கடிதங்கள்

ஜெயமோகன்,

சாரு உங்களைப் போன்ற ஆசாமிகள் [நீங்கள் சாரு] எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி [வாய்ப்பில்லையென்றால் வாய்ப்பை உருவாக்கிக்கொண்டு] ஏன் பிராமணர்களை கிண்டல்செய்கிறீர்கள்  என்று எனக்கு புரியவில்லை.

உங்களைப்போன்றவர்கள் எழுதும் எந்த ஒரு கட்டுரையிலும் பிராமணர்களை இழிவுபடுத்தும் வரிகள் உள்ளன. கட்டுரைக்கு தேவையே இல்லை என்றாலும்கூட. இதை ஒரு தாழ்வுணர்ச்சி என்று எடுத்துக்கொள்ளலாமா?

வெங்கடேஷ்

 

அன்புள்ள வெங்கடேஷ்,

பிறர் தாழ்வுணர்ச்சி கொள்ளும் அளவுக்கு பிராமணர்கள் இன்று எந்தத்துறையில்  மேலே இருக்கிறார்கள்? நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் இந்த அபத்தமான உயர்வுணர்ச்சி இருக்கிறதே அதுதான் பலசமயம் கிண்டலுக்குரியதாகிறது.

எனக்கு நான் பிறக்க நேர்ந்த, நான் ஒட்டிக்கொண்டிராத, என் சாதி சார்ந்து தாழ்வுணர்ச்சி ஏதும் இல்லை. ஆகவே என் சாதியை யாராவது எங்காவது சொன்னால் மனம் புண்பட்டு பிலாக்காணம் வைக்க மாட்டேன். மலையாள இதழ்களில் இலக்கியத்தில் என் சாதியை எவராவது கிண்டல் செய்யாத நாளே அனேகமாக கிடையாது. ‘ரொம்ப சிம்பிள், இது எந்த நாயருக்கும் புரியும்’ என்று முதல்மந்திரி சட்டச்சபையிலேயே சொல்கிறார்.

ஒரு சமூகத்தின் கட்டமைப்புக்கு எப்படியோ அதன் மேல்படிகளில் நின்றவர்களே பொறுப்பு. அந்த கட்டமைப்பு குறித்து விமரிசனமும் கிண்டலும் வரும்போது அது அவர்கள்மேல்தான் வரும். அது இயல்பு. ஆக கேரளத்தில் நாயர்கள் தப்ப முடியாது.

ஆனால் சராசரி நாயர் தன்னம்பிக்கை கொண்ட, நகைச்சுவையுணர்ச்சி கொண்ட மனிதர்.  அரை நூற்றாண்டுக்காலத்தில் இட ஒதுக்கீட்டால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக எந்த நாயரும் புலம்பியதில்லை. கிண்டல் செய்கிறார்கள் என்று வருந்தியதில்லை. டீக்கடை வைப்பது முதல் ராக்கெட் விடுவது வரை மும்பையில் சவரக்கடை வைப்பது முதல் கதகளி ஆடுவது வரை செய்ய எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

ஆகவே… கொஞ்சம் சிரியுங்கள் வெங்கடேஷ்.

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்,

2006ல் இதே போன்றதொரு மினி ஃப்தவா ஜும்மா மசூதி இமாம் விடுத்த போது, நான் திண்ணை இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் – http://jataayu.blogspot.com/2006/09/blog-post_115735972528194365.html

தமிழ்த்தாய் வாழ்த்து, துர்க்கை, தாய்மை,  இந்திய பண்பாட்டிலிருந்து இஸ்லாமியர்களைப்  பிரித்தல்  ஆகியவை பற்றியெல்லாம்  நீங்கள் கூறுவதுடன் முற்றிலும் இயைந்திருக்கிறது நான் எழுதிய கட்டுரை..

வந்தே மாதரம் மீதான எதிர்ப்புணர்வின் பின் எத்தகைய இஸ்லாமிய மதவெறி விஷம் இருக்கிறது  என்று அடையாளம் காட்டி எழுதியிருக்கிறீர்கள்.  மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.

அன்புடன்,

ஜடாயு

 

அன்புள்ள ஜடாயு

அந்தகக்ட்டுரையை நான் முன்னரே கண்டிருக்கிரேன்
ஜெ

 

அன்புள்ள ஜெ.,

புத்துணர்ச்சியூட்டும் வரிகள். இசையை ரசிப்பதில் கூட, அமெரிக்கனுக்குப் பிடித்தால் தான் அது உயர்ந்த இசை என்று நினைக்கக் கூடிய அளவுக்கு நம் தன்னம்பிக்கை சிதைந்துள்ள நிலை நம் வேதனைக்குரியது.

