்க எடுத்ததில்லியா?”என்றார் ஒருவர் ”சிவாஜி திற்பரப்பு அருவியிலே வந்து நடிச்சிருக்கார். தேவிகாவும் அவரும் நடிச்சபடம். திற்பரப்பு அருவி சூப்பர் எடம்… அங்கதான் உல்லாசப்பறவைகள்ங்கிற படத்தை எடுத்தாங்க…  எஸ்.எஸ்.ராஜேந்திரன் டைரக்ஷன் பண்ணின படம். அது ” ”தம்பி அது சி.வி.ராஜேந்திரன்…அவரு ஸ்ரீதர் குரூப்ல உள்ல டைரக்டர். சிவாஜி நடிச்ச சந்திப்புகூட அவரு டைரக்ட் பண்ணின படம்தான்…ஜாலியான படமா எடுபபர்.. உல்லாசப்பறவைகள் 1980லே வந்தது.. அப்ப அது ஒரு ஆவரேஜ் ஹிட்டுதான். பாட்டெல்லாம் பின்னாடித்தான் ஹிட்டு. இளையராஜா மியூசிக்..” ”சுருளிகூட அதில நடிச்சிருந்தாரே?”’

”ஏங்க அதிலேதானே ஒருபாட்டு அளகு ஆயிரம் உலகம் முளுவதும்னு..” ”… ஆமா.. ரதி கோத்தாரி நடிச்சது…பாரதிராஜாதான் அவளை அறிமுகம் செய்ஞ்சார். புதியவார்ப்புகள் படத்திலே.அதில பாக்கியராஜ் ஹீரோ. நூறுநாள் ஓடின படம்”. ” சார், ரத்தி அக்னிஹோத்ரின்னு அவ பேரு .அய்யமார் வீட்டுப்பொண்ணு…உசரமா இருக்கும்…இப்பகூட இந்தி சீரியலிலே நடிக்கிறா” என்று கண்ணாடிபோட்ட மூத்த மனிதர் பிழைகளை களைந்தார். ”மச்சான் உல்லாசப்பறவைகள் படத்திலதானே அந்தப்பாட்டு? தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும்…” ”சூப்பர் பாட்டு இல்ல?”

அரண்மனைவிட்டு வெளியே வந்ததும் ”அங்க என்னசார்?” ”அது மியூசியம்.அங்கதான் பழைய மகாராஜாக்களோட வாள் எல்லாம் வச்சிருக்காங்க… ” ”அங்கதானே மேட்டுக்குடி எடுத்தது?” ”இல்ல சார்…அது இங்க எடுக்கல்லை ” ”சரி போவம்டா…வெயிலுக்கு முன்னாடி திற்பரப்புக்கு போயிடுவோம்… அங்க கமல் குளிச்சிருக்காருல்ல? ”படத்துக்காக குளிச்சதில்லை…ஷ¥ட்டிங் வந்தப்ப குளிச்சிருப்பார்…குரு படத்துல ஸ்ரீதேவிதானேசார் ஜோடி?” ”எப்டிரா? அவளவு கூட்டம் இருக்கிறப்ப?” ”டேய் யார்ரா இவன்? பகலிலயா குளிச்சிருப்பாங்க? நைட்ல ஸ்பெஷல் பர்மிஷன் கேட்டுட்டு ஜோடியா வந்து குளிச்சிருப்பாங்க ” ஆழமான அமைதி. வரலாறின் பாரம்.

”மச்சான் நம்மூருலே இந்தமாதிரி ஷ¥ட்டிங் பண்ற அரண்மனைல்லாம் இல்லியாடா?” ”இருக்குடா…பாக்யராஜ் மீனா ரெண்டுபேரும் நடிச்ச ஒரு படம் இருக்கே…ஒண்ணு…”  ”தம்பி அது மைசூர் பேலஸ்…அந்தப்பபடம்பேரு…” கும்பல் கிளம்பிச்செல்கிறது. வாசலருகே இன்னொரு கும்பல் பிரமிப்புடன் ”அடி இவளே, இங்கபாருடீ, இங்கதான் விஜய் படம் சூட்டிங் நடந்திருக்கு… எம்மாம் உசரம் பாத்தியா?”

எப்படியோ மக்களுக்கு வரலாறு தேவையாகத்தான் இருக்கிறது

முந்தைய கட்டுரைபழந்தமிழ் பற்றி பேசுகிறேன்
அடுத்த கட்டுரைராமன்,அறம்-கடிதம்