இசையின் உச்சத்தை அடைந்த, இசையின் மூலமே கடவுளை உணர்ந்த பண்பாடு நமக்குரியது. ஆயினும், என்னுடைய ரசனையை நானே தேர்ந்தெடுக்க வேண்டும்; அமெரிக்கனோ அடுத்தவனோ அதில் மூக்கை நுழைக்க அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லும் குறைந்தபட்ச தன்னம்பிக்கை கூட இல்லை என்றால் என்ன சொல்வது.

ஆஸ்கார் மூலம் ரஹ்மான் இந்திய இசைக்கு, திரைத்துறைக்கு வணிக ரீதியா செய்துள்ள உதவி மிகப்பெரிது.
அதற்காக என்றும் நாம் அவருக்குக் கடன்பட்டுள்ளோம்.

எனக்கு ரஹ்மானைப் பிடிக்கும். அவரது பல பாடல்கள் ஆணி அடித்து மனதைக் கட்டிப் போடும் திறனுள்ளது. ஆனாலும் ஜெய்-ஹோ பாடல் என்னைக் கவரவில்லை; ஆஸ்கார் வாங்கிய ஒரே காரணத்துக்காக அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமும் எனக்கில்லை.

உலகம் என்பது அமெரிக்காவும் ஆங்கிலமும் மட்டுமில்லை; தமிழகமும் தன்னளவில் ஒரு உலகம் தான்; குறைந்தபட்சம் நம்முடைய ரசனைகளையேனும் அடகு வைக்காமல் இருப்போம்.

நன்றி
ரத்தன்

 

அன்புள்ள ரத்தன்

நீங்கள் சொல்வதுதான் என் கருத்து. பொதுவாக இந்தவகை ஒப்பீடுகளில் பொருள் இல்லை. ரஹ்மானை நாம் ரசிக்க அவருக்கு ஆஸ்கார் கிடைக்கவேண்டும் என்றில்லை.

எனக்குப்பிடித்த ரஹ்மான் பாட்டுகள் பல உண்டு. அவை முழுக்க இந்திய இசையின் நுட்பமான உள்ளோட்டங்கள் கொன்டவை.

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இது நான் உங்களுக்கு எழுதும் முதல் மடல். அடிக்கடி உங்கள் தளத்தையும் சாருவின் தளத்தையும் வாசிப்பதுண்டு.. இந்த பதிவுக்காக உங்களுக்கு எழுத வேண்டும் எனத் தோன்றியது.

திரு.சாரு நிவேதிதா அவர்களுக்கு இளையராஜா மேல் ஏதோ காழ்ப்பு. அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. ‘ஆகாத மாமியார் கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம்’ என்பார்களே அப்படித்தான் இருக்கிறது அவர் இளையராஜா மேல் வைக்கும் விமர்சனங்கள்.. சொந்த மாநிலம் விட்டு பிழைப்புக்காக வெளியேறி வருடக்கணக்காகிவிட்டது – சொந்த ஊர் மேலிருக்கும் ஏக்கம்… பழகிய மனிதர்களை பிரிந்த துயரம்… தமிழ் பேச முடியாத கொடுமை… இந்த நிலையில் ‘சொர்கமே என்றாலும்…” என்று இளையராஜா குரலைக் கேட்கும் போது கண்ணீர் வருவதை தவிர்க்கவே முடிவதில்லை. அது வார்த்தைகளின் அர்த்தம் தோற்றுவித்த உணர்வா இல்லை அந்த தாளக்கட்டா என்னவென்று தெரியவில்லை..

அடிக்ட் என்பார்களே.. அப்படி திரும்பத்திரும்ப ஒரு மாதம் பழசிராஜா படத்தில் வரும் குன்னத்தே கொன்னைக்கும் பாட்டை திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேயிருந்தேன்.. ஒரு நாளில் குறைந்தது ஐம்பது தடவைகள் இருக்கலாம்.. அந்த இசையில் ஏதோ இருக்கிறது ஆனால் என்னவென்று சொல்லத் தெரியவில்லை..

கன்னடமும் மலையாளமும் சுத்தமாக வராது. “ஊணு கழிச்சோ – ஊட்டா மாடியாத்தா” அளவுக்குத்தான் அந்த மொழிகள் தெரியும் ஆனாலும் இளையராஜாவின் கன்னட மலையாள பாடல்களை திரும்பத்திரும்ப கேட்டிருக்கிறேன்.. இதோ இப்போது சூரியகாந்தி எனும் ஒரு கன்னட படத்தின் மௌனி நானு.. என்ற பாடல் நாக்கில் ஒட்டிக் கொண்டு விட்டது.. இது இன்னும் சில நாட்களுக்கு விடாது :-) . இப்படித்தான் – நன்றாக இருந்தால் கேட்பேன். பிடித்திருந்தால் கேட்பேன். இது ரெகேவா, ரோக்கா.. என்றெல்லாம் ஆராயும் அளவுக்கு இசை அறிவு கிடையாது. எனக்கென்னவோ கமலின் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது – இந்த சிச்சுவேஷனுக்கு ஏற்ப உல்டா செய்தால் – “இசையைக் கேட்டால் அனுபவிக்கனும்; ஆராயக்கூடாது”

உயிரின் ஆழம் வரை ஊடுருவி நுழையும் ஏதோவொன்று இளையராஜாவின் இசையில் இருக்கிறது. அதனால் அவரைப் பிடிக்கிறது. அவ்வப்போது நொறுக்குத்தீனி போல ரஹ்மானின் இசையையும் கேட்பது உண்டு. ஆனால் மெயின் கோர்ஸ் என்றுமே இளையராஜாதான். இதோ இங்கே பா படத்தின் இசையைக் கொண்டாடுகிறார்கள் – தெரிந்தவர்களிடமெல்லாம் போய் ‘இந்தப் படத்துக்கு இசை யாரு தெரியுமா? எங்க ஊரு இளையராஜாவாக்கும்’ என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டிருக்கிறேன்.

சாரு….?? விடுங்கள். அது தான் அவர் இயல்பு – தெரிந்தது தானே? படித்து-நகைத்து-கடந்து போய் விட வேண்டியது தான்.

அன்புடன்
சரவணன்

 

அன்புள்ள சரவணன்

பொது மேடையில் கலையை முன்வைக்கும் எவரும் ரசிகர்களின் விமரிசனத்துக்கும் நிராகரிப்புக்கும் எல்லாம் உரியவரே. ஆகவே சாருவின் விமரிசனம் தவறென நான் நினைக்கவில்லை. அவர் விமரிசித்திருக்கக் கூடாதென்றும் சொல்ல மாட்டேன். அதை நான் ஏற்க முடியுமா இல்லையா என்று மட்டுமே பார்ப்பேன். அந்த விவாதம் எனக்கும் பிறருக்கும் கற்பிக்கக் கூடியதாகவும் ரசனையை மேம்படுத்தக்கூடியதாகவும் உள்ளதா என்று பார்ப்பேன். அது இருந்தால் போதுமானது

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்,
இந்து மெய்ஞான மரபின் பாடத்திட்டமாக நீங்கள் குறிப்பிட்டிருந்ததை படித்தேன். அவற்றை எங்கிருந்து படிக்க தொடங்க வேண்டும்?

சில நூல்களுக்கு பல்வேறு உரைகள் இருக்கின்றன. உதாரணம் பகவத் கீதை,ப்ரம்ம சூத்திரம்.  இவற்றிற்கு என்ன உரைகள் வாங்க வேண்டும் என்றும் கூற முடியுமா? மேலும் இவற்றை தனியாக படிக்கலாமா? அல்லது ஏதாவது குருவின் உதவியை நாட வேண்டுமா?

அன்புடன்,
பிரபு

 

அன்புள்ள பிரபு

பொதுவாக இந்த விஷயத்தில் சொல்லத்தக்க வார்த்தை ‘எங்காவது தொடங்குங்கள்’ என்பதே. எதற்குச் சொல்கிறேன் என்றால் இது மிகப்பெரிய ஒரு அறிவுப்பரப்பு. இதில் எல்லாருக்கும் எல்லாரும் உரியதல்ல. நீங்கல் ஒன்றை தேர்வுசெய்து அதில் நுழைந்து போக முயலும்போதுதான் அது உங்களுக்கானதா அல்லவா என்பது தெரியும். ஆகவே ஆரம்பியுங்கள், மனம் எதில் வேகம் கொள்கிறதென பாருங்கள்

பொதுவாக ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சிந்தனை அமைப்பின் வெளிப்பாடாக உள்ள நூல்களை தவிர்ப்பது தொடக்கத்துக்கு நல்லது. ஆரம்பமாக இந்திய ஞானமரபிந் பொது அறிமுகம் அளிக்கும் ஒரு நூலை வாசிக்கலாம். ஆனால் அது பெரும்பாலும் மனதில் நிற்காது. குறிப்புகள் எடுத்துக்கொண்டு ஒரு பாடம்போலவே வாசித்து ஒரு ஆரம்ப வரைபடத்தை உருவாக்குங்கள். மெல்ல மெல்ல மேலே சென்று அந்த வரைகோட்டுபப்டத்தை நிரப்பிக்கொள்ளுங்கள்

ஆங்கிலத்தில் ஷிதி மோகன் சென் எழுதிய ஹிந்துயுஸம் நல்ல தொடக்க நூல். தமிழில் லட்சுமணன் எழுதிய இந்திய சிந்தனை ஒரு நல்ல தொடக்க நூல்.

இந்துஞான மரபில் ஆறுதரிசனங்கள் [கிழக்கு பிரசுரம் ] கூட நல்ல நூல் -ஏனென்றால் நான் எழுதியது. அதன் அறிமுகப்பகுதி மிக எளிமையானது.

குரு, அது உங்கள் அதிருஷ்டம் மட்டுமே

ஜெ

முந்தைய கட்டுரைவாசகர் சந்திப்பு ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபழசிராஜா சில பண்பாட்டு ஐயங்கள